Tag Archives: software

நீளமான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவும் இணையதளம்.


தமிழில் இது போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது சம்மரைசர் இணையதளம்.இந்த தளம் நீள‌மான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவுகிறது.

அதாவது நீளமான கட்டுரைகளை ஒரு சில வரிகளில் சுருக்கி தந்து விடுகிறது.அந்த சில வரிகளை படித்தால் போதும் கட்டுரையின் சாரம்சத்தை புரிந்து கொண்டு விடலாம்.

நீளமான கட்டுரையை படிக்க நேரமில்லாதவர்களுக்கான சேவை என்ற போதிலும் பத்து வரிக்கு மேல் எதையும் படிக்க பொருமை இல்லாதவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த இணையதளம் செயல்படும் விதமும் வேகமும் உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.எந்த கட்டுரையின் சுருக்கம் தேவையோ அதனை இந்த தளத்தில் சமர்பித்து சுருக்கவும் என கேட்டுக்கொண்டால் அடுத்த சில நொடிகளில் அதன் சாரம்சத்தை முன் வைக்கிறது.

கட்டுரையின் மூன்று வகையான சுருக்கத்தை கேரும் வசதி இருப்பது கூடுதல் சிற‌ப்பு.டிவிட்டர் பிரியர்கள் 140 எழுத்துக்களுக்குள் சுருக்கத்தை பெற்று கொள்ளலாம்.அதே போல 250 எழுத்துக்கள் கொண்ட சுருக்கத்தையும் 500 எழுத்துக்கள் கொண்ட சுருக்கத்தையும் பெறலாம்..

மாணவர்கள்,ஆய்வாளர்கள்,பேராசிரியர்கள் ,வாசிப்பு சோம்பேரிகள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

நீளமான கட்டுரையை அப்படியே சுருக்கி படிக்க முடிவதை எளிதாக நிறைவேற்றி தந்தாலும் இந்த சேவையின் பின்னே உள்ள விஷயம் எளிதானதல்ல என்றே தோன்றுகிறது.

பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலையில் உள்ள மொழியியல் ,ஐடி மற்றும் சாப்ட்வேர் துறையை சேர்ந்த நிபுணர்களின் 20 ஆண்டு கால கூட்டு முயற்சியின் பயனாக இதனை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உழைப்பின் பயனாக உருவாக்கப்பட்ட 8 கோடிக்கும் அதிகமான நிரல்களை (கோட்)கொண்டு இந்த அற்புதம் சாத்தியமாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே இது அற்புதமான சேவை தான்.இயந்திர மொழிபெயர்ப்பில் உள்ள கஷ்டங்களை அறிந்தவர்களுக்கு இதன் மகத்துவம் புரியும்.ஒரு சொல்லுக்கான பொருள் அதை பயன்படுத்தப்பும் விதம்,இடம் ஆகியவற்றுக்கேற்ப மாறுபடும்.மனித மனம் இதனை எளிதாக கண்டு கொள்ளும்.ஆனால் சாப்ட்வேர் திணறிவிடும்.எனவே தான் இயந்திர மொழிபெயர்ப்பு பெரும்பாலும் துல்லியம் இல்லாமலும் பல நேரங்களில் சிரிப்புக்கு இடமாகவும் அமைந்து விடுகிறது.

வாசிப்பிலும் இதே நிலை தான்.ஒரு நீண்ட கட்டுரையை படிக்கும் மனிதர்கள் எளிதாக அதன் சாரம்சத்தை நாலு வரியில் சொல்லி விடுவார்கள்.ஆனால் ஒரு சாப்ட்வேர் இதனை செய்ய முற்படும் போது நிறைய சிக்கல்கள் உள்ளன.

இந்த சிக்கலுக்கான உதாரணங்களை இந்த தளமே தனது அறிமுக பகுதியில் குறிப்பிட்டுள்ளது.

