Category Archives: செல்பேசி

செல்லில் எழுதிய நாவல்

நீங்களும்தான் தினந்தோறும் ரெயிலில் போய் வருகிறீர்கள். கையில் செல்போன் வைத்திருக் கிறீர்கள். ஆனால் இத்தாலியை சேர்ந்த ராபர்ட் பெர்னகோவை போல உங்களால் செய்ய முடியவில்லையே! அப்படி என்ன அவர் செய்து விட்டார் என்று நீங்கள் கேட்கலாம். மனிதர் ரெயில் பயணத்திலேயே ஒரு நாவலை எழுதி முடித்து பதிப்பித்து விட்டார். பேனாவை கூட தொடாமல் அந்த நாவலை செல்போன் மூலமே எழுதி முடித்திருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.
.
அதாவது செல்போனில் சர்வ சகஜமாக இருக்கும் எஸ்எம்எஸ் வசதியை பயன்படுத்திக் கொண்டு அவர் நாவலை எழுதியிருக்கிறார். இதன் மூலம் உலகிலேயே செல்போன் மூலம் முதன் முதலில் நாவலை எழுதி வெளியிட்டவர் எனும் சிறப்பை அவர் பெற்றிருக்கிறார்.
ராபர்ட் பெர்னகோ செய்திருப்பது உண்மையிலேயே மெச்சத்தக்க விஷயம்தான். ஆனாலும் கூட முதன் முதலில் செல்போன் நாவலை எழுதியவர் எனும் அடைமொழிக்கு அவரை சொந்தக்காரராக்குவது சரியா என்று கேட்க தோன்றலாம். 

அதிலும் குறிப்பாக சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்னரே எஸ்எம்எஸ் நாவல் அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அறிந்திருப்பவர்கள், நிச்சயம் இந்த கேள்வியை கேட்பார்கள்.

நம் நாட்டில் கூட மலையாள எழுத் தாளர் ஒருவர் எஸ்எம்எஸ்சில் நாவல் எழுதி அசத்தியிருக்கிறார். எனினும் ராபர்ட் பெர்னகோ விஷயத்தில் என்ன சிறப்பு என்றால், மனிதர் எஸ்எம்எஸ் வசதியை பயன்படுத்தினாலும், எஸ்எம்எஸ் பாணியில் நாவலை எழுதாமல் முழுநீள நாவலாக அதனை எழுதி முடித்திருக்கிறார்.

அதாவது இதுவரை எழுதப்பட்ட எஸ்எம்எஸ் நாவல்கள் அனைத்தும் எஸ்எம்எஸ்க்கே உரித்தான குறுக்கெழுத்து பாணியில் (இலக்கண பிழையும் இருக்கலாம்) எழுதப் பட்டவை. எஸ்எம்எஸ்சின் வரம்பு மற்றும் அது ஏற்படுத்தி தரும் புதிய வாய்ப்பை பிரதானமாக கொண்டு இந்த படைப்புகள் உருவாக்கப் பட்டன.

ராபர்ட் பெர்னகோ எஸ்எம்எஸ் பாணியில் நாவலை எழுதாமல் நாவல் எழுத எஸ்எம்எஸ்சை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞரான பெர்னகோ மிகவும் பிசியானவர். வேலையில் மூழ்கி கிடக்கும் அவருக்கு எழுத்தாளராக வேண்டுமென்ற ஆர்வமும் உண்டு. அறிவியல் புனைக்கதைகளில் அவருக்கு மிகுந்த பற்று உண்டு.

அறிவியல் புனைக்கதை வரிசையில் நாவல் ஒன்றை எழுத அவர் மனதில் ஒரு கதைகருவும் உருவாகி இருந்தது. ஆனால் என்ன பிரச்சனை என்றால், வீட்டுக்கும், வேலைக்குமாக அலைந்து கொண்டிருந்த அவருக்கு உட்கார்ந்து எழுததான் நேரமில்லை. இருப்பினும் மனிதர் அதனை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கவில்லை.

தினந்தோறும் அவர் நம்மை போலவே ரெயிலில் வேலைக்கு சென்று வருபவர். ரெயில் பயணங்க ளில் செய்வதறியாமல் போரடித்து அமர்ந்திருக்கும் செயலை செய்யாமல் அந்த நேரத்தில் நாவலை எழுத தீர்மானித்தார்.

இங்கு இருப்பது போல இத்தாலியில் ரெயில்கள் நெரிசலாக இல்லாமல், மிகவும் சொகுசாக இருக்கின்றன என்றாலும், ரெயிலில் அமர்ந்தபடி நாவலை எழுத முடியுமா என்ன? பெர்னகோ அப்படி நினைக்க வில்லை. கையில் செல்போன் இருக்க என்ன கவலை என்று நினைத்தார்.

தான் எழுத உத்தேசித்திருந்த நாவலின் அத்தியாங்களை சிறுசிறு பத்திகளாக பிரித்து ஒவ்வொரு பத்தியாக எஸ்எம்எஸ் மூலம் பதிவு செய்து கொண்டார். பின்னர் ஒவ்வொரு நாளும் இந்த எஸ்எம்எஸ்களை தனது கம்ப்யூட்டர் மாற்றி கொண்டு விடுவார்.
இப்படியாக 17 வாரங்களுக்கு தினந் தோறும் எஸ்எம்எஸ்சில் ஒவ்வொரு பத்தியாக நேரம் கிடைத்த போதெல் லாம் எழுதி முழு நாவலையும் முடித்து விட்டார்.

“சகபயணிகள்’ எனும் பெயரிலான அந்த நாவல் இப்படித்தான் உருவானது. சரி! நாவலை எழுதியாகி விட்டது. அதனை வெளியிடுவது எப்படி? இன்டெர்நெட் யுகத்தில் இந்த கேள்வி எந்த அறிமுக எழுத்தாளரை யும் வாட்ட வேண்டியதில்லை. இருக்கவே இருக்கிறது சுயபதிப்பு சேவை தளமான லூலு டாட் காம்.

இணையவாசிகள் தங்கள் படைப்புகளை இந்த தளத்தின் மூலம் புத்தகமாக வெளியிட்டு, இந்த தளத்தின் மூலமே வாசகர்களுக்கு விற்பனை செய்து கொள்ளலாம்.

பதிப்பகங்களின் தயவோ, எந்த விதமான முதலீடோ இல்லாமல் புத்த கத்தை பதிப்பித்து தேவைக் கேற்ப அவற்றை இந்த தளத்தின் மூலமே அச்சிட்டு விற்பனையும் செய்யலாம். இந்த வசதியை பெர்னகோ மிக அழகாக பயன்படுத்திக் கொண்டு தனது நாவலை வெளி யிட்டார். இதன் மூலம் ரெயிலில் பயணம் செய்யும் மற்ற வாசகர்களுக் கெல்லாம் அவர் முன்னோடியாக இருக்கிறார்.

வந்தாச்சு வீடியோஷேர்

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் இன்டெர்நெட் மூலம் வீடியோ காட்சி களை தினந்தோறும் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கும் வீடியோ காட்சி களில் பெரும்பாலானவை நகைச் சுவை சார்ந்ததாக இருக்கிறது. அமெரிக்கர்கள் மத்தியில் நிலவும் இன்டெர்நெட் பயன்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தி வரும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது.
.
அகண்ட அலைவரிசை என்று கூறப் படும் பிராட் பேண்ட் இணைப்பு களின் வருகையை அடுத்து வீடியோ கோப்புகளை பார்ப்பது சுலபமாகி இருப்பதால், இவை பிரபலமாகிக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

யூ டியூப் தளத்தின் செல்வாக்கும், அவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ளப் படும் லட்சக்கணக்கான வீடியோ படங்கள் கோடிக்கணக் கானவர்களால் பார்க்கப்படுவதும் வீடியோ யுகம் வந்து விட்டது  என்பதை உணர்த்துகிறது. வீடியோ காட்சிகளின் அதிகரித்து வரும் செல்வாக்கை கருத்தில் கொண்டு செல்போனுக்குள் வீடியோவை கொண்டு வந்துவிடும் முயற்சியும் தீவிரமாகியிருக்கிறது. டிவி நிகழ்ச்சிகளை செல்போனிலேயே பார்த்து விடும் வசதியும் அறிமுகமாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எதிர்கால டிவி, செல்போன் திரைக் குள் அடங்கியாக வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த வகையான வீடியோவின் முக்கியத்து வத்தை உணர்த்தும் மற்றொரு சேவையாக வீடியோ ஷேர் அறிமுகமாகியிருகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற செல் போன் சேவை நிறுவனமான ஏடி அண்டு டி நிறுவனம்இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த சேவை செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது நம்மைச் சுற்றியுள்ள காட்சிகளை படம் பிடித்து செல்போன் வழியே அனுப்பி வைக்கும் வசதியை முன்வைக்கிறது.
இந்த வசதியானது செல்போன் யுகத்தில் அடுத்த புரட்சி என்று ஏடி அண்டு டி நிறுவனம் வர்ணிக்கிறது.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் இந்த சேவையை உருவாக்கு வதற்கான ஆய்வு முயற்சியில் இந் நிறுவனம் ஈடுபட்டதாக தெரிவிக்கி றது. அதன் பயனாக முற்றிலும் புதுமையான இந்த வீடியோ பதிவு சேவை சாத்தியமாகியுள்ளது என்று ஏடி அண்டு டி தெரிவிக்கிறது.

செல்போன் மூலம் வீடியோவை அனுப்பி வைக்கும் வசதி உண்மையி லேயே புதுயைமானது தான். தகவல் தொடர்பில் பெரும் மாற்றத்தை இந்த சேவை கொண்டு வரக்கூடும். ஆனால் இந்த சேவையை ஏற்னவே அறிமுக மாகி இன்னமும் பிரபலமாக இருக்கும் வீடியோ போன் சேவையோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.

பார்த்துக்கொண்டே பேசலாம் என்னும் வர்ணணையோடு அறிமுக மான வீடியோ போன் வசதி ஏனோ பிரபலமாகவில்லை. வீடியோ யுகத் துக்கு முன்பாக இந்த வசதி அறிமுகமாகி விட்டாலும், பொது மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெறாமல் ஒரு வெற்றி புதுமையாகவே இன்று வரை இருக்கிறது. வீடியோ போன் ஏன் பிரபலமாகவில்லை என்பது உண்மை யிலேயே சுவாரசியமான கேள்விதான். இதுபற்றிய விவாதம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் வீடியோ ஷேர் வசதி இதி லிருந்து மாறு பட்டது.

வீடியோ ஷேர் சாப்ட்வேரை டவுன்லோடு செய்து கொண்டால் செல்போனில் பேசும்போது, நம்மைச் சுற்றியுள்ள காட்சியை அதன் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆனால் இது ஒரு வழிப்பாதை. ஒன்று நாம் காட்சியை அனுப்பி வைக்கலாம் அல்லது மறு முனையிலிருப்பவர் அனுப்பி வைக்கும் காட்சியை பார்த்து ரசிக்கலாம். இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். நிதானமாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இது எப்படி எல்லாம் பயன்படுத்தப்படலாம் என்று புரியும்.

உதாரணத்துக்கு, செல்போன்கள் பெருமளவு பயன்படுத்தப்படும் சூழ் நிலையை எடுத்துக்கொள்ளுங் கள். எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக் கிறீர்கள். நடுவே போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டிருக் கிறீர்கள். அப்போது போன் செய்து தாமதமாகிவிட்டது என்று தெரிவிப்பீர் கள் அல்லவா? இனி இந்த செய்தியை சொல்லுமபோது, போக்குவரத்து நெரிசல் காட்சியை அப்படியே படம் பிடித்து மறு முனையிலிருப்பவருக்கு அனுப்பி வைக்கலாம்.

வாகன நெரிசலைப் பார்க்கும்போது அவருக்கும் உங்கள் நிலை நன்கு புரியும். அதேபோல காதலியும்பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என்றால், “வரவேண்டும் என்று நினைத்தேன்’ என்னும் செய்தியை வீடியோ காட்சி யாக அனுப்பி வைக்கலாம்.

நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில், காதலியை மறக்காமல் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த லாம். அலுவலகத்தில் வேலை பளு மிகுதியாக இருப்பதால் வீட்டுக்கு உடனடியாக செல்ல முடியாத கணவன், தன்னைச் சுற்றியுள்ள கோப்புகளை படம் பிடித்து மனைவிக்கு அனுப்பலாம்.

இப்படி எத்தனையோ விதங்களில் வீடியோ ஷேரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால்தான் செல்போன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது இது அடுத்த கட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த சேவை யையாவது வேகமாக பிரபலமாகிறதா என்று பார்க்கலாம்.

ஐ போன் அற்புதங்கள்

முதலில் ஐபோன் வந்தது. அதனைத் தொடர்ந்து ஐபில் வந்தது  ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள வழக்கத்துக்கு விரோதமான பெரிய அளவிலான  பில்லே இப்படி வர்ணிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது.  இந்தபோன் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்கிறதா? என்னும் விவாதம் நடைபெற்று வருகிறது.  ஐபோன், எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை என்று ஒரு தரப்பினரும், எதிர்பார்ப்பை  மிஞ்சும் வகையில் அற்புதமாக இருப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
.
ஐபோன் பேட்டரி போன்றவை பெரும் சர்ச்சைக்கு  இலக்காகி இருக்கிறது.  இந்நிலையில் ஐபோனுக்கு அனுப்பப்பட்ட பில் ரசீதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாக  செல்போனுக்கான பில் எப்படி இருக்கும். ஒரு பக்கத்தில்  கட்டணத்தொகை மற்றும் அதற்கான விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதிகம் போனால்  இரண்டு மூன்று பக்கங்கள் இருக்கும். அவ்வளவு தானே. 

ஆனால் ஆப்பிளின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பில்லோ, 10 பக்கத்துக்கும் குறையாமல்  இருப்பதாக  புகார் எழுந்துள்ளது.  ஒரு சில வாடிக்கை யாளர்களுக்கு 30, 40 பக்கங்களுக்கு பில் வந்து சேர்ந்திருப்பதாகவும் கூறப் படுகிறது.
குறிப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவருக்கு 300 பக்கங்களுக்கு இந்த பில்  வந்திருக்கிறது.  ஐபோன் சார்பாக ஏடி அண்ட் டி செல்போன் சேவை நிறுவனம் இந்த பில்களை அனுப்பி வைத்திருக்கிறது.

ஐபோன், வாடிக்கையாளர்களின் செல்போன் பயன்பாடு தொடர்பான  அனைத்து விவரங்க ளையும் பதிவு செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. எத்தனை போன் கால்கள், எத்தனை எஸ்எம்எஸ் செய்திகள், எத்தனை டவுன்லோடுகள் என எல்லாவிதமான விவரங்களையும்  பதிவு செய்து கொள்ள முடியும்.

இத்தனை விவரங்களையும் பில்லும் பிரதிபலிப்பதால் அது பல பக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. 300 பக்கம் கொண்ட பில்லை பெற்ற ஜஸ்டீன் ஜாரிக் என்பவர் இந்த அனுபவத்தை ஒரு சிறிய வீடியோ படமாக தயாரித்து அதனை  யூடியூப் தளத்தில் இடம் பெறவும் வைத்திருக்கிறார்.

ஐபோனுக்கான  விளம்பரத்தில் வரும்  பாடல் பின்னணியில் ஒலிக்க,  தபாலில் பில்லை பெறுவதில் தொடங்கி, அதனை பிரித்துப் பார்த்து 300 பக்கங்கள் இருப்பதால்  அதிசயித்ததுவரை  அந்த வீடியோ காட்சி விவரிக்கிறது. இந்த வீடியோ படம் பலரால் பார்க்கப்பட்டு, இன்டெர்நெட் உலகில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஆப்பிள்  தற்பெருமைக்காக பல விஷயங்களை  செய்து விட்டு, உண்மையில் அது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருப்பதாக முணுமுணுப்பு எழுந்திருக்கும் நிலையில், அதற்கான  மற்றொரு உதாரணமாக இது கருதப்படுகிறது.
ஆனால் பில் அனுப்பிய  ஏ டி  அண்ட் டி நிறுவனமோ, இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இப்படி  பில் அனுப்பி வைப்பதே வழக்கம் என்றும், ஐபோனுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக இந்த விஷயம்  தனித்து தெரிவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் ஐபோன் ஓசைப்படாமல் மற்றொரு சேவையை அறிமுகம் செய்து சபாஷ் வாங்கியிருக்கிறது.

ஐபோன் மூலமே புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை படித்து பார்க்கக் கூடிய வசதி தான் அது. பதிப்பகத் துறையில் புகழ் பெற்ற ஹார்ப்பர் அண்ட் காலின்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஐபோன்  இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலமாக ஐபோன் வழியே  இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ள  புதிய புத்தகங்கள் பற்றிய விவரங்கள்  மற்றும்  விமர்சனங்களை படிக்க முடியும். அதோடு புத்தகத்தின் உள்ளே உள்ள  சில பக்கங்களை மாதிரிக்கு படித்து பார்க்கலாம்.

10,000 திற்கும் மேற்பட்ட புத்தகத்தின் விவரங்கள் இதுவரை இந்த சேவைக்காக  டிஜிட்டல் மய மாக்கப்பட்டிருப்பதாக பதிப்பகம்  தெரிவிக்கிறது. ஐபோன் வாடிக்கையாளர்கள் பலர் இந்த சேவையை  வரவேற்றுள்ள னர்.  ஒரே நேரத்தில் 10 பக்கங்கள் வரை ஐபோனிலேயே படிக்க முடியும். அதாவது  ஏறக்குறைய 2 அத்தியாயங்களை  ஐபோன் மூலமே படித்து விடலாம்.

ஐபோன் மேலும் பல பதிப்பகங்க ளோடு இதே போன்ற ஒப்பந்தங் களை செய்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் ஐபோனிலேயே ஒரு நூலகத்தை  அடக்கிவிடலாம்.