Tag Archives: friends

உணவோடு உறவு வளர்க்கும் இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் புதிய வர்த்தக தொடர்பு அல்லது தொழில் முறை உறவை ஏற்படுத்தி கொண்டது போலவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உண்டாக்கி தரும் இணையதளங்களின் வரிசையில் லஞ்ச் மீட் சேவையையும் சேர்த்து கொள்ளலாம்.

மதிய உணவை மையமாக வைத்து கொண்டு நட்பு பாலம் அமைத்து கொள்ள வழி செய்யும் இந்த தளம் இனி ஒரு முறை தனிமையில் மதிய உணவு சாப்பிடாதீர்கள்,எங்கேயும் எப்போது நண்பர்களோடு சேர்ந்தே சாப்பிடுங்கள் என்கிற‌து.

தனிமையில் சாப்பிடாமல் இருப்பதற்கான சேவை என்பதே இதன் நோக்கம்.அதை தான் கோஷமாகவும் முன்வைக்கிற‌து.

மருத்துவ பிரதிநிதிகள்,ஐடி ஊழியர்கள்,ஆலோசகர்கள்,தொழில்முனைவோர் போன்றவர்களுக்கு இந்த வாசக‌த்தின் அருமை சொல்லமலே புரிந்து விடும்.காரணம் மதிய உணவு நேரம் என்பது பசியாறுவதற்கு மட்டும் அல்ல;சாப்பாட்டை சுவைத்தபடியே யாருடனாவது பேசி கருத்துக்களை பாரிமாறி புதிய வாய்ப்புகளை தேடிக்கொள்வதற்கானதும் தான்.

சாப்பிட்டு கொண்டே உரையாடலில் ஈடுபடுவதைவிட சுவாரஸ்யமானது வேறு என்ன இருந்து விட முடியும். உடன் சாப்பிடும் புதிய நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் .அப்படியே ந‌ம்மை பற்றி இன்னும் சரியாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.இந்த கருத்து பரிமாற்றம் தொழில்முறையான புதிய வாயில்களை திறந்து விடக்கூடியது.

அதனால் தான் திறமைசாலிகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சாப்பிட்டு கொண்டே பேசலாமா என்று மதிய உணவு நேரமாக பார்த்து ஓட்டலுக்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள்.

சிலருக்கு மட்டுமே கைவந்த கலையான இந்த மதிய உணவு சந்திப்பை எல்லோருக்கும் எற்படுத்தி தருகிறது லஞ்ச் மீட் சேவை.

தொழில்முறை நப‌ர்களுக்கான வலைப்பின்னல் சேவை தளமான லிங்க்ட் இன் தளத்தை அடிப்படையாக கொண்டு இது செய்லப‌டுகிற‌து. லிங்க்ட் இன் உறுப்பினர்கள் இந்த தளத்தின் மூலம் தாங்கள் மதிய உணவு திட்டம் பற்றி தெரிவித்தால் அதனடிப்படையில் உங்கள் வலைப்பின்னலில் இருப்பவர்கள் யாரேனும் அருகாமையில் உள்ளனரா என்று தேடிப்பார்த்து சொல்லி விடுகிற‌து.

உடனே அந்த நப்ரை தொடர்பு கொண்டு உணவு சாப்பிட சம்மதாமா என்று அழைப்பு விடுக்கலாம்.நேரம் மற்றும் இடத்தையும் விவாதித்து முடிவு செய்து கொள்ளலாம்.இருவருக்கும் உடன்பாடு என்றால் சேர்ந்து சாப்பிட்டு மகிழலாம்.

தொழில்முறையிலான வலைப்பின்னலில் இருப்பவர்கள் என்பதால் பேசுவதற்கும் பொதுவான விஷயங்கள் இருக்கும்.எனவே சுலபமாக உரையாடலை துவக்கி சரளமாக தொடரலாம்.

அவரவர் தேவை மர்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இந்த சந்திப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.வேலையில் இருப்பவர் என்றால் வேறு நல்ல வேலைக்கான வாய்ப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்.வேலைக்கு ஆள் பிடிப்பவர் என்றால் தகுதியான நபர்களுக்கு வலைவீசி பார்க்கலாம்.தொழில் மூனைவோர் என்றால் புதிய வார்த்தக வாய்ப்பை நாடலாம்.ஆலோசகர்கள் என்றால் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி பயன் பெறலாம்.

இன்னும் எத்தனையோ விதங்களில் இந்த சந்திப்புகளை பயன்ப்டுத்தி கொள்ள முடியும்.உங்கள் நண்பர்களும் இந்த சேவையை பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களிடம் இருந்தும் கூட உங்களுக்கு மதிய உணவுக்கான அழைப்பு வரலாம்.

நட்புகு நட்பும் வலரும்.புதிய வாய்ப்புகளும் உருவாகும்.அது தான் இந்த சேவையின் சிறப்பு.

மதிய உண‌வின் இந்த மகத்துவத்தை எல்லாம் விளக்கி கீத் பெராசி என்பவர் நெவர் ஈட் அலோன் என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த புத்தகம் தந்த உந்துலால் தான் ல‌ஞ்ச் மீட தளத்தை உருவாக்கியதாக அதன் நிறுவனர் குறிப்பிட்டுள்ளார்.

இணையதள முகவரி;http://lunchmeetapp.com/

நன்றி நவிலல் இனையதளம்.

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.

நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்?

ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும்.

தீபாவளி வாழ்த்துக்களையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் சொல்ல வாழ்த்து அட்டைகள் இருப்பது போல தேங்க்யூஸ் என்னும் இந்த தளம் நன்றி சொல்வதற்காக அழகான அட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

நண்பர்கள்,உறவினர்கள்,சக ஊழியர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக நன்றி சொல்லுங்கள் என்று உற்சாகப்டுத்துகிறது இந்த தளம்.இவ்வளவு ஏன் பிரபலங்கலூக்கும்,உங்கள் வாழ்க்கையின் சிறப்பான நபர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள் என்கிறது.

அதுவும் சரி தான்,என்று ஒப்பு கொண்டு நன்றி நவிலலுக்கு தயாராகி விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்,நன்றி குறிப்பை உருவாக்கி கொள்ள வேண்டியது தான்.நன்றியை உருவாக்குங்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் ஒரு கடித வாசகம் வந்து நிற்கிறது.நன்றிக்கான உடனடி வாசக அமைப்பான இதில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போல இடை இடையே காலி இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் நன்றிக்கு உரியவரின் பெயரையும்,நன்றி பெருக்கிற்கான காரணத்தையும்,மேலும் சில விவரங்களையும் பூர்த்தி செய்து நன்றி செய்தியை தயார் செய்து விடலாம்

ஆக யாருக்கு நன்றி சொல்வது என தீமானித்தால் போதும்,எப்படி சொல்வது,எந்த வாசகங்களை எழுதுவது என்றெல்லாம் யோசித்து குழம்ப வேண்டாம்.அதற்காக என்றே அழகான நன்றி படிவத்தை இந்த தளம் தயாராக வைத்திருக்கிறது.

நன்றி படிவத்தை பூர்த்தி செய்த பின் தான் இன்னும் சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

நண்பருக்கா,உறவினருக்கா,சக ஊழியருக்கா, யாருக்க நன்றி தெரிவிக்கிறோம் என்பதையும் ,நன்றி உணர்வின் வெளிப்பாடா,பரிசளிப்பா எந்த வகையை சேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பொருத்தமானவற்ரை கிளிக் செய்த பின் நன்றி சொல்பவரின் புகைப்படத்தையும் இனைக்கலாம்.நன்றி சீட்டுக்கான விதவிதமான எழுத்துரு வடிவங்களும் இருக்கின்றன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த எழுத்துருக்கள் கைப்பட கடித்தம் எழுதியது போனர உணர்வை தர வல்லவை.

நன்றி குறிப்பை தயார் செய்த பின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம்.

யோசித்து பார்த்தால் நாம் பலருக்கு நன்றி கடன் பட்டிருப்பது புரியும்.பல நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் செய்திருப்போம்.சில நேரங்கள் தள்ளிப்போட்டிருப்போம்.மறந்திருப்போம்.சொல்லாமல் விட்டிருப்போம்.

ஆனால் நன்றி சொல்ல நினைத்ததும் அதனை செய்து முடிக்க இந்த தளம் உதவுகிறது.அதோடு யாருக்கெல்லாம் நன்றி சொல்லலாம் என யோசிக்கவும் வைக்கிறது.எதிரபாராத நேரத்தில் லிப்ட் கொடுத்து உதவிய நண்பருக்கி நன்றி சொல்லலாம்.நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி சொல்லலாம்.காலையில் அத்தனை அவசரத்திலும் புன்னகையோடு வழியனுப்பும் மனைவிக்கு நன்றி சொல்லலாம்.

இந்தியாவுக்காக சாதனைகள் படைக்கும் சாசினுக்கு நன்றி சொல்லலாம்.பூங்கதவே பாடலி கேட்டு மெய்மறந்து ராஜாவுக்கு நன்றி சொல்லலாம். ஆதமாநாம் பாணியில் இத்துடனாவது விட்டதற்கு நன்றி என்று அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்லலாம்.இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

நண்பர்கள் இந்த நன்றி செய்தியை பார்த்து வியந்து மகிழ்வார்கள் அல்லவா?அதிலும் மோசமான மனநிலையில் இருக்கும் போது இந்த நண்றி செய்தி எட்டிப்பார்த்தால் மனது லேசாகி விடாது?

நன்றி என்பது ஒரு நல் உணர்வு ,அதை தள்ளிப்போடாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.எங்கும் அன்பு பெருகட்டும்.

இணையதள முகவரி;http://thankuz.com/

உங்கள் வாழ்க்கையிலும்(பேஸ்புக்) ஜனநாயக‌ம்

அரசியல் கட்சிகள் மட்டும் தான் பொதுகுழு செய‌ற்குழு கூட்டி முடிவெடுக்க வேண்டுமா என்ன? நீங்களும் கூட நண்பர்களோடு, தெரிந்தவர்களோடு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம்.

இப்படி நண்பர்களோடு ஆலோசனை நடத்துவதற்காக அவர்களை எல்லாம் அழைத்து பேச வேண்டும் என்றில்லை.போனிலும் தொடர்பு கொள்ள வேண்டாம்.எந்த விஷயம் குறித்து நண்பர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்தீர்கள் என்றால் போதும் மற்றவற்றை ‘டிரைசைடர்’ இணையதளம் பார்த்து கொள்கிறது.

வர்த்தக உலகில் பிரைன்ஸ்டிராமிங் என்று சொல்வதுண்டு அல்லவா?முக்கியமான விஷயம் குறித்து நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களோடு கலந்தாலோசித்து அனைவரது கருத்துக்களையும் அறிந்து அதற்கேற்ப முடிவெடுப்பதை தான் இவ்வாறு குறிப்பிடுகின்ற‌னர்.தனியாக உடகார்ந்து மண்டையை உடைத்து கொள்ளும் அளவுக்கு சிந்தித்தாலும் கிடைக்காத தெளிவும் ,புதிய எண்ணங்களும் இப்ப‌டி கூட்டாக விவாதித்து சிந்திக்கும் போது உண்டாகலாம்.

இதே போல தனிநபர்களும் கூட தங்கள் குழுவினரோடு பிரன்ஸ்டிராமிங் செய்ய டிரைசைடர் வழி செய்கிறது.அதுவும் மிக எளிமையாக!

ஆலோச‌னை தேவை என்றாலே அதற்கான கேள்வி ஒன்று இருக்கும் அல்லவா?அந்த கேள்வியை டிரைசைடரில் கேட்டால் போதும் உங்களுக்கான மந்திராலோச‌னையை துவங்கிவிடலாம்.

பேஸ்புக் அல்லது டிவிட்டர் கட்டம் போல உள்ள பகுதியில் கேள்வியை டைப் செய்தீர்கள் என்றால் உங்கள் ஆலோசனைக்கான இணைய முகவரி தயாராகிவிடும்.இந்த முகவரியை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இமெயில் மூலம் தேர்ந்தெடுத்த நண்பர்கலோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வட்டத்தில் உள்ள நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.அது உங்கள் தேவை மற்றும் விருப்பம் சார்ந்தது.

ஆலோசனை தேவைப்படும் கேள்வியை முன்வைத்து விட்டு அதற்கான விள‌க்கத்தையும் கூட குறிப்பிடலாம்.

இதன் பிற‌கு நண்பர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.கருத்துக்கான விளக்கம் அல்லது வாதத்தையும் உடன் சம‌ர்பிக்க‌லாம்.ஒரு நண்பர் சொன்ன கருத்தை மற்றொருவர் ஆதரிக்கலாம்,மறுக்கலாம்.புதிய யோச‌னையை கூறலாம்.

இப்படி நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை படித்து பார்த்து அசை போட்டு சீர் தூக்கி பார்த்து நீங்கள் நல்லதொரு முடிவெடுக்கலாம்.எந்த யோசனையை தேர்வு செய்தீர்கள் என்பதையும் குறிப்பிடலாம்.நண்பர்கள் ஆலோசனை கூறியுள்ளனரா என்பதை இமெயில் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு.நண்பர்கள் யோசனையை நீங்க‌ள் மட்டுமே பார்க்கவும் முடியும் அல்லது மற்றவற்களோடு பகிர்ந்து கொள்ள‌வும் முடியும்.

ஆக இருந்த இடத்தை விட்டு அசையாமலே நண்பர்களை அலையவிடாமலே அவர்களோடு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம்.

இன்று மாலை சினிமாவுக்கு போகலாமா என்பதில் துவங்கி வேலையை விட்டு புதிய கம்பெனி துவங்கலாமா என்பது வரை எந்த வகையான விஷயம் குறித்தும் ஆலோச‌னை கேட்டு செயல்ப‌ட இந்த சேவையை பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.சிக்கலான பிரச்ச‌னையில் வழிகாட்டுதல் தேவை என்றாலும் ஆலோசனை கேட்டு தெளிவு பெறலாம்.

மிகவும் எளிமையான வடிவமைப்பு இந்த சேவையின் சிற‌ப்பம்சம் .எனவே எந்த குழப்பமும் இல்லாமல் ஆலோசனை நடத்தலாம்.அதைவிட முக்கிய‌மான விஷயம் இந்த சேவையை பயன்படுத்த உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை.எடுத்த எடுப்பில் பயன்ப‌டுத்த துவங்கிவிடலாம்.அதே போல கட்டண‌மும் கிடையாது.

வாழ்கையில் ஜனநாயக‌ம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளமாக இந்த சேவையை பய்ன்படுத்தி கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் இன்பார்ம்டு டிசிஷன்ஸ் என்று சொல்வார்களே அது போன்ற கற்றிந்த முடிவை மேற்கொள்ள விரும்பினாலும் இந்த சேவை கை கொடுக்கும்.

அலோசனை கேட்க முகவரி;http://tricider.com/t/

சாப்பிடலாம்;சந்திக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது.

அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக்கு அழைப்பு விடுப்ப‌தற்கான இணையதளம்.

சாப்பிடுவதற்கு  நண்பர்களை அழைக்க வேண்டும் என்றால் செல்போன்  இருக்கிறதே என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்டால் நீங்கள் இன்னும் பேஸ்புக் யுகத்திற்கு வந்து சேரவில்லை என்று பொருள்.

போனில் கை வைக்காமால் ,இமெயில் உதவியை நாடாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவை ஏற்படுத்தி தரும் வசதியை பயன்படுத்தி மதிய உணவுக்காக‌ நண்பர்களை அணி சேர்ப்பது தான் இப்போதைய பேஷன்.அது மட்டும் அல்ல நண்பர்கள் என்னும் போது ஏற்கனவே உள்ள நெருக்கமான வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் அல்ல.புதிய நண்பர்கள்.

பேஸ்புக்கில் வலைவீசினால் புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர் அல்லவா?அதே போல சேர்ந்து சாப்பிடுவதன் மூலமே அறிமுகமாகி நட்பை வளர்த்து கொள்ளும் நண்பர்கள்.

தொழில்முறையில் பலரை சந்தித்து பேச வேண்டியவர்களுக்கு இதன் அருமை புரியும்.தொழில் முறையில் புதிய வாய்ப்புகள் தேவைப்படும் போது புதியவர்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இத்தகைய நண்பர்களை அடைய சிறந்த வழி அப்படியே சாப்பிட்டு கொண்டே பேசலாமா என் கேட்டு ரெஸ்டாரண்டுக்கு போவது தான்.

சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்கும்.அப்படியே பேச்சு வாக்கில் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு நட்பையும் ஏற்படுத்தி கொள்ளலாம்.இந்த நட்பு தொழில் ரீதியாக உதவும்.

ஆனால் திடிரென சாப்பிட‌ வாருங்கள் என‌ அழைப்பது எப்படி?

இந்த இடத்தில் தான் சாப்பிடுவதையும் சமுக தொடர்புகளையும் இணைக்கும் சேவைகள் வருகின்றன.

இந்த பிரிவில் புதிய வரவான பைட் டூ மீட் இணையதளம் மிக சுலபமாக சாப்பிடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்ததுமே உங்கள் பேஸ்புக் அல்லது டிவிட்டர் தொடர்புகளை நீங்கள் எங்கே எப்போது சாப்பிட விரும்பிகிறீகள் என்று குறிப்பிடலாம்.அதே நேரத்தில் உங்கள் தொடர்புகளில் யாரெல்லாம் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை இந்த தளம் வரைபடத்தில் காட்டும்.(அதாவது அவர்களும் இதில் உறுப்பினராக இருந்தால்).நீங்கள் தேர்வு செய்த இடத்தில் யார் இருக்கின்றனறோ அவர்களை தொடர்பு கொண்டு சாப்பிட அழைக்கலாம்.

அதே போல நீங்களும் கூட இந்த வகையில் யாராலாவது சாப்பிட அழைக்கப்படலாம்.எல்லாமே இருப்பிடம் சார்ந்தது என்பதால் மிகவும் உடனே சந்தித்து சாப்பிட ,சாப்பிட்டபடி பேச வசதியாக இருக்கும்

டேட்டிங் போல ஒருவரை மட்டும் சாப்பிட அழைக்கலாம்.அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவரையும் அழைக்கலாம்.

ஆனால் சாப்பாட்டுக்கான பில் யார் பொறுப்பு என்பதை எல்லாம் முன்கூட்டியே முடிவு செய்து கொள்வது நல்லது.

எதை பற்றி பேசுவது என்பதை தீர்மானிக்க அல்லது யாரை சாப்பிட் அழைத்தல் நமக்கேற்றவராக இருப்பார் என்பதை முடிவு செய்ய ஒவ்வொருவரும் குறிச்சொற்கள் மூலம் தங்கள் விருப்பங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

அதே போல் ரெஸ்டாரண்டுகளுடன் கூட்டணி வைத்து கொண்டு உறுப்பினர்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடி பெற்றுத்தரும் திட்டமும் உள்ளதாம்.ஆனால் ஒன்று சாப்பிட செல்லும் இடம் பாதுகாப்பானது தானா என்றெல்லாம் யோசித்து கொள்ள வேண்டும்.

இணையதள முகவரி;http://bitetomeet.com/accounts/sign_in

என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம்

ஆயிரம் தான் சொல்லுங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட செல்வதே சந்தோஷமான விஷயம் தான்.அப்படியே சாப்பிட செல்லும் போது புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?

இந்த இரண்டையும் சாத்தியமாக்கும் சேவையை வழங்குகிறது ஈட் வித் மீ டாட் நெட் இணையதளம்.

பேஸ்புக் போல சமுக வலைப்பின்னல் வகையை சேர்ந்தது என்றாலும் இந்த தளத்தில் சாப்பிடுவதும் சாப்பிடுவதற்காக சந்திப்பதும் தான் பிரதானம்.வெளியே சாப்பிடுவதை விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலமாக தங்களுக்கான சாப்பாட்டு துணையை தேடிக்கொள்ளலாம்.

அதாவது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் சாப்பிட வருமாரு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அரட்டை அடித்தபடி ஒன்றாக சாப்பிட்டு மகிழலாம்.

ஒரு வகையில் பார்த்தால் இது நண்பர்களை சாப்பிட அழைப்பதற்கான இணையதளம்.ஆனால் இப்படி அழைப்பதை எளிமையாக்கி புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ள வழி செய்கிறது.

இந்த சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பின்னர் விருந்துக்கான நிகழ்வை உருவாக்கி விட்டு நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பலாம்.விருந்துக்கான நாள் மற்றும் இடத்தை குறிப்பிட்டு பேஸ்புக் தொடர்புகள் மூலம் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தால் விருப்பம் உள்ளவர்கள் வருவார்கள்.ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழலாம்.

இதில் என்ன விஷேசம் என்றால் உங்கள் நண்பர்களும் வருவார்கள்,நண்பர்களின் நண்பர்களும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.அதாவது உங்களூக்கு நேரடியாக அறிமுகம் இல்லாதவர்களும் அழைப்பை ஏற்று சாப்பிட வரலாம்.அவர்கள் மூலம் புதிய நட்பு கிடைக்கலாம்.

இப்படி புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பிருப்பது தான் இந்த தளத்தின் ஹைலைட்.புதிய நட்பு சரி,ஆனால் அறிமுகம் இல்லாதவர்கள் அழையா விருந்தாளிகளாக வந்து நின்றால் என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம்.நீங்கள் அனுமதி அளித்தால் மட்டுமே யாரும் விருந்துக்கு வர முடியும்.

விருந்தில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை அலசிப்பார்த்து அதில் தாங்கள் நண்பர்களின் நண்பர்கள் இருந்தால் தாங்களும் பங்கேற்க விரும்புவதாக கூறி அழைப்பு வரலாமா என்று கேட்கலாம்.சம்மதம் என்றால் வாருங்கள் என்று அழைக்கலாம்.

பெரும்பாலும் பசிக்கு சாப்பிடுகிறோம்.சில நேரங்களில் சாப்பாட்டை சாக்காக வைத்து கொண்டு நட்பை பரிமாறிக்கொள்கிறோம்.எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கருத்து பரிமாற்றம் ஆனந்தத்தை அளிக்கும்.அதே போல வர்த்தகத்தில் பெரும் புள்ளிகளாக இருப்பவர்கள் புதிய தொடர்பை உருவாக்கி கொள்ள மதிய உணவு அல்லது இரவு உணவை ஒரு சந்திப்பு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்வதும் உண்டு.

சாப்பாடும்,சந்திப்பும் ,சுவையும் நட்பும் இணைந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இண்டெர்நெட் மூலமே இந்த சந்திப்புகளை திட்டமிட விரும்புவார்கள்.இதற்கென தனியே மெயில்களை அனுப்பி கொண்டு எஸ் எம் எஸ் களை அனுப்பி தேவைப்பட்டால் தொலைப்பேசியிலும் அழைத்து ஒரு சந்திபை ஏற்பாடு செய்ய மெனக்கெடுவதற்கு மாறாக இதனை சுலபமாக செய்து முடிப்பதற்கென்றே ஒரு இணைய சேவை இருந்தால் நன்றாக் தான் இருக்கும் என்று நினைப்பவர்களை மனதில் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள இது போன்ற சேவையில் இருந்து மாறுபட்டு சாப்பிடுவதற்கான பேஸ்புக் போல இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சேர்ந்து சாப்பிடுவதன் வாயிலாக சக மனிதர்களோடு தொடர்பு கொள்ள புதிய வழி காட்டுவதாக இந்த தளம் பெருமை பட்டுக்கொள்ள்கிறது.அதை அழகாகவும் செய்து முடிக்கிறது.சாப்பாடு சாப்பாடு மூலமான நட்பு தவிர வேறு எந்த கவனச்சிதறல்களும் இல்லாமல் இந்த தளம் அமைந்திடுப்பதும் நல்ல விஷயம்.

பொதுவாக இந்து போன்ற சேவைகள் அமெரிக்காவை மையமாக கொண்டிருக்கும்.எனவே மறவர்கள் இந்த கருத்தை பாராட்டலாமே தவிர அவற்றை பயன்படுத்த முடியாது.இந்த தளத்தை பொருத்தவரை அத்தகைய எல்லைகள் எல்லாம் இல்லாமல் அகிலம் முழ்வதும் செயல்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

ஸ்பெயின்,சிட்னி,ஆஸ்திரியா,எஸ்டொனியா என பல நாடுகளில் இருந்து விருந்துக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.மிக சுலபமாக சென்னையில் இருந்தோ டெல்லியில் இருந்தோ இதில் இணைந்து கொள்ளலாம் என்றோ தோன்றுகிறது.

இணையதள முகவரி;http://www.eatwithme.net/index.php?