Tag Archives: cinema

பாலுமகேந்திராவின் வலைப்பதிவு.

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது.

எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமா?மூன்றாம் பிறை!(முகவரி வேறு).மூன்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் அடையளாமாகவே மாறிவிட்டது.

இந்த தலைப்பில் அவரது வலைப்பதிவை படிப்பது பொருத்தமானது மட்டும் அல்ல;பரவசமானதும் கூட!

வலைப்பதிவின் முதல் பதிவை பாலுமகேந்திரா பேசுகிறேன் என்றே ஆரம்பித்திருக்கிறார்.(கேட்க காத்திருக்கிறோம் சார்)

அந்த பதிவில் வெளிப்படும் தெனி கவனிக்கத்தக்கது.எத்தனை பெரிய மேதை அவர்.பாலுமகேந்திரா ஸ்கூல் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனது கலையால் கவரப்பட்ட மாணவர் படையை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.திரையில் காமிராவின் நுணுக்கங்களை பார்த்து ரசிகர்கள் கைத்தட்ட வைத்தவர் அல்லவா அவர்!

அவரிடம் சினிமா பற்றி சொல்ல கடலளவு இருக்கிறது.ஆனால் அவரோ எனது சுயசரிதையை பதிவு செய்ய வேண்டும் என மாணவர்களும் நலம் விரும்பிகளும் தன்னிடம் கேட்டு கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி விட்டு சுயசரிதை எழுதும் அளவுக்கு தான் ஒன்று சாதனையாளன் அல்ல சாமான்யான் என்கிறார்.

அது மட்டும் அல்ல நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை என்கிறார்.அந்த சேற்றில் பூத்த செந்தாமரைகளாக தனது மூடுபனியையும் அழியாத கோலங்களும் வீடு மற்றும் சந்தியாராகம் முன்றாம் பிறை போன்றவை மலர்ந்தன‌ என்கிறார்.

தனது வாழ்க்கை சொல்லிகொள்ளும் படியானதோ எழுதி கொள்ளும் படியானதோ அல்ல என்பவர் இருப்பினும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய அத்தியாயங்களை குறிப்பாக சினிமாவுக்கும் தனக்குமான உறவை வலைப்பதிவில் பதிவு செய்ய இருப்பதாக கூறுகிறார்.

பாலுமகேந்திராவின் கலையில் இருக்கும் உண்மையையும் நேர்மையையும் பாசாங்கற்ற தன்மையையும் இந்த அறிமுக உரையிலும் காணலாம்.அவரது கலையை கண்டு வியப்பது போலவே இந்த அறிமுகத்தையும் கண்டு வியக்கலாம்.

அறிமுகத்தில் குறிப்பிட்டது போலவே சினிமாவும் நானும் என்ற தலைப்பில் சினிமா மீது தனது காதல் ஏற்பட்ட விதத்தை விவரித்திருக்கிறார்.

13 வயதில் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதையும் ஒரு முரை பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா மேதை டேவிட் லீன் படப்பிடிப்பை பார்த்து பிரம்மித்து போன அனுபவத்தையும் அதே சிறுவயது பரவசத்தோடு விவரித்துள்ளார்.

அந்த படபிடிப்பின் போது டேவிட் லின் ரெயின் என்று கத்தியதும் மழை பெய்ததை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்தவர் பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராக தான் வருவேன் ,நான் ரெயின் என்றால் மழை பெய்யும் என்று முடித்திருக்கிறார்.

பாலு மகேந்திரா சார் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.இல்லை தொடர்ந்து கற்றுகொள்ள காத்திருக்கிறோம்.எழுதுங்கள் சார்.

————-
பாலுமாகேந்திராவின் வலைப்பதிவு முகவரி;http://filmmakerbalumahendra.blogspot.in/

குறிப்பு;பாலுமகேந்திராவின் இந்த வலைப்பதிவை சுட்டிக்காட்டி உடனடியாக படிக்க சொன்ன எனது நண்பனும் சக பத்திரிகையாளனுமான பரத்திற்கு எனது நன்றிகள்.

வலைப்பதிவில் பாலுமகேந்திரா சினிமா மீது தனக்கு காதல் ஏற்பட்ட அனுபவத்தை ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று நேரில் விவரிக்க கேட்டு ரசித்திருக்கிறேன்.நானும் ரெயின் என்று சொன்னால் மழை வரும் என்று அவர் சொன்னதை செய்தியாக பரவசமாக பதிவும் செய்திருக்கிறேன்.

அனுபுடன் சிம்மன்

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.

பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம் வரவேற்பு குவிந்திருக்கிறது.முதல் ஒரு மணி நேரத்திலேயே 8 லட்சம் லைக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கிறது.

இப்படி ஒரு வரவேற்பு பேஸ்புக்கில் வேறு எந்த பிரபலத்திற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.அமிதாப் பாவிவுட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல இண்டெர்நெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராக தான் இருக்கிறார்.அதாவது இணைய உலகிலும் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.படிக்கப்படுகிறார்.பின் தொட்ரப்படுகிறார்.

இந்த அபிமானத்திற்கும் வரவேற்பிற்கும் காரணம் அமிதாப் இண்டெர்நெட்டை சரியாக பயன்படுத்துகிறார் என்பதே.பயன்படுத்துகிறார் என்றால் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவோ தனது சாதனைகளை மார் தட்டி கொள்ளவோ அல்ல! மாறாக தனது ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்ள,அவர்களுடன் பேச,தன்னை வெளிப்படுத்தி கொள்வதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது வலைப்பதிவிலும் டிவிட்டர் பக்கத்திலும் இதனை பார்க்கலாம்.

அமிதாப் பற்றிய செய்திகளை ரசிகர்கள் தெரரிந்து கொள்ள விரும்பினால் நாளிதழ்களையோ டிவிக்களையோ நாட வேண்டியதில்லை.அவருடைய டம்ப்ளர் வலைப்பதிவை பின்தொடர்ந்தாலே போதுமானது.இன்னும் கூடுதல் தகவல்கள் தேவை என்றால் அவரது டிவிட்டர் பக்க‌த்தை கவனித்தால் போதுமானது.

வலைப்பதிவு செய்வதிலும் சரி டிவிட்டரில் பதிவிடுவதிலும் சரி அமிதாப் அந்த அளவுக்கு தீவிரமும் சுறுசுறுப்பும் காட்டி வருகிறார்.

ஒரு நட்சத்திரத்தை பற்றி அறிய ரசிகர்களுக்கு ஆர்வம் உள்ளவற்றை எல்லாம் அமிதாப் தானே வலைப்ப‌திவு மூலம் வெளியிட்டு வருகிறார்.படப்பிடிப்பு அனுபவங்கள்,பங்கேற்கும் நிகழ்ச்சிகள்,மன உணர்வுகள் என எல்லாவற்றையும் பற்றி அவர் பதிவு எழுதுகிறார்.

அவருடைய வலைப்பதிவுகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதோடு அமிதாப் என்னும் நடத்திரத்தின் வாழ்க்கை பக்கத்தை படித்தது போன்ற உணர்வையும் தரும்.ஒரு நெருங்கிய நண்பனிடம் பேசுவது போல அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அமிதாப் பதிவுகள் எல்லாம் கேள்வி கேட்கப்படாத பேட்டிகள் போல இருக்கும்.அல்லது ரசிகர்கள் கேட்க நினைத்த கேள்விகளுக்கான பதிலாக இருக்கும்.

அதானல் தான் பால் நேரங்களில் மீடியாக்களே கூட வலைப்பதிவில் அமிதாப் சொல்வதை செய்தியாக வெளியிடுகின்றன.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அமிதாப் இன்னும் தீவிரமாக இருக்கிறார்.

குடும்ப நிககழ்வுகள் பற்றியும் நாட்டு நடப்பு பற்றியும் அவர் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மரும‌கள் ஐஸ்வர்யா கர்பமுற்ற போது அமிதாப் மகிழ்ச்சி பொங்க அந்த செய்தியை டிவிட்டரில் தான் முதலில் பகிர்ந்து கொண்டார்.ஒரு தாத்தாவின் மன உணர்வை அதில் பார்க்க முடிந்தது.

அதே போல பேத்திக்கு சூட்டப்பட்ட பெயரையும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.சும்மாயில்லை இது வரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குறும்பதிவுகளை வெளீயிட்டிருக்கிறார்.அதன் பயனாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை பெற்றிருக்கிறார்.

இப்படி சைபர் ராஜாவாக விளங்கும் அமிதாப் இப்போது பேஸ்புக் பக்கம் வந்திருக்கிறார்.

பேஸ்புக்கில் நுழையப்போவதை முதலில் டிவிட்டரில் தான் தெரிவித்தார்.அதன் பிறகு சில மணிநேரங்கள் கழித்து பேஸ்புக்கில் நுழைந்து விட்டதை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.அதற்குள் பேஸ்புக்கில் அவருக்கு லட்சகணக்கில் லைக்குகள் குவிந்து விட்டன.

அருமையான புகைப்படங்களோடு தான் பங்கேற்கும் நிகழ்ச்சி பற்றி தனது மகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி எல்லாம் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.ஒவ்வொரு பதிவும் தனியே லைக் செய்யப்படுவதோடு அவற்றுக்கான கருத்துக்களும் குவிகின்றன.அருமையான வீடீயோக்களையும் வெளீயிட்டு வருகிறார்.

சமூக வலைப்பின்னல் தளங்களை நட்சத்திரங்கள் எப்படி பயன்ப‌டுத்த வேண்டும்
என்பத‌ற்கு மட்டும் அல்ல எதற்காக பயன்ப‌டுத்த வேண்டும் என்பதற்கும் அமிதாப் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.:http://www.facebook.com/AmitabhBachchan

பிகு;அமிதாப்பின் பேஸ்புக் பக்கத்தில் அவர் பயன்படுத்தும் இணைய சேவைகள் பட்டியலும் கொடுக்கட்டுள்ளது.இசை சேவையான ஸ்பாட்டிபை உட்பட சிம்பை,ர்டியோ,மாக்,டீசர் என பத்துக்கும் மேற்பட்ட சேவைகளில் அவர் உறுப்பினராக இருப்பதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிற‌து.

உள்ளங்கையில் திரையுலகை கொண்டுவரும் செயலி !

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் நிதர்சனமும் அது தான்.

எந்த துறையை எடுத்து கொண்டாலும்,எந்த சேவையை எடுத்து கொண்டாலும் அதற்கென ஒரு செயலி இருக்கிறது.பிரச்ச‌னைகளுக்கு தீர்வு தர செயலி இருக்கிறது.நட்சத்திரங்களுக்கு செயலி இருக்கிறது.

ஐபோன்,மற்றும் ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்ளங்கையில் இருந்தே எல்லாவற்றையும் அணுக உதவும் செயலிகளும் பிரபலமாக வருகின்றன.

இந்தியாவிலும் இப்போது விதவிதமான செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்ற‌ன.

செல்போன் செயலிகளின் முக்கியத்துவத்தையும் தேவையையும் உணர்ந்தவர்களின் பட்டியலில் திரைப்படத்துறை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகனும் சேர்ந்திருக்கிறார்.சினிமா தகவல்கள் மற்றும் செய்திகளை உள்ளங்கக்கே கொன்டு வரும் வகையில் நிகில்ஸ்சினிமா என்ற பெயரில் செல்போன் செயலியை அவர் உருவாக்கி உள்ளார்.

நிகில் மக்கள் தொடர்பாளர்களில் ஒரு நட்சத்திரமான கருதப்படுபவர்.நட்சத்திரங்களை கையாளுவதில் அவரது சுறுசுறுப்பும் செயல்திற‌னும் இந்த அந்தஸ்தை பெற்று தந்துள்ளது என்றாலும் தொழில்நுட்பத்தில் அவருக்கு உள்ள பரிட்சயமும் அவற்றை பயன்படுத்துவதில் உள்ள ஆர்வமும் இதற்கு முக்கிய காரணம்.

தகவல்களை தருவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக தனது காரை அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வரும் நிகில் இணையத்தின் முக்கியத்தையும் நன்கறிந்திருப்பவர்.

வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் அவருக்கென தனி சேனல் இருக்கிற‌து.நிகில்ஸ் சினிமா என்ற பெயரில் இணையதளமும் வைத்திருக்கிறார்.

இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் தனக்கென தனி செல்போன் செயலியை உருவாக்கியுள்ளார்.


ஆப்பிளின் ஐபோன்,ஐபாட் டச்,ஐபேட், மற்றும் ஆன்டிராய்டு வசதி கொண்ட செல்போன்களில் இந்த செயலி செயல்படக்கூடியது.

திரைப்படத்துறை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழகும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சினிமா செய்திகள்,திரைப்பட நட்சத்திரங்களின் புகைப்பட கேலரி,நிகழ்ச்சிகளின் நாட்காட்டி,பேட்டிகள்,முன்னோட்டங்கள் என தனித்தனி பகுதிகளை கொண்டுள்ள இந்த செயலியில் குறும்படங்களுக்கான பகுதியும் புதுமுகங்களுக்கான அறிமுக பகுதியும் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்திய சாப்ட்வேர் நிறுவனமான ஒய்2ஜிஸ்மீ லேப்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கி தந்துள்ளது.அர்ச்சனா பட்சிராஜனை இணை நிறுவனராக கொண்ட இந்நிறுவனம் இது.

செல்போனில் திரைப்படத்துறை தகவல்களை தருவதில் முன்னோடி முயற்சியான இந்த செயலியை சமீபத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்.

இண்டெர்நெட்டே கூட செல்போன் திரைக்கு இடம் பெயர்ந்து வருவதாக கருதப்படும் காலத்தில் சினிமா செய்தி மற்றும் தகவல்களை வழங்கும் இந்த செயலி வரவேற்புக்கிறியது.

ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்டோரில் இதனை டவுண்லோடு செய்யலாம்.

———-
iPhone, iPad and iPod touch download Link – http://bit.ly/MfesRa
Android Link – http://bit.ly/NWq2yY

—————-

இணையதள முகவரி;http://nikhilscinema.com/

seriousman_uncertainty

திரைப்படங்களில் கணித காட்சிகள்.

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம்.

ஆலிவர் உருவாக்கியுள்ள இணையதளம் கோலிவுட் ப‌டங்களை பற்றி எதையும் சொல்லவில்லை,ஹாலிவுட் படங்களோடு அவற்றை ஒப்பிடவும் செய்யவில்லை.ஆனால் அவரது இணையதளம் ஹாலிவுட் படங்களை பாராட்ட வைக்கும்.

காரணம் கணிதப்பிரியரான ஆலிவர் உருவாக்கியுள்ள அந்த தளம் ஹாலிவுட் படங்களில் இடம் பெற்ற கணிதம் தொட‌ர்பான காட்சிகளை எல்லாம் பட்டியலிடுகிறது.அதை பார்க்கும் போது ஹாலிவுட படங்களின் காட்சிகளில் கணிதம் பயன்படுத்தப்பட்ட விதம் பாராட்டும் படி இருக்கிறது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வெர்டு பல்கலையின் கணித பேராசிரியரான ஆலிவர் மேத்தமேடிக்ஸ் இன் முவிஸ் என்னும் தலைப்பிலான அந்த தளத்தில் ஹாலிவுட் தளத்தில் வந்துள்ள கணித‌ம் தொட‌ர்பான காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

திரைப்படங்களில் கணிதம் வரும் காட்சிகளின் தொகுப்பு என்ற அறிமுகத்தோடு அந்த காட்சிகள் பட்டியலிடப்ப‌ட்டுள்ளன.

மிக அழகாக ,திரைப்படத்தின் கணித காட்சியின் புகைப்படத்தோடு அந்த குறிப்பிட்ட காட்சிக்கான இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது.அதிலேயே அந்த காட்சியில் இடம் பெறும் கணிதத்திற்கான குறிப்பும் இடம் பெறுகிறது.

மேலோட்டமாக ஒரு பார்வை பார்க்கும் போதே எத்தனை ஹாலிவுட் படங்களில் கணித காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்ற‌ விவரம் வியக்க வைக்கிறது.

குறிப்பிட்ட காட்சிகளை படிக்கும் போது அவற்றின் ஆழம் இன்னும் வியக்க வைக்கிற‌து.கனிதம் சார்ந்த படங்கள் வந்திருப்பதையும் உண‌ர முடிகிறது.

கணிதத்தில் ஆர்வம் கொண்டவர்கள் பார்த்தால் சொக்கிப்போய் விடுவார்கள்.

இணையத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு இந்த தளம் அழகான உதாரணம்.திரைப்படம் சார்ந்த தகவல்களை அளிக்க எத்தனையோ இணையதளங்கள் இருகின்றன.

ஆனால் திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்கை விரும்பாமல் சீரியசான விஷய‌ங்களை எதிர்ப்பார்ப்பவர்களையும் கவரும் வகையில் திரைப்பட தகவல்களை இந்த தளம் தருகிற‌து.

திரைப்படங்களை வெறுப்பவர்கள் கூட இந்த தளத்தை பார்த்தால் ஹாலிவுட் படங்களை உயர்வாக நினைப்பார்கள்.அதே போல பெற்றோர்களும் கனிதத்தை கண்டு ஓடும் பிள்ளைகளுக்கு கணித ஆர்வத்தை உண்டாக்க இந்த தள‌த்தை பயன்படுத்தலாம்.

எல்லாவற்றுக்கும் மேல் கனிதம் சார்ந்த காட்சிகளை வைக்க இயக்குனர்களுக்கு இந்த தளம் உக்கமளிக்கலாம்.

சரி,நமது படங்களில் எத்தனை படங்களில் கணித காட்சிகளை காண முடியும்?

இணையதள முகவ‌ரி;http://www.math.harvard.edu/~knill/mathmovies/index.html

icheckmovies

திரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம்.

நான் பார்த்த ரசித்த திரைப்படங்கள்.

இப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது ஐ செக் மூவீஸ் இணையதளம்.பட்டியலை உருவாக்கி கொண்ட பிறகு இந்த தளத்தில் திரைப்பட ரசிகர்கள் தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.பெறுவதற்கு பட்டங்களும் சூடிக்கொள்ள மகுடங்களும் இருக்கின்றன.

இந்த தளத்தை பொருத்தவரை ரசிகர்கள் தான் ராஜா.பொதுவாக திரைப்பட தளங்களில் பார்க்க கூடிய டாப் டென் படங்களின் பட்டியல் போன்றவை இதில் இருந்தாலும் எல்லாமே ரசிகர்கள் சார்ந்தவை.

அடிப்படையில் இந்த தளம் பார்த்த திரைப்படங்களை குறித்து வைப்பதற்காக!இதற்கு முதலில் உறுப்பினராக சேர வேண்டும்.அதன் பின் பார்க்கும் படங்களை பார்த்தாச்சு என டிக் செய்து தங்களுக்கான பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டியது தான்.

இப்படி சேர்த்து கொள்வது மிகவும் சுலபமானது.காரணம் மிகச்சிறந்தபடங்கள்,புதிய படங்கள் என பலவித தலைப்புகளில் திரைபடங்களின் பட்டியல் ரசிகர்களின் வசதிக்காக பரிந்துரைக்கப்படுகிறது.அவற்றில் இருந்து படத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த பட்டியல் எல்லாமே திரைப்பட தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் இண்டெர்நெட் மூவிடேட்டாபேசானா ஐஎம்டிபி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.இதன் பொருள் இந்த டேட்டாபேசில் உள்ள படங்களை மட்டுமே இங்கு சேர்க்க முடியும்.ஆனால் அநேகமாக எல்லா படங்களுமே இந்த டேட்டாபேசில் இணைக்கப்படுவதால் இதில் ஏதும் பிரச்சனையில்லை.

பட்டியலில் உள்ள நீங்கள் பார்த்த படத்தை கிளிக் செய்ததுமே வந்து நிற்கும் தகவல்களை பார்த்ததுமே திக்கு முக்காடி போக நேரிடும்.

காரணம்,திரைப்படம் வெளியான ஆண்டு,அந்த படம் பெற்றுள்ள தரவரிசை எண்,அதை எத்தனை பேர் பார்த்துள்ளனர்,எத்தனை பேர் தங்களுக்கு பிடித்த படம் என குறிப்பிட்டுள்ளனர் ,அந்த படம் பறிய உறுப்பினர்களின் கருத்துக்கள்,சமீபத்தில் பார்த்தவர்கள் ,படத்தின் வகை,என படம் தொடர்பான விவரங்கள் வரிசையாக இடம் பெறுகின்றன.எல்லாமே சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடைப்படையில் திரட்டப்பட்டவை.

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி,விளம்பர பரைசாற்றுதல்கள்,விமர்சகர்களின் கருத்து போன்றவற்றின் சார்பு இல்லாமல் உறுப்பினர்களின் ரசனையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த விவரங்கள் குறிப்பிட்ட படத்தின் மதிப்பு என்ன என்பதை அழகாக உணர்த்திவிடக்கூடும்.

இந்த விவரங்களை பார்வையிட்ட படி அந்த படத்தை உங்கள் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.படத்தை பார்த்திருந்தால் பார்த்ததாக குறித்து கொள்ளலாம்.பார்க்கவில்லை என்றால் பார்க்க வேண்டும் என குறித்து கொள்ளலாம்.அதே போல படம் பிடித்திருந்தால் விரும்பிய படம் என்றோ அல்லது பிடிக்கவிட்டால் பிடிக்கவில்லை என்றோ குறித்து கொள்ளலாம்.

பார்த்த படங்களை பட்டியலிட துவங்கிய பின் அந்த விவரங்கள் ஒவ்வொன்றாக உறுப்பினரின் பக்கத்தில் இடம்பெற்று அவரது ரசனைக்கான பயோடேட்டா போல அமையும்.

எளிமையாக தோன்றினாலும் இந்த பக்கம் உறுப்பினர்கள் பற்றி சொல்லகூடிய தகவல்களும் பகிர்ந்து கொள்ளக்கூடிய விவரங்களும் தீவிர திரைப்பட ரசிகர்களை இந்த தளத்திலேயே மூழ்க வைத்துவிடும்.அப்படியே திரைப்பட ரசனை சார்ந்த புதிய அனுபவத்தில் திளக்க வைக்கும்.திரைப்பட ரசனை சார்ந்த புதிய நண்பர்களையும் தேடித்தரும்.நண்பர்கள் மூலம் நல்ல படங்களின் பரிந்துரையையும் பெற முடியும்.

அந்த அளவுக்கு விரிவான வசதிகளும் விதவிதமான பகிர்தல் அம்சங்களும் இருக்கின்றன.உறுப்பினர் பக்கத்தில் சமீபத்தில் பார்த்த படம்,இதுவரை பார்த்த படங்கள்,பார்த்ததில் பிடித்தவை ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன.உறுப்பினரின் திரைப்பட ரசனை ஜாதகம் என்று கூட சொல்லலாம்.

உறுப்பினர்கள் இந்த பக்கத்தை பரஸ்பரம் பார்க்க முடியும்.அதாவது சக உறுப்பினர்களின் பக்கத்தை பார்ப்பதற்கான் வாய்ப்பு உள்ளது.உறுப்பினர் பக்கத்தை பார்வையிடுவதும் சுவாரஸ்யமானதே.காரணம் குறிப்பிட்ட அந்த உறுப்பினர் எந்த எந்த படங்களை பார்த்துள்ளார்,அவற்றை ரசித்துள்ளார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.இப்படி பார்க்கும் போது ரசனை ஒத்து போகிறது என்று வைத்து கொள்ளுங்கள் உடனே அந்த அந்த உறுப்பினரை தொடர்பு கொண்டு நண்பாராக்கி கொள்ளலாம்.

நண்பராக நேரடியாக செய்தி அனுப்பலாம்.நண்பரான பின் இருவருடைய படங்களின் பட்டியலை ஒப்பிட்டு பார்க்கலாம்.பரஸ்பரம் பிடித்த படங்கள் பிடிக்காத படங்கள் என்றெல்லாம் அலசி ஆராயலாம்.அப்படியே படங்கள் பற்றிய விமர்சன கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.இதன் மூலம் திரைப்படம் சார்ந்த உரையாடலில் ஈடுபடலாம் என்பதோடு புதிய படங்கள் பற்றிய அறிமுகமும் கிடைக்கும்.

நண்பர்கள் போலவே இந்த தளத்தில் பக்கத்து வீட்டுகாரரகளையும் சந்திக்கலாம்.பக்கத்து வீட்டுக்காரர் என்றால் பார்த்த படங்களிலும் ரசனையிலும் உங்களை ஒத்திருப்பவர் என்று பொருள்.

உறுப்பினர்கள் உறுப்பினர் பக்கத்தில் தங்களை பற்றிய சுய அறிமுக குறிப்பையும் இடம் பெற வைக்கலாம்.உறுப்பினர் பக்கத்தில் ஒருவர் பார்த்த படங்களின் எண்ணிக்கை,ரசித்த படங்களின் எண்ணிக்கை,பிடிக்காத படங்களின் எண்ணிக்கை ,நண்பர்களின் எண்ணிக்க ஆகிய விவரங்களும் இடம் பெறுகின்றன.

உறுபினர்களுக்கு பல் வேறு விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.அதோடு பகிர்ந்து கொள்ளும் படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துணை நடிகர் ,நடிகர் போன்ற அந்தஸ்தும் வழங்கப்படுவது மேலும் சுவையானது.

பேஸ்புக் போன்ற தளங்கள் வழியே நட்பை வளர்த்து கொள்ளலாம்.பார்த்து ரசித்த திரைபடங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் இந்த தளம் முழுக்க முழுக்க திரைப்படம் சார்ந்த பகிர்தலை சாத்தியமாக்கி திரை ரசனை அடிப்படையில் நட்பை ஏற்படுத்தி தருகிறது.

அதே போல எந்த ஒரு திரைப்பட தொடர்பான கருத்தை அறிய விரும்பினாலும் இந்த தளம் கைகொடுக்கும்.குறிப்பிட்ட படத்தை கிளிக் செய்ததுமே அதை சமீபத்தில் எத்தனை பேர் பார்த்துள்ளனர் ,அவர்களின் விமர்சனம் என்ன போன்ற விவரங்கள் மூலமாக அந்த படம் பற்றிய ரசிகர்களின் மன உணர்வை கச்சிதமாக அறிந்து கொண்டு விடலாம்.

பழையபடங்களை இப்போதும் எத்தனை பேர் பார்க்கின்றனர்,புதிதாக வெளியான படத்தை எத்தனை பேர் ரசித்துள்ளனர் என்றெல்லாம் அறிய முடிவது உண்மையிலேயே சுவாரஸ்யமானது.

ஒரு படத்தை பற்றி இப்படி அலசி ஆராயும் போது அந்த படத்தை ரசித்தவர்களை அறிமுக செய்து கொண்டு நண்பர்களாக்கி கொள்ளலாம்.

——————

http://www.icheckmovies.com/