Tag Archives: europe

கூகுள் காட்டும் பேஷன் வரலாறு

screen-shot-2017-06-09-at-2-43-15-pm-e1497034098906பேஷன் என்றால் நவீன போக்கு மட்டும் தானா என்ன? அதன் பின்னே மகத்தான வரலாறும் இருக்குறது, கலையும் கலாச்சாரமும் பின்னிப்பினைந்திருக்கிறது. காலம் சொல்லும் கதைகளும் ஒளிந்திருக்கின்றன. இப்படி பேஷன் சொல்லும் கடந்த கால கதைகளையும், அவற்றின் கலாச்சார கூறுகளையும் கூகுளின் சமீபத்திய இணைய திட்டம் விரல் நுனியில் அறிய வழி செய்து வியக்க வைக்கிறது.

நாம் கலாச்சாரத்தை அணிகிறோம் எனும் தலைப்பில் கூகுள் செயல்படுத்தியிருக்கும் இந்த இணைய திட்டம் வாயிலாக 30,000 ஒளிப்படங்களின் மூலம் 3,000 ஆண்டு கால பேஷன் வரலாற்றை பின்னோக்கிப்பார்க்கலாம். பழங்கால பட்டுப்பாதையில் துவங்கி, பேஷன் தலைநகரான இத்தாலியின் மிலன் நகரில் உருவான நவீன ஆடை ரகங்கள் வரை பேஷனின் பல முகங்களை கண்டு ரசிக்கலாம்.

கூகுள் பிரதானமாக தேடல் சேவை வழங்கும் நிறுவனமாக அறியப்பட்டாலும், தேடல் தவிர எண்ணற்ற துணை சேவைகளையும், உப வசதிகளையும் கூகுள் வழங்கி வருகிறது. பரவலாக அறியப்பட்ட கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் வரைப்பட சேவை, கூகுள் எர்த், ஜிமெயில், ஸ்டிரீட்வியூ போன்றவை தவிரவும் கூகுளின் துணை சேவைகள் பெரிதாக நீள்கின்றன. இவற்றில் கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் எனப்படும், கூகுள் கலை மற்றும் கலாச்சார கழக திட்டமும் ஒன்று.

உலகின் கலை மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை டிஜிட்டல்மயமாக்கி காண்காட்சியாகும் சேவையாக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள், கலாச்சார கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து கூகுள் இந்த இணைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதற்கான இணையதளத்தில் நுழைந்து உலா வந்தால், உலகம் முழுவதும் ஒரு கலைப்பயணத்தை மேற்கொண்டது போன்ற உணர்வை பெறலாம். அருமையான ஓவியங்கள் முதல் தெரு ஓவியங்கள் வரை பலவிதமான கலை வெளிப்பாட்டை இதில் காணலாம். (https://www.google.com/culturalinstitute/beta/) இது ஒரு உதாரணம் தான். மேலும் பல கலை அற்புதங்களை இந்த தளத்தில் அணுகலாம்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தான் இப்போது பேஷன் வரலாற்று காட்சிகள், வி வியர் பேஷன் எனும் தலைப்பில் தனிக்கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 42 நாடுகளைச்சேர்ந்த அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட கலை அமைப்புகளுடன் கைகோர்த்து இந்த இணைய கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகால வரலாற்றை ஆடை அலங்காரம் மூலம் திரும்பி பார்க்கவும், புதிய புரிதலை பெறவும் இந்த கண்காட்சி வழி செய்கிறது.

அருங்காட்சியகத்தில் அரிய பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் ஆடை ரகங்களை டிஜிட்டல்மயமாக்கி காட்சிப்படுத்திருப்பதுடன், அவற்றுடனான வரலாற்று கதைகள், கலாச்சார அம்சங்களையும் இடம்பெற வைத்துள்ளது.

இந்த கண்காட்சியில் இந்திய பேஷன் வரலாறும் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. நாட்டின் மிகவும் பழமையான அருங்காட்சியகமான கொல்கத்தா அருகங்காட்சியகத்தில் உள்ள பேஷன் தொடர்பான கலைப்பொருட்கள் , மும்பை சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களை ஒளிப்படங்களாக இந்த தளத்தில் காணலாம். இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் சேலைகளின் வரலாற்றையும், அவை தொடர்பான அரிய தகவல்களையும் இவை தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா பெண்களின் சேலை நுணுக்கங்களில் துவங்கி உலகம் போற்றும் காஞ்சிவரம் பட்டுச்சேலைகளின் கலை வேலைப்பாடுகள் வரை அரிய தகவல்கள் ஒளிப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

வட கிழக்கு மாநிலங்களின் ஆடை வரலாற்றை உணர்த்தும் படைப்புகளும் சுவார்ஸ்யத்தை அளிக்கின்றன. நாகா இனபெண்களால் அணியப்பட்ட சேலைகள் காலத்தின் கதைகளை விளக்கும் சித்திரங்களையும் கொண்டிருப்பதை பார்த்து வியக்க முடிகிறது. குஜராத்தில் உள்ள சல்வி சமூகத்தினரால் அணியப்படும் பட்டோலா சேலைகள் அவற்றின் நேர்த்தியான வேலைப்பாட்டை உணர்த்துவதோடு அப்பகுதியின் நெசவு வரலாற்றையும் புரிய வைக்கிறது.

இந்த திட்டம் தொடர்பான கூகுள் வலைப்பதிவு நாம் அணியும் சேலைகள் மற்றும் ஜீன்ஸ்கள் பல கதைகளை சொல்வதாகவும், அவை பல நூற்றாண்டுகளின் சரட்டை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. இந்த கதைகளை உலகின் பார்வைக்கு வைக்கும் வகையில் இந்த இணைய கண்காட்சியை கூகுள் உருவாக்கியுள்ளது. கூகுள் தேடியந்திரத்தில் பேஷன் தொடர்பான குறிச்சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததை அடுத்து கூகுள் இந்த பேஷன் வரலாற்றை இணைய கண்காட்சியாக்க தீர்மானித்ததாகவும் அறிய முடிகிறது.

ஒரு ஓவியத்தை அணு அணுவாக ரசிப்பது போல, இந்த கண்காட்சியை ஒவ்வொரு பகுதியாக நுணுக்கமாக ரசிக்கலாம். பேஷன் படைப்புகள் பின்னே உள்ள கதைகள், பேஷனுடன் பின்னிப்பினைந்திருக்கும் கலை அம்சங்கள் என எல்லாம் தனித்தனி தலைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றை கிளிக் செய்து அழகிய ஒளிப்படங்களை பார்த்தபடி பேஷன் வரலாற்றில் திளைக்கலாம்.

மகத்தான பேஷன்களை உருவாக்கிய வடிவமைப்பாளர்கள், நவீன போக்குகளை உருவாக்கிய பேஷன் கலைஞர்கள் பற்றியும் விரிவாக அறியலாம். பேஷன் உலகில் நட்சத்திரமாக கருதப்படும் கோகோ சேனல், ஹாலிவுட் நட்சத்திரம் மர்லின் மன்றோவுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக காலணி என பலவற்றை காணலாம்.

வரலாற்றின் பேஷன் செலுத்திய தாக்கத்தையும் விளக்கும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆடை ரகங்களை உருவாக்குவது தொடர்பான நெசவுக்கலை உள்ளிட்ட நுட்பங்களையும் விளக்கும் பகுதிகள் இருக்கின்றன. பேஷன் பிரியர்கள் இந்த தளத்தில் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் கிளிக் செய்தபடி உலா வந்து கொண்டிருக்கலாம்.

இந்த படைப்புகள் உருவான விதம் பற்றிய 360 கோணத்திலான விளக்கத்தை பார்த்து ரசிக்கலாம்.

ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் மூலம் இந்த கண்காட்சியை பார்த்து ஆடைகள் பின்னே இருக்கும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம் என கூகுள் கலாச்சார கழகத்தின் இயக்குனர் அமீத் சூட் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த திட்டம் உருவானதில் அமீத் சூட்டின் மிகப்பெரிய பங்களிப்பு இருப்பதையும் அறிய முடிகிறது. கூகுள் ஊழியரான அமீத், 2010 ல், 20 சதவீத நேரத்தை விரும்பிய திட்டத்திற்காக செலவிடலாம் எனும் வகையில் கூகுள் நிறுவனம் வழங்கிய வசதியை பயன்படுத்திக்கொண்டு, உலக அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களை டிஜிட்டல்மயமாக்கும் செயலில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். இந்த முயற்சியே, கூகுள் கலாச்சார கழகத்தின் அங்கமாகி, இன்று உலகின் கலைச்செல்வங்களை டிஜிட்டல்மயமாக்கி இணையவாசிகளின் பார்வைக்கு வைத்துள்ளது.

பேஷன் கண்காட்சியை காண: https://www.google.com/culturalinstitute/beta/project/fashion

 

— நன்றி தமிழ் இந்து, இளமை புதுமையில் எழுதியது.

ஐரோப்பாவுக்கு ஒரு இணைய உலா!

 

lead.c2e3a89d927140b5ac304bf7bc2e45a9-800x420ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி சார்ந்தது. சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளை சுற்றிப்பார்த்து விட்டு வரலாம். ஆனால் அப்போதும் கூட பல நாடுகளை தவறவிட வேண்டியிருக்கும். கால் வைத்த நாடுகளில் கூட, அடையாளத்திற்கு சில இடங்களை பார்க்கலாம் அவ்வளவு தான். ஆனால் இந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

நிற்க, ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்வது சாத்தியமோ இல்லையோ, நீங்கள் விரும்பினால் ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் அதன் செழுமையான பாரம்பரியத்தில் மூழ்கி மகிழலாம் தெரியுமா? யூரோபியானா இணையதளம் (http://www.europeana.eu/portal/en# ) இதை சாத்தியமாக்கிறது. ஒரு அரை மணி நேரத்தை இந்த தளத்தில் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் கலாச்சார செழுமை முதல் பேஷன் பெருமைகள் வரை பலவற்றை ஒளிப்படங்களாக பார்த்து மகிழலாம், இசைக்கோர்வைகளாக கேட்டு ரசிக்கலாம். கலைப்பொருட்களாக பார்த்து வியக்கலாம்.

இணையம் ஒரு அற்புதம் என்பதை பலமுறை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில அரிய தருணங்களில் இந்த அற்புதத்தை நீங்களே உணர்ந்திருக்கலாம். யூரோபியானா இணையதளத்தில் நுழைந்ததுமே அத்தகைய தருணத்தை உணரத்துவங்கலாம். இந்த உணர்தலை ஒளிப்படங்களில் இருந்தே துவங்கலாம். ஏனெனில், மிகவும் அண்மையில் தான் இந்த பகுதி புதிய வசதியாக அறிமுகம் ஆகியிருக்கிறது. ’யூரோபியானா போட்டோகிராபி’ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பகுதி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்று ஒளிப்படங்களை கொண்டிருக்கிறது. 34 ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் போன்ற அமைப்புகள் பங்களிப்புடன் இந்த புகைப்பட தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முகப்பு பக்கத்தில், ஐரோப்பிய கலை, ஐரோப்பிய பேஷன், ஐரோப்பிய இசை என வரிசையாக உள்ள பட்டியலில் ஐரோப்பிய ஒளிப்படங்கள் எனும் தலைப்பு மூலம் இந்த படங்களை பார்த்து ரசிக்கலாம். ஒளிப்படக்கலையில் விஷயம் தெரிந்தவர்கள் எனில், ஐரோப்பாவின் புகழ் பெற்ற ஒளிப்பட மேதைகளின் பெயரை தட்டச்சு செய்து அவர்களின் ஒளிப்படைப்புகளை தேடலாம். குறிப்பிட்ட தலைப்புகள் சார்ந்தும் ஒளிப்படங்களை அணுகலாம்.

சும்மா சொல்லக்கூடாது, ஐரோப்பிய ஒளிப்படக்கலையின் முதல் 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இந்தப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம். எதை பார்ப்பது, எப்படி பார்ப்பது என திகைத்து நிற்பவர்களுக்கு வழி காட்டும் வகையில் இந்த தளமே இணைய கண்காட்சிகளாக வழிகாட்டுகிறது. உதாரணத்திற்கு, ‘இயந்திரங்களின் யுகத்தில் எடுக்கப்பட்ட தொழில்கூட படங்கள் ’ கண்காட்சி மூலம் அந்த கால தொழிற்சாலைகள், இயந்திரங்கள், தொழிலாலர்கள் உள்ளிட்டவற்றை ஒளிப்படங்களாக பார்த்துபடி பின்னோக்கிச்செல்லலாம். இதே போல குறிப்பிட்ட தலைப்புகள் மற்றும் கலைஞர்கள் சார்ந்த ஒளிப்படங்களையும் காணலாம்.

012uP2P1sayKஅந்த கால ஐரோப்பா எப்படி இருந்தது என பார்க்க விரும்பினாலும் சரி, கால வெள்ளத்தில் ஐரோப்பா எப்படி மாறி வந்திருக்கிறது என அறிய விரும்பினாலும் சரி, ஒளிப்படங்கள் வாயிலாக அந்த அனுபவத்தை பெறலாம். அவரவர் விருப்பம் அல்லது தேடலுக்கு ஏற்ப மிலன் அல்லது லண்டன் என நகரங்களின் பெயரை தட்டச்சு செய்து ஒளிப்படங்களை தேடலாம். ஐரோப்பிய பேஷனில் ஏற்பட்ட மாற்றங்கள், கலாச்சார சுவடுகள் , மனிதர்கள் என பலவிதங்களில் வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்கலாம். உதாரணத்திற்கு நடன அறைகளில் அணியப்பட்ட ஆடைகளை சித்தரிக்கும் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கலாம். அதே போல பிரபலங்களின் பேஷனை பார்க்கலாம்.

ஒளிப்படங்களை பயன்படுத்துவது தொடர்பான காப்புரிமை சார்ந்த விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணங்கள், காலவரிசை என பலவிதங்களில் தேடலை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. குறிப்பிட்ட ஒளிப்படம் கவனத்தை ஈர்த்தால் அந்த படம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அதை பகிர்ந்து கொண்டுள்ள அருங்காட்சியக அமைப்பு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒளிப்படங்களின் தேடல் இந்த தளத்தின் ஒரு அம்சம் தான். இதே போல ஐரோப்பா தொடர்பான பலவிஷயங்களை இந்த தளத்தில் தேடலாம். குறிப்பிட்ட நாடு தொடர்பாக அறிய விரும்பினால், அந்த நாடு தொடர்பாக உள்ள ஒளிப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் பட்டியலாக தோன்றுகிறது. காணொலிகள், ஒலிக்கோப்புகள், புத்தகங்கள், கலை வடிவங்கள் என பலவகையான தகவல்கள் அணிவகுக்கின்றன. தேவை எனில், தேடலில் ஈடுபடும் போது எந்த வகையான தகவல் வேண்டும் என தேர்வு செய்து கொள்ளலாம். ஒளிப்படங்களை தேர்வு செய்தால் படங்கள் மட்டும் வரும். இசை அல்லது கலையை தேர்வு செய்தால் தொடர்புடைய தகவல்களை காணலாம்.

சோவியத் யூனியன் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் ரஷ்ய புரட்சிக்கு வித்திட்ட லெனினின் அரிய ஒளிப்படங்களை காணலாம். அதே போல உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ஒளிப்படங்களை காணலாம். லண்டன் நகர தெருக்களின் உலாவலாம். மிலன் பேஷன் போக்குகளை கண்டு வியக்கலாம்.

இப்படி அநேகமாக ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அருங்காட்சியகங்களில் பொக்கிஷமாக பாதுக்காக்கப்படும் கலைப்பொருட்கள், காணொலிகள், ஒளிப்படங்கள் அனைத்தையும் இந்த தளம் மூலம் அணுகலாம். இந்த தளத்தை பயன்படுத்த வரலாற்று ஆர்வம் கொண்டவராக அல்லது ஆய்வாளராக இருக்க வேண்டும் என்றில்லை, சாமானியர்களையும் எளிதில் கவரக்கூடிய அம்சங்களை இந்த தளத்தில் காணலாம். அதற்கேற்ப கலாச்சார ஆர்வலர்களே வாருங்கள் என்று தான் இந்த இணையதளம் அழைப்பு விடுக்கிறது. ஆய்வு பணிக்காக வந்திருந்தாலும் சரி, அல்லது அலுப்பை போக்கி கொள்ள வந்திருந்தாலும் சரி, உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதாவது சில எங்களிடம் நிச்சயம் இருக்கும் என்றும் இந்த தளம் பெருமிதம் கொள்கிறது.

ஐரோப்பிய பாரம்பரியம் தொடர்பான தரவுகளை இணையம் மூலம் அனைவருக்கும் அளிக்கும் நோக்கில் யூரோபியானா அமைப்பு இந்த தளத்தை நடத்தி வருகிறது. பல ஐரோப்பிய அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய அறக்கட்டளை சார்பில் இந்த தளம் செயல்பட்டு வருகிறது. கலைப்படைப்புகளும், ஒளிப்படங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பகிரப்படும் போது என்னவெல்லாம் சாத்தியம் என்பதையும், கூட்டு முயற்சியின் அருமையையும் உணர்த்தும் வகையிலும் இந்த தளம் அமைந்துள்ளது.

யூரோபியானா திட்டம் பற்றிய அறிமுகம் : http://pro.europeana.eu/about-us/our-vision

-நன்றி; தமிழ் இந்து , இளமை புதுமை பகுதியில் எழுதியது.

இது நடுநிலையான தேடியந்திரம்!

logo10vertical-home2-192x185அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு.

தேடியந்திர உலகில் எந்த ஒரு ஒற்றை தேடியந்திரமும் ஆதிக்கம் செலுத்துவது நல்லதல்ல, அதை ஏற்றுக்கொள்ளவது அதைவிட நல்லதல்ல எனும் சிந்தனை ஐரோப்பாவில் வலுவாகவே இருக்கிறது. அதன் அடையாளமாக உருவான தேடியந்திரங்களின் வரிசையில் அன்பபிள் தேடியந்திரமும் வருகிறது.

ஆனால் இது மூல தேடியந்திரம் அல்ல: மெட்டா தேடியந்திர வகையைச்சேர்ந்தது. அதாவது இது சொந்தமாக இணையத்தை தேடுவதில்லை. மாறாக, பிற தேடியந்திரங்களின் தேடல் அட்டவனையை பயன்படுத்தி அவற்றில் இருந்து பொருத்தமான தேடல் முடிவுகளை அளிக்கிறது.

மற்ற தேடியந்திரங்களை அடிப்படையாக கொண்டு இயங்கினாலும், இரண்டு காரணங்களுக்காக இந்த தேடியந்திரத்தை கவனிக்க வேண்டும். முதல் காரணம் இதன் தேடல் இடைமுகம் நன்றாக இருக்கிறது. எளிமையாக, ஆனால் சற்று வண்ணமயமாக இருக்கும் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் குறிச்சொல்லை டைப் செய்ததும் முடிவுகளை வரிசையாக பட்டியலிடுகிறது. தேடல் முடிவுகள் நீல நிற கொட்டை எழுத்துக்கள், அதன் கீழ் சிவப்பு நிறத்தில் இணையதளத்தின் பெயர், அதற்கும் கீழ் தளத்திற்கான விளக்கம் என இதன் தேடல் பட்டியல் தெளிவாக, பளிச்சென இருக்கிறது. முடிவுகளின் இடப்பக்கத்தில் தளத்தின் தன்மையை உணர்த்தும் வகையில் அவற்றின் முகப்பு பக்க துண்டு படம் இடம்பெறுகிறது. வலப்பக்கத்தில் கூடுதல் அம்சங்களுக்கான குறிப்புகள் மற்றும் தேடல் பரிந்துரைகளை காணலாம்.

முடிவுகள் பல தேடியந்திரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை என்பதை பிரதிபலிக்கும் வகையில் பட்டியலின் தரம் இருப்பதை பார்க்கலாம். ஆக, ஓரளவு சிறந்த தேடல் அனுபவத்தையே அளிக்கிறது.

முடிவுகளை இணையம், புகைப்படங்கள், செய்திகள், ஷாப்பிங் உள்ளிட்ட வகைகளின் கீழ் தேடலாம். அறிவியலுக்கான பகுதியும் இருக்கிறது. குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேடுவதற்கான குறுக்கு வழி உள்ளிட்ட மேம்பட்ட தேடல் வசதிகளும் இருக்கின்றன.

இந்த தேடியந்திரம் தொடர்பான இரண்டாவது முக்கிய அம்சம், தேடலில் நடுநிலைத்தன்மையை பின்பற்றுவதாக தெரிவிக்கப்படுவது தான். ஆம், இந்த தேடியந்திரம் நடுநிலையான தேடல் முடிவுகளை அளிப்பதாக உறுதி அளிக்கிறது. இந்த நோக்கத்துடன் பல்வேறு தேடியந்திரங்கள் மற்றும் தேடல் ஆதாரங்களில் இருந்து முடிவுகளை எடுத்து அவற்றின் நடுநிலைத்தன்மையை பரிசீலித்து பட்டியலிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தேடல் குமிழ் இல்லாத முடிவுகளை பட்டியலிடுக்கிறது. பொதுவாக கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் முடிவுகளை வடிகட்டித்தருகின்றன. இந்த வடிகட்டல் பலவிதங்கள் நிகழ்கின்றன. இணையவாசிகளின் இருப்பிடத்திற்கு ஏற்ப அவரது நாட்டுக்கான தேடியந்திர வடிவம் முன்வைக்கப்படலாம். உதாரணத்திற்கு,இந்தியாவில் இருந்து தேடுபவர்களுக்கு இந்தியா சார்ந்த தேடல் முடிவுகள் பிரதானமாக இருக்கும். சர்வதேச பதிப்பில் இருந்து இது வேறுபட்டிருக்கும். இது தவிர, இணையவாசிகளின் கடந்த கால தேடல்களுக்கு ஏற்ப அவரது விருப்பங்கள் சார்ந்த தேடல் முடிவுகள் முன்வைக்கப்படலாம். இத்தகைய வடிகட்டல் நிகழ்கிறது என்பதை இணையவாசிகள் அறியாமலே இருக்கலாம். தேடல் குமிழ் என்பது பயனாளிகளின் தகவல் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைவதாக கடுமையான விமர்சனம் இருக்கிறது.

இணைய கடலில் இருந்து தகவல்களை தேடித்தருவதாக நம்பிக்கொண்டிருக்கும் போது, தேடியந்திரங்கள் அந்த முடிவுகளை வடிகட்டி தருவது ஏற்கத்தக்கது அல்லவே. எனவே தான் அவை இணையவாசிகளை சுற்றி ஒரு குமிழை உண்டாக்கி விடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த தேடல் குமிழ்கள் இல்லாமல் தேடல் முடிவுகளை அளிப்பதாக அன்பபிள் பெருமிதம் கொள்கிறது. அதன் பெயரும் இதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இது தவிர, தேடல் ஆதாரங்களின் தன்மையை பரிசீலித்து, நடுநிலையான முடிவுகளை மட்டுமே தேர்வு செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி நடுநிலையான தேடல் ஆதாரங்களை தீர்மானிப்பதற்கான பிரத்யேக வழியை உருவாக்கி வைத்திருப்பதாகவும் அன்பபிள் தெரிவிக்கிறது.

பல்வேறு தேடியந்திரங்களை பரிசீலித்து ஒரே இடத்தில் சிறந்த முடிவுகளை வசதியான முறையில் அளிப்பது இதன் சிறப்பம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இணையவாசிகள் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தேடல் முடிவுகளையும் அளிக்கிறது.

ஜெர்மனியில் உள்ள சாஸே எனும் மென்பொருள் நிறுவனம் இந்த தேடியந்திரத்தின் பின்னே உள்ளது.  நன்கொடை மற்றும் ஷாப்பிங் பரிந்துரை மூலமான நிதி ஆதாரங்களை நம்பி இருக்கிறது.

தேடல் என்பது கூகுளுடன் தொடங்கி கூகுளில் முடியாமல் பரந்து விரிந்திருக்கிறது என்பதை உணர அன்பபிள் தேடியந்திரத்தை பயன்படுத்திப்பார்க்கலாம்.

 

தேடியந்திர முகவரி: https://www.unbubble.eu/

 

 

மெட்டா தேடியந்திரங்கள் பற்றி அறிய: http://bit.ly/2dybzLd

 

 

தகவல் திங்கள்; பிரெக்ஸ்ட்டும், தமிழக தேர்தலும்- டிவிட்டர் மூலம் ஒரு பார்வை!

lஉலகமே இப்போது பிரெக்ஸிட் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது. கூடவே கவலைப்பட்டும் கொண்டிருக்கிறது. அதைவிட அதிகமாக குழம்பிக்கொண்டிருக்கிறது. பிரெக்ஸ்ட் என்றால் என்ன?எனும் இந்த விவகாராம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களின் கேள்வியில் துவங்கி, ஓரளவு விஷயம் அறிந்தாலும் இதன் பின்னணி மற்றும் விளைவுகள் பற்றி அதிகம் அறியாதவர்களின், பிரிட்டன் ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் அப்படி வெளியேறுவதால் உலகிற்கு என்ன பாதிப்பு எனும் கேள்விகள் வரை பல்வேறு கேள்விகள் எழலாம்.

இந்த கேள்விக்கான பதில்களை சுருக்கமாகவோ அல்லது ஆழமாகவோ அளிப்பது அல்ல இந்த பதிவின் நோக்கம். அதற்கு இணையத்தில் அருமையான இடங்கள் இருக்கின்றன. மாறாக, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா? வேண்டாமா என தீர்மானிக்க நடத்தப்பட்ட பிரெக்ஸ்டி வாக்கெடுப்பு தொடர்பான பலவகை கோணங்கள், அதன் தாக்கங்கள், பாதிப்புகள், பின்விளைவுகள், முன் கதைச்சுருக்கம் இன்னும் இத்யாதிகள் என பலவற்றை எளிதாக புரிய வைக்கும் அருமையான கட்டுரையை சுட்டிக்காட்டி சில விஷயங்களை பேசுவது தான் எனது நோக்கம்.

முன்னணி தொழில்நுட்ப இணைய தளங்களில் ஒன்றான தி வெர்ஜ்.காமில் வெளியான இந்த கட்டுரை, டிவிட்டரில் இந்த விஷயம் தொடர்பாக வெளியான குறும்பதிவுகளை கொண்டு சிகக்லான இந்த பிரச்சனையின் பல பரிமானங்களை அழகாக புரிய வைக்கிறது.

முக்கிய பிரச்சனைகளில் எதிர்வினையை இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எதிர்கொள்ளலாம். ஆயிரக்கணக்கான குறும்பதிவுகள், அவற்றை ஒருங்கிணைக்கும் ஹாஷ்டேக், பேஸ்புக் லைக்குகள் என பலவிதமாக பிரச்சனையின் தாக்கம் மற்றும் அது தொடர்பான உரையாடலை உள்வாங்கிக்கொள்ளலாம்.
பிரெக்ஸிட் பிரச்சனையை பொருத்தவரை, அதற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு குறும்பதிவுகள், தீவிர அலசல் குறும்பதிவுகள், கேலி மற்றும் கலாய்ப்பு குறும்பதிவுகள் என பலவிதமாக இந்த பிரச்சனை பதிவாகி இருக்கிறது. இவற்றில் இருந்து 21 குறும்பதிவுகளை தேர்வு செய்து, இந்த பிரச்சனையின் அனைத்து பரிமாணங்களையும் தி வெர்ஜ் கட்டுரை புரிய வைக்க முயன்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு உலகில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளதாக துவங்கும் இந்த கட்டுரை , வெளியேற 51.9 சதவீத ஆதரவு கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறது. அரசியல் மற்றும் பொருளாதார நோக்கில் இந்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது என்றும், பிரிட்டன் பொருளாதாரம் பலத்த அடி வாங்க வாய்ப்பிருப்பதற்கான முதல் அறிகுறியாக பிரிட்டன் பவுண்டின் மதிப்பு சரிந்திருப்பது குறிப்பிடப்பட்டு, அது தொடர்பான முதல் குறும்பதிவு இடம்பெறுகிறது.
ஜோயல் லெவின் என்பவரின் அந்த குறும்பதிவு, பவுண்ட் 10 சதவீதம் சரிந்துள்ளது. 1978 ல் 4.3 சதவீதம் சரிந்த பிறகு இது மிகவும் மோசமானது: என தெரிவிக்கிறது.

பேட்ரிக் மெக்ஜீ என்பவரின் அடுத்த குறும்பதிவு பிரிட்டன் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவை உணர்த்துகிறது. பிரிட்டன் மக்கள் தங்கள் நாணயத்தின் மதிப்பு குறைய இருப்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனும் வவரிப்புடன் மைக் ஸ்மித் என்பவர் பகிர்ந்து கொண்டுள்ள புதிய நாணயம் தொடர்பான குறும்பதிவு இடம்பெறுகிறது. அடுத்த குறும்பதிவு, பொருளாதார நாளிதழான பைனான்சியல் டைம்ஸ், பவுண்ட் மதிப்பு சரிவை கவனிப்பதை விட்டுவிட்டது என பொருள் படும் வகையில் அமைந்துள்ளது.

பிரிட்டனில் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை இந்த குறும்பதிவுகள் ஒரு கோட்டுச்சித்திரமாக உணர்த்துகின்றன அல்லவா!

அடுத்ததாக வரும் குறும்பதிவுகள் வேறு செய்தியை தெரிவிக்கின்றன. பிரெக்ஸிட் வாக்கெடுப்பு தொடர்பான புள்ளி விவரங்கள், இளைஞர்கள் விரும்பாத எதிர்காலத்திற்காக மூத்த தலைமுறை வாக்களித்திருக்கிறது எனும் முர்டாச உசேன் என்பவரின் குறும்பதிவு இந்த பிரச்சனையின் பின்னே உள்ள பிளவை சுட்டிக்காட்டுகிறது. அதாவது பிரிட்டனில் உள்ள வயதானவர்கள் வெளியேறும் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால் இளம் தலைமுறை ஒன்றியத்தில் நீடிக்க விரும்பியிருக்கிறது.

பாதுகாப்பான அரசு வேலை, பென்ஷன் சலுகைகள் என பலவற்றை அனுபவித்த முந்தைய தலைமுறை தங்களுக்கு வளத்தை கொண்டு வந்த பாலத்தை எரித்திருக்கிறது என பொருள் படும் லூக் லூயிஸ் என்பவரின் குறும்பதிவு இந்த பிளவின் சமூக பாதிப்பை உணர்த்துகிறது.

தொடந்து மேற்கோள் காட்டபடும் குறும்பதிவுகள், வாக்கெடுப்பில் வயது அடிப்படையிலான பிளவு மற்றும் படித்தவர்கள்,படிக்காதவர்கள் மத்தியிலான பிளவு ஆகியவற்றை சுட்டிக்காட்டுகின்றன. இன்னொரு குறும்பதிவு பூகோள ரீதியாக உள்ள வேறுபாட்டை காட்டுகிறது. உதாரணமாக லண்டனில் உள்ளவர்கள் வெளியேற விரும்பவில்லை. ஆனால் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பிரிட்டன் வெளியேற விரும்பியுள்ளனர்.
அது மட்டும் அல்ல பிரிட்டனில் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கும் ஸ்காட்லாந்து எதிர்த்து வாக்களித்திருக்கிறது. வடக்கு அயர்லாந்தும் எதிர்த்து வாக்களித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க விரும்பும் ஸ்காட்லாந்து மீண்டும் ஒரு முறை பிரிட்டனில் இருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கலாம் எனும் தகவலை அளிக்கும் குறும்பதிவும் இடம்பெற்றுள்ளது. இன்னொரு குறும்பதிவு வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. ஐரிஷ் யூனிட்டி எனும் பெயரில் இந்த குறும்பதிவு வெளியாகியுள்ளது.

ஆக,வருங்காலத்தில் பிரிட்டனில் மேலும் பிளவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
வாக்கெடுப்பின் மூலம் பிரிட்டனை வெளியேற்றலாம் எனும் வாய்ப்பு இந்தியாவை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது என்று குறிப்பிடும் குறும்பதிவு லேசான அங்கத்ததுடன் பிரச்சனையை புரிய வைக்கிறது.
நெதர்லாந்து மற்றும் பிரான்சிலும் இதே போன்ற வாக்கெடுப்பிற்கான கோரிக்கை எழுந்துள்ளது எனும் குறும்பதிவுகள், வாக்கெடுப்பு எனும் ஜனநாயக ஆயுதத்தின் அருமையை உணர்த்துகின்றன.

மேலும் சில அரசியல் சார்ந்த குறும்பதிவுகளுடன் நிறைவு பெறும் இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது, பிரெக்ஸிட் பிரச்சனையின் பல கோணங்களை புரிந்து கொள்ள முடிகிறது.
பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்காமல் பொருத்தமான குறும்பதிவுகளை தேர்வு செய்து, பிரச்சனையின் தீவிரம் மற்றும் முழு பரிமாணத்தை இந்தக்கட்டுரை உண்ர்த்துகிறது.

பிரெக்ஸிட் பற்றிய ஆர்வமும் குழப்பமும் உள்ளவர்கள் இந்தக்கட்டுரை படித்துப்பார்க்கலாம். ஆனால் ஒரு எச்சரிக்கை, இதைப்படித்தால் பிரச்சனை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படும்.
பொதுவாக நான் டிவிட்டர் அபிமானி. அந்த இணைய வடிவம் பயன்படும் விதம் என் போன்றவர்களை கவர்ந்திழுத்துக்கொண்டிருக்கிறது. டிவிட்டர் குறும்பதிவு வெளிப்பாட்டை வைத்து பல விஷயங்களை பதிவு செய்ய முடிவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

நிற்க, இந்தக்கட்டுரையை நம்மூர் டிவிட்டர் உதாரணத்துடன் முடிப்பதே பொருத்தமாக இருக்கும். அதற்கேற்பவே மிகவும் தற்செயலாக, இந்தக்கட்டுரையை படித்த பிறகு, இடலிவடையின் டிவிட்டர் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. வலைப்பதிவு உலகில் ஆரம்ப்பத்தில் இருந்து இயங்கி வருபவரின் டிவிட்டர் பக்கம் என்பதால் அதன் பழைய குறும்பதிவுகளை ஒரு பார்வை பார்த்தேன்.

அவரது பாணியில் கேலியும், கிண்டலுமான பதிவுகள் வரிசையில் 2016 தமிழக தேர்தல் பற்றிய குறும்பதிவுகளை பார்க்க முடிந்தது. தேர்தலின் போது அதிக குறும்பதிவுகள் இல்லை. ஆனால் வாக்கு எண்ணிக்கை தினத்தில் குறும்பதிவுகள் தெறித்துள்ளன. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை அன்று நிலவிய சூழலை இந்த குறும்பதிவுகள் படம் பிடித்துக்காட்டுகின்றன.

இந்த குறும்பதிவுகள் நடுநிலை கொண்டவை அல்ல. ஆனால் அவற்றின் சார்பு நிலையை மீறி, தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தொலைக்காட்சி சானல்கள் முன் தமிழ் இதயங்கள் எதிர்கொண்ட உணர்வுகளின் குறுக்கு வெட்டு சித்திரமாக இவை அமைகின்றன். ஆரம்ப எதிர்பார்ப்பு, அதிமுகவின் வெற்றி, மூன்றாம் கட்சிகளின் வீழ்ச்சி, திமுகவின் நிலை என பலவற்றை குறும்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.
இவைத்தவிர, கொஞ்சம் சத்தமாக கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நிலையும் லேசான கிண்டலோடு எடுத்துச்சொல்கிறது. நிச்சயம் வெளியான போது அதன் பின் தொடர்பாளர்களை கவர்ந்திருக்க வேண்டும். இப்போது சில மாதங்கள் கழித்து திரும்பிப்பார்க்கும் போது அப்போது நிகழ்ந்த விவாதம், வெற்றிக்களிப்பு, தோல்வி அடைந்தவர்கள் மீதான எள்ளல் என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. கிட்ட்த்தட்ட தேர்தல் 2016 ஒரு பிளேஷ்பேக் போல இருக்கிறது. மாற்றத்தை எதிர்பார்த்த என்போன்றவர்கள் ஏமாற்றத்தை மீண்டும் உணர முடிகிறது.

டிவிட்டரின் தனித்தன்மை இது தான். அது உடனடியாக நிகழ்வுகள் மற்றும் அதன் மீதான உணர்வுகளை அதிக முன்யோசனைக்கு இடமில்லாமல் இயல்பாக பதிவு செய்ய வழி செய்வதால் சிறந்த வரலாற்று பதிவாகவும் அமைகிறது.
2016 தமிழக தேர்தல் தொடர்பான ஆய்வை டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக பதிவுகளை முன்வைத்து மேற்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இட்லிவடை போலவே பலரது பதிவுகள் உதவியாக இருக்கும்.

வெர்ஜ் கட்டுரை: http://www.theverge.com/2016/6/24/12023212/brexit-explained-economy-politics-and-the-rest-of-this-mess
இட்லிவடை டிவிட்டர் பக்கம்: https://twitter.com/idlyvadai


தகவல் திங்கள் பத்தியில் அடுத்த பதிவு . உலகமே பிரெக்ஸிட் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது டிவிட்டர் குறும்பதிவுகள் மூலம் அந்த பிரச்சனையை புரிய வைக்கும் கட்டுரை பற்றிய பதிவு இது. அப்படியே தமிழக தேர்தல் 2016 பற்றியும் டிவிட்டர் மூலம் திரும்பி பார்க்கும் ஒரு முயற்சி. இணையம் சார்ந்து பிரச்சனைகளை புரிந்து கொள்ள முற்படும் அணுகுமுறையில் மற்றொரு கட்டுரை இது…

அகதிகள் நெருக்கடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்.

பொய்மையும் சில நேரங்களில் நன்மை பயக்கும் என்பதற்கு ஏற்ப தேடியந்திரமான கூகுள் புதிய சேவையை அறிமுகம் செய்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் வகையில் அமைக்கப்படுள்ள போலி இணையதளம் ஐரோப்பாவை உலுக்கி கொண்டிருக்கும் அகதிகள் நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

உங்கள் உங்கள் எதிர்காலத்தை அறிய வேண்டுமா? எனும் கேள்விக்கு பதில் அளிப்பது போன்ற இணையதளம் ஒன்று இணைய உலகில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளது. புகழ் பெற்ற தேடியந்திரமான கூகுள் போலவே தோற்றத்துடன் கூகுள் ஜோதிடம் எனும் பெயரில் அந்த இணையதளம் அமைந்துள்ளது.
அதில் உள்ள தேடல் கட்டத்தில் எதிர்காலம் பற்றிய கேள்விகளை டைப் செய்யலாம். ஆனால் எதிர்காலம் பற்றிய ஆருடம் வருவதற்கு பதில், நிச்ச்யம் எங்களால் உங்கள் எதிர்காலத்தை கணிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு கீழே, 60 மில்லியன் அகதிகள் தங்களுக்கு எதிர்காலம் உண்டா எனும் கேள்வியை தினமும் கேட்டு வருகின்றனர்.எனவே தான் போலி கூகுள் தளத்தை பயன்படுத்தி, உங்கள் கவனத்தை அகதிகள் பிரச்சனை பக்கம் ஈர்க்க முயன்றிருக்கிறோம் என குறிப்பிடப்பட்டு, அகதிகள் எதிர்காலம் குறித்து ஒரு நிமிடமாவது யோசிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அகதிகள் பிரச்சனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் அகதிகளுக்கு நிதி உதவி அளிக்கவும் வழி செய்துள்ளது. அதோடு ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டிருக்கும் அகதிகள் எண்ணிக்கையும் குறிப்பிடப்படுகிறது.அகதிகளின் பரிதவிப்பை உணர்த்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.

கூகுல் போலவே தோற்றம் அளிக்கும் இந்த இணையதளம் முதலில் கவனத்தை ஈர்த்த போது, கூகுள் சார்பாக இந்த இணையதளம் அமைக்கப்பட்டதாக பலரும் கருதினர். ஆனால் இது நெதர்லாந்தை சேர்ந்த பிரைன் மீடியா எனும் விளம்பர நிறுவனம் ஒன்றின் சார்பாக நல்ல நோக்கத்துடன் அமைக்கப்பட்ட போலி இணையதளம் என தெரியவந்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் சந்திக்கும் மிகப்பெரிய மனிதநேய நெருக்கடி என குறிப்பிடப்படும் இந்த அகதிகள் நெருக்கடியின் நிலை குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த புதுமையான முயற்சி அமைந்துள்ளது.

இணையதள முகவரி: http://betagoogle.com/refugees.html