வித்தியாசமான இசை அறிமுக இணையதளம்.


மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க தூண்டும் பாடல்களை கேட்டு ரசிப்பது ஒரு வகை என்றால் மனதை மயக்க கூடிய புதிய அற்புதமான பாடலை கண்டறிந்து கேட்டு ரசிப்பது இன்னொரு வகையான இன்பம்.இசைபிரியர்களை பொருத்தவரை இப்படி அருமையான புதிய பாடலை கண்டறிந்து ரசித்து தங்களை மறப்பதற்கான தேடல் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த தேடலுக்கு உதவும் வகையில் இசை அறிமுக தளங்கள் அநேகம் இருக்கின்றன.இந்த தளங்கள் அனைத்துமே இசைப்பிரியர்கள் கேட்டு ரசித்த பாடலின் அடிப்படையில் அவர்களுக்கு பிடிக்க கூடிய பாடல்களை யூகித்து பரிந்துரை செய்யக்கூடியவையாகவே இருக்கின்ற‌ன.

பாண்டேரோ துவக்கி வைத்த இந்த பிரிவில் லாஸ்ட்.எம்மில் துவங்கி நிறைய தளங்கள் இருக்கின்றன.ஒவ்வொன்றும் பரிந்துரைக்கு ஒரு வகையான யுக்தியை பின்பற்றுகின்றன.

சமூக வலைப்பின்னல் தளங்களின் எழுச்சிக்கு பிறகு இசையை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பகிர்வதன் மூலம் புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ள உதவும் கூட்டு ரசனை தளங்கள் உருவாகி வருகின்றன.

பாடலை கேட்டு ரசித்த படி பகிர்ந்து கொள்ளவும்,கூட்டாக சேர்ந்து கேட்டு ரசிக்கவும் செய்யும் அற்புதத்தை இந்த தளங்கள் சாத்தியமாக்குகின்றன.

இந்த தளங்களில் இருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்ட வகையில் அருமையான இசை பரிந்துரை இணையதளம் ஒன்று இருக்கிறது.ரிச்சீம் என்னும் அந்த இணையதளம் பாடகர்களின் இசை தொடர்பின் அடிப்படையில் புதிய இசையை அறிமுகம் செய்து கொள்ள உதவுகிறது.இந்த பயணத்தின் வழியே பாடகர்கள் இடையே உள்ள பரஸ்பர தொடர்பு வலைப்பின்னல் வழியே மாறி மாறி பயணம் செய்து கிரங்க வைக்கிறது.

பாடகர்கள் அல்லது இசை கலைஞர்களின் இசை தொடர்பு என்றால் அவர்களிடையே உள்ள இசை சார்ந்த உறவாகும்.உதாரணமாக ஒரு பாடகர் பல குழுக்களில் பாடியிருக்கலாம்.பல இசையமைப்பாளர்களின் கீழ் பாடியிருக்கலாம்.வேறு பாடகர் அல்லது இசை கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கலாம்.பாடல் எழுதி கொடுத்திருக்கலாம்.

இப்படி பல வகைகளில் இசை கலைஞர்கள் பரஸ்பரம் தொடர்பு கொண்டிருக்கலாம்.ஒவ்வொரு பாடகருக்கும் உள்ள இந்த தொடர்புகளை பட்டியலிட்டு காட்டுகிறது ரிச்சீம் இணையதளம்.

ரசிகர்கள் தங்களின் அபிமான பாடகர் அல்லது இசை கலைஞரின் பெயரை இந்த தளத்தில் சம‌ர்பித்தால் அந்த பாடகர் அல்லது இசை கலைஞருடன் தொடர்புடைய கலைஞர்களையும் அவர்கள் இடையிலான தொடர்பு எத்தகையது என்பதையும் அழகாக பட்டியலிட்டு காட்டுகிறது.

ஒரு கலைஞர் மற்ற கலைஞர்களுடன் எப்படி எல்லாம் தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதே சுவாரஸ்யமாக இருப்பதோடு இந்த பட்டியலில் இருந்து புதிய பாடகர்களையும் தெரிந்து கொள்ளலாம்.அவர்களில் யாரை கிளிக் செய்தாலும் அவர்களின் இசை தொடர்பு பட்டியலை பார்க்கலாம்.அதன் மூலம் மேலும் புதிய பாடகர்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பாடகர் அல்லது கலைஞரின் பக்கத்திலும் அவரது தொடர்புகளோடு அவர்களின் ஆல்பம் ,பாடல்கள் போன்றவற்றுக்கான தகவல்கள் தரப்பட்டிருப்பதோடு ஸ்பாட்டிபை,லாஸ்ட்.எபெம் உள்ளிட்ட இசை சார்ந்த தளங்களில் அவர்களின் பக்கங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.

இசைப்பிரியர்கள் பயன்படுத்தி பார்த்தால் நிச்சயம் சொக்கிப்போய் விடுவார்கள்.

இணையதள முகவரி;http://richseam.com/

0 thoughts on “வித்தியாசமான இசை அறிமுக இணையதளம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *