Tag Archives: internet

வரலாற்று வரைபடங்களுக்கான இணையதளம்

mapsவரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவது போலவே இந்த தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடமாக திகழ்கிறது.

இந்த தளத்தில் வரலாற்று கால வரைப்படங்களை தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலம் கட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தை தெரிவித்து தேடும் வசதி இருக்கிறது.

தேடலில் ஈடுபடும் போதே அந்த கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்களி பரிந்துரைக்கப்படுகிறது. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் என பல விதமான வரைபடங்களை பார்க்க முடிகிறது.

வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பொக்கிஷமாக அமையும். வரைபடங்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி வடிவமும் இருக்கிறது.

 

இணைய முகவரி: http://www.oldmapsonline.org/

 

செயலி புதிது: கேரளா சுற்றுலா அழைக்கிறது

go-kerala-app-1210x500சுற்றுலா தொடர்பான தகவல்களை எளிதாக செயலி மூலம் பெறுவதை தான் ஸ்மார்ட்போன் பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் கேரள மாநில சுற்றுலாத்துறை, மாநில சுற்றுலா தொடர்பான தகவல்களை உள்ளங்கையில் கொண்டு வரும் வகையில் விசிட் கேரளா அட்வென்சர் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி மூலம் கேரளாவில் உள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டு பயணங்களை திட்டமிடலாம். ஒவ்வொரு இடம் தொடர்பான தகவல்களோடு ஒளிப்படங்கள் மற்றும்க் வீடியோக்களையும் காணலாம்.

மேலும் தகவல்கள் விளையாட்டு பாணியில் சுவாரஸ்யமாக அளிக்கப்பட்டுள்ளன. சலுகை கூப்பன்களை பெறும் வாய்ப்பும் உள்ளது.

சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒட்டல்கள் அளிக்கும் சலுகைகளையும் பெறும் வாய்ப்புள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு: https://www.keralatourism.org/

 

சில்லென்று ஒரு இமெயில் அனுப்புவது எப்படி?

coldmailஇமெயில் உலகில் ஸ்பேம் மெயில்கள் மிகவும் பிரசித்தமானது. அழையா விருந்தாளிகளாக இன்பாக்சை வந்தடையும் இந்த வகை வீணான விளம்பர மெயில்களை இமெயில் முகவரி பெட்டியில் நீங்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கலாம். சில நேரங்களில் இத்தையை குப்பை மெயில்கள் கோபத்தின் உச்சிக்கே கூட கொண்டு செல்லலாம்.

ஸ்பேம் மெயில்கள் போலவே இன்னொரு வகையான மெயில்கள் இருக்கின்றன தெரியுமா? இந்த வகை மெயில்களையும், அவற்றை அனுப்பி வைக்கும் நுணுக்கங்களையும் அறிந்து வைத்திருப்பது, வேலை வாய்ப்பு தேடல் முதல் வலைப்பின்னலுக்கான வலை வீச்சு வரை பலவிதங்களில் உதவியாக இருக்கும்.

அதென்ன இமெயில் வகை என்று கேட்கிறீர்களா?  கோல்ட் இமெயில்கள் தான் அவை. தமிழில் குளிர் இமெயில் என பொருள் கொள்ள முடியாது. இதமில்லா இமெயில் என வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.  இப்படி ஒரு இமெயிலை ஏன் அனுப்ப வேண்டும்? அதனால் என்ன பலன்?

இதமில்லா இமெயில்களை அனுப்பி வைப்பதற்கான அவசியம் இருக்கிறது. சரியான முறையில் அனுப்பி வைத்தால் இவற்றுக்கு நல்ல பலனும் கிடைக்கும்!

பொதுவாக தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் தான் இமெயில் அனுப்புவது வழக்கம். அல்லது அலுவல் நோக்கில் வந்துள்ள மெயில்களுக்கு பதில் அனுப்பி வைப்போம். இவ்வாறு இல்லாமல் முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு அவர் நம்மிடம் இருந்து மெயில் வரக்கூடும் என்று எதிர்பார்க்காத நிலையில், இமெயில் அனுப்பி வைப்பதை தான் ஆங்கிலத்தில் கோல்ட் இமெயில் என்கின்றனர். அறிமுகம் இல்லாத ஒருவரை தொலைபேசியில் அழைத்து பேசுவது கோல்ட் கால் என சொல்லப்படுவதை போல, அனுமதி இல்லாமல் அனுப்பபடும் மெயில்கள் கோல்ட் மெயில் என சொல்லப்படுகின்றன.

எதிர்பார்ப்பு இல்லாத போது நிகழும் அறிமுகம் ஊடுருவல் என்பதால் இதமானவை அல்ல என்பதை உணர்த்த கோல்ட் என குறிப்பிடப்படுகிறது.

அனுமதி இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டாலும், இந்த வகை இமெயில்கள் அழையா விருந்தாளிகளாக கருதப்படும் ஸ்பேம் மெயில்களில் இருந்து வேறுபட்டவை. ஏனெனில் இவை விளம்பர நோக்கில் அனுப்பி வைக்கப்படுபவை அல்ல. அதைவிட முக்கியமாக, ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்பி வைப்போம், யாராவது ஒரு சிலர் பார்த்தாலும் லாபமே என்ற மலிவான மார்கெட்டிங் உத்தி போல இல்லாமல், இவை குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படுபவை என்பதோடு, அவரிடம் இருந்து பதிலை முக்கியமாக எதிர்பார்ப்பவை. எனவே, தேவையான நேரங்களில் இந்த உத்தியை தாராளமாக பயன்படுத்தலாம்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான நுழைவு தேவை எனில் அங்குள்ள உயர் அதிகாரி ஒருவருக்கு இமெயில் அனுப்பி வைக்கலாம். புதிய முயற்சிக்கான ஆதரவு தேவை எனில், முன்பின் தெரியாத பெரிய மனிதரிடம் இமெயிலில் உதவி கோரலாம். இயக்குராகும் கனவில் இருப்பவர்கள் பிரபல தயாரிப்பாளருக்கு குறும்பட இணைப்புடன் வாய்ப்பு கேட்கும் இமெயில் அனுப்பலாம். இப்படி எண்ணற்ற தருணங்களில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக அறிமுகம் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லாமலே இமெயில் அனுப்பி வைக்கலாம்.

இது இமெயில் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியாகவே இருக்கிறது. கூகுளில் கோல்ட் இமெயில் எனும் பதத்தை தேடிப்பார்த்தால், சிறிந்த முறையில் கோல்ட் மெயில் அனுப்புவதி எப்படி என வழிகாட்டும் கட்டுரைகள் அணிவகுத்தி நிற்பதை பார்க்கலாம். எனவே இது இமெயில் கலையில் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய கலை.

இந்த நுணுக்கங்களை விளக்கும் பல்வேறு கட்டுரைகளில் பொதுவாக காணப்படும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்:

தலைப்பு முக்கியம்: நீங்கள் யார் என்பது தெரியாததால் உங்கள் மெயிலை பார்த்ததுமே அதை அலட்சியம் செய்ய அல்லது டெலிட் செய்யத்தோன்றலாம். அதற்குள் நீங்கள் கவனத்தை ஈர்த்தாக வேண்டும். இமெயிலுக்கான தலைப்பு மூலம் அதை செய்ய வேண்டும். மெயிலின் நோக்கம், உள்ளடக்கம் ஆகியவற்றை தலைப்பு கச்சிதமாக தெரிவிக்க வேண்டும். கொஞ்சம் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தாலும் நல்லது. ஆனால் மிகை வார்த்தைகளோ, அலங்காரமோ தேவையில்லை. இத்தகைய தலைப்புக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

நீங்கள் யார்? தலைப்பு மூலம் கவனத்தை ஈர்த்த சில நொடிகளில் நீங்கள் யார் என்பதை தெரிவித்து விட வேண்டும். அதற்கான அறிமுகம் இமெயிலில் இருக்க வேண்டும். மெயில் பெறுபவருக்கு நீங்கள் அறிமுகம் இல்லாத நபர் என்பதால் இது மிகவும் முக்கியம். அதோடு உங்களைப்பற்றிய அறிமுகம் ஒரு நம்பகத்தன்மையை கொடுக்கும். இதை செய்ய சிறந்த வழி, இருவருக்கும் பொதுவாக அறிமுகமான ஒருவரை சுட்டிக்காட்டலாம். அப்படி யாரும் இல்லாவிட்டால், மெயில் அனுப்பும் நபர் பற்றி நன்றாக ஆய்வு செய்து அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு அவருக்கு ஏற்ற வகையில் தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

சிக்கனம் முக்கியம்: இனி உங்களுக்கு என்ன தேவை என்பதை தெரிவிக்க வேண்டும். சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டும். இரண்டு, மூன்று பத்திகளில் விஷயத்தை முடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதற்கு மேல் நீளும் மெயில்கள் அநேகமாக படிக்கப்படும் வாய்ப்பில்லை. தவிர அவரது நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்வதும் முறையல்ல.

நெத்தியடி கோரிக்கை; சுருக்கமான வார்த்தைகளில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை எளிமையானதாக, மறுக்கப்பட முடியாததாக இருந்தால் இன்னும் சிறப்பு. உதாரணத்திற்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என கேட்பதைவிட, உங்கள் நிறுவன கலாச்சாரம் பற்றி அறிய பத்து நிமிடம் உங்களை சந்தித்து பேச இயலுமா என கேட்கலாம்.

கொஞ்சம் புகழுங்கள்: கேட்டத்து கிடைக்கும் என்றால் நீங்கள் ஏதாவது கொடுக்கத்தயாராக இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா என பார்த்து அதை குறிப்பிடவும். உதாரணத்திற்கு பிரபல இயக்குனர் எனில், இணைய விஷமிகள் பற்றி புலம்பியிருந்தால், அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் இணையவழிகளை குறிப்பிடலாம். இப்படி எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரைப்பற்றி புகழ்ச்சியாக நான்கு வார்த்தைகள் கூறுங்கள். ஆனால் இவை வெறும் புகழ்ச்சியாக இல்லாமல், இயல்பானதாக, அவரைப்பற்றிய சரியான புரிதல் அடிப்படையில் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட தன்மை: நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரை பற்றி இயன்ற அளவு ஆய்வு செய்து அவருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட முறையில் உங்கள் கோரிக்கையை வைக்கவும்.

எப்போதேனும் தேவை ஏற்பட்டால் இப்படி ஒரு மெயிலை அனுப்பி பாருங்கள். ஒரு சிறு குறிப்பு; இணையத்தில் தேடினால், சிறந்த கோல்ட் இமெயில்களை அனுப்புவதற்கான குறிப்புகள் மட்டும் அல்ல, இதற்கான இமெயில் வடிவங்களே கூட கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் ஒரு போதும் அவற்றை பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் இந்த வகை மெயிலின் பலமே, பெறுபவருக்கு ஏற்ற வகையில் அதை நீங்கள் தனிப்பட்ட தன்மையோடு அனுப்புவதில் தான் இருக்கிறது.

இன்னொரு குறிப்பு, இப்படி ஆயிரம் மெயில்களை அனுப்பி வைத்து அதனடிப்படையில் ஆயுவு செய்து ஸ்மார்ட் கட்ஸ் எனும் புத்தகத்தை ஷேன் ஸ்னோ எனும் பத்திரிகையாளர் எழுதியிருக்கிறார்;. goo.gl/LQ5Gz8

உதவக்கூடிய கட்டுரை: goo.gl/LcY3pF

 

நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது.

இந்த தளம் இணைய களஞ்சியம்

tஎந்த துறையிலேமே தொழில்நுட்ப பதங்கள் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இணைய உலகில் இத்தகைய பதங்கள் இன்னும் அதிகம். அதோடு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பதங்கள் வேறு அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து இணையவாசிகளுக்கு வழிகாட்டும் வகையில் வெப்போபீடியா தளம் செயல்பட்டு வருகிறது.

இந்த தளத்தை நவீன தொழில்நுட்ப பதங்களுக்கான இணைய அகராதி என்று சொல்லலாம். தொழில்நுட்ப தேடியந்திரம் என்றும் சொல்லலாம். இணையம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்ப பதங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை இந்த தளத்தில் சமர்பித்து பொருள் அறியலாம்.

இதன் முகப்பு பக்கத்தில் மேலே உள்ள தேடல் கட்டத்தில் தொழில்நுட்ப பதத்தை டைப் செய்தால் போதும் அதற்கான விரிவான விளக்கம் தோன்றும். இவைத்தவிர முகப்பு பக்கத்திலேயே தினம் ஒரு தொழில்நுட்ப பதத்திற்கான அர்த்தம் இடம்பெறுகிறது. சமீபத்திய தொழில்நுட்ப பதங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.

ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் இணைவாசிகள் ஆகியோருக்கு பயன் தரும் வகையில் தொழில்நுட்ப பதங்களுக்கான விளக்கம் எளிமையான முறையில் தரப்படுவது இந்த தளத்தின் சிறப்பம்சம். தினமும் புதுப்புது வார்த்தைகளுடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டு வருவது இன்னும் சிறப்பு.

எனவே இப்போது தான் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் என்றாலும் அதற்கான விளக்கத்தை இதில் காணலாம். இதுத்தவிர தொழில்நுட்பம் சார்ந்த ஆழமான விளக்க மற்றும் வழிகாட்டுதல் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இணையத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் புக்மார்க் செய்து கொள்ள வேண்டிய தளம் இது: http://www.webopedia.com/

இதே போலவே வாட் ஈஸ் (http://whatis.techtarget.com/ ) இணையதளம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் மற்றும் சொற்றடர்களின் விளக்கம் அளிக்கும் தளமாக இருக்கிறது.

 

டெக்டெர்ம்ஸ் (techterms.com ) தளமும் இதே போலவே தொழில்நுட்ப பதங்களுக்கு பொருள் அறிய உதவுகிறது. இதையும் தொழில்நுட்ப தேடியந்திரமாக பயன்படுத்தலாம்.

வைஸ்கீக் (wisegeek.com ) தளத்தையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரைகளும் தனித்தனி தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்த தளம் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் பழைய கட்டுரைகள் பயனுள்ளவை.

 

 

இணைய அகராதி

இணையம் தனக்கான தனி மொழியையும் உருவாக்கியிருக்கிறது. இணையத்தில் பயன்படுத்தப்படும் புதிய சொற்களும், சுருக்கங்களும் அநேகம் இருக்கின்றன. இணையத்திலேயே புழங்குபவர்களுக்கு இந்த வார்த்தைகளும் இணைய மொழிகளும் அத்துமடி என்றாலும் சராசரி இணையவாசிகளுக்கு இவை புரியாத புதிராக இருக்கலாம். அதிலும் குறிப்பாக இணைய அரட்டை மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் குறிப்புகள் குழப்பத்தை அளிக்கலாம். இத்தகைய இணைய மொழிகளுக்கான விளக்கத்தை அளிக்கிறது நெட்லிங்கோ இணையதளம்.

இணையத்தின் குறுக்கெழுத்தாக அமையும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இதில் தேடிக்கொள்ளலாம். இணைய குறிப்புகள் பலவும் இடம்பெற்றுள்ளன. தினம் ஒரு வார்த்தை விளக்கமும் அளிக்கப்படுகிறது. இந்த விளக்கத்தை இமெயில் மூலமும் பெறலாம்.

இணைய முகவரி: http://www.netlingo.com/

 

எதையும் கற்றுக்கொள்ள ஒரு தளம்

இணையம் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இருப்பதையும் நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் துவங்கி, இணைய கற்றலுக்கான பிரத்யேக தளங்களான கான் அகாடமி, கோர்சரா என பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவைத்தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ஹவ் காஸ்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த தளம் வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது எப்படி என வழிகாட்டும் வீடியோக்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் புகைப்படக்கலை, நடன வகுப்புகள், உணவு, ஆரோக்கியம், உள் அலங்காரம் என எண்ணற்ற தலைப்புகளில் வழிகாட்டி வீடியோக்கள் பட்டியலிப்பட்டுள்ளன. அவரவர் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற தலைப்புகளை தேர்வு செய்து அதில் உள்ள வீடியோக்களை காணலாம்.

தொழில்நுப்டம், வீடியோகேம் , தனிநபர் ஆரோக்கியம் என இதில் உள்ள தலைப்புகளும் பரந்து விரிந்திருக்கின்றன. இணையவாசிகள் தங்களுக்கு தேவையான வீடியோக்களை தேடிப்பார்ப்பதற்கான தேடல் வசதியும் இருக்கிறது.

இணையதள முகவரி: http://www.howcast.com/

 

 

செயலி புதிது: தேர்தல் கமிஷனின் புதிய செயலி

தேர்தல் கமிஷன் சார்பில் இ.சி.ஐ ஆப்ஸ் எனும் பெயரில் புதிய ஒருங்கிணைந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்கள், வாக்குச்சாவடிகள், தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள் தொடர்பான தகவல்களையும் இந்த செயலி கொண்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பான தகவல்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் எளிதான வகையில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள், மக்கள், வாக்காளர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் ,ஊடகம் உள்ளிட்ட பிரிவுகளை இந்த செயலி கொண்டுள்ளது.

தேர்தல் கமிஷனின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. தொடர்புடைய மற்ற செயலிகளையும் இதில் ஒருங்கிணைத்துக்கொள்ளலாம். ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த செயலி அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாக உள்ளது.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=eci.com.neologicx.eci&hl=en

 

 

கூகுள் தேடலில் புதிய வசதி

கூகுள் தனது ஆண்ட்ராய்டு தேடல் செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இந்த புதிய வசதியின் மூலம் இணைய இணைப்பு இல்லாமல் போனாலும் தொடர்ந்து தேடலில் ஈடுபடலாம். அதற்காக இணைய இணைப்பு இல்லாமல் தேடலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் இந்த வசதி என்ன செய்கிறது என்றால் தேடலில் ஈடுபட்டிருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது செயலிழந்தாலோ, அப்போது தேடும் குறிச்சொற்களை அப்படியே சேமித்து வரிசை படுத்தி வைக்கிறது. பின்னர் இணைய இணைப்பு சீரானதும், பழைய தேடல்களை துவங்கி முடிவுகளை அளிக்கிறது. இது தொடர்பான தகவலையும் அளிக்கிறது. இணைய இணைப்பு திரும்பும் போது தேடல் தொடரப்படும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது. தேடல் முடிவு தயாரானதும் தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.

தேடல் வசதியை நாடுபவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. என்ன தேடினோம் என்று குழம்பி நிற்காமல் விட்ட இடத்தில் இருந்து தேடலை தொடர இந்த வசதி உதவலாம். கூகுள் சேமித்து வைத்துள்ள தேடல் குறிப்புகளை நிர்வகிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை முற்றிலுமாக நீக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தேடல் வசதி தொடர்பாக கூகுள் விளக்கம்: https://blog.google/products/search/dont-let-spotty-connection-stop-you-searching/

 

எங்கும் ட்ரோன்கள், மெய்நிகர் மாயம், புத்திசாலி பொருட்கள்… 2017 ல் தொழில்நுட்பம்!

s.aolcdn.comகாணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். பொருட்கள் எல்லாம் மேலும் புத்தி கூர்மை பெறும். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவை செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்… இவை எல்லாம் என்ன என்று வியக்கிறீர்களா? 2017 ம் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுனர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டும் போக்குகள் தான் இவை. தொழில்நுட்ப உலகின் மாற்றங்களும், முன்னேற்றமும் நாம் நினைப்பதையும், புரிந்து கொள்வதையும் விட வேகமாக ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கவனத்தை ஈர்க்க கூடிய தொழில்நுட்ப போக்குகள் பற்றி பார்ப்போம்:
ட்ரோன்கள், மேலும் ட்ரோன்கள்
ட்ரோன்கள் எனப்படும் ஆள் இல்லா விமானங்கள் அல்லது தானியங்கி விமானங்கள் தொழில்நுட்ப பித்தர்களுக்கான நவீன விளையாட்டு சாதனங்கள் என்ற நிலையில் இருந்து முன்னேறி வந்துவிட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற நுகர்வோர் மின்னணு தொழில்நுட்ப கண்காட்சி அரங்கில் பலவித ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. மேலும் பேரிடர் மீட்பு பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ட்ரோன்களி பங்களிப்பு அதிகரித்து வருகிறது. மின் வணிக நிறுவனங்கள் ட்ரோன் டெலிவரியில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த ஆண்டு ட்ரோன்களின் பயன்பாடு மேலும் பல துறைகளில் உணரப்படலாம். கூடவே ட்ரோன்களில் தொல்லையும் அதிகரிக்கலாம்.


மெய்நிகர் மாயம்
பேஸ்புக் ஒரு நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றால் எதிர்காலத்தில் அந்த நுட்பம் வெகுஜன பயன்பாட்டிற்கு வரப்போகிறது என உணர்ந்து கொள்ளலாம். அந்த வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பேஸ்புக் தான் கையகப்படுத்திய ஆக்குலஸ் ரிப்ட் நிறுவனம் மூலம் இது தொடர்பான ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது. சாம்சங், எச்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த பிரிவில் தீவிரமாக உள்ளன. மூக்கு கண்ணாடி போல மெய்நிகர் சாதனத்தை மாட்டிக்கொண்டு முற்றிலும் புதிய அனுபவத்தில் திளைத்திருக்கும் சூழல் உருவாகலாம். வீடியோகேம் முதல் கொண்டு உளவியல் சிகிச்சை வரை மெய்நிகர் மாயம் ஆதிக்கம் செலுத்தலாம் என்கின்றனர். நீங்கள் தயாரா!


இன்னொரு யதார்த்தம்!

கடந்த ஆண்டு கலக்கிய போக்கேமான் கோ விளையாட்டை நினைவில் உள்ளதா? இது வெறும் ஸ்மார்ட்போன் விளையாட்டு அல்ல, நிஜ உலகையும், இணைய உலகையும் இணைத்த புதிய வகை விளையாட்டாக கொண்டாடப்படுகிறது. இந்த வகை கலப்பு ஆக்மெண்டெட் ரியாலிட்டி அதாவது மேம்பட்ட யதார்த்தம் என குறிப்பிடப்படுகிறது. அதாவது நிஜ வாழ்க்கை பொருட்கள் மீது தொழில்நுட்பத்தை இணைத்து அவற்றை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி. கல்வித்துறை முதல் கொண்டு பல துறைகளில் இதன் பயன்பாட்டை காணும் நிலை வரலாம்!.


செயற்கை நுண்ணறிவு
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இதன் செயல்பாடு பல துறைகளில் இன்னமும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும், வங்கித்துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய சேவை வடிவில் இதனுடன் கைகுலுக்கும் நிலை இருக்கிறது. பேஸ்புக், கூகிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இரண்டு நிறுவனங்களுமே அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த நுட்பத்தை அதிகம் நம்பியுள்ளன. செயற்கை நுண்ணறிவு சார்ந்த செய்திகளையும், முன்னேற்றங்களையும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கலாம். இதே போல, பாட்கள் எனப்படும், தானியங்கி புரோகிராம்களின் வளர்ச்சியும் தீவிரமடையும் என சொல்கின்றனர். அரட்டைக்கு உதவும் பாட்கள் முதல், சேவைகளுக்கு வழிகாட்டும் பாட்கள் வரை பலவித பாட்கள் உருவாக்கப்பட உள்ளன. எனக்கொரு பாட் வேண்டுமடா என பாடும் அளவுக்கு தனிநபர் உதவியாளர் பாட்களும் பெருகலாம்.

புத்திசாலி செயலிகள்
இப்போது விதவிதமான செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இனி வரப்போகும் செயலிகள் இப்போதுள்ள செயலிகளை விட புத்திசாலித்தனம் மிக்கதாக இருக்கும் என்கின்றனர். அதாவது இமெயில் சார்ந்த செயலி என்றால், உங்கள் சார்பாக முக்கியமான இமெயில்களை கண்டறிந்து இவற்றை மட்டும் படியுங்கள் பாஸ் போதும் என பரிந்துரைக்கும் செயலிகள் அதிகரிக்கலாம். திட்டமிடல், பயணம், வர்த்தகம், திரைப்பட நுகர்வு என எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான செயலிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. இவற்றின் அடிநாதமும் செயற்கை நுண்ணறிவு தான்!

எதிர்கால கார்கள்
ஸ்மாட்ர் டிவி, ஸ்மார்ட்போன் போல கார்களும் ஸ்மார்ட்டாகி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த போக்கு இன்னும் தீவிரமாகும். ஏற்கனவே தானியங்கி கார்கள் எல்-போர்டு மாட்டிக்கொண்டு சோதனை முறையில் சாலைகளில் வலம் வரத்துவங்கியிருக்கின்றன. இதன் நீட்சியாக கார்கள் இன்னும் ஸ்மார்ட்டாக மாறக்கூடும். கார் வெறும் காராக இல்லாமல் தொழில்நுட்ப கூடமாக மாறிவிடும். தானியங்கி கார்கள் மட்டும் அல்ல தானியங்கி டிர்க மற்றும் தானியங்கி பஸ்களும் பவணி வரத்துவங்கியுள்ளன. இணைய கால் டாக்சி நிறுவனமான உபெர் நிறுவனமும் இதில் ஆர்வம் காட்டி வருகிறது.

அசத்தும் அணிகணிணிகள்
வியரபில்ஸ் எனப்படும் அணிகணிணிகள் ஏற்கனவே வெகுஜன பழக்கத்திற்கு வரத்துவங்கிவிட்டன. கூகுள் கிளாஸ் தோல்வி கொஞ்சம் பின்னடைவாக அமைந்தாலும், ஸ்னேப்சேட்டின் ஸ்பெக்டகல்ஸ் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பேஷனுடன் இணைந்து, பாதுகாப்பையும், நவீன தகவல் தொடர்பு வசதிகளையும் அளிக்கும் நவீன காதணிகளையும், கழுத்து சங்கலிகளையும் பார்க்க முடிகிறது. இந்த வகை அணிகணிணிகள் மேலும் பாய்ச்சலை நிகழ்த்த உள்ளன.


சைபர் தாக்குதல் உஷார்
நிச்சயம் ஹேக்கர்கள் எனப்படும் தாக்காளர்களின் கைவரிசையில் இந்த ஆண்டு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, இணைக்கப்பட்ட பொருட்கள் அதிகரிப்பது தாக்காளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துவிடுகிறது. பாஸ்வேர்ட்களை கொத்து கொத்தாக களவாடிச்செல்வதும், போன்களையும், கம்ப்யூட்டர்களையும் லாக் செய்து வைத்து மிரட்டுவதும், பிஷிங் வகை மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இவை தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்பதோடு, என்கிப்ரிஷன் பாதுகாப்பு குறித்தெல்லா இணைய சாமானியர்களும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பிக்டேட்டா பற்றி பெரிதாக பேசப்படும் நிலையில், நிறுவனங்கள் கையில் நம் டேட்டா எப்படி எல்லாம் பயன்படுகின்றன என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பேட்டரி ஆற்றல்
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கேட்ஜெட்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் அவற்றுக்கு தீனி போடும் பேட்டரிகளின் ஆற்றலை அதிகரிக்கும் தேவையும் அதிகம் உணரப்படுகிறது. அதற்கேற்ப பேட்டரி தொடர்பான ஆய்வுகளும் தீவிரமடைந்துள்ளன. மேலும் புதுமையான பேட்டரி நுட்பங்களை எதிர்பார்க்கலாம்.! அதே போல புதிய வகை ஸ்மார்ட்போன் மாதிரிகளையும் அதிகம் எதிர்பார்க்கலாம்.

இயர்போன் புதிது
காதில் மாட்டிக்கொள்ளும் இயர்போன்கள் வயர்லெஸ் நுட்பத்தில் புதிய அவதாரம் எடுத்து வருகின்றன. ஆப்பிளின் ஏர்பாடு உள்ளிட்ட பல புதுமை சாதனங்கள் கவர்ந்திழுத்து வருகின்றன. மேலும் புதுமையான இயர்போன்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.


பொருட்களின் இணையம்
இண்டெர்நெட் ஆப் திங்ஸ் எனப்படும் பொருட்களின் இணையம் தொடர்பாக பல ஆண்டுகளாகவே பெரிதாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு இன்னும் தீவிரம் ஆகியுள்ளது. இணைய வசதி கொண்ட பொருட்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இத்துறையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆர்வன் காட்டி வருவதால், புதுமையான சேவைகள் அறிமுகமாகும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.

பிளாக்செயின் நுட்பம்
தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்ற துறைகளைவிட நிதித்துறையில் அதிகம் நிகழ்வதை அன்மை காலத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த வகை நிறுவனங்கள் நிதி நுட்ப நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த வகை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான கவனம் அதிகமாகியுள்ளதால் நிதி நுட்ப நிறுவனங்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளன. இந்த பிரிவில் முக்கியமாக பேசப்படும் பிளாக்செயின் நுட்பம் வங்கிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. பிரபல மறை பணமான பிட்காயினுக்கு அடிப்படையாக விளங்கும் இந்த நுட்பம் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான அடித்தளமாகவும் கருதப்படுகிறது.

தமிழ் இந்துவில் எழுதியது;