Category Archives: இதர

நாடோடி அதிபர்கள்-2

நாடோடி அதிபர்களாக நீங்களும் வாழலாம் என்று சொன்னால், நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இது ஒன்றும் சாத்தியம் ஆக முடியாத அதிசயம் அல்ல. துணிச்சலும், புதிய இடங்களை பார்ப்பதில் பரவசமாகும் ஆர்வம் இருந்தால் நீங்களும் கூட ஊர் ஊராக சென்றபடி அங்கிருந்தே வேலை பார்க்கலாம். அல்லது தொழில் செய்யலாம்.
.
மேலை நாட்டினர் பொதுவாகவே பயண பிரியர்களாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் இப்படி துணிந்து நாடோடி அதிபர்களாகியிருக்கின்றனர். குறிப்பிட்ட காலம் உழைத்து விட்டு சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு மாதக்கணக்கில்  சுற்றுலா செல்லும் பழக்கம் மேலை நாட்டினருக்கு இருக்கிறது.

உலக அனுபவத்துக்கு இது உதவுகிறது என்றாலும், ஒரு சிக்கல் என்னவென்றால் பயணம் முடித்து திரும்பி வரும்போது, கையில் இருந்த காசெல்லாம் கரைந்திருக்கும்.
இதற்கு மாற்றாக சுற்றுலா பயணம் மேற்கொள்ளும்போதே வேலையும் பார்த்துக்கொண்டிருந்தால், கையில் காசு புரண்டு கொண்டே இருக்கும்.

இந்த காரணத்துக்காகவே பலர் தாங்கள் செல்லும் இடத்துக்கு தங்களது வேலையையும் எடுத்துச் சென்று விடுகின்றனர். இன்டெர்நெட் வசதி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பணி செய்வது சாத்தியமாவதால், இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

 

 வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது பழக்கமான ஒரு கருத்தாக்கம்தானே. இன்டெர்நெட் இதனை சுலபமாக்கி தந்திருக்கிறது. அலுவலகம் பக்கமே தலை வைத்துப் படுக்காமல், இமெயில் மூலமே தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்து விடும் நபர்கள் எல்லாம் இருக்கின்றனர்.

இதையே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று வெவ்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கிருந்த படியே வேலை செய்யும் ஆர்வமும், துணிச்சலும் அந்தோனி பேஜ் போன்றோருக்கு இருக்கிறது.

பல நாடுகளில் சுற்றியபடி தன்னுடைய இணைய வடிவமைப்பாளர் வேலையை சிறப்பாக செய்து வரும் அவர், தன்னைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக என்றே ஒரு இணையதளத்தையும் அமைத்திருக்கிறார். ஒர்க்கிங் நோ மேட்ஸ் டாட் காம் என்பது அந்த தளத்தின் முகவரி. அதாவது பணிபுரியும் நாடோடிகள் என்ற பொருள் வரும்.

இந்த தளத்தில் அவர் தனது பயண, பணி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு புதிதாக இத்தகைய வாழ்க்கையை துவங்க இருப்பவர் களுக்கான ஆலோசனைகளையும் அளித்து வருகிறார்.

புதிய நாடுகளுக்கு செல்லும்போது விசா பெறுவது எப்படி? அங்கே தங்குமிடங்கள் எப்படி இருக்கும், உள்ளூர் மக்கள் எவ்வாறு பழகுவார்கள் போன்ற விவரங்களையெல்லாம் அவர் பதிவு செய்து வருகிறார்.

பேஜை போலவே ஊர் சுற்றியபடி சொந்தமாக தொழில் செய்யும் மற்றொரு நபர் கனடாவைச் சேர்ந்த சைமன் லீ பைன்.  வாடிக்கையாளர்கள் தன்னை தொடர்புகொள்ளும் போதெல்லாம் இப்போது  எந்த நாட்டில் இருக்கிறீர்கள், எந்த இடத்தைப் பார்த்தீர்கள் என்று தவறாமல் விசாரிப்பதாக அவர் கூறுகிறார்.

ஊர் சுற்றியபடி இருப்பது அவருக்கு ஒரு கூடுதல் தகுதியாகியிருப்பதை இந்த விசாரிப்பு உணர்த்துகிறது அல்லவா? அது மட்டுமல்லாமல் வெளியூரில் தங்கியிருக்கும்போது, உண்மையில் செலவு குறைந்து கூடுதலாக சேமிக்க முடிகிறது என்கிறார் அவர்.

பேஜே கூட லண்டனில் இருந்ததை விட ஊர் சுற்றி பார்க்கும் இந்த காலத்தில் அதிகம் சம்பாதித்து அதிகம் சேமித்திருப்பதாக தெரிவிக்கிறார். அதோடு, புதிய இடங்களை பார்க்கும் அனுபவம் மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தை எதிர்கொள்ள நேர்வது உங்களது சிந்தனையை செழுமையாக்கி துடிப்போடு செயல்பட வைக்கிறது.

இந்த அனுபவம் எப்போதுமே புத்துணர்ச்சி மிக்கவராக, செல்வ செழிப்பு மிக்கவராக உணரவும் வைக்கிறது என்கிறார் பேஜ். ஆக, நிச்சயம் நீங்களும் துணிந்து நாடோடி அதிபராகலாம். வெளியே இருந்தபடி பணி செய்வதற்கு ஏற்ற துறையை தேர்வு செய்து கொண்டால், போதுமானது.

இன்டெர்நெட் சார்ந்த வேலை என்றால் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்காக தொழில் நுட்ப கில்லாடிகள் மட்டும்தான் இப்படி வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு தெரிந்த வேலையை கூட இன்டெர் துணையோடு நிறைவேற்றிக் கொள்ளும் வழியை கண்டு பிடித்து விடலாம்.

உதாரணத்துக்கு நீங்கள் பங்குச் சந்தை ஆலோசனை வழங்குபவர் என்றால், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பங்குச் சந்தை நடவடிக்கைகளை கவனித்து உங்களது வாடிக்கையாளர்களுக்கு உரிய ஆலோசனையை வழங்க முடியும் தானே.
இப்படி உங்களுக்கு ஏற்ற வழியை நீங்களும் தேடிக்கொள்ளலாம்.

நாடோடி அதிபர்கள்1

‘மாதந்தோறும் 800 டாலர்கள் சம்பாதிக்கிறேன். ஆனால் நாடோடியாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்’ இப்படி கூறும் அந்தோனி பேஜ் குரலில் ஒருவித ஆனந்தம். அவரது முகத்தில் ஒரு எல்லையில்லாத திருப்தி.  லண்டனைச் சேர்ந்த பேஜ், சந்தோஷமாக உலகில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறார் அதனால்தான் தன்னை நாடோடி என்று குறிப்பிடுகி றார். அதேநேரத்தில், கைநிறைய சம்பாதிக்கவும் செய்கிறார்.
.
புதிய புதிய இடங்களை சுற்றிப் பார்த்தபடி, மனதுக்கு பிடித்த வேலையை செய்து கொண்டிருப்ப தால், அவர் பேரானந்தத்தோடு இருக்கிறார். பேஜ் நிச்சயம் புதுமையான மனிதர் தான். அதைவிட அவரது வாழ்க்கை முறை முற்றிலும் புதுமையானது.
பொதுவாக ஊர் சுற்றுவதும், உழைப்பதும் ஒன்றுக்கொன்று எதிரா னது. ஊர் சுற்றுபவர்கள் உழைப்பவர் களாக இருக்க வாய்ப்பு இல்லை. உழைக்கும் நோக்கம் கொண்டவர்கள் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

ஆனால் அந்தோனி பேஜோ, ஊர் சுற்றிபடி உழைத்துக்கொண்டிருக் கிறார் என்பதுதான் விசேஷமானது. அவரை நவீன நாடோடி என்று சொல்லலாம். அல்லது நாடோடி அதிபர் என்றும் சொல்லலாம். காரணம், அவர் சொந்தமாக தொழில் செய்தபடி, அதேநேரத்தில் உலக நாடுகளை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
துணிமணிகளுக்கான ஒரு பெட்டி, ஒரு லேப்டாப் இவ்வளவுதான் அவருடைய சொத்து. அதை முதுகில் சுமந்தபடி விரும்பிய நாடுகளுக்கு சுற்றுலா பயணியாக சென்று விடு கிறார். ஓட்டலில் தங்கிக் கொள்கிறார். சுற்றுலா பயணியாக இருப்பதற்கு இந்த வசதி போதுமானதுதான். ஆனால் இப்படி இருந்துகொண்டே சொந்தமாக தொழில் செய்வது எப்படி?
அதற்கு அலுவலகம் வேண்டாமா?, ஊழியர்கள் வேண்டாமா?, முதலீடு தேவையில்லையா?
இதெல்லாம் எதற்கு? இன்டெர்நெட் இணைப்பு இருந்தால் போதாதா? என்றுகேட்கிறார் பேஜ்.

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், ஏதாவது ஒரு இடத்தில் இன்டெர்நெட் இணைப்பை பார்க்க முடிகிறது. ஏழை நாடுகளில் கூட ஒரு இடத்தில் இல்லை என்றால், இன்னொரு இடத்தில் இன்டெர்நெட் மையம் இருக்கிறது.

அங்கிருந்தபடி வாடிக்கையாளர் களை தொடர்புகொண்டால் போயிற்று. இமெயில் யுகத்தில் வேலைக்கான ஆர்டரை பெறுவதற்கோ அல்லது வேலையை முடித்து அனுப்புவதற்கோ தூரம் ஒரு பிரச்சனையா என்ன? எங்கிருந்தாலும் இன்டெர்நெட் மூலமே தொடர்புகொண்டு விடலாமே?

வேலையை முடித்தபிறகு பணம் பெறுவதற்கு கூட “பேபால்’  போன்ற எளிமையான இன்டெர்நெட் பண வசதி முறை இருக்கிறது. அப்படி இருக்க எந்த ஊரில் இருந்தால் என்ன? நமக்கு தெரிந்த வேலையை தாராளமாக செய்ய முடியும்தானே! இந்த நம்பிக்கையோடுதான் பேஜ் லண்டனிலிருந்து லேப்டாப்பை மட்டும் எடுத்துக்கொண்டு உலகை சுற்ற புறப்பட்டு விட்டார். 35வது வயதாகும் பேஜ், கம்ப்யூட்டர் விஷயத்தில் கில்லாடி. லண்டனில் ஹைடெக் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் திடீரென அந்த நிறுவனம் தனது பெரும்பாலான பணிகளை இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் முறையில் மாற்றிவிட்டது. இதனால் பேஜ் உள்ளிட்ட பல ஊழியர்களின் சேவை தேவை யில்லை என்று கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. வேலை போனதால் வெறுத்துப் போன பேஜ் மீண்டும் வேலை தேட மனமின்றி கையிலிருக்கும் தொழிலை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்.

இயல்பாகவே  அவர் சுற்றுலா பிரியர். புதிய இடங்களை பார்த்து மகிழும் விருப்பம் கொண்டவர். எனவே, சொந்தமாக தொழில் செய்வது என முடிவு செய்தபிறகு சொந்த ஊரிலேயே இருக்க வேண்டிய அவசிம்  என்ன? ஊர் ஊராக சுற்றிப்பார்ப்போமே என தீர்மானித்து விட்டார்.

புறப்படுவதற்கு முன்பாக தனக்கு தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு ஊருக்கு போகிறேன். எதுவாக இருந்தாலும் இமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் அங்கிருந்தே முடித்து தருகிறேன் என்று கூறிவிட்டார். கடந்த 9 மாதங்களுக்கு மேலாக அவர் பல நாடுகளில் சுற்றியபடி ஓய்வு நேரத்தில் வேலையும் செய்து கொண்டிருக்கிறார்.

எந்த இடத்தில் இருக்கிறாரோ அதற்கு அருகே உள்ள இன்டெர்நெட் மையம்தான் தன்னுடைய அலுவலகம் என்று அவர் உற்சாகமாக கூறுகிறார். இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதோடு வருவாய் தேடித்தரக்கூடியதாகவும் இருக்கிறது என்று அவர் தெம்பாகவே சொல்கிறார்.

பேஜ் அப்படி என்னவேலை செய்கிறார் என்று வியந்து போக வேண்டிய அவசியம் இல்லை. அவர் இணையதள வடிவமைப்பாளராக இருக்கிறார். இந்த வேலையை எங்கிருந்தும் செய்யலாம் அல்லவா? லண்டனில் தனக்குதெரிந்த வாடிக்கை யாளர்கள் மற்றும் இன்டெர்நெட் மூலம் அறிமுகமான நிறுவனங்களுக்கு இருந்த இடத்தில் இருந்தபடியே அவர்களின் தேவைக்கு ஏற்ப இணையதளங்களை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.

கூடவே தனக்கென சில இணைய தளங்களை அமைத்து அதன்மூலம் விளம்பர வருவாயையும் தேடிக் கொண்டிருக்கிறார். எனவே கைநிறைய காசு புரள்கிறது.
இணையதளங்களின் மூலம் வரும் வருமானத்தை மட்டுமே வைத்துக் கொண்டு புதிய புதிய நகரங்களை பார்த்தபடி வாழ்க்கை நடத்த முடியுமா என்று யோசித்து பார்க்கும் உத்தேசத்தோடு கிளம்பி வந்ததாக கூறும் பேஜ், அதில் வெற்றி பெற்றிருப்பதை அவரது உற்சாக குரலே உணர்த்துகிறது.

பேஜ் அனுபவம் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அவரது அனுபவம் விதிவிலக்கானது அல்ல. இது  புதிய போக்காகவே உருவாகி வருகிறது.
பேஜை போல மேலும் பலர் இப்படி நாடோடி அதிபர்களாக வாழத் துணிந்திருக்கின்றனர்.
நீங்களும் கூட இப்படி வாழலாம். அதுபற்றி நாளை பார்க்கலாம்

இமெயில் இன்னல்

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில் தொடர்பான நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லாமல் போகலாம்.  எதற்கெடுத்தாலும் இமெயில் அமைப்பு என்று சொல்லும் பழக்கமும், தேவையும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்

 

அப்படி இருந்தால் ஒருவிதத்தில் அது நல்லதுதான். இமெயில் விஷயங் களில் பரிட்சயம் பெற்றிருப்பது, நவீன வாழ்க்கைக்கு ஏற்றவராக  உங்களை கருதப்பட வைக்கும் என்றாலும், இமெயிலுக்கென்று சில குறைகள் இருக்கவே செய்கிறது.

அந்த குறைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிதான் இப்போது இன்டர்நெட் உலகில் கவலையோடு பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

 

இமெயில் கலாச்சாரம், ஈடுசெய்ய முடியாத சில இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், இது குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். அது மட்டுமல்ல, இமெயில் அனுப்புவதை கொஞ்சம் குறைத்து கொண்டாலும் நல்லதுதான் என்கின்றனர்.

கடிதங்களுக்கு இல்லாத சவுகர்யங்களும், சுலபத்தன்மையும் இமெயிலுக்கு இருக்கலாம்.  ஆனால்  கடிதங்களால் ஏற்பட வாய்ப்பு இல்லாத இன்னல்கள் இமெயில்களால் ஏற்படுகின்றன  என்பதுதான் விஷயம்.

அலுவலக தொடர்புகளுக்கு சர்வசகஜமாக இமெயிலை பயன்படுத்துபவர்கள் இருக்கின்றனர். நண்பர்களோடு கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கும், கண்ணில்படும் தகவல்களை தட்டிவிடுவதற்கும்  இமெயிலை நாடுபவர்கள் இருக்கின்றனர்.

 

இவ்வளவு ஏன் ஒரே அலுவலகத்தில் பக்கத்து  அறையில் இருப்பவருக்கு  ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்றால், இமெயிலை  அனுப்பி வைக்கும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர். 

இங்கேதான் பிரச்சனை வருகிறது என்று சொல்கின்றனர். கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நபருக்கு  தகவலை சொல்ல வேண்டும் என்றால், எழுந்து சென்றால் போயிற்று அல்லது குறைந்த பட்சம் போனை கையில் எடுத்து பேசினாலாவது பரவாயில்லை. மாறாக இருந்த இடத்தில் இருந்தே இமெயிலில் நாலு வரியை டைப் செய்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் பிரச்சனைக்குரியதாக மாறிவிடுகிறது. காரணம் தகவல் தொடர்பு சாதனங்களில் இமெயில் மிகவும் வறட்டுத்தனமானதாக கருதப்படுகிறது. 

அதாவது இமெயில் உணர்வு ரீதியான குறிப்புகளை தாங்கி செல்லும் ஆற்றல் இல்லாத வாகனமாகவே இருக்கிறது.  நேரிலோ அல்லது போனிலோ சொல்லத் தயங்கும் விஷயங்களை நாம் இமெயிலில் தெரிவித்து வம்பில் மாட்டி கொள்கிறோம் என்று கூறப்பட்டு வருகிறது.

அதே போல இமெயில் வாசகங்கள் நாம் எதை நினைத்து சொல்கிறோமோ அவற்றுக்கான தன்மையை உணர்த்தாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு இமெயிலில் ஒரு வாசகத்தை படிக்கும் போது, அதனை படிப்பவர் தான் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக உணரலாம்.  அல்லது  மிகுந்த கோபத்தோடு அந்த வாசகம் எழுதப்பட்டதாக உணரலாம்.

சுருக்கமாக சொன்னால் இமெயில் அனுப்பியவர் குறிப்பிட விரும்பிய கருத்துக்கு மாறான எந்த விஷயத்தை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் நாம் பேசும் போது வார்த்தைகளை மட்டுமே வைத்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில்லை. அது சொல்லப்படும் முறை, அப்போது நமது முகத்தில் காணப்படும் உணர்ச்சி, நம்முடைய  அங்கஅசைவுகள் போன்ற பல்வேறு  குறிப்புகளை வைத்தே பேசப்படும் விஷயத்தை கிரகித்து கொள்கிறோம். 

உண்மையாக திட்டுவதற்கும், செல்லமாக திட்டுவதற்கும்  வித்தியாசம் இருக்கிறதல்லவா?
கடுமையாக நடந்து கொள்வதற்கும், கண்டிப்போடு சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?

நேரில் பேசும் போது இவற்றையெல்லாம் நாம் தானாகவே புரிந்துகொண்டு விடுகிறோம். எனவே  கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் இமெயிலில் இப்படி இல்லை.

ஒரு விஷயத்தை தவறுதலாக புரிந்துகொள்ள அனேக வாய்ப்புகள் இருக்கின்றன.
சொல்லப்போனால் இமெயில் மூலம் மட்டுமே கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் போது மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்கின்றனர். 

இமெயில் மூலம் ஜோக்குகளை அனுப்பி வைப்பது பலருக்கு  பழக்கமாக இருக்கிறதல்லவா? பொதுவாக இப்படி அனுப்பப்படும் ஜோக்குகளை பெறுபவர்கள் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்றே நினைப்பதாக ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.  எல்லாம்  இமெயிலால் வரும் கோளாறுதான்.

முகத்தை பார்த்து பேசும் போது, நம்முடைய மூளை பல்வேறு குறிப்புகளை புரிந்து கொண்டு பேச்சின் தன்மையை உணர்ந்துகொள்ள வழிசெய்கிறது. இமெயில் இந்த குறிப்புகள்  இல்லாமல் வெறுமையோடு வருகிறது. ஆகையால்தான் இமெயில் அனுப்புவதை விட நேரில் அல்லது குறைந்தபட்சம் போனில் பேசுவது மேலானது என்கின்றனர்.
எல்லா நேரங்களிலும் முடியா விட்டாலும், முக்கியமான மற்றும் தேவைப்படும் நேரங்களில் இமெயிலை மூடிவிட்டு,  நேர்முக பேச்சுக்கு தயாராகுங்கள்.

கலைஞர்களின் மைஸ்பேஸ்

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள்.

.
ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு இல்லை. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் விதவிதமான  கலைஞர்களையும், அவர்கள் படைப்புகளையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதைவிட சந்தோஷமானது வேறு என்ன இருக்க முடியும்?

இதனால் பிரமிப்பு ஏற்படும் என்றால், அட நம்மூர் கலைஞர்களுக்கு என்று இப்படி ஒரு இணைய தளம் இல்லையே என்ற ஏக்கம் ஏற்படும்? அந்த அளவுக்கு கலைஞர்களுக்கான இருப்பிடமாக அவர்களின் படைப்பிற்கான கலைகூடமாக இந்த தளம் விளங்குகிறது.
இதில் மேலும் விஷேசமானது என்னவென்றால் “மை ஆர்ட் இன்போ’, கலா ரசிகர்களுக்கானது என்பதை விட கலைஞர்களுக்கானது தான்!.

 மைஸ்பேஸ் மற்றும் பேஸ்புக் போன்றவை எப்படி இளைஞர்களுக்கான வலைப்பின்னல் தளமாக இருக்கின்றனவோ அதே போல் கலைஞர்களுக்கான வலைப்பின்னல் தளமாக மைஆர்ட் இன்போ டாட் காம் தளத்தை லூயிஸ் மெக்பெயின் என்னும் கனடா நாட்டு பிரமுகர் அமைத்திருக்கிறார்.

பதிப்பக அதிபரும், கொடை வள்ளலுமான மெக்பெயின் கலை ஆர்வம் மிக்கவர். ஓவியம் உள்ளிட்ட கலைகளில் பெருமளவு முதலீடும் செய்திருப்பவர். கலைஞர்களுக்காக என்று “ஆர்ட் இன்போ’ என்னும் பெயரில் இணைய வழிகாட்டியையும் நடத்தி வருபவர்.

“மைஸ்பேஸ்’ உள்ளிட்ட வலைப்பின்னல் தளங்கள் உண்டாக்கி விடும் அலைகளை உள்வாங்கி கொண்ட மெக்பெயின், கலைஞர்களுக்கும் இத்தகைய வலைப்பின்னல் தளம் இருக்க வேண்டும் என்னும் உந்துதலோடு “மைஆர்ட் இன்போ’ தளத்தை ஏற்படுத்தி யிருக்கிறார். கலைஞர்கள் குறிப்பாக இளம் மற்றும் புதிய கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான உலகளாவிய தளமாக இந்த தளம் அமைய வேண்டும் என்பது அவரது விருப்பம்.

தளத்தின் வடிவமைப்பும், உள்ள டக்கமும் இந்த விருப்பத்தை கச்சிதமாக பிரதிபலிக்கிறது. மைஸ்பேசில் எப்படி, ஒருவர் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொண்டு சுய அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களை தேடிக் கொள்ளலாமோ அவ்விதமே இதில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இடம் பெறச் செய்து, உலகின் பார்வைக்கு படைப்புத் திறனை காட்சிக்கு வைக்கலாம்.  மைஸ்பேஸ் மகத்தானதுதான். ஆனால் அதன் வடிவமைப்பில் கொஞ்சம் சிக்கலாக இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்கள் கொட்டப்பட்டு ஒருவித குழப்பம் ஏற்படும். ஆனால் இந்த தளத்தில் அத்தகைய குழப்பம் இல்லாமல், மிக எளிமையாக ஒருவித நேர்த்தியோடு, முகப்புபக்கம் அமைந்துள்ளது.

அற்புதமான கலைப்படைப்புகள் மற்றும் அவற்றை உருவாக்கிய கலைஞர்களின் படங்கள், முகப்பு பக்கத்தில் பளிச்சிடுகின்றன.  குறிப்பிட்ட தினத்திற்கான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு முகப்பு பக்கத்தில் முன்னிறுத்தப் படுவதோடு, மற்ற கலைஞர்கள் பற்றிய அறிமுகமும் பக்கத்திலேயே மின்னுகின்றன.

முதல் பார்வைக்கு ஓவியங்களே பிரதானமாக தோன்றினாலும் ஓவியம் மட்டும்  அல்லாமல், புகைப்படங்கள், சிற்பங்கள், வீடியோ காட்சிகள், பேஷன், கட்டிட கலை, கவிதை, வடிவமைப்பு, கண்ணாடி வேலைப்பாடுகள் என சகலவிதமான கலைப்படைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

மேலோட்டமான ஒரு பார்வைக்கு பின், கண்ணை கவரும் ஏதாவது ஒரு படத்தை கிளிக் செய்யும் போது நீண்ட கலை பயணத்திற்கு தயாராகி விட வேண்டும். கிளிக் செய்த அந்த படம் பெரிதாகி அருகிலேயே அது பற்றிய குறிப்புகள் விரிவதோடு, அந்த கலைஞரின் மற்ற படைப்புகளும் வரிசையாக வந்து நிற்கும். ஒவ்வொரு படமும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன என்ற குறிப்புடன் கலைஞரைப் பற்றிய சுயசரிதை விவரங்கள் மற்றும் அவர் பங்கேற்ற  கண்காட்சி தொடர்பான தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

அவரது படைப்பு கருத்தை ஈர்த்தது என்றால் அந்த கலைஞரை பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினால், பிலாக் பதிவு எழுதி வைக்கலாம் (அ) உடனடியாக இன்டெர்நெட் மூலமே உரையாடலாம். பிலாக் பதிவில் மற்ற கலைஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கூடுதல் புரிதலை ஏற்படுத்தக் கூடியவையாக அமைந்திருப்பது  மற்றொரு சிறப்பம்சம்.

ஒரு கலைஞரை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டிருக்கும் போதே,அடுத்தடுத்த கலைஞர்களை அறிமுகம் செய்து கொண்டே போகலாம். படைப்புகளின்  வண்ணமும், வகைகளும் வியக்க வைக்கும் கலை பயணமாக அது அமையும்.

இதைத்தவிர, கலைஞர்கள், கலைப்படைப்புகள் கலை கூடங்கள் என எந்த தலைப்பின் கீழும் புதிய கலைஞர்களை தேடும் வசதி உண்டு. மேலும் இந்த வார கலைஞர் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட கலைஞர் என்னும் அடைமொழியோடும், கலைஞர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

தொடர்ந்து தளத்திற்கு விஜயம் செய்யும் போது, இந்த அம்சங்கள், புதிய கலைஞர்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். கலைஞர்கள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொள்ள உதவக்கூடிய  இந்த தளம், அவர்களின் படைப்புகள் உலகளாவிய  அறிமுகத்தை பெறவும் வழிசெய்கிறது.

அதிலும் குறிப்பாக புதிய கலைஞர்கள் தங்களை உலகிற்கு உணர்த்த இந்த தளம் சரியான நுழைவு வாயிலாக இருக்கும். இதுவரை 800க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாகி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இடம் பெற வைத்துள்ளனர். இன்னும் பெரிதாக இந்த தளம் வளரும் என்றே தோன்றுகிறது.