Tag Archives: mother

'Good Morning Britain' TV Programme, London, Britain. - 26 Jan 2015

நெகிழ வைத்த பாராட்டும் ஒரு பேஸ்புக் தேடலும்

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக பேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார்.

சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரெயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானது தான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாட்டுக்கொண்டு அவனோடு விளையாடிக்கொண்டி வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் விளையாடியபடி மெல்ல உறங்கியும் விட்டான். ரெயிலில் அப்போது கூட்டம் அதிகமாகி பலரும் நின்று கொண்டிருந்ததால், சமந்தா தனது மடியில் தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்த மகனை தூக்கி தன் மீது அமர வைத்துக்கொண்டு இன்னொருவர் உட்கார இடம் கொடுத்திருக்கிறார்.

சமந்தாவின் இந்த பயணமும்,இதில் அவர் ஒரு நல்ல அம்மாவாக நடந்து கொண்டதும் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். இவ்வளவு ஏன் சம்ந்தாவே அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இடையே பிரிஸ்டல் ரெயில் நிலையத்தில் இறங்கிய பெரியவர் ஒருவர், சமந்தாவின் தோளை தட்டி அழைத்து, ’உங்கள் பையில் இருந்து கீழே விழுந்துவிட்டது’ என்று கூறியபடி ஒரு சீட்டை கையில் கொடுத்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.

f1அந்த சீட்டை பிரித்து பார்த்த போது அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.’ நீ இந்த தலைமுறைக்கே எடுத்துக்காட்டு. அன்பாக,அமைதியாக பிள்ளைக்கு நல்ல பழக்கத்தை கற்று கொடுத்தாய்’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்ததுடன், என் சார்பாக ஒரு காபி அருந்தி மகிழுங்கள் எனும் குறிப்புடன் 5 பவுண்ட் நோட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவளும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அதை படித்ததும் சமந்தா, முகம் தெரியாத மனிதரிடம் இருந்து இப்படி ஒருபாராட்டா ? என  நெகிழ்ந்து போய்விட்டார். 23 வயதான சமந்தா கணவர் இல்லாமல் தனியே மகனை வளர்த்து வருபவர். எனவே இந்த பாராட்டால் கூடுதலாக மகிழந்து போனார். தான் பிள்ளை வளர்க்கும் வித்திற்கு கிடைத்த சான்றிதழாகவும் நினைத்து உருகினார்.

இதை படித்ததும் என்னால் நம்பவே முடியவில்லை, இருபது முறையாவது மீண்டும் படித்திருப்பேன். நான் பார்த்திராத, பேசியிராத ஒருவர் இவ்வாறு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி அவரை எழுத வைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை, மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன்” என்று சமந்தா நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் கூறியுள்ளார்.

f3இந்த சம்பவத்திற்கு பின் தான் அவருக்கு அடடா அந்த மனிதருக்கு நன்றி கூட சொல்ல முடியாமல் போய்விட்டதே என்று தோன்றியிருக்கிறது. அந்த நல்ல மனிதரை எப்படியாவது நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரை தேடும் முயற்சியாக தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, அவரைப்பற்றிய விவரம் யாருக்கேமும் தெரிந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.

இந்த பேஸ்புக் தேடலும் , அதன் பின்னே உள்ள நெகிழ வைக்கும் கதையும் இணைய உலகை இளகச்செய்துள்ளது.

இளம் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், மற்ற்வர்கள் பற்றிய மனம் திறந்த பாராட்டு எத்தனை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்த அழகான சம்பவம் உதாரணம். பேஸ்புக் பதிவால் இது உலகம் முழுவதும் அறியப்பட்டதாகவும் ஆகியிருக்கிறது.

——–

 

விகடன்.காமில் எழுதியது; நன்றி விகடன்.காம்

இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் !

daughter3ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் அசந்து விடுவீர்கள். ஆனால் அந்த புகைப்படங்களின் அழகை விட அதன் பின்னே இருக்கும் தாய்மையும் நம்பிக்கையும் தான் உங்கள் உள்ளத்தை தொடும்; நெகிழ வைக்கும். கூடவே நம்பிக்கை என்றால் என்ன என்றும் புரிய வைக்கும்.

அந்த புகைப்படங்களின் மையமாக இருக்கும் குட்டி தேவைதையின் பெயர் வொய்லெட். 5 வயதாகும் வொய்லெட்டின் தாயான ஹோலி ஸ்பிரிங் ஒரு புகைப்பட கலைஞர். காமிராவை தொழிலாக கொண்ட ஹோலி ஸ்பிரிங் தனது செல்ல மகளை விதவிதமாக புகைப்படம் எடுத்து பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
ஒரு தாய் தனது மகளை விதவிதமாக படம் எடுக்க ஆசைப்படுவதோ, அதை ஆர்வத்துடன் பகிர்ந்து கொளவ்தோ பெரிய விஷயம் இல்லை. அதிலும் அந்த அம்மா புகைப்பட கலைஞராக இருக்கும் போது இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த புகைப்படங்கள் வழக்கமான புகைப்பங்கள் அல்ல. இவை ஒரு தாயின் பாசப்பதிவுகள். அதன் பதிவுகளின் மையமாக இருக்கும் குட்டி தேவதை ஒரு அசாதரனமான சிறுமி. அதனால் தான் இந்த புகைப்படங்கள் அழகை மீறிய ஆன்மாவோடு கவர்கின்றன.

ஐந்து வயதாகும் அந்த குட்டி தேவதை வொய்லெட் ஸ்பிரிங் பிறவி குறைப்பாடு காரணமாக முழுவதும் வளர்ச்சி அடையாத ஒரு கையுடன் பிறந்தவர். அதோடு ஒரு வகையான வயிறு மற்றும் சிறுகுடல் தொடர்பான நோயாலும் பாதிக்கப்பட்டவர்.

இந்த நோயால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.அறுவை சிகிச்சையின் போது உயிர் பிழைத்து வந்தாள் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து சிறுமியின் வாழ்க்கை சோதனையானதாகவே இருந்து வருகிறது. மகள் அதிக காலம் வாழாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதை விட தாயுள்ளத்தை உலுக்ககூடியது எது?
daughter5
இந்த உணர்வுக்கு ஆளான ஹோலி ஸ்பிரிங், ஒரு வேளை மகள் தன்னை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டால் அவளது அரிய நினைவுகளுக்கான சாட்சி தன்னிடம் இல்லாமலே போய்விடுமே என கலங்கியிருக்கிறார். அப்போது தான் அவரது கணவர் , காமிரா ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். அதிலிருந்து அவர் தனது மகளின் வளர்ச்சியை புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தான் வியக்க வைக்கும் தன்மையோடு இருக்கின்றன.

இந்த படங்களில் எல்லாம் அவரது மகள் குட்டி தேவதை போல ஒரு கற்பனை உலகின் நடுவே காட்சி அளிக்கிறார். அந்த கற்பனை உலகம் அந்த தேவதையின் உள்ளத்தில் இருந்து உருவானவை. அம்மா அதற்கு காட்சி வடிவம் கொடுத்திருக்கிறார்.

ஸ்பிரிங் பொதுவாக மகளை மாடலாக்கி படம் எடுத்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படமும் விஷேசமானவை. முதலில் மகளை விதவிதமான போஸ்களில் தயார் செய்கிறார். சிறுமிக்கு ஆடை அணிவதில் அதிக ஆனந்தம் என்பதால் மகிழ்ச்சியோடு பிடித்தமான உடை அணிந்து தயாராகி விடுகிறாள். அதன் பின் தனது மனதில் தோன்றும் கற்பனைகளை விவரிக்கிறாள். அந்த கற்பனைகளை அம்மா தனியே புகைப்படமாக எடுத்திக்கொள்கிறார். பின்னர் அந்த புகைப்படங்கள் நடுவே மகளை இடம்பெற வைத்து புதிய புகைப்படத்தை உருவாக்குகிறார்.
இந்த படங்களில் தான் சிறுமி வொய்லெட் குட்டி தேவதையாக, சிண்ட்ரல்லா போல ஒரு படகின் மீது அமர்ந்திருக்கிறாள். அப்பாவியான ஒட்டகச்சிவிங்கியை பார்த்து வியக்கிறாள். தேவதை போல நடுக்காட்டில் கைநீட்டி காட்சி அளிக்கிறாள். ஒரு பட்டாம்பூச்சி போல நிலவை எட்டிப்பிடிக்கிறாள். இப்படி இன்னும் பல வடிவங்களில் அந்த தேவதை வசிகறிக்கிறாள்.

இந்த படங்கள் ஒவ்வொன்றிலும் விஷேசமான செய்தி இருக்கிறது. தன் மீது நம்பிக்கை கொண்டால் , வாழ்க்கையில் சாதிப்பதற்கு அளவும் இல்லை, எந்த தடையும் இல்லை’ என்னும் நம்பிக்கையை இந்த புகைப்ப்டங்கள் மூலம் அந்த தாய் தனது மகளின் மனதில் ஏற்படுத்த முயன்று வருகிறார்.
ஒரு வித்திதில் இந்த நம்பிக்கையை கொடுத்ததே அவரது மகள் தான். 2 வயதாக இருக்கும் போது, மகள் அவரிடம் தனது கை எப்போது வளரும் என கேட்டிருக்கிறார். அந்த கை வளராது எனும் உண்மையை சொல்ல முடியாமல் அவர் தனக்குள் அழுது தவித்திருக்கிறார். ஆனால் மகள் அதன்பின் அந்த நிலையை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். பிஞ்சு உள்ளம் தன்னைதானே மாற்றிக்கொண்ட விதத்தை பார்த்த அம்மா தானும் மன உறுதி பெற்றிருக்கிறார்.

என மகள் என படங்களுக்கு மாடல் மட்டும் அல்ல, அவள் எனக்கான ரோல்மாடலும் தான், அவளிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன் ‘ என பேட்டி ஒன்றில் ஹோலி ஸ்பிரிங் கூறியிருக்கிறார்.
மகளுடன் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு பொக்கிஷம் ,ஒவ்வொன்றும் கொண்டாட்டத்தின் மைல்கல் என்றும் அவர் சொல்கிறார்.
daughter6
இந்த புகைப்படங்கள் வளரந்த பின் மகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். ’ இந்த படங்கள் அவளது உடல் குறைபாட்டை மீறி, அவளது வயதை மீறி எல்லையில்லா எதிர்காலத்தை காட்டும் வகையில் இருப்பதாக’ அவர் கூறுகிறார்.

இந்த புகைப்படங்களை தனது இணையதளம் மூலமு பேஸ்புக் பக்க மூலமும் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
பேஸ்புக்கில் இந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதன் அழகு மற்றும் அதன் பின்னே உள்ள நெகிழ்ச்சியான கதையை அறிந்து உருகிப்பொகின்றனர. பல்ரும் உங்கள் மகள் தான் அழகு என கருத்து தெரிவித்துள்ளனர். ‘
இன்னும் சிலர் இதே போல உடல்ரீதியான குறைபாடு கொண்ட தங்கள் குழந்தைகள் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு , இந்த குறைபாட்டை புகைப்படங்கள் வழியே வெல்லும் முயற்சியை மனதார பாராட்டியுள்ளனர்.
97 வய்தான பெண்மணி ஒருவர், நானும் ஒற்றைக்கையுடன் பிறந்தேன்.ஆனால் என்னை ஊக்குவிக்க யாரும் இல்லை.நானாக தடைகளை வென்று வளர்ந்தேன் என குறிப்பிட்டு இந்த பஞ்சுக்கு நல்ல வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மகளின் குறை தெரியாமல் இருக்க அவளுக்கு புகைப்படம் மூலம் புது உலகை உருவாக்கத்தரும் இந்த தாயின் முயற்சியை இணையத்தில் படித்து லட்சக்கணக்கானோர் இந்த குட்டி தேவைதையை கொண்டாடி மகிழ்கின்றனர்.
’எப்போதும் உங்கள் குழந்தைகளின் சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் நேரத்தை செலவிடுங்கள் , அவர்களுக்கு சுவாரஸ்யத்தை அளியுங்கள், அவர்கள் உங்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளிப்பார்கள்’ என ஹோலி ஸ்பிரிங் தனது பேஸ்புக் பக்கத்தில் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். எத்தனை அழகான கோரிக்க்கை அது!.

ஹோலி ஸ்பிரிங்கின் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/HSpringPhotography?ref=stream

ஹோலி ஸ்பிரிங்கின் இணையதளம்: http://www.hollyspringphotography.com/

——-
நன்றி-விகடன்.காம்

120103_FAM_twitterCloser

அம்மா டிவிட்டரில் என்னை பின் தொடர்ந்த போது!

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது சகோதரர்களையோ டிவிட்டரில் பிந்தொடர நினைத்திருக்கிறோமா?இப்படி அப்பாவையோ அல்லது அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா?

அப்பாவையோ அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்வது வெறும் புதுமை அல்ல;அது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்ககூடும் என்பதை அமெரிக்காவை சேர்ந்த மயா கவுர்னியேரி அழகாக விவரித்திருக்கிறார்.

டிவிட்டர் அம்மாவை மேலும் சரியாக புரிய வைத்ததாக மீண்டும் அம்மாவோடு ஒன்ற வைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.இதனை விவரித்து அவர் எழுதியுள்ள கட்டுரையை நவீன இலக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

டிவிட்டர் திறக்ககூடிய புதிய வாயில்கள் பற்றி உணர்த்தும் அழகான கட்டுரை அது.டிவிட்டர் எத்தகைய தரிசனத்தை தரக்கூடும் என்றும் உணர்த்தவும் செய்யும் கட்டுரை.

டிவிட்டரால் உண்டான சின்ன சங்கடத்தோடு தான் கட்டுரையை அவர் ஆரம்பிக்கிறார்.

டிவிட்டரில் அம்மா அவரை பின் தொடர்த்துவங்கியதுமே மற்றவர்கள் பின் தொடர்வதற்கும் அம்மா பின்தொடர்வதற்கும் வேறுபாடு இருக்கிறது என அவர் புரிந்து கொண்டார்.

விஷய்ம் இது தான்,டிவிட்டரில் தோழி ஒருவரது சகோதரார் அழகாக இருப்பதாக மயா குறும்பதிவு செய்திருந்தார்.அதை படித்து விட்டு அவரது அம்மா,ரொம்ப அழகோ எனப்து போல கேட்டிரிந்தார்.மகள் வேறொரு ஆண் மகனின் அழகை வர்ணிப்பதை நாசுக்காக அவர் கேள்விக்குள்ளாகி இருந்தார்.

அம்மாவை பின்னூட்டத்தை படித்து நாக்கை கடித்து கொண்ட மயா,அந்த குறும்ப்திவை டெலிட் செய்து விட்டார். அதன் பிறகு தனது பகிர்வுகளில் கவனமாக இருக்கத்துவங்கினார்.

ஒரு நாள் அம்மாவின் குறும்பதிவுகளை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த போது தாய் தன்னை பற்றிய அறிமுக குறிப்பில் ஓவியர் என்ற வார்த்தையை சேர்த்திருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தார்.தாய் தன்னை ஓவியர் என்று அழைத்து கொள்ள விரும்புவதை புரிந்து கொண்ட மயா அம்மாவின் இந்த விருப்பத்தை தெரிந்து கொள்ளாமல் போனோமே என்று வருத்தப்பட்டார்.

அமாவை பற்றி இன்னும் என்னவெல்லாம் தனக்கு தெரியவில்லை என்று அறிந்து கொள்வதற்காக தொடர்ந்து ஆர்வத்தோடு அம்மா குறும்பதிவுகளை படித்து வந்தார்.

ஒரு குறும்பதிவில் அம்மா புகைப்படக்கலையில் ஆர்வம் வந்திருப்பது பற்றி குறிப்பிடிருந்தார்.

மற்றொரு பதிவில் சவான்னா என்னும் நகரை விரும்புவதாக குறிப்பிட்டதை அப்டித்து வியந்து போனார்.எப்போதுமே நியூயார்க் நகரை புகந்து பேசும் அம்மா சவான்னாவின் தன்மையை விரும்பத்துவங்கியிருந்தது புதிய செய்தியாக இருந்தது.

அப்போது தான் அம்மாவுக்கும் தனக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டிருப்பதை அவர் புரிந்து கொண்டார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேள்விகளை கேட்டு பல காலமாகிவிட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார்.

அருகருகே இருந்தும் பாசத்தோடு பல விஷயங்களை பேசியும் கூட அம்மாவை பற்றி தெரிந்து கொள்ளாத விஷயங்கள் இருக்கின்றன என்பது அவரை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அந்த வருத்ததோடு அம்மாவின் புகைப்பட கலை ஆர்வம் பற்றி விசாரித்து இமெயில் ஒன்றை அனுப்பினார்.பொதுவாக அவரது அம்மா இமெயில்களுக்கு பதில் அளிக்க சில நாட்கள் எடுத்து கொள்வது வழக்கம்.ஆனால் இந்த மெயில்லுக்கு மட்டும் அன்றைய தினமே பதில் அனுப்பியிருந்தார்.அதில் புகைப்படக்கலையில் தனக்குள்ள ஆர்வத்தை வரித்திருந்ததோடு ஏற்கனவே தான் எடுத்திருந்த புகைப்படங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் புகைப்படக்கலை எப்படி தன்னையே மறு அறிமுகம் செய்து கொள்ள உதவுகிறது என்றும் எழுதியிருந்தார்.

இவற்றை எல்லாம் நாம் எப்படி கவனிக்க தவறினோம் என்ற எண்ணம் மயாவுக்கு மீண்டும் உண்டானது.

அப்போது தான் டிவிட்டர் அம்மாவிடம் தன்னை மீண்டும் நெருக்கமாக வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தார்.