Tag Archives: link

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

ddg-bangs-640x460மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை தேடுவதற்காக டக்டக்கோவை பயன்படுத்தும் போது, நீங்கள் யார் என்பதை அது கவனிக்காமல் இருக்கிறது. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எனவே உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப்பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு பிரதான அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாறலாம் என நினைப்பதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை என்பது குறிப்பிடத்தக்கது:

ஸ்டாப்வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப்வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப்வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டும் அல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருப்பின், லேப் வசதி மூலம் தொடச்சியாக பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.

பெரிய எழுத்துக்கள்

ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிடல் எழுத்துக்களை அமைக்க விரும்பினால் அதற்கான வசதியையும் இந்த தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் டைடில் கேஸ் என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துக்களை லோவர் கேஸ் அல்லது அப்பர் கேசாக மாற்றவும் இதை பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளை தேட

கூகுளில் தகவல்களை தேடும் போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால் டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100 க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

பிடிஎப் கோப்புகள்

டக்டக்கோவில் எச்.டி.எம்.எல் கோப்புகளையும் எளிதாக தேடலாம். எச்.டி.எம்.எல்: என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளை காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதே போல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும் போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையை சேர்த்துக்கொண்டால் போது, இத்தகைய கோப்புகளை மட்டும் தேடலாம்.

நெத்தியடி தேடல்

சில நேரங்களில் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி இருக்கிறது. இந்த வசதி ஐபேங்க் என சொல்லப்படுகிறது. தேடல் பதத்திற்கு முன் ஆச்சர்யக்குறியை சேர்த்து, குறிப்பிட்ட தளத்திற்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்திற்கு  !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது: https://duckduckgo.com/bang

ஆய்வுப்பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம் தெரியுமா? https://duckduckgo.com/bang?q=google

உடனடி பதில்கள்

இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ் எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. கூகுள் நாலட்ச் கிராப் எனும் பெயரில் இது போன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோ தான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும் தான் தேவை எனில் தேடல் பதத்திற்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையில் எனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப் மட்டுமே சார்ந்திருப்பது தான் ஒரே குறை.

குறுக்கு வழிகள்

இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு போட்டோஷாப்  சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளை பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.

டக்டக்கோவில் இன்னும் கூட பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள் போல வருமா? என கேட்பவர்களுக்காக கூகுல் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சனையா? எனும் பொருள்பட, ஈஸ் கூகுள் டவுன் என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் என தோன்றுகிறது.

 

நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது.

 

டக்டக்கோ தொடர்பான முந்தைய பதிவுகள்: http://cybersimman.com/?s=%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B

ரான்சம்வேர் தாக்குதல்: தப்பிக்க என்ன வழி?

rஇணையத்தை உலுக்கி இருக்கும் வான்னகிரை ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் இணையவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நோமோர்ரேன்சம்.ஆர்க் இணையதளத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மால்வேர் எனும் தீய நோக்கிலான மென்பொருள்கள் வடிவில் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து, அதனை தற்காலிகமாக முடக்கி அல்லது, அதில் உள்ள கோப்புகளை அணுக முடியாமல் செய்து விட்டு, இந்த தாக்குதலில் இருந்து விடுபட பினைத்தொகை கேட்டு மிரட்டும் உத்தியுடன் நடைபெறும் தாக்குதல் ரான்சம்வேர் என குறிப்பிடப்படுகிறது.

இந்த வகையான தாக்குதலுக்கு இலக்காகும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான புகலிடமாக உருவாக்கப்பட்டது நோமோர்ரேன்சம்.ஆர்க் இணையதளம். யூரோப்போல் ,நெதர்லாந்து காவல்துறை மற்றும் வைரஸ் தடுப்பு நிறுவனங்களான காஸ்பர்ஸ்கை, இண்டெல் செக்யூரிட்டி ஆகியவை இணைந்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளன.

ரான்சம்வேர் தாக்கினால், பினைத்தொகை கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தும் இந்த தளம், ஏற்கனவே நன்கறியப்பட்ட ரான்சம்வேர் தாக்குதல்களில் இருந்து விடுபடுவதற்கான சாவியை வழங்குகிறது. புதிய தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

இந்த வகை தாக்குதல்களுக்கு தற்காப்பே சிறந்தது என்றாலும், தற்போதைய வான்ன கிரை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த தளம் சில முக்கிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

அவற்றில் முதன்மையானது, mb v1 செயலிழக்கச்செய்வதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பதாகும். மேலும் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள பாதுகாப்பு பேட்சை உடனே பயன்படுத்த வேண்டும்.

மேலும் சில தற்காப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது: https://www.nomoreransom.org/prevention-advice.html

 

இது தொடர்பான முந்தைய கட்டுரை: http://bit.ly/2pOjlVU

தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்

2440407285_3728063d06_oதேடியந்திரங்களை நன்றாக அறிந்திருந்தாலும், தேடியந்திரங்கள் பற்றி பல விஷயங்களை நாம் அறியாமலே இருக்கிறோம். இவற்றில் 9 முக்கிய அம்சங்களை பிங்டாம் வலைப்பதிவு பட்டியலிட்டுள்ளது:

1. அந்த காலத்திலேயே தேடியந்திரம்

இணையத்தில் தகவல் பரிமாற்றத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ள ஹைபர்டெக்ஸ்ட் எனும் இணைப்பு வசதி பற்றிய கருத்தாக்கம் முதன் முதலில் அமெரிக்க தொழில்நுட்ப தீர்கதரிசி வானவர் புஷ் எழுதிய ஆஸ் வி மே திங் எனும் கட்டுரையில் முன்வைக்கப்பட்டது. சேமிக்கப்பட்ட தகவல்கள் உடனடியாக கண்டெடுக்கப்படுவதற்கான வசதியின் அவசியம் பற்றியும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வசதி தான் தற்போதைய தேடியந்திரங்களுக்கான முன்னோடி என கொள்ளலாம். இந்த கட்டுரை 1945 ம் ஆண்டு வெளியானாலும் 1936 லேயே எழுதப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

2. தேடியந்திர நுட்பத்தின் தந்தை

உலகின் முதல் தேடியந்திரம் 1960 ல் ஜெரார்டு சால்டன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்த குழுவனருடன் இணைந்து சால்டன் ஸ்மார்ட் இன்பர்மேஷன் ரிட்ரிவல் சிஸ்டம் எனும் அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் சால்டன் நவீன தேடியந்திர நுட்பத்தின் தந்தையாக கருதப்படுகிறார்.

3. முதல் முதலாக

இணைய உலகின் முதல் தேடியந்திரமான ஆர்ச்சி, எப்டிபி ஆவண கோப்புகளில் இருந்து தேடுவதற்காக உருவாக்கப்பட்டது.

4. வாண்டக்ஸ்

வைய விரிவு வலைக்கான முதல் தேடியந்திரம் வாண்டக்ஸ் (Wandex) 1993 ல் வெளியானது. எம்.ஐ.டியை சேர்ந்த மேத்யூ கிரே உருவாக்கிய முதல் தேடியந்திர சிலந்தியான வேர்ல்ட் வைடு வெப் வாண்டரரை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டது. கிரே தற்போது கூகுளில் பணியாற்றுகிறார்.

5. கையளவு இணையம்

1993 டிசம்பரில் இணையத்தில் 623 இணையதளங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஆரம்ப தேடியந்திரங்களின் பணி எளிதாகவே இருந்தது.

6. வந்தது கிராளர்

இணைய பக்கங்களின் முழுத்தகவல்களையும் பட்டியலிட்டு தேட உதவிய முதல் தேடியந்திரமான வெப்கிராளர் 1994 அறிமுகமானது. நவீன தேடியந்திரங்களுக்கான முதல் படியாக இது அமைந்தது. இதற்கு முன்னர் தேடியந்திரங்கள் இணைய பக்கங்களின் தலைப்பு மற்றும் அறிமுக குறிப்புகளை மட்டுமே சேகரித்தன.

7. கூகுள் காலம்

எல்லாம் வல்ல கூகுளுக்கான அடிப்படை கோட்பாட்டான பேக்ரப் ( BackRub ) குறித்து கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் 1996 ல் பணிகளை துவக்கினர்.

8. யாஹு!

1990 களில் இணையத்தை ஆண்ட யாஹுவு வலைவாசலாக திகழந்ததே தவிர அதற்கென சொந்தமாக தேடியந்திரம் இல்லை. அல்டாவிஸ்டா, இங்க்டோமி மற்றும் கூகுள் ஆகியவற்றின் நுட்பங்களையே அது 2004 வரை பயன்படுத்தியது. மைக்ரோசாப்டும் இப்படி தான் ஆரம்பத்தில் கோட்டை விட்டு பின்னர் தாமதமாக சொந்த தேடியந்திரம் கண்டது.

* இணையத்தின் முதல் தேடியந்திரம் பற்றிய பதிவு:உலகின் முதல் தேடியந்திரம்.

* தமிழ் இந்துவில் எழுதும் தேடியந்திரம் தொடர்பான தொடருக்கான இணைப்பு:

tdr

இணைய பகிர்வுக்கான அருமையான சேவை

ணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுருக்கித்தந்தது பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இபோதோ டிவிட்டர் போன்ற தளங்களில் முகவரிகள் தானாக சுருக்கப்படுகிறது. இனியும் தனிப்பட்ட இணைய முகவரி சேவைகளுக்கு தேவை இருக்கிறதா? என்று தெரியவில்லை.

இந்த கேள்வியை மீறி, புதிய இணைய முகவரி சுருக்க சேவையான https://tldrify.com/ இணையதளத்தை கொண்டாட தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக வலைபதிவுகளிலும் , சமூக ஊடக தளங்களிலும் , இணைய தகவல்களை மேற்கோள்களாக பகிரும் வழக்கம் கொண்டவர்கள் இதை ஸ்லாகித்து மகிழ்வார்கள். ஏனெனில் இந்த சேவை, இணையதளத்தில் அடையாளம் காட்டும் பகுதியை மட்டும் முகவரி சுருக்கமாக முன்வைக்கிறது.

இணையத்தில் குறிப்பிட்ட தகவலை மேற்கோள் காட்ட விரும்பும் போது , தவிர்க்க இயலாமல் அதன் முழு முகவரியையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையே தற்போது இருக்கிறது. ஆனால் உண்மையில் மேற்கோள் பகுதியை மட்டுமே நாம் அடையாளம் காட்ட விரும்புவோம். இதற்காக அந்த பகுதியை மட்டும் கட் காபி பேஸ்ட் செய்து காட்டலாம். ஆனால் அப்போது மூலத்தின் இணைப்பு இருக்காது. இணைப்பு கொடுத்தாலும் முழு இணையதளமும் வந்து நிற்கும். மாறாக , இணைப்பை கிளிக் செய்தால் மேற்கோள் காட்டப்பட்ட பகுதி மட்டும் அடையாளம் காட்டப்பட்டால் எப்படி இருக்கும். இதை தான் இந்த இணைய சேவை அழகாக செய்கிறது.

இந்த சேவையை புக்மார்க்காக நிறுவிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு எப்போது மேற்கோள் காட்டும் தேவை ஏற்பட்டாலும், அந்த பகுதையை மவுசால் சலெக்ட் செய்துவிட்டு இந்த புக்மார்க்கை கிளிக் செய்தால் போதும், அந்த பகுதிக்கான இணைய முகவரி சுருக்கத்தை அளிக்கும். இந்த சுருக்கத்தை கட்டுரையில் அல்லது பேஸ்புக் பதிவில் பகிரலாம். வாசிக்கும் போது சுருக்கத்தை கிளிக் செய்தால் அந்த இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்ட பகுதி பளிச் என்று அடையாளம் காட்டப்படும். அருமையான சேவை .மேற்கோள்களை அடையாளம் காட்ட பயன்படுத்திப்பாருங்கள்.

இணையதள முகவரி; https://tldrify.com/

—–

இணைய முகவரி சேவைகள் பற்றிய முந்தைய பதிவு: முகவரி சுருக்க சேவைகள்; ஒரு ரவுன்டு அப்!.http://cybersimman.com/2013/12/04/urls/

நண்பர்களுக்கு கோப்புகளை எளிதாக அனுப்ப ஒரு இணைய சேவை

http _filestofriends.com_இணையத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ள இமெயிலை மட்டுமே நம்ப வேண்டிய அவசியமும் இப்போது  இல்லை. அளவில் பெரிய கோப்புகளை அனுப்ப முடியாமல் திண்டாடும் அனுபவமும் இப்போது ஏற்படுவது இல்லை. டிராப் பாக்ஸ் சேவையில் துவங்கி , கூகுல் டிரைவ், மைக்ரோசாப்டின் ஒன் டிரைவ் ( ஸ்கை டிரைவ்) என பல வழிகள் இருக்கின்றன. இருந்தாலும் கோப்பு பகிர்வில் உதவ புதிய சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.

இந்த திசையில் சமீபத்திய வரவு, பைல்ஸ் ஆப் பிரெண்ட்ஸ். நண்பர்களுக்கு பெரிய கோப்புகளை அனுப்பி வைக்கும் அவசியம் ஏற்பட்டால் இந்த சேவையை பயன்படுத்த்தலாம்.

கோப்புகளை பகிர்வது எளிதாகவே இருக்கிறது. அனுப்ப வேண்டிய கோப்பை கிளிக் செய்தோ , அல்லது இழுத்து வந்தோ அதற்குறிய கட்டத்தில் வைத்துவிட வேண்டும். அதன் பிறகு உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்து நண்பரின் மெயில் முகவரியையும் குறிப்பிட்டால் போதும். கோப்பு போய் சேர்ந்துவிடும். அனுப்பும் போது கோப்பு தொடர்பான செய்தியையும் சேர்த்து குறிப்பிடலாம்.

எளிமையான பயனுள்ள சேவை. அடிப்படையில் இலவசமானது. ஆனால் ஒரு ஜிபி கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும்.

கட்டண சேவைக்கு மாறினால் அதிக கோப்புத்திறன் உள்ளிட்ட கூடுதல் வசதி உண்டு. பழைய கோப்புகளை பார்ப்பது, நமக்கென தனி இணைய முகவரி ஆகிய அம்சங்கள் இதில் அடக்கம்.

வர்த்தக நோக்கில் அதிக கோப்புகளை பகிர்ந்து கொள்பவர்களுக்கு இந்த கட்டண சேவை பயனுள்ளதாக இருக்கும்.

இணைய முகவரி: https://filestofriends.com/

———————-

 

பி.கு; டிராப் பாக்ஸ் பற்றி ஒரு குறுந்தொடர் எழுதும் அளவுக்கு விஷ்யம் இருக்கிறது. உங்களில் எத்தனை பேருக்கு அதை படிக்கும் ஆர்வம் இருக்கிறது. தெரிவித்தால் மற்ற பதிவுகளோடு டிராப்பாகஸ் பற்றியும் அடிக்கடி எழுத விருப்பம். இன்றைய கிலவுட் கம்பூட்டிங் யுகத்தில் டிராப்பாக்ஸ் போன்ற சேவைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். நம்முடைய எல்லா கோப்புகளையும் அவர்களை நம்பி ஒப்படைத்து விடுகிறோமே !

 

அன்புடன் சிம்மன்.

 

———