Tag Archives: hashtag

ஹாஷ்டேக் பிறந்த கதை தெரியுமா?

1-ts4Bq_xGIqK-A77lCe64ggஇணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரோடு ஸ்டோவ் பாயட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்டுவதை விட, பொருத்தமான ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி வாழ்த்துச்சொன்னால் உள்ளங்குளிர ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், இணைய உலகில் ஹாஷ்டேக் உருவாகி பிரபலமானதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒருவர் அதை உருவாக்கியவர். இன்னொருவர் அதை வழிமொழிந்து ஆதரித்தவர்.

ஹாஷ்டேக் என்றதும், # எனும் குறியீட்டுடன் இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் அடிக்கடி பகிரப்படும் பதங்கள் நினைவுக்கு வரும். நீங்களே கூட இத்தகைய பதகங்களை உருவாக்கி பகிர்ந்து இருக்கலாம் அல்லது, உங்களை கவர்ந்த தலைப்புகளுடன் இத்தகைய பதத்தை குறிப்பிட்டு நீங்களும் இணைந்திருக்கலாம். # முன்குறிப்புடன் அமையும் பதங்கள் ஹாஷ்டேக் என குறிப்பிடப்படுகின்றன. சமூக ஊடக மொழியின் பிரதான குறுக்கெழுத்து என இதை சொல்லலாம். வெறும் குறுக்கெழுத்து மட்டும் அல்ல, இணைய இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தவும், ஒருங்கிணைக்கவும் உதவும் ஆன்லைன் ஆயுதம். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் இந்த கருத்தை முழு மனதோடு ஆமோதிப்பார்கள்.

அந்த அளவுக்கு ஹாஷ்டேக் சமூக ஊடக உலகில் பிரபலமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றன. ஒரு கணக்குப்படி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் மட்டும் தினந்தோறும் 125 மில்லியன் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்படுபவை தனிக்கணக்கு.

ஹாஷேக் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ஏனெனில் இவை குறும்பதிவுக்கடலில் அவரவர் தங்கள் நோக்கத்திற்கும், தேவைக்கும் பொருத்தமான குறும்பதிவுகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டியாக இருக்கின்றன. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை ஒருங்கிணைப்பதற்கான குறியீடாக அமைவதன் மூலம் ஹாஷ்டேக் இதை சாத்தியமாக்குகிறது. அது மட்டும் அல்ல, குறும்பதிவுகள் சார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்கான வழிகாட்டியாகவும் ஹாஷ்டேக் அமைகிறது.

HASHTAG10_7F5CF76ECCDC4989B4A0D7F5DDEF92DFஹாஷ்டேக் மட்டும் உருவாக்கப்படவில்லை எனில் டிவிட்டர் சேவை இந்த அளவு பயனுள்ளதாக இருந்திருக்குமா? என்பது தெரியவில்லை. டிவிட்டர் உருவாக்கப்பட்ட போதே, அதில் குறும்பதிவுகளை வெளியிடுவது, நண்பர்களை பின் தொடர்வது உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் கூச்சலும், குழப்பமும் அதிகம் இருந்தது. தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கும் குறும்பதிவுகளில் பொருத்தமானவை பிரித்தறிவதற்கான வழி இல்லாமல் இருந்தது.

ஆனால், ஹாஷ்டேகின் அறிமுகம் இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு காண உதவியது. # எனும் அடையாளத்துடன் குறிப்பிட்ட மையக்கருத்தை சுட்டிக்காட்டும் குறிச்சொல்லை சேர்ப்பதன் மூலம் தொடர்புடைய குறும்பதிவுகளை எல்லாம் அந்த குறிச்சொல் கீழ் அடையாளம் காணலாம். உதாரணத்திற்கு இந்தியா கிரிக்கெட்டில் பெரிய அளவில் வெற்றி பெறும் போது, # இந்திய கிரிக்கெட் எனும் குறியீட்டை உருவாக்கி குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டால், இந்திய கிரிக்கெட் வெற்றி தொடர்பாக வெளியாகும் குறும்பதிவுகள் அனைத்தையும் இதன் கீழ் படித்துவிடலாம். இது ஒரு விவாதச்சரடாகவும் தொடரும். இந்த குறியீட்டை கிளிக் செய்தால் போதும், தொடர்புடைய குறும்பதிவுகளை வரிசையாக காணலாம்.

இந்த வசதி தான் டிவிட்டரில், தொடர்ந்து கைகொடுக்கிறது. சமூக ஊடக பயன்பாட்டல் வளைகுடா நாடுகளில் 2010 ம் ஆண்டில் வெடித்த அரபு வசந்தம் புரட்சியின் போது போராட்டக்கார்கள் கருத்துக்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் ஆயுதம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, பிளாக் லைவ்ஸ் மேட்டர் எனும் ஹாஷ்டேக் சமத்துவத்திற்காகவும் மனிதநேயத்திற்காகவும் குரல் கொடுக்க பயன்பட்டது. பேரிடர் காலங்களில் உதவிகளையும், நிவாரண பணிகளையும், பயனுள்ள உயிர்காக்கும் தகவல்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் கைகொடுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது, #சென்னை ரைன்ஸ், #சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவிகளை ஒருங்கிணைக்க வழிகாட்டின. மெரினாவில் தைப்புரட்சி அமைதியாக மலர்ந்து வெற்றி பெற்றதிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஹாஷ்டேக் முக்கிய பங்கு வகுத்தன. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களை முன்னிறுத்திவதிலும் ரசிகர்கள் ஹாஷ்டேக் ஆராதனை செய்வதை பார்க்கலாம்.

டிவிட்டரில் அறிமுகமாகி பின்னர் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக ஊடககங்களிலும் பிரபலமான ஹாஷ்டேக் இன்று, மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்யும் இணைய கூறுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்த பெருமை எல்லாம் ஒருவிதத்தில் சிறிஸ் மெஸினாவையே சேரும். அவர் தான், 2007 ம் ஆண்டில் முதல் முதலாக # குறியீட்டின் பயன்பாட்டை முன்வைத்தார். அப்போது அவர் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற சவுத் பை சவுத்வெஸ் எனும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு தொடர்பான குறும்பதிவுகளை அவரும் நண்பர்களும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனார். ஆனால் அந்த மாநாட்டில் ஆர்வம் இல்லாத மற்ற நண்பர்கள் இதை ரசிக்கவில்லை. நாம் முக்கியமாக கருதாத ஒரு மாநாடு தொடர்பான தகவல்கள் ஏன் நம்முடைய டைம்லைனில் ஏன் எட்டிப்பார்க்கின்றன என்று வெறுப்படைந்தனர்.

அப்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெஸினார் இது பற்றி யோசித்துப்பார்த்தார். டிவிட்டரில் எல்லா குறும்பதிவுகளையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், ஒருவர் தனக்கு தேவையானதை மட்டும் பார்ப்பதற்கான வழி என்ன எனும் கேள்வியோடு நண்பர்களோடும் பேசிப்பார்த்தார். டிவிட்டரில் விவாத குழுக்களை அமைக்கலாம் எனும் யோசனை உண்டானது. ஆனால் அது சிக்கலாக இருக்கும் என நினைத்தார். மிக எளிதான ஒரு வழி அவருக்கு தேவைப்பட்டது. இதனிடையே தான், இணைய அரட்டை அறைகளில் விவாதங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் பவுண்டு (#) குறியீடு இதற்கு பொருத்தமாக இருக்கும் எனத்தோன்றியது. உடனே கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன் என மனதுக்குள் பாடியபடி இந்த தகவலை குறும்பதிவாக பகிர்ந்து கொண்டார். ; http://chrismessina.me/

இது தொடர்பாக விரிவான விளக்கப்பதிவு ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சில நாட்கள் கழித்து ஸ்டோவ் பாய்ட் எனும் தொழில்நுட்ப வல்லுனர், இந்த கருத்தை ஆதரித்து ஒரு பதிவை வெளியிட்டார். ; http://stoweboyd.com/post/39877198249/hash-tags-twitter-groupings

ஹாஷ்டேக் எனும் பதத்தை அதில் அவர் முதல் முறையாக பயன்படுத்தியிருந்தார். இதன் பிறகு மெல்ல இந்த குறியீடு பயன்பாட்டிற்கு வந்தது. பயனாளிகள் மத்தியில் பிரபலமாகத்துவங்கிய பிறகு டிவிட்டரும் இதற்கு அதிகாரபூர்வமாக ஆதரவு அளிக்கவே சமூக ஊடக பதிவுகள் ஹாஷ்டேக் மயமாகத்துவங்கின.

இந்த குறியீட்டிற்கான மூல எண்ணத்தை முன் வைத்த மெஸினா இப்போது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார். ஓபன் சோர்ஸ் சமூகத்தின் ஆதாரவாளராக இருக்கும் மெஸினா, ஹாஷ்டேக் எண்ணத்தை ஒரு போதும் காப்புரிமை பெறவோ அதிலிருந்து லாபம் பெறவோ நினைக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார். இணைய சமூகத்திற்கான தனது பரிசளிப்பாக இந்த எண்ணத்தை கருதுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஹாஷ்டேக் அறிமுகமாகி பத்தாண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

——-

தளம் புதிது; ரோபோ முதலாளிகள் வருகிறார்கள்

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதே கூட பலதுறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோகலாம் எனும் அச்சமும் வலுப்பெற்று வருகிறது.

இந்த அச்சமும், கவலையும் உங்களுக்கும் இருந்தால், வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வருமா என்பதை சோதித்துப்பார்க்கலாம். ’வில் எ ரோபோ பி மைபாஸ்’ எனும் இணையதளம் இந்த கேள்விக்கு பதில் சொல்கிறது.

இந்த தளத்தில் ஒருவர் தான் பணியாற்றும் துறையை குறிப்பிட்டால், அந்த துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் மற்றும் ரோபோ சி.இ.ஒ வரும் வாய்ப்பு தொடர்பான தகவல் அளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் தொடர்பான கணிப்பை தெரிந்து கொள்ளலாம்.

உத்தேசமான கணிப்பு தான் என்றாலும் எதிர்காலம் பற்றி சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆர்டர் கியுலியன் என்பவர் இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றையும் இவர் எழுதியிருக்கிறார்.

இணையதள முகவரி: http://www.willrobotbemyboss.com/

 

 

செயலி புதிது; ஒளிப்படங்களை சீராக்க உதவும் செயலி

ஒளிப்படங்களை எடுக்க உதவும் செயலிகளைப்போலவே, ஒளிப்படங்களை திருத்தி மேம்படுத்த உதவும் செயலிகளும் அவசியம். இந்த வகையில், சிறந்த செயலிகளில் ஒன்றாக ஸ்னேன்சீட் செயலி தொழில்நுட்ப வலைத்தளங்களால் வர்ணிக்கப்படுகிறது.

ஒளிப்படங்களை சீராக்க இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. 29 வகையான டூல்கள் மற்றும் பில்டர்கள் இருக்கின்றன. ஒளிப்படங்களை கிராப் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளலாம். 90 கோணத்தில் மாற்றி அமைக்கலாம்.

தேவையில்லாத பகுதிகள் அல்லது இடையூறுகளையும் எளிதாக நீக்கலாம். மேலும் பலவித மாற்றங்களை செய்யும் வசதி இருக்கிறது. முக்கியமாக பழைய மாற்றங்களை திரும்பி பார்த்து மீட்கும் வசதியும் இருக்கிறது. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு தவிர ஐபோனிலும் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://support.google.com/snapseed#topic=6155507

 

 

 

டிவிட்டரில் அறிமுகமாகும் விஞ்ஞானிகள்!

actuallivingscientists.0முதலில் சின்னதாக ஒரு சவால்- உலகின் சிறந்த வாழும் விஞ்ஞானிகளில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? நன்றாக யோசித்துப்பார்த்தும், ஒருவர் பெயர் கூட உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை எனில் உங்களை நீங்களே நொந்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், உலகில் பெரும்பாலானோர் இப்படி சமகால விஞ்ஞானிகளை அறியாதவர்களாக தான் இருக்கின்றனர். அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 70 சதவீதம் பேரால் வாழும் விஞ்ஞானி ஒருவரை நினைவுபடுத்திக்கூற முடியவில்லை என தெரிய வந்துள்ளது. இது கொஞ்சம் வருத்தம் தரும் விஷயம் தான்.

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்திருக்கும் காலத்தில், அறிவியலுக்காக என்றே தங்களை அரபணித்துக்கொண்டுள்ள சமகால விஞ்ஞானிகள் குறித்து நாம் அதிகம் அறியாமல் இருப்பது கவலை அளிப்பது தான். பாப் நட்சத்திரங்களையும் திரையுலக பிரமுகர்களையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் நாம், சமகால விஞ்ஞானிகள் குறித்து அதிக விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஏன்? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகள், அதிக அளவு தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில்லை என நினைத்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். உண்மையில், விஞ்ஞானிகள் பலவிதங்களில் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றனர். மற்ற பிரபலங்கள் போல அவர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வளவு ஏன் டிவிட்டர் விஞ்ஞானிகள் என்று சொல்லகூடிய அளவுக்கு பல விஞ்ஞானிகள் டிவிட்டர் மூலம் தங்கள் ஆய்வுகள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அன்மையில் இந்த விஞ்ஞானிகள் இன்னும் ஒரு படி இறங்கு வந்து, தங்களை தாங்களே டிவிட்டரில் அறிமுகம் செய்து கொண்டு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றிருக்கின்றனர். டிவிட்டரில் கவனத்தை ஈர்க்க சிறந்த அ வழியாக கருதப்படும், ஹாஷ்டேக்கை இதற்காக பயன்படுத்திக்கொண்டுள்ளனர். உண்மையில் வாழும் விஞ்ஞானிகள் என பொருள்படும் வகையில் உருவாக்கப்பட்ட ’# ஆக்சுவல் லிவிங் சயிண்டிஸ்ட்’  (#actuallivingscientist) என்பது தான் அந்த ஹாஷ்டேக்!

டிவிட்டரில் செயல்பட்டு வரும் விஞ்ஞானிகள் பலரும், இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவை வெளியிட்டு தங்களை அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

அமெரிக்கா விஞ்ஞானியான டேவிட் ஸ்டீன் தான் முதலில் இதை துவக்கி வைத்தார். வனவிலங்கு பல்லுயிரியல் விஞ்ஞானியான ஸ்டீன் தனது டிவிட்டர் பக்கத்தில் (@AlongsideWild) , பெரும்பாலான அமெரிக்கர்களால் வாழும் விஞ்ஞானிகள் பெயர் சொல்ல முடியவில்லை,( இது உண்மை தான்), எனவே அவர்கள் நாம் செய்வதன் முழு அருமையை உணராமல் இருப்பதில் வியப்பில்லை எனக்கூறி, ’நான் தான் டேவ்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஸ்டீன் டிவிட்டர் பக்கம் தவிர தனி வலைப்பதிவு மூலமும் தனது ஆய்வு பணிகள் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்: https://davidasteen.com/

ஸ்டீனின் இந்த குறும்பதிவை பார்த்த சக விஞ்ஞானி மேர் ராப்யர் என்பவர், அவருக்கு பதில் அளிக்கும் வகையில் இரு குறும்பதிவை வெளியிட்டார். சரி தான் டேவி, விஞ்ஞானிகள், ஒரு ஒளிப்படத்துடன் தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான சரியான சந்தர்ப்பமாக இது இருக்கும் எனும் வகையில் அவரது குறும்பதிவு அமைந்திருந்தது. இந்த குறும்பதிவுடன் ’# ஆக்சுவல் லிவிங் சயிண்டிஸ்ட்’ எனும் ஹாஷ்டேகையும் இடம்பெறச்செய்திருந்தார்.

விஞ்ஞானிகள், மக்கள் முன் நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்வோமே என்பது போல அந்த குறும்பதிவு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு டிவிட்டரில் செயல்பட்டு வரும் விஞ்ஞானிகள், தங்கள் தாங்களே அறிமுகம் செய்து கொள்ளத்துவங்கினர். மறக்காமல் இந்த ஹாஷ்டேகையும் சேர்த்துக்கொண்டனர். இந்த ஹாஷ்டேக் உயிர்ப்புடன் இருப்பதும், அதன் மூலம் அறிமுகமாகும் விஞ்ஞானிகளின் தொடர் வரிசையும் வியக்க வைப்பதாக இருக்கிறது.

ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இந்த குறும்பதிவு அலையால் உற்சாகம் அடைந்து, இவற்றை தங்கள் பக்கங்களில் மறு குறும்பதிவிட்டும் வருகின்றனர். பெண் விஞ்ஞானிகள் , வுமன் இன் சயின்ஸ், டிரெஸ் லைக் ஏ வுமன் போன்ற துணை ஹாஷ்டேகுகளையும் சேர்த்து பகிர்ந்து கொள்கின்றனர்.

மாதிரிக்கு சில குறும்பதிவுகளை காணலாம்:

·         நான். டிஎன் லீ. நகர்புற காரணிகளுக்கு மத்தியில் சிறிய பாலூட்டிகளின் பழக்கங்கள் மற்றும் வரலாற்றை ஆய்வு செய்கிறேன்:  @DNLee5

·         நான் ஜேன் ஜேக். மனிதர்கள் அதிகம் உள்ள சூழலில் அழியும் நிலையில் உள்ள கழுகுகள் எப்படி வாழ்கின்றன என ஆய்வு செய்கிறேன்; @janetngbio

·         நான் ரச்சேல். தேனீக்கள் தொடர்பாக ஆய்வு செய்கிறேன்… @RachaelEBee

·         நான் மெசிடஸ், இனப்பெருக்க அமைப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறேன்: @DrCedes

இப்படி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள், வாழும் விஞ்ஞானிகள் ஹாஷ்டேகை அடையாளப்படுத்தி தாங்கள் செய்து கொண்டிருக்கும் பணி தொடர்பான தகவல்களை குறும்பதிவுகளாக வெளியிட்டுள்ளனர். இந்த ஹாஷ்டேகின் கீழ், வந்து கைகுலுக்கும் விஞ்ஞானிகள் மற்றும் அவர்கள் ஆய்வின் பரப்பையும் பார்த்தால் வியப்பாகவே இருக்கிறது. அவர்கள் ஆய்வு சூழல் மாறுபட்டிருப்பதை ஒளிப்படங்கள் அழகாக உணர்த்துகின்றன.

இந்த விஞ்ஞானிகளின் குறும்பதிவுகளை படித்துப்பார்த்தால் அவர்கள் ஈடுபட்டுள்ள ஆய்வுகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. உங்களுக்கும் அறிவியலில் ஆர்வம் இருந்தால் இந்த ஹாஷ்டேகை பற்றிக்கொண்டு சுவாரஸ்யமான பல விஞ்ஞானிகளை டிவிட்டரில் பின் தொடரலாம். சமூக ஊடக யுகத்தில் மக்களுடன் ஆய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும் என விஞ்ஞானிகள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நாம் தான் பதிலுக்கு அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். அதாவது அவர்களை டிவிட்டர் பக்கங்களை பின் தொடர்ந்து ஆய்வுப்பணிகளை அறிந்து கொள்ள வேண்டாம். சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு உரையாடினால் இன்னும் கூட சந்தோஷப்படுவார்கள்.

குறிப்பாக வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால் இந்த டிவிட்டர் பக்கங்களையும் படிக்கச்சொல்லி அறிமுகம் செய்யலாம்.  அறிவியல் மீது ஆர்வத்தை வளர்க்க இது நிச்சயம் உதவும்.

டிவிட்டரில் விஞ்ஞானிகளை பின் தொடர்வதில் ஆர்வம் உள்ளவர்களின் வசதிக்காக சயின்ஸ் மேகஜின் , டிவிட்டர் நட்சத்திரங்களாக விளங்கும் விஞ்ஞானிகள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது: http://www.sciencemag.org/news/2014/09/top-50-science-stars-twitter

 

 

 

CHPwgS4UgAAXevE

டிவிட்டரில் பெண் விஞ்ஞானிகளின் பளிச் பதிலடி

ஆய்வுக்கூடத்தில் பெண்கள் கவனத்தை சிதற வைப்பார்கள் எனும் கருத்தை பெண் விஞ்ஞானிகள் எப்படி பொறுத்துக்கொள்வார்கள். அதிலும் நோபல் பரிசுப்பெற்ற விஞ்ஞானி ஒருவர் இப்படி ஒரு அவதூறான கருத்தை தெரிவித்த போது எப்படி பொறுத்துக்கொள்வார்கள்? அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள பெண் விஞ்ஞானிகள் பொங்கி எழுந்து இந்த கருத்துக்கு டிவிட்டரில் அழகாக ஆனால் அழுத்தமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற மேதையான டிம் ஹண்ட் அன்மையில் அறிவியல் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய போது பெண் விஞ்ஞானிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். ஆய்வுக்கூடத்தில் பெண்கள் இருந்தால் மூன்று விஷயங்கள் தான் நடக்கும், அவர்களிடம் நீங்கள் காதல் கொள்வீர்கள், அவர்கள் உங்கள் மீது காதல் கொள்வார்கள், அதன் பிறகு அவர்கள் கண்ணை கசக்கும் போது நீங்கள் புலம்ப நேரிடும்” என்பது போல அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

பெண் விஞ்ஞானிகளை அவமதிக்கும் வகையிலான இந்த கருத்து கடும் கண்டனத்திற்கு இலக்கானது. எதிர்ப்பு அலை வலுவான எழுந்ததை அடுத்து விஞ்ஞானி டிம் ஹண்ட் லண்டன் பல்கலைக்கல்லூரி பதவியில் இருந்து விலகினார்.

இதனிடையே டிம் ஹண்டின் அவமதிப்பான கருத்திற்கு உலகம் முழுவதும் உள்ள பெண் விஞ்ஞானிகள் டிவிட்டரில் அழகாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பெண்கள் கவர்ச்சியால் கவனத்தை சிதற வைக்கின்றனர் என டிம் ஹண்ட் கூறிய கருத்தை விமர்சித்து மறுக்கும் வகையில் #DistractinglySexy எனும் ஹாஷ்டேகுடன் டிவிட்டரில் தங்கள் பணியிடத்து புகைப்படங்களை பெண் விஞ்ஞானிகள் டிவிட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.

ஆய்வுக்கூடத்தில் பணியாற்றும் முழு ஆடையுடன் காட்சி தரும் இந்த புகைப்படங்கள் கவர்ச்சி வாதத்தை தவிடுபொடியாக்குகின்றன என்றால் அதனுடன் பகிரப்படும் கருத்துக்கள் , ஹண்ட் போன்றவர்களின் ஆணாதிக்க கருத்துக்களை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளன.
உதாரணத்திற்கு டேனியேலா ஸ்பிட்சர் எனும் பெண் விஞ்ஞானி, தலை முதல் கால் அரை மூடிய ஆய்வுக்கூட ஆடையுடன் , இருபாலர் பணிபுரியும் ஆய்வுக்கூடத்தில் பணி புரிவது சிக்கலாக இருக்கிறது, ஏனெனில் நான் ஆண் விஞ்ஞானி கவனத்தை சிதற வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஏமி எனும் விஞ்ஞானி , நோபல் மேதை மேடம் கியூரியின் புகைப்படத்தை வெளியிட்டு , கியூரி கண்ணீர் சிந்துவதை ஒதுக்கி வைத்துவிட்டு ரேடியம் மற்றும் போலோனியத்தை கண்டுபிடித்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பெண் விஞ்ஞானிகளின் அர்பணிப்பை பறைசாற்றும் வகையில் பத்தாயிரத்துகும் மேற்பட்ட குறும்பதிவுகள் டிவிட்டரில் வெளியாகி இந்த ஹாஷ்டேக் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண் விஞ்ஞானிகளின் பதிலடியை காண: https://twitter.com/hashtag/distractinglysexy?src=rela

——–

ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்கும் ஹாஷ்டேக்

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது.
செம்மர கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆவேசத்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டு வருகிறது.

கடத்தல்காரர்கள் தப்பிவிட அப்பாவி தமிழர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிவிட்டரிலும் தமிழர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து குரல் கொடுக்கத்துவங்கியுள்ளனர். தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்கும் வகையில் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இத்தகைய எதிர்ப்பு குறும்பதிவுகளை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேகும் பிரபலமாகியுள்ளது.

பலரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
@NanTamizachi என்பவர் ’20 தமிழர் கொலைசெய்யப்பட்டதை அறிந்தேன் கடத்தல்காரராயினும் விசாரணை இன்றி வேட்டையாடியமை தவறு கண்டிக்கப்படவேண்டியதே
#20தமிழர்கொலையைகண்டிப்போம்’ எனும் குறும்பதிவை வெளியிட்டார்.
தொடர்ந்து பலரும் இந்த இந்த ஹாஷ்டேகை பயன்படுத்த துவங்கினர்.

@eraam17 ( வாழ்க தமிழ்) எனும் டிவிட்டர் பயனாளியும், @Dhuvans (சிலிக்கான் சிற்பி) உள்ளிட்டோர் இதை வழிமொழிவது போல இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஹாஷ்டேகை பகிர்ந்து கொண்வர்கள் இதை டிரெண்டிங் ஆக்கவும் கோரிக்கை வைக்க மேலும் பலரும் இதில் இணைந்தனர். இதனால் #20தமிழர்கொலையைகண்டிப்போம்’ டிவிட்டரில் பிரபலமாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஹாஷ்டேகுடன் வெளியான சில குறும்பதிவுகள் வருமாறு:

* @kalvankallan; மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்?

* @bhuviii_; “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்றவன் இன்று உயிரோடு இருந்தால் வெக்கி தலைகுனிவான்!

* @CrazeTalk; தமிழன்டா என்று சொன்ன காலம் போய் .! தமிழன் தானடா என சொல்லும் காலம் வந்துவிட்டது

* @MSoundraa; அந்திரா போலீசுக்கு புரியிற மாதிரி ஒரு டேக்க ட்ரென்டு பண்ணுங்கைய்யா பிரபலங்களே

* @govikannan; மரம் வெட்டியர்களை சுட்டாச்சு, மரம் வெட்டச் சொன்னவர்களுக்கு வெண்சாமரம்

* @apdipodra; நாங்க அவங்க மரம் வெட்டுனது சரின்னு சொல்ல வரல. ஆனா ஆந்திரா போலீஸ் பண்ணது அதை விட பெரிய தப்புன்னுதான் சொல்றோம்.

* @itsurjoe: கண்டனத்திற்காவது தமிழன் ஒன்று சேரட்டும்

* @Dinakar89; அவர்கள் குடும்பத்திற்கு
நிதி வழங்கினால் மட்டும் போதாது !!
நீதியும் வழங்குங்கள்!

• @psvelu1979; மொழிவேறுபாடுகள் எல்லாம் மனிதர்களுக்குத்தானே அன்றி மனித உயிர்களுக்கு இல்லை.
• @Im_AriGM; 20 தொழிலாளிகள் செய்தது தவறுதான் அவர்களை நீதியின் வாசலில் நிறுத்துவதை விடுத்து தண்டனை கொடுக்க நீங்கள் யார்?

தொடர்ந்து இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகள் வெளியாகி வருகின்றன. குறும்பதிவுகளில் ஆவேசம் வெளிப்படுவதுதுடன், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை கண்டிக்கும் குறும்பதிவுகளையும் சிலர் வெளியிட்டுள்ளனர்.சிலர் இந்த ஹாஷேடேகை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து புரிய வைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஒரு சிலர் இப்படி ஹாஷ்டேக் மூலமாவது போராடுவோம் என்று கூறியுள்ளனர். சில குறும்பதிவுகள் எல்லை மீறுவதாக இருந்தாலும் இந்த பிரச்சனையை தெலுங்கு மக்களுக்கு எதிரானதாக பார்க்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹாஹ்டேக் மூலமான போராட்டம் என்பது வீட்டிற்குள்ளேயே இருந்து போராடுவதற்கு சமம் என்று கூறப்பட்டாலும் சமூக வலைப்பின்னல் யுகத்தில் இது கவனத்தை ஈர்ப்பதற்கான முக்கிய ஆயுதமாகவும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழியாகவும் அமைந்திருக்கிறது. இதன் அடையாளமாக கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்காக டிவிட்டரில் குரல் ஒலிக்கிறது.

தமிழர் கொலைகளை கண்டிக்கும் குறும்பதிவுகளை பின் தொடர் ஹாஷ்டேக்: #20தமிழர்கொலையைகண்டிப்போம்


நன்றி; விகடன்.காமில் எழுதியது.

டிவிட்டரில் பறக்கும் தமிழ் கொடி #தமிழ்வாழ்க !

ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹாஷ்டேக் செய்க என உற்சாகமாக சொல்லும் அளவுக்கு குறுபதிவு சேவையான டிவிட்டரில் #தமிழ்வாழ்க எனும் ஷாஷ்டேக் முன்னிலை பெற்றுள்ளது. தமிழில் முன்னிலை பெற்ற முதல் ஹாஷ்டேக் எனும் பெருமித்ததுடன் இந்த அடையாளம் மூலம் கீச்சர்கள் தமிழ் குறித்த குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றானர்.

140 எழுத்து வரம்பு கொண்ட குறும்பதிவுகளாக வெளிப்படும் டிவிட்டர் சமூக வலைப்பின்னல் சேவைகளில் பிரபலமானவ ஒன்றாக இருக்கிறது. டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளில் உள்ள பல்வேறு அம்சங்களில் ஹாஷ்டேக் அதன் ஆதார சிறப்பம்சமாக கருதப்படுகிறது. # எனும் குறியுடன் குறிப்பிட்ட பதமே ஹாஷ்டேக் என சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை அடையாளம் காண இந்த ஹாஷ்டேக் பயன்படுகிறது. பல நேரங்களில் ஒரு அலையென் குறும்பதிவுகள் வெளியாகி குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்த அல்லது கருத்தை உணர்த்த ஹாஷ்டேக் கைகொடுக்கிறது.

டிவிட்டர் சேவையின் முக்கிய ஆயுதமாக ஹாஷ்டேக் அமைந்துள்ளது.

ஆனால் இதுவரை ஆங்கிலத்திலேயே ஹாஷ்டேக் செல்லுபடியாக வந்தது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஹாஷ்டே உருவாக்கி பகிரப்பட்டாபும் அதிகார்ப்உர்வமாக டிவிட்டர் ஏற்று தனது டைம்லைனில் பட்டியலிடும் அங்கீகாரம் ஆங்கத்திற்கு மட்டுமே இருந்தது இதுவரை. ஆனால் இப்போது இந்த நிலை மாறியிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹாஷ்டேக் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டருக்கு வளர்ச்சி வரைபடத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சமூக ஊடகங்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் டிவிட்டர் இந்தி , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹாஷ்டேக் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதனை கொண்டு இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்ற பிறகு ஜெய்ஹிந்த் எனும் ஹாஷ்டேக் இந்தி மொழியில் முன்னிலை பெற்றது.

இப்போது #தமிழ்வாழ்க எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் முன்னிலை பெற்றுள்ளது.
எற்கனவே தமிழில் குறும்பதிவு செய்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் பற்றும் நேசமும் கொண்டவர்கள் தங்கள் குறும்பதிவுகளால் டிவிட்டரில் தமிழ் கொடியை உயர பறக்க விட்டுள்ளனர். #தமிழ்வாழ்க எனும் ஹாஷ்டேகுடன் தொடர்ந்து குறும்பதிவுகள் அலையென திரள்கின்றன.

இந்த குறும்பதிவுகள் தமிழ் பெருமையையும், தமிழ் மீதான பற்றையும் எண்ணற்ற விதங்களில் வெளிப்படுத்துகின்றன.
தமிச் கொடி பறக்கும் சில குறும்பதிவுகள் :

* நம் குழந்தைகளுக்கு தமிழை எப்படியாவது பிறமொழி கலப்பின்றி பேச எழுத சொல்லித்தந்துட்டா அதே நம் மொழிக்கு நாம் செய்யும் தொண்டு #தமிழ்வாழ்க; @mpgiri

@nkprabu தமிழ் உலகின் பழமையான வாழும் மொழி என்று குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ் மொழி தொடர்பான வரைபட சித்திரத்தையும் பகிர்ந்துள்ளார். : http://favpins.com/infographic-on-tamil-language/

* @MissLoochu (அனாமிகா) மொழியறியா ஊரில் “நீங்க தமிழா” என்று கேட்க ஓர் ஜீவன் கிடைக்கும் நேரம் தமிழ் இனிது இனிது #தமிழ்வாழ்க, என குறிப்பிட்டுள்ளார்.

* @Sricalifornia தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆச்சாரிக்கு மாகாத்மா காந்தி எழுதிய தமிழ் கடிதம் எனும் தகவலுடன் அந்த கடித்ததை பகிர்ந்துள்ளார்.

* @priya1subramani தமிழ்ல எழுதறவங்க ஸ்கூல் பசங்க தான் .ட்விட்டரில் ஸ்கூல் பசங்க மாதிரி எங்களையும் எழுத வைத்து மகிழ்வித்த ட்விட்டர் வாழ்க #தமிழ்வாழ்க, என மகிழ்ந்துள்ளார்.

* @karunaiimalar தமிழில் பேசுபவனை சாதாரணமாகவும் ஆங்கிலத்தில் பேசுபவனை மரியாதையாகவும் பார்ப்பதை நிறுத்திவிட்டு பெருமையுடன் சொல்வோம் #தமிழ்வாழ்க என்று சொல்வோம் என கூறியுள்ளார்.

* @JAnbazhagan கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் இருந்த மூத்த மொழி தமிழ் மொழி, அத் தமிழ் செம் மொழியானது .தமிழ் வாழ்க ! செம்மொழி வாழ்க ! #தமிழ்வாழ்க என குறிப்பிட்டுள்ளார்.

* @sindhutalks விளக்கம் தேவையில்லை #தமிழ்வாழ்க என உற்சாகம் தெரிவித்துள்ளார்.

* @madhankarky Snapshots of #குறள், first #Tamil app for #AppleWatch Developed by @KaReFo என குறிப்பிட்டுள்ளார்.

* @Premgiamaren ட்விட்டரில் இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம் என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த போக்கு குறித்து மகிச்சியை பகிர்ந்துள்ளார்.

பலர், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலையம் உள்ளீட்ட தமிழர்களின் சாதனையை சுட்டிக்காட்டி தமிழ்வாழ்க் என பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மீதான பற்றையும் நேசத்தையும் டிவிட்டட்ரில் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் அலையில் திளைக்க: #தமிழ்வாழ்க

-=———-

விகடன் .காமில் எழுதியது. நன்றி விகடன்