காலம் ஒரு அம்பை போல பறந்தது என குறிப்பிடும் போது இது குறிக்கும் வேகத்தை சட்டென புரிந்து கொள்வது கம்ப்யூட்டருக்கு சாத்தியமா தெரியவில்லை.இது போன்ற மொழியியல் நுட்பங்களை கருத்தில் கொண்டு இவற்றை எல்லாம் உணரக்கூடிய நிரலை எழுதியுள்ள நிபுணர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக தான் இருக்க வேண்டும்.

இந்த சாப்ட்வேர் பின்னே இருக்கும் கனெக்சர் நிறுவனம் தான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிற‌து.நோக்கியா,மோட்டரோலா போன்ற நிறுவனங்கள் பயன்ப‌டுத்தும் இந்த சாப்ட்வேரை காட்சி படுத்துவதற்கான தளமாக இது உருவாக்கப்பட்டிருக்கலாம்.

எப்படி இருந்தாலும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய சேவை தான்.

இந்த தளத்திலேயே இன்னும் இரண்டு அழகான சேவைகளுக்கான இணைப்பு இருக்கிறது.

ஒன்று குட் நியூஸ் பேட் நியூஸ்.இந்த பகுதியில் ஏதாவது நிறுவனத்தின் பெயரை டைப் செய்தால் அந்நிறுவனம் தொடர்பான செய்திகளை நல்ல செய்தி,எதிர்மரையான செய்தி என இரண்டு வகையாக பிரித்து காட்டுகிற‌து.

இதே போல பிராண்ட்பைட் பகுதியில் இரண்டு பிராண்டுகளை சமர்பித்தால் அவற்றுகான செய்திகளின் ஒப்பீட்டை வரைபடமாக காட்டுகிற‌து.

இணையதள முகவரி;http://www.summarizer.info/

நீங்களும் பரிசளிக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் தானா தன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கத்தயார் என்று அறிவித்து பாட்டெழுத சொல்ல முடியும்! நீங்களும் கூட விரும்பினால் உங்கள் சந்தேகம் தீர அல்லது உங்களுக்கு வேண்டிய தகவலை பெற பரிசளிப்பதாக சொல்லி மற்றவர்களை அதற்கான தேடலில் ஈடுபட கோரலாம்.

கிரவுன்டி இணையதளம் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.தகவல் தருபவரை ஊக்குவிக்க பரிசளிப்பதை குறிக்கும் ஆங்கில சொல்லான பவுன்டியின் திருத்தமாக கிரவுன்டி.

உங்களுக்கு என்ன தகவல் தேவை என்றாலும் சரி,அதனை கிரவுன்டி மூலம் கோரலாம்.இதற்கெனவே ஒரு விண்ணப்ப படிவம் இருக்கிறது.அதில் உங்கள் தேவை என்ன என்பதை குறிப்பிட்டு விட்டு அதற்கு நீங்கள் தரத்தயாராக இருக்கும் பரிசுத்தொகையை குறிப்பிட வேண்டும்.

அதன் பிறகு உங்கள் தேவையை விளக்கி கூறி விட்டு இமெயில் முகவரியையும் சமர்பித்தால் இந்த கோரிக்கைக்கான பிரத்யேக இணைய முகவரி ஒன்றை கிரவுன்டி உருவாக்கித்தருகிறது.இந்த இணைய முகவரியை உங்கள் நண்பர்களோடு பேஸ்புக்,டிவிட்டர்,ஜீபிளஸ் அல்லது இமெயில் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

நண்பர்கள் அந்த இணைப்பை கிளிக் செய்தால் கிரவுன்டி பக்கத்திற்கு வந்து சேருவார்கள்.இப்போது அவர்கள் இரண்டு விதமாக உதவலாம்.ஒன்று உங்கள் கோரிக்கைக்கான பதில் அல்லது சேவை அவர்களுக்கு தெரிந்திருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம்.இல்லை என்றால் அந்த கோரிக்கையை தங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

நண்பர்களிடம் ஏதாவது தகவல் கேட்கும் போது அவர்களுக்கு பதில் தெரியாவிட்டால் தங்களது நண்பர்களை கேட்டு சொல்லக்கூடும் அல்லவா அதே போலவே இந்த தளத்திலும் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பதிலை சொல்லலாம்,அல்லது நண்பர்களிடம் பரிந்துரைக்கலாம்.

அவர்களே கோரிக்கையை பூர்த்தி செய்தால் முழு பரிசுத்தொகையும் அவர்களுக்கே கிடைத்து விடும் .மாறாக அவர்கள் பரிந்துரைத்த நண்பர்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் பாதி தொகை நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டு மீதி தொகை கைகாட்டியவருக்கு கொடுக்கப்படும்.இரண்டு மூன்று பேர் கைகாட்டியிருந்தால் பரிசுத்தொகை அடுத்த அடுத்த கட்டங்களில் பாதி பாதியாக பிரித்து அளிக்கப்படும்.எஞ்சிய தொகை தளத்திற்கு சொந்தமாகும்.

இணையதள வடிவமைப்பாளர் தேவை என்பதில் துவங்கி குடியிருக்க வீடு தேவை என்பது வரை எந்த விதமான தேவைகளுக்கும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஏதாவது சந்தேகம் என்றால் பதில் அறிய இணையவாசிகளிடம் கேள்வி கேட்க உதவும் கேள்வி பதில் தளங்கள் நிறையவே இருக்கின்றன.அதே போல பேஸ்புக் வழியே நண்பர்களை கேட்கும் பழக்கமும் பிரபலமாக இருக்கிறது.

கிரவுன்டி இந்த இரணையும் இணைத்து சுவாரஸ்யமான சேவையை வழங்குகிறது.ஒருவரிடம் கேட்பதை பலரிடம் கேட்பது எப்போதுமே நல்ல பலனைத்தரும் தானே.அந்த வகையில் நண்பர்கள் அவர்களின் நண்பர்கள் என பரந்த வலைப்பின்னலில் தேட இந்த தளம் உதவுகிறது.அதற்கு பரிசளிக்க வாய்ப்பு தருவது இன்னும் ஊக்கம் தரக்கூடியது.

இணையதள முகவரி;http://www.crounty.com/

சாப்ட்வேர் நீதிபதிகளே வாருங்கள்!

புதிய சாப்ட்வேர்களை அவற்றின் குறை நிறையோடு அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பம் உங்களுக்கு இருந்தால் சாப்ட்வேர்ஜட்ஜ் இணையதளம் அதற்கு மிகவும் பொருத்தமானது.அதோடு புதிய சாப்ட்வேரின் பயன்பாடு குறித்து ஆணித்தரமான விமர்சனத்தை முன் வைக்கும் ஆர்வமும் இருந்தால் இந்த தளம் இன்னும் பொருத்தமானது மட்டும் அல்ல,அதன் மூலம் வருவாய் ஈட்டி தரக்கூடியது.

காரணம் அடிப்படையில் இந்த இணையதளம் புதிய சாப்ட்வேர் தொடர்பான விமர்சனங்களை வரவேற்று அதற்கு பரிசாக வருவாயும் அளிப்பது தான்.

புதிய சாப்ட்வேர்களை பட்டியலிடும் இந்த தளம் அவை குறித்த விமர்சன‌ங்களையும் வரவேற்கிறது.யார் வேண்டுமானாலும் சாப்ட்வேர் குறித்த விமர்சனத்தை சமர்பிக்கலாம்.ஒரே நிபந்தனை விமர்சன்ம் செய்பவர் அந்த சாப்ட்வேரை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது மட்டுமே.

விமர்சனம் என்றாவுடன் ஆஹா சூப்ப்ர் சாப்ட்வேர் என்று புகழ் பாடும் நோக்கிலோ அல்லது சுத்த வேஸ்ட் என்று நிராகரிக்கும் நொக்கிலோ இல்லாமால் சாப்ட்வேரின் பயன்பாட்டுத்தன்மை குறித்த அசலான கருத்துக்களாக இருக்க வேண்டும்.அப்படி இல்லாத விமர்சங்களை நிராகரிப்பது மட்டும் அல்ல சுட்டு எழுதும் விமர்சங்களையும் கண்டு பிடித்து டெலிட் செய்து விடுவோம் என்று எச்சரிக்கிறது இந்த தளம்.

அதே போல குறிப்பிட்ட சாப்ட்வேரை தொட்டுக்கூட பார்க்காமல் பொய்யாக விமர்சன்ம் செய்தாலும் பிடிபட்டு விடுவீர்கள் என எச்சரிக்கிறது.எனவே இவ்வாறு எல்லாம் செய்யாமல் உண்மையிலேயே நேர்மையான விமர்சன‌ங்களை எழுதினால் அதற்கு பரிசளிக்கப்படும் என்கிறது இந்த தளம்.

விமர்சங்கள் மூலம் கணிசமான அளவு தொகை சேர்ந்த பிறகு அவை இணைய பரிமாற்றம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.அல்லது அதற்கு முன்பே கூட பரிசு தொகைக்கு நிகரான சாப்ட்வேரை வாங்கி கொள்ளலாம்.

சாப்டேவ‌ரை விமர்சிக்க வாய்ப்பு என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம் தான்.இதன் மூலம் சாப்ட்வேர் புலிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதோடு மற்றவர்களுக்கு புதிய சாப்ட்வேரை அறிமுகம் செய்து கொள்ளும் வழியாகவும் அமைகிறது.புதிய சாப்ட்வேர் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பயனாளிகள் விமர்ன‌சங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் போல சாப்ட்வேர் பற்றி விமர்சனம் செய்யும் நிபுணர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இருக்கின்றனர்.இருப்பினும் பயனாளிகளில் விமர்சனம் இன்னும் கூட துல்லிய‌மாக இருக்க‌லாம்.

அமேசான் இணையதளம் புத்தக விற்பனையை அறிமுகம் செய்த போது வாசக‌ர்கள் புத்தகங்களை விமர்சனம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது.புதிய புத்தகம் வாங்கு அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக்க இது வழி வகுத்ததோடு வாசக விமர்சன‌ங்கள் மூலமே பெஸ்ட் செல்லர் பட்டியல் தாண்டி பல அரிய புத்த‌கங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பாக அமைந்தது.

அந்த வகையில் சாப்ட்வேர் விமர்சனத்திற்கான வாயிலை திறந்து விட்டிருக்கும் இந்த இனையதளம் நல்ல விஷயம் என்றே சொல்ல வேண்டும்.

விமர்சன நோக்கம் இல்லாவிட்டாலும் இந்த தளத்தில் எட்டிப்பார்த்தால் இணைய சந்தையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் சாப்ட்வேரை தெரிந்து கொள்ளலாம்.அதோடு அவற்றில் ஆர்வம் தரும் சாப்ட்வேர் பற்றிய முழு விவரங்களையும் விமர்சங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

இணையதள‌ முகவரி;http://www.softwarejudge.com/

எதிர்காலம் சொன்ன கம்ப்யூட்டர்

யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள்  மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நிகழ்கால போக்கு குறித்த  வேதனை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசைப்பாடுவதாக புரிந்து கொள்ளலாம்.
.
பெரும்பாலும் தகப்பன் (அ) தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர்கள், மகன் (அ) இளைய சகோதரர்களை பார்த்து சொல்லும் வசை இது.

இது வெறுப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சாபமாக கூட இருக்கலாம். ஆனால் இது கனிப்பின் கீழ் வருமா?

எதிர்காலத்தில் ஒருவர் மாடு மேய்க்கப் போவதாக கணித்துச் சொல்ல முடியுமா? கணித்துக் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை மாடு மேய்க்கப் போவதாகச் சொன்னால் அதை இழிவாகத் தான் கருத வேண்டுமா?

ஒருவர் மாடு மேய்க்கப் போகிறார் என்பது சரியான கணிப்பாக ஏன் இருக்க கூடாது?
அதிகார வர்க்கத்தில் ஒரு சில பதவிகள் தண்டனையின் அடையாள மாக தகுதியிறக்கமாக கருதப்படுவது போல மாடு மேய்ப்பது, வேறு வேலைக்கு தகுதி இல்லாததாலேயே நிகழ்வாக நடைமுறை வாழ்க்கையில்  கருதப் படுகிறது.

மாடு மேய்ப்பதை இப்படி கருத வேறு சமூக காரணங்களும் இருக்கின்றன. ஆனால் தொழில் வாய்ப்புகள் பற்றி யோசிக்கும் போது அவற்றில் பெரும்பாலனோரால் விருப்பப்படும் தொழில்களை யாருமே விரும்பி ஏற்காத இந்த தொழில் உணர்த்த உதவுகிறது.

மாடு மேய்ப்பதை விடுங்கள்! யாராவது விரும்பி சிறை அதிகாரியானது உண்டா? நான் கார் மெக்கானிக்காக வருவேன் என நினைத்து திட்டமிட்டு செயல் பட்டவர்கள் எத்தனை பேர்? விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டு குமாஸ்தாவாக பணியாற்ற நேர்ந்தது விதிவசமா? (அ) விதியின் யதார்த்தமா?

பள்ளி பருவத்திலும், கல்லூரி நாட்களிலும், எல்லோருமே, டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது போல தான் விருப்பம்  கொள்கின்றார்களேத் தவிர, மளிகை கடை நடத்த வேண்டும் என்றோ, கூட்டுறவு சங்க தலைவராக வேண்டும் என்றோ நினைத்த துண்டா?

இப்படி விரும்பப்படும் வேலை களும், தொழில்களும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். ஒரு சிலரின் தேர்வு, வலுவான அடிப்படையைச் சார்ந்ததாக இருக்கும்.பல நேரங்களில், ஒருவித மந்தை உணர்வின் அடிப்படையில், முழு ஈடுபாடு இல்லாமலேயே, டாக்டராக விரும்புகிறேன், விண்வெளி வீரராக விரும்புகிறேன் என சொல்வதுண்டு.

வாழ்க்கையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் இருக்கும் போது, இப்படி ஒரு சில வேலையை மட்டுமே விரும்பி நாடுவது சரியா? விரும்பிய வண்ணம் வேலை என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதிர்ஷ்டம் பலரை பொறுத்தவரை நினைப்பது  ஒன்றாகவும், வாய்ப்பது வேறொன்றாகவுமே அமைந்து விடுகிறது.

ஆக, ஒருவர் வரும் காலத்தில் என்ன வேலை பார்க்கப் போகிறார் என்பதை கணித்துச் சொல்ல முடியுமா?

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில், இத்தகைய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்நாட்டின் எடின்பர்க் பல்கலைக் கழகம் இதற்காக  என்றே “ஜிக்கேல்’ என்னும் பெயரில் ஒரு சாப்ட்வேரை உருவாக்கியது.

மாணவர்கள் எதிர்காலத்தில்  என்னவாக வரக்கூடும் என்பதை, கணித்துச் சொன்ன இந்த சாப்ட்வேர், அந்த காலக்கட்டத்தில் ஏக பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சாப்ட்வேர் தேர்வு செய்து சொன்ன வேலைகள் பலரது கனவுகளை தகர்த்தெறிந்தது.
1980 களில், இந்த  சாப்ட்வேர் அறிமுகமான போது, அதனிடம் விவரங்களை சமர்ப்பிக்க, மாணவர்கள் மத்தியில் அப்படியொரு ஆர்வம் இருந்தது. எதிர்கால  கனவுகளில்  மிதந்தபடி, அது நிறைவேறுமா? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு, மாணவர்கள் இந்த சாப்டவேர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

விளையாட்டில் விருப்பம் உண்டா? வெளிப்புறத்தில்  பணியாற்ற விரும்புவீர்களா? ஆம் எனில், அப்போது  இதமான சூழல் தேவை  (அ) எந்த சூழலும் சம்மதமா? விலங்குகளை பிடிக்குமா? வியர்வை சிந்த உழைக்கத் தயாரா?  குழந்தைகளை கொஞ்சுவீர்களா? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு மாணவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில், அவர்கள் எதிர்காலத்தில் என்ன வேலை பார்ப்பார்கள் என்பதை இந்த சாப்ட்வேர் கணித்துச் சொல்லியது.

சிலரை சாப்ட்வேர் புன்னகைக்க வைத்தது. பலரை வெறுப்பேற்றியது. ஒரு சிலரை திகைப்பில் ஆழ்த்தியது. டாக்டர், இன்ஜினியர் என்று சொன்னது மட்டும் அல்லாமல், சிறை அதிகாரி, பன்றி வளப்பவர், கார் மெக்கானிக் போன்ற வேலைகளையும் சாப்ட்வேர்  சொன்னது. ஜிம் கிளாஸ் என்றும் உளவியல் பேராசிரியர் தான்  இந்த சாப்ட்வேரை உருவாக்கியவர் எடின்பர்க் பல்கலையில் பணியாற்றியவர் இவர்.

சாப்ட்வேரின் தீர்ப்பு எல்லோரையும் திருப்திப்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் கிளாஸ், மனதில் நினைத்துக்கூடப் பார்க்காத வேலைகளை சாப்ட்வேர் சொல்வதை சரியான விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அந்த கட்டத்தில் மாணவர்கள் முன், உள்ள அவர்கள் பரிசீலிக்கத்தக்க மாற்று வாய்ப்புகளை முன் வைத்து, அவர்களுக்கு பொறுத்தமான  வேலைகளுக்கு எல்லையை விரிவு படுத்த உதவும் செயலாக அதனை கருத வேண்டும் என்கிறார் அவர்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் மற்றும் அதன் பாதிப்பு பற்றி  ஒரு டாக்குமென்ட் தயாரித்து வெளியிடப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இன்னும் இந்த சாப்ட்வேர் புழக்கத்தில் இருக்கிறது. “ஒஐஞ்ஞ்இச்டூ’ என்று தளத்தின் மூலமாக அந்த சாப்ட்வேர் பல  இளைஞர்கள்  தங்கள் எதிர்கால பாதையை தேர்வு செய்ய உதவ வருகிறது.

எதிர்காலம் பற்றிய கணிப்பு குறித்த  சுவாரசியமான பல கேள்விகளை குறித்து சாப்ட்வேர் எழுப்புகிறது. இங்கே இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் என்பது வெகுஜன  புத்தகத்திற்கு வராத காலத்தில்  அந்த சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது அதனிடம் கேள்விகளை சமர்ப்பித்தவர்கள் பதிலுக்காக  வாரக் கணக்கில் காத்திருந்தனர். அதன் பிறகு தான் டாட் மேட்ரிசில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட முடிவுகள் வந்து சேர்ந்தன. இப்போதோ ஆன்லைனில் சமர்ப்பித்தவுடன் கிளிக் செய்தால் முடிவை உடனேயே பார்த்து விடலாம்.

கம்ப்யூட்டர் அப்படி வளர்ந்து விட்டது. இதனை 1980களில் எத்னை பேர் சரியாக கனித்திருப்பார்கள்.