Tag Archives: skype

இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்கள்

img005நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இந்த புத்தகம். இதே தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வெளிவந்து, தற்போது புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கிறது.

யார் இந்த நாயகர்கள் என கேட்கலாம்? நவீன இணையத்தில் நாம் தவறாமல் பயன்படுத்தும் முன்னணி இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் இவர்கள்.

பெரும்பாலானோர் அறிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வேர்ட்பிர்ஸ், பிளாகர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கியவர்கள் முதல், பரவலாக அறியப்படாத ஆனால் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய லைப்ரரிதிங், டக் டக் கோ, யெல்ப், பின்டிரெஸ்ட் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கியவர்கள் வரை பல இணைய சாதனையாளர்களை இந்த தொகுப்பின் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

ஏர்பிஎன்பி, டிக், சவுண்ட்கிளவுட், டிராப்பாக்ஸ், பிளாகர், கிளவுட், டெலிஷியஸ், லிங்க்டுஇன், உபெர், டிவிட்ச், கிவா, கிக்ஸ்டார்ட்டர், ரெட்டிட், டம்ப்ளர், பயர்பாக்ஸ் என நவீன இணையத்தின் அடையாளமாக கருதப்படும் சேவைகளை உருவாக்கிய நாயகர்களாக இந்த பட்டியல் நீள்கிறது.

இந்த சேவைகள் அனைத்துமே இணையத்தின் ஆற்றலை புதுமையாக பயன்படுத்திக்கொள்ள முற்பட்டதன் மூலம் முன்னணி சேவையாக உருவானவை. இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் புரட்சிகரமானவையும் கூட! இணையம் மூலம் தொலைபேசி சேவையை பயன்படுத்த வழி செய்த ஸ்கைப், வீடியோக்களை எளிதாக பகிர வைத்த யூடியூப், சிக்கலான பிரவுசர் அனுபவத்தை எளிதாக்கிய பயர்பாக்ஸ், இணைய கடன் வழங்க வழி செய்த கிவா, இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர், செய்தி பகிர்வை ஜனநாயகமயமாக்கிய டிக்  என இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் புரட்சிகரமானவை.

இந்த புதுயுக இணைய சேவைகள் சமகால வாழ்க்கையில் ஏற்படுத்திருக்கும் தாக்கம் நினைத்து கூட பார்க்க முடியாதது. பேஸ்புக், யூடியூப் மட்டும் அல்ல, கோப்பு பகிர்வுக்கான டிராப்பாக்ஸ், தொழில்முறை வலைப்பின்னலான லிங்க்டுஇன் உள்ளிட்ட சேவைகளையும் நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.

இந்த சேவைகளுக்கு பின்னே இருக்கும் சாதனையாளர்கள் இவற்றை எப்படி உருவாக்கினர் என்பதை அவர்களின் அறிமுக சித்திரம் விவரிக்கிறது. சேவைக்கான எண்ணம் உதித்த விதம், அதை செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள், போராட்டங்களையும், தடைகளையும் வெற்றி கொண்ட விதம் என சுவாரஸ்யமாகவும், ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த சித்திரங்கள் அமைந்திருப்பதை உணரலாம்.img006

இவை வெறும் வர்த்தக வெற்றிக்கதைகளோ, தொழில் சாகசங்களோ கிடையாது. இவை தனிமனித புகழ்ச்சியும் அல்ல: இணையம் உண்டாக்கி தந்துள்ள எல்லையில்லா சாத்தியங்களையும், புதிய வாய்ப்புகளையும் இணம் கண்டு கொண்டதன் மூலம் அவற்றை நடைமுறை வாழ்க்கைக்கே ஏற்ப பயனுள்ள சேவையாக மாற்றித்தந்த முன்னோடிகளின் பதிவுகள் இவை.

பெரிய அளவிலான பண பலமோ, வலுவான பின்பலமோ இல்லாமல், தங்கள் மனதில் உதித்த எண்ணத்தின் ஆற்றலால் மட்டும் இந்த சேவைகளை உருவாக்கியவர்கள் ஜெயித்திருக்கின்றனர். இந்த எண்ணத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் அவர்கள் வெளிப்படுத்திய வேட்கையும், தொழில்நுட்ப புரிதலுமே வெற்றிக்கு வழி வகுத்திருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் பல பெரிய ஜாம்பவான் நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் இத்தகைய புதுமையான சேவையை உருவாக்குவது என்பது ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள எந்த பெரிய நிறுவனத்திற்கும் சாத்தியமாகவில்லை.  அதனால் தான் இவர்கள் நம் காலத்து நாயகர்களாக மின்னுகின்றனர்.

 

நம் காலத்து நாயகர்கள் புத்தகம்

img005பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம், டிரபாப்பாக்ஸ், சவுண்ட் கிளவுட் என நம் காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் இணைய சேவைகள் மற்றும் இணையதளங்களை உருவாக்கிய இளம் நிறுவனர்களை அறிமுகம் செய்யும் வகையில் எழுதிய தொடர் ’நம் காலத்து நாயகர்கள்’ புத்தக வடிவில் வெளியாகிறது. புதிய தலைமுறை கல்வி வார இதழில் தொடராக வந்த இந்த கதைகள் புதிய தலைமுறை பதிப்பக வெளியீடாக புத்தக வடிவம் பெறுகிறது.
இது என்னுடைய மூன்றாவது புத்தகம். ஒரு விதத்தில் இரண்டாம் புத்தகமான நெட்சத்திரங்களின் இன்னொரு நீட்சி என இதை சொல்லலாம். நெட்சத்திரங்கள் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் வெற்றிக்கதைகளை விவரித்தது என்றால், நம் காலத்து நாயகர்கள் புத்தகம் இணைய உலகில் வெற்றி பெற்றவர்களையும், புதிய பாதை கண்டவர்களையும் அடையாளம் காட்டுகிறது.
இது வெறும் வெற்றிக்கதைகள் அல்ல. வெற்றியை முன் வைத்து எழுதப்பட்டதும் அல்ல. நம் காலத்தின் அடையாளமாக இணைய நிறுவனங்கள் மற்றும் நமக்கு இன்றியமையாததாக கருதும் மகத்தான இணைய சேவைகளை உருவாக்கி மனிதர்கள் இவர்கள்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் முன்னோடிகள். ஒரு விதத்தில் கிளர்ச்சியாளர்கள். ஏற்கனவே இருந்த பாதை மற்றும் சிந்தனைகளில் இருந்து விலகி யோசித்து வெற்றி பெற்றவர்கள். பெரிய அளவில் பின்புலமே, செல்வாக்கோ இல்லாமல் தங்கள் ஐடியாவால் ஜெயித்தவர்கள் என்பது இவர்களின் பெரும்பாலானோரின் பொதுவான குணாதிசயம்.
பரவலாக அறியப்பட்ட வாட்ஸ் அப், ஸ்கைப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளை உருவாக்கிய நிறுவனர்கள் தவிர அதிகம் அறியப்படாத வெற்றிக்கதைகளான லைப்ரரி திங், யெல்ப், பிண்டிரெஸ்ட், டம்பளர் ஆகிய வெற்றிக்கதைகளும் இதில் அடங்கியுள்ளன.
கொடுக்க வைக்கும் தளமான கிவா மற்றும், நிதி திரட்ட உதவும் இணைய மேடையான கிக்ஸ்டார்ட்டர் பற்றி எழுத முடிந்தத்தில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதே போல வேர்பிரஸ் பின்னே உள்ள முல்லன்வெக் பற்றியும் பயர்பாக்ஸ் பின்னே உள்ள ராஸ் பற்றியும் எழுத முடிந்ததில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.
இந்த தொடரை எழுதிய எனக்கு ஒரு கற்றல் அனுபவமாகவே அமைந்தது. இணைய உலகம் தொடர்பான பல புதிய விஷயங்கள் மற்றும் ஆளுமைகளை அறிய முடிந்தது. தொடரை எழுத வாய்ப்பளித்த புதிய தலைமுறை கல்வி ஆசிரியர் பொன்.தனசேகரன் மற்றும் அவரிடம் பரிந்துரைத்த ஆரூயிர் நண்பர் சுந்தரபுத்தனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.புத்தக வடிவில் பதிப்பிக்கும் புதிய தலைமுறைக்கும் நன்றிகள் பல!

அன்புடன் சிம்மன்

சாட்ரவுலெட் கல்யாணம்.

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் செய்து கொண்டிருக்கிறது.அதுவும் சாட்ரவுலெட் மூலம் கலயாணம் செய்து கொண்ட உலகின் முதல் ஜோடி என்ற பெருமையோடு!

சாட்ரவுலெட் மிகவும் சுவாரஸ்யமான ஆனால் கொஞ்சம் வில்லங்கமான சேவை.

வெப்கேம் வழியே அரட்டை அடிப்பதற்கு வழி செய்யும் சாட்ரவுலெட் இந்த தொடர்பை ஏற்படுத்தி தரும் விதம் தான் அதனை பிரபலமாக்கியது.மற்ற அரட்டை தளங்களில் இருந்து அதனை தனித்து நிறகவும் செய்தது.

பொதுவாக அரட்டை தளங்களில் யாருடன் அரட்டை அடிப்பது என்பதை உறுப்பினர்கள் தீர்மானித்து கொள்ள முடியும்.சாட்ரவுலெட்டில் அந்த கதை இல்லை.சாட்ரவுலெட்டில் யாருடன் அரட்டை போகிறோ, என்பது யாருக்குமே தெரியாது.இந்த தளத்தில் அரட்டைக்காக யாருடன் தொடர்பு கிடைக்கும் என்பது முற்றிலும் தற்செயலானது.

வெப்கேமும் கையுமாக இந்த தளத்தில் நுழைந்தால் சக உறுப்பினர்கள் யாரையாவது சந்திக்கலாம்.அவர்களோடு அரட்டை அடிக்கலாம்.யார் என்பது எந்த அடிப்படையும் இல்லாமல் சீட்டு குலுக்கி போடுவது போல தீர்மானிக்கப்படுவது தான்.எனவே யாரை வேண்டுமானாலும் சந்திக்க நேரலாம்.

சந்திக்கும் நபரை பிடிக்கவில்லை என்றால் அப்படியே கிளிக் செய்து அடுத்த நபரை சந்திக்கலாம்.அவரும் யாரோவாக தான் இருப்பார்.

யாரை சந்திக்க போகிறோம் என தெரியாமல் யாரையாவது சந்தித்து பேச முடிவதே இந்த தளத்தின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.உலகின் வெவேறு பகுதிகளை சேர்ந்தவர்களை சந்திக்கலாம் என்பதால் முற்றிலும் புதிய மனிதர்களை புதிய கலாச்சாரத்தை சேர்ந்தவர்களை அறிமுகம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பது இந்த தளத்தின் பலமாக கருதப்படுகிறது.

ஆனால் இந்த தற்செயல் தன்மை சுவாரஸ்யமானது எனறு மட்டும் சொல்லிவிட முடியாது.சில நேரங்களில் வில்லங்கமான மனிதர்களை சந்திக்க நேரலாம்.அவர்களில் செய‌ல்கள் அருவருக்க வைக்கலாம்.இந்த தளத்தில் வெப்கேம் விகாரங்களை வெளிப்படுத்தியவர்களும் இருக்கின்றனர்.

ஆனால் மன்ம் திறந்து பேசுபாவ‌ர்களையும் நெகிழ செய்யக்கூடியவ‌ர்களையும் சந்திக்கலாம் .பேசுவதற்கு யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கித்தவிப்பாவர்களையும் எதிர் கொள்ளலாம்.சிரிக்க சிரிக்க பேசி ரசிக்க வைப்பவர்களையும் சந்திக்கலாம்.

இவையெல்லாம் சாட்ரவுலெட் மகிமைகள்.

ஆனால் இந்த தளம் வழியே காதல் மலர்ந்ததாக இது வரை எந்த தகவலும் இல்லை.இப்போது இந்த தளத்தில் சந்தித்து கண்டதும் காதல் கொண்டு கல்யாணமும் செய்து கொண்டுள்ள ஜோடி பற்றி சுவாரஸ்யமான கதை வெளீயாகியுள்ளது.

சாட்ரவுலெட்டின் முதல் காதல் கதை என்னும் அடைமொழியை பெற்றுள்ள இந்த காதல் கதை உணமையிலேயே வித்தியாசமமான‌து தான்.

இபடி சாட்ரவுலெட் மூலம் இணைந்திருக்கும் காதல் ஜோடி அமெரிக்காவை சேர்ந்த சியோபன் மற்றும் பிரிட்ட்னை சேர்ந்த அலெக்ஸ் ரோட்ஜர்ஸ்.

இந்த இருவருமே சாட்ரவுலெட் மூலம் சந்தித்த போது முதல் பார்வையிலேயே காதல் கொண்டு விட்டனராம்.அதுவும் எப்படி வெப்கேமை விட்டு பார்வையை எடுக்க முடியாத படி தொடர்ந்து ஆறு மணி நேரம் உரையாடி மகிழ்ந்துள்ளனர்.இரவில் ஆரம்பித்த உரையாடல் மறு நாள் விடியும் வரை தொடர்ந்திருக்கிறது.

முதலில் பார்த்ததுமே அவளது அழகில் விழுந்து விட்டேன் என்று அலெக்சும்,அவரை கண்டதும் பிடித்து போனது என்று சியோபனும் இந்த காதல் சந்திப்பு பற்றி மகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றனர்.

இந்த காதல் உரையாடலுக்கு நடுவே எங்காவது தப்பித்தவறி அடுத்த பட்டனை கிளிக் செய்து தொடர்பை இழந்து விடப்போகிறோம் என்ற அச்சத்தில் தவித்தனராம்.இத‌னால் பரஸ்பரம் பேஸ்புக்கில் நண்பர்களாகி இருக்கின்றனர்.அதன் பிறகு ஸ்கைப்பிலும் பேஸ்புக்கிலுமாக காதல் வளர்ந்திருக்கிறது.

பின்னர் அலெக்ஸ் பிரிட்டனில் இருந்து அமெரிக்க பறந்து சென்று காதலியின் குடும்பத்தை சந்தித்து திருமணத்திற்கு சம்மதமும் பெற்றிருக்கிறார்.

கடந்த ஆக்ஸ்டு மாதம் திருமணம் நடைபெற்றது,இதற்கிடையே சியோபன் தான் பார்த்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு லண்டனுக்கு குடி பெயர்ந்து விட்டார்.

சாட்ரவுலெடில் சந்தித்து தம்பதிகளானது தங்கள் அதிர்ஷடம் என்று இருவரும் உற்சாக‌மாக சொல்கின்றனர்.

பேஸ்புக்கோ சாட்ரவுலெட்டோ எதுவுமே பயன்படுத்தும்க் விதத்தில் தான் இருக்கிறது அல்லவா?

இணையதள முகவரி;http://chatroulette.com/

—–

சாட்ரவுலெட் தொடர்பான மற்றொரு பதிவு.http://cybersimman.wordpress.com/2012/03/30/share-3/

———-
மேலும் ஒரு சாட்ரவுலெட் தொடர்பான பதிவு.http://cybersimman.wordpress.com/2010/10/02/twitter-78/