Tag Archives: apps

சிறு நிறுவனங்களுக்கான அருமையான செயலி:ஹனிடேஸ்க் நிறுவனருடன் நேர்காணல்.

தேவைகள் தான் கண்டுபிடிப்புகளுக்கான தாய் என்பார்கள்.வலைப்பதிவு யுகத்தின் துவக்கமான பிலாகர் சாப்ட்வேர் அதன் மூல நிறுவன‌ உழியர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டு பின்னர் எலோருக்குமானது.பிலாகரை தந்த இவான் வில்லியம்ஸ் பின்னர் ஓடியோ நிறுவனத்தை துவங்கிய போது தங்கள் குழுவினரிடையே தொடர்பு கொள்வதற்கான சுலபமான வழியாக உருவாக்கப்பட்ட குறும்பதிவு சேவை தான் உலகம் போற்றும் டிவிட்டராக உருவானது.

இதே போலவே தனிநபர்களுக்கான இணைய குறிப்பேடாக உருவாக்கப்பட்ட நியாபக் செயலியை உருவாக்கிய ஒரு குழுவாக தங்கள் செய‌ல்பாடுகளை நிர்வகிக்க ஒரு செயலியை தேடிய போது அவர்களின் ஆறு மாத கால உழைப்பின் பயனாக உருவானது ஹனிடேஸ்க் செயலி.

குழுவாக அல்லது அணியாக பணியாற்றுபவ‌ர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இந்த இணைய செயலி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் தேவையை மிக அழகாக பூர்த்திச் செய்கிறது.

தனி நபர்களுக்கு எப்படி நேர நிர்வாகம் முக்கியமோ அதே போல குழுவாக செயல்படுபவர்களுக்கு தங்களிடையேயான அணி நிர்வாகம் மிக முக்கியம்.

கூரிப்பிட்ட திட்டத்தில் பணியாற்றுபவர்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்ள வேண்டிய தேவையையும் கருத்து பறிமாற்றத்தையும் முன்னேற்றத்தை கண்கானிப்பதையும் இந்த செயலி எளிமையாக்கி தந்துள்ளது.

டீம் கொலேபிரேஷன் என்றூ சொல்லப்படும் இத்தகைய ஒருங்கினைப்புக்கு உதவும் செயலிகள் பல இருந்தாலும் ஹனிடேஸ்க் அவற்றை எல்லாம் விட மிகவும் எளிமையானது என்பதோடு இது நம்மூர் தயாரிப்பு என்பது பெருமைக்குறிய விஷ‌யம்.

தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த மென்பொருள் நிபுனர்களான வசந்த மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய வீஹீட்ஸ் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவத்தினால் உருவாக்கப்பட்ட செயலி இது.

ஹனிடேஸ்க் செயலி மற்றும் நிறுவனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி இதன் நிறுவனர்களில் ஒருவரான வசந்தின் விரிவான் இமெயில் நேர்காணல் இதோ;.

1.ஹனிடேஸ்க் செயலியின் நோக்கம் என்ன?
வர்த்தக நிறுவனங்கள் அல்லது குழுவாக செயல்படும் எவரும் ஹனிடேஸ்க் செயலியின் மூலம் அவர்களது தினசரி செயல்களையும், குழுவின் நடவடிக்கைகளையும் திரண்பட ஒருங்கிணைத்து, அன்றாட வேலைகளை விரைவிலும், துரிதமாகவும் முடிக்க வழி வகுக்கிறது. மேலும் குழுவில் நடக்கும் செயல்களை நொடிக்கு நொடி தெரிந்து கொள்ளவும், அவர்களது வேலை திறனை கண்காணிக்கவும் உதவி புரிகிறது.

2.ஹனிடேஸ்க் செயலி யாருக்கானது?
தற்போது நாங்கள் ஹனிடேஸ்க் செயலியை உலகளாவிய எந்தவொரு சிறு/நடுத்தர வர்த்தக நிறுவனங்களும்(SME-Small/Medium Enterprises) மற்றும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்ஸ்(Technology Start-Ups) பயன்படுத்தும் வகையில் உருவாக்கி உள்ளோம்.

3.ஹனிடேஸ்க் செயலி உருவான‌ விதம்?

நியாபக் செயலியின் உருவாக்கத்திற்கு பிறகு எங்களது நிறுவனத்தின் குழு எண்ணிக்கை இருவரில் இருந்து ஆறு நபராக உயர்ந்தது. எனவே எங்களது ஒவ்வொருவரின் வேலைகளையும் ஒழுங்கு படுத்த ஒரு தீர்வு தேவைபட்டது. எனவே இணையத்தில் உள்ள குழுவுக்கான கொலாபிரேஷன் செயலிகளை சோதித்து பார்த்தோம். ஆனால் பல செயலிகளின் பயன்பாடுகள் மிகவும் கடினமாகவும், குழுவின் செயல்களை ஒருங்கிணைக்க தவறியதாகவும் மற்றும் அவர்களது செயலியின் விலையும் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே குழுவுக்கான கொலாபிரேஷன் செயலி சந்தை இன்னும் முழுமை அடையவில்லை என்பதை உணர்ந்து ஆரம்பித்து 6 மாதங்கள் உழைப்பிற்கு பின்பு உருவானதே ஹனிடேஸ்க்.

4.ஹனிடேஸ்க் செயலி பிரதானமாக ஐடி துறையினருக்கானது போல தோன்றுகிறதே,அதை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?எப்படி பயன்படுத்தலாம்?

நான் முன்பு கூறியது போல குழுவாக செயல்படும் எவரும் ஹனிடேஸ்க் செயலியினை பயன்படுத்துமாறு வடிவமைத்து உள்ளோம்.
உதாரணமாக, நமது தமிழ் பதிவர்கள் தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியினை நடத்துகின்றனர். ஹனிடேஸ்க் செயலி மூலம் பதிவர்கள் சந்திப்பு ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சியின் செயல்களையும், வேலைகளையும் அழகாக பிரித்து அந்தந்த நபர்களிடம் தந்துவிட்டு செயலி மூலம் வேலைகள் எவ்வளவு முடிந்து உள்ளது, முடியாத வேலைகளை திரண்பட விரைவாக முடிக்க என்ன வழிகள் உள்ளன என அனைத்து விசயங்களையும் தெளிவாக கண்காணிக்க முடியும்.

5.இந்த செயலி எந்த தேவையை நிறைவேற்றுகிறது?

நிறுவனங்களின் திறன் உற்பத்தியை(Productivity) மற்றும் நிறுவனங்களில் உள்ள அணிகள் இடையேயான தொடர்பினை(Communication) அதிகபடுத்தி அவர்களின் உற்பத்தி திறனையும் அதிகபடுத்தும் தேவையை ஹனிடாஸ்க் சிறப்பாக நிறைவேற்றும்.

7.தனிநபர்கள் இதனை பயன்ப‌டுத்த முடியுமா?

தற்போது ஹனிடாஸ்க் ஒரு குழுவாக பயன்படுத்துவோற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் அதிகமாக உபயோகிக்கும் பட்சத்தில் சில அம்சங்களை கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது.

8.குடும்ப உறுப்பினர்கள் இதனை பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதா?

உள்ளது. உதாரணமாக, உங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் பணிகளை ஹனிடாஸ்க் மூலம் ஒருங்கிணைக்க முடியும். இது போல் பல அன்றாட தேவைகளை இதில் உள்ளடக்க முடியும்.

9.இமெயில் மூலம் தகவல்களை உள்ளீஇடுன் செய்வது போல பேஸ்புக் ,டிவிட்டர் மூலம் செய்வது சாத்தியமா?

கண்டிப்பாக முடியும். ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் ஸ்டேட்டஸ்களின்(Status) ஹாஷ்டேகினை (#Hashtag) உபயோகபடுத்தி ஹனிடாஸ்க் செயலியில் தகவல்களை உள்ளிடலாம். இந்த அம்சத்தை எங்களது வெர்ஷன் இரண்டில்(V2.0) வெளியிட உள்ளோம். இது மட்டும் அல்லாமல் உங்கள் அலைபேசியின் குறுந்தகவல் மூலமாக தகவல்களை உள்ளிடவும், செயலியில் இருந்து அலைபேசியில் பெறவும் வசதிகளை உருவாக்கி வருகிறோம்.

10.இது வரை செயலிக்கான வரவேற்பு உள்ளது?

வெளியிட்ட ஒரு மாதத்தில் பல்வேறு தரப்பில் இருந்து நல்ல கருத்துகளையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது ஹனிடாஸ்க்.
இன்று வரை 250 பயினிட்டார்கள் பயன்படுத்தி வருகின்றனர், அதில் 89 நிறுவனங்களும் அடக்கம். ஸ்டார்ட்அப் சமூகத்தின் சில கருத்துகள் பின்வருமாறு:
01. http://yourstory.in/2012/07/vheeds-team-management-honeytask/
02. http://www.pluggd.in/team-collaboration-tool-honeytask-297/
03. http://www.techinasia.com/honeytask-productivity-platform-india/

மேலும் இது வரை இரண்டு ஏஞ்சல் இன்வெஸ்டோர்ஸ்(Angel Investors) ஹனிடாஸ்க்கில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

11.மற்ற ஒருங்கிணைப்பு செயலிகளோடு ஒப்பிடும் போது இதன் சிறப்புக்கள் என்ன?

பல்வேறு அம்சங்களை(Project Management, Task Control, Time Tracking, Chat, Reports, Team management) ஒருங்கிணைத்து ஒரே செயலினியுள் இதுவரை யாரும் தந்திராத வகையில் எளிமையாகவும், அனைவரும் உபயோகிக்கும் வகையில் விலை குறைவாகவும் தருவதே எங்களது குறிக்கோளாக வைத்து உள்ளோம். மற்ற செயலிகள் மேற் சொன்ன அம்சங்களை தனியாகவவோ, சில அம்சங்களை மட்டும் சேர்த்தே இதுவரை வழங்கி வருகின்றன.

12.செயலியை பயன்படுத்தியவர்களின் கருத்துக்கள் என்ன?

பல்வேறு பயனீட்டாளர்கள் செயலியை உபயோக படுத்த எளிமையாக இருப்பதாகவும், சிலர் மிகவும் வேகமாக இயங்குவதாகவும் தெரிவிதுள்ளனர். சிலர் தங்களக்கு செயலியில் பயன்படுத்தி உள்ள வண்ணங்கள் கொஞ்சம் மென்மையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தனர், அனைத்து கருத்துகளையும் உட்கொண்டு எங்களது அடுத்த வெர்ஷன் உருவாகி வருகிறது.

13.அடுத்த கட்ட திட்டம் மற்றும் மேம்பாடு முயற்சிகள் என்ன?

கூகிள், ஃபேஸ்புக், ட்விட்டர், ட்ராப்பாக்ஸ் போன்ற திர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் (Third Party Applications) உடன் செயலியை ஒருங்கிணைக்க உள்ளோம். மேலும் அண்ட்ரோயாட், ஆப்பிள் (Android,iOS) ஆகிய இயங்கு பொருள் சாதனங்களில் செயலியினை கொண்டு வர உள்ளோம்.

14.சாப்ட்வேர் குறித்த உங்கள் நிறுவன அணுகுமுறை என்ன?

மென்பொருள் என்பது நமது அன்றாட வேலைகளை எளிதாகவும், விரைவாகவும் முடிக்க உதவும் ஒரு பொருளாகதான் நாங்கள் கருதுகிறோம். மேலும் மென்பொருள்களும், இணைய வசதிகளும் இந்தியாவில் வளர்ந்த நகரங்களுக்கு மட்டும் உரித்தானது என்பதை மாற்றவே ஈரோட்டில் எங்களது மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறோம். விரைவில் ஈரோடு மாநகரத்திற்கான ஒரு மென்பொருளை உருவாக்க உள்ளோம்.

15.வேறு முயற்சிகள் என்ன என்ன?

ஹனிடாஸ்கின் முழுமையான உருவாக்கத்திருக்கு பின்பு எங்களது நீண்ட நாள் எண்ணமான ஈரோடு மாநகரத்திற்கான ஒரு மென்பொருளை உருவாக்க உள்ளோம். இந்த மென்பொருள் மூலம் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மக்களின் பயன்பாட்டிற்காக ஒரே இடத்தில்(Platform) மென்பொருள் மூலம் இணைக்க உள்ளோம். இதன் மூலம் மக்களும், வணிக நிறுவனங்களும் பெரிதும் பயனடைய வாய்ப்பு உள்ளது.

மேலும் ஈரோடு கல்லூரி மாணவர்களிடயே ஸ்டார்ட்அப்(Startup) மற்றும் இணைய செயலிகள் (Web Products) குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த எண்ணி உள்ளோம். இதன் மூலம் நமது தமிழகத்தில் இருந்தும் அடுத்த கூகிள் அல்லது ஃபேஸ்புக் போன்றவற்றை உருவாக்க முடியும் என நம்புகிறோம்.

16.நிறுவனம் உருவான விதம்?

நான் மற்றும் எனது நண்பன் சுரேந்தர் ஆகிய இருவரும் எங்களது பொறியியல் படிப்பிற்கு பிறகு(2007) ஹைத்ராபாத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தோம்.2010’ல் இந்தியாவில் ஸ்டார்ட்அப் (Technology startup) கலாச்சாரம் மெல்ல மெல்ல உருவாக ஆரம்பித்தது. அது எங்களை மிகவும் கவர்ந்தது. எனவே நாங்கள் இருவரும் எங்களது வேலையை இராஜினாமா செய்துவிட்டு புதிதாக ஏதேனும் தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என நினைத்து எங்களது சொந்த ஊரான ஈரோடு வந்தோம்.

வந்த பின் முதல் ஆறு மாதங்கள் எங்கள் வாழ்வின் கடினமான காலம் என்றே சொல்ல வேண்டும். எங்கு ஆரம்பிப்பது, எதை செய்வது என தெரியாமல் மிகவும் கஷ்டபட்டோம். தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்களது தொழிலுக்கான இணைய வடிவமைப்பு(Web Design) செய்து தந்தோம். இருந்தும் எங்கள் மனது திருப்தி அடையவில்லை. அதில் பெரிய வருமானமும் வரவில்லை.

சரி, மீண்டும் ஏதேனும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேரலாம் என முடிவெடுத்த போது எங்கள் நண்பன் ஒருவன் அவனது தொழிலின் தினசரி விவரங்களை(Current Bill, Phone Bill, Salary Dispatch, personal works, insurance dues) ஞாபகம் படுத்த ஒரு மென்பொருள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டான். அப்போதுதான் நாங்கள் இருவரும் நினைத்தோம், இதே தேவைகளுடன் பலர் கண்டிப்பாக இருப்பார்கள். ஏன் இதை மென்பொருளாக இல்லாமல் ஒரு இணைய செயலியாக செய்ய கூடாது என நினைத்தோம். 2 மாதங்கள் இதற்காக செயல்பட்டு இருவரும் நியாபக் ‘NYABAG’ என்னும் இணைய செயலினை வெளியிட்டோம். நாங்கள் எதிர்ப்பார்க்காத வகையில் நியாபக் சிறந்த வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து நடந்த மாற்றமே எங்களது இன்றைய நிறுவனம் VHEEDS TECHNOLOGY SOLUTIONS.

இந்த இரண்டு வருடங்கள் எங்களையும், எங்கள் கனவுகளையும் புரிந்து கொண்ட எங்கள் பெற்றோருக்கு நாங்கள் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம்.

17.நியாபக் செயலி பற்றியும் விரிவாக குறிப்பிடவும்.

நான் மேலே கூறியது போல ஒருவரது பெர்சனல் விஷயங்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நியாபக் செயலி. நீங்கள் உங்களது வேலைகளையும், முக்கியமான தினங்களையும் மறக்காமல் உங்களது மெயில் பாக்ஸிலோ, அலைபேசியின் மூலமாகவோ தெரிந்துக்கொள்ள நியாபக் உதவி புரியும். மேலும் உங்களது அன்றான நிகழ்வுகளை சேமித்து வைத்துக்கொள்ளும் டைரியாகவும் செயல்படும். இத்தனை வசதிகள் கொண்ட செயலி முற்றிலும் இலவசம் என்பது இதன் சிறந்த அம்சமாகும்.

இன்று வரை நியாபக் செயலினை 2647 பயனீட்டாளர்கள், 56 நாடுகளில் இருந்து பயன்படுத்தி வருகின்றனர்.

—————–

https://honeytask.com/

செல்போனில் வரும் கனித ஆசிரியர்.

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.கையில் இருக்கும் செல்போனை எடுத்து எந்த பாடத்தில் என்ன சந்தேகம் என்பதை குறிப்பிட்டு உதவி தேவை என்று தெரிவித்தால் ஆசிரியர் ஒருவர் செல்போன் வழியேவே அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவார்.

இப்படி செல்போன் மூலமே கனிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ச‌ந்தேகங்களை தெளிவுபடுத்தும் செல்போன் செயலியாக  மோடுட்டோ அறிமுகமாகியுள்ளது.

அந்த வகையில் செல்போனில் கிடைக்கும் டியூஷன் சேவை என்றும் இந்த செயலியை கருதலாம்.

ஐபோன் மற்றும் ஆன்ராய்டு போன்களில் செய‌ல்படக்கூடிய இந்த செயலியை மாணவர்கல் டவுண்லோடு செய்து கொண்டால் ,வீட்டு பாடங்களில் ஏதேனும் சந்தேகம் என்றால் உடனே இந்த செயலி வழியே அதனை குறிப்பிட்டு உதவி கோரலாம்.

இந்த செயலியிலேயே சந்தேகத்தை குறிப்பிடுவதற்கான வழி இருக்கிறது.விளக்கம் தேவைப்படும் பிரச்சனையை தெரிவித்து விட்டு அவசியம் என்றால் நோட்டு புத்தகத்தில் போட்டு பார்த்த கணக்கை வரைபடத்தோடு அப்படியே காமிரா மூலம் ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கலாம்.

எஸ் எம் எஸ் செய்திக்கு பதில் அளிப்பது போலவே தகுதி வாய்ந்த ஆசிரியர் ஒருவர் இந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை அளிப்பார்.மேலும் விளக்கம் தேவை என்றால் உடனடியாக அதையும் கேட்டுக்கொள்ளலாம்.

ஒரே நோட்டு புத்தகத்தில் கணக்கு போடுவது போல செல்போன் திரையிலேயே ஆசிரியரின் விளக்கத்தையும் பெறலாம்.அதாவ‌து எந்த இடத்தில் சந்தேகம் என்று சுட்டிக்காட்டினால் அதற்கு ஆசிரியர் தரும் விளக்கத்தை உடன்டியாக செல் திரையில் பார்க்கலாம்.

இந்த பாடங்களை சேமித்து வைத்து கொண்டு பின்னர் பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மாணவர்க‌ளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள செயலி என்றாலும் இதே போன்ற செயலியை நமது மாணவர்களுக்காகவும் உருவாக்கலாம்.

எல்லாமே செல்போனின் திரையை நோக்கி சென்று வரும் காலகட்டத்தில் வீட்டு பாடத்திற்கு உதவும் இந்த செயலி வரவேற்புக்குறியது தானே.

செயலி முக‌வரி;http://www.motuto.com/

செல்போனில் ஷாப்பிங் செய்ய ஒரு இந்திய செயலி

வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை உள்ளங்கையிலிருந்தே ஆர்டர் செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்?

அதேபோல நண்பர்களுக்கான பரிசுப் பொருளையும் உள்ளங்கை மூலமே வாங்கி அனுப்ப முடிந்தால் எப்படியிருக்கும்?

இதற்காக கற்பனையிலெல்லாம் ஈடுபட வேண்டிய அவசியம்இல்லை. நடைமுறை வாழ்க்கையி லேயே என்ஜிபே இந்த வசதிகளை சாத்தியமாக்கி தருகிறது.

அதாவது கையில் இருக்கும் செல்போன் மூலமே பொருட்களை வாங்குவதற்கான வசதியை இந்த சின்னஞ்சிறிய சாப்ட்வேர் (இணைய மொழியில் செயலி) செய்து தருகிறது.

இண்டர்நெட் மூலம் எப்படி பொருட்களை வாங்க முடிகிறதோ அதுபோலவே செல்போன் மூலமும் பொருட்களை வாங்கவும் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். அதற்கு தேவையான செயலியாக என்ஜிபே உருவாக்கப்பட்டுள்ளது. என்ஜிபே என்றால் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பேமெண்ட் என்று பொருள். அதாவது அடுத்த தலைமுறைக்கான வாங்கும் சேவை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

செல்போனில் வீற்றிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வணிக வளாகம் என்று வர்ணித்துக்கொள்ளும் இந்த செயலியை செல்போனில் டவுன் லோடு செய்துக்கொண்டால் அதன் பிறகு செல்போனிலிருந்து கிளிக் செய்தே ஷாப்பிங்கில் ஈடுபடலாம். 10 துறைகளின் கீழ் 200க்கும் மேற்பட்ட சேவைகள் மற்றும் பொருட் களை இப்படி என்ஜிபே செயலி வழியே, செல்போன் கிளிக் மூலமே தருவித்துக்கொள்ளலாம்.

இந்த செயலியை செல்போனில் டவுன்லோடு செய்துகொள்வது மிகவும் சுலபமானது, செலவு இல்லாததும்கூட. இதற்கென கொடுக்கப்படும் எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்தி அனுப்பினால் பதில் எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் செயலி செல்போனில் செயல்படத் துவங்கி விடும். செயலியை டவுன் லோடு செய்வது செலவில்லாதது போல இதனை பயன்படுத்தவும் அதிக கட்டணம் கிடையாது. என்ஜிபே இணையதளம் மூலமும் இதனை டவுன்லோடு செய்யலாம்.

ஜிபிஆர்எஸ் இண்டர்நெட் இணைப்பு சேவைக்கு வசூலிக்கப் படும் தொகை மட்டுமே செலுத்த வேண்டும். இந்த தொகையும் மிகவும் சொற்பமானதே. இந்த செயலி மூலமாக ரெயில்வே டிக்கெட்டை பதிவு செய்துகொள்ள லாம். ஓட்டல்களில் அறைகளை புக் செய்யலாம். பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

பரிசு பொருட்கள், கூப்பன்கள், செல்போன் விளையாட்டுக்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். புத்தகங்கள் மற்றும் வீட்டு தேவையான பொருட்களையும் ஆர்டர் செய்யலாம். எல்லாமே மிகவும் சுலபமானது. இந்த செயலில் அவற்றுக்காக உள்ள தலைப்பை தேர்வு செய்து இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செயலிலேயே பயனாளிகள் தங்களுக்கான வணிக வளாகத்தை அமைத்துக்கொண்டு விரும்பும் சேவைகளைஅதன் மூலம் அணுகலாம். இந்த செயலில் உள்ள விசேஷ அம்சம் என்னவென்றால் இதனை பயன்படுத்த விலை உயர்ந்த செல்போன் தேவை என்ற அவசியம் இல்லை. சந்தையில் கிடைக்கக் கூடிய மிகச் சாதாரண செல்போனில் கூட இது செயல்படும்.

எனவே இந்த செல்போனை பயன் படுத்த ஸ்மார்ட் போன்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் இல்லை. இகாமர்ஸ் என்று சொல்லப்படும் இணைய வழி வணிகத்தில் இருந்த இடத்திலிருந்தே பொருட்களை வாங்கலாம். இகாமர்ஸின் இளைய சகோதரன் என்று எம்காமர்ஸ் (செல்போன் மூலம் வணிகம்) எங்கே செல்லும் போதும் சேவைகளை பயன்படுத்த முடியும், பொருட்களை வாங்க முடியும். அந்த வாய்ப்பைத்தான் என்ஜிபே ஏற்படுத்தி தருகிறது.

இந்த செயலியை பயன்படுத்தும் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என பல வழிகளிலும் பணம் செலுத்தலாம். எல்லாமே மிகவும் பாதுகாப்பானது என்கிறது என்ஜிபே. பொருட்களை வாங்கும்போது ஐந்து இலக்க அடையாள எண் கொடுக்கப்படுகிறது. அதனை உள்ளீடு செய்தால் மட்டுமே வணிகத்தில் ஈடுபட முடியும். இந்த எண்ணை என்ஜிபே சேமித்து வைத்துக்கொள் வதில்லை. எனவே இது பயனாளிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

ஒவ்வொரு முறையும் இந்த எண்ணை உள்ளீடு செய்தால்தான் பொருட்களை வாங்க முடியும். ஆகையினால் செல்போன் தொலைந்தால்கூட வேறு யாரும் இந்த சேவையை தவறாக பயன்படுத்த முடியாது.

எஸ்எம்எஸ் அனுப்புவதுபோல செல்போன் ஷாப்பிங்கை எளிமையாக்கி இருக்கும் இந்த செயலியை ஜிகராஹா நிறுவனத்தின் மூலம் சவ்ரப் ஜெயின் உருவாக்கி உள்ளார்.

லூசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் சொந்தமாக தொழில் துவங்கும் எண்ணத்தோடு இந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த நிறுவனத்தை உருவாக்கினார்.

செல்போன் வழியிலான ஷாப்பிங் பிரபலமாகாத 2004ம் ஆண்டு வாக்கிலேயே தொலைநோக்கான பார்வையோடு இந்த நிறுவனத்தை அவர் துவக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒவ்வொரு 0.5 வினாடிக்கும் ஒரு இந்தியர் இந்த சேவையின் வழியே பொருட்களை வாங்கு கின்றனர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த செயலி ஆனது பிரபலமாகி உள்ளது.

இணைய தள முகவரி: http://www.ngpay.com/site/