Category Archives: இதர

இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்கள்

img005நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இந்த புத்தகம். இதே தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வெளிவந்து, தற்போது புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கிறது.

யார் இந்த நாயகர்கள் என கேட்கலாம்? நவீன இணையத்தில் நாம் தவறாமல் பயன்படுத்தும் முன்னணி இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் இவர்கள்.

பெரும்பாலானோர் அறிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வேர்ட்பிர்ஸ், பிளாகர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கியவர்கள் முதல், பரவலாக அறியப்படாத ஆனால் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய லைப்ரரிதிங், டக் டக் கோ, யெல்ப், பின்டிரெஸ்ட் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கியவர்கள் வரை பல இணைய சாதனையாளர்களை இந்த தொகுப்பின் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

ஏர்பிஎன்பி, டிக், சவுண்ட்கிளவுட், டிராப்பாக்ஸ், பிளாகர், கிளவுட், டெலிஷியஸ், லிங்க்டுஇன், உபெர், டிவிட்ச், கிவா, கிக்ஸ்டார்ட்டர், ரெட்டிட், டம்ப்ளர், பயர்பாக்ஸ் என நவீன இணையத்தின் அடையாளமாக கருதப்படும் சேவைகளை உருவாக்கிய நாயகர்களாக இந்த பட்டியல் நீள்கிறது.

இந்த சேவைகள் அனைத்துமே இணையத்தின் ஆற்றலை புதுமையாக பயன்படுத்திக்கொள்ள முற்பட்டதன் மூலம் முன்னணி சேவையாக உருவானவை. இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் புரட்சிகரமானவையும் கூட! இணையம் மூலம் தொலைபேசி சேவையை பயன்படுத்த வழி செய்த ஸ்கைப், வீடியோக்களை எளிதாக பகிர வைத்த யூடியூப், சிக்கலான பிரவுசர் அனுபவத்தை எளிதாக்கிய பயர்பாக்ஸ், இணைய கடன் வழங்க வழி செய்த கிவா, இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர், செய்தி பகிர்வை ஜனநாயகமயமாக்கிய டிக்  என இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் புரட்சிகரமானவை.

இந்த புதுயுக இணைய சேவைகள் சமகால வாழ்க்கையில் ஏற்படுத்திருக்கும் தாக்கம் நினைத்து கூட பார்க்க முடியாதது. பேஸ்புக், யூடியூப் மட்டும் அல்ல, கோப்பு பகிர்வுக்கான டிராப்பாக்ஸ், தொழில்முறை வலைப்பின்னலான லிங்க்டுஇன் உள்ளிட்ட சேவைகளையும் நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.

இந்த சேவைகளுக்கு பின்னே இருக்கும் சாதனையாளர்கள் இவற்றை எப்படி உருவாக்கினர் என்பதை அவர்களின் அறிமுக சித்திரம் விவரிக்கிறது. சேவைக்கான எண்ணம் உதித்த விதம், அதை செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள், போராட்டங்களையும், தடைகளையும் வெற்றி கொண்ட விதம் என சுவாரஸ்யமாகவும், ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த சித்திரங்கள் அமைந்திருப்பதை உணரலாம்.img006

இவை வெறும் வர்த்தக வெற்றிக்கதைகளோ, தொழில் சாகசங்களோ கிடையாது. இவை தனிமனித புகழ்ச்சியும் அல்ல: இணையம் உண்டாக்கி தந்துள்ள எல்லையில்லா சாத்தியங்களையும், புதிய வாய்ப்புகளையும் இணம் கண்டு கொண்டதன் மூலம் அவற்றை நடைமுறை வாழ்க்கைக்கே ஏற்ப பயனுள்ள சேவையாக மாற்றித்தந்த முன்னோடிகளின் பதிவுகள் இவை.

பெரிய அளவிலான பண பலமோ, வலுவான பின்பலமோ இல்லாமல், தங்கள் மனதில் உதித்த எண்ணத்தின் ஆற்றலால் மட்டும் இந்த சேவைகளை உருவாக்கியவர்கள் ஜெயித்திருக்கின்றனர். இந்த எண்ணத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் அவர்கள் வெளிப்படுத்திய வேட்கையும், தொழில்நுட்ப புரிதலுமே வெற்றிக்கு வழி வகுத்திருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் பல பெரிய ஜாம்பவான் நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் இத்தகைய புதுமையான சேவையை உருவாக்குவது என்பது ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள எந்த பெரிய நிறுவனத்திற்கும் சாத்தியமாகவில்லை.  அதனால் தான் இவர்கள் நம் காலத்து நாயகர்களாக மின்னுகின்றனர்.

 

இணையமே நீ நலமா?

mozilla-release-internet-health-reportஇணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல: அது ஒரு பொது வளம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் ஆரோக்கியம் பற்றி கவலை கொண்டாக வேண்டும். இணையம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறது? அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை? அவற்றை சரி செய்து இணைய ஆரோக்கியத்தை சீராக்குவது எப்படி? இது போன்ற கேள்விகளையும் பொறுப்புள்ள இணையவாசிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளை அடிப்படையாக கொண்டு இணைய ஆரோக்கியத்தை அறிய வைப்பதற்கான முயற்சியில் மொசில்லா அமைப்பு இறங்கியுள்ளது. இது தொடர்பாக இணைய ஆரோக்கிய அறிக்கையின் முன்னோட்ட வடிவத்தை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கியத்துவம், தன்மைக்கேற்ப இந்த அறிக்கையும் ஓபன் சோர்ஸ் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதில் அனைவரும் பங்கேற்கலாம்; கருத்து தெரிவிக்கலாம், திருந்த்தலாம், மேம்படுத்தலாம்.
மொசில்லா அமைப்பை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தின் நன்கறியப்பட்ட பிரவுசர்களில் ஒன்றான பயர்பாக்ஸ் பிரவுசரை நிர்வகிக்கும் அறக்கட்டளையாக விளங்கும் மொசில்லா, இணைய சுதந்திரம், செயல்பாடு, தனியுரிமை பாதுகாப்பு தொடர்பான தன்னார்வ செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக அன்மையில் இணைய ஆரோக்கியத்தை அறியும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக இணைய ஆரோக்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை மூலமாக, இணையத்தில் ஆரோக்கியமாக இருக்கும் விஷயங்கள், ஆரோக்கியம் இல்லாமல் இருப்பவை குறித்து இணையவாசிகளுடன் உரையாடலில் ஈடுபட விரும்புவதாக மொசில்லா செயல் இயக்குனர் மார்க் சுர்மன், இது தொடர்பான பதிவில் குறிப்பிட்டுள்ளார். இணையத்தின் எதிர்காலம் பற்றியும் நம் மனதில் கொண்டாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் துவக்கத்தில் எல்லோருக்குமானதாக இருந்தது என்றும், யாரும் எந்த கருத்தை வெளியிடக்கூடிய , எந்த செயலிலும் ஈடுபடக்கூடிய இடமாக இருந்தது என்றும், கூறியுள்ள சுர்மன், அதன் பிறகு நம்முடைய கூட்டு படைப்பாற்றல், கண்டுபிடிப்பு மற்றும் சுய வெளிப்பாட்டிற்கான உலகலாவிய மேடையாக உருவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பேஸ்புக் போன்ற ஒரு சில நிறுவனங்கள் தேடல், ஷாப்பிங், உரையாடல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், வெப்காமிராக்கள் மீது பாட்கள் கொண்டு தாக்குதல் பெரும் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், நம்முடைய அளப்பரிய ஆற்றல் கொண்ட பொது வளமான இணையம் தொடர்ந்து பாதுகாப்பானதாக, நம்பகமானதாக நீடிக்க வாய்ப்புள்ளதா எனும் கேள்வி எழுதுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் இணையம் முழுவதும் சூழந்திருக்கும் நிலையில் இந்த கேள்வி மிகவும் முக்கியமானது என அவர் கருதுகிறார். இணையம் இப்போதைய சுற்றுச்சூழலாக உருவாகி இருப்பதால் அதன் ஆரோக்கியம் குறித்தும் கண்காணித்து கவலைகொண்டாக வேண்டும் என அவர் கூறுகிறார்.
இதற்காக தான் இணையவாசிகள் பங்கேற்போடு இணைய ஆரோக்கிய அறிக்கையை உருவாக்கும் முயற்சியில் மொசில்லா ஈடுபட்டுள்ளது. இணையத்தின் புதுமை, டிஜிட்டல் சமத்தும், மையமில்லா தன்மை, தனியுரிமை- பாதுகாப்பு , இணைய கல்வி ஆகிய ஐந்து அம்சங்களையும் இணைய ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாக கருதி இவற்றின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால கவலை குறித்த கருத்துக்களை முன்னோட்ட அறிக்கையில் மொசில்லா வெளியிட்டுள்ளது.
இணையம் என்பது எப்போதுமே எல்லோருக்குமான திறந்த மேடையாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும், அனைவரும் தங்கள் வாழ்க்கையை, சமூகத்தை மேம்படுத்திக்கொள்ள இணையத்தை பயன்பட்டுத்திக்கொள்ளும் நிலை இருக்க வேண்டும் என்பது டிஜிட்டல் சமத்துவத்தின் முக்கிய அம்சமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 கோடி பேர் பயன்படுத்துவது, விக்கிபீடியா போன்ற திட்டங்கள் இதற்கு உதாரணமாக இருந்தாலும், இணையம் இன்னமும் முழுவதும் பரவலாகமால் இருப்பதும், ஏற்கனவே உள்ள வேறுபாடுகளை அதிகரிக்க கூடிய நிலையில் இருப்பதும் ஆரோக்கியமில்லா அம்சங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இணைய சீண்டுதல்- தாக்குதல் அதிகரித்து வருவதும் , பெண்கள் இதற்கு அதிகம் இலக்காவதும் முக்கிய பிரச்சனையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டு சமூக முயற்சி மற்றும் தொழில்நுட்ப முயற்சி ஆகியவற்றை கொண்டு இந்த பிரச்சனையை கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் தற்போதைய நிலை, பிரச்சனை அதற்கான தீர்வு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இணைய கல்வி பகுதியில், டிஜிட்டல் உலகில் கருத்துக்களை தெரிவித்து பங்கேற்கும் வாய்ப்பும் ஆற்றலும் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஒரு முன்னோட்ட வடிவம் தான். இதை படித்துப்பார்த்து இணையவாசிகள் தங்கள் கருத்துக்களையும் திருத்தங்களையும் தெரிவிக்கலாம். அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் குறித்தும் பங்களிப்பை செலுத்தலாம்.
சுற்றுச்சூழலை காக்க உருவான இயக்கம் போலவே இணையத்தின் ஆரோக்கியத்தை காப்பதற்கான ஒரு இயக்கம் உருவாக வேண்டும் என்பதும் இந்த முயற்சியின் அடிப்படை எண்ணமாக இருக்கிறது. நீங்களும் இதில் பங்கேற்க விரும்பினால்: https://internethealthreport.org/v01/about/

இவர் இணைய உலகின் கோலியாத்தை வீழ்த்தியவர் !

img005
கேபிரியல் வைன்பர்க் எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர். யார் இந்த வைன்பர்க்? கூகுளுக்கு சவால் விடும் மாற்று தேடியந்திரமான டக் டக் கோவின் நிறுவனர் தான் இவர்.
இணையதளங்களை அறிமுகம் செய்வது போலவே தேடியந்திரங்களை அறிமுகம் செய்யும் ஆர்வத்தால் , டக் டக் கோ அறிமுகமான காலத்திலேயே அது பற்றி எழுதியிருக்கிறேன். அப்போது அது தேடாமல் தேடும் உத்தியை பின்பற்றி கவனத்தை ஈர்த்தது.
பின்னர் எட்வர்ட் ஸ்னோடர்ன் விவகாரத்திற்கு பிறகு தனியுரிமை தொடர்பான விவாதம் விஸ்வரூபம் எடுத்த போது , கூகுல் போல பயனாளிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்காத நல்ல தேடியந்திரமாக டக் டக் கோ பெயரெடுத்தது. டக் டக் கோ பற்றி தமிழ் இந்து இணைய பதிப்பில் வெளியாகும் தேடியந்திர தொடரிலும் விரிவாக எழுதியிருக்கிறேன். கூகுள் போலவே புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் அதன் யுத்தி பற்றி விகடன் டாட் காமில் எழுதியுள்ளேன்.
புதிய தலைமுறை கல்வி இதழில் இணைய உலகின் நவீன இளம் ஆளுமைகள் பற்றிய நம் காலத்து நாயகர்கள் தொடர் எழுதிய போது, டக் டக் கோ தேடியந்திரத்தை உருவாக்கி கேப்ரியல் வைன்பர்க் பற்றியும் எழுதினேன்.
தேடல் பேரரசாக வளர்ந்துவிட்ட,கூகுளை பெரும் முதலீடோ அல்லது தொழில்நுட்ப படையோ இல்லாமல் எளிய உத்தியை கொண்டு அவர் கூகுளுக்கு எதிரான ஒரு மாற்று தேடியந்திரத்தை நிலை நிறுத்தியிருக்கிறார். அந்த வகையில் அவரை இணைய உலகின் கோலியாத்தை வீழ்த்திய டேவிட் என்று சொல்லலாம்.
புதிய தலைமுறை வெளியீடாக வர உள்ள நம் காலத்தி நாயகர்கள் புத்தகத்தில் வைன்பர்க் பற்றிய அறிமுக சித்திரத்தை வாசிக்கலாம்.

உள்ளங்கையில் பாலிவுட்டை கொண்டு வரும் பிளிக்பே

section1-phoneபாலிவுட் திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகளில் ஆர்வம் உள்ளவர்கள் பிளிக்பே செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம்.
புதிய படங்களுக்கான முன்னோட்டம், இசை, செய்திகள், பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள், விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி வழங்குகிறது. இந்த பிரிவுகளில் எது தேவையோ அதை கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
முன்னோட்ட வீடியோக்களை பார்க்கலாம். புதுப்பட செய்திகளை படிக்கலாம். புதிதாக வெளியாக உள்ள படங்களை தெரிந்து கொள்ளலாம். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. டிவிடியில் கிடைக்கும் படங்களை பட்டியலையும் பார்க்கலாம்.
இதில் கண்டறியும் தகவல்களை நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். புதிய திரைப்படங்கள் பற்றிய தகவல்களை அறிவிப்பாக பெறும் வசதியும் இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: http://flickbay.com/

——-

வீடியோ புதிது:

திரைப்பட ரசிகர்களைப்பொருத்தவரை ஒரு படத்தின் மற்ற அம்சங்களை போலவே அதில் வரும் மைய பாத்திரங்களின் அறிமுகம் ஆகும் விதமும் முக்கியமானது. பல திரைப்படங்களில் அதன் மைய பாத்திரம் அறிமுகமாகும் விதம் மறக்க முடியதாதாகவும் அமைகிறது.
இப்படி ரசித்து மகிழக்கூடிய பாத்திர அறிமுகங்களில் பத்து சிறந்த அறிமுகங்களை தொகுத்தளிக்கிறது சினிபிக்ஸ் உருவாக்கியுள்ள வீடியோ.
ரைடர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க் படத்தில் இண்டியானா ஜோன்ஸ் அறிமுக காட்சியில் துவங்கி முத்தான பத்து அறிமுக காட்சிகளை பட்டியலிட்டு அவற்றின் சிறப்புகளையும் இந்த வீடியோ விளக்குகிறது.
ஹாலிவுட் படப்பிரியர்கள் பார்த்து மகிழலாம்.

வீடியோவை காண:https://youtu.be/5psXjzWUve8


யூடியூப்பில் புதிய வசதி

முன்னணி வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் தளத்தில், படைப்பாளர்கள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வசதி அறிமுகம் ஆகியுள்ளது.
வீடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் சரி, பார்த்து ரசிக்கவும் சரி யூடியூப் சிறந்த இணையதளமாக இருக்கிறது. யூடியூப்பில் பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்கள் இருந்தாலும், வீடியோக்களை உருவாக்குபவர்கள் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள சரியான வசதி கிடையாது. வீடியோக்கள் கீழே ரசிகர்கள் பின்னூட்ட வடிவில் கருத்து தெரிவிக்க முடியும் என்றாலும், வீடியோக்களை உருவாக்கியவர்களுடன் உரையாட இது போதுமானதல்ல.
இந்தக்குறையை போக்கும் வகையில் யூடியூப்பில் இப்போது கம்யூனிட்டி எனும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. முன்னோட்ட முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம் வீடியோ படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ரசிகர்களும் அதற்கு பதில் தெரிவிக்கலாம்.

கம்யூனிட்டி வசதி தொடர்பான அறிவிப்பு:https://youtube-creators.googleblog.com/2016/09/youtube-community-goes-beyond-video.html

 

நன்றி தமிழ் இந்துவில் எழுதியது

சைபர் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?

view-all-downloaded-apps-featured-644x373நாம் வாழும் உலகம் இத்தனை ஆபத்தானதாக இருக்கிறதா? நம்மைச்சுற்றி இவ்வளவு அச்சுறுத்தல்கள் இருக்கின்றனவா? அப்பாவியான நம்மை குறிவைத்து தாக்குதல் நடத்த எப்போதும், எங்கோ யாரோ காத்திருக்கின்றனரா? அன்மையில் சென்னையில் நடைபெற்ற தேசிய சைபர் பாதுகாப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை கேட்டால் இத்தகைய கேள்விகள் நிச்சயம் மனதில் தோன்றியிருக்கும்.

ஆனால் இந்த மாநாடு மிரட்சியை மட்டும் ஏற்படுத்தவில்லை. இத்தகைய தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டறிந்து தடுக்கும் வகையிலும், ஏற்கனவே உண்டான பாதிப்பில் இருந்து மீட்கும் வகையிலும் வல்லவனுக்கு வல்லனவாக வல்லுனர்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதையும், அதற்காக அவர்கள் கையாளும் வழிகளையும், உத்திகளையும் அறிந்து பிரமிக்கவும் வைத்தது.
அதோடு எதிர்காலத்தில் இந்த ஆபத்துகள் இன்னும் தீவிரமாகாமல் தடுப்பதும், தற்காத்து கொள்வதும் நம் கைகளில் இருக்கிறது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

சைபர் பாதுகாப்பு!
சைபர்வெளி என்று சொல்லப்படும் இணையம் சார்ந்த பரப்பில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் பாதுகாப்பின் அவசியத்தையும், அதற்கான வழிகளையும் வலியுறுத்தும் வகையில் நேஷனல் சைபர் சேப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ் அமைப்பு, மத்திய மற்றும் மாநில அரசு ஆதரவுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செப் 30 மற்றும் அக் 1 ம் தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தியது. சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள், அரசு அமைப்பைச்சேர்ந்தவர்கள், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் என சைபர் பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு தரப்பினரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் எடுத்து வைத்தனர்.
இணைய மோசடிகள் பற்றியும், ஹேக்கர்களின் தாக்குதல் பற்றியும் அங்கொன்றும் இன்கொன்றுமாக நாம் கேள்விபட்டிருந்தாலும், சைபர் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் எத்தனை பரவலாகவும், தீவிரமாகவும் இருக்கின்றன எனும் நிலையை இந்த வல்லுனர்கள் புரிய வைத்தனர்.

வல்லுனர்களின் பேச்சு பலவித தலைப்புகளில் அமைந்திருந்தாலும், சைபர் பாதுகாப்பு என்பது தேசிய நோக்கில், தனிப்பட்ட அளவில், நிறுவன மட்டத்தில் என மூன்று கட்டங்களாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்பதையும், மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்திருப்பதையும் உணர்த்தியது.
இந்த மாநாட்டில் ’சைபர் மிஷன் இந்தியா’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. மாநாடு அறிமுக உரையில், நேஷனல் சைபர் சேப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ் கூடுதல் இயக்குனர் ஜெனரல் அமர் பிரசாத் ரெட்டி, நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சைபர் அச்சுறுத்தல்கள்
துவக்க விழாவுக்கு பிறகு எம்.வி.பி எண்டர்பிரைஸ் செக்யூரிட்டி நிறுவனத்தைச்சேர்ந்த மனு ஜாக்காரியா பேசினார். உலகம் முழுவதும் நடைபெற்ற முக்கிய சைபர் மோசடிகளை பட்டியலிட்டவர், அவற்றில் இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய, பாதுகாப்பு வல்லுனர்கள் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். இருப்பிடம் பற்றிய தகவலை சீனாவுக்கு அனுப்பி வைக்கும் சிப்கள், ட்ரோன்கள் மூலம் செயல்படும் துப்பாக்கிகள், கார்கள் மூதல் டீரிம்லைனர் விமானங்களை வரை எல்லாமே ஹேக் செய்யப்படுவதற்கான அபாயம் பற்றி எல்லாம் கோட்டிக்காட்டினார். சீன ஹேக்கர் குழு ஒன்று, வியட்னாம் விமான நிலையங்களின் கம்ப்யூட்டர் அமைப்புகள் உள்ளே நுழந்து அதன் ஒலிபெருக்கி அமைப்பு உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட தகவலையும் சுட்டிக்காட்டினார். தான் சுட்டிக்காட்டும் தகவல்கள் எந்த நாட்டையும், நகரத்தையும், எவரையும் குறிப்பிடுவதல்ல எனும் பொறுப்பு துறப்பையும் ஆரம்பத்திலேயே தெரிவித்தவர், சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்தது மட்டும் அல்ல, அதில் மனிதர்களும் இருக்கின்றனர், அந்த சங்கிலி தான் பல இடங்களில் பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். என்ன தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும், ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கிக்கொண்டு பென் டிரைவை கம்ப்யூட்டரில் பொருத்த முற்பட்டால் என்ன ஆகும் என மிரள வைத்தார். பாதுகாப்பில் பயனாளிகளுக்கும் முக்கிய பங்கு இருப்பதை குறிப்பிட்டவர், மற்ற நாடுகள் எல்லாம் சைபர் பாதுகாப்பு தொடர்பாக நீண்ட கால நோக்கில் திட்டங்கள் தீட்டும் போது நம்மிடம் நீண்ட கால திட்டம் இல்லை என்றார்.

அடுத்ததாக பேசிய டீப் ஐடண்டிடி நிறுவனத்தின் செக்யூரிட்டி ஹெட், பெனில்டஸ் நடார், ஒரு காலத்தில் வெறும் பயர்வால் பாதுகாப்பு இருந்தால் போதும் என்ற நிலைமாறி இன்று நிறுவனங்கள் தரவுகளை பாதுகாக்க தடுமாறும் நிலை உண்டாகி இருக்கிறது என்றார். நவீன சாதனங்களை கொண்ட சிக்கலான பாதுகாப்பு அமைப்பு மட்டுமே தற்காப்பை உறுதி செய்துவிடாது என்றும், தாக்குதல் ஏற்படாமல் தடுப்பதில் காட்டும் கவனத்தை, தாக்குதல்களை நடைபெறுவதை கண்டறியும் முயற்சியிலும் காட்ட வேண்டும் என்றார். இமெயில் மற்றும் சமூக ஊடகங்கள் வழியே விஷமிகள் விரிக்கும் வலையில் நிறுவன ஊழியர்கள் தங்களை அறியாமல் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருப்பதை சுட்டிக்காட்டியவர், நவீன பாதுகாப்பு அமைப்புகளை அளிப்பதைவிட, நிறுவன வர்ததக சூழலை புரிந்து கொண்டு அதற்கேற்ற பாதுகாப்பு அம்சங்களை அளிக்க வேண்டும் என ஆலோசனை கூறினார். நிறுவன வர்த்தகத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கூறினார். தற்காப்பும், பாதுகாப்பும் மட்டும் அல்ல, சைபர் தாக்குதல் நடைபெற்றால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றார்.

தேவை தயார் நிலை

முன்னாள் மத்திய தலைமை சைபர் பாதுகாப்பு அதிகாரியான நரேஷ் சவுத்ரி, சைபர் யுத்தம் பற்றியும், சைபர் பயங்கரவாதம் பற்றியும் குறிப்பிட்டார். ஆய்வு அமைப்புகளின் வசதிகள், முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள், மின்சக்தி மையங்கள், தரவு மையங்கள் உள்ளிட்ட பலவற்றை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டவர், ‘என்னிடம் தான் எந்த ரகசியமும் இல்லையே, என் கம்ப்யூட்டரை யார் தாக்கப்போகிறார்கள்’ என சாமானியர்கள் நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்றும், யாருடைய கம்ப்யூட்டர் வேண்டுமானாலும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஜோம்பி படையின் அங்கமாக்கப்படலாம் என எச்சரித்தார். சீனா சைபர் உளவை ஒரு உத்தியாக கடைபிடித்து வருவது குறித்தும் பேசியவர், நிறுவனங்களுக்கும் சைபர் தாக்குதல் மிகப்பெரிய அச்சுறுத்தல், விஷமிகள் ஊழியர் போல ஊடுருவலாம் என திடுக்கிட வைத்தார். எல்லோரையும் மதியுங்கள்,ஆனால் எல்லோரையும் சந்தேகியுங்கள் என்பதே இக்கால நியதி என்றார்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான அருண் குமார் சஹானி, மாநாட்டின் இரண்டாம் நாள் பேசும் போது, தேசிய நோக்கில் சைபர் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அணுகுமுறைகள் குறித்து சிந்திக்க வைத்தார். தைவான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சைபர் கமேண்ட் உருவாக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியவர், நம்முடைய ராணுவ அமைப்பிலும் மாற்றம் தேவை என்றார். சைபர் வீர்ர்கள் சீருடை அணிந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர் சைபர் பாதுகாப்பில் அரசு மற்றும் தனியார் கூட்டு அதிகரிக்க வேண்டும் என்றார். சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் உத்தி, சைபர் தாக்குதலை நடத்தும் ஆற்றலையும் உட்கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நம்முடைய சைபர் பாதுகாப்பு அமைப்பில் தாக்குதல் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியவர், மேக் இன் இந்தியா கொள்கையை பொருத்தவரை, கம்ப்யூட்டர்களுக்கு மிகவும் அவசியம் என்றும், நாம் பயன்படுத்தும் சாதனங்கள் இந்திய இதயம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தைகய தொழில்நுட்ப இறையாண்மை மிகவும் இன்றியமையாதது என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார். மால்வேர் பாதிப்பு கொண்ட ஏவுகனை அமைப்புகளை பெறக்கூடிய நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார்.

முன்னதாக பேசிய, டிஜிட்டல் இந்தியா முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி ருத்ரமூர்த்தி, இன்றைய குழந்தைகள் எல்லாம் செல்போன் பயன்படுத்துவது இயல்பாகி இருக்கும் நிலையில், சைபர் பாதுகாப்பு கல்வி என்பது மழலையர் பள்ளியில் இருந்து அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறியவர், சைபர் பாதுகாப்பில் ஆர்வத்தை உண்டாக்க தனியே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மீண்டு வரும் ஆற்றல்
சைபர் பாதுகாப்பில் தேவையான மீண்டு வரும் திறனின் முக்கியத்துவம் பற்றி பிரிஸ்டைன் கன்ஸல்டிங் நிறுவன இயக்குனர் விட்டல் ராஜ் பேசினார். சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்தது மட்டும் அல்ல அது மனிதர்கள் தொடர்பானதும் கூட எனும் கருத்தை வலியுறுத்தியவர், எல்லா வகையான நவீன தற்காப்பு தொழில்நுட்பங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றை பயன்படுத்தும் மனிதர்களிடம் சரியான புரிதல் இல்லை எனில் ஒரு பயனும் இல்லை என கூறினார்.

தொழில்நுட்பத்தை உருவாக்கும் போதே அதில் பாதுகாப்பு அம்சங்களையும் இடம் பெறச்செய்வது அவசியம் என்றவர், நாம் வீடு கட்டிமுடித்துவிட்டா, கதவுகளை வைப்பது பற்றி யோசிப்போம் என்று கேள்வி எழுப்பினார்.
சைபர் தாக்குதலால் நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்பு குறித்து உலக பொருளாதார அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதையும் குறிப்பிட்டவர், நம்முடைய நிறுவனம் அல்லது அமைப்பு தாக்கப்பட்டால் அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்தார். திடிரென செல்போன் இணைப்புகள் இல்லாமல் போனால் என்ன செய்வோம் என்று யோசித்து பார்க்க வேண்டும் என்று கூறியவர், நிறுவனங்கள் சர்வர் துண்டிப்பு டிரில் போன்றவற்றை நடத்த தயாராக வேண்டும் என யோசனை தெரிவித்தார். சைபர் பாதுகாப்பிற்கு நாம் ஒவ்வொருமே பொறுப்பு என்றவர், நாட்டின் சைபர் பாதுகாப்பு நம் ஒவ்வொருவரின் விரல்களில் இருந்து துவங்குகிறது என்றும், நம்முடைய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் என்று மாநாட்டின் மையக்கருத்தை பிரதிபலித்தார்.

—–

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது!