தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்

2440407285_3728063d06_oதேடியந்திரங்களை நன்றாக அறிந்திருந்தாலும், தேடியந்திரங்கள் பற்றி பல விஷயங்களை நாம் அறியாமலே இருக்கிறோம். இவற்றில் 9 முக்கிய அம்சங்களை பிங்டாம் வலைப்பதிவு பட்டியலிட்டுள்ளது:

1. அந்த காலத்திலேயே தேடியந்திரம்

இணையத்தில் தகவல் பரிமாற்றத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ள ஹைபர்டெக்ஸ்ட் எனும் இணைப்பு வசதி பற்றிய கருத்தாக்கம் முதன் முதலில் அமெரிக்க தொழில்நுட்ப தீர்கதரிசி வானவர் புஷ் எழுதிய ஆஸ் வி மே திங் எனும் கட்டுரையில் முன்வைக்கப்பட்டது. சேமிக்கப்பட்ட தகவல்கள் உடனடியாக கண்டெடுக்கப்படுவதற்கான வசதியின் அவசியம் பற்றியும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வசதி தான் தற்போதைய தேடியந்திரங்களுக்கான முன்னோடி என கொள்ளலாம். இந்த கட்டுரை 1945 ம் ஆண்டு வெளியானாலும் 1936 லேயே எழுதப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

2. தேடியந்திர நுட்பத்தின் தந்தை

உலகின் முதல் தேடியந்திரம் 1960 ல் ஜெரார்டு சால்டன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்த குழுவனருடன் இணைந்து சால்டன் ஸ்மார்ட் இன்பர்மேஷன் ரிட்ரிவல் சிஸ்டம் எனும் அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் சால்டன் நவீன தேடியந்திர நுட்பத்தின் தந்தையாக கருதப்படுகிறார்.

3. முதல் முதலாக

இணைய உலகின் முதல் தேடியந்திரமான ஆர்ச்சி, எப்டிபி ஆவண கோப்புகளில் இருந்து தேடுவதற்காக உருவாக்கப்பட்டது.

4. வாண்டக்ஸ்

வைய விரிவு வலைக்கான முதல் தேடியந்திரம் வாண்டக்ஸ் (Wandex) 1993 ல் வெளியானது. எம்.ஐ.டியை சேர்ந்த மேத்யூ கிரே உருவாக்கிய முதல் தேடியந்திர சிலந்தியான வேர்ல்ட் வைடு வெப் வாண்டரரை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டது. கிரே தற்போது கூகுளில் பணியாற்றுகிறார்.

5. கையளவு இணையம்

1993 டிசம்பரில் இணையத்தில் 623 இணையதளங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஆரம்ப தேடியந்திரங்களின் பணி எளிதாகவே இருந்தது.

6. வந்தது கிராளர்

இணைய பக்கங்களின் முழுத்தகவல்களையும் பட்டியலிட்டு தேட உதவிய முதல் தேடியந்திரமான வெப்கிராளர் 1994 அறிமுகமானது. நவீன தேடியந்திரங்களுக்கான முதல் படியாக இது அமைந்தது. இதற்கு முன்னர் தேடியந்திரங்கள் இணைய பக்கங்களின் தலைப்பு மற்றும் அறிமுக குறிப்புகளை மட்டுமே சேகரித்தன.

7. கூகுள் காலம்

எல்லாம் வல்ல கூகுளுக்கான அடிப்படை கோட்பாட்டான பேக்ரப் ( BackRub ) குறித்து கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் 1996 ல் பணிகளை துவக்கினர்.

8. யாஹு!

1990 களில் இணையத்தை ஆண்ட யாஹுவு வலைவாசலாக திகழந்ததே தவிர அதற்கென சொந்தமாக தேடியந்திரம் இல்லை. அல்டாவிஸ்டா, இங்க்டோமி மற்றும் கூகுள் ஆகியவற்றின் நுட்பங்களையே அது 2004 வரை பயன்படுத்தியது. மைக்ரோசாப்டும் இப்படி தான் ஆரம்பத்தில் கோட்டை விட்டு பின்னர் தாமதமாக சொந்த தேடியந்திரம் கண்டது.

* இணையத்தின் முதல் தேடியந்திரம் பற்றிய பதிவு:உலகின் முதல் தேடியந்திரம்.

* தமிழ் இந்துவில் எழுதும் தேடியந்திரம் தொடர்பான தொடருக்கான இணைப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *