உரையாற்றும் நேரத்தை கணக்கிட உதவும் தளம்

speechinminutes.com
சின்னதாக உரை நிகழ்த்துவதாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியில் மேடையேறி பேசுவதாக இருந்தாலும் சரி, தயாரிப்பு மிகவும் முக்கியம். என்ன பேசப்போகிறோம், எப்படி பேசப்போகிறோம் என்பதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் முழு உரையையும் எழுதி வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் உரையை எழுதி வைத்துக்கொள்வதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. உரையின் அளவு, பேசுவதற்கான நேரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். இதை அறிவது எப்படி? நீளமாக தயாரித்து விட்டால், உரிய நேரத்தில் உரையை முடிப்பது கடினம். மாறாக குறைவாக தயாரித்திருந்தால், நேரம் முடிவதற்கு முன் பேச்சு முடிந்துவிடும். எனவே தயாரித்து வைத்திருக்கும் உரை பேச இருக்கும் நேரத்திற்கு சரியாக அமைந்துள்ளதா என கணக்கிட்டு பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

மேடையில் பேசுவது போலவே ஏற்ற இறக்கமாக பேசிப்பார்த்து எவ்வளவு நேரம் ஆகியறது என கடிகாரத்தை வைத்து கணக்கு பார்ப்பது ஒரு வழி. அதைவிட எளிதான வழி ஆன்லைனில் இருக்கிறது. ஸ்பீச் இன் மினிட்ஸ்.காம் இணையதளம், எழுதி வைத்திருக்கும் உரையில் உள்ள வார்த்தைகளை தெரிவித்தால் அதை பேச எவ்வளவு நேரம் ஆகும் என கணக்கிட்டு சொல்கிறது.

சராசரியாக 130 வார்த்தைகளை பேச ஒரு நிமிடம் ஆகலாம் எனும் கணக்கின் அடிப்படையில் இந்த தளம் செயல்படுகிறது. இதில் உள்ள தேடல் கட்டத்தில் உரையின் வார்த்தைகளை சமர்பித்தால் அதற்கான நேரத்தை சொல்கிறது. ஒரு நிமிடத்தில் 130 வார்தைகளை படிக்க முடியும் எனும் கணக்கின் அடிப்படையில் இது அமைகிறது. இதை மெதுவான வாசிப்பு (100 வார்த்தைகள்) என்றோ அல்லது வேகமான வாசிப்பு ( 160 வார்த்தைகள்) என்றோ மாற்றிக்கொள்ளலாம்.

துல்லியமான கணிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் உத்தேசமான இந்த கணிப்பு நிச்சயம் பேச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
உரை நிகழ்த்த என்றில்லை, அலுவலக கூட்டத்தில் பேச, காட்சி விளக்கம் செய்ய தயாராகவும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இணையதள முகவரி:http://www.speechinminutes.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *