Tag Archives: bbc

2017 ல் இணையத்தை வென்ற சாமானியர்கள்!

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தி தளங்களை வரை ஆதிக்கம் செலுத்தி கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரமானவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ் பெற்ற சில சாமானியர்களின் சுவாரஸ்யமான கதை:

கேட்டது கிடைத்தது !

09xp-nugget-master675அமெரிக்க பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த ஆண்டு இணைய சாதனையாளராக மகுடம் சூட்டிக்கொண்டிருக்கிறார். டிவிட்டரில் வெளியிட்ட குறும்பதிவு ஒன்றுக்கு அதிக ரீடிவீட்கள் பெற்றது தான் அவரது சாதனை. ரீடிவீட் என்றால் ஒன்றில்லை, இரண்டில்ல, 34 லட்சத்திற்கும் மேல் ரீடிவீட்களை அவர் அள்ளி குவித்திருந்தார். இதன் மூலம், ஆஸ்கர் செல்பீக்காக அதிக ரீடிவீட் பெற்றிருந்த ஹாலிவுட் நட்சத்திரம் எல்லென் டிஜெனரஸ் சாதனையை அவர் முறியடித்தார். ரீடிவீட் என்பது டிவிட்டரில் வெளியாகும் ஒரு குறும்பதிவை மற்றவர்களும் தங்கள் டைம்லைனில் மறுபதிவிடுவதாகும். பொதுவாக கவனத்தை ஈர்க்கும் குறும்பதிவுகளுக்கு நூற்றுக்கணக்கில் ரீடிவீட்கள் கிடைத்தாலே பெரிய விஷயம். ஒரு சில குறும்பதிவுகள் ஆயிரக்கணக்கில் பகிரப்படுவதும் உண்டு. வெகு அபூர்வமாக சில குறும்பதிவுகள் லட்சக்கணக்கில் பகிரப்பட்டு இணையவெளி முழுவதும் பரவுவதும் உண்டு. பெரும்பாலும் செல்வாக்கு மிக்க பிரபலங்களுக்கே இது சாத்தியம்.

ரீடிவீட்களில் சில லட்சங்களை தாண்டுவதெல்லாம் எப்பேதேனும் நடக்கும் அதிசயம் என்று வைத்துக்கொள்ளலாம். அப்படி இருக்க, அமெரிக்க பள்ளி மாணவர் வில்கர்சனுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமானது? 34 லட்சத்திற்கும் மேற்பட்ட ரீடிவீட்களை பெறும் வகையில் அவர் என்ன செய்துவிட்டார்?

உண்மையில் அவர் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை. டிவிட்டர் மூலம் ஒரு கோரிக்கை வைத்தார். அதுவும் என்ன கோரிக்கைத்தெரியுமா? எனக்கு இலவச சிக்கன் நக்கெட் உணவு வேண்டும், அதற்கு உதவுங்கள் என்பது தான். இந்த கோரிக்கைக்கு தான் அவரே கூட எதிர்பாராத வகையில் ஆதரவு குவிந்துவிட்டது. ஏன்? எப்படி? என்பது புரியாத புதிர்.

நடந்தது இது தான். அமெரிக்காவின் நெவேடாவில் பள்ளி மாணவராக இருக்கும், வில்கர்சனுக்கு ஆண்டு முழுவதும் சிக்கென் நக்கெட் உணவு இலவசமாக கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. உடனே வெண்டி எனும் பாஸ்ட் புட் நிறுவனத்தை டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு, ஒராண்டு இலவச சிக்கென் நக்கெட்டுக்கு எத்தனை ரீடிவீட் தேவை என கேட்டிருக்கிறார். நிறுவன தரப்பில் 18 மில்லியன் ரீடிவீட் பெற வேண்டும் என பதில் வந்திருக்கிறது. வில்கர்சன் அதிகம் யோசிக்காமல், அந்த குறும்பதிவை அப்படியே பதிவிட்டு, ’எனக்கு உதவுங்கள், ஒரு மனிதருக்கு நக்கெட்கள் தேவை’ என வேண்டுகோள் வைத்தார்.

அதாவது இதை ரீடிவீட் செய்தால் எனக்கு நக்கெட் கிடைக்கும், எனவே பகிருங்கள் என கேட்டிருந்தார். பத்து பேருக்கு மேல் பகிரப்போவதில்லை என நினைத்துக்கொண்டு விளையாட்டாக தான் இந்த கோரிக்கை வைத்தார். ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் பலரும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். நூறு,ஆயிரம், லட்சம் என ரீடீவிட்கள் குவிந்தன. விரைவிலேயே இந்த எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டிவிட்டது. இது ஒரு சாதனையாகி, அவருக்கு சின்னதாக இணைய புகழை தேடித்தந்தது, நெக்கெட் ஆசாமி எனும் பட்டத்தையும் பெற்றுத்தந்துள்ளது. இறுதி இலக்கான 18 மில்லியனை அவரால் தொடர் முடியாவிட்டாலும் இந்த சாதனைக்காக வெண்டி நிறுவனம் அவருக்கு ஒராண்டு நக்கெட்டுக்கான கூப்பன்களை பரிசளித்துள்ளது.

இணையத்தில் எப்படி வைராலகி புகழ் பெறுவது என பலரும் ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கையில், இவரைப்போன்ற சிலருக்கு எதிர்பாராமல் ஜாக்பாட் அடித்து விடுகிறது.

பிபிசி தந்தை

bbநக்கெட் வாலிபராவது கோரிக்கை வைத்து வைரல் புகழ் பெற்றார் என்றால், தென் கொரியா பேராசிரியர் ராபர்ட் கெல்லி பேட்டி கொடுத்து இணைய நட்சத்திரமாகி இருக்கிறார். ஆனால் பேராசிரியர் கெல்லி அவர் கொடுத்த பேட்டியால் பிரபலமாகவில்லை. பேட்டியின் போது ஏற்பட்ட இடையூறால் பிரபலாமானார். எல்லாம் பிள்ளைகளின் அன்புத்தொல்லை வடிவில் வந்த இடையூறு.

தென்கொரியாவில் அந்நாட்டு அதிபருக்கு எதிரான கண்டனத்தீர்மான விவகாரம் உச்சத்தில் இருந்த போது. பிபிசி தொலைக்காட்சி அவரிடன் ஸ்கைப் வழியே உரையாடிக்கொண்டிருந்தது. பேராரியரும் தனது அலுவலக அறையில் இருந்து தென்கொரிய அரசியல் சூழலை அலசி ஆராய்ந்துக்கொண்டிருந்தார். இதனிடையே அவரது 4 வயது மகள் அறையின் கதவை திறந்து உள்ளே நுழந்து பேராசிரியரின் கவனத்தை ஈர்க்க முயன்று கொண்டிருந்தார். பேராசிரியர் சங்கடத்தை வெளிக்காட்டாமல் காமிராவை பார்த்து பேசிக்கொண்டிருந்தார். இதற்குள் அவரது ஒரு வயது மகனும் வாக்கரை தள்ளிபடி உள்ளே வந்துவிட்டார். பேராசிரியரோ பேட்டி முடிந்துவிடாதா? என தத்தளித்துக்கொண்டிருக்க, நல்லவேளையாக பேராசிரியரின் மனைவி உள்ளே வந்து பிள்ளைகளை அழைத்துச்சென்றார்.

இந்த காட்சி அப்படியே காமிராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி அனைவராலும் பார்த்து ரசிக்கப்பட்டது. பேராசிரியரின் சங்கடமும், பிள்ளைகளின் அன்பு தொல்லையும் சேர்ந்து இந்த வீடியோவை வைரலாக்கியதோடு, அவருக்கு ’பிபிசி டாட்’ எனும் பட்டப்பெயரையும் பெற்றுத்தந்தது.

இன்ஸ்டாகிராம் புதல்வி

prc_61617189இதே போலவே பிரிட்டனைச்சேர்ந்த பைலட் ’பில் யங்’ இன்ஸ்டாகிராம் நட்சத்திரமாகி கவனத்தை ஈர்த்தார். பைலெட்டாக உலகம் முழுவதும் பறக்கும் வாய்ப்பை பெற்றிருந்த பில் யங் ஒரு நல்ல புகைப்பட கலைஞரும் கூட. விமானத்தில் பறக்கும் நகரங்களில் தான் தங்கும் ஓட்டல்களில் காணப்படும் தரைவிரிப்புகளை எல்லாம் கிளிக் செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை அவர் கொண்டிருந்தார். அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் அட்டகாசமாக இருந்தன என்றாலும், இன்ஸ்டாகிராமில் அவருக்கு அதிக ஆதரவில்லை. மொத்தம் 83 பேரே அவரை பின் தொடர்ந்தனர். இது குறித்து அவர் கவலை பட்டதும் இல்லை.

ஆனால் அவரது மகள் ஜில்லுக்கு இது ஒரு பெரும் குறையாக இருந்தது. அப்பாவின் படