Tag Archives: muslims

சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்களிப்பை சொல்லும் செயலி

muslimஸ்மார்ட்போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அமைகின்றன. பொதுவாக பயன்பாட்டு வகை செயலிகள், பொழுதுபோக்கு சார்ந்தவை, கேம்கள் ஆகிய ரகங்கள் தான் அதிகம் அறியப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயலிகளை பயன்படுத்தலாம். இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது முஸ்லீம் ஃபிரிடம் பைட்டர்ஸ் செயலி (‘Muslim Freedom Fighters’).

பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த செயலி இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை எடுத்துச்சொல்கிறது.

பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பலமாக இருந்து வருகிறது. இந்திய சுதந்திர போராட்டமும் இதற்கு சாட்சியாக இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய போது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அதில் பங்கேற்றனர். இக்கால தலைமுறைக்கு இதை எடுத்துச்சொல்லும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது.

ஐதாராபாத்தை சேர்ந்த மென்பொறியாளரான சையது காலீத் சைபுல்லா (Syed Khalid Saifullah ) இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒரு சில குழுக்கள் இருட்டடிப்பு செய்ய முயன்று வருவதாகவும், அதில் அவர்கள் வெற்றியும் பெற்று வரும் நிலையில், முஸ்லிம்களின் பங்களிப்பை புரிய வைக்கும் வகையில் இந்த செயலியை உருவாக்கியதாக காலீத் கூறுகிறார். பொதுவாகவே முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் , ஐந்து முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை கூறுமாறு கேட்டால் 95 சதவீதம் பேருக்கு அது சாத்தியமாவதில்லை என்றும் கூறும் காலீத், இந்த நிலையை போக்கவே, இந்த விஷயம் தொடர்பாக விரிவான தகவல்களை அளிக்கும் செயலியை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக கூறுகிறார்.

இந்த எண்ணத்துடன் ஆய்வு செய்வதவர் ஆரம்ப்பத்தில் போதிய தகவல்கள் கிடைக்காமல் அல்லாடினாலும், பின்னர் சையது நஸீர் அகமது எனும் பத்திரிகையாளர், எழுத்தாளர் இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி விவரித்து எழுதிய தி இம்மார்டல்ஸ் புத்தகத்தை கண்டறிந்தார். நூலாசிரியர் 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியா முழுவதும் ஆய்வு செய்து அரிய தகவல்களை சேகரித்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு 155 முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்களை செயலியாக அமைத்துள்ளார். இந்த செயலியை இவர் உருவாக்கியுள்ள விதம் இதை மிகவும் சுவாரஸ்யமாக ஆக்குகிறது. சுதந்திர போராளிகள் தொடர்பான தகவல்கள் பெண்கள், வழக்கறிஞர்கள், மன்னர்கள், தியாகிகள், பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், மதகுருமார்கள் என பல்வேறு தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பை கிளிக் செய்தவுடன் அதில் பட்டியலிடப்பட்டுள்ள வீர்ர்களின் சுருக்கமான வாழ்க்கை சித்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். அதோடு ஒவ்வொரு வீர்ர்கள் தொடர்பான தேர்விலும் பயனாளிகள் பங்கேற்கலாம். அதாவது அவர்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் இந்த தேர்வில் பங்கேற்கலாம். ஒவ்வொரு தேர்வாக சரியாக பதில் அளித்து அடுத்த வீர்ர் தேர்வுக்கு முன்னேறலாம். தேர்வில் பங்கேற்காமலே கூட தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றாலும், தேர்வில் பங்கேற்று சரியான பதில்களை அளித்தால் செயலி மூலம் அதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்களை நண்பர்களுடன் சமூக ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்த முதலில் அதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

muslim2மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் நம்முடைய சுதந்திர போராட்ட வரலாற்று தகவல்களை சுவாரஸ்யமான முறையில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் சுதந்திர போர் என வர்ணிகப்படும் 1857 சிப்பாய் கிளர்ச்சியில் பங்கேற்ற பேகம் ஹஸ்ரத் மஹால், இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான மசுமா பேகம், பகத்சிங் விடுதலைக்காக சட்டப்போராட்டம் நடத்திய முகமது ஆசிப் அலி, இரு தேசம் கொள்கையை எதிர்த்த டாக்டர் சையது முகமது, மாணவராக இருக்கும் போதே சுதந்திர போராட்ட்த்தில் இணைந்த டாக்டர். சாதிக் அலி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட டாக்டர்.குன்வர் முகமது அஷரப், சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்து போராடிய ஆகா சுல்தான் முகமது ஷா என சுதந்திர போராட்டத்தில் சுடர் விட்ட பல ஆளுமைகளை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

மென்பொருள் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் மிக்க காலீத் 4 மாத காலம் முயற்சி செய்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இதில் உள்ள கேள்விகளை வடிவமைக்க அவரது நண்பரான அமானுல்லா கான் உதவியுள்ளார்.

மறக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த விழிப்புணர்வை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவது மிகுந்த மனநிறைவை தருவதாக காலீத் சொல்கிறார். இந்த செயலியை உருவாக்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், இதை மக்களிடம் கொண்டு செல்வது தான் சவாலாக இருக்கிறது என்கிறார். எனினும் இந்த செயலி மெல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது.

சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 6,400 பேருக்கு மேல் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார். அதுமட்டும் அல்லாமல், பலரும் ஆர்வத்துடன் இதில் உள்ள தேர்வில் பங்கேற்று வருவதாகவும் அவர் உற்சாகத்துடன் சொல்கிறார்.

இந்த செயலிக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து தமிழ், உருது உள்ளிட்ட மொழிகளிலும் இதை கொண்டு வர இருப்பதாக சொல்கிறார். ஏற்கனவே பலரிடம் இருந்து இதற்கான கோரிக்கைகள் வரத்துவங்கியிருக்கின்றன.

அடுத்த கட்டமாக, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் செயலியை பிரபல சமூக செயற்பாட்டாளரான டாக்டர்.ராம் புனைனி (Dr.Ram Puniani) வழிகாட்டுதலுடன் உருவாக்கி இருப்பதாகவும், குடியரசு தினத்தன்று இதை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 

ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.raylabs.muslimfreedomfighters

 

 

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

 

இது நேர்மையான தேடியந்திரம்!

halal-search-640x480சில ஆண்டுகளுக்கு முன் ’ஐயம் ஹலால்’ என்ற தேடியந்திரம் அறிமுகம் ஆனது தெரியுமா? இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் அது. இணையத்தில் தேடும் போது இஸ்லாமியர்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலான பாதுகாப்பான முடிவுகளை மட்டுமே அணுக இந்த தேடியந்திரம் வழி செய்தது.

ஆபாசமான தளங்கள் மற்றும் பதங்களை விலக்குவதன் மூலம், பொருத்தமான, பயனுள்ள தளங்களை மட்டும் முன்வைக்கும் வகையில் அதன் தேடல் நுட்பம் அமைந்திருந்தது.
2009 ல் அறிமுகமான போது இந்த தேடியந்திரம் இந்த வகையில் புதுமையான தேடியந்திரம் என்று வர்ணிக்கப்பட்டது.

ஐயம் ஹலால் இப்போது, காலாவதியான தேடியந்திரங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது. புதுமையான நோக்கத்துடனும், அதற்கேற்ற தேடல் நுட்பத்துடனும் அறிமுகமான தேடியந்திரம் மூடப்பட்டது வருத்தம் தருகிறது. ஆனால் ஐயம் ஹலால், நேர்மையான தேடியந்திரங்களின் பட்டியலிலும் சேர்ந்திருக்கிறது என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அதாவது ஐயம் ஹலால் தனது சேவை நிறுத்தப்பட்டு விட்டது என்பதை பகிர்ந்து கொண்டு அதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது. 2011 ல் மூடப்பட்டுவிட்ட நிலையிலும் அதன் முகப்பு பக்கத்தில் இந்த தகவல்கள் ஒரு அறிவிப்பாக இடம்பெற்றுள்ளன.

இணைய உலகில் இது கொஞ்சம் அபூர்வமானது தான். துவக்கப்படும் எல்லா இணையதளங்களும் வெற்றி பெறுவதில்லை. பல காரணங்களினால் இணையதளங்கள் தொடர்ந்து நடத்தப்படாமல் மூடப்படுகின்றன, கைவிடப்படுகின்றன.

இதில் சிக்கல் என்ன என்றால், பெரும்பாலான இணையதளங்கள் மூடப்பட்ட பின் இருந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விடுவது தான். குறிப்பிட்ட அந்த தளத்திற்கு என்ன ஆனது, அதன் சேவை ஏன் நிறுத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதையுமே அறிய முடியாது. இன்னும் மோசம் என்ன எனில், பல தளங்களை கிளிக் செய்தால் அவற்றுக்கு தொடர்பே இல்லாத விளம்பர இணைப்புகள், வேற்று மொழி விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும். தேடியந்திரங்களுக்கும் இது பொருந்தும்.

மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்திய தளங்கள் அல்லது தேடியந்திரங்களை பின்னர் தேடிச்செல்லும் போது அவற்றின் இடத்தில் வெறுமையை எதிர்கொள்ளும் போது பெரும் ஏமாற்றமாக இருக்கும். அந்த சேவை இல்லாமல் போனதோடு அதற்கான காரணமும் தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கூடுதல் ஏமாற்றத்தை அளிக்கும்.
இதற்கு மாறாக வெகு சில தளங்களே அவை மூடப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கும். இந்த அபூர்வ தளங்களில் ஒன்றாக ஐயம் ஹலால் தேடியந்திரம் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் இந்த சேவை நிறுத்தப்பட்டதாகவும், ஐயம் ஹலால் தொடர்பான நினைவுகளை உயிருடன் வைத்திருப்பதற்காக இந்த பக்கம் பராமரிக்கப்படுவதாகவும் அதன் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேடியந்திரத்தின் நோக்கம், செயல்பாடுகள் பற்றியும் சுருக்கமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அது செயல்பட்ட வரை புதுமையான சேவையாக இருந்தது பற்றியும் பெருமிதத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் நிச்சயம் ஐயம் ஹலால் இணைப்பை நாடி செல்பவர்களுக்கு ஆசுவாசத்தை அளிக்கும்.
உண்மையில் ஒவ்வொரு நல்ல இணையதளங்களிடம் இருந்தும் இணையவாசிகள் எதிர்பார்க்கும் தகவல் இது.
ஐயம் ஹலால் தேடியந்திரத்தின் நிறுவனர் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடிகிறது. ரெஸா சார்டெஹா எனும் இளம் தொழில்முனைவோர் தான் இந்த தேடியந்திரத்தை நிறுவியவர். தற்போது ஸ்டார்ட் அப் பரப்பில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் இவர், அண்டர்டவலப்டு எனும் இணைய நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

தனது டிவிட்டர் பக்கத்தில், இவர் அண்டர்டவலப்டு மற்றும் விருது வென்ற ஐயம் ஹலால் தேடியந்திரத்தின் நிறுவனர் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
homepagelogo
பின் குறிப்பு: ஐயம் ஹலால் மூடப்பட்டு விட்டாலும், ஹலால் கூகுளிங் தேடியந்திரம் அது போலவே பாதுகாப்பான முறையில் தகவல்களை தேட உதவுகிறது: http://halalgoogling.com/

* ஐயம் ஹலால் பற்றிய பழைய பதிவு: http://cybersimman.com/2009/09/13/search-5/

* ஐயம் ஹலால் தளம்:http://www.imhalal.com/index.php

* ஐயம் ஹலால் நிறுவனர் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/rsardeha

RamadanGif

ரம்ஜான் நோண்புக்கு உதவும் கூகுள் இணையதளம்

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் மாத நோண்பு தொடர்பான தகவல்களை எளிதாக பெறும் வகையில் கூகுள் ரம்ஜான் கம்பேனியன் எனும் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
முஸ்லீம்களுக்கு ரம்ஜான் மாதம் புனித மாதமாக அமைகிறது. இந்த மாதம் முழுவதும் அவர்கள் நோண்பு கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லீம்கள் சரியான நேரத்தில் நோண்பை கடைப்படித்து வருகின்றனர்.

இந்த புனித மாதத்தில் முஸ்லீம்களுக்கு உதவும் வகையில் கூகுள் ரம்ஜான் தொடர்பான இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது.ரம்ஜான் கம்பேனியன் எனும் அந்த இணையதளத்தில் சரியான நேரத்தில் நோண்பை கடைபிடிக்க வசதியாக தினந்தோறும் சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமனமாகும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய நேரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
Google_Play_Ramadan_framed
இது தவிர இந்த புனித மாதத்திற்கான உணவுகளை செய்யும் முறைகள் மற்றும் பார்க்க கூடிய வீடியோக்கள் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறது. இப்தார் விருந்துக்கு குறித்த நேரத்திற்கு செல்லும் வகையில் பயணத்தை திட்டமிட போக்குவரத்து தகவல்களையும் அளிக்கிறது.

மேலும் கூகுள் நவ் வசதி மூலம் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள ஹலால் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கூகுள் தனது ஆன்ராட்டு பிளே ஸ்டோரில் ரம்ஜான் மாதம் தொடர்பான சிறப்பு செயலிகளை அடையாளம் காட்டும் வெல்கம்மிங் ரம்ஜான் 2015 எனும் பகுதியையும் துவக்கியுள்ளது.

இணையதள முகவரி:https://ramadan.withgoogle.com/#/