Tag Archives: cinema

டிவிட்டரில் கமல்; ஒரு இணைய ரசிகனின் எதிர்பார்ப்பு

CZpvuVPUcAAqhTtடிவிட்டரில் கமல்ஹாசன் இணைந்திருக்கிறார்.முதலில் கமல்ஹாசனுக்கு நல்வரவு.ஏற்கனவே பேஸ்புக்கில் இணைந்திருக்கும் கமல் குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கும் வந்திருப்பது நிச்சயம் திரைப்பட ரசிகர்கள் மகிழக்கூடியது தான்.கமலின் டிவிட்டர் பிரவேசத்தை அவரது மகள் ஸ்ருதிஹாசன் டிவிட்டர் மூலமே வரவேற்றிருக்கிறார். ஏற்கனவே டிவிட்டரில் இருக்கும் வேறு பல நட்சத்திரங்களும் வரவேற்றிருக்கின்றனர்.
பிரபலங்கள் டிவிட்டருக்கு வரும் போது நிகழ்வது போலவே கமலுக்கு கிடைக்கும் பாலோயர்கள் எண்ணிக்கை பற்றிய கணக்கும் துவங்கியிருக்கிறது.இனி கமல் டிவிட்டர் கணக்கு பாலோயர் எண்ணிக்கையில் மைல்கற்களை தொடும் போதெல்லாம் செய்தியில் அடிபடும் வாய்ப்புள்ளது.

ஒருவிதத்தில் கமலின் இந்த டிவிட்டர் வருகை ஆச்சர்யமானதே.இதையே வேறு விதமாக சொல்வது என்றால் அவர் இதுவரை டிவிட்டருக்கு வராமல் இருந்தது ஆச்சர்யமானது. அந்த வகையில் பார்த்தால் கமலின் டிவிட்டர் வருகை தாமதமாக நிகழ்ந்திருக்கிறது. இதை கமலே ஒப்புக்கொள்வார்.

டிவிட்டருக்கு கமல் எப்போதோ வந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.அவரது சகாவான ரஜினி காந்த் ஏற்கனவே டிவிட்டரில் இருக்கிறார். அகில இந்திய அளவில் அமிதாப் டிவிட்டரில் கோலோச்சுகிறார்.ஷாருக்கும்,சல்மானும் டிவிட்டரில் தீவிரமாக இருக்கின்றனர்.இங்கேயே பல நட்சத்திரங்கள் டிவிட்டரில் இயங்கி கொண்டிருக்கின்றனர்.- இவர்கள் எல்லாம் வந்துவிட்ட நிலையில் கமல் டிவிட்டருக்கு வரவில்லை என்பதல்ல விஷயம், கமல் டிவிட்டருக்கு வந்திருக்க வேண்டும் என்பதே இங்கே நான் வலியுறுத்த விரும்புவது.

கமல் டிவிட்டருக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம் சார்ந்தது தான்.அதற்கான நேரத்தை தேர்வு செய்து கொள்ளும் உரிமையும் அவருக்கு இருக்கிறது.ஆனாலும் கூட, கமல் போன்ற முன்னோடி கலைஞர்களை டிவிட்டர் பயன்பாட்டில் முதலில் எதிர்பார்ப்பது மிக இயல்பானதே. டிவிட்டர் என்றில்லை,சமூக ஊடக செயல்பாட்டில் கமலை முன்வரிசையில் தான் எதிர்பார்க்க முடியும்.
CZpu2PqVIAMltH3
இந்த எதிர்பார்ப்பின் காரணத்தை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.கமல் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதிலும், பயன்படுத்துபதிலும் எப்போதுமே முன்னோடியாக தான் இருக்கிறார். கமல் படங்களை உருவாக்கும் வித்ததில் இதை பார்க்கலாம். திரைப்பட நுட்பங்கள் பற்றி பேசுவதில் இதை உணரலாம்.பெரும்பாலானோர் தயங்கிய நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே டிஜிட்டல் நுட்பத்தில் படம் எடுக்கத்துணிந்தவர் அவர்.சொந்தமாக ரெட் ஒன் காமிரா வாங்கிவைத்துக்கொண்டு பயிற்சி செய்பவர்.ஸ்டிரீமிங் பற்றி எல்லாம் பெரிதாக பேச்சு வருவதற்கு முன்னதாகவே, லேப்டாப்பில் ரசிகர்கள் படம் பார்க்க விரும்பினால் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பேசியவர்.தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் சாத்தியங்கள் பற்றி ஆழமாக அறிந்தவர் மட்டும் அல்ல, அதைவிட முக்கியமாக தொழில்நுட்ப மாற்றங்கள் வருங்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை முன்னதாகவே உணரும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் கமல்.
எனவே தான் கமலின் தாமதமான டிவிட்டர் வருகை வியப்பை அளிக்கிறது.ஆனால் இப்போது நிகழ்ந்திருக்கும் நிலையில் பல விஷயங்களை எதிர்பார்க்க வைக்கிறது.

கமல் டிவிட்டரை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை.அவரது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான குறிப்புகள் குறைவாகவே இருக்கின்றன.கமலின் டிவிட்டர் பயோவில் நடிகர், இயக்குனர், நடனக்கலைஞர், எழுத்தாளர், தயாரிப்பாளர்,என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவரது டிவிட்டர் பக்கத்தின் நோக்கம் பற்றிய குறிப்புகளை கொண்டிருக்கவில்லை. கமலின் முதல் குறும்பதிவும் இந்த நோக்கத்தை போட்டு உடைத்துவிடவில்லை. குடியரசு தினத்தன்று டிவிட்டருக்கு வந்த கமல், ஒரு வீடியோவை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளார். தேசிய கீதம் இசைக்கும் அந்த வீடியோவுடன் இந்திய சுதந்திர போராட்டம் இன்னமும் தனித்தன்மை வாய்ந்த்தாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கமலின் குறும்பதிவுகள் தொடர்ந்து எந்த வேகத்தில் வெளியாகும் என்பதும் அவரே இந்த கணக்கை கையாள திட்டமிட்டிருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.
ஆனால் கமலின் டிவிட்டர் பக்கம் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரை பின் தொடர விரும்புகிறவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.கமல் தனது கலையில் வெளிப்படுத்தி வரும் அதே முன்னோடித்தன்மையை, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அவரிடம் உள்ள பாய்ச்சலை அவரது டிவிட்டர் பகிர்விலும் எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது.

டிவிட்டர் வெறும் சமூக ஊடக சாதனம் மட்டும் அல்ல; பிரபலங்களின் கைகளில் அது ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான, அவர்களுடன் உரையாடுவதற்கான சாதனமும் கூட! தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் இதை உணர்ந்து டிவிட்டர் மூலம் ரசிகர்களுடன் பாலம் அமைத்துக்கொண்டிருக்கின்றனர். தங்கள் எண்ணங்களையும்,விருப்பங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். நட்சத்திர வெளிச்சத்தை கடந்து தங்கள் உலகிற்குள் ரசிகர்களை அழைத்து தங்கள் கலை உலகின் அகத்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். பாலிவுட்டில் அமிதாப்பின் டிவிட்டர் பக்கத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அமிதாப் டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வருவதோடு ,ரசிகர்களை நேரில் சந்தித்து பேச முடியாத குறையை போக்கிக்கொள்ளும் வகையில் குறும்பதிவுகள் மூலம் அளவலாவி வருகிறார். அமிதாப் எனும் மனிதரை, அமிதாப் எனும் கலைஞரை அவரது குறும்பதிவுகள் வாயிலாக ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம். தனது திரையுலக அனுபவங்கள் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை அமிதாப் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.இவற்றை விட முக்கியமாக தன்னைப்பற்றிய செய்திகளுக்காக அவர் ரசிகர்களை தவிக்க விடுவதில்லை. பேத்தியை கொஞ்சி மகிழ்வது முதல் எல்லாவற்றையும் அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார்.
அமிதாப்பின் டிவிட்டர் பக்கம் மட்டும் அல்ல அவரது வலைப்பதிவும் அதைவிட செழுமையானது. அமிதாப் பல விஷயங்கள் குறித்து தனது எண்ண அலைகளை வலைப்பதிவில் விரிவாகவே பதிவிட்டு வருகிறார். ஒரு நடிகர் தனது ரசிகர்களுக்காக அக்கறையுடன் எழுதும் நாட்குறிப்பாக அமிதாப்பின் வலைப்பதிவு இருப்பதை பார்க்கலாம்.
முக்கிய பதிவுகளுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் இணைப்பு தருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு தீவிர ரசிகனுக்கு அமிதாபின் சமூக ஊடக பகிர்வுகள் தரக்கூடிய இளைப்பாறுதலும், மகிழ்ச்சியும் நிகரில்லாதது- நிழலாக ரசித்தவரை நிஜமாக தெரிந்து கொள்ள வழி செய்வது!.

கமல் நினைத்தால் இதே அனுபவத்தை அவரது ரசிகர்களுக்கு அளிக்க முடியும். தன்னைப்பற்றிய அப்டேட்கள் மட்டும் அல்ல, அவரது சிந்தனை ஓட்டம், புதிய போக்குகளை அவர் எதிர்கொள்ளும்விதம், திரை நுட்பங்களை புரிந்து கொள்வதில் அவரது கோணம் என கமலிடம் எதிர்பார்க்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ரசிகர்களுக்கு மட்டும் அல்ல இளம் படைப்பாளிகளுக்கும் கமலின் டிவிட்டர் பக்கம் தகவல் சுரங்கமாக இருக்கும்.
கமலின் இலக்கிய ஆர்வமும்,வாசிப்பு அனுபவமும் இதற்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். மய்யம் இலக்கிய இதழை நடத்திவர் துடிப்பு மிக்க வலைப்பதிவாலும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வழிகாட்ட முடியும்.
இவற்றை எல்லாம் அறியாதவர் அல்ல கமல்; ஒரு இணைய ரசிகனாக அவரது ரசிகர்கள் சார்பில் இந்த எதிர்பார்ப்பை முன்வைக்கிறேன்.அவ்வளவு தான் . டிவிட்டரில் கமல் எப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கமலின் டிவிட்டர் முகவரி: @iKamalhaasan
——

நன்றி; யுவர்ஸ்டோரியில் எழுதியது:

1apologyscreenshot

மகளின் செயலுக்காக பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அம்மா!

அமெரிக்க அம்மா ஒருவர் தனது மகளின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் பேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்டு எல்லா அம்மாக்களாலும் பாராட்டப்படும் முன்னோடி அம்மாவாகி இருக்கிறார். அப்படியே மற்றவர்களிடன் எப்படி தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் மகளுக்கு பாடமும் கற்றுத்தந்திருக்கிறார்.
கேயிஷா ஸ்மித் எனும் அந்த அம்மா அமெரிக்காவின் அலபாமாவில் வசிக்கிறார். கடந்த வாரம் அவர் தந்து இரண்டு பெண்கள் மற்றும் பையனை திரையரங்கில் புதிய படமான சிண்ட்ரெல்லா பார்ப்பதற்காக காரில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

திரையரங்கில் அவரது இரண்டு மகள்களும் துடுக்குத்தனமாக நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் துடுப்புத்தனத்தால், மகளுடன் படம் பார்க்க வந்திருந்த அம்மா ஒருவர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். படம் முடிந்ததும் அந்த பெண்மணி மிகுந்த வருத்ததுடன் இவர்களிடம் வந்து , தனது கணவருக்கு வேலை போய்விட்டதால் இனி தங்களால் சினிமாவுக்கு எல்லாம் வர முடியாது எனும் நிலையில் கடைசியாக பார்த்த படத்தையும் நிம்மதியில்லாமல் செய்துவிட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டு சென்றிருக்கிறார்.
மகளின் இந்த நடவடிக்கை பற்றி அவர்களின் தம்பி கூறியதை கேட்டு கேயிஷா ஸ்மித் மிகவும் வேதனையடைந்தார்.
1kyeshasmithwoodandkids
இன்னொருவரின் மனம் நோகும் படி மகள்கள் நடந்து கொண்டிருக்கின்றனரே என்று கலங்கியவர் அத்துடன் நிற்கவில்லை. புது யுகத்து அம்மாவாக இந்த விஷயத்தை பேஸ்புக்கிற்கு கொண்டு சென்றார்.
நடந்த சம்பவத்தை முழுவதும் விவரித்து, திரையரங்கில் தனது மகள்களின் மோசமான நடத்தையால் பாதிக்கப்பட்ட அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும், பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியை தேடிகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தங்கள் செயல் தவறானது என் பெண்களுக்கு உணர்த்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தவர் ,இது ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்காக அவர்கள் மன்னிப்பு கேட்க தயராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு அவர்கள் தங்கள் பாக்கெட் மணியில் தங்கள் செயலால் பாதிக்கப்பட்ட அம்மா மற்றும் அவரது மகளை சினிமாவுக்கு அழைத்துச்சென்று சிற்றுண்டி வாங்கித்தந்து மகிழ்விக்க தயாராக இருப்பதாகவும் உருக்கமாக குறிப்பிட்டிருந்தவர்,சம்பந்தப்பட்ட அம்மா இதை பார்த்தால் தயவு செய்து தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

மகள்களின் செயலுக்காக இப்படி பேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்க முன்வந்து அந்த பாதிப்புக்கு ஈடு செய்யவும் முற்பட்ட அவரது கண்டிப்பு மிக்க தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இந்த பேஸ்புக் பதிவை பார்த்தவர்கள் எல்லாம் வியப்புடன் அதை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.
இப்படி ஆயிரகணக்கானவர்களால் பார்க்கப்பட்ட அந்த பதிவு இறுதியில் அதற்குறிய பெண்மணியாலும் பார்க்கப்பட்டது.

ரெபேக்கா பாய்ட் எனும் அந்த பெண்மணி இந்த மன்னிப்பு கோரலை பார்த்து நெகிழ்ந்து போய்விட்டார்.
அந்த பெண்களின் செயலால் தான் வேதனையடைண்டாலும் அவர்கள் அம்மாவின் மன்னிப்பு கோரும் பதிவை படித்த போது கண் கலங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்கள் மீது தனக்கு கோபமில்லை என்று கூறியவர் ,அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளதுடன் ஒரு அம்மாவாக கேயிஷா பொறுப்புடன் நடந்து கொண்ட விதம் குறித்தும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதனிடையே இந்த நிகழ்வு பற்றி ஆன்லைனில் படித்தவர்களில் பலர் அவரது கணவருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் முன் வந்திருந்தனர்.

பேஸ்புக் தற்பெருமைக்கும், அலுப்பூட்டும் நிலைத்தகவலுக்கும் மட்டும் அல்ல, அதன் வழியே சின்ன சின்ன அற்புதங்களும் நடந்தேறும் என்பதற்கு இந்த சம்பவம் அழகான உதாரணமாக இருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர்.

——–

விகடன்.காமி எழுதியது.

—-

தினமணி.காமில், இணையம் தொடர்பான முக்கிய பதிவுகளை நெட்டும் நடப்பும் என எழுதுகிறேன்: படித்து விட்டு கருத்து மற்றும் ஆலோசனை சொல்லவும்: http://www.dinamani.com/junction/nettum-nadappum/2015/04/03/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/article2743460.ece

திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான இணையதளம்.

tubeplus.me

‘டியூப்பிளஸ்.மீ’ இணையதளம் அதனை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.திரைப்படங்களுக்கான எதிர்காலம் இப்படி தான் இருக்கப்போகிறது என்பது தான் அந்த செய்தி.

அதாவது திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான பிரதான இடமாக இணையம் தான் இருக்கப்போகிறது என்று இதனை புரிந்து கொள்ளலாம்.

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அவை வந்து சேரும் இடம் என்னவோ இணையமாக தான் இருக்கும் என்பதை இந்த தளம் உணர்த்திக்கொண்டிருக்கிறது.

அந்த அளவுக்கு இந்த தளம் திரைப்படங்களின் இருப்பிடமாக இருக்கிறது.இதுவரை வெளியான பெரும்பாலான படங்கள் இந்த தளத்தில் தொகுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றை இணையத்திலேயே கண்டு களிப்பதற்காக தான் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தளத்தில் நுழைந்து விருப்பமான படத்தை தேர்வு செய்து இணையத்திலேயே அந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.

(ப‌டங்கள் என்னும் போது பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள் தான் என்றாலும் பாலிவுட் கோலிவுட் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன)

பார்க்க விரும்பும் படங்களை தேர்வு செய்வது சுலபம் தான்.மனதில் உள்ள படத்தின் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது ஒரு வழி.இல்லை என்றால் எந்த வகையான படம் தேவை என குறிப்பிட்டு(ஆக்ஷன்,காமெடி,திரில்லர்…) எந்த காலகட்டத்தை சேர்ந்த படமாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு படங்களின் பட்டியலை பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.திரைப்படங்களை அவற்றின் ரகத்திற்கு ஏற்ப தனித்தனி குறிச்சொற்கள் மூலமாகவும் தேர்வு செய்யலாம்.

இல்லை என்றால் முகப்பு பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ள டாப் டென் பட்டியலில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த பட்டியல் அவப்போதைய முக்கிய நிகழ்வுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கிறது.எனவே மிகுந்த உயிரோட்டமான பரிந்துரையாகவும் அமைந்திருக்கிறது.

ஒரு படத்தை தேர்வு செய்து கிளிக் செய்தால் அந்த படம் தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பதோடு அதனை இணையத்திலேயே பார்த்து ரசிப்பதற்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.அந்த படம் இணையத்தில் எங்கெல்லாம் டவுண்லோடு செய்ய கிடைக்கிறதோ அந்த இடங்கள் எல்லாம் இணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த திரைப்படத்தின் முன்னோட்டத்திற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தேடி அலையாமல் ஒரே இடத்தில் எல்லா படங்களுக்குமான இணைப்பை வழங்குவது தான் இந்த தளத்தின் சிறப்பு.(திரைப்படங்கள் மட்டும் அல்ல திவி நிகழ்ச்சிகளையும் இவ்வாறு பட்டியலிடுகிறது)

இணையத்தில் முழு நீள திரைப்பட‌ங்களையும் திரைப்பட கிளிப்களையும் பார்த்து ரசிக்க இணையதளங்களும் டோரண்ட்களும் நிறையவே இருக்கின்றன.

ஆனால் ஒரே இடத்தில் அவற்றை தொகுத்தளிக்கிறது இந்த தளம்.

இந்த தன்மையே வியக்க வைக்கிறது.யோசித்து பார்த்தால் இது ஒரு பெரிய விஷயம் அல்ல.இணையத்தில் சிதறிக்கிடக்கும் திரைப்பட வீடியோ கோப்புகளை எல்லாம் திரட்டி அழகாக தொகுத்தளிக்கும் பணியை மட்டும் தான் இந்த தளம் செய்கிறது.ஆனால் இது உருவாக்கும் விளைவு அற்புதமாக இருக்கிறது.

இணையத்தில் பார்க்ககூடிய திரைப்படங்களையும் அவை சார்ந்த தகவல்களையும் ஒரே இடத்தில் விரம் நுனியில் பெற முடிவது திரைப்பட ரசிகர்களை கிரங்கிப்போகவே செய்யும்.

இப்படி ஒரே இடத்தில் படங்கள் குவிந்து கிடப்பதை பார்க்கும் போது எதிர்காலத்தில் வெளியாகும் படங்களும் இப்படி காணக்கிடைப்பது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.ஏன் இப்போது வெளியாகும் படங்கள் கூட இதே போல பட்டியலிடப்படலாம்.

ஆனால் ஏற்கனவே வெளியான படங்களை இணையத்தில் பார்ப்பது என்பது வேறு புதிதாக வெளியாகும் படங்களை இணையத்தில் பார்க்க முடிவது என்பது வேறு.புதிய படங்கள் இணையத்தில் வெளியாவதை தயாரிப்பாளர்களாலும் விநியோகிஸ்தர்களாலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது.

இருப்பினும் தொழில்நுட்பம் வெளியீட்டு வாயில்களை அகல திறந்து வைத்திருக்கும் போது அதற்கு அனை போடுவதோ காவல் காப்பதோ கடினம் தான்.

இணையத்திலேயே படங்களை வெளியிடுவதற்கான நிர்பந்தத்தை அல்லது அவசியத்தை திரைத்துறையினர் உணர்வதற்கு காலமாகலாம் ஆனால் அதுவே எதிர்காலம் என்பதை டைம்பிளஸ்.மீ தளம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது.

நிற்க திரைப்படங்களை திரையரங்குகளோடு இணையத்திலும் வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் நோக்கில் உள்ள சிக்கல்கள் புரிந்துகொள்ளகூடியதே.ஆனால் அதனை ஒரு வழியாக ஏற்றுக்கொண்டால் திரையரங்கு போலவே இணைய வெளியீடு மூலமும் கட்டணம் வசூலிப்பதற்கான வழிகள் உருவாக்கப்படலாம்.

டைம்பிளஸ் தளத்திலேயே எல்லா வீடியோக்களும் காப்புரிமை விதிகளின் கீழே வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.திரைப்பட உரிமையாளர்கள் தங்கள் அனுமதி இன்றி படங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதாக கருதினால் அதனை நீக்கி கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இதுவும் திரைப்படங்களுக்கான எதிர்காலம் தான்.

இணையதள முகவரி;http://www.tubeplus.me/

பி.கு;கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச் மூலம் வெளியிடும் முன்னோடி முயற்சியை புரிந்து கொள்ள முயலாமல் கண்மூடித்தனமாக எதிர்பவர்கள் இது போன்ற இணைய முயற்சிகளை அலசி ஆராய்ந்து நிதர்சனத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

பாலுமகேந்திராவின் வலைப்பதிவு.

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது.

எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமா?மூன்றாம் பிறை!(முகவரி வேறு).மூன்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் அடையளாமாகவே மாறிவிட்டது.

இந்த தலைப்பில் அவரது வலைப்பதிவை படிப்பது பொருத்தமானது மட்டும் அல்ல;பரவசமானதும் கூட!

வலைப்பதிவின் முதல் பதிவை பாலுமகேந்திரா பேசுகிறேன் என்றே ஆரம்பித்திருக்கிறார்.(கேட்க காத்திருக்கிறோம் சார்)

அந்த பதிவில் வெளிப்படும் தெனி கவனிக்கத்தக்கது.எத்தனை பெரிய மேதை அவர்.பாலுமகேந்திரா ஸ்கூல் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனது கலையால் கவரப்பட்ட மாணவர் படையை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.திரையில் காமிராவின் நுணுக்கங்களை பார்த்து ரசிகர்கள் கைத்தட்ட வைத்தவர் அல்லவா அவர்!

அவரிடம் சினிமா பற்றி சொல்ல கடலளவு இருக்கிறது.ஆனால் அவரோ எனது சுயசரிதையை பதிவு செய்ய வேண்டும் என மாணவர்களும் நலம் விரும்பிகளும் தன்னிடம் கேட்டு கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி விட்டு சுயசரிதை எழுதும் அளவுக்கு தான் ஒன்று சாதனையாளன் அல்ல சாமான்யான் என்கிறார்.

அது மட்டும் அல்ல நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை என்கிறார்.அந்த சேற்றில் பூத்த செந்தாமரைகளாக தனது மூடுபனியையும் அழியாத கோலங்களும் வீடு மற்றும் சந்தியாராகம் முன்றாம் பிறை போன்றவை மலர்ந்தன‌ என்கிறார்.

தனது வாழ்க்கை சொல்லிகொள்ளும் படியானதோ எழுதி கொள்ளும் படியானதோ அல்ல என்பவர் இருப்பினும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய அத்தியாயங்களை குறிப்பாக சினிமாவுக்கும் தனக்குமான உறவை வலைப்பதிவில் பதிவு செய்ய இருப்பதாக கூறுகிறார்.

பாலுமகேந்திராவின் கலையில் இருக்கும் உண்மையையும் நேர்மையையும் பாசாங்கற்ற தன்மையையும் இந்த அறிமுக உரையிலும் காணலாம்.அவரது கலையை கண்டு வியப்பது போலவே இந்த அறிமுகத்தையும் கண்டு வியக்கலாம்.

அறிமுகத்தில் குறிப்பிட்டது போலவே சினிமாவும் நானும் என்ற தலைப்பில் சினிமா மீது தனது காதல் ஏற்பட்ட விதத்தை விவரித்திருக்கிறார்.

13 வயதில் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதையும் ஒரு முரை பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா மேதை டேவிட் லீன் படப்பிடிப்பை பார்த்து பிரம்மித்து போன அனுபவத்தையும் அதே சிறுவயது பரவசத்தோடு விவரித்துள்ளார்.

அந்த படபிடிப்பின் போது டேவிட் லின் ரெயின் என்று கத்தியதும் மழை பெய்ததை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்தவர் பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராக தான் வருவேன் ,நான் ரெயின் என்றால் மழை பெய்யும் என்று முடித்திருக்கிறார்.

பாலு மகேந்திரா சார் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.இல்லை தொடர்ந்து கற்றுகொள்ள காத்திருக்கிறோம்.எழுதுங்கள் சார்.

————-
பாலுமாகேந்திராவின் வலைப்பதிவு முகவரி;http://filmmakerbalumahendra.blogspot.in/

குறிப்பு;பாலுமகேந்திராவின் இந்த வலைப்பதிவை சுட்டிக்காட்டி உடனடியாக படிக்க சொன்ன எனது நண்பனும் சக பத்திரிகையாளனுமான பரத்திற்கு எனது நன்றிகள்.

வலைப்பதிவில் பாலுமகேந்திரா சினிமா மீது தனக்கு காதல் ஏற்பட்ட அனுபவத்தை ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று நேரில் விவரிக்க கேட்டு ரசித்திருக்கிறேன்.நானும் ரெயின் என்று சொன்னால் மழை வரும் என்று அவர் சொன்னதை செய்தியாக பரவசமாக பதிவும் செய்திருக்கிறேன்.

அனுபுடன் சிம்மன்

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.

பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம் வரவேற்பு குவிந்திருக்கிறது.முதல் ஒரு மணி நேரத்திலேயே 8 லட்சம் லைக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கிறது.

இப்படி ஒரு வரவேற்பு பேஸ்புக்கில் வேறு எந்த பிரபலத்திற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.அமிதாப் பாவிவுட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல இண்டெர்நெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராக தான் இருக்கிறார்.அதாவது இணைய உலகிலும் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.படிக்கப்படுகிறார்.பின் தொட்ரப்படுகிறார்.

இந்த அபிமானத்திற்கும் வரவேற்பிற்கும் காரணம் அமிதாப் இண்டெர்நெட்டை சரியாக பயன்படுத்துகிறார் என்பதே.பயன்படுத்துகிறார் என்றால் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவோ தனது சாதனைகளை மார் தட்டி கொள்ளவோ அல்ல! மாறாக தனது ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்ள,அவர்களுடன் பேச,தன்னை வெளிப்படுத்தி கொள்வதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது வலைப்பதிவிலும் டிவிட்டர் பக்கத்திலும் இதனை பார்க்கலாம்.

அமிதாப் பற்றிய செய்திகளை ரசிகர்கள் தெரரிந்து கொள்ள விரும்பினால் நாளிதழ்களையோ டிவிக்களையோ நாட வேண்டியதில்லை.அவருடைய டம்ப்ளர் வலைப்பதிவை பின்தொடர்ந்தாலே போதுமானது.இன்னும் கூடுதல் தகவல்கள் தேவை என்றால் அவரது டிவிட்டர் பக்க‌த்தை கவனித்தால் போதுமானது.

வலைப்பதிவு செய்வதிலும் சரி டிவிட்டரில் பதிவிடுவதிலும் சரி அமிதாப் அந்த அளவுக்கு தீவிரமும் சுறுசுறுப்பும் காட்டி வருகிறார்.

ஒரு நட்சத்திரத்தை பற்றி அறிய ரசிகர்களுக்கு ஆர்வம் உள்ளவற்றை எல்லாம் அமிதாப் தானே வலைப்ப‌திவு மூலம் வெளியிட்டு வருகிறார்.படப்பிடிப்பு அனுபவங்கள்,பங்கேற்கும் நிகழ்ச்சிகள்,மன உணர்வுகள் என எல்லாவற்றையும் பற்றி அவர் பதிவு எழுதுகிறார்.

அவருடைய வலைப்பதிவுகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதோடு அமிதாப் என்னும் நடத்திரத்தின் வாழ்க்கை பக்கத்தை படித்தது போன்ற உணர்வையும் தரும்.ஒரு நெருங்கிய நண்பனிடம் பேசுவது போல அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அமிதாப் பதிவுகள் எல்லாம் கேள்வி கேட்கப்படாத பேட்டிகள் போல இருக்கும்.அல்லது ரசிகர்கள் கேட்க நினைத்த கேள்விகளுக்கான பதிலாக இருக்கும்.

அதானல் தான் பால் நேரங்களில் மீடியாக்களே கூட வலைப்பதிவில் அமிதாப் சொல்வதை செய்தியாக வெளியிடுகின்றன.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அமிதாப் இன்னும் தீவிரமாக இருக்கிறார்.

குடும்ப நிககழ்வுகள் பற்றியும் நாட்டு நடப்பு பற்றியும் அவர் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மரும‌கள் ஐஸ்வர்யா கர்பமுற்ற போது அமிதாப் மகிழ்ச்சி பொங்க அந்த செய்தியை டிவிட்டரில் தான் முதலில் பகிர்ந்து கொண்டார்.ஒரு தாத்தாவின் மன உணர்வை அதில் பார்க்க முடிந்தது.

அதே போல பேத்திக்கு சூட்டப்பட்ட பெயரையும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.சும்மாயில்லை இது வரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குறும்பதிவுகளை வெளீயிட்டிருக்கிறார்.அதன் பயனாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை பெற்றிருக்கிறார்.

இப்படி சைபர் ராஜாவாக விளங்கும் அமிதாப் இப்போது பேஸ்புக் பக்கம் வந்திருக்கிறார்.

பேஸ்புக்கில் நுழையப்போவதை முதலில் டிவிட்டரில் தான் தெரிவித்தார்.அதன் பிறகு சில மணிநேரங்கள் கழித்து பேஸ்புக்கில் நுழைந்து விட்டதை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.அதற்குள் பேஸ்புக்கில் அவருக்கு லட்சகணக்கில் லைக்குகள் குவிந்து விட்டன.

அருமையான புகைப்படங்களோடு தான் பங்கேற்கும் நிகழ்ச்சி பற்றி தனது மகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி எல்லாம் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.ஒவ்வொரு பதிவும் தனியே லைக் செய்யப்படுவதோடு அவற்றுக்கான கருத்துக்களும் குவிகின்றன.அருமையான வீடீயோக்களையும் வெளீயிட்டு வருகிறார்.

சமூக வலைப்பின்னல் தளங்களை நட்சத்திரங்கள் எப்படி பயன்ப‌டுத்த வேண்டும்
என்பத‌ற்கு மட்டும் அல்ல எதற்காக பயன்ப‌டுத்த வேண்டும் என்பதற்கும் அமிதாப் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.:http://www.facebook.com/AmitabhBachchan

பிகு;அமிதாப்பின் பேஸ்புக் பக்கத்தில் அவர் பயன்படுத்தும் இணைய சேவைகள் பட்டியலும் கொடுக்கட்டுள்ளது.இசை சேவையான ஸ்பாட்டிபை உட்பட சிம்பை,ர்டியோ,மாக்,டீசர் என பத்துக்கும் மேற்பட்ட சேவைகளில் அவர் உறுப்பினராக இருப்பதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிற‌து.