நண்பர்களோடு சேர்ந்து டைப் செய்ய ஒரு தளம்.


டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டைப் செய்ய உதவுகிறது இந்த இணையதளம்.நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே நேரத்தில் டைப் செய்யலாம்.

அந்த வகையில் இந்த தளத்தை கூட்டு இணைய பலகை என்று சொல்லலாம்.

கூட்டு டைப்பிங் செய்ய இந்த தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக கூட பதிவு செய்யும் தேவை இல்லாமல் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம்.

வெறுமையாக இருக்கும் இதன் முகப்பு பக்கத்தின் மையத்தில் உள்ள சின்ன கட்டத்தில் கிளிக் செய்தால் புதிய பலகையை திரையில் தருவிக்கலாம்.தேவை என்றால் விரும்பிய பெயரையும் டைப் செய்து அதே பெயரில் பலகையை உருவாக்கி கொள்ளலாம்.

அதன் பிறகு இணைய எழுதிக்கான (வோர்டு பிராசஸர்)அடிப்படை அமசங்களோடு இணைய பலகை தோன்றுகிறது.அதில் நீங்கள் டைப் செய்ய துவங்கலாம்.அதற்கு முன்னர் இந்த பக்கத்தின் இணைய முகவரியை நீங்கள் இணைந்து பணியாற்ற விரும்பும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அதன் பின்னர் அவர்களாலும் அதே பக்கத்தை தங்கள் கம்ப்யூட்டரில் காண முடியும் .அதோடு அந்த பக்கத்திலேயே டைப் செய்யவும் முடியும்.இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களையும் அழைக்கலாம்.அவர்களாலும் இதே பக்கத்தை பார்க்க முடியும்.

நீங்கள் டைப் செய்ய செய்ய அத‌னை நண்பர்கள் பார்ப்பதோடு அதில் திருத்தங்களையும் செய்யலாம்.கூடுதல் தகவல்களையும் டைப் செய்யலாம்.

இந்த கூட்டு டைப்பிங்கில் குழப்பம் ஏற்படாமல் இருக்க நண்பர்கள் தங்கள் எழுத்துக்களுக்கான வண்ணத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.இதனால் யார் எதை டைப் செய்கின்றனர் என்பதை சரியாக தெரிந்து கொள்ளலாம்.

நண்பர்களோடு அப்படியே இணைய உரையாடலில் ஈடுபடும் வசதியும் இருப்பதால் டைப் செய்யும் விஷயம் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.

எல்லாவற்றையும் சேமித்து வைத்து கொள்ளலாம்.இதன் மூலம் ஏற்கனவே டைப் செய்தவற்றை எப்போது வேண்டுமானாலும் திரும்பி பார்க்கலாம்.

எழுத்துருக்களை பெரிதாக்குவது,அடிக்கோடிடுவது போல கொட்டை எழுத்துக்கள் கொண்டதாக மாற்றுவது என எல்லா வசதிகளும் இந்த இணைய பலகையில் இருக்கிற‌து.

ஒரே நேரத்தில் நண்பர்கள் அல்லது அலுவலக குழுவினர் கூட்டாக டைப் செய்ய வழி செய்யும் இந்த இணைய பலகையை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.

அலுவலக நோக்கிலான கடிதத்தை எழுதிய பின் அதில் திருத்தங்கள் தேவை என்றால் யாராவது நண்பரிடம் காண்பித்து சரியாக இருக்கிறதா என்று ஆலோசனை கேட்போம் அல்லவா?இது போன்ற நேரங்களில் டைப் செய்தவற்றை இமெயில் மூலம் அனுப்பி ஆலோசனை கேட்கலாம்.ஆனால் இதற்கு நேரம் ஆகலாம்.

இதற்கு மாறாக இந்த சேவை மூலம் டைப் செய்யும் போதே நண்பரையும் அழைத்து அவரது உதவியுடனே கடிதததை தயார் செய்து விடலாம்.இது ஒரு உதாரணம் தான்.

கூட்டு முயற்சி சார்ந்த எந்த பணிக்கும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

முற்றிலும் இலவசமானது இந்த சேவை.

கூகுல் நிறுவனத்தால் வாங்கப்பட்ட ஈதர்பேட் என்னும் கூட்டு முயற்சி சேவையின் உப சேவையாக அதன் ஓபன் சோர்ஸ் தன்மையை பயன்படுத்தி இந்த இணைய பலகை உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் த‌கவல்.

இணையதள முகவரி;http://typewith.me/

0 thoughts on “நண்பர்களோடு சேர்ந்து டைப் செய்ய ஒரு தளம்.”

  1. அருமை…இதை போன்ற ஒரு தளம் இருக்குமா என்ற யோசனையில் இருந்தேன்…வழி காட்டிவிட்டீர்கள் …நன்றி!!நன்றி!!நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *