Category Archives: music

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

midomiஇசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம்.
.
இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது.

பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது.

ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை பாடியோ அல்லது முனுமுனுத்தோ, அதற்கு நிகரான பாடல்களை தேடலாம். விரும்பிய பாடல்களை தேடிப் பெறும் வசதியைத் தரும் இணைய தளங்கள் அனேகம் இருக்கின்றன.

ஆனால் பாடல்களை பாடிக்காட்டியே தேடக் கூடிய, புதுமையான வசதி தரும் தளம் இது மட்டும்தான். அந்த வகை யில் இந்த தளம் மிகவும் சுவாரசியமானது.

தற்போது அறிமுகமாகும் எந்த தளமும், சமூக பண்பு இல்லாமல் இருப்பதில்லை. அதாவது இணைய வாசிகள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து கொள்ளும் சேவை யையும் சேர்ந்தே வழங்குகின்றன. இந்த தளமும் இத்தகைய சமூக பண்புடனேயே உதயமாகியிருக்கிறது.

இசைப்பிரியர்கள் இந்த தளத்தின் மூலம் மற்ற இசைப்பிரியர்களை தொடர்பு கொண்டு நண்பர்களாக முடியும். பாடல்களை பாடி காட்டும் போது, அதே பாடலை வேறு யார் பாடியிருக் கிறாரோ, அதனை நாம் கேட்டு மகிழ முடியும். அது பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் அவரோடு நட்பு கொள்ளலாம்.

இவ்வாறு பிடித்தமான பாடல்களை பாடுவதன் மூலமும், அவற்றை மற்ற வர்கள் பாடிக் காட்ட கேட்டு கருத்து சொல்வதன் மூலமும் இசைப்பிரியர் கள் தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளலாம்.

அடுத்தமுறை வேறு யாராவது பாடலை பாடி தேடும் போது, நீங்கள் பாடி வைத்திருக்கும் பாடல் அவருக் கான பட்டியலில் முதலிடத்தில் வந்து நிற்கும் வாய்ப்பும் இருக்கிறது. அவர் அதனை கேட்டு ரசித்து உங்களோடு தொடர்பு கொண்டு, நண்பராகும் வாய்ப்பு உள்ளது.

மற்ற எந்த இசையைச் சேர்ந்த தளங்களிலும் இல்லாத மற்றொரு சிறப்பம்சம், இந்த தளத்தில் எந்த மொழியிலும் பாடலாம் என்பதே. பெரும்பாலான இசைத் தளங்களில் ஆங்கிலமே பிரதான மொழியாக இருக்கிறது. நம்மவர்கள் தமிழ் பாடலை கேட்க விரும்பினால் அந்த தளங்கள் கைகொடுக்காது.

ஆனால் இந்த தளத்தில் அப்படியில்லை. தமிழிலேயே பாடித் தேடலாம்.
இது போல எந்த உலக மொழியிலும் பாடல்களை பாடலாம். காலப் போக்கில் இந்த தளம் பிரபலமாகி பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறும் போது எல்லா மொழி களிலும் பொருத்தமான பாடல்களை தேடுவது சாத்தியமாகலாம்.

இந்த தளத்தில் தேடுவதோடு, தங்களுக்கான தனி பக்கத்தையும் உருவாக்கி கொண்டு சுருக்கமான சுயசரிதை விவரங்களை வெளியிட்டு, ஒத்த ரசனை உள்ளவர்களை தேடி நட்புறவு கொள்வது மிகவும் சுலபமானது. இத்தோடு பிடித்தமான பாடல்களை இந்த தளத்தின் மூலமே காசு கொடுத்து வாங்கவும் முடியும்.

இசையையும், இசைச்சார்ந்த மனிதர் களையும் தேடுவதை சுலபமாக்கும் சுவாரஸ்யமான தளம் என்று இதனை வர்ணிக்கலாம். இசைப்பிரியர்கள் இந்த தளத்தில் தங்களை மறந்து மூழ்கிக் கிடக்கலாம்.

————-
www;
www.midomi.com

ஒலி ஏணி கேளீர்

ladder1அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டில் இருக்கும் மர ஏணியை, கால் வைக்கும்போதெல்லாம், கீதம் பாடும் சங்கீத ஏணியாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது, ஏணியை ஒரு இசைக் கருவி யாக உருவாக்கி விட்டார்கள். இந்த ஏணி வெறும் புதுமை மட்டு மல்ல, காலத்தின் கட்டாயம் என்கின்றனர்.
.
இன்டெர்நெட் யுகத்தில் தகவல் தொடர்பு வசதி, தெளிந்த நீரோடையா கவும், தங்கு தடையில்லா காட்டாறாக வும் பாயும் நிலையில் எந்த பொருளும் தனிமரமாக நின்று கொண்டிருப்பதில் பொருள் இல்லை. மக்கள் அவற்றை பயன்படுத்தினால் மட்டும் போதாது, தொடர்பு கொள்ளவும் சாத்தியம் இருக்க வேண்டும். சாதாரணமாக நினைக்கக் கூடிய ஏணிக்கும் இந்த கோட்பாடு பொருந்தும் என்னும் நோக்கத்தோடு, ஒலி ஏணி ஆங்கிலத் தில் டோன் லேட்ர்(Tone ladder) உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏணியின் உபயோகம் எல்லோரும் அறிந்ததே. பணி நிமித்தமாக அதில் ஏறி இறங்குவதை ஏற்ற இறக்கமான ஒத்திகையோடு தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை தான் ஒலி ஏணி செய்கிறது.

விஷேசமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒலி ஏணியில் உள்ள படிகள், தொடு உணர்வை புரிந்து கொள்ளக் கூடிய சென்சார் சாதனங்கள் பொருத்தப் பட்டுள்ளன. படியின் உள்ளே கண் ணுக்கு தெரியாத வகையில் கேபிள் களும் இணைக்கப்பட்டுள்ளன.

பாடும் படியான இதில் கை வைக்கும் போதும் சரி, கால் வைத்து ஏறும் போதும் சரி, அழகிய ஒலி வடிவம் உண்டாகும். படிகள் மீது கொடுக்கப் படும் அழுத்தத்திற்கு ஏற்ப, ஒலியின் அளவும் பலமாகவே இருக்கும். ஆக, படிகளில் கால் வைத்து ஏறி இறங்கும் தன்மைக்கு ஏற்றபடி, ஒலியும் மாறு படும். அந்த உணர்வோடு-, ஈடுபாடு காட்டி படிகளில் ஏறி இறங்கினால், இசைக்கருவியை மீட்டுவதுபோல சங்கீத அலைகளை எழுப்பவும் முடியும்.

ஒரு விதத்தில் பார்த்தால், ஒட்டுமொத்த உடலசைவை பயன் படுத்தி, இசையை உருவாக்க
வழி செய்வது இந்த ஏணியின் தனிச்சிறப்பு. முதல் பார்வைக்கு சிறுவர்கள் இந்த ஏணியில் ஏறி விளையாடுவதை பெரிதும் விரும்புவார்கள் என்று சொல்லத்தோன்றலாம். இல்லை, பெரியவர்களும் அதே விதமான ஆர்வத்தோடு, ஏணியில் விளையாடி மகிழலாம்.

இந்த ஏணி இரட்டை ஏணியாக ஜோடியாகவே வருவதால் துணைக்கு ஒருவரை அழைத்துக்கொண்டும் படிகளை பாட வைக்கலாம். ஒருவர் மற்றவர் எழுப்பும் ஒலிகளை கேட்ட படி, அதற்கு பதில் போல தம்முடைய இயக்கத்தை அமைத்துக் கொண்டால், நேரம் போவதுகூட தெரியாமல், இரு வர் மனதும் இணைந்த இசைமயமான விளையாட்டில் திளைத்திருக்கலாம்.

இரண்டாவது ஏணியோடு, வயர்லஸ் தொடர்பு கொண்ட மூன்றாவது ஏணி யும் உண்டு. மேலும், ஒலி அலைக ளோடு, ஒளி வட்டங்களையும் உருவாக் கிட முடியும். படிகள்மேல் பாதம் பதிவதற்கு ஏற்ப, அருகே உள்ள திரையில் ஒளி வட்டங்கள் தோன்றி மறையும். இந்த வகையில், ஒலி ஏணி பங்கேற்பு விளையாட்டு மட்டும் அல்ல, பார்த்து மகிழக்கூடிய நிகழ்வுகளையும் கூடத் தான். ஒரு இசை நாடகம்போல, ஒலி- ஒளி நாடகத்தை நிகழச்செய்து பார்வை யாளர்களை மெய்மறக்க வைப்பதும் சாத்தியம்.

டிஜிட்டல் உலகின் மேன்மையை தொட்டுப்பார்க்கும் நவீன கலை கண்காட்சியில் ஒரு பகுதியாக, இந்த ஒலி ஏணி அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்கால சாத்தியங்களை அறிய இசையும் தொழில் நுட்பமும் சங்கமிக் கும் இடத்தில், சோதனை பயனாக வெள்ளோட்டம் விட்டும் பார்க்கும் முயற்சி. அட, என்ன புதுமை என லயித்து நின்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதை பாட்டாளிகளின் ஏணியாகவும் போற்றலாம். ஏணிகளை அதிகம் பயன்படுத்துவது யார்? உழைக்கும் வர்க்கத்தினர்தானே.

உழைப்பாளிகள், சலிப்போடு ஏறி இறங்கும் சாதனமாக இல்லாமல் வேலை செய்யும் போதே, ஈடுபாட் டோடு இசைத்து மகிழும் இசை ஏணியாகவும் இது அமையலாம் தானே! பாட்டாளிகளின் களைப்பை விரட்ட வும் கைகொடுக்கலாம் தானே!

—-
link;
http://www.tonleiter.com/

இசைப்பறவை சிறகுகள் விரிக்க.

இது இசையின் பொற்காலமா என்று தெரியவில்லை. ஆனால் இசைப்பிரியர்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். டிஜிட்டல் இசையின் வருகையும், இன்டெர்நெட்டின் ஆற்றலும் இணைந்து இசைப்பிரியர்களுக்கு எண்ணற்ற கதவுகளை திறந்து விட்டிருக்கின்றன. இந்த கதவுகள் வழியே அவர்கள் விரும்பும் இசை தடையின்றி தவழ்ந்து வருகின்றன.

இசைக்கான இணையதளங்களும் பாடல்களை டவுன்லோடு செய்யும் சாப்ட்வேர்களும் போதாது என்பது போல பிடித்தமானதாக இருக்கக்கூடிய பாடல்களை பரிந்துரை செய்யக்கூடிய இணைய சேவைகளும் அறிமுகமாகியிருக்கின்றன.

கேட்க வாய்ப்பில்லாத ஆனால் கேட்க நேர்ந்தால் உச்சிக்குளிர்ந்து போய் விடக்கூடிய பாடல்களையும், பாடகர்களையும் அறிமுகம் செய்து அசத்தும் இணைய தளங்களுக்கு இருக்கின்றன.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, நிச்சயம் இசைப்பிரியர்களாக இருக்க இதை விட சிறந்த காலம் இருக்க முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த எண்ணத்தை இன்னும் கொஞ்சம் உறுதிப்படுத்தும் வகையில் புதிய சேவையாக “சாங்கிக்’ அறிமுகம் ஆகியுள்ளது.

இசைப்பிரியர்கள் தங்கள் அபிமான பாடல்களின் இசை கச்சேரி நடைபெறும் இடங்களை தெரிந்து கொண்டு நேரில் சென்று கேட்டு ரசித்து மகிழ்வதற்கான வழி காட்டும் சேவையாக “சாங்கிக்’ அமைந்துள்ளது.

“சாங்கிக்’ (songkick.com) இணையதளம் வழங்கப்படும் இந்த சேவையின் அருமையை உணர்ந்துகொள்ள, அமெரிக்கா (அ) பிரிட்டனில் இசைப்பிரியராக இருக்க வேண்டும்.

இதற்கு காரணம் இந்த சேவை முதல் கட்டமாக இந்த இரு நாடுகளில் மட்டும்தான் அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறது என்பது மட்டும் அல்ல. இந்த சேவையின் தேவையை உணர்ந்து பாராட்டக்கூடிய இசை கேட்பு கலாச்சாரம் அந்த நாடுகளில் உள்ள இசைப் பிரியர்களிடம் மட்டுமே இருக்கிறது என்பதும்தான். அதற்காக தம்மவர்களை குறைத்து மதிப்பிடுவ தாக குறைபட்டுக்கொள்ளக்கூடாது.

ஆயிரம்தான் சொன்னாலும், மேல் நாட்டு ரசிகர்கள் இசைக்காக உருகி வழியும் விதமே அலாதியானதுதான்! அதிலும் அபிமான பாடகர்/ இசைக் குழுக்களின் நேரடி இசை நிகழ்ச்சி களை கேட்டு ரசிப்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் நம்மிடம் கிடையாது.

அதற்கேற்பவே, பாடகர்களும், ஊர் ஊராகச் சென்று ரசிகர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல இசைக்குழுக்கள் ஒவ்வொரு நகரமாக சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவதும் பிரபலமாகவே இருக்கிறது.

“மியூசிக் டூர்’ என்று சொல்லப்படும் இந்த இசை சுற்றுப்பயணங்கள் நம் நாட்டில் அந்த அளவு பிரபலமாகவில்லை. இசைப்பயணம் மேற்கொண்டே முன்னுக்கு வந்த இசைக் குழுக்களும் உண்டு. இவற்றுக்கு நிகராக நம்மூரில் கச்சேரிகளை சொல்லலாம். திருவிழாக்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளையும் குறிப்பிடலாம். இருந்தாலும் இவை எல்லாம் இலுப்பை பூ ரகம்தான்!

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் நேரடி இசை நிகழ்ச்சி கலாச்சாரம் ரொம்பவும் உயிர்ப்புடனே இருக்கிறது. நேரடி இசை நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க வாய்ப்பு இருப்பது போலவே அவற்றை தவற விடும் அபாயமும் தீவிர இசைப் பிரியர்களுக்கு இருக்கிறது.

அபிமான இசைக்குழுக்களின் நிகழ்ச்சி நிரலை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை, இணையதளங்களும், வலைப் பின்னல் தளங்களும் ஏற்படுத்தி தந்தாலும், பல நேரங்களில் நிகழ்ச்சி நடைபெறும் தகவல் கவனத்திற்கு வராமலே போய்விடலாம்.

தான் இருக்கும் நகருக்கே அபிமான இசைக்குழு வந்து சென்றிருக்கும் நிலையில் அதுபற்றிய தகவல் தெரிய வராமல், அந்நிகழ்ச்சிக்கு சொல்ல முடியாமல் போவது இசைப் பிரியர்களுக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் தரக்கூடியது. இந்த ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே “சாங்கிக்’ உதயமாகி இருக்கிறது.

இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், அதன்பிறகு குறிப்பிட்ட அந்த உறுப்பினரின் மனங்கவர்ந்த பாடகர்களும் இசைக்குழுக்களும் எப்போது அவரது நகருக்கு விஜயம் செய்தாலும் அது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கான டிக்கெட்டும் வழங்கப்படுகிறது.

இசைக்குழுக்களின் பெயரை கூகுல் தேடியந்திரத்தில் டைப் செய்து நிகழ்ச்சிநிரலை தெரிந்துகொள்வதை விட இது சுலபமானது. மேம்பட்டது. ரசிகர்கள் தாங்கள் விரும்பி கேட்கும் பாடகர்களை குறிப்பிட்டால் போதும், அந்த பாடகர்களின் நிகழ்ச்சிகளை தவற விடாமல் பின்தொடர்வதற்கான வழியை இந்த தளம் ஏற்படுத்தி தந்து விலகுகிறது.

பிரபலமான பாடகர்கள் மட்டும் அல்லாமல், புதிய மற்றும் அறிமுகமான பாடகர்களின் நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ளும் வசதியையும் சாங்கிக் அளிக்கிறது. அது மட்டும் அல்ல நமக்கு அறிமுகமானதை இசைக்குழுக்களின் நிகழ்ச்சிக்கான பரிந்துரை வசதியையும் அதன் கூடுதல் சிறப்பம்சமாக விளங்குகிறது.

இப்படி பரிந்துரைக்கப்படும் புதிய குழுக்கள் அநேகமாக மனதுக்கு பிடித்தமானதாக ஆகிவிடக்கூடிய குழுவாக இருக்கும் என்பது தான் விசேஷம். உறுப்பினர்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களை இனங்கண்டு கொண்டு அந்த ரசனைக்கு பொருந்தி வரக்கூடிய பாடல்கள் பற்றி பிலாக் தளங்களில் குறிப்பிடுவதை கண்டுபிடித்து, இந்த பரிந்துரைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இவற்றை தவிர குறிப்பிட்ட இசைக்குழுவுக்கு உள்ள பிரபலத்தன்மையை அறியும் வசதியையும் இந்த தலம் அளிக்கிறது. இந்த தளத்தின் பக்கம் போய்விட்டால் அதன்பிறகு அபிமான இசைக்குழுவின் வருகையை தவறவிடும் வாய்ப்பு குறைவு என்பதோடு, புதிய இசைக்குழுவை அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்புகளும் அதிகம்.

பிரிட்டனைச் சேர்ந்த இயான் ஹோகர்த் என்னும் வாலிபர் தனது கல்லூரி சகாக்களோடு இணைந்து இந்த இணைய சேவையை உருவாக்கி இருக்கிறார். ஒரு முறை நண்பரோடு பேசிக்கொண்டிருந்த போது, இசைக்குழுவின் நிகழ்ச்சிகளை தவறவிடுவது பற்றி அவர் ஏமாற்றத்தோடு குறிப்பிட்டதை கேட்க நேர்ந்தவுடன் இந்த சேவையை அளிப்பதற்கான உத்வேகம் பிறந்ததாக ஹோக்வொர்த் கூறுகிறார்.

வாரம் ஒரு முறை இசை நிகழ்ச்சிக்கு தவறாமல் செல்ல விரும்புகிறவர்களுக்கு ஏற்படக்கூடிய ஏமாற்றத்தை தவிர்த்து எல்லையில்லா இசை இன்பம் அளிப்பதை தனது கடமையாக கருதி இந்த சேவையை உருவாக்கியதாகவும் அவர் உற்சாகமாக கூறுகிறார்.

————–
link;
www.songkick.com

இசைப்பட சம்பாதிப்போம்

 

 இசைப்பட வாழ்வது பற்றி தமிழ் கவிதை பேசுகிறது. இப்போது இசைப்பட சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இன்டெர்நெட் ஏற்படுத்தி தந்துள்ளது. இசைப் பிரியர்களுக்கு பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில், இன்டெர்நெட் பாடல்களை பகிர்ந்து கொள்ள சுலபமான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது காப்புரிமை மீறும் செயல் என்பதால் இணையவாசிகள் வழக்கு மற்றும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்ட காலமும் வெகு வேகமாக மலையேறி வருகிறது.

தற்போது காப்புரிமை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பம் வழங்கும் பகிர்தல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாடல்களை கேட்டு மகிழ்வதற்கான புதிய வழிகள் பல அறிமுகமாகி இருக்கின்றன.

சொல்லப் போனால் மற்ற எந்த துறையையும் விட இசை சார்ந்த துறையில் புதிய சேவைகளும், அவற்றை முன்வைக்கும் இணையதளங்களும் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் தற்போது வந்திருப்பதுதான் இணையவாசிகள் இசைப்பட பொருளீட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் இணையதளம். மிக்சாலூ எனும் வித்தியாசமான பெயரை கொண்டு அறிமுகமாகி உள்ள இந்த இணையதளம்,  இசைப் பிரியர்கள் எந்தவித முயற்சியும் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழியை காண்பிக்கிறது

 

அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களுக்கு பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தி அவற்றை நண்பர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான். எத்தனை நண்பர்கள் அந்த பாடல்களை கேட்டு மகிழ்கின்றரோ அந்த அளவுக்கு அவர்களுக்கு வருவாய் கிடைக்கும்.
நண்பர்களுக்கு பாடல்களை பரிந்துரை செய்வதன் மூலமே பொருளீட்டலாம் என்று சொல்வது முதலில் மிகச் சுலபமானதாக இருக்கிறதே என்று எண்ண வைக்கும். 

அடுத்த நொடியே இது ஏதோ மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடி போன்ற செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழலாம். இந்த முறை சுலபமானதே தவிர நிச்சயமாக மோசடியானது இல்லை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண பழக்கத்தை அனைவருக்கும் பணம் பெற்றுத் தரக் கூடிய வழியாக மாற்றும் ஒரு புத்திசாலித்தனமான முயற்சி இது.

மேற்கத்திய நாடுகளில் மிக்ஸ்டேப் என்று ஒரு கலாச்சாரம் உண்டு. பெயரை கேட்டவுடன் இது ஏதோ புதிய சங்கதி என்று நினைத்து விட வேண்டாம். நமக்கு பிடித்தமான பாடல்களை நாம் தேர்ந்தெடுக்கும் வரிசையில் பதிவு செய்து கொள்வதையே இப்படி மிக்ஸ்டேப் என்று சொல்கின்றனர்.

பொதுவாக கேசட்டில் இப்படி இசைப் பிரியர்கள் பல்வேறு ஆல்பங்களிலிருந்து பாடல்களை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வார்கள். நம்ம ஊரில் கேசட்டில் சினிமா பாடல்களை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வதில்லையா அது போல.

ஆனால் மிக்ஸ்டேப் கலாச்சாரத்தில் என்ன விசேஷமென்றால், அங்கே நிலவும் ஆல்பம் சார்ந்த சூழ்நிலையில், இது இசைப் பிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கான வாய்ப்பாக அமைவது என்பதுதான்.

எல்லா இசை வெளியீடுகளுமே நிறுவனமயமாக்கப்பட்டு ஒரு முழுமையான ஆல்பமாக முன் தீர்மானிக்கப்பட்ட வடிவில் வெளிவரும் நிலையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த சிடி யுகத்திலும் கூட இது தொடர்கிறது.

மிக்சாலூ இணையதளம் இந்த மிக்ஸ்டேப் கலாச்சாரத்தை டிஜிட்டல் உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அதாவது இசைப் பிரியர்கள் தங்களது மிக்ஸ்டேப் பதிவுகளை இந்த தளத்தில் இடம் பெற வைத்து தங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். 

இந்த தளத்தில் இடம் பெற வைப்பதோடு தங்களது பிளாக் தளம் மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் இடம் பெற வைத்து அதன் மூலமும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த சேவை இலவசமானது. ஆனால் நண்பர்கள் அந்த பாடல்களை கேட்டுப் பார்த்து அவை பிடித்துப் போய் வாங்க நினைத்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.

அப்படி அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பாடலை பரிந்துரை செய்தவர் என்ற முறையில் இசைப் பிரியர்களுக்கு வழங்கப்படும். ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கும் போது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனைக்கேற்ப பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் பாடல்களிலிருந்து நாம் இதுவரை கேட்டிராத நல்ல பாடல்களை அறிமுகம் செய்து கொள்ள முடியும்.

நாமே கூட நம்மிடம் எத்தனை கேசட் இருந்தாலும் நண்பர்கள் வைத்திருக்கும் கேசட்டின் பட்டியலை பார்த்து அதில் உள்ள அபூர்வ பாடல்களை இணங்கண்டு வியந்து போவதுண்டல்லவா. இதுதான் மிக்ஸ்டேப்பின் பலம்.

தற்போது இசைப் பிரியர்கள் இதனை இன்டெர்நெட் மூலம் சக இசைப் பிரியர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதன் மூலம் வருவாயையும் ஈட்டலாம் என்கிறது.

website;www.mixaloo.com

ரசிகர்கள் பங்குச் சந்தை

இசைக்குழுக்கள் புதிய பாடல் ஆல்பங்களை வெளியிடு வதொன்றும் புதிய விஷயமல்ல. பொதுவாக இசைக்குழுக்கள் புதிய ஆல்பங்களை வெளியிடுவது, இந்த குழுவின் ரசிகர்களால்  எதிர்பார்க்கப் படும் நிகழ்வாக இருக்கும். புதிய ஆல்பம் வெளிவரும்போது கொண்டாடி மகிழ்வது என்பது அந்தக் குழுவின் ரசிகர்களுக்கு மட்டுமே இயல்பாக இருக்கும்.
.
மிகப்பெரிய இசைக்குழுக்கள் என்றால் பத்திரிகை மற்றும் மீடியா வெளிச்சத்தால் பரபரப்பு அதிகமாகி பலரும் எதிர்பார்த்து அந்த ஆல்பம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அனைவர் மத்தியிலும் ஒரு கொண்டாட்ட மனோபாவம் ஏற்பட்டு விடும். இசை உலகத்தின் மிகவும் பரிட்சயமான இந்த வாடிக்கை யான நிகழ்வுகளை விட்டுத் தள்ளுங்கள் உள்ளபடியே இசைக்குழு ஒன்று வெளியி ட்டுள்ள ஆல்பம் உண்மை யான ரசிகர்களையெல்லாம் கொண் டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

அந்த குழுவின் பாடல் ஆல்பம் வெளிவந்த விதத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்கள் என்றால் நீங்களும் கொண்டாட்டத்தில் சேர்ந்து கொள்வீர்கள். அப்படி என்னஅந்த இசைக்குழுவிடமோ, அதை வெளியிட்டுள்ள ஆல்பத்திலோ விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம். முன்னேறத் துடிக்கும் எத்தனையோ திறமையான இசைக்குழுக்களில் செகண்ட் பெர்சன் குழுவும் ஒன்று. ஆம், அதுதான் அந்த குழுவின் பெயர்.

புதிய இசைக்குழுவுக்கு ஏற்ப அதன் சமீபத்திய ஆல்பம் கேட்டு ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இல்லை யென்றால் ரசிகர்களை கவர முடியுமா? அந்த ஆல்பத்தின் இசைத் தகுதியை விட்டு விடுங்கள், அந்த ஆல்பம் வெளியிடப்பட்ட விதம்தான் நம்முடைய கவனத்துக்கும், பாராட்டுக்கும் உரியது. அந்த ஆல்பம் ரசிகர்களால் ரசிகர்களுக்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதே விஷயம். அதாவது இந்த ஆல்பத்தை ரசிகர்களே புரவலர் களாக நின்று ஆதரித்திருக்கின்றனர். ஆல்பத்தை தயாரித்தவர்கள் ரசிகர்கள்தான்.

இசைக்கலைஞர்களுக்கும், ரசிகர்  களுக்குமிடையே பாலமாக திகழ்ந்து, இடைத்தரகர்கள் இல்லாமல் சுதந்திரமான நோக்கில் இசையை வளர்க்கும் உத்தேசத்தோடு துவக்கப் பட்ட புதுமையான இணையதளம் செல் ஏ பேண்ட் பற்றி இந்த பகுதியில் அது அறிமுகமான காலத்திலேயே குறிப்பிடப் பட்டுள்ளது. ரசகர்களின் பங்குச்சந்தை என்று குறிப்பிடப் படக்கூடிய அந்த தளத்தில், தாங்கள் விரும்பும் புதிய குழுக்கள் புதிய ஆல்பத்தை தயாரிக்க ரசிகர்கள் நிதியுதவி செய்யலாம்.

ஒவ்வொரு ரசிகரும் குறிப்பிட்ட அளவு தொகையைக் கொடுத்து தாங்கள் ஆதரிக்கும் குழு ஆல்பத்தை தயாரித்து வெளியிட உதவி செய்யலாம். அதன் பிறகு ஆல்பம் விற்பனையில் வரும் வருமானத்தில் ரசிகர்களுக்கும் பங்கு கிடைக்கும். இவ்விதமாக இசைத்தட்டு நிறுவனங்களின் தயவு இல்லாமல் ரசிகர்களை நம்பி மட்டுமே இசைக் குழுக்கள் பிழைப்பு நடத்தலாம் என்னும் நம்பிக்கையோடு இந்த தளம் உருவாக்கப்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது பிரிட்டனைச் சேர்ந்த செகண்ட் பெர்சன் இசைக்குழு தன்னுடைய ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளது. இது இந்த இளம் குழுவின் இரண்டாவது பாடல் ஆல்பம்.

தி எலிமண்ட்ஸ் என்னும் பெயரில் இந்தஆல்பம்  வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்குகளை வாங்கி இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். 6 மாத காலத்தில் 50 ஆயிரம் டாலர்கள் திரட்டப்பட்டு இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இசைக்குழுவைச் சேர்ந்த பாடகரான ஜூலியான ஜான்சன் ரசிகர்கள் பக்க பலத்தோடு பாடல் ஆல்பத்தை தயாரிக்க முடிந்தது என நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நினைத்துப்பார்க்க முடியாத வகையில் இந்த கனவு நிறைவேறி இருப்பதாக அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

தங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிதி திரட்டும் நடவடிக்கை மிகுந்த சுவாரசியமானதாக இருந்தது என்று இந்த குழுவைச் சேர்ந்த மற்றொரு இசைக் கலைஞர் தெரிவித்துள்ளார்.
செல் ஏ பேண்ட் தளத்தின் மூலம் பாடல் ஆல்பத்தை வெளியிட்டுள்ள ஏழாவது இசைக்குழுவாக இந்த குழு விளங்குகிறது.

மற்ற புதிய குழுக்கள் இந்த முறையை பின்பற்றுவதற்கு ஊக்கமளிப்பதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. ரசிகர்களே இசைக்குழுவை உருவாக்க உதவி செய்யும் இந்த தளத்தை பிம் பெட்டிஸ்ட் என்னும் ஹாலந்து நாட்டவர் தொடங்கியுள்ளார். வர்த்தக நிறுவனங்களின் பிடியில் சிக்காமல் இன்டெர்நெட் உதவியோடு ரசிகர்களை மட்டுமே நம்பி இசைக்குழுவை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்  என்னும் அவரது நோக்கம் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.