Tag Archives: help

சென்னை மழை: நேசக்கரம் நீட்டிய சமூக ஊடகங்கள்

ch-2
கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.தமிழகம் முழுவதும் பாதிப்பு தீவிரம் என்றாலும் தலைநகர் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இப்படி மழை வெள்ளம் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மழையின் கோரத்தாண்டவம் நம்முடைய உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையையும், தயாரிப்பு இல்லாத நிலையையும் அம்பலமாக்கியது என்றால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சமூக ஊடகங்களின் உதவியோடு நெட்டிசன்கள் களத்தில் இறங்கி கைகொடுத்தவிதம் மனிதாபிமானத்தின் எழுச்சியை உணர்த்தி நெகிழ வைத்தது.
மழை நீர் உள்ளே புகுந்த குடியிருப்புகளில் உதவிக்கு வந்தது படகுகள் மட்டும் அல்ல; சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகளும் தான். இடையே மழை உச்சத்தை தொட்ட போது இணைய இணைப்பு மற்றும் செல்போன் இணைப்புகள் சிக்கலுக்கு இலக்காகி தகவல் தொடர்பே சோதனைக்கு உள்ளானாலும், மற்ற நேரங்களில் டிவிட்டர் குறும்பதிவுகளும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளும் பெருமளவு உதவியாக இருந்தன.
இயற்கை சீற்றங்களுக்கு நடுவே மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவுவதில் சமூக ஊடகங்கள் உடனுக்குடன் உதவிக்கு வருவதே இணைய யுகத்தின் வழக்கமாக இருக்கிறது. பிலிப்பைன்சில் ஹயான் சூறாவளியின் போதும், நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்திலும் சமூக ஊடகங்கள் பயன்பட்ட விதம் பற்றி நெகிழ்ச்சியான கதைகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவிலேயே கூட கடந்த ஆண்டு காஷ்மீரில் வெள்ளம் சூழந்த போது சமூக ஊடககங்கள் பேருதவியாக அமைந்தன.

இப்போது சென்னை நெட்டிசன்களும்,மழை வெள்ளத்துக்கு நடுவே இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நேசக்கரம் நீட்டி இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.
புயல் மழையின் போதும், பேரிடர் காலங்களின் போதும் முதலில் தேவைப்படுவது தகவல்கள் தான்- பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி விவரங்கள் தெரிய வேண்டும். சிக்கியத்தவிப்பவர்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். உதவி கோருபவர்களின் நிலையும் மீட்பு குழுவுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.இன்னும் பல முக்கிய தகவல்கள் பகிரப்பட வேண்டும்.
CT6rx0SVAAAAIOk
இவற்றுக்கு அரசு அமைப்புகளை மட்டும் சார்ந்திருக்க முடியாது.இங்கு தான் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமாகிறது. சென்னையில் பல நெட்டிசன்கள் இப்படி தன்னார்வலர்களாக மாறினர்.
நெட்டிசன்களின் பங்களிப்பு இரண்டு கட்டங்களாக அமைந்திருந்ததை பார்க்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்க்க ஆரம்பித்த போது பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த பாதிப்புக்கு நடுவே #சென்னைரைன்ஸ் ஹாஷ்டேக் எட்டிப்பார்த்தது. டிவிட்டரில் மழையின் நிலை பற்றி உணர்ந்த இந்த ஹாஷ்டேக் அடையாளத்துடன் வெளியான குறும்பதிவுகள் எந்த எந்த பகுதிகளில் மழையின் தீவிரம் எப்படி என உணர்த்தின. நகரின் எந்த இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகம், எந்த சாலைகள் வழியே செல்லலாம் என்பது போன்ற தகவல்கள் பகிரப்பட்டு வழிகாட்டியாக அமைந்தன.தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை சிக்கியவர்களை மீட்பதற்கான கோரிக்கைகளும் வெளியாயின. வானிலை பதிவர்களும் சுற்றிச்சுழன்று செயல்பட்டு மழை பற்றிய கணிப்புகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பேஸ்புக்கில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதற்கான பக்கங்களும் அமைக்கப்பட்டு உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
வாட்ஸ் அப்பிலும் உதவிக்கான கோரிக்கைகள் உலா வந்தன. இடையே வதந்திகளும் உலா வந்தன.
டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னை மீண்டும் ஒரு பெருமழையை எதிர்கொண்டு நிலைகுலைந்த போது சமூக ஊடக பங்களிப்பு விஸ்வரூபம் எடுத்தது. முழங்கால் அளவு தண்ணீருக்கும், தாழ்வான இடங்களில் இடுப்பளவு தண்ணீருக்கும் பழகியிருந்த சென்னை நகரம் பல இடங்களில் கழுத்தளவு நீர் உள்ளே புகந்த நிலை கண்டு திடுக்கிட்டது.முடிச்சூர்,வேளச்சேரி ,கோட்டுர்புரம் உள்ளிட்ட இடங்களில் கீழ் தளம் முழுவதையும் வெள்ளம் சூழந்து கொண்டது.

சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்த நிலையில் தன்னார்வலர்களாக களத்தில் இறங்குவதற்கு முன்னர் நெட்டிசன்கள் சமூக ஊடகங்கள் வழியே நேசக்கரம் நீட்டினர்.
#சென்னைபிளட்ஸ், #சென்னைரைன்ஸ், #சென்னை ரெஸ்கியூ, # சென்னை ரைன்ஸ் ஹெல்ப் உள்ளிட்ட ஹாஷ்டேகுகளுடன் பகிரப்பட்ட குறும்பதிவுகள் உதவி,உணவு,உரைவிடம் என எல்லாவற்றையும் அளித்தன. ராணுவம் மற்றும் தேசிய பேரிடன் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்,குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் எந்த குடியிருப்புகளில் எல்லாம் உதவிக்கு காத்திருக்கின்றனர் என்ற தகவலை குறும்பதிவுகளாக வெளியிட்டு வழிகாட்டினர். ஈக்காட்டுத்தாங்களில் குறிப்பிட்ட தெருவில் இரண்டாவது தளத்தில் வயதான தம்பதி மீட்கப்பட காத்திருக்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் ஆபத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட உதவின.

இதனிடையே உதவிக்காக மற்றும் தகவல்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்களையும் திரட்டி பகிர்ந்து கொண்டனர். உதவி தேவைப்படுபவர்கள் மற்றும் உதவ தயாராக இருப்பவர்களையும் இணைக்கும் தகவல் பக்கம் கூகுள் டாக்குமண்ட் மூலம் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. சென்னையில் வெள்ள பாதிப்பின் நிலையை உணர்த்தக்கூடிய வரைபட பக்கமும் (http://osm-in.github.io/flood-map/chennai.html#11/13.0000/80.2000) உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பங்களிப்பு கோரப்பட்டது. https://twitter.com/AidOffered பக்கம் உதவி மற்றும் நிவாரணம் பற்றிய சரி பார்க்கப்பட்ட தகவல்களை வழங்கியது. http://klipher.com/savechennai/ பக்கமும் இதே போன்ற தகவல்களை அளித்தது.மருத்துவ உதவி பற்றிய தகவல்களும் பகிரப்பட்டன.
இதனிடையே பல நல்ல இதயங்கள் ,வெள்ளத்தில் வீடுகளையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கு தங்கள் வீடுகளின் கதவுகளை திறந்துவிடுவதாகவும் அறிவித்தனர்.

பல நெட்டிசன்கள் களத்திலும் இறங்கி உதவி செய்தனர். நடிகர் சித்தார்த் போன்ற பிரபலங்களும் நிவாரணப்பணிகளில் தீவிரம் காட்ட, உதவிகள் பற்றிய தகவல்கள் # சென்னைமைக்ரோ எனும் ஹாஷ்டேக் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டன. என்னிடம் பால் பாக்கெட்கள் இருக்கின்றன, தருகிறேன்,.250 பேருக்கு உணவுத்தரத்தயார், என்பது போன்ற தகவல்களும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் குவிந்தன.
தலைநகர் சென்னைக்கு நிகராக பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்திலும் கவனம் தேவை என குரல் கொடுக்கப்பட்டு தன்னார்வலர்கள் அங்கும் விரைந்தனர். நிவாரணப்பொருட்களும் ,உதவியும் எங்கு அதிகம் தேவைப்படுகிறது என்ற விவரங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த உதவிகள் தொடர்கின்றன.
சென்னை நகரம் பெரும் நெருக்கடிக்கு இலக்கான நிலையில், மனிதநேயத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இவை விளங்குவதோடு சோதனையான நிலையில் சமூக ஊடகம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கான நெகிழ்ச்சியான வெளிப்பாடாகவும் அமைகிறது!.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

செயலி புதிது; மெசேஜிங் மாயம்

புதிதாக ஒரு மெசேஜிங் செயலி அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் டிரைப்.பிஎம் எனும் அந்த செயலியை, இன்னொரு மெசேஜிங் செயலி என அலட்சியம் செய்து ஒதுக்கிவிட முடியாமல் புதுமையான அம்சங்களுடன் வந்திருப்பது தான் கவனத்தை ஈர்க்கிறது. வாக்கி-டாக்கியின் மறுவடிவம் எனும் வர்ணனை செய்யப்படும் இந்த செயலியை மிக எளிதாக,ஒற்றை விரலில் இயக்கலாமாம். இதில் மெசேஜ் அனுப்ப கீபோர்டில் கைவைக்கும் தேவையும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.எப்படி என்றால், செயலி மூலம் தொடர்பு கொள்ள வேண்டியவரின் புகைப்பட பகுதியை கிளிக் செய்து அப்படியே அழுத்திக்கொண்டிருந்தால் போதும், நாம் சொல்ல வேண்டிய செய்தியை பதிவு செய்து விடலாம். அதன் பிறகு அனுப்பு பட்டனை அழுத்தினால் போதும் அந்த செய்தி வீடியோ வடிவில் சென்றடையும். செய்தியை அனுப்பும் முன் நம்முடைய தோற்றம் எப்படி இருக்கிறது என முன்னோட்டம் பார்ப்பதற்கான கண்ணாடி வசதியும் செயலியில் இருக்கிறது. வீடியோ செய்தியை பெறுபவர் அதிலேயே கிளிக் செய்து பதில் செய்தியையும் அனுப்பலாம்.
தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் குழுவில் உள்ள அனைவருக்கும் செய்தி அனுப்ப முடியும் என்பதால் இந்த மெசேஜிங் செயலியை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.
அனுப்பும் செய்திகளை சேமித்து வைக்கும் வசதியும் இருக்கிறது. உலகின் எந்த பகுதியிலும் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் அறிமுகமாகி இருக்கிறது.
தரவிறக்கம் செய்ய:http://tribe.pm/

——–

தளம் புதிது; யூடியூப் பாட்டு

யூடியூப் வீடியோக்களை பலவிதங்களில் பார்க்கலாம்; பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலருக்கு யூடியூப் வீடியோ மூலம் பாடல்களை கேட்பது பிடித்தமானதாகவும் இருக்கிறது. இத்தகைய இசைப்பிரியர்களில் பலர் யூடியூப் வீடியோக்களை எம்பி3 கோப்பாக தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். இந்த தேவையை எளிதாக பூர்த்தி செய்யும் வடிவில் அறிமுகமாகி இருக்கிறது யூடி.காம் தளம். இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் யூடியூப் வீடியோ முகவரியை சமர்பித்தால் போதும் அதன் எம்பி3 வடிவத்தை தரவிறக்கம் செய்து தருகிறது. இந்த தேடல் கட்டத்திலேயே குறிச்சொல்லை டைப் செய்து யூடியூப்பில் தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. பாடல் வீடியோ என்றில்லை எந்த வீடியோவையும் எம்பி3 கோப்பாக தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம். எம்பி4 வடிவத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://yout.com/

——-

கணித கண்காணிப்பு

மைக்ரோசாப்ட் வேர்ட் மென்பொருளை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. ஆனால் வேர்டில் உள்ள பல அம்சங்களை நீங்கள் அறியாமலே இருக்ககலாம். உதாரணமாக வேர்டில் டைப் செய்யும் போது கணித சூத்திரங்களை சரி பார்க்க அதில் உள்ள ஆட்டோ கரெக்ட் அம்சம் கைகொடுக்கிறது தெரியுமா?
ஆட்டோ கரெக்ட் அம்சம், எழுத்து பிழை மற்றும் இலக்கண பிழைகள் உள்ளிட்டவற்றை சரி பார்க்க உதவுகிறது. இந்த அம்சத்திலேயே மேத் ஆட்டோ கரெக்ட் எனும் வாய்ப்பும் உள்ளது. பைல் மெனு மூலம் ஆட்டோ கரெக்ட் பகுதிக்கு சென்று இந்த வசதியை இயக்கிவிட்டால் அதன் பிறகு கணித சமன்பாடுகளுக்கான குறியீடுகளை மிக எளிதாக பயன்படுத்தலாம். எண்ணற்ற குறியீடுகளுக்கான குறுக்கு வழி விசை இதில் உள்ளது. குறியீடுகளை எளிதாக இடைச்சொருக இந்த வசதி கைகொடுக்கும். இந்த பட்டியலில் இல்லாத குறியீடுகளை நாமே சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேக்யூஸ் ஆப் தளம் இது பற்றிய விரிவான குறிப்புகளை வெளியிட்டுள்ளது. : http://www.makeuseof.com/tag/microsoft-words-math-autocorrect-makes-equations-easier-to-type/

——–

மாற்றம் கோரும் மனு!

அமெரிக்காவின் கலிபோர்னியா என்றதும் சிலிக்கான் வேலி தானே முதலில் நினைவுக்கு வரும். உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களின் தாய்வீடாக சிலிக்கான் வேலி அமைந்திருப்பது கலிபோர்னியாவுக்கு பெருமை தரும் விஷயம் என்றாலும் இதில் முரணான ஒரு விஷயம் இருக்கிறது. கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு முன்னிரிமை இல்லை என்பது தான் அது!
கலிபோர்னியாவில் உள்ள பள்ளிகளில் உயர்நிலை மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு காரணம் கல்லூரி அனுமதியில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களின் மதிப்பெண் வலியுறுத்தப்படுவது போல கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் முக்கியமாக கருதப்படுவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் இதை ஒரு விருப்ப பாடமாகவே அளிக்கின்றன. இந்த காரணத்தினாலேயே மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் தேஎவு செய்வதிலும் அதில் தேர்ச்சி பெறுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலை வருந்த தக்கது மற்றும் மாற்றத்திற்கு உரியது என கருதுபவர்கள் ஒன்று சேர்ந்து கலிபோர்னிய கல்வி அமைப்பு ,கம்ப்யூட்டர் அறிவியலை அடிப்படையாக பாடமாக கருத வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாற்றத்திற்கான கோரிக்கைகளை மனுக்களாக வெளியிட்டு ஆதரவு திரட்டும் சேஞ்ச்.ஆர்க் தளத்தில் ஒரு மனு வெளியிடப்பட்டு பத்தாயிரத்துக்கு மேல் ஆதரவு கையெழுத்துக்களை பெற்றுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் கலிபோர்னியா முன்னணியில் இருந்தும் கூட அங்குள்ள மாணவர்கள் தரமான கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை அணுக முடியாமல் இருப்பது குறித்தும், மாணவர்களின் எதிர்கால நலனுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தின் அடிப்படை எந்த அளவு முக்கியம் என்றும் இந்த மனு வலியுறுத்துகிறது.
மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வு செய்யும் துறை எதுவாக இருந்தாலும் 21 ம் நூற்றாண்டில் அவர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலில் அடிப்படை அறிவு பலமாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் மாணவர்களின் கணிணி சிந்தனை மற்றும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொள்ள வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல புதிய்வற்றை படைக்கும் ஆற்றலையும் உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கலிப்போர்னியா கவர்னர் கெவின் நியூசம் எழுதியுள்ள கடிதத்தில் அல்ஜீப்ரா ,போல கால்குலஸ் போல் கம்ப்யூட்டர் அறிவியலும் முக்கியமாக கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கவனிகக் வேண்டியது கலிபோர்னியா மட்டும் அல்ல;நாமும் தான் இல்லையா!

———

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தந்த டிவிட்டர் நெகிழ்ச்சி.

BcWKTKSIEAAN9eTஉறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்டர் பயனாளிகளை பொருத்தவரை பல நேரங்களில் தங்கள் டிவிட்டர் நண்பர்களிடம் உதவி கேட்பதே இயல்பானதாக இருக்கிறது. இதற்கான சமீபத்தில் உதாரணமாக இங்கிலாந்தை சேர்ந்த டிவிட்டர் பயனாளி ஒருவர் புயலில் சிக்க கொண்ட தனது தாத்தாவுக்கு உதவ முடியுமா ? என்று டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து அதற்கான பலனையும் பெற்றிருக்கிறார்.
லண்டன் நகரில் வசிக்கும் அலெக்சிஸ் எனும் அந்த மனிதர் , கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய தினம் மிகுந்த மன உளைச்சலுக்கு இலக்கானார். டெவான் பகுதியில் உள்ள டைவர்டன் எனும் சிற்றூரில் வசிக்கும் அவரது தாத்தா புயலில் சிக்கி தவித்தது தான் இதற்கு காரணம். வெளியே புயல் வீசியதால் வீட்டுக்குள்ளேயே சிக்கி கொண்ட பெரியவர் உணவு இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார். பேரன் அலெக்சியாலும் உடனடியாக சென்று தாத்தாவுக்கு உதவ முடியாத நிலை. இந்த இக்கட்டான நிலையில் அவருக்கு இயல்பாக ட்விட்டரில் உதவி கேட்கலாம் என்று தோன்றியது. உடனே ஒரு குறும்பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்தார். ’ டிவிட்டர் # உதவவும். என் தாத்தா புயல் காரணமாக டெவனில் தனியே சிக்கியிருக்கிறார். #டைவர்டன் அருகே உள்ள யாரேனும் அவருக்கு உணவு கொண்டு தர முடியுமா? ‘ இது தான் அந்த குறும்பதிவு.
அலெக்சிக்கு டிவிட்டரில் 3000 க்கும் அதிகமான நண்பர்கள் இருக்கின்றனர் ( பின் தொடர்பாளர்கள்). இந்த கோரிக்கையை பார்த்ததுமே அவர்களில் பலர் டிவிட்டர் வழக்கப்படி இந்த கோரிக்கையை தங்கள் டிவிட்டர் நண்பர்களுக்கு ரிடிவீட் செய்தனர். ஆக அலெக்சி தாத்தாவுக்கு உதவி தேவை எனும் செய்தி உடனடியாக டிவிட்டர்வெளியில் பரவியது.
இதனிடையே பிலேர் (https://twitter.com/red_hairy_blair ) என்பவர் இந்த செய்திக்கு தன்னால் உதவிக்கு ஏற்பாடு செய்ய முடியும் என பதில் அளித்தார். அலெக்சி தாத்தா வசிக்கும் பகுதியில் தான் தனது அம்மா வசிப்பதாகவும் அவரை கொண்டு உணவு வழங்க சொல்வதாகவும் கூறியிருந்தார்.அது மட்டும் அல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை நிறைவேற்றவும் செய்தார்.
டிவிட்டர் நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து கேட்டதற்கு கைமேல் பலனாக உதவி கிடைத்ததும் அலெக்சி நெகிழ்ந்து போனார். இந்த மகிழ்ச்சியை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டார். ’ எல்லோருக்கும் நன்றி, இத்தகைய இதமான ஆதரவுக்கும் அற்புதமான மனிதர்களிடம் இருந்து வந்த ஆறுதலும் அருமையாக இருக்கிறது’ என்று அவர் கூறியிருந்தார்.
’ தாத்தாவுக்கு உணவு கிடைத்துவிட்டது. அந்த அழகான பெண்மணி மலர்களுடன் சென்று உதவியிருக்கிறார். இது எப்படி நிகழந்தது என்று தாத்தாவுக்கு தெரியாது’ என்று அடுத்த குறும்பதிவில் தெரிவித்திருந்தார். எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
இதற்கு ஏற்பாடு செய்திருந்த பிலேருக்கும் நன்றி கூறி குறும்பதிவிட்டார். ’ என் தாத்தா திகைத்து போயிருக்கிறார். உங்கள் அம்மா டெஸ்கோ நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக நினைத்து கொண்டிருக்கிறார் . உங்கள் அம்மா இணையத்தில் பிரபலமாகி விட்டார் ‘. உங்கள் அம்மா தான் என் தாத்தாவுக்கு உதவ வந்த கிறிஸ்துமஸ் தாத்தா என்றும் கூறியிருந்தார்.
டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட அதை பார்த்து யாரோ ஒருவரின் அம்மா உணவு கொண்டு வந்து கொடுத்த அற்புதம் அந்த பெரியவருக்கு புரியவில்லை. ஏதோ மாயம் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டும் உணர்ந்திருக்கிறார்.
டிவிட்டர் மூலம் உதவி கோரி அது சாத்த

சூறாவளிக்கு உதவ கோரும் சுயநலமில்லா படங்கள்.

1953babபிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் சுயபடங்களும் சேர்ந்திருக்கின்றன.
இணையத்தின் புதிய போக்கான சுயபடங்கள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இவை செல்பி என்று குறிப்பிடப்படுகின்றன. இணையவாசி ஒருவர் தனது புகைப்படத்தை தானே எடுத்து அதை சமூகவலைப்பின்னல் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் பழக்கமே இப்படி செல்பி என்று அழைக்கப்படுகிறது. பயனாளிகள் செல்போன் அல்லது டிஜிட்டல் காமிராவை கையை நீட்டி தங்கள் முன்னால் வைத்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வது என்று விக்கிபீடியா இதற்கு விளக்கம் தருகிறது.
புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் தான் இத்தகைய சுயபட பகிர்வாளர்கள் அதிகம் உள்ளனர். பேஸ்புக் போன்ற தளங்களிலும் சுயபடங்கள் ஆர்வத்தோடு பகிரப்பட்டு வருகின்றன. பல பிரபலங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது.
இதை நம் காலத்து போக்கு என்கின்றனர். இணைய கால பாதிப்பு என்றும் சொல்கின்றனர். சுயபடங்களை பகிர்வதற்கான தேவை குறித்தும் பாதிப்புகள் குறித்த விவாதங்களும் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளன.
இந்த சுயபட பழக்கத்தை நல்ல விதமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உணர்த்தும் வகையில் பிலிப்பைன்ஸ் சூறாவளி பாதிப்புக்கான நிதி அளிக்கும் கோரிக்கைகள் சுயபடங்களுடன் வெளியாகத்துவங்கியிருக்கின்றன. இதுவும் ஒரு இயக்கமாகவே வலுப்பெற்று வருகிறது.
சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தகவல் தொடர்பு வசதிகளும் நிலைகுலைந்து போயுள்ளன. பாதிப்பு மற்றும் நிவாரணப்பணி விவரங்களை பகிர்ந்து கொள்ள இண்டெர்நெட்டும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களுமே பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சூறாவளிக்கு தொடர்பு இல்லாத தகவல் அல்லது புகைபடங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள் சுயபுராணங்களோ சுயபட பகிர்வுகளே வேண்டாமே ப்ளிஸ் என்பது தான். ஆனால் சுயபடங்களை சூறாவளி பாதிப்புக்கு உதவுதற்காகவே பகிர்ந்து கொண்டால் என்ன ? அதை தான் பலரும் செய்து வருகின்றனர். எப்படி என்றால், வழக்கம் போல தங்கள் சுயபடங்களை எடுத்து பகிர்ந்து கொள்கின்றனர். அந்த புகைப்படத்துடன் சூறாவளி பாதிப்புக்கு உதவுங்கள் என்னும் கோரிக்கை வாசகத்தையும் இடம் பெற வைத்து, நிதி உதவி கோரும் அமைப்புகள் பற்றிய தகவலையும் தெரிவித்துள்ளனர். இப்படி விதவிதமான சூறாவளி பாதிப்பு கோரிக்கையுடன் இணையத்தில் உலா வருகின்றன. பிலிப்பைஸ்ன் தலைநகர் மணிலாவில் உள்ள விளம்பர நிறுவனம் இந்த சுயபட கோரிக்கையை துவக்கி வைத்தது.
சுயபடங்களின் நோக்கத்தையே தலைகீழாக மாற்றும் வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட சுயபடங்கள் மூலம் கோரிக்கை வைக்கும் இத்தகைய படங்களை நீங்களும் எடுத்து சமூக வலைப்பின்னல் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டூள்ளது.

மேலும் விவரங்களுக்கு:  http://www.linkedin.com/today/post/article/20131114173241-5506908-what-if-our-selfies-were-unselfish

புயலுக்கு பின் ஒரு இணையதளம்.

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காகவோ நேசக்கரம் நீட்டுவதற்காக ஒரு இணையதளம் கூட உருவாக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்காவை உலுக்கிய சாண்டி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான இணைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கான சமீபத்திய உதாரணம் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுமுறை கால பரிசளிக்க உதவுவதற்காக துவக்கப்பட்டுள்ள சீக்ரெட் சாண்டி இணையதளம்.

ஒட்டுமொத்த அமெரிக்காவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிருக்கும் நிலையில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க கை கொடுக்கும் வகையில் இந்த தளம் துவக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் காலம் மகிழ்ச்சிக்கும் பரிசளிப்பதற்குமான காலம்.எல்லோரும் கிறிஸ்துமசுக்காக குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழ்வார்கள்.ஆனால் சாண்டி சூறாவளி உலுக்கி போட்ட பகுதிகளில் இருப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே போராடி கொண்டிருக்கும் போது கிறிஸ்துமஸ் விழாவை கோலகலமாக கொண்டாடுவது எப்படி?

அதனால் சுறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைதூக்கி விடுவதற்காக என்று சீக்ரெட்சாண்டி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தாரள மனம் கொண்டவர்கள் இந்த தளத்தின் மூலம் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பரிசுகளை வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு உதவலாம்.

அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சான்டா கிளாஸ் வடிவில் பரிசளிப்பது போல இந்த தளத்தின் வாயிலாக ரகசிய சான்டாவாக மாறி முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளித்து மகிழலாம்.

அதே போல சூறாவளியால் பாதிக்கப்பட்டு பிறர் உதவியை எதிர்பார்த்திருப்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவியையும் இந்த தளம் மூலம் தெரிவிக்கலாம்.இதற்கு என்று உள்ள உதவி கோரும் பகுதியில் தங்களது கோரிக்கையை சமர்பிக்கலாம்.இதே போல உதவ தயாராக இருப்பவர்கள் அதனை தெரிவிப்பதற்கான பகுதியும் இருக்கிறது.

இந்த தளம் இரு தரப்பினருக்கும் இடையே பாலமாக இருந்து உதவி தேவைபடுபவருடன் உதவ தயராக இருப்பவர்களை இணைத்து வைக்கிறது.

இந்த பண்டிகை காலத்தை சாண்டி சுறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து கொண்டாடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளத்தை ஜாய் ஹாவுங் என்பவரும் அவரது நண்பருமான கிம்பர்லி பெர்டியும் இணைந்து தளத்தை அமைத்துள்ளனர்.

பண்டிகை காலம் என்பதே பரஸ்பரம் பரிசளித்து மகிழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கித்தரும் காலம் என்னும் போது அந்த மகிழ்ச்சியோடு மனநிறைவை ஏற்படுத்தி தரும் வகையில் சூறாவளி பாதிப்பால் கிறிஸ்துமசை கொண்டாட முடியாமல் தவிப்பவர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளம் பாராட்டத்தக்க முயற்சி தானே.

இணையதள முகவரி;http://secretsandy.org/

—————

இதே போலவே சாண்டி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட தளம் பற்றிய முந்தைய பதிவு…..
சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.