Tag Archives: facebok

சமூக ஊடக பயன்பாட்டிற்கான செக்லிஸ்ட்

DSCF6482சமூக ஊடகம் என்றதுமே உங்கள் முகம் பிரகாசமாகி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் பளிச்சென நினைவுக்கு வரலாம். இவற்றில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களும், பார்த்து ரசிக்கும் வீடியோக்களும், மீம்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் சமூக ஊடக நட்பு வட்டங்களும் மனதில் நிழலாடலாம். இப்படி சமூக ஊடகங்களில் ஈடுபாடு கொண்டிருப்பது இயல்பானது தான். ஆனால், இந்த ஈடுபாடு எல்லை மீறாமல் இருப்பது முக்கியம்.

ஆம், சமூக ஊடக செயல்பாடு என்பது அளவுக்கு மீறி அமையும் போது அதற்கு அடிமையாகவிடும் வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் நேரம் வீணாகி செயல்திறன் பாதிப்பதோடு, மேலும் பல விதங்களிலும் இழப்பை சந்திக்க நேரிடலாம். எனவே சமூக ஊடக பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம். எல்லாம் சரி, சமூக ஊடக பயன்பாடு அளவுக்கு மீறி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகளை வல்லுனர்கள் சுட்ட்டிக்காட்டுகின்றனர்:

பணிக்கு பதிலாக!

வேலையை பார்க்கலாம் எனும் உத்வேகத்துடன் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் முன் அமர்கிறீர்கள். மானிட்டர் உயிர் பெற்றதுமே உத்தேசித்த வேலையை மறந்துவிட்டு, பேஸ்புக் அல்லது டிவிட்டரில் ஐக்கியமாகிவிடுவது உங்கள் பழக்கமாக இருந்தால் நிச்சயம் இதற்கு கட்டுப்பாடு தேவை. வேலைக்கு முன்னுரிமை அளித்து, சமூக ஊடக செயல்பாட்டிற்கு என்று தனியே நேரம் ஒதுக்க வேண்டும். அலுவலகத்திலோ, வீட்டிலோ பணி நிமித்தமாக கம்ப்யூட்டரை பயன்படுத்த முற்படும் போது, வேலைக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். சமூக ஊடக தேவைகள் காத்திருக்கட்டும்.

ஸ்மார்ட்போன்

கம்ப்யூட்டர் முன் இல்லாத போதும், ஸ்மார்ட்போனை எடுத்து வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் புதிய அப்டேட் வந்திருக்கிறதா? என பார்க்கும் பழக்கம் இருந்தாலும் சிக்கல் தான். ஸ்மார்ட்போன் என்பது அடிப்படையில் தொடர்பு கொள்வதற்கான சாதனம். அதன் இணைய வசதியை பணிகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் ஸ்மார்ட்போனில் சில நிமிடங்களுக்கு ஒரு முறை புதிய நிலைத்தகவலை தேடிப்பார்க்கும் தன்மை சமூக ஊடக ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதன் அடையாளமாகும். அதே போல, புதிய நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதோ இல்லையோ, அடிக்கடி போனை எடுத்துப்பார்க்க தோன்றினாலும் சிக்கல் தான். பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி வெளியே வந்துவிட்ட பிறகு, காணமே இல்லாமல் மீண்டும் அந்த நினைவு வரக்கூடாது.

கணக்கற்ற கணக்குகள்

சமூக ஊடக பரப்பில் எண்ணற்ற சேவைகள் இருக்கின்றன. இவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால் எதற்கு என்று தெரியாமலே பல சமூக ஊடக சேவைகளில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டிருந்தீர்கள் என்றால் அதனால் நேரம் வீணாவதை தவிர்க்க முடியாது. அது மட்டும் அல்லாமல், நம்பகத்தன்மை இல்லாத சேவைகள் மற்றும் செயலிகளில் எல்லாம் உறுப்பினராக இருந்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

காலையில் கவனம்

தினமும் காலையில் கண் விழித்ததும் காபி, டீ சாப்பிடுவதை விட ஸ்மார்ட்போனை எடுத்து ஸ்டேட்டஸ் அப்டேட்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். சமூக ஊடக செயல்பாட்டிற்கு என்று தனியே நேரத்தை ஒதுக்க வேண்டும். இல்லை எனில் இது உங்கள் பொன்னான காலை நேரத்தை சோம்பல் மிக்கதாக மாற்றிவிடுவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பையும் பாதிக்கலாம். அதே போல, இரவு நேரங்களிலும் படுக்கைக்குச்செல்லும் முன் போன் பக்கம் செல்ல வேண்டாம். அதைவிட பாட்டு கேட்கலாம். புத்தகம் வாசிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசலாம்.

யார் நண்பர்கள் ?

நண்பர்களோடு வெளியே செல்லும் போது, பரஸ்பரம் அரட்டை அடிபப்டைவிட, பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போனை எடுத்து பார்ப்பதிலும், செல்பி எடுத்துக்கொண்டு பதிவேற்றுவதிலும் மனது செல்கிறதா? ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட சென்றாலும், சூடாட உணவு ஆறுவதை கூட பொருட்படுத்தாமல், சமூக ஊடக செய்தி என்ன என்பதிலேயே மனம் ஈடுபாடு கொள்கிறதா? இவையும் தவிர்க்கப்பட வேண்டும். அருகே இருக்கும் நண்பர்களுடன் உற்சாகமாக பேசுவதை விட ஆன்லைன் நண்பர்கள் மீது தான் ஆர்வம் அதிகம் என்பதை என்னவென்று சொல்வது என சிந்தியுங்கள்.

மிகை பகிர்வு

மின்னல் கீற்று போல ஒரு எண்ணம் உதிக்கும் போது அதை உடனடியாக நிலைத்தகவலாக பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் பேஸ்புக் சுவற்றில் நல்லதொரு பதிவை வாசிக்க நேர்ந்தால் அதை ஒட்டு கருத்தை பதிவு செய்யலாம். தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு தொடர்பாக டிவிட்டரில் குறும்பதிவு வெளியிடலாம். ஒரு நல்ல புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிரலாம். இது போன்ற செயல்பாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இன்று காலை காபி குடித்தேன், சுவையாக இருந்தது என்பதில் துவங்கி எல்லாவற்றையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளத்துவங்கினீர்கள் என்றால், நிச்சயம் உங்கள் பகிர்வு பழக்கத்தில் மாற்றமும், கட்டுப்பாடும் தேவை. இத்தகைய மிகை பகிர்வு உங்கள் சமூக ஊடக செயல்பாட்டையும் அர்த்தமில்லாததாக மாற்றிவிடும்.

இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என உறுதி கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் முழுவதும் சமூக ஊடகங்கள் பக்கம் செல்லாமல் இருந்து பார்ப்பது என்பதை சவாலாக கொள்ளுங்கள். இதை செயல்படுத்துவதிலேயே உங்கள் கட்டுப்பாட்டின் உறுதி தெரிய வரும்.

 

தகவல் புதிது; எல்லாம் சிப் மயம்

ரெயிலில் பயணம் செய்யும் போது, டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டை எடுத்துக்காட்டுவதற்கு பதிலாக கையை மட்டும் நீட்டினால் எப்படி இருக்கும்? டிக்கெட் பரிசோதகரும் தனது ஸ்மார்ட்போனில், நீட்டப்படும் கையை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தால் எப்படி இருக்கும்? ஸ்வீடன் நாட்டில் உள்ள ரெயிலில் பயணம் செய்தால் இத்தகைய அனுபவத்தை பெறலாம். ஏனெனில் அந்நாட்டின் ரெயில்வே நிறுவனம், பயணிகள் தங்கள் கைகளில் மைக்ரோசிப்களை பொறுத்திக்கொண்டு, அதில் டிக்கெட் விபரங்களை பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை சரிபார்ப்பது போலவே இந்த டிஜிட்டல் டிக்கெட்டையும் ஸ்மார்ட்போன் மூலம் சரி பார்த்துக்கொள்ளலாம். இந்த ஹைடெக் போக்கு கொஞ்சம் டுமச்சாக தோன்றுகிறதா? இத்தகைய சேவை தங்களுக்கு தேவை என்று பிஸ்னஸ் கிளாஸ் பயணிகள் பலர் வேண்டுகோள் வைத்ததால் தான் இதை அறிமுகம் செய்துள்ளதாக ஸ்விடன் ரெயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது!.

 

இன்ஸ்டாகிராமில் சைக்கிள் ஓவியம்

இன்ஸ்டாகிராம் சேவையை ஒளிப்படங்களை பகிர்ந்து கொள்ள தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை; அருமையான ஓவியங்களையும், கோட்டு சித்திரங்களையும் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த ஓவியங்கள் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தால் இன்னும் நல்லது. இதற்கான அழகிய உதாரணமாக ஜெர்மனியில் குடியேறிய இந்தியரான அலென் ஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் அமைந்திருக்கிறது. சிறு வயது முதல் சாமானியர்கள் வாகனமாக சைக்கிள் மீது அபிமானம் கொண்டுள்ள ஷா, இந்தியாவில் சைக்கள் பயன்பாட்டை சித்தரிக்கும் காட்சிகளை ஓவியமாக வரைந்து அவற்றை இன்ஸ்டார்கிராமில் பகிர்ந்து கொள்கிறார். சைக்கிள் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள ஷாவின் ஓவியங்கள், இந்தியர்களில் பலருக்கு சைக்கிள் இன்னமும் நெருக்கமாக இருப்பதை கச்சிதமாக உணர்த்துகின்றன.

இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/theolddrifter/

 

 

தளம் புதிது; ஸ்க்ரீன்ஷாட் சேவை

பல்வேறு காரணங்களுக்காக இணையத்தில் உலாவும் போது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் தேவை ஏற்படலாம். இதற்கு உதவும் சேவைகளும் பல இருக்கின்றன. அந்த வகையில் என்போஸ்.கோ தளம் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இதில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை சமர்பித்தால் மட்டும் போதும் அதன் ஸ்கிரீன்ஷாட் தோற்றத்தை அளிக்கிறது. மேலும் பல்வேறு அசம்க்கள் உள்ளன. ஆனால் கட்டண சேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சோதனைக்காக இலவசமாக பயன்படுத்திப்பார்க்கலாம்.

இணையதள முகவரி: https://enpose.co/

 

 

விக்கி கட்டுரை சுருக்கங்கள்

விக்கிபிடியாவில் தகவல்களை தேடும் போது நீளமான கட்டுரைகளை படிக்க கஷ்டமாக இருந்தால் அவற்றின் சுருக்கத்தை மட்டும் படித்துப்பார்க்கும் வசதி இருப்பது தெரியுமா? குறிப்பிட்ட விக்கிபீடியா கட்டுரைக்கான பிரவுசர் முகவரியில், உங்கள் மொழியை குறிக்கும் இ.என் எனும் ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக சிம்பிள் எனும் ஆங்கில எழுத்தை டைப் செய்தால் அந்த கட்டுரையின் சுருக்கமான வடிவத்தை வாசிக்கலாம். ஆங்கில மொழி கட்டுரைகளுக்கு மட்டும் இந்த வசதி இருக்கிறது. அதிலும் எல்லாம் நீள் கட்டுரைகளுக்கும் இல்லை. ஆனால் சுருக்கமான பதிவுகள் உள்ள கட்டுரைகள் எனில் இந்த வசதி கைகொடுக்கும்.

 


நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்

8agWVQ0T_400x400ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது.
படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மட்டும் பெருகி கொண்டே இருக்கின்றனர். மையமில்லாமல் நடைபெறும் இந்த போராட்டம், முதலில் அலங்காநல்லூரில் துவங்கி, சென்னை மெரினாவில் தீவிரமடைந்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும் இதற்கு ஆதரவு குவிந்து கொண்டிருக்கிறது.
இந்த போராட்டத்தின் உந்துசக்தியாக இருப்பது ஜல்லிக்கட்டை காப்பாற்றுவது தான் என்றாலும், அதன் பின்னணியில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் உரிமைகளை காக்க வேண்டும் எனும் உணர்வும் வலுவாக இருப்பதை மறுக்க முடியாது. சமீக காலங்களில் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் தொடர்ந்து மாநிலம் கைவிடப்பட்டவிதமும் இதற்கு வலு சேர்த்திருக்கிறது. இப்படி ஒரு போராட்டம் தமிழகத்திற்கு தேவையாக இருக்கிறது.
வழக்கம் போல துவக்கத்தில் தேசிய ஊடகங்கள் கண்டு கொள்ளாத நிலை மாறி இப்போது சர்வதேச ஊடகங்களும் புறக்கணிக்க முடியாத மக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டுவை காக்கும் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. இதற்கு பிரதான காரணம், இணையமும், சமூக ஊடகங்களும் தான்.
பேஸ்புக் பதிவுகளாகவும், டிவிட்டர் குறும்பதிவுகளாகவும், வாட்ஸ் அப் பகிர்வாகவும் பரவி இந்த போராட்டம் வளர்ந்திருக்கிறது. யூடியூப் காணொலிகளும், குவோரா விளக்கங்களும் கைகொடுத்திருக்கின்றன.
பேஸ்புக் நிலைத்தகவல்களாகவும், டிவிட்டர் குறும்பதிவுகளாகவும் ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்பான விவாதம் துவங்கிய போது, இப்படி ஒரு போராட்டம் வெடிக்கும் என யாரேனும் எதிர்பார்த்திருப்பார்களா? எனத்தெரியவில்லை. அதிலும் ஜல்லிக்கட்டு ஆதரவு நிலை, எதிர்ப்பு நிலை என கருத்துக்கள் வெளியாகி விவாதம் சூடு பிடித்த நிலையில், இதுவும் மற்ற சொற்போர்களில் ஒன்றே என பலரும் நினைத்திருக்கலாம். பேஸ்புக் கருத்து போராளிகளை பலரும் கேலியும் செய்திருக்கலாம்.
இதனிடையே ஜல்லிக்கட்டு தேவையா எனும் கேள்வியும், இதில் கலந்திருக்கும் சாதீய பாகுபாடு பற்றிய கருத்து மோதல்களும் , இதெல்லாம் வீண் வேலை எனும் எண்ணத்தை ஏற்படுத்திய நிலையில், இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடத்துவங்கிவிட்டனர். அதன் பிறகு மெல்ல படிப்படியாக போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் அலங்காநல்லூரியில் தடையை மீறி ஜல்லிகட்டு எனும் கோஷத்துடன் துவங்கிய போராட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர் குரலாக தீவிரமானது. மெரீனாவில் குவிந்த இளைஞர் பட்டாளம் கரையாமல் இருந்ததோடு, ஏதோ பயிற்சி முகாமிற்கு வருபவர்கள் போல மேலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணையத்துவங்கிய காட்சி , போராட்ட உணர்வின் உச்சமாக அமைந்துள்ளது.C2ha4uyUsAEPPpV
இதற்கு முன்னர் இணைய ஆதரவுடன் வெடித்த இரண்டு முக்கிய போராட்டங்களை இந்த போராட்டம் நினைவுபடுத்துகிறது. ஒன்று, 2011 ல், வளைகுடா நாடுகளில் ஜனநாயகத்திற்கு ஆதரவான குரலாக ஒலித்த போராட்டம். எகிப்தில் துவங்கி, பல அரபு நாடுகளில் தன்னெழுச்சியாக பிரதிபலித்த இந்த போராட்டத்தை அரபு வசந்தம் என இணைய வரலாறு குறித்து வைத்துள்ளது. மற்றொரு போராட்டம், அமெரிக்காவில் செல்வ பாகுபாட்டை எதிர்த்து வெடித்த வால்ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம். பெரும்பாலான செல்வம் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே குவிந்து கிடக்கும் நிதி ஏற்றத்தாழ்வை எதிர்த்து, அதன் மையான வால்ஸ்டீரிட்டை மையமாக கொண்டு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆக்குபை வால்ஸ்டீரிட் எனும் பெயரிலான இந்த போராட்டத்திற்கு இதே பெயரிலான டிவிட்டர் ஹாஷ்டேகுகளே கைகொடுத்தன.
இதோ இப்போது இணைய வரலாற்றில் மூன்றாவது பெரிய மக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டை காப்போம் போராட்டம் வெடித்திருக்கிறது. முந்தைய போராட்டம் போலவே இதற்கும், ஹாஷ்டேக் ஆயுதெமே மையமாக இருக்கிறது. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான பதிவுகளும், குறும்பதிவுகளும் அலையென வெளியானாலும், அவை ஹாஷ்டேக் அடையாளத்தால் அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டன.
சேவ் ஜல்லிக்கட்டு (#SaveOurCultureJALLIKATTU ), ஜஸ்டீஸ் பார் ஜல்லிக்கட்டு(#JusticeforJallikattu ), ஜல்லிக்கட்டு (#Jallikattu ), #JallikattuProtest உள்ளிட்ட ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு, தொடர்புடைய குறும்பதிவுகள் அனைத்தும் இவற்றின் துணையோடு பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேஸ்புக்கிலும் இதே போன்ற ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டன.
குமுறல், ஆவேசத்தின் வெளிப்பாடு, நியாத்தின் வாதம், தமழரின் பெருமை என பலவிதமாக வெளிப்பட்ட டிவிட்டர் குறும்பதிவுகள் ஒரு நதியாக பெருக்கெடுத்தன. இந்த குறும்பதிவுகள் ஜல்லிக்கட்டு தொடர்பான மைய விவாதத்தை உணர்த்தியதோடு, ஏன் போரட்டம், எதற்காக போராட்டம் எனும் புரிதலையும் ஏற்படுத்துவாக அமைந்தன. இந்த குறும்பதிவுகளில் வெளிப்பட்ட வேகமும், உணர்வும் மற்றவர்களை கருத்து தெரிவிக்க ஊக்குவித்தோடு, பலரை களமிறங்கி போராடவும் தூண்டுகோளாக அமைந்தன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான், ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன் என உணர்த்தும் லோகோக்களையும் பலரும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் இடம்பெறச்செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குறும்பதிவுகளொடு, இந்த நிலையை ஏற்படுத்திய பிட்டா அமைப்புக்கு எதிரான குறும்பதிவுகளும் அதிக அளவில் வெளியாகி கொண்டிருக்கின்றன. பல குறும்பதிவுகள் வெற்று கோஷமாக அமைந்திருந்தாலும், எண்ணற்ற குறும்பதிவுகள் பிரச்சனையின் பல பரிமாணங்களை புரிய வைத்துக்கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம் என்பதை வலியுறுத்தும் அதே நேரத்தில், காளைகள் இதில் துண்புறுத்தப்படுவதில்லை எனும் தகவலும், மாடுகள் குடும்பத்தின் அங்கமாக இருக்கும் கிராமிய யதார்த்தமும் வெளிப்படுகிறது. இவைத்தவிர, நமது மண்ணின் பாரம்பரிய காளை இனங்கள் அழியாமல் காக்கப்படுவதன் அவசியத்தையும், ஜல்லிக்கட்டு இல்லாமல் இது சாத்தியமாகாது எனும் கருத்துக்களும், புதிய புரிதலை தர வல்லவை.
ஜல்லிக்கட்டு தொடர்பான குறும்பதிவுகளுக்காகவே பிரத்யேக டிவிட்டர் கணக்குகளும் உருவாகி இருக்கின்றன: @Jallikatu , @AgentSaffron,
இவற்றின் நடுவே கேலியும் கிண்டலும் கலந்த மீமிக்களும் இல்லாமல் இல்லை. ஆனால் குறும்பதிவுகள் போராட்டத்தின் நியாயத்தையும், தேவையையும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன. பேஸ்புக்கிலும் இதே நிலை தான். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு அளிப்பதற்கான உதவியும் பதிவுகளாக, குறும்பதிவுகளாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இவற்றோடு உணர்வு மிக்க இளைஞர்களின் தன்னெழுச்சியும் சேர்ந்து கொண்டு உலகமே இன்று இந்த போராட்டத்தை உன்னிபாக கவனிக்க வைத்திருக்கிறது.
சமூக ஊடகங்கள் வீண் அக்கப்போர் மற்றும் வதந்திகளுக்கான இடமாக கருதப்பட்டாலும், அவை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் களமாக இருப்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015 சென்னை பெருமழையின் போதும் இது வெளிப்பட்டது நினைவிருக்கலாம். சென்னை உள்ளிட்ட நகரங்களை வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மூழ்கடித்த போது மீட்பு பணியிலும் நிவாரண உதவிகள் வழங்குவதிலும் இணையவாசிகள் பெரும் பங்காற்றினர். தகவல்களை பகிர்வதில் துவங்கி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பதில் சென்னைரெயின்ஸ், சென்னை மைக்ரோ, சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவின.
இம்முறை ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை காப்பதற்காக இணையத்தின் ஆற்றலை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

* அரபு வசந்தம் பற்றிய முந்திய பதிவு :

* சென்னை மழை மீட்பு தொடர்பான பதிவு:

பின்ட்ரெஸ்ட்;ஒரு அறிமுகம்.

பின்ட்ரெஸ்ட் செய்திகளில் அடிபடும் வேகத்தை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது.இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட்ரெஸ்ட் பற்றி தான் பேச்சாக இருக்கிறது.

பின்ட்ரெஸ்ட்டை பயன்படுத்தும் விதம்,பின்ட்ரெஸ்ட்டின் செல்வாக்கு,பின்ட்ரெஸ்ட்டின் மார்க்கெட்டிங் தாக்கம் என்று பின்ட்ரெஸ்ட் பற்றி பலவிதமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஒரு விஷயம் உறுதி பின்ட்ரெஸ்ட் இண்டெர்நெட்டின் புதிய சென்சேஷனாக உருவாகியிருக்கிறது.

பேஸ்புக்.டிவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் வருகை தரும் சமூக வலைப்பின்னல் தளமாக வளர்ச்சி பெற்றுள்ள பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார்.

சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்றனர்.குறிப்பாக பெண்கள் அலை அலையாக உறுப்பினராகி வருகின்றனர்.சொல்லப்போனால் பின்ட்ரெஸ்ட் மகளிர் ராஜ்யம் தான்.அதில் பெண்களே அதிக அலவில் உறுப்பினராக இருக்கின்றனர்.அந்த வகையில் அதனை பெண்களின் பேஸ்புக் என்றும் சொல்லலாம்.

பின்ட்ரெஸ்ட்டை காபி அடித்து உருவாக்கப்பட்ட தளங்களும் அதிகரித்திருப்பதோடு போட்டி தளங்களும் உதயமாக துவங்கியிருக்கின்றன.

பின்ட்ரெஸ்ட்ட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது?பின்ட்ரெஸ்ட்டின் மகத்துவத்தை கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.அதற்கு முன்னர் இணையத்தின் சமீபத்திய போக்கை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை பகிர்ந்து கொள்வதற்கான இணையதளங்கள் எல்லாம் இருக்கின்றன தெரியுமா? அதே போல வாங்கிய பொருட்களையும் குறித்து வைக்கவும் இணையதளங்கள் இருக்கின்றன!

இவ்வாறு செய்வதன் நோக்கமும் பயனும் என்னவென்றால் வாங்க நினைக்கும் பொருளின் தரம் மற்றும் சிறப்பம்சங்கள் அல்லது குறைகள் போன்றவற்றை அவற்றை ஏற்கனவே வாங்கி பயன்படுத்திய நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.அதே போல மற்றவர்கள் வாங்கிய பொருட்களின் குறை நிறைகளையும் அவர்களின் பகிர்வு மூலமே தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகை இணையதளங்கள் தான் இப்போது இணையத்தின் போக்காக இருக்கின்றன.இவை சுய வெளிப்பாடு தளங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.அதாவது இணையவாசிகள் தங்கள் ரசனைகளையும் விருப்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொள்ள வழி செய்யும் தளங்கள்.

வெளிப்படுத்தி கொள்வது என்றால் டிவிட்டர் குறும்பதிவுகள் போலவோ பேஸ்புக் அப்டேட்கள் போலவோ அல்ல!பேஸ்புக்கும்,டிவிட்டரும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் அந்த கால சினிமா போல.இந்த தளங்கள் எல்லாம் மணிரத்னம் படம் போல வசனங்களுக்கு அதிக வேலை இல்லை.சொல்லப்போனால் எதையும் விவரிக்கவே வேண்டாம்.வார்த்தைகளே இல்லாமல் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.பின்ட்ரெஸ்ட் இதை தான் செய்கிறது.

அதெப்படி எதையுமே சொல்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும் என வியப்பு ஏற்படலாம்.இதன் முழு ஆச்சர்யத்தை உணர வேண்டும் என்றால் பின்ட்ரெஸ்ட் இணையதளத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

பின்ட்ரெஸ்ட் தளம் இணைய குறிப்பு பலகை என்று அழைத்து கொள்கிறது.அதாவது இனையத்தில் குத்தி வைத்து குறித்து வைக்கும் பலகை.

பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா? அதில் அறிவிப்புகளையும் புகைப்படங்களையும் இதர செய்திகளையும் பின்னால் குத்தி வைப்பார்கள் அல்லவா! அதே போல இந்த தளத்தில் இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் பார்க்கும் சங்கதிளை குத்தி வைத்து கொள்ளலாம்.இதற்காக என்று அறிவிப்பு பலகைகளை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம்.எத்தனை பலகைகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.

இணையத்தில் பார்ப்பவை என்றால் அழகான புகைப்படங்களில் துவங்கி ஆடை வடிவமைப்பு,பூவேலைப்பாடு,சமையல் குறிப்பு,இணையதளம்,கேக் மாதிரிகள்,புத்தகங்கள் என்று என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.வீடியோ,செயலிகள் போன்றவற்றையும் பகிர்ந்து சாரி குத்தி கொள்ளலாம்.

வெளியே அலைந்து திரிவதைவிட இப்போது இனையத்தில் அலைவது தான் அதிகமாகிவிட்டது.தின்மும் பல தளங்களுக்கு செல்கிறோம்.தேடியந்திரம் அல்லது பேஸ்புக் நண்பர்கள் காட்டிய வழியில் பல தளங்களை பார்க்கிறோம்.

இவற்றில் சிலவற்றை குறித்து வைக்க நினைப்போம்.ஆனால் அதன் பிறகு மறந்து விடுவோம்.தளங்கள் என்றால் புக்மார்க் செய்து கொள்ளலாம்.ஆனால் அழகான ஆடையின் வடிவமைப்பையோ அல்லது புதிய மேஜை விரிப்பு அலங்காரத்தையோ பார்த்து ரசித்தால் எப்படி அதனை சேமித்து வைப்பது.புகைப்படம் எனில் அப்படியே டெஸ்க்டாப்பில் சேமித்து கொள்ளலாம்.ஆனால் அவற்றை வகைப்படுத்துவதோ பின்னர் எடுத்து பார்ப்பதோ கொஞ்சம் கஷ்டம் தான்.

பின்ட்ரெஸ்ட்டில் இந்த தொல்லை எல்லாம் கிடையாது.இனையதளத்தில் ஒரு விஷயம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறதா,அதை உடனே பின் அதாவது குத்தி கொண்டு விடலாம்.குத்துவது என்றால் அந்த படம் அழகாக நமக்கான பலகையில் சேமிக்கப்பட்டுவிடும்.பின்னர் எளிதாக அடையாளம் காணும் வகையில் இவற்றுக்கு பொருத்தமான தலைப்பு கொடுத்து வகைப்படுத்தி வைக்கலாம்.

உதாரணத்திற்கு ஆடைகள் என்னும் தலைப்பில் ஒரு பலகையை உருவாக்கி உங்களுக்கு பிடித்தமான ஆடை வடிவைம்ப்பு படங்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்கலாம்.கல்யாண நகைகள் என்னும் தலைப்பில் அழகிய வேலைப்பாடு கொண்ட நகைகளின் புகைப்படங்களை சேமித்து வைக்கலாம்.

இப்படி சேமிப்பது அல்லது குத்துவது மிகவும் சுலபம்.பின்ரெஸ்ட்டில் உருப்பினராகி அதில் உள்ள பிரவுசர் நீட்டிப்பு பட்டையை நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தில் கிளிக் செய்தால் போதும் பின் செய்யவா தலைவா என கேட்கும் பட்டன் எட்டிப்பார்க்கும் .அதை கிள் செய்தால் போதும். அந்த காட்சி சேமிக்கப்பட்டுவிடும்.

பின்னர் தேவைப்படும் போது அந்த படத்தை பார்த்து எந்த தளத்தில் அதனை கண்டோம் என எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த சேமிப்பை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இதே போல மற்ற உறுப்பிர்கள் சேமித்து வைத்துள்ளவற்றை பார்வையிடலாம்.அதில் உள்ள விஷயம் பிடித்திருக்கிறதா அதனை லைக் செய்வதோடு நமது பலகையிலும் சேமித்து வைக்கலாம்.ரீடிவீட் போல இது ரீபின்.

டிவிட்டர் போல எந்த உறுப்பினரையும் பின் தொடரலாம்.அவர்கள் சேமிப்பதை உடனுக்குடம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இன்னும் ஏகப்பட்ட சமூக வலைப்பின்னல் பாணி வசதிகள் உள்ளன.குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் நுழைந்தால் அதன் முகப்பு பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களின் வகைகளையும் அவற்றின் பர்ந்துவிரிந்த தன்மையையும் பார்த்து சொக்கிப்போகலாம்ம்.கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கும்.அந்த அளவுக்கு பகிர்வுகள் பலவகையில் இருக்கும்.

இந்த அறிவிப்பு பலகை வசதியை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.பேஷன் பிரியர்கள் தங்களுக்கு ப்டித்த வடிவைப்புகளுக்கான டைரியாக பயன்படுத்தலாம்.புதிய பேஷன் போக்குகளை தெரிந்து கொள்ளவும் இது கைகொடுக்கும்.

திருமணம் போன்ற வைபவங்களுக்கு ஆடை வாங்கும் போது நாம் பார்த்த டிசைன்களை இங்கே குறிப்பிட்டும் உறவினர்கள் நண்பர்களை அழைத்து ஆலோசனை கேட்கலாம்.அவர்கள் பரிந்துரைக்க விரும்புவதை பின் செய்வதன் மூலமோ சுட்டிக்காட்டலாம்.கருத்துக்கள் வழியே யோசனை கூறலாம்.

வீட்டிற்கான உள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தால் நாம் தேர்வு செய்த மாதிரிகளை இங்கே பகிர்ந்து கொண்டு அவை பற்றிய கருத்துக்களை கேட்கலாம்.

மனதுக்கு ஊக்கம் அளிக்க கூடிய விஷயங்களை ,சமையல் குறிப்புகளை ,வீடியோ காட்சிகளை எவற்றை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.

அமெரிக்க பெண்மணி இந்த தளத்தில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மூலமாக தனது கணவர் தனது ரசனை பற்றி அதிகம் தெரிந்து கொண்டு அவர் தன் பங்கிற்கு சிலவற்றை பரிந்துரை செய்து வியப்பளித்துள்ளார்.இதனால் நெகிழ்ந்து போன அந்த பெண்மணி என் கணவருக்கு பிடித்தவை என்னும் தலைப்பில் ஒரு பலகையை உருவாக்கி அவருக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இப்படி பல அற்புதங்களும் சாத்தியமாகலாம்.

பேஸ்புக்கும் டிவிட்டரும் போரடித்திருந்தால் பின்ட்ரெஸ்ட்டை பயன்படுத்தி பாருங்கள்.

இணையதள முகவரி;http://pinterest.com/
——-

விகடன் டாட் காமில் வெளியானது.

காதல் தோல்விக்கான காரணங்களை அறிய ஒரு இணையதளம்.

வாட் வென்ட் ராங் மிகவும் சுவாரஸ்யமான இணையதளம்.காதலர்களுக்கு மிகவும் பயனுள்ள இணையதளமும் கூட!காதலர்கள் என்பதைவிட காதலில் தோல்வி கண்டவர்களுக்கு என்று சொல்லலாம்!(அடுத்த)காதலில் வெற்றி பெற விரும்புகிவர்களுக்கான தளம் என்றும் வைத்து கொள்ளலாம்.

காரணம் இந்த தளம் காதல் தோல்விக்கான காரணங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.அதுவும் காதலிக்க மறுத்த விலகி சென்றவர்களிடம் இருந்தே அதற்கான காரண‌த்தை தெரிந்து கொள்ள வைக்கிறது.

நம்மூர் காதலும் அயல்நாட்டு டேட்டிங்கும் ஒன்றா என்று தெரியவில்லை,ஆனால் இங்கே காதல் என்னும் போது டேட்டிங்கை மனதில் வைத்து கொண்டே படிக்கவும்.

காதல் எலோருக்குமே இனிமையானதாகவோ வெற்றிகரமாகவோ அமைவதில்லை.சிலர் கஜினி முகமது போல படையெடுக்க வேண்டியிருக்கிறது.

எது எப்படியோ காதலில் நிராகரிக்கப்படும் போது வேதனையாகவும் இருக்கும் ,குழப்பமாகவும் இருக்கும்.எங்கே தவறு நடந்தது என்னும் கேள்வி அப்போது காதலித்தவர் மனதில் எழலாம் தானே.எதனால்,எந்த தவறால் என்னை பிடிக்காமல் போயிற்று என்ற விவர‌த்தை தெரிந்து கொள்ள மனம் துடியாக துடிக்கும் தானே.

அதை தான் வாட் வென்ட் ராங் இணையதளம் அழகாக‌ செய்கிறது.

காதலில் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த தளத்தின் வாயிலாக தங்களை விட்டு விலகி சென்றவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்கலாம்.இமெயில் வாயிலாகவோ அல்லது எஸ் எம் எஸ் வாயிலாகவோ இந்த கேள்வியை அனுப்பி வைக்கலாம்.

எப்படி கேட்கலாம்,எதை கேட்கலாம் என்ற சங்கடங்கள் ஏற்படாத வகியில் காதலர்கள் கேள்வி கேட்பதற்கு என்றே விண்ணப்ப படிவம் போன்ற டெம்பிலெட்கள் தயாராக உள்ளன்.நான் அதிகம் பேசியதால் பிடிக்காமல் போனதா?என்ப‌து போல அமைந்துள்ள அந்த டெம்பிலெட்களில் பொருத்தமானதை தேர்வு செய்து அனுப்பி வைத்தால் அதற்கான பதிலை பெற முடியும்.

காதலில் கழற்றி விட்டவர்(ஆணோ பெண்ணோ)இந்த கேள்விக்கான பதிலை பகிர்ந்து கொள்ளலாம்.பதில் அளிக்கும் போது பிரிவுக்கான உண்மையான காரணத்தை கொஞ்சம் நாகரீகமாக சொல்ல வேண்டும்.அதாவது காரணத்தை சொல்லி விட்டு கூடவே அவர்களிடம் உள்ள நல்ல குணாதிசய‌த்தையும் குறிப்பிடலாம்.

காதல் தோல்விக்கான காரணத்தை தெரிந்து கொள்வதால் இரண்டு விதமான பலன்கள் ஏற்படும்.ஒன்று காதல் கசந்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.மற்றொன்று அடுத்த முறை காதலிக்கும் போது இந்த தவறை செய்யாமல் இருக்கலாம்.

ஏன் கழற்றி விடப்பட்டோம் என்று தெரியமாலே குழம்பி தவிப்பதை விட அதற்கான காரணத்தை தெளிவு படுத்தி கொள்ள முடிவது நல்லடு தானே.அதிலும் பல நேரங்களில் உறவு முறிவுக்கான காரணங்கள் ஒருவரின் தவறாக இல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் மாறுப்பட்ட எதிர்பார்ப்பினாலும் இருக்கலாம் தானே.அதனை தெரிந்து கொள்வதன் மூல தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விடுபடலாம்.

காதலில் தோல்வி உற்றவர்களுக்கு கை கொடுக்கும் இந்த தளத்தை உருவாக்கியவர் ஒரு ஆணாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது தவறு.இந்த தள‌த்தை உருவாக்கிய்வர் ஒரு பெண்மணி

ஆச்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்த அட்ரே மெலின்க் என்பவர் தான் இந்த தளத்தை அமைத்துள்ளார்.

இதற்கு முன்பாக அவர் அமெரிக்காவின் நியூயார்கில் கொஞ்ச காலம் வசித்தார்.அப்போது அங்கு ஏற்பட்ட காதல் அனுபவமே இந்த தளம் உருவாக்க காரணமாக‌ அமைந்தது.

அது அவருக்கு முதல் காதல் அனுபவம்.அந்த காதலன் அவரை குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி விட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு ஒரு முத்ததை கொடுத்து விட்டு காணாமல் போய்விட்டாராம்.இந்த செய‌லால் மெலின்க் குழம்பி போனார்.தன் மீது ஈடுபாடு இல்லாவிட்டால் அந்த வாலிபர் ஏன் தன்னை அழைக்க வேண்டும்?அப்படி அழைத்த பிறகு ஏன் விலகி செல்ல வேண்டும் என்றெல்லாம் யோசித்து குழம்பியிருக்கிறார்.இந்த கேள்வியை அவரிடமே கேட்டுவிடலாம் என்றால் விட்டு போனவனை துரத்டி செல்வதாக ஆகாத என்ற எண்னமும் அவரை வாட்டியது.

அப்போது தான் இது போன்ற குழப்பமான தருணங்களில் சங்கடம் இல்லாத வகையில் காதல் கசந்த காரணத்தை தெரிந்து கொள்ள இணையம் சார்ந்த வழியை உருவாக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.

இதன் பயனாக பிறந்தது தான் இந்த இணையதளம்.

இணையதள முகவரி;http://wotwentwrong.com/

0—————–

(என் காதலில் என்ன தப்பு என்னும் பெயரில் யூத்புல் விகடனில் வெளியான பதிவு இது.வெளியிட்ட விகடனுக்கு நன்றி.)

இந்த தளம் ஆனந்ததின் பேஸ்புக்.

மகிழ்ச்சி கண்ணாடி வழியே மட்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொன்டவரா நீங்கள! அப்படியென்றால் ‘ஹேப்பிய.ஸ்ட் ‘இணையதளம் உங்களை உற்சாகம் கொள்ள வைக்கும்.

காரணம், மகிழ்ச்சியையும் அதற்கான காரணங்களையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது இந்த தளம்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்பதற்கே ஏற்ப எல்லோருக்கும் எத்தனையோ மனக்குறைகள் இருக்கும்.உள்ள குமுறல்கள் இருக்கும்.அதே நேரத்தில் எல்லோருக்குமே ஆனந்ததின் எல்லையாக விளங்கும் தருணங்களும் உண்டு.யோசித்து பார்த்தால் நாம் பூரித்து போகவும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் அநேக விஷயங்கள் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்வதற்காக என்றே ஹேப்பிய.ஸ்ட் தளம் துக்கப்பட்டுள்ளது.ஒருவிதத்தில் இதனை ஆனந்தமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான பேஸ்புக் என்று சொல்லலாம்.

வாழ்க்கை குறித்து எனக்கு எந்த புகார்களும் இல்லை என்று நினைப்பவர்களும்,எல்லாவற்றையும் மீறி மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் சங்கதிகளும் இருப்பதாக நம்புகிறவர்கள் அந்த விஷயங்களை இதில் வெளியிடலாம்.

உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயங்கள் என்ன? என்று யாரோ கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பது போல மகிழ வைத்தவை குறித்தெல்லாம் இதில் ஒருவருடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

நீண்டதூர பஸ்பயணத்தின் போது கேட்டு அகமகிழ்ந்து போன இளையராஜாவின் பாட்டு,மெய் சிலிர்க்கவைத்த இயற்கை காட்சி ,நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்து உதவிய நண்பன்,புத்துணர்ச்சி தந்த மழலையின் புன்னகை என சந்தோஷம் தந்த எந்த அனுபவத்தையும் இங்கு வெளியிடலாம்.

இவ்வாறு அனந்த அனுபவங்களை பகிர ஏழு விதமான அம்சங்களை இந்த தளம் முன் வைக்கிறது.ஆரொக்கியமான உணவு,நன்றி உணர்ச்சி,சுறுசுறுப்பு,தியானம்,ஞானம் உள்ளிட்ட ஏழு அம்சங்களே மகிழ்ச்சிக்கான மூலக்காரணமாக கருதும் இந்த தளம் இவை ஒவ்வொன்று தொடர்பாகவும் அனுபவங்களை மற்றவர்களோடு பகிரலாம்.

உதாரணமாக வாழ்க்கையில் எதெற்கெல்லாம்,அல்லது யாருக்கெல்லாம் நன்றிவுடையவராக இருக்கின்றிர்களோ அதனை குறிப்பிட்டு அதற்கான காரணத்தையும் விளக்கலாம்.

இப்படி பகிர்ந்து கொண்ட பின் நண்பர்களுக்கு இமெயில் மூலம் இது குறித்து தகவல் அனுப்பி வைக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலமும் இந்த தகவலை பகிரலாம்.

நணபர்கள் இதனை படித்த பின்னர் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.அவர்களும் தங்களது மகிழ்ச்சி அனுபவங்களை குறிப்பிடலாம்.அந்த வகையில் மக்ழ்ச்சி சார்ந்த உரையாடலாகவும் இது அமையும்.

இதன் மூலமே புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ளலாம்.தொடர்ந்து உரையாடலாம்.இப்படியாக எல்லாமே மகிழ்ச்சி சார்ந்ததாக அமையும்.

மகிழ்ச்சியானவற்றை பகிர்ந்து கொள்ளவும் மற்றவர்களின் மகிழ்ச்சியான தருனங்களை தெரிந்து கொள்ளவும் வழி செய்யும் இந்த சேவை மூலமாக பொதுவில் நம்பிக்கையான புத்துணர்ச்சி மிக்க மனநிலையை பெறலாம்.

எல்லோரும் நல்ல விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தால் நம்மையறியாமல் ஒரு நம்பிகை உனர்வு ஏற்படும் அல்லாவா,அதை தான் இந்த மகிழ்ச்சி வலைப்பின்னல் ஏற்படுத்த முயல்கிறது.

சண்டையும் சச்சரவும் நிறைந்த உலகில் இப்படி மகிழ்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை நல்வரவு தானே.

மகிழ்ச்சியில் மிதக்க ,இணையதள முகவரி;http://happie.st/