Tag Archives: photi

விநாடிக்கு 24 லட்சம் இமெயில்!

email
இமெயில் பழங்காலத்து சங்கதி என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? எனில் மேக்ஸ் யூஸ் ஆப் தொழில்நுட்ப செய்தி தளம் பட்டியலிட்டிருக்கும் இமெயில் தொடர்பான புள்ளி விவரங்கள் உங்களுக்கு இரட்டிப்பு ஆச்சர்ய்த்தை அளிக்க கூடும். ;http://www.makeuseof.com/tag/5-staggering-email-stats-that-are-hard-to-believe/
முதல் புள்ளிவிவரத்தை பார்ப்போமா? தினந்தோறும் பரிமாறிக்கொள்ளப்படும் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 20,500 கோடி மெயில்கள் ஆகும். அதாவது விநாடிக்கு 24 லட்சம் இமெயில்கள் பறந்து கொண்டிருக்கின்றன.நம்ப முடியாமல் இருக்கிறதா? 2015ம் ஆண்டு கணக்கு இது. இப்போது இன்னும் கூட அதிகமாகி இருக்கலாம்.ஆனால் இன்று, இந்த மெயில்களில் பெரும்பாலானவை(90சதவீதம்)ஸ்பேம் என்படும் குப்பை மெயில்கள் மற்றும் வைரஸ் வாகனமாக மாறிவிடும் வில்லங்க மெயில்களாகும்.

ஆனாலும் கூட தினமும் 250 கோடி பயனாளிகள் உண்மையான மெயில்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னொரு கணக்கு படி இமெயில் பயனாளிகளில் 91 சதவீதம் பேர் தினம் ஒரு முறையேனும் தங்கள் முகவரி பெட்டியை பார்க்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.

இமெயில் சேவைகளில் பிரபலமாக இருக்கும் ஜிமெயில் 100 கோடி தீவிர பயனாளிகளை கொண்டிருக்கிறது. ஆக இமெயிலின் பளபளப்பு வேண்டுமானால் குறைந்திருக்கலாம்,அதன் பயன்பாடு அல்ல என்பதை இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் இல்லையா?

——
590ccd51-c884-428a-bcc0-2eadaeb0a378
தளம் புதிது: கோகோ தோட்டம்
புதிதாக தொழில் துவங்கலாம் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படி என்றால் ஏதாவது ஒரு கட்டத்தில் உங்கள் வர்த்தகத்திற்கான லோகோவை உருவாக்கியாக வேண்டும். லோகோ உருவாக்கத்தில் உங்களுக்கு உதவி தேவை என்றால் லோலோகார்டன் தளம் அதற்காக என்றே இருக்கிறது. இந்த தளத்தில் பயனாளிகள் தங்களுக்கான இலவச லோகோவை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். லோகோ உருவாக்கத்திற்கான சாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னதாக இந்த தளத்தில் உள்ள மாதிரி லோகோக்களை பார்த்து உங்களுக்கான லோகோ எப்படி இருக்கலாம் என்பது தொடர்பான ஊக்கத்தையும் பெறலாம்.தனித்தனி தலைப்புகளில் பலவிதமான துறைகளைச்சேர்ந்த லோகோக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக என்றே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள முகவரி; http://www.logogarden.com

———–

செயலி புதிது; காற்றின் தரம் அறிய

helpchat_airqualityindex_main
ஹெல்ப்சேட் செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம். ஸ்மார்ட்போன் பயனாளிகளின் டிஜிட்டல் உதவியாளராக செயல்பட்டு பயனுள்ள தகவல்களை அளிக்க கூடிய இந்த செயலி தற்போது இந்திய நகரங்களில் காற்றின் தரத்தை அறிந்து கொள்ள வழி செய்யும் தகவல்களையு அளிக்கத்துவங்கியிருக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்களை பிரதானமாக வைத்துக்கொண்டு இந்த சேவையை ஹெல்ப்சேட் அளிக்கிறது. காற்றின் தரம் பற்றிய விவரம் ஆறு பிரிவுகளில் பச்சை முதல் சிவப்பு வரையான வண்ணங்களில் உணர்த்தப்படுகிறது. காற்று மாசு அடிபடையில் எந்த எந்த இடங்களை தவிர்க்கலாம் என்று முடிவு செய்ய இது உதவலாம்.திரைப்படங்கள்,டீல்கள்,வானிலை ஆகிய விவரங்களுடன் காற்று மாசு பற்றிய தகவலை முகப்புத்திரையிலேயே அளிக்கிறது.
சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு:https://www.helpchat.in/

=======
prehistoric-68074_640வீடியோ புதிது; டைனோசர் நிறம் என்ன?
ஒரு காலத்தில் பூமியில் இருந்து மறைந்த பிரம்மாண்ட விலங்கினமான டைனோசர்கள் ஆய்வில் அறிந்து கொள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.டைனோசர்களின் படிமங்களை கொண்டு அவை எப்படி இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் பல தகவல்களை கண்டறிகின்றனர். ஆனால் டைனோசர்கள் என்ன நிறத்தில் இருந்திருக்கும்? அதை எப்படி அறிவது? இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் எப்படி விடை அறிகின்றனர் என்பதி டெட் அமைப்பின் புதிய வீடியோ விளக்குகிறது. படிம ஆய்வில் துவங்கி ஒளியில் வரை பல விஷயங்களை இதில் ஆய்வாளரான லென் பிலாக் விளக்குகிறார். டைனோசர்கள் பற்றி மட்டும் அல்ல இயற்பியலின் அடிப்படைகளையும் சுவாரஸ்யமாக தெரிந்து கொள்ளலாம்.

வீடியோவை காண; http://ed.ted.com/lessons/how-do-we-know-what-color-dinosaurs-were-len-bloch#review

——–

இணைய கால புகைப்படம் இது!

4439-hjvedj-1000x510இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க கூடியதாக இருந்து, அது சமூக வலைதளத்தில் பகிரப்படும் நிலை ஏற்பட்டால் போதும்- அது இணைய பரப்பு முழுவதும் உலா வரத்துவங்கிவிடும்.
அன்மையில் இப்படி வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்திய புகைப்படம் நம் காலத்து புகைப்படம் எனும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது.

அந்த புகைப்படம் மனசாட்சியை உலக்க கூடிய வகையை சேர்ந்ததில்லை என்றாலும் கூட இக்கால தலைமுறையை யோசிக்க வைக்க கூடிய படமாக இருப்பது தான் விஷேசம்.

ஹாலிவுட் புதிய படம் ஒன்று தொடர்பான நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.ஹாலிவுட் நாயகன் ஜானி டெப் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றதால் அவர்களை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கூடிய நிலையை படம் பிடித்துக்காட்டும் அந்த காட்சியை முதலில் பார்த்தால் சாதாரணமாக தோன்றும்.நட்சத்திரங்களை பார்க்க திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் கையில் ஸ்மார்ட்போனை வெவ்வேறு கோணங்களில் நீட்டியபடி அந்த தருணத்தை படம் பிடிக்க முயன்று கொண்டிருப்பதை தான் அந்த படம் உணர்த்துகிறது.

ஸ்மார்ட்போன் யுகத்தில் எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளகூடிய வெகு இயல்பான காட்சி தான் இது இல்லையா?
ஆனால் அந்த படத்தில் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் பலதரப்பட்ட ரசிகர்கள் நடுவே வயதான பெண்மணி ஒருவர் தனித்திருப்பதை பார்க்கலாம். அந்த மூதாட்டியில் கையில் ஸ்மார்ட்போன் இல்லை என்பது மட்டும் அல்ல அவர் தன்னைச்சுற்றிய பரபரப்பு பற்றி கூட கவலைப்படாமல் ஒரு உண்மையான ரசிகையின் ஆர்வத்துடன் நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருப்பதை உணரலாம்.
ஆம், அந்த வயதான பெண்மணி நம் காலத்தில் மிகவும் அரிதாக ஆகிவிட்ட ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது
அரிய தருணங்களை ஸ்மார்ட்போனில் படமெடுத்து ,சமூக ஊடகங்களில் பகிரும் வேட்கையில் அந்த தருணத்தை அனுபவிக்க தவறுவதற்கு பதிலாக அந்த பெண்மணி நட்சத்திரங்களை நேரில் பார்க்க கிடைத்த தருணத்தில் லயித்திருக்கிறார்.

தற்செயலாக அமைந்த அந்த காட்சி பல விஷயங்களை சொல்லாமல் சொல்லி விடுகிறது.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, சுற்றுலா பயணங்களாக இருந்தாலும் சரி அப்போதைய கணங்களை அனுபவிப்பதை விட அந்த காட்சிகளை ஸ்மார்ட்போனில் படமெடுப்பதிலோ அல்லது சுயபடம் எடுப்பதிலோ தான் பெரும்பாலானோர் கவனம் செலுத்துகின்றனர். பிள்ளைகளின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கூட அவர்களின் திறமை வெளிப்படும் வித்ததை பார்த்து ரசிப்பதற்கு பதில் அந்த காட்சியை காமிரா கண் கொண்டு பார்க்க முற்படுகின்றனர்.

இந்த பழக்கம், நாம் வாழும் தருணங்களை தவறவிடுவதற்கு சமம் என்று சமூகவியல் வல்லுனர்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த முரணை, ஸ்மார்ட்போன் கூட்டத்தினர் நடுவே தனித்து நிற்கும் வயதான பெண்மணி மூலம் கச்சிதமாக உணர்த்தும் இந்த புகைப்படம் முதலில் அமெரிக்க நாளிதழான போஸ்டன் குளோபில் வெளியானது.
அந்த படத்தை பார்த்து ரசித்த வைனே டால்பர்க் எனும் டிவிட்டர் பயனாளி தனது டிவிட்டர் பக்கத்தில் (@waynedahlberg) அதை பகிர்ந்து கொண்டார்.எக்காலத்திலும் என்னை மிகவும் கவர்ந்த புகைப்படம் எனும் வாசகத்துடன் அவர் பகிர்ந்து கொண்ட அந்த படம் உடனே டிவிட்டரில் பலரால் ரிடீவிட் செய்து பாராட்டப்பட்டது.புகைப்படம் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்த்துவங்கிய நிலையில் அதை வெளியிட்ட டால்பர்க், அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் ஜான் பிளாண்டிங் பெயரையும் டேக் செய்திருந்தார்.
இணைய வல்லுனரான டிம் ரெய்லி,அந்த படத்தை சுட்டிக்காட்டி அந்த தருணத்தில் பெண்மணி லயித்திருக்கிறார் என பாராட்டியிருந்தார். பிரெண்ட் ஜென்சன் என்பவர் ,நிகழ் காலத்தில் இருந்து ,தன்னைச்சுற்றிய தருணத்தை ரசிக்க தெரிந்த ஒருவர் என பாராட்டியிருந்தார்.

இன்னொருவரோ, இன்றைய காலத்தில் நாம் வாழும் கணத்தை அனுபவித்து ரசிக்க மறந்து கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். இணைய யுகத்தின் கவலை தரும் யதார்த்தாம் இது!.

——

4ee222d7-9ce1-4dce-a4c8-65be880a46a6தளம் புதிது; கணித நண்பன்

எழுத்தாளர்கள் தட்டச்சு செய்வதற்கு என்றே பிரத்யேக எழுதிகள் இருக்கின்றன.வழக்கமான தட்டச்சு மென்பொருளான வேர்டு பிராசஸரை விட இவை மேம்பட்டவை.அதைவிட முக்கியமாக கவனச்சிதறல் இல்லாமல் எழுதுவதில் மட்டும் ஈடுபட உதவுபவை.இதற்கு உதாரணம் வேண்டும் என்றால் ஆகிய எழுதிகளை சொல்லலாம்.
இதேபோல விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுனர்களுக்காக என்றும் தனியே எழுதி இருக்கிறது தெரியுமா? கேல்கா (http://calca.io/) அந்த எழுதியை பயன்படுத்தும் போது நடுவே கணக்கு போட்டுப்பார்க்கலாம். கணிதவியல் சமன்பாடுகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இயற்பியல் அல்லது வேதியல் போன்ற பிரிவுகளில் தட்டச்சு செய்யும் போது சமன்பாடுகளை பயன்படுத்த வேண்டியிருந்தால் அவற்றை தட்டச்சு செய்யும் போதே பின்னணியில் அதற்கான கணக்கு போடப்பட்டு விடை தானாக திரையில் தோன்றும். நிதி மற்றும் பொருளாதார விஷயங்களை டைப் செய்யும் போது வட்டி,கூட்டு வட்டி போன்றவற்றை குறிப்பிட்டாலும் இந்த எழுதியே கணக்கு போட்டு விடை அளிக்கும். கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் போது,எளிய கூட்டல் கணக்கை இடம்பெற வைக்க வேண்டும் என்றால் கூட, வெளியே வந்து தனியே கால்குலேட்டரை பயன்படுத்தும் நிலையில் இருந்து கால்கா அளிக்கும் வசதி எத்தனை மேம்பட்டது என்று அதை பயன்படுத்திப்பார்த்தால் தான் புரியும்.
ஆனால் கால்காவை உங்கள் வீட்டு மளிகை கணக்கு போட்டு பார்க்க எல்லாம் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அது கட்டண சேவை. விண்டோசில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த 10 டாலர் செலுத்த வேண்டும்.
ஆனால் கவலைப்பட வேண்டாம், கால்குலேட்டர் உதவி இல்லாமலே எளிய கணக்குகளை போட்டு பார்க்க விரும்பினால் நோட்பேட் கால்குலேட்டர் இருக்கவே இருக்கிறது. டையில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதம் போல இருக்கும் இதன் முகப்பு பக்கத்தில் குறிப்பெழுதுவது போல எழுத துவங்க வேண்டியது தான். இப்படி தட்டச்சு செய்யும் போது கூட்டல் ,கழித்தல்களை பயன்படுத்தினால் அந்த சமன்பாட்டுக்கான விடை அருகே வந்து நிற்கிறது. ஸ்டீவ் ரைடவுட் எனும் மென்பொருள் வல்லுனர் உருவாக்கியுள்ள இந்த எளிய நோட்பேடை பயன்படுத்திப்பாருங்கள், லேசாக அசந்து போவீர்கள்;
இணையதளம்:http://notepadcalculator.com

———-

செயலி புதிது; நான் பிஸியாக இருக்கிறேன்!

ட்ரு டயலர் செயலி இனி உங்கள் தனிப்பட்ட உதவியாளர் போலவும் செயல்பட உள்ளது.ட்ரு டயலரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியை இந்த செயலியின் பின்னே உள்ள ட்ரு காலர் இப்படி குறிப்பிடுகிறது.முக்கிய வேலை அல்லது ஆலோசனை கூட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் போது அந்த தகவலை பயனாளிகள் மற்றவர்களுக்கு தெரிவிக்க எளிதாக தெரிவிக்க முடியும். இதற்காக நான் பிஸியாக இருக்கிறேன் எனும் வாய்ப்பை தேர்வு செய்து அமைத்துக்கொண்டால் போதும் மற்றவர்கள் அழைக்கும் போது,சிவப்பு புள்ளி மூலம் அவர் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருப்பது உணர்த்தப்படும். மாறாக அழைப்பை ஏற்கும் நிலையில் இருந்தால் பச்சை புள்ளி வரவேற்கும்.ஆக, ஒருவரை அழைப்பதற்கு முன்னரே அவர் பிஸியாக இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.இந்த வசதியை பயனாளிகள் காலண்டருடன் இணைத்துக்கொள்ளவும் செய்யலாம். ஆண்ட்ராய்டு போன்களில் இது அறிமுகமாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://www.truecaller.com/blog/truedialer-availability-feature

————
gmail-blocked-senders
ஜிமெயிலில் புதிய வசதி

ஜிமெயிலில் சின்னதாக பல வசதிகள் உண்டு.இவற்றில் பலவற்றை நீங்கள் கவனிக்காமல் கூட இருக்கலாம்.இப்போது இந்த பட்டியலில் புதிதாக ஒரு அம்சம் அறிமுகமாகி இருக்கிறது.அது இமெயில்களை பிளாக் செய்யும் வசதி. ஏதேனும் ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட ஒருவரது இமெயில் நீங்கள் பெற விரும்பாவிட்டால், அவர்கள் மெயிலை வரும் முன் தடுத்துவிடலாம்.இதற்காக மெயிலின் வலப்பக்கத்தில் பதில் அளிக்கும் வசதி அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கிளிக் செய்தால் வரிசையாக பல அம்சங்களின் பட்டியல் வரும்.அதில் உள்ள,பிளாக் செய்யவும் வசதியை தேர்வு செய்தால் இனி அந்த நபரின் இமெயில் உங்கள் இன்பாகிசிற்கு வராது. அதற்கு முன்னடே தடுக்கப்பட்டு ஸ்பேம் போல்டருக்குள் அனுப்பி வைக்கப்படும். விளம்பர மெயில் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்த வசதி கைகொடுக்கும்.இதற்கு முன்னரும் கூட ஜிமெயிலில் உள்ள வடிகட்டல் வசதியை பயன்படுத்தி வேண்டாத மெயில்களை தடுக்கலாம். ஆனால் இதை மிக எளிதாக செய்யக்கூடிய வகையில் புதிய அம்சம் அமைந்துள்ளது.
ஆனால் பழைய மெயில்களுக்கு இது பொருந்தாது.புதிதாக வரும் மெயில்களில் இந்த வசதியை தேர்வு செய்து இயக்கினால் மட்டுமே பிளாக் செய்வது சாத்தியம்.இதே போல ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் செயலியில் இமெயில் சந்தாக்களில் இருந்து விலகி கொள்ளும் அம்சமும் அறிமுகமாகி இருக்கிறது.

-0—

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.