Tag Archives: download

ஊக்கம் தரும் செய்தி படங்களை பார்ப்பதற்கான இணையதளம்.

சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களையும்,விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் யூடியூப் வீடியோக்களையும் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க கூடிய செய்தி படங்கள் எத்தனையோ இருக்கின்றன,அவற்றை எல்லாம் பார்த்து ரசித்தால் என்ன?

இப்படி கேட்காமல் கேட்கிறது ‘எக்ஸ்பிளோர்’ இணையதளம்.அதற்கேற்ப உலகம் முழுவதும் உள்ள உன்னதமான செய்தி படங்களையும்,நிழற்படங்களையும் பார்த்து ரசிக்க வழி செய்கிறது.

மனித வாழ்க்கையை மேம்படுத்த தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்பணித்து கொண்ட தன்னலமற்றவர்களின் மகத்துவத்தை விளக்கும் செய்தி படங்களின் தொகுப்பாக இந்த தளம் விளங்குகிறது.அதே போல அசாதரணமாக செயல்பட்ட தனிநபர்களின் சாதனைகளை உணர்த்தும் செய்தி படங்களையும் பார்க்க வழி செய்கிறது.

மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் தனிநபர்கள்,சமூக நலனுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து அவர்களின் நோக்கம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதும் இந்த தளத்தின் நோக்கமாகும்.

உலகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவங்களின் பணிகளை அறிமுகம் செய்து மனிதநேயம் என்பது பாரெங்கும் பொதுவானது என்பதை உணர்த்துவதும் இதன் குறிக்கோளாக அமைந்துள்ளது.இதில் இடம்பெற்றுள்ள செய்தி படங்கள் மற்றும் புகைப்படங்கள் புதிய பாடங்களாகவும் அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தளம் அடையாளம் காட்டும் செய்திபடங்கள் அவற்றின் உள்ளடகத்தில் மட்டும் அல்ல அவை எடுக்கப்பட்ட விதத்திலும் கூட அசாதரணமானவை.இந்த படங்கள் எல்லாமே இந்த தளத்தின் பின்னே உள்ள அமைப்பால் அவற்றை உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் எடுக்கப்பட்டவை.

அன்னென்பெர்க் என்னும் அமெரிக்க அறக்கட்டளை அமைப்பு தான் இந்த தளத்தை நிர்வகித்து வருகிறது.சார்லி வெயின்கார்ட்டன் என்னும் அமெரிக்க கொடை வள்ளல் தலைமையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

சார்லி வழக்கமான கொடை வள்ளல் அல்ல;அவரிடம் கோடி கோடியாக டாலர்களும் இருக்கின்றன.அவற்றை அள்ளி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.அதற்காக அவர் பணத்தை வாரி கொடுத்துவிட்டு கொடுக்கும் கடமை முடிந்தது என்று சும்மா இருந்துவிடுவதில்லை.

தன்னையும் கவரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செயல்படும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களோடு தங்கி அங்கு நடைபெறும் அரும்பணியை நேரில் பதிவு செய்து வந்து அவற்றை வீடியோ காட்சிகளாகவும் புகைப்படங்களாகவும் ஆவணப்படுத்தி வைக்கிறார்.

இப்படி அவரது குழு நேரில் பதிவு செய்த அரும்பணிகளின் பதிவுகளை தான் இந்த தளத்தில் செய்தி படங்களாக பார்க்க முடிகிறது.

பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் மனித குல மேம்பாட்டிகாக அசாதரணமான முறையில் செயல்பட்டு வரும் தனிநபர்களையும் அமைப்புகளையும் அறிந்து கொண்டு பின்னர் அவர்கள் முயற்சியை ஆவணப்படுத்தும் செயலில் இக்குழுவினர் ஈடுபடுகின்றனர்.

ஆக தொண்டு நிறுவன செயல்பாட்டில் நேரடியாக பங்கேற்ற பின்னரே நிதி அளிப்பதோடு அந்த அமிப்பின் செயல்களை உலகிறகு வெளிச்சம் போட்டு காட்டும் பணியையும் சார்லியின் குழு செய்கிறது.

இப்படி உலகம் முழுவதும் சுற்றி சுழன்று நல்ல மனிதர்களையும் மகத்தான அமைப்புகளின் செயல்களையும் ஆவணப்படுத்தியுள்ளார் சார்லி.

கீரிண்லாந்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பாடுபட்டு வரும் அமிப்பு,ருவாண்டாவில் கொல்லப்படும் கொரில்லாக்களை காக்க பாடுப்பட்டு வரும் அமைப்பு,மும்பையில் விலைமாதரை மீட்டு நல்வழிப்படுத்தும் பெண்மணி,சுரங்க விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் அமைப்பு என்று பல்வேறு சமூக நலப்பணிகளை இக்குழு அடையாளம் காட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ளவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாக இருபார்கள்,சீனாவில் இருப்பவர்கள் எல்லாம் பேராசை பிடித்தவர்களாக இருப்பார்கள் போன்ற பொது புத்தியில் படிந்திருக்கும் தப்பான அபிப்ராயங்களை தகர்க்கவும் இந்த படங்கள் உதவும் என்ற நம்பிக்கை சார்லிக்கு உள்ளது.

இணையதள முகவரி;http://explore.org/

அசத்துகிறது ஹாலிவுட்;தூங்குகிறது கோலிவுட்.

ஹாலிவுட் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது.கோலிவுட் எங்கேயோ பின்தங்கி நிற்கிறது என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது கேன் ஐ ஸ்டிரிம் இட் தளத்தை பார்க்குபோது.கூடவே ஒருவித பட்சாதாபமும் கோலிவுட் மீது உண்டாகிறது.

நிச்சயமாக இந்த கருத்து கோலிவுட் படங்களின் தொழில்நுட்பம் அல்லது அவற்றின் தரம் சார்ந்ததோ அல்ல!கோலிவுட் படங்கள் விநியோகிக்கப்படும் விதம் தொடர்பான ஏக்கம் இது.

கோலிவிட்டில் வெளியாகும் படங்களில் நூற்றில் பத்து கூட வெற்றி பெறுவதில்லை என்னும் நிலை.தியேட்டர்களிலோ கூட்டம் இல்லை.வெள்ளி விழா படங்கள் 100 நாள் படங்களை எல்லாம் கோலிவுட் மறந்து பல வருடங்களாச்சு!

இரண்டாவது வாரத்திற்கு வந்தாலோ படம் வெற்றி என நிம்மதி பெருமூச்சு விடுகிறது கோலிவுட் வட்டாரம்.இந்த நிலைக்கு திருட்டு விசிடியும்,இப்போது இண்டெர்நெட்டும் காரணமாக சொல்லப்படுகிறது.படம் ரீலிசான அன்றே இண்டெர்நெட்டில் டவுண்லோடுக்கு வந்துவிட்டால் தியேட்டருக்கு யார வருவார்கள் என்று கோலிவுட் புள்ளிகள் ஆவேசமாக கேட்பது வழக்கமாக உள்ளது.

இதில் உண்மை இருக்கலாம்,ஆனால் தொழில்நுட்பம் திரைப்பட விநியோகத்திற்கு திறந்து விட்டிருக்கும் மாற்று வழிகளாக இவற்றை பார்க்க துவங்கினால் இதே நெட்டை வைத்து வருவாயும் பார்க்கலாமே!ஹாலிவுட்டில் இதை தான் செய்கின்றனர்.

படம் ரீலிசான குறிப்பிட்ட காலத்தில் அவர்களே தரமான டிவிடியையும் சந்தையில் அனுமதிக்கின்றனர்.எஹ் டி,புளு ரே என அசத்தலான தரத்திலான டிவிடி எல்லாம் வந்துவிட்டன.எனவே திரையரங்குகளில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட பிரதிகளை விட இந்த டிவிடிக்கள் சூப்பராக இருக்கும்.அதே போல நெட்பிலிக்ஸ் போன்ற திரைபட சேவை தளங்களின் மூலம் ஸ்டிரிமிங் என்று சொல்லப்படும் முறையில் படங்களை காணச்செய்கின்றனர்.

எல்லாமே அனுமதிக்கப்பட்டவை.கட்டணம் வசூலித்து தருபவை.இன்னும் பல வழிகளில் இணையம் மூலமே புதிய படங்கள் ரசிகர்களை வந்தடைகின்றன.

இப்படி எத்தனை வழிகளில் எல்லாம் இருக்கின்றன என்னும் வியப்பை தான் கேன் ஐ ஸ்டிரிம் தளம் ஏற்படுத்துகிறது.

ஒருவிதத்தில் இந்த தளத்தின் பெயரோ பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது.ஸ்டிரீமிங் என்றால் திரைப்படங்கள் இண்டெர்நெட்டில் பாய்ந்தோடச்செய்வது என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது டவுண்லோடு செய்யும் தேவை இல்லாமால் திரைப்படங்களை அப்படியே பார்த்து மகிழ்வது.

ரசிகர்கள் ,திரை உலகினர் இருவருக்குமே இது சாதகமானது.ரசிகர்களை பொருத்தவரை ப்டம் டவுண்லோடு ஆக காத்திருக்காமல் விரும்பியவுடன் பார்த்து ரசிக்கலாம்(கட்டணம் செலுத்தி தான்).டவுன்லோடு செய்யப்படாததால் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாதது என்பது திரை உலகிற்கு சாதகம்.

நெட்பிலிக்ஸ் போன்ற தளங்கள் இந்த வசதியை தருகின்றன.

ஆனால் இந்த வசதிகள் எல்லாம் படம் வெளியானவுடன் கிடைத்துவிடுவதில்லை.படம் வெளியான குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவற்றின் டிவிடியும்,இணைய வடிவமும் வெளியாக துவங்குகின்றன.இவை படத்திற்கு படம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம்.

எனவே ஒரு படத்தின் ஸ்டிரீமிங் எப்போது கிடைக்கும் என்பது தான் ஹாலிவுட் ரசிகர் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.அதாவது தியேட்டருக்கு போகாமல் விட்டில் இருந்தே படம் பார்க்க விரும்புகிறவர்கள்.

இந்த கேள்விக்கான விடை அளிக்கும் வகையில் தான் கேன் ஐ ஸ்டிரிம் இட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த படத்தை காண விருப்பமோ அந்த படத்தின் பெயரை இந்த தளத்தில் டைப் செய்தால் அந்த படம் எப்போது முதல் எந்த எந்த வடிவில் கிடைக்கும் என்ற தகவல் வந்து நிற்கிறது.

ஒவ்வொரு படத்திற்கும் வரிசையாக ஸ்டிரிமிங் எப்போது,டிவிடி ரீலிஸ் எப்போது,டிஜிட்டல் விற்பனை எப்போது,வாடகை ஸ்டிரிமிங் எப்போது என்ற தகவல்கள் தரப்படுகிறது.அப்படியே நெட்பிலிக்ஸ்,அமேசான்,மற்றும் ஹூலு போன்ற தளங்களில் எப்போது வாங்கலாம் என்ற விவரமும் தரப்படுகிறது.

ஹாலிவுட் ரசிகர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தளம் என்றாலும் ஹாலிவுட் படங்களின் விநியோகிக்க்ப்படும் பலவிதமான வழிகளை பார்த்தால் பிரம்மிப்பாக தான் இருக்கிறது.

இணையதள முகவரி;http://www.canistream.it/

janmap

உலகின் பாடலை கேட்டு ரசிக்க இந்த இணையதளம்.

அமெரிக்கா என்றால் ராக் அன் ரோல்.ஜமைக்கா என்றால் ரெகே.பிரேசில் என்றால் துள்ளி குதிக்க வைக்கும் சம்பா நடன மெட்டு.கியூபா என்றால் தாளம் போட் அவைக்கும் கரிபிய இசை.இந்தியா என்றால் வடக்கே இந்துஸ்தானி,தெற்கே கர்நாடக சங்கீதம்.கூடவே நாட்டு பாடல்கள்.

இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு இசை மனம் உண்டு.வியட்னாமில் போனால் ஒரு வகையான சங்கீதம் கேட்கலாம்.இத்தாலியிலோ ஸ்பெயினிலோ முற்றிலும் வேறு வகையான இசையை கேட்டு மகிழலாம்.

உள்நாட்டு சங்கீதம் இல்லையென்றால் சர்வதேச அளவிலான பிரபலமான பாப் பாடல்களை கேட்டு ரசிப்பத்தை காட்டிலும் புதுப்புது வகையான இசையை கேட்டு ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் ஜாம்மேப் இணையதளம் உங்களை துள்ளி குதிக்க வைத்துவிடும்.

உலகில் உள்ள எந்த நாட்டின் இசையை கேட்டு ரசிக்க வேண்டும் என்றாலும் இந்த தளம் வழி செய்கிறது.

புதிய நாட்டின் பாடலை கேட்டு ரசிப்பதும் எளிதானது தான்.எந்த நாட்டின் இசையை கேட்க விருப்பமோ அந்த நாட்டின் மீது கிளிக் செய்தால் போதும் அந்த நாட்டில் இருந்து பட்டியலிடப்பட்டுள்ள பாடல்கள் வந்து நிற்கின்றன.அதில் தேவையானதை கிளிக் செய்து கேட்க வேண்டியது தான்.

தளத்தின் முகப்பு பக்கத்திலேயே இதற்கான உலக வரைபடம் தோன்றுகிறது.அதில் நாடுகளை கிளிக் செய்து கொள்ளலாம்.

இந்தியாவிற்கான பட்டியலில் சென்னை இசைக்குழு உட்பட பல்வேறு குழுக்களின் இசை பட்டியலிடப்படுகிறது.

ஆனால் ஒன்று ஒரு நாட்டின் இசைக்கான மாதிரியாக தான் இந்த பட்டியல் அமைகிறதே தவிர குறிப்பிட்ட ஒரு நாட்டின் இசை பரப்பை அப்படியே முழுமையாக பிரதிபலிக்ககூடியது என்று சொல்ல முடியாது.இதற்கு காரணம் பொது காப்புரிமை உள்ள பாடல்கள் மட்டுமே இடம் பெறுவது தான்.

இருந்தாலும் கூட உலக நாடுகளின் இடையை இருந்த இடத்தில் இருந்தே கேட்டு ரசிப்பதற்கான வாய்ப்பு இசை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.

அதிலும் உறுப்பினராக சேர வேண்டிய தேவையில்லாமல்,எந்த இசை கேட்கும் பிளேயரையும் டவுண்லோடு செய்யாமல் கிள்க் செய்து மட்டுமே கேட்டு மகிழ்வது உண்மையிலேயே இனிமையான அனுபவம்.பல நேரங்களில் அருமையான புதிய இசயையும் கூடவே புதிய பாடகர்ளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

உலகில் எத்தனை நாடுகள் இருக்கின்றன.எத்தனை வகையான இசையை கேட்டு ரசிக்கலாம் இல்லையா!

உலக இசையை கேட்க இணைய முக‌வரி;http://www.jammap.com/