இணையத்தில் நல்லெண்ணத்தை பரப்பும் பேராசிரியர்

sஇணையத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தென்கொரிய பேராசிரியர் மின் யங் சுல் பற்றியும் அவரது ’முழு ஒளி’ இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இணையத்தின் எதிர்மறை தன்மையால் அதன் மீது அவம்பிக்கை கொண்டவர்களும் இந்த பேராசிரியரை அவசியம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்த பேராசிரியரின் முழு ஒளி இயக்கம், , இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருக்கிறது என்பது தான். இந்த இயக்கம் பற்றி அறிந்து கொண்டால் நிச்சயம் பேராசிரியரை பாராட்டவும் தோன்றும், அவர் செய்வதை பின்பற்றி நடக்கவும் தோன்றும். இந்த ஊக்கமே அவரை கவனிக்க வைக்கிறது.

இணையத்தில் நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கூட்ட நிதி திரட்டுதல் முதல் கூட்டு முயற்சிகள் வரை எண்ணற்ற செயல்களுக்கு இணையத்தை பயன்படுத்தலாம். இணையம் மூலம் மாற்றங்களை கொண்டு வரலாம், புதிய பாதை காட்டலாம். ஆனால் இணைய பயன்பாட்டிற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. இது எதிர்முறையான செயல்களையும் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இணையத்தில் அவதூறு பரப்புவதும், காரணமே இல்லாமல் வசைபாடி வெறுப்பை உமிழ்வதும் வெகு சுலபம்.

இதை பின்னூட்ட  வடிவில் செய்யலாம். நேரடி தாக்குதலாகவும் நடத்தலாம். விவாதங்களில் ஊடுருவி அதன் மைய பொருளையே பாழாக்கலாம். இன்னும் பலவிதங்களில் நிகழும் இந்த பாதிப்பு பிரச்சனை பொதுவாக ’டிரால்ஸ்’ என குறிப்பிடப்படுகிறது. அதாவது இணையத்தில் ஒருவரை பின் தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை கூறி வெறுப்பேற்றுவது. சைபர் சீண்டிவிடுதல் என்றும் இதை புரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் துவங்கி, டிவிட்டர், வாட்ஸ் அப், விவாத தளங்கள், செய்தி தளங்கள் என எல்லாவற்றிலும் இவற்றை பார்க்கலாம். அரத்தமுள்ள கருத்துக்களுக்கு நடுவே எதிர்மறை கருத்துக்கள் தோன்றும். இவை வெற்று கேலியாக இருக்கலாம். ஆவேசம் கொண்ட தாக்குதலாகவும் இருக்கலாம். துவேஷ நஞ்சை கக்கலாம். இணைய சாமானியர்கள் முதல் நட்சத்திரங்கள் வரை பலரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகுகின்றனர். பலர் இணையத்தில் இப்படியும் உண்டு என புறந்தள்ளி சென்றுவிடுகின்றனர். இன்னும் சிலர் வேதனைக்கு இலக்காகி இணையமே வேண்டாம் என விலகி விடுவதும் உண்டு. விபரீதமான சில தருணங்களில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தற்கொலை போன்ற தீய முடிவுகளுக்கும் வந்துவிடுவதுண்டு.

இணையம் இந்த பிரச்சனையை அறியாமல் இல்லை. இதை கட்டுப்படுத்தவும் இணையத்தில் பலர் முயன்று வருகின்றனர். இந்த வரிசையில் தான் கொரிய பேராசிரியரும் வருகிறார். ஆச்சர்யப்படும் வகையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இந்த முன்னோடி பற்றி தற்செயலாகவே அறிந்து கொள்ள முடிந்தது. இணைய கலாச்சாரம் தொடர்பாக தேடிக்கொண்டிருந்த போது, சைபர்வெளியில் நல்லெண்ணத்தை பரப்பும் கொரிய பேராசிரியர் எனும் செய்தி தலைப்பு கவனத்தை ஈர்தத்து. ஸ்டார்2 எனும் தளத்தில் வெளியாகி இருந்த அந்த செய்தியை கிளிக் செய்து படித்துப்பார்த்தால், கொரிய பேராசிரியரின் முயற்சி வியக்க வைப்பதாக இருக்கிறது.

பேராசிரியர் மின், இணையத்தில் நல்லெண்ண கருத்துக்களை பரவச்செய்து வருகிறார். அதாவது இணையத்தில் வெளியாகும் எதிர்மறையான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நல்லவிதமான கருத்துக்களை பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறார். இதற்காக என்றே ’முழுஒளி’ இணைய இயக்கத்தையும் துவக்கி நடத்தி வருகிறார்.

கொரியாவில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் இணையவாசிகள் நல்லெண்ண கருத்துக்களை இணையத்தில் வெளியிடுவதை அவரது இயக்கம் ஊக்குவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இணையத்தில் தாக்குதலுக்கும், துவேஷத்திற்கும் இலக்காகின்றனர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நல்லவிதமான கருத்துக்களை வெளியிட ஊக்குவித்து வருகிறது. இதற்காக பள்ளி அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கொரிய அளவில் மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளிலும் இந்த முறை பிரபலமாகி வருகிறது.

இந்த இயக்கத்தின் பயனாக, இதுவரை 72 லட்சத்திற்கும் மேலான நல்லெண்ண கருத்துக்கள் இதன் உறுப்பினர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இயக்க இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை பெரிய விஷயமல்ல. ஆனால் இந்த செயலின் பின்னே உள்ள நோக்கம் பெரியது.

விஷமிகள் இணையத்தில் போகிற போக்கில் மோசமான கருத்துக்களை பதிவு செய்து விட்டுச்செல்கின்றனர். இந்த கருத்துக்கள் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவதும் உண்டு. அதைவிட மோசமான முடிவுக்கும் கொண்டு செல்வதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று இதற்கான உதாரணம். விவாத தளம் ஒன்றில் ‘ நான் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமா? என ஒருவர் கேட்டிருக்கிறார். காதலியுடனான மன முறிவு தந்த சோகத்தில் இருந்த அந்த வாலிபர் கேட்ட கேள்விக்கு, ஆம் என்று ஒருவர் பதில் சொல்லி இருந்தார். இன்னொருவர், நீங்கள் இறப்பதற்கு முன் ஐபோனை கொடுத்து விட்டு செல்லவும் என கூறியிருந்தார். இப்படி நீண்ட கருத்துக்களின் விளையாக அந்த இளைஞர் இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

இது போல எண்ணற்ற வேதனையான உதாரணங்கள் இருக்கின்றன. கொரியாவிலும் நட்சத்திரம் ஒருவர் இணைய பின்னூட்ட தாக்குதலால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்த போது பேராசிரியர் மின், இணையத்தில் வெளியாகும் எதிர்மறை கருத்துக்களை சமன் செய்ய ஏதாவது செய்ய வேண்டியது அவசியம் என நினைத்தார். தலைநலர் சியோலில் உள்ள சுன்காங் எனும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், பல்வேறு இணையதளங்களில் நட்சத்திரங்களின் பக்கத்தில் நல்ல விதமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என தனது மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தார். மாணவர்களும் ஆயிரக்கணக்கில் நல்லெண்ன கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்த முயற்சி பற்றி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதனால் ஊக்கம் பெற்ற பேராசிரியர் இந்த செயலை தொடர்வதற்காக சன்புல் இயக்கத்தை துவக்கினார். கொரிய மொழியில் முழு ஒளி என்று பொருள்.

இந்த இயக்கத்தின் மூலம், உறுப்பினர்கள் இணையத்தில் நல்லவிதமான கருத்துக்களை வெளியிட ஊக்குவித்து வருகிறார். இதன் உறுப்பினர்கள் இணையத்தில் உலாவி, வெறுப்பை உமிழும் கருத்துக்கள் வெளியாகி இருக்கும் இடங்களில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நல்ல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப பொருத்தமான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

பூகம்பம் பாதிப்பு, தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் நல்லெண்ண கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படி நல்லெண்ண கருத்துக்களை பரவச்செய்ய முயன்று வருவதோடு, அண்மையில் சமூக ஊடக மனித உரிமைகள் குழுவையும் அவர் துவக்கியிருக்கிறார். இந்தக்குழு இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் சட்ட உதவியை வழங்கி வருகிறது.

மோசமான கருத்துக்கள் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தகூடியது என்பது நமக்கு தெரிந்தது தான். ஆனால் நல்லவிதமான கருத்துகளை பதிவு செய்வதன் மூலம், எல்லோரும் நமக்கு எதிரானவர்கள் அல்ல, ஆதரவான குரல்களும் உள்ளன என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்த்த முடியும். அதை தான் முழு ஒளி இயக்கம் ஊக்குவித்து வருகிறது.

அது மட்டும் அல்ல, நல்லவிதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருப்பது மற்றவர்கள் எதிர்மறையான கருத்துகளை வெளியிடுவதையும் தவிர்க்க உதவலாம். இத்தகைய கருத்துகள் இணைய சீண்டலில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இணையத்தில் நல்லெண்ணத்தை விதைப்போம்!

முழுஒளி இயக்க இணையதளம்: http://sun-full.org/index.htm#&panel1-2

 

-=

 

 

 

 

மன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம்.

இவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய பயன்பாடே கூட மன அழுதத்திற்கு காரணமாக அமைந்துவிடலாம். இணையத்தில் சமூக ஊடக தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது அல்லது அதில் தெரிவிக்கப்படும் வில்லங்க, துவேஷ கருத்துக்களின் தாக்கத்தால் துவண்டு போவது என பல காரணங்களினால் இணைய பழக்கமும் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம்.

இணையமும் மன அழுதத்திற்கு வித்திடலாம் என்பது மட்டும் அல்ல, அதிலிருந்து விடுபடவும் உதவும் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். ஆம், மன அழுத்த பாதிப்பில் இருந்து விடுபட உதவுவதற்கு என்றே பிரத்யேகமான இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்:

மூச்சுப்பயிற்சி

நெருக்கடியான மன நிலையில் இருக்கும் போது மூச்சை இழுத்துவிட்டு மனதை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பது பலரும் செய்வது தான். இதையே முறையாக மூச்சுப்பயிற்சியாகவும் செய்தால் மனம் லேசாகிவிடும். ஆழமாக மூச்சை இழுத்து சுவாசித்து அதே போல ஆழமாக வெளியே விடுவது சிறந்த பயிற்சியாகும். இதை செய்வதற்கான வழிகாட்டுதலோ அல்லது ஊக்கமோ தேவை எனில், எக்ஸ்ஹேலர் தளத்தை நாடலாம்.

இந்த தளத்தில் நுழைந்ததுமே ஒன்றுக்குள் ஒன்றாக தோன்றும் இரண்டு வளையங்களை காணலாம். உள்ளே இருக்கும் வளையம் சுருங்கி விரிவடைந்து கொண்டே இருக்கும். அது தான் மூச்சை உள்ளே இழுப்பதற்கும், வெளியே விடுவதற்குமான வழிகாட்டுதல். இந்த வளையத்தை பார்த்தபடி மூச்சை இழுத்து வெளியே விட்டால், சுவாரஸ்யமான முறையில் மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

மூச்சை இழுத்து விடுவதற்கான கால அளவை மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. பின்னணி வண்ணத்தை மாற்றுவது, ஆடியோவை ஒலிக்கச்செய்வது போன்ற வசதிகளும் உள்ளன. யோகா அல்லது தியானத்துடன் இணைந்து மேற்கொள்ளலாம். பிராணயம வழிகாட்டி வசதியும் இருக்கிறது.

இணைய முகவரி: http://xhalr.com/

அரட்டை ஆசுவாசம்

மன நிலை மோசமாக இருக்கும் போது நல்ல நண்பர்களிடம் மனம் விட்டு பேசினாலே பாரம் குறைந்தது போல உணரலாம். ஆனால் அப்படி கேட்க ஒருவரும் இல்லை என்று வருந்துகிறீர்களா? கவலையே வேண்டாம், 247 பட்டி இணையதளத்தில் உங்கள் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி விடலாம். இந்த தளத்தில் இணையத்தில் உள்ள யாரோ ஒரு முகம் தெரியாத நபருடன் அரட்டை அடித்து உங்கள் மனக்குறைகளை எல்லாம் தெரிவிக்கலாம். உங்களைப்பற்றிய அடையாளத்தை வெளியிட வேண்டாம். இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும் அவசியம் இல்லை. நீங்கள் விரும்பினால், யாரோ ஒருவரின் மனக்குறைகளை கேட்கும் முகம் தெரியாத நபராகவும் இருக்கலாம். அதாவது நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டு பதில் அளிக்கலாம்.

இணைய முகவரி: http://xhalr.com/http://xhalr.com/

ஆன்லைன் சிகிச்சை

ரிலாக்ஸ் ஆன்லைன் தளத்தின் ஸ்டிரெஸ் அனலிஸ்ட் சேவை, உங்களின் மன அழுத்தத்திற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்கிறது. இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரிசையாக பதில் அளித்து ஆய்வு என்ன சொல்கிறது என கவனிக்கலாம். மன அழுத்தம் இல்லாதவர்கள் கூட, இதில் வழிபோக்கர்கள் போல பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இவை ஆய்வு நோக்கில் பயன்படுத்திக்கொள்ளப்படும். தனிப்பட்ட விவரங்களை எதையும் இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டாம்.

இணைய முகவரி: http://www.relaxonline.me.uk/sa1/index.html

அமைதியைத்தேடி

பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே கொஞ்சம் அமைதி தேவைப்படுகிறதா/ தி குவைட் பிளேஸ் இணையதளம் அதை வழங்குகிறது. இந்த தளத்தில் மூன்று விதமான வாய்ப்புகள் உள்ளன. முதல் வாய்ப்பில் கம்ப்யூட்டர் ஸ்பேஸ் பார் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். பேஸ்புக் நோட்டிபிகேஷன் போன்ற இடைஞ்சல்கள் எல்லாம் இல்லாமல் 30 நொடிகளை இங்கே செலவிடலாம். இதே போல 90 நொடி அமைதி பயிற்சியையும் தேர்வு செய்யலாம். இல்லை எனில் எழுதும் அறைக்குள் நுழைந்து மனதில் உள்ள எண்ணங்களை எழுதி வைக்கலாம். : http://thequietplaceproject.com/thequietplace

இதே போலவே பிகசல் தாட்ஸ் எனும் இணையதளமும் இருக்கிறது: இந்த தளத்தில் மனதில் உள்ள பாரமான எண்ணங்களை விண்ணில் வீசி விட்டு 60 நொடிகள் தியானம் செய்யலாம்: http://www.pixelthoughts.co/

அமைதி வீடியோ

மன அழுத்தம் என்பது பெரியவர்களுக்கு மட்டும் தான? சிறார்களுடம் கூட பல காரணங்களினால் மன அழுத்தம் பெறலாம். சிறார்கள் மன அழுதத்த்தில் இருந்து விடுபடும் வகையில் வீடியோக்களை வழங்குகிறது கோஜென் இணையதளம். இமெயில் முகவரியை சமர்பித்து இந்த தளத்தை பயன்படுத்தலாம். சிறார்கள் ஆரோக்கியமான முறையைல் இந்த சிக்கலை எதிர்கொள்ள வழி செய்வதாக இந்த தளம் தெரிவிக்கிறது.

இணைய முகவரி: https://www.gozen.com/

இந்த தளங்கள் தவிர அருமையான யூடியூப் வீடியோ ஒன்றும் இருக்கிறது. அயர்லாந்து நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத வனப்பகுதியில் பாலத்தின் அடியில் பாய்ந்தோடும் அருவி காட்சியாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மணிக்கணக்கில் நீளும் இந்த வீடியோவில், அருவியின் சளசளப்பையும், இயற்கையின் கண் கொள்ள காட்சிகளையும், ரம்மியத்தையும், நீங்கள் விரும்பிய நேரத்திற்கு பார்த்து ரசித்து மனதை பறிகொடுக்கலாம். இதுவரை லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவில் லயித்திருக்கின்றனர். தூக்கம் வராமல் தவித்தவர்கள் எல்லாம் இந்த வீடியோவை பார்த்து மன அமைதி பெற்றதாக தெரிவித்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

வீடியோவைக்காண: https://youtu.be/eKFTSSKCzWA

இணையம் அறிவோம்; இணையம் காப்போம்

 

’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சமநிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்பதும், இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவை யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாது என்பதும் பரிந்துரைகளின் முக்கிய அம்சமாக அமைகின்றன. சாமானியர்களின் நோக்கில் பார்த்தால், இதன் பொருள் இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. எல்லா வகையான இணைதளங்களையும், சேவைகளையும் அவை ஒன்றாகவே கருத வேண்டும். எனவே இணையவாசிகள் ஏற்கனவே உள்ளது போலவே எந்த மாறுதலும் இல்லாமல் இணைத்தை அணுகலாம்.

டிராயின் இந்த பரிந்துரைகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாக இணைய சமநிலை தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பரிசீலித்து வந்த டிராய், இது தொடர்பான தனது பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இவை இணைய சமநிலைக்கு ஆதரவாக அமைந்திருப்பது ஒரு விதத்தில் இணையவாசிகளுக்கும், இணைய சமநிலை ஆதாரவாளர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாடு தழுவிய அளவில் வெடித்த இணைய சமநிலை போராட்டம் நினைவிருக்கலாம். அப்போது டிராய், ஓவர் தி டாப் சேவைகள் என சொல்லப்படும் வாட்ஸ் அப் , ஸ்கைப் போன்ற சேவைகள் குறித்து, பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் வகையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இணைய சமநிலைக்கு பாதகமான விஷயங்கள் இருந்தன.

இணைய போராட்டம்

இதனையடுத்து இணைய சுதந்திரத்தை காக்கும் நோக்கத்தோடு இணையவாசிகள் திரண்டனர். இணைய சமநிலைக்கு ஆதாரவான இணையதளங்கள் அமைக்கப்பட்டு, இதை வலியுறுத்தும் வகையில் மெயில்கள் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பயனாக குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்க முற்பட்ட ஏர்டெல் ஜீரோ போன்ற சர்ச்சைக்குறிய திட்டங்கள் கைவிடப்பட்டன. பின்னர் பேஸ்புக் நிறுவனம் ஜீரோபேசிஸ் எனும் பெயரில் குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்கும் திட்டமும் கைவிடும் சூழல் உருவானது.

இந்நிலையில் தான், டிராயின் பரிந்துரைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த பரிந்துரைகள் தொலைத்தொடர்பு துறையால் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகே இவை அமலுக்கு வரும். எனினும் அடிப்படையில் இணைய சமநிலைக்கு திட்டவட்டமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பரிந்துரைகள் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என்றே பரவலாக கருதப்படுகிறது. ”இணையம் என்பது யார் ஒருவருக்கு சொந்தமானது அல்ல, எனவே அது திறந்த தன்மை கொண்டதாக, எல்லோரும் அணுக கூடியதாக இருப்பதே சரியானது” என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதை இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும்.

டிராய் பரிந்துரைகளில் ஒரு சில போதாமைகள் இருப்பதாக இணைய சமநிலை ஆதாரவாளர்கள் கருதினாலும், ஒட்டுமொத்தமாக வரவேற்க தக்கதாகவே இருக்கிறது. அது மட்டும் அல்ல, சர்வதேச அளவில் இணைய சமநிலைக்கு ஆதரவான மிகவும் வலுவான நிலைப்பாடாக இது அமைந்திருப்பதாகவும் பாராட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இணைய புதுமைகளின் இருப்பிடம் என போற்றப்படும் சிலிக்கான் வேலி அமைந்திருக்கும் அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட இணைய சமநிலைக்கு ஆதாரவான விதிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ள நிலையில் இந்திய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் முரண் நகை என்னவெனில், அமெரிக்காவில் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்ஸ் சேர்மனாக இருக்கும் இந்திய அமெரிக்கரான அஜித் பாய் என்பவர் தான் இந்த நடவடிக்கையின் மையமாக இருக்கிறார் என்பது தான்.

அமெரிக்காவில் விவாதம்

இணைய சமநிலை இல்லாத நிலை உருவானால், என்ன எல்லாம் பாதிப்பு ஏற்படு என்று அமெரிக்காவும், சிலிக்கான வேலியும் மிகத்தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இணைய புதுமைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேட்டு வைத்துவிடலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வல்லுனர்கள் சிலர் நாமறிந்த வகையில் இணையம் முடிவுக்கு வந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். எப்படியேனும் இணைய சமநிலையை காப்பாற்ற வேண்டும் எனும் போராட்டமும் அங்கு வலுத்திருக்கிறது.

இணைய சமநிலையின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இதற்கான விளக்கத்தை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, இணையத்தின் அடிப்படையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இணையம் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரியும். இ-காமர்ஸ், பண பரிவர்த்தனை, பொழுதுபோக்கு, இணைய கல்வி என எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்த முடிகிறது. இப்படி இணையம் மிகவும் பழக்கமாகி விட்டதால் பலரும் இணையம் என்றால் என்ன என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால் இது இப்போது மிகவும் அவசியமாகிறது.

இணைய ஆற்றல்

இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என்று குறிப்பிடப்படுகிறது, கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களும், கையடக்க சாதனங்களும் அந்த வலையில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தொலைபேசி உள்ளிட்ட அனைத்துவிதமான வலைப்பின்னல்களில் இருந்தும் இணையம் மிகவும் மாறுபட்டது. ஏனெனில் இணையம் மையமில்லாதது. இணையம் எந்த ஒரு அமைப்பு அல்லது நாடு அல்லது நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தான் தணிக்கை முயற்சிகளை எல்லாம் மீறி இணையம் அடிப்படையில் சுதந்திரமானதாக இருக்கிறது. இந்த மையமில்லாத அம்சம் என்பது இணையத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பிலும் இருப்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இணையம் மையமாக கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே அதன் வடிவமைப்பும் அமைந்துள்ளது. இணையம் எனும் வலைப்பின்னலில் இணையும் புதிய முனைகள் (nodes) மூலமே வலுப்பெறும் வகையில் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இணைய போக்குவரத்தை தாங்கியிருக்கும் ரவுட்டர்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை எல்லால் விட, இந்த வலைப்பின்னலில் இணையும் புதிய சாதனங்கள் மற்றும் சேவைகள் மூலம் தான் அது தனக்கான புதிய ஆற்றலை பெறுகிறது. இந்த வகை வடிவமைப்பை ‘எண்ட் டூ எண்ட்’ டிசைன் என குறிப்பிடுகின்றனர்.

இந்த இடத்தில் இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்கத்தால் நவீன சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சமகால சமூகத்தை வலைப்பின்னல் சமூகம் என மானுவல் காஸ்டெல்ஸ் எனும் சமூகவியல் அறிஞர் குறிப்பிடுவதை நினைத்துப்பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். நம் சமூகம் தற்போது வலைப்பின்னல்களை அடிப்படை சமூக கட்டமைப்பாக கொண்டிருப்பதாக மாறியிருக்கிறது என கூறும் காஸ்டெல்ஸ் உலகமயமாதலும், இணையம் மூலமான அணி சேர்தலும், போராட்டங்களும் இதன் வெவ்வேறு அம்சங்கள் என்கிறார். இந்த வலைப்பின்னலில் எந்த ஒரு தனி முனைக்கும் முக்கியத்துவம் கிடையாது, இதில் இணையும் புதிய முனைகளே இதன் ஆற்றலுக்கு முக்கிய காரணம் என காஸ்டெல்ஸ் குறிப்பிடுகிறார். பழைய முனைகள் முக்கியத்துவம் இழந்து விலகிப்போவதும், புதிய முனைகள் முன்னுக்கு வருவதும் சகஜமானது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மையமில்லாத தன்மையே இந்த யுகத்தின் தன்மை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கருத்தாக்கங்களை விவரித்து அவர் இன்பர்மேஷன் ஏஜ் எனும் மூன்று பகுதி புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

ஏன் தேவை?

ஆக, இணையத்தின் மையமில்லா தன்மையே அதன் ஆதார பலம். அந்த காலத்தில் உருவான நெட்ஸ்கேப் பிரவுசர், இபே ஏல தளம், ஜியோசிட்டிஸ் இணையதள சேவை மற்றும் இடையே அலையென எழுந்த பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள், இப்போதைய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட புதுமையான சேவைகள் எல்லாம் உருவாக அடிப்படை காரணம் இணையம் திறந்த வெளி தன்மை கொண்டிருப்பதும், அங்கு எல்லோரும் சமம் என்பதுமே ஆகும்.

இந்த தன்மையை கட்டிக்காக்கவே இணைய சமநிலை எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதாவது இணைய சேவை நிறுவனங்கள் எந்த காரணத்திற்காகவும் இணையதளங்கள் அல்லது சேவைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் எல்லாவற்றையும் சமமாக நடத்த வேண்டும் என்பதாகும். இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு சேவையையும், முடக்கவோ, வேகத்தை குறைக்கவோ செய்யக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதே போல ஒரு சில தளங்களுக்கு அதிவேக பாதை அமைத்து தரவும் முயலக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் வீடியோ சேவை வழங்கும் தளங்களும் அதிவேக பாதை தேவை எனும் வாதத்தின் அடிப்படையில் இணைய சமநிலை எதிர்க்கப்படுகிறது. இதன் காரணமாக இணையத்திற்கு மாறுபட்ட கட்டண விகிதங்கள் வரலாம். அதைவிட முக்கியமாக குறிப்பிட்ட சில தளங்கள் முன்நிறுத்தப்பட்டு சில பின்னுக்குத்தள்ளப்படும் நிலை வரலாம். இது நுகர்வோரை பாதிக்கும். மேலும் இணைய சேவை நிறுவனங்களோடு கைகோர்த்து பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாவதை கடினமானதாக்கலாம்.

இணைய சமநிலை இன்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இன்னும் பெரிதாக பட்டியலிடலாம். அதைவிட எளிதாக இணைய சமநிலை இல்லாத போர்ச்சுகள் நாட்டில், இப்போது இணையவாசிகள் படும்பாட்டை பார்த்தாலே போதும் என்கின்றனர். இங்கு இணையவாசிகள் இணையத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல், கேபிள் டிவி பேக்கேஜ் போல குறிப்பிட்ட கட்டணத்திற்கு குறிப்பிட்ட வகை இணையதளங்களை பயன்படுத்தும் நிலை உருவாகி இருப்பதாக செய்திகளில் இருந்து அறிய முடிகிறது.

எனவே தான் இணைய சமநிலையும், அதில் இந்தியா எடுத்துள்ள வலுவான நிலைப்பாடும் முக்கியமாகிறது. இதை கட்டிக்காக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம்!

 

 


 

நன்றி; தமிழ் இந்து நாளிதழில் எழுதியது

எஸ்.எம்.எஸ்- 25; தொழில்நுட்ப யுகத்தின் புதிய மொழி

Neilவாட்ஸ் அப் யுகத்தில் எஸ்.எம்.எஸ் சேவை பின்னுக்குத்தள்ளப்பட்டு, அதன் பிரகாசமும் மங்கியிருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் கூட, எஸ்.எம்.எஸ் சேவை வளரும் நாடுகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் இன்னமும் தகவல் தொடர்பிற்கான எளிய வழியாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, எஸ்.எம்.எஸ் சேவை தனக்கே உரிய புதிய மொழியையும் புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இன்றைய இமோஜிகளுக்கும், சித்திர எழுத்துக்களுக்கும் இந்த குறுஞ்செய்தி சேவை தான் முன்னோடி.

எஸ்.எம்.எஸ் சேவை தனது வெள்ளிவிழாவை கொண்டாடும் நிலையில், இதன் வரலாற்றையும் வளர்ச்சியையும் திரும்பிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஆம், எஸ்.எம்.எஸ் சேவை அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.

1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ம் தேதியில் தான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்  செய்தி அனுப்பப்பட்டது. அது ஒரு வழி செய்தி என்பது மட்டும் அல்ல, கம்ப்யூட்டரில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டது என்பதும் ஆச்சர்யமான விஷயம். அப்போது வோடோபோன் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த பிரிட்டனைச்சேர்ந்த நீல் பாப்வொர்த் என்பவர் தான் தன்னுடைய சக பொறியாளரான ரிச்சர்டு ஜார்விசுக்கு உலகின் முதல் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பி வைத்தார். ஜார்விஸ் தான் வைத்திருந்த ஆர்பிட் போனில் அதை பெற்றுக்கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ எனும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே அந்த செய்தியில் இருந்தன.

நாம் இப்போது செய்யக்கூடியது போலவே ஜார்விஸ் உடனே அந்த சரித்திர புகழ் பெற்ற செய்திக்கு பதில் அனுப்பிவிடவில்லை. ஏனெனில் அப்போது செல்போன்களில் அந்த வசதி இல்லை. எஸ்.எம்.எஸ் வடிவில் செய்திகளை மட்டுமே பெற முடிந்தது.

முதல் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பியது நீல் பார்ப்வொர்த், வெள்ளி விழா பரபரப்புக்கு நடுவே இந்த நிகழ்வை நினைவு கூறும் போது,” 1992 ல் எம்.எம்.எஸ் அனுப்பிய போது டெக்ஸ்ட் செய்வது இந்த அளவு பிரபலமாகும் என்றும், இமோஜிகள் மற்றும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் மேசேஜிங் சேவைகளுக்கு வழி வகுக்கும் என்றெல்லாம் தெரியாது’ என கூறியிருக்கிறார்.

தன் பிள்ளைகளிடமே அண்மையில் தான், முதல் எஸ்.எம்.எஸ் பெருமை பற்றி கூறியதாக தெரிவிக்கும் பாப்வொர்த், இப்போது திரும்பி பார்க்கையில், கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தி மொபைல் வரலாற்றில் முக்கிய தருணமாக அமையும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் வெள்ளிவிழாவை கொண்டாடும் வகையில் அவர் அந்த வாழ்த்துச்செய்தியை தற்போதைய இமோஜியுடன் சேர்த்து அனுப்பியிருக்கிறார்.

முதல் எஸ்.எம்.எஸ் செய்திய அனுப்பியவர் பாப்வொர்த் என்றாலும் அதன் பிரம்மா எனும் பெருமைக்கு உரியவர் பின்லாந்தைசேர்ந்த பொறியாளரான மேட்டி மக்கோனென் (Matti Makkonen ) என்பவர் தான். 1984 ம் ஆண்டு இவர் தான் முதன் முதலில் செல்லுலார் வலைப்பின்னல் வழியே செய்திகளை அனுப்பி வைப்பதற்கான கருத்தாக்கத்தை முன் வைத்தார். ஆனால் மக்கோனென் ஒருபோதும் தன்னை எஸ்.எம்.எஸ் கண்டுபிடிப்பாளர் என மார்தட்டிக்கொண்டதில்லை. பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லாத மெக்கோனென் சில ஆண்டுகளுக்கு முன் அபூர்வமாக அளித்த பேட்டியில், இது ஒரு கூட்டு கண்டுபிடிப்பு என்று கூறியிருக்கிறார். அது உண்மை தான். எம்.எம்.எஸ்-ன் அடிநாதமாக விளங்கும் 160 எழுத்துக்கள் எனும் கட்டுப்பாட்டை முதலில் முன்வைத்தவர்கள் ஜெர்மனி பொறியாளர்களான பிரிதெல்ம் ஹில்லேபிராண்ட் மற்றும் பெர்னார்டு ஹிலேபார்ட் ( Friedhelm Hillebrand and Bernard Ghillebaert ) ஆவர்.

1993 ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பி பெறும் வசதியை அறிமுகம் செய்தது. அப்போது விற்பனை செய்யப்பட்ட நோக்கியா போன்களில் குறுஞ்செய்தி வருகையை உணர்த்தும் பீப் ஒலி மிகவும் பிரபலம். அதன் பிறகு மெல்ல குறுஞ்செய்தி பிரபலமானது. 1999 ல் தான் பல்வேறு செல்போன் சேவைகளுக்கு இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி அறிமுகமாகி இந்த சேவை மேலும் பரவலானது.

எஸ்.எம்.எஸ் செய்திக்கு 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாடு இருந்தாலும் அதுவே அதன் தனித்தன்மையாக அமைந்து நவீன யுகத்திற்கான புதிய சுருக்கெழுத்து மொழியை கொண்டு வந்தது. வார்த்தை சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்காக, ஆங்கில எழுத்துக்களை சுருக்கி பயன்படுத்தும் வழக்கத்தையும், இவற்றில் பல புதுமைகளையும் அறிமுகம் செய்தது. ஒரு சிலர் இதை மொழியை சிதைக்கும் செயலாக விமர்சித்தாலும், மொழியியல் வல்லுனர்களே இந்த மாற்றங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, இவை மொழியின் பரிணாமத்தில் ஒரு வளர்ச்சிப்போக்கே என்று கூறுகின்றனர். இன்று இவை பலவகையான இமோஜிகளாக பரினமித்துள்ளன. இவற்றையே கூட ஒரு தனி மொழி என கருதுபவர்களும் இருக்கின்றனர்.

சுருக்கெழுத்து மூலம் மொழி பயன்பாட்டில் புதுமைகளை கொண்டுவந்ததைவிட, தகவல் பரிமாற்றத்தில் இவை ஆற்றும் பங்கு போற்றத்தக்கது. அதிலும் குறிப்பாக பேரிடர் காலங்களில் எஸ்.எம்.எஸ் செய்தி மூலம் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் பற்றிய தகவல்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிகிறது. கிராமப்புறங்களில் மருத்துவ சேவை தகவல்களையும், அரசு திட்ட தகவல்களையும் கொண்டு செல்வதற்கு ஏற்ற வாகனமாக எஸ்.எம்.எஸ் விளங்குகிறது. இந்தியாவின் கேரளாவில் மற்றும் உலகின் பல பகுதிகளில் மீனவர்களுக்கு மீன் விலையை செல்போனில் தெரிவிப்பது, விவசாய தகவல்களை கொண்டு சேர்ப்பது போன்றவற்றுக்கு எஸ்.எம்.எஸ் வசதியே கைகொடுத்திருக்கிறது. இப்படி எஸ்.எம்.எஸ் சார்ந்த பல முன்னோடி முயற்சிகளை கூறலாம்.

பல்க் மேச்ஜிங் வசதி ஒரு பக்கம் மார்க்கெட்டிங் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டாலும், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கான இதழியல் வாகனமாகவும் எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. மொபைல் பணத்தின் முன்னோடி எனப்படும் கென்யாவில் பிரபலமான இருக்கும் மொபைல் பரிவர்த்தனை சேவையான எம்-பெசாவுக்கு அடிப்படையாக இருப்பதும் இந்த வசதி தான். கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தேர்தல் கால முறைகேடுகளை கண்காணிப்பதற்கான உஷாஹிதி (Ushahidi) எனும் எஸ்.எம்.எஸ் சார்ந்த மென்பொருள் சேவையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், எஸ்.எம்.எஸ் பிரபலமாகத்துவங்கிய காலத்தில் எஸ்.எம்.எஸ் கதைகள், நாவல்கள் எல்லாம் புழக்கத்திற்கு வந்தன. குறிப்பாக ஜப்பானில் இந்த வகை நாவல்கள் மிகப்பிரபலமாக இருந்தன. அதிவேகமாக செய்திகளை டைப் செய்வதற்கான போட்டிகளும் நடத்தப்பட்டு எஸ்.எம்.எஸ் சாம்பியன்களுக்கு முடி சூட்டப்பட்டதும் உண்டு.

என்றாலும் இவற்றை எல்லாம் பழம் பெருமை என்று ஒதுக்கி விடமுடியாது. சாதாரன செல்போன்கள் புழக்கத்தில் இருக்கும் பல பகுதிகளில் இன்னனும் எஸ்.எம்.எஸ் தான் ராஜா. அங்கெல்லாம் தகவல் பரிமாற்றத்திற்கு இதைவிட்டால் வேறு சிறந்த வழியில்லை என்பது மட்டும் அல்ல, வளரும் நாடுகளில் இப்போதும் கூட எஸ்.எம்.எஸ் சார்ந்த புதுமையான சேவைகளை உருவாக்கி வருகின்றனர். அதனால் தான் டிவிட்டர் , வாட்ஸ் அப் என புதுப்புது சேவைகள் பல வந்தாலும், எஸ்.எம்.எஸ் சேவைக்கான தேவை இன்னும் குறையாமல் இருக்கிறது.

 

பிட்காயினில் முதலீடு செய்யலாமா?

பிட்காயின் என்றால் என்ன? எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. ( அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் என்ன? என்று ஒருவித அலட்சியத்துடம் அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் கேட்கும் நிலை இருந்தது.

சுருக்கமாக சொன்னால், பிட்காயின் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை. எதிர்கால நாணயம், மறை பணம், டிஜிட்டல் நாணயம் என்றெல்லாம் பலவிதமாக வர்ணிக்கப்பட்ட பிட்காயினின் அருமையையும், மகிமையும் உணர்ந்த தொழில்நுட்ப பித்தர்களும், நவீன அபிமானிகளும் இருந்தாலும் அவர்கள் தனித்தீவு போலவே இருந்தனர். பிட்காயின் தொடர்பான இணையதளங்களும், விவாத குழுக்களும் அநேகம் இருந்தாலும்,  அவற்றை தொழில்நுட்ப சமூகத்திற்கு வெளியே யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது பிட்காயினுக்கு மவுஸ் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவு தான் பலரும் பிட்காயின் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பிட்காயின், இணைய மிரட்டலுக்கான பணமாக அறியப்படுவது. மற்றொன்று பிட்காயின் புதிய தங்கம் என சொல்லப்படுவது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய உலகை ரான்சம்வேர் வைரஸ் உலுக்கியது நினைவில் இருக்கிறதா? எங்கோ இருக்கும் ஹேக்கர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் நெட்டிசன்களையும், சிட்டிசன்களையும் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ந்தது. அது மட்டும் அல்ல, இந்த ஹேக்கர்கள் தாங்கள் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக பினைத்தொகையை ரூபாயாகவோ, டாலாரகாவோ கேட்காமல் பிட்காயினாக கேட்டது நெட்டிசன்களை பிட்காயின் பற்றி யோசிக்க வைத்தது. ஹேக்கர்கள் ஏன் பிட்காயினை கேட்டனர் எனும் கேள்விக்கு இது புதுவகையான பணம், இதை எந்த மத்திய வங்கிகளும் வெளியிடுவதில்லை, இதன் பரிவர்த்தனை பிளாக்செயின் மூலம் நிகழ்கிறது என்றெல்லாம் அடுக்கி கொண்டே போகலாம் என்றாலும் மக்கள் மத்தியில் பதிந்த விஷயம் பிட்காயின் அனாமதேய பணம் என்பதும், அதில் கொடுக்க வாங்கல் வைத்துக்கொண்டால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான். எனவே டிஜிட்டல் நாணயமான பிட்காயினை இணைய நிழல் உலகிற்கான பணம் என எளிதாக புரிந்து கொண்டனர்.

அதே நேரத்தில், பிட்காயினின் மதிப்பு எங்கே போய்க்கொண்டிருப்பதும், ஒரு சில பிட்காயின்கள் வைத்திருந்தால் கூட இன்று அதன் மதிப்பு லட்சக்கணக்கில் என்று சொல்லப்படுவதும், பிட்காயின் மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. பிட்காயினை பரிவர்த்தனை செய்யலாம் என்கின்றனர். அதை டாலராகவோ வேறு நாணயமாகவோ மாற்றிக்கொள்ளலாம். இன்றைய தேதி கணக்குப்படி ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய நாணயப்படி கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய். ஆக, சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கிப்போட்டிருந்தால் ( வாங்க முடியாது, இணையத்தில் கம்ப்யூட்டர் கொண்டு மைன் செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம்) இன்று லட்சாதிபதி என்று சொல்லப்படுவதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது.

பிட்காயின் தொடர்பான மற்ற விஷயங்களும், விளக்கங்களும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதை எப்படி பர்வர்த்தனை செய்வது, எப்படி பயன்படுத்துவது போன்றவை இன்னும் சிக்கலாக தோன்றினாலும், பிட்காயின் மதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது (இறங்கவும் செய்கிறது) என்பது, பிட்காயின் மீது தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருகிறது. அதோடு தொழில்நுட்ப கில்லாடிகள் பலரும் பிட்காயினில் முதலீடு செய்து வருவதும் இதை மிகச்சிறந்த முதலீடு என பேச வைத்திருக்கிறது. எப்படி ஒரு காலத்தில் காலி மனைகள் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதை விற்று பணமாக்கலாம் என கருதப்பட்டதோ அதே போல, இப்போது பிட்காயின் ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை கட்டுரைகளும் பிட்காயினை புதிய தங்கம் என வர்ணிக்கும் போது கேட்கவா வேண்டும்!

பொதுமக்கள் மத்தியில் பிட்காயினை வாங்கும் பழக்கம் வந்துவிடவில்லை என்றாலும், இந்த புரியாத நாணயத்தில் பணத்தை போட்டால் அது பலன் தரும் முதலீடாக இருக்கும் எனும் எண்ணம் வலுப்பெறத்துவங்கியிருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயின் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். இப்போதே கூட, புத்திசாலிகள் சிலர் பிட்காயினை வாங்கிப்போடுவோம் என நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.

எல்லாம் சரி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா? இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா? பிட்காயினை கண்டுகொள்ளாமல் இருப்பது அருமையான வாய்ப்பை தவறவிடுவதாகுமா?

இது போன்ற கேள்விகளுக்கு எளிய பதில்கள் இல்லை. எல்லா முதலீடுகள் போலவே பிட்காயின் முதலீடும் ரிஸ்கானவை, அவை அள்ளித்தரலாம். அல்லது மதிப்பு சரிந்து காலையும் வாரலாம். ஆனால் விஷயம் அதுவல்ல, பிட்காயினை முதலீடு நோக்கில் மட்டும் அணுகுவது சரியாக இருக்காது.

முதலில் பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை பிட்காயினை வாலெட்டில் வைத்திருப்பவர்கள் ( அதற்கென டிஜிட்டல் பர்ஸ் இருக்கிறது) அடிப்படையில் பிட்காயினின் மைய கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அதன் பயனாக அவர்கள் பிட்காயினில் பரிவர்த்தனை செய்ய விரும்பினர். அது அவர்களுக்கு முதலீடாகவும் பலன் அளிக்கிறது. இதில் யூக பேரங்கள் நுழைந்துவிட்டன என்றாலும், பிட்காயினில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் அதை முழுமையாக புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.

பிட்காயினின் அடிப்படை கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிட்காயினை அதன் அபிமானிகள் விரும்புவதற்கான முக்கிய காரணம், அது அனாமதேய பணமாக இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அது மையமாக கட்டுப்படுத்தப்படாத பணமாகவும் இருப்பதனால் தான். கோட்பாடு அளவில் பார்த்தால், பிட்காயின் எந்த ஒரு அரசாங்கம் அல்லது மத்திய வங்கியால் வெளியிடப்படாமல் அதன் பயனாளிகளால் நிர்வகிகப்படும் பணம். பிட்காயினை இஷ்டம் போல அச்சிட முடியாது என்பதும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நாணயங்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்கப்பட முடியும் என்பது போன்ற பல அமசங்கள் அதில் இருக்கின்றன. மேலும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்ணுக்குத்தெரியாத டிஜிட்டல் லெட்ஜரில் பதிவாகி வருகின்றன. பிளாக்செயின் என சொல்லப்படும் இந்த நுட்பத்தை தான் வங்கிகளும் நிதி உலகுமும் உன்னிபாக கவனித்து வருகின்றன.

ஆக, கொள்கை அளவிலும், தொழில்நுட்ப நோக்கிலும் அறிந்து கொள்ள பிட்காயினில் அநேக விஷயங்கள் இருக்கின்றன. அதன் பிறகே பிட்காயின் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். அது மட்டும் அல்ல பிட்காயினின் சட்டப்பூர்வ அந்தஸ்தும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு பற்றி ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நாணயத்தை முறைப்படுத்துவது பற்றியும் பேச்சு இருக்கிறது.

எனவே பிட்காயினை தொடர்ந்து கவனியுங்கள், அது நல்ல விஷயம்.

இந்த கதை எல்லாம் வேண்டாம், பிட்காயினில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என தொடர்ந்து பிடிவாதமாக கேட்டால், பொருளாதார பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் பிட்காயின் பற்றி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறிய கருத்துக்களை தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஷில்லர் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல. மனிதர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அதைவிட முக்கியமான விஷயம், 2008 ல் அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடியால் உலக அளவில் பெரும் தேக்க நிலை உண்டானது அல்லவா? அது பற்றி 2003 ம் ஆண்டே கணித்து எச்சரித்தவர் ஷில்லர்.

அமெரிக்காவில் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக உயர்வது கண்டு, இது செயற்கையானது, இந்த குமிழ் வெடிக்கும் என அவர் எச்சரித்தார். சில ஆண்டுகள் கழித்து சப் பிரைம் கிரைசிஸ் வடிவில் அந்த குழு வெடித்தது.

இப்படி வரலாறுதோறும் ஏற்படும் குமிழ்கள் மற்றும் அவற்றிக்கு காரணமாக மிகை ஆர்வம் பற்றியும் ஷில்லர் விரிவாக ஆய்வு செய்து எழுதியும் பேசியும் வருகிறார்.

அப்படிப்பட்ட ஷில்லர் தான், தற்போதைய சூழலில் மிகை ஆர்வத்திற்கு அழகான உதாரணம் பிட்காயின் என கூறியிருக்கிறார். பிட்காயின் கதைக்கு உள்ள ஊக்கம் தரும் தன்மையும், அதன் பின்னே உள்ள மர்ம நிறுவனர் கதையும் சேர்த்து இதன் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது என்கிறார் ஷில்லர். பிட்காயினை என்னால் புரிந்து கொள்ள முடியும், அதில் யூகம் செய்து பணம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருப்பதாகவும் ஷில்லர் கூறியிருக்கிறார்.

ஆக, பிட்காயின் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியை நீங்கள் ஷில்லரின் பேட்டியில் இருந்து கூட துவக்கலாம்: https://qz.com/1067557/robert-shiller-wrote-the-book-on-bubbles-he-says-the-best-example-right-now-is-bitcoin/

யுவர் ஸ்டோரி தமிழில் எழுதும் தகவல் திங்கள் இதழில் எழுதியது. இப்போதைய சூழலில் இன்னும் பொருத்தமான வாசிப்பு.