Tag Archives: bing

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

ddg-bangs-640x460மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை தேடுவதற்காக டக்டக்கோவை பயன்படுத்தும் போது, நீங்கள் யார் என்பதை அது கவனிக்காமல் இருக்கிறது. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எனவே உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப்பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு பிரதான அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாறலாம் என நினைப்பதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை என்பது குறிப்பிடத்தக்கது:

ஸ்டாப்வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப்வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப்வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டும் அல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருப்பின், லேப் வசதி மூலம் தொடச்சியாக பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.

பெரிய எழுத்துக்கள்

ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிடல் எழுத்துக்களை அமைக்க விரும்பினால் அதற்கான வசதியையும் இந்த தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் டைடில் கேஸ் என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துக்களை லோவர் கேஸ் அல்லது அப்பர் கேசாக மாற்றவும் இதை பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளை தேட

கூகுளில் தகவல்களை தேடும் போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால் டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100 க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

பிடிஎப் கோப்புகள்

டக்டக்கோவில் எச்.டி.எம்.எல் கோப்புகளையும் எளிதாக தேடலாம். எச்.டி.எம்.எல்: என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளை காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதே போல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும் போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையை சேர்த்துக்கொண்டால் போது, இத்தகைய கோப்புகளை மட்டும் தேடலாம்.

நெத்தியடி தேடல்

சில நேரங்களில் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி இருக்கிறது. இந்த வசதி ஐபேங்க் என சொல்லப்படுகிறது. தேடல் பதத்திற்கு முன் ஆச்சர்யக்குறியை சேர்த்து, குறிப்பிட்ட தளத்திற்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்திற்கு  !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது: https://duckduckgo.com/bang

ஆய்வுப்பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம் தெரியுமா? https://duckduckgo.com/bang?q=google

உடனடி பதில்கள்

இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ் எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. கூகுள் நாலட்ச் கிராப் எனும் பெயரில் இது போன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோ தான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும் தான் தேவை எனில் தேடல் பதத்திற்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையில் எனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப் மட்டுமே சார்ந்திருப்பது தான் ஒரே குறை.

குறுக்கு வழிகள்

இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு போட்டோஷாப்  சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளை பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.

டக்டக்கோவில் இன்னும் கூட பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள் போல வருமா? என கேட்பவர்களுக்காக கூகுல் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சனையா? எனும் பொருள்பட, ஈஸ் கூகுள் டவுன் என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் என தோன்றுகிறது.

 

தளம் புதிது: லண்டன் திரைப்பட வரைபடம்

லண்டன் நகரம் பல விஷயங்களுக்கு புகழ் பெற்றது. தேம்ஸ் நதிக்கரை, லார்ட்ஸ் மைதானம், விம்பிள்டன் மைதானம் என நீளும் இந்த பட்டியலில் திரைப்படங்ளுக்கான படிப்பிடிப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கில படங்கள் பல லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. லண்டன் நகரில் படமாக்கப்பட்ட படங்கள் பற்றி அறிய விருப்பம் எனில், கோ3சினிமா தளத்தின் திரைப்பட படப்பிடிப்பு பகுதி உதவுகிறது.

இந்த பகுதியில் லண்டன் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்ட படங்கள் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். லண்டன் வரைபடம் மீதி இந்த தகவல்கள் அழகாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வரைப்படத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஐகான்கள் மீது கிளிக் செய்தால் படப்பிடிப்பு தொடர்பான விவரங்களை காணலாம். திரைப்பட போஸ்டர் சின்னதாக எட்டிப்பார்க்க மற்ற தகவல்களும் சுருக்கமாக இடம்பெற்றுள்ளன.

திரைப்பட ரசிகர்களுக்கு இந்த தளம் நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும். லண்டன் நகர் மீது அபிமானமும் இருந்தால் இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கும். மற்ற நகரங்களுக்குக் இது போன்ற ஒரு வரைபடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தையும் இது ஏற்படுத்தலாம்.

இணைய முகவரி:  https://go2cinema.com/filming-location-map

 

செயலி புதிது: மாணவர்களுக்கான பயனுள்ள செயலி

மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை பொழுதுபோக்கு நோக்கில் மட்டும் பயன்படுத்துவதில்லை. கல்வி தொடர்பான பணிகளுக்கும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். இதற்கு உதவக்கூடிய எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. இந்த பட்டியலில் டைம்டேபிள் செயலியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த செயலி வகுப்பு பாட அட்டவனையை குறித்து வைத்துக்கொண்டு, வகுப்புகளை மறக்காமல் இருக்க உதவுகிறது. இதில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறிப்பிடுவதோடு, மாணவர்கள் தங்களுக்கு தரப்படும் வீட்டுப்பாடங்கள் போன்றவற்றையும் குறித்து வைக்கலாம். விடுமுறை நாட்களையும் குறித்து கொள்ளலாம். வகுப்பில் எடுக்கும் குறிப்புகளையும் இதில் சேமித்து வைக்கலாம். முக்கியமாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது போனில் அழைப்பு வந்தால் அதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது.

பள்ளி அல்லது கல்லூரி பாடத்திட்டங்களை நிர்வகிப்பதில் இந்த செயலி மிகவும் உதவியாக இருக்கும். எந்த சாதனத்தில் இருந்து வேண்டுமானாலும் இதில் உள்ள தகவல்களை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.gabrielittner.timetable&hl=en_GB

 

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

 

டக்டக்கோ பற்றிய முந்தைய பதிவுகள்;

டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா? http://cybersimman.com/2015/10/28/search-55/

*

கூகுள் தவிர நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தேடியந்திரங்கள்! http://cybersimman.com/2016/09/28/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8/

 

-\

 

மாற்று தேடியந்திரங்கள் எதற்காக? http://cybersimman.com/2016/07/31/search-56/

மாற்று தேடியந்திரங்கள் எதற்காக?

wolff_2946050fதேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்கிறேன். இவற்றில் பல தேடியந்திரங்கள் இடையே காணாமல் போய்விட்டது வேறு விஷயம். ஆனால் இன்னமும் தேடியந்திரங்கள் ஈர்ப்புக்குறியவையாகவே இருக்கின்றன. ஒரு புதிய தேடல் நுட்பத்துடன் அறிமுகமாகும் தேடியந்திரத்தை பரீட்சயம் செய்து கொள்வதை உற்சாகம் அளிக்கவே செய்கிறது.

இந்த ஆர்வம் காரணமாகவே தமிழ் இந்துவில் ஆ’வலை வீசுவோம் எனும் தலைப்பில் தேடியந்திரங்கள் பற்றி தொடராக எழுதி வருகிறேன். 25 வது பகுதியில் கணக்கீட்டு இயந்திரம் என வர்ணிக்கப்படும் வோல்பிராம் ஆல்பா பற்றி எழுதியிருக்கிறேன்.

தேடியந்திரங்கள் பற்றி பேச முற்படும் போதெல்லாம், கூகுள் (தான்) சிறந்த தேடியந்திரம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. கூகுளை மிஞ்ச வேறு தேடியந்திரம் இல்லை என்பதில் துவங்கி, கூகுளைவிட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்பது வரை இந்த கருத்து பலவிதமாக அமைகிறது.

கூகுள் சிறந்த தேடியந்திரம் என்பதற்காகவே வேறு தேடியந்திரங்களை அறியாமல் இருப்பதோ, தேவையில்லை என புறந்தள்வதோ சரியானதல்ல. இதற்கு பல காரணங்களை சொல்லலாம். மாற்று என்பது தேவை என்பதை மட்டுமே இப்போதைக்கு வலியுறுத்தினால் போதும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் மாற்று தேடியந்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாற்று தேடியந்திரங்கள் ஏன் தேவை என்பதற்கான ஒரு அழகான உதாரணம் பார்க்கலாம். இணையத்தில் பயன்பாட்டில் இல்லாமல் போகும் தளங்கள் பிரச்சனையை நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது ஏற்கனவே இருந்து பின்னர் பல காரணங்களினால் காணாமல் போன தளங்கள். இவை இறந்த இணைப்புகள் அல்லது இறந்த தளங்கள் என குறிப்பிடப்படுகின்றன.

ஏதேனும் ஒரு கட்டத்தில் இத்தகைய இறந்து போன தளங்களை தேடும் தேவை ஏற்படும் போது அவற்றை எப்படி அணுகுவது?

இந்த கேள்விக்கான பதிலை https://www.journalism.cuny.edu/research-center/research-guides/finding-dead-websites/ தளம் முன்வைக்கிறது.

இறந்த தளங்களை அணுகுவதற்கான முதல் வழியாக இந்த தளம், கூகுளில் தேடல் பட்டியலில் கேச்சே பகுதியை கிளிக் செய்து பார்ப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது. கேச்சே என்பது, இணையதளங்களின் சேமிக்கப்பட்ட முந்தைய வடிவத்தை குறிக்கும். தேடல் பட்டியலில் தனியே இந்த சேமிக்கப்பட்ட வடிவத்தை பார்க்கலாம். ஆக, ஒரு இணையதளம் இப்போது பயன்பாட்டில் இல்லை என்று தெரியவரும் போது, இந்த சேமிப்பி இணைப்பை கிளிக் செய்து அதன் முந்தைய வடிவத்தை பார்க்கலாம். இறந்த தளங்களை அணுக இது ஒரு வழி.

கூகுள் மட்டும் அல்ல, பிங், டக்டக்கோ போன்ற மற்ற தேடியந்திரங்களிலும் சேமிக்கப்பட்ட பகுதியை பார்க்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுளில் எல்லா தளங்களின் சேமிப்பும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே மற்ற தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் போது விடுபட்ட இணையதளங்களின் பழைய வடிவம் கிடைக்கலாம். அது மட்டும் அல்ல, இவை வேறு வேறு கட்டங்களில் இணையதளங்களை சேமித்து வைத்திருக்கலாம். எனவே காணாமல் போன தளங்களை தேடும் போது ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடும் போது கூடுதல் பலன் கிடைக்கும்.

மற்ற தேடியந்திரங்களும் பயன்பாட்டில் இருக்கும் போது தான் இத்தகைய பரவலான தேர்வு மற்றும் வாய்ப்புகள் சாத்தியம். ஒற்றை தேடியந்திரத்தை மட்டும் நம்பி இருக்கும் போது நமக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை இந்த உதாரணம் புரிய வைக்கிறது அல்லவா?

வெவேறு கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள் கொண்ட தேடியந்திரங்கள் இருப்பது இணைய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

தமிழ் இந்து தேடியந்திர தொடரை வாசிக்க:http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-25-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8897674.ece

duckduckgo-bangs

டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா?

தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளை தான் தேடலுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம்

ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?எல்லாம் தெரியும்,ஆனால் எந்த தேடியந்திரமும் கூகுளுக்கு நிகராக முடியாது என பதில் சொல்வதற்கு முன் டக்டக்கோ தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
கொஞ்சம் விநோதமான பெயர் கொண்ட டக்டக்கோ மாற்று தேடியந்திரங்களின் வரிசையில் முதலில் வருகிறது.கூகுளுக்கு சவால் விட முயன்ற பல தேடியந்திரங்கள் மண்ணைக்கவ்வி விட்ட நிலையில் டக்டக்கோ இன்னமும் தாக்கு பிடித்திருக்கிறது என்பது மட்டும் அல்ல;இணைய தேடலில் தனக்கென தனி இடத்தையும் பிடித்திருக்கிறது.

மாற்று தேடியந்திரம்
இன்னமும் கூகுள் தான் தேடலின் முடிசூடா மன்னனாக இருக்கிறது என்றாலும் பல இணையவாசிகள் டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர்.இப்படி மாறியவர்கள் டக்டக்கோ தரும் அனுபவம் சிறந்ததாக இருக்கிறது என சான்றிதழும் அளிக்கின்றனர்.

இது கொஞ்சம் ஆச்சர்யம் தான்.கூகுள் தேடலின் எளிமை மற்றும் வல்லமைக்கு பழகியவர்கள் இன்னொரு தேடியந்திரத்தை பாராட்டுவது என்பது அரிதானது தான். ஆனால் கூகுள் தேடலுக்கு பழகியவர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் டக்டக்கோ தேடியந்திரம் புதுமையான பல அம்சங்களை கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல,டக்டக்கோ ஏற்கனவே உள்ள அம்சங்களை மெருகேற்றி வருவதுடன் புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ தரும் அனுபவத்தை பார்ப்பதற்கு முன்னர் இந்த தேடியந்திரத்திற்கு மாறுவதற்காக பலரும் கூறும் காரணத்தை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்- டக்டக்கோ உங்களை கண்காணிப்பதில்லை என்பது தான் அந்த காரணம்!.

காண்காணிப்பில் இருந்து விடுதலை

ஆம்,டக்டக்கோவின் சிறப்பம்சம் இணையவாசிகளின் எந்த ஒரு அசவையும் அது கண்காணிக்காமல் நல்லதொரு தேடியந்திரமாக இருப்பது தான்.கண்காணிப்பு என்னும் போது ,இணையவாசிகள் என்ன தேடுகின்றனர், எந்த வகையான இணையதளங்களுக்கு செல்கின்றனர்?இணையதளத்தில் என்ன பொருட்களை வாங்குகின்றனர்? என்பது போன்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ளமால் இருப்பதை குறிக்கிறது.இது அனைத்தையும் கூகுள் செய்கிறது என்பதை நிங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கூகுள் தேடல் சாம்ப்ராஜ்யமே அதன் விளைம்பர வருவாயில் இருக்கிறது. இந்த விளம்பர வருவாய் எப்படி வருகிறது? உங்களைப்போன்ற இணையவாசிகள் மூலமாக தான். இணையவாசிகளின் தேடலை கண்காணித்து அவர்கள் தேடும் பதங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை தேடல் முடிவுகள் அருகே இடம் பெற வைத்து அதன் மூலம் கூகுள் வருமானம் ஈட்டுகிறது. இவ்வளவு ஏன், உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் மெயில்களை கூட கூகுள் படிப்பதை உங்கள் மெயில் வாசகங்களுக்கு அருகிலான விளம்பரங்கள் மூலமே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கண்காணிப்பு இணையவாசிகள் தனியுரிமையை மீறாத வகையில் அவர்களை பற்றிய தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படாமல் மேற்கொள்ளப்படுகிறது என கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.இணையவாசிகளின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த விவரங்கள் தேவைப்படுவதாக கூகுள் கூறுகிறது.
ஆனாலும் என்ன கூகுள் இணையவாசிகளை தேடலை கண்காணிக்கிறது என்பதே விஷயம்.

தேடல் குமிழ் சிறை

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது,கூகுளின் தேடல் முடிவுகள் எல்லோருக்கும் பொதுவானது இல்லை தெரியுமா? ஒருவர் எந்த வகையான தேடல் முடிவுகளை பயன்படுத்துகிறார் என்பதன் அடிப்படையில் அவரவருக்கு என்று பொருத்தமான தேடல் முடிவுகளை கூகுள் முன்வைக்கிறது. ஆக, கூகுள் மூலம் நீங்கள் ஏற்கனவே விஜயம் செய்த இணையதளங்களின் அடிப்படையில் உங்களுக்கான தேடல் முடிவு அமையும்.கூகுள் இதை இணையவாசிகளின் தேவைக்கேற்ப பிரத்யேகமான முடிவுகளை அளிப்பது என்கிறது.ஆனால் இதன் இன்னொரு பொருள் , இணையவாசி தேடிய பதத்திற்கு பொருத்தமான பொதுவான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதில் கூகுளால் வடிகட்டப்பட்ட தேடல் முடிவுகளை காண நேருகிறது என்பது தான். இந்த அம்சம் தேடல் குமிழ் என குறிப்பிடப்படுகிறது.

கூகுள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று இந்த வசதியை முடக்கி, பொதுவான தேடல் முடிவுகள் தோன்றும் படி செய்யலாம் தான். ஆனால் பெரும்பாலானோர், தேடல் குமிழ் என்ற ஒன்று இருப்பதையே அறியாதவர்களாக இருக்கின்றனர் எனும் போது அதை நீக்குவதற்கு கூகுள் மறைத்து வைத்திருக்கும் வசதியை எப்படி அறிந்திருக்க முடியும்?
duckduckgo-google-644x373
விளம்பர உலகம்

நிற்க இது கூகுள் மீது புகார் வாசித்தல் அல்ல; இன்றைய இணைய உலகம் இப்படி தான் இருக்கிறது. பேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி இணைய சேவைகள் வருவாய்க்காக இது போன்ற வழிகளை தான் பின்பற்றுகின்றன.
இந்த காரணங்களினால் தான் டக்டக்கோவை அறிந்தவர்கள் அதை தலையில் வைத்து கொண்டாட தயாராக இருக்கின்றனர்.ஏனெனில் கூகுள் போல டக்டக்கோ இணையவாசிகளின் தேடல் செயல்பாடுகளை கணகாணிக்காமல் இருக்கிறது. இணையவாசிகள் தேடல் மூலம் அது விளம்பர வருவாய் ஈட்ட முயற்சிக்கவில்லை. (டக்டக்கோவில் விளம்பரம் உண்டு; ஆனால் அதை இல்லாமல் செய்யும் வசதியும் இருக்கிறது).
உங்களை கணகாணிக்காத தேடியந்திரம் என்ற வாசகத்துடன் டக்டக்கோ தன்னை முன்னிறுத்திக்கொண்டு கவனத்தை ஈர்த்தது. இதனிடையே அமெரிக்க விசுலூதி எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்கா எப்படி இ-மெயில் உள்ளிட்டவற்றை உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்தி தனியுரிமை மீறல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு டக்டக்கோ தேடியந்திரத்தின் கண்காணிக்காத தன்மைக்காக பலரும் அதன் பக்கம் சாய்ந்துள்ளனர்.
எனவே, தேடல் செயல்பாடுகள் கண்காணிக்கப்படாத தேடல் அனுபவத்தை நீங்கள் விரும்பினால் டக்டக்கோ நல்ல மாற்று!.
சரி,ஒரு தேடியந்திரமாக டக்டக்கோவின் செயல்பாடு எப்படி?

தேடல் சேவை எப்படி?

டக்டக்கோவும் கூகுள் போலவே எளிமையான முகப்பு பக்கத்துடன் தேடல் சேவை அளிக்கிறது. தேடலுக்கான் குறிச்சொல்லை டைப் செய்தவுடன் பொருத்தமான தேடல் முடிவுகளை பட்டியலிடுகிறது. தேடல் பட்டடியலுக்கு மேல் தேடல் பதம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் சுருக்கமான அறிமுகங்களை பார்க்கலாம். பல நேரங்களில் இவை நீங்கள் தேடும் பொருளுக்கு தொடர்புடைய பலனுள்ள தகவல்களாக இருப்பதை உணரலாம்.
இணைய பக்கங்கள் தவிர,புகைப்படங்கள்,வீடியோக்கள்,விளக்கங்கள் மற்றும் செயலிகளுக்கான பகுதிகள் இருப்பதையும் பார்க்கலாம்.தேடல் முடிவுகளுக்கு மேல் தோன்றும் பலவகை கட்டங்கள் கூடுதல் விவரங்களாக அமைந்திருப்பதையும் உணரலாம்.

அடிப்படை தேடல் அனுபவம் எப்படி இருக்கிறது என பயன்படுத்திப்பாருங்கள்.
ஆனால் வழக்கமான தேடல் தவிரவும் டக்டகோவிடம் அநேக அம்சங்கள் இருக்கின்றன.அவை தான் பயனாளிகளை கவர்ந்திழுத்து வருகின்றன.

அசத்தலான ஐபேங்!

இந்த அம்சங்களில் முதலில் வருவது ஐபேங்க்ஸ் வசதி. அதாவது டக்டக்கோவில் தேடாமலேயே நீங்கள் விரும்பும் இணையதளங்களுக்கு நேராக தாவிச்சென்றுவிடலாம்.உதாணத்திற்கு விக்கிபீடியா தளத்தில் ஒரு தகவல் தேவை என்றால் தேடல் பத்ததை டைப் செய்து அதனுடன் விக்கிபீடியா பெயரையும் சேர்த்து டைப் செய்ய வேண்டாம். இதற்கு பதிலாக விக்கிபீடியாவில் தேட உள்ள பத்ததை டைப் செய்து அதற்கு முன்னதாக ஒரு அடைப்புக்குறி மற்றும் டபிள்யு எனும் எழுத்தை டைப் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்று விடலாம்.
இதே போல மின்வணிக தளமான அமேசானில் ஏதாவது தேட விரும்பினால், அடைப்புக்குறி மற்றும் ஏ எனும் எழுத்தை டைப் செய்தால் போதும். இந்த வசதியை தான் ஐபேங் என குறிப்பிடுகிறது. இப்படி 6,000 க்கும் மேற்பட்ட ஐபேங் வசதி இருக்கிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதோடு நீக்களும் கூட உங்களுக்கு விருப்பமான ஐபேங் வசதியை பரிந்துரைக்கலாம்.
இந்த அம்சத்தை பயன்படுத்த கொஞ்சம் பயிற்சி தேவை. ஆனால் டக்டக்கோ தரும் ஐபேங் பட்டியலை சிலமுறை பயன்படுத்தின்ப்பார்த்தால் இதன் பயன்பாடும் ,சுவாரஸ்யமும் உங்களை ஈர்க்கும்.
duck_2517489h
உங்களிடம் அதிகாரம்

அதே போல டக்டக்கோ தேடியந்திரத்தில் இணையவாசிகள் தங்கள் இஷ்டம் போல அதன் அம்சங்களை மாற்றிக்கொள்ளலாம்.டக்டக்கோ அளிக்கும் உடனடி பதில்கள் பிடிக்கவில்லையா?அவற்றை நீக்கி விடலாம். தேடல் முடிவுகளின் எழுத்துரு,பின்னணி வண்ணம் போன்றவற்றையும் மாற்றிக்கொள்ளலாம்.தேடியந்திரம் செயல்படும் பிராந்தியம்,மற்றும் அதில் உள்ள மொழியையும் மாற்றிக்கொள்ளலாம்.
இதே போல விளம்பரங்களையும் வேண்டாம் என சொல்லலாம். ஆனால் அதற்கு டக்டக்கோவை மற்றவர்களுக்கு பரிந்துறைத்தால் போதுமானது.
இணையத்தில் கீபோர்டு குறுக்கு வழிகள் இருப்பது போல டக்டக்கோவில் தேடலுக்கான கீபோர்டு குறுக்கு வழிகளும் இருக்கின்றன.தேடல் முடிவுகளில் மேலும் கீழும் செல்ல, கீபோர்ட் அம்புக்குறியை பயன்படுத்தலாம். அதன் பிறகு எண்டர் விசையை அழுத்தினால் குறிப்பிட்ட இணையதளம் திறக்கபப்டும். ஆக,மவுஸ் மீது கைவைக்காமலே இணையத்தில் உலாவலாம்.

டக்டக்கோவை பயன்படுத்திப்பாருங்கள்!

தேடியந்திர முகவரி:https://duckduckgo.com/

——

நன்றி;விகடன்.காமில் எழுதிய கட்டுரை

( டக்டக்கோவில் உள்ள மேலும் சில முக்கிய தேடல் அம்சங்கள் பற்றி தனியே பார்க்கலாம்).

டக்டக்கோ தேடியந்திரங்கள் பற்றி தமிழ் இந்து தேடியந்திர தொடரில் எழுதிய பகுதி இது:http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article7562098.ece

புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச்சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ,வைரலாக பரவி இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணறக்கூடிய பேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து,புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக என்றும் சொல்வது பொருத்தமாக இருக்காது. கணித்துச்சொல்வது என்பதே சரியாக இருக்கும்.

இந்த தளத்தின் திறனை இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் பரிசோதித்துப்பார்க்கலாம். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் புகைப்படத்தை இந்த தளத்தில் சமர்பித்து, எங்கே என் வயதை சொல்லுப்பார்க்கலாம் என கேட்பது தான். உடனே இந்த தளம் உங்கள் வயதை கணித்துச்சொல்லும்.

ஆனால் இந்த கணிப்பு எல்லா நேரங்களிலும் துல்லியமாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சரியாக இருக்கும். சில நேரங்களில் தவறாக இருக்கும். தவறு எனில் அடுத்த படத்தை சமர்பிக்கவும் என இந்த தளமே சொல்லி விடுகிறது.

வயது விஷயத்தில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்றால் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை சமர்பிக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் நீங்கள் இளமையானவராக இருந்து இந்த தளம் உங்கள் வயதை 50 க்கு மேல் குறிப்பிட்டால் உங்கள் மனது லேசாக முறிந்துப்போகலாம்.

சொந்த புகைப்படத்தை சமர்பிக்க தயங்குபவர்களும் தாராளமாக இந்த தளத்தை சோதித்துப்பார்க்கலாம். அத்ற்கும் ஒரு வழி இருக்கிறது. அதாவது இணையத்தில் உள்ள புகைப்படங்களை சமர்பித்து இந்த தளத்தை கணிக்கச்சொல்லலாம். இதற்காக மைக்ரோசாப்டின் பிங் தேடியரத்தின் புகைப்பட சேவையில் இருந்து படங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வசதி தான் இந்த தளத்தை பிரபலமாக்கியுள்ளது. பலரும் இணையத்தில் கிடைக்கும் பிரபலங்களின் புகைப்படத்தை இந்த தளத்தில் சமர்பித்து அது தரும் கணிப்பை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

ஹாலிவுட் நடிகை ,அரசியல் தலைவர்கள் என நன்கறியப்பட்ட நபர்களின் புகைபப்டங்களை சமர்பித்து, அவர்களின் வயது கணிப்பை ,அது எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதை லேசான கிண்டலுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த தளம் யாருடையை வயதை எல்லாம் சரியாக சொல்கிறது, யாருடைய விஷ்யத்தில் கோட்டை விடுகிறது போன்ற விவரங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இந்த சுவாரஸ்ய அம்சமே இந்த தளத்தை ஹிட்டாகி இருக்கிறது.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இந்த தளம் இந்த அளவு ஹிட்டாகும் என்பதை மைக்ரோசாப்டே எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நடத்திய டெவலப்பர் மாநாட்டில் தான் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டது.

மைக்ரோசாப்டின் அஸ்யூர் மெஷின் லேர்னிங் பிரிவைச்சேர்ந்த இரண்டு வல்லுனர்கள் சோதனை முறையில் இந்த தளத்தை உருவாக்கினர். முகங்களை கண்டுணரும் சாப்ட்வேரின் ஆற்றலை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக மிக எளிமையான முறையில் புகைப்படம் பார்த்து வயதை சொல்லும் வகையில் தளத்தை அமைத்தனர். முதலில் 50 பேருக்கு தான் மெயில் அனுப்பியிருந்தன்ர். ஆனால் இந்த மெயில் வைரலாகி 35,000 பேர் இந்த தளத்தை பார்த்து பயன்படுத்தினர். இதனால் மீடியாவின் கவனத்தை ஈர்த்து இப்போது இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது.

மெஷின் லேர்னிங் என்று சொல்லப்படும் தொழில்நுட்பத்தின் எதிர்கால ஆற்றல் மற்றும் போதாமைகளின் அடையாளமாக இந்த தளம் விளங்குகிறது. நீங்களும் தாராளமாக இந்த தளத்தை பயன்படுத்திப்பார்த்துச்சொல்லுங்கள் .

ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், இந்த தளத்தில் சமர்பிக்கப்படும் புகைப்படங்கள் பயன்படுத்தப்படக்கூடிய விதம் குறித்த ஒரு சர்ச்சை இருக்கிறது. இந்த புகைப்படங்களை மைக்ரோசாப்ட் விரும்பிய வகையில் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்டோ புகைப்படங்களை சேமித்து வைத்துக்கொள்ளவில்லை என சொல்கிறது.

கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இந்த தளத்தின் பின்னே இருக்கும் மைக்ரோசாப்ட் பொறியாளர்களில் நம்மவரான சந்தோஷ் பாலசுப்பிரமணியமும் ஒருவர்!

இணையதள முகவரி; http://how-old.net/

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது.

அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் அந்த பதம் தொடர்பான முடிவுகளை நான்கு பத்திகளாக பிரித்து தருகிறது.முதல் பத்தியில் பொதுவான இணைய முடிவுகள் இடம் பெறுகின்றன.அதன் பக்கத்தில் அந்த பதத்திற்கான யூடியூப் வீடியோக்களும் டிவிட்டர் குறும்பதிவுகளும் ,கடைசி பத்தியில் புகைப்படங்களும் இடம் பெறுகின்ற‌ன.

ஆக ஒரே கிளிக்கில் தேடும் பதம் அதாவது குறிச்சொல் தொடர்பான இனைய முடிவுகள்,வீடியோக்கள்,புகைப்படங்கள்,மற்றும் குறும்பதிவுகளை பார்த்து விடலாம்.எல்லாமே அடுக்கப்பட்டது போல பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு எளிதாக கிரகித்து கொள்ளும் வகையில் இருப்பது நல்ல விஷயம்.

புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் தனித்தனியே தேடிக்கொண்டிருக்காமல் ஒரே கிளிக்கில் தேட முடிவது தான் இந்த தேடியந்திரத்தின் சிறப்பாக உள்ளது.

எப்போதெல்லாம் இதே போல குறும்பதிவு,வீடியோ,புகைப்படம் என எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது இந்த தேடியந்திரம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தேடியந்திரம் கொஞ்சம் சுவாரஸ்யமானது தான்.கூகுல் தேட்ல முடிவுகளை பயன்படுத்தி கொள்ளும் தேடியந்திரங்கள் போல இந்த தேடியந்திரம் பிங் தேடல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிற‌து.

தேடியந்திர முகவ‌ரி;http://www.wordonthewire.com/