Tag Archives: language

மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

http _greatlanguagegame.com_உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக!

உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். இப்படி வெவ்வேறு மொழிகளின் ஒலிகளை கேட்பதே சுவாரஸ்யமான அனுபவம் தான். ஆடத்தயார் என்று தெரிவிததுமே ஒலிபெருக்கியில் ஏதேனும் ஒரு மொழியின் பேச்சை கேட்கலாம்.அதன் கீழ் இரண்டு மொழிகள் குறிப்பிடப்பட்டு அவற்றில் எந்த மொழி நீங்கள் கேட்ட மொழி என தேர்வு செய்ய வேண்டும். தேர்வு சரியாக இருந்தால் மதிப்பெண் உண்டு. சரியோ தவறோ அடுத்தடுத்து மொழிகளை கேட்டு கொண்டே இருக்கலாம்.

larsஆடி முடித்த பின் இதற்கு முன் கேட்டிராத பல புதிய மொழிகளை கேட்டு ரசித்திருக்கலாம். அது மட்டும் அல்ல, தவறாக சொன்ன மொழிகளை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பார்க்கலாம். இதன் மூலம் அந்த மொழியை ஓரளவுக்கு பரிட்சயம் செய்து கொள்ளலாம். அப்படியே அந்த மொழி எங்கெலாம் பேசப்படுகிறது.எத்தனை பேரால் பேசப்படுகிறது போன்ற அதன் மொழி குடும்பம் என்ன ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதோடு அந்த மொழி தொடர்பான விக்கிபீடியா கட்டுரை மற்றும் மொழியியல் களஞ்சியமான எத்னோலேஜ் தளத்தின் கட்டுரைக்கான இணைப்பும் இருக்கிற‌து.

மொழி சார்ந்த அனுபவம் விரிய இந்த தளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.ஆஸ்திரே;லியாவை சேர்ந்த லாரஸ் யென்ச்கன் என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.பொறியியல் வல்லுனரான அவர் மொழி மற்றும் இயந்திர கற்றல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.மொழிகளின் மீது அவருக்கு தீராத காதல் இருக்கிரது.

இணையதள முகவரி: http://greatlanguagegame.com/

தளத்தை உருவாக்கியவரின் முகவரி:http://lars.yencken.org/

வேற்று மொழிகளை கண்ட‌றிவதற்கான இணையதளம்.

எப்போதாவது புரியாத மொழி சொற்களை பார்த்து அது என்ன மொழி என்று தெரியாமல் குழம்பித்தவித்த அனுபவம் இருக்கிறதா?

இப்படி ஒரு அனுபவம் மீண்டும் ஒரு முறை ஏற்பட்டால் குழப்பம் அடைய வேண்டாம்.பாலிகிலாட் 300எ என்னும் இணையதளத்தின் பக்கம் சென்றீர்கள் என்றால் உங்கள் குழப்பம் தீர்ந்து விடும்.

காரணம் இந்த தளம் புரியாத எந்த மொழியின் சொற்களை சமர்பித்தாலும் அது எந்த மொழியை சேர்ந்தது என்று கண்டறிந்து சொல்லி விடுகிறது.அந்த வகையில் இந்த தளத்தை மொழி கண்டறியும் சேவை என்று வர்ணிக்கலாம்.

ஆனால் இந்த சேவையை பயன்படுத்த முதலில் இதனை கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் மொழியின் சொற்களை சமர்பித்தால் இந்த சாப்ட்வேர் அந்த மொழியை கண்டறிந்து சொல்லி விடுகிறது.

இவ்வாறு கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட மொழிகளை கண்டறியும் ஆற்றல் கொண்டதாக இந்த சாப்ட்வேர் அமைந்துள்ளது.சரியாக சொல்வதனால் மொத்தம் 474 மொழிகளுக்கான ஆற்றல் இதனிடம் உள்ளது.

எந்த மொழிகளை எல்லாம் கண்டறிய முடியும் என்பதற்கான நீளமான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

மொழிகளின் நிலை குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த தளம் வழங்குகிறது.
polygot3000_head
இங்கு பட்டியலிடப்பட்டுள்ள 474 மொழிகளில் 110 மொழிகள் மட்டுமே பிரபலமானவையாக உள்ளன.அதாவது கணிசமான எண்ணிகை கொண்டவர்களால் பேசப்படுகின்றன.மற்ற மொழிகளில் குறைவான எண்ணிக்கையிலேயே பேசப்படுகின்றன அல்லது அழியும் நிலையில் இருக்கின்றன.

உதாரணத்திற்கு பிபில் என்றொரு மொழி இருக்கிறதாம்.1970 ம் ஆண்டு கணக்கு படி இந்த மொழியை பேசத்தெரிந்தவர்கள் 40 பேர் மட்டுமே இருந்தனராம்.இப்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விட்டதாம்.

அதே போல யுகாகிர் என்னும் மொழி 170 பேரால் மட்டுமே பேசப்படுகிற‌தாம்.இந்த மொழியை பேசுபவர்கள் ர‌ஷ்யாவின் வட கிழக்கு பகுதில் உள்ள யுகாகிர் குடியரசில் வசிக்கின்றனர்.

இணையதள முகவரி;http://www.polyglot3000.com/

நீளமான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவும் இணையதளம்.


தமிழில் இது போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது சம்மரைசர் இணையதளம்.இந்த தளம் நீள‌மான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவுகிறது.

அதாவது நீளமான கட்டுரைகளை ஒரு சில வரிகளில் சுருக்கி தந்து விடுகிறது.அந்த சில வரிகளை படித்தால் போதும் கட்டுரையின் சாரம்சத்தை புரிந்து கொண்டு விடலாம்.

நீளமான கட்டுரையை படிக்க நேரமில்லாதவர்களுக்கான சேவை என்ற போதிலும் பத்து வரிக்கு மேல் எதையும் படிக்க பொருமை இல்லாதவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த இணையதளம் செயல்படும் விதமும் வேகமும் உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.எந்த கட்டுரையின் சுருக்கம் தேவையோ அதனை இந்த தளத்தில் சமர்பித்து சுருக்கவும் என கேட்டுக்கொண்டால் அடுத்த சில நொடிகளில் அதன் சாரம்சத்தை முன் வைக்கிறது.

கட்டுரையின் மூன்று வகையான சுருக்கத்தை கேரும் வசதி இருப்பது கூடுதல் சிற‌ப்பு.டிவிட்டர் பிரியர்கள் 140 எழுத்துக்களுக்குள் சுருக்கத்தை பெற்று கொள்ளலாம்.அதே போல 250 எழுத்துக்கள் கொண்ட சுருக்கத்தையும் 500 எழுத்துக்கள் கொண்ட சுருக்கத்தையும் பெறலாம்..

மாணவர்கள்,ஆய்வாளர்கள்,பேராசிரியர்கள் ,வாசிப்பு சோம்பேரிகள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

நீளமான கட்டுரையை அப்படியே சுருக்கி படிக்க முடிவதை எளிதாக நிறைவேற்றி தந்தாலும் இந்த சேவையின் பின்னே உள்ள விஷயம் எளிதானதல்ல என்றே தோன்றுகிறது.

பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலையில் உள்ள மொழியியல் ,ஐடி மற்றும் சாப்ட்வேர் துறையை சேர்ந்த நிபுணர்களின் 20 ஆண்டு கால கூட்டு முயற்சியின் பயனாக இதனை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உழைப்பின் பயனாக உருவாக்கப்பட்ட 8 கோடிக்கும் அதிகமான நிரல்களை (கோட்)கொண்டு இந்த அற்புதம் சாத்தியமாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே இது அற்புதமான சேவை தான்.இயந்திர மொழிபெயர்ப்பில் உள்ள கஷ்டங்களை அறிந்தவர்களுக்கு இதன் மகத்துவம் புரியும்.ஒரு சொல்லுக்கான பொருள் அதை பயன்படுத்தப்பும் விதம்,இடம் ஆகியவற்றுக்கேற்ப மாறுபடும்.மனித மனம் இதனை எளிதாக கண்டு கொள்ளும்.ஆனால் சாப்ட்வேர் திணறிவிடும்.எனவே தான் இயந்திர மொழிபெயர்ப்பு பெரும்பாலும் துல்லியம் இல்லாமலும் பல நேரங்களில் சிரிப்புக்கு இடமாகவும் அமைந்து விடுகிறது.

வாசிப்பிலும் இதே நிலை தான்.ஒரு நீண்ட கட்டுரையை படிக்கும் மனிதர்கள் எளிதாக அதன் சாரம்சத்தை நாலு வரியில் சொல்லி விடுவார்கள்.ஆனால் ஒரு சாப்ட்வேர் இதனை செய்ய முற்படும் போது நிறைய சிக்கல்கள் உள்ளன.

இந்த சிக்கலுக்கான உதாரணங்களை இந்த தளமே தனது அறிமுக பகுதியில் குறிப்பிட்டுள்ளது.

காலம் ஒரு அம்பை போல பறந்தது என குறிப்பிடும் போது இது குறிக்கும் வேகத்தை சட்டென புரிந்து கொள்வது கம்ப்யூட்டருக்கு சாத்தியமா தெரியவில்லை.இது போன்ற மொழியியல் நுட்பங்களை கருத்தில் கொண்டு இவற்றை எல்லாம் உணரக்கூடிய நிரலை எழுதியுள்ள நிபுணர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக தான் இருக்க வேண்டும்.

இந்த சாப்ட்வேர் பின்னே இருக்கும் கனெக்சர் நிறுவனம் தான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிற‌து.நோக்கியா,மோட்டரோலா போன்ற நிறுவனங்கள் பயன்ப‌டுத்தும் இந்த சாப்ட்வேரை காட்சி படுத்துவதற்கான தளமாக இது உருவாக்கப்பட்டிருக்கலாம்.

எப்படி இருந்தாலும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய சேவை தான்.

இந்த தளத்திலேயே இன்னும் இரண்டு அழகான சேவைகளுக்கான இணைப்பு இருக்கிறது.

ஒன்று குட் நியூஸ் பேட் நியூஸ்.இந்த பகுதியில் ஏதாவது நிறுவனத்தின் பெயரை டைப் செய்தால் அந்நிறுவனம் தொடர்பான செய்திகளை நல்ல செய்தி,எதிர்மரையான செய்தி என இரண்டு வகையாக பிரித்து காட்டுகிற‌து.

இதே போல பிராண்ட்பைட் பகுதியில் இரண்டு பிராண்டுகளை சமர்பித்தால் அவற்றுகான செய்திகளின் ஒப்பீட்டை வரைபடமாக காட்டுகிற‌து.

இணையதள முகவரி;http://www.summarizer.info/

lingual2

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தேட!

நண்பன் படத்தில் பேராசிரியர் விருமாண்டி சந்தானம் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் கரும் பலகையில் எழுதுவது போல ஒரு காட்சி வரும்.பேராசிரியரின் அதீத திறமையை உணர்த்தும் இந்த காட்சியை பார்த்து விட்டு யாரேனும் இரண்டு கைகளிலும் எழுதிப்பார்க்க முயன்றனரா என்று தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க விருமாண்டி சந்தானம் போன்ரவர்கள் விரும்பக்கூடிய புதிய தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிற‌து.இந்த தேடியந்திரம் ஒரே நேரத்தில் இரண்டு பொழிகளில் தேட வழி செய்கிறது.

கூகுல் தான் பெரும்பாலானோர் விரும்பும் தேடியந்திரம் என்ற போதிலும் சில நேரங்களில் மாற்று தேடியந்திரத்தை பயன்ப‌டுத்தும் தேவையும் ஏற்படலாம்.இது போன்ற நேரங்களில் ஒரே பக்கத்தில் இரண்டும் தேடியந்திரங்களில் தேடும் வசதியையும் தரும் தேடியந்திரங்கள் ஏற்கனெவே அறிமுகமாகியிருக்கின்றன.

கூகுல்.மற்றும் பிங் போன்ற போட்டி தேடியந்திரங்களின் தேடல் முடிவுகளை ஒப்பிட இவை கைகொடுக்கின்ற‌ன.

ஆனால் 2 லிங்குவல் தேடியந்திரமோ முதல் முறையாக இரண்டு மொழிகளில் தேட உதவுகிற‌து.

இந்த தேடியந்திரத்தில் ஆங்கிலத்திலும் இன்னும் பிற மொழிகளிலும் ஒரே நேர‌த்தில் தேட வழி செய்கிற‌து.ஆங்கில தவிர வேறு மொழிகளிலும் பிற மொழிகளோடு தேடலாம்.இரண்டு மொழி முடிவுகளும் அருகே அருகே தோன்றுகின்றன.

சுவார்ஸ்யமான தேடியந்திரம் தான்.ஆனால் இரண்டு மொழிகளில் தேடும் தேவை யாருக்கெல்லாம் ஏற்படும் என்று தெரியவில்லை.

இந்டஹ் தேடியந்திரம் புதுமையானதே தவிர முற்றிலும் புதியது அல்ல! அதாவது கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை பயன்ப‌டுத்தியே இந்த சேவை வழங்க‌ப‌டுகிறது.

தேடியந்திர முகவ‌ரி;http://www.2lingual.com/

poly

பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது.

ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை.அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.

புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது.

இத்தகைய சிறந்த வழியை தான் பாலிஸ்பீக்ஸ் தளம் உண்டாக்கி தருகிறது.

இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்பது போல பல்வேறு மொழி பேசுபவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிற‌து.பயனாளிகள் தாங்கள் கற்க விரும்பும் மொழி பேசுபவரோடு இணையத்தில் உரையாட துவங்கி விடலாம்.

உதாரனத்திற்கு ஜப்பானிய மொழி கற்று கொள்பவர்கள் இந்த தளம் மூலம் ஜப்பானியரோடு அரட்டை அடித்து அந்த மொழியில் உள்ள பேச்சு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள‌‌ முற்படலாம்.

இதே போலவே வேற்று மொழி பேசுபவர்களோடு வீடியோ வழியே உரையாடும் வசதியை வெர்ப்லிங் தளம் தருகிறது.

ஆனால் பாலிஸ்பீக்ஸ் வீடியோ வசதி இல்லாமல் சாட் செய்வது போலவே இணைய உரையாடலில் ஈடுபட வைக்கிறது.புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளும் நிலையில் பேசுவதை விட எழுத்து மூலம் உரையாடுவதே உகந்த‌தாக இருக்கும் என்று நினைத்து இந்த அரட்டை வசதியை தருவதாக பாலிஸ்பீகஸ் தளம் தெரிவிக்கிற‌து.

பேஸ்புக் கணக்கை கொண்டே இதில் உறுப்பினராகி வேற்று மொழி பேசுபவருடன் அரட்டையில் ஈடுபட்டு மொழியை வளர்த்து கொள்ளலாம்,நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் சாட் என்று சொல்லப்படும் அரட்டை தளங்கள் இணையத்தில் கொடி கட்டி பறந்தன.அதன் பிறகு அரட்டை தளங்களின் செல்வாக்கு தேய்ந்து போய்விட்டன.

அதன் பிறகு சாட்ரவுலட் தளம் மீண்டும் அர‌ட்டை தளங்களுக்கு புதிய மவுசை தேடித்தந்தது.

இந்த நிலையில் அரட்டையை மொழி கற்பது உள்ளிட்ட பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பாலிஸ்பீக்ஸ் போன்ற தளங்கள் ஏற்படுத்தி தருகின்ற‌ன.

இணையதள முகவரி;http://www.polyspeaks.com/

வெர்ப்லிங் பற்றிய எனது முந்தைய பதிவு இதோ;http://cybersimman.wordpress.com/2011/09/10/learning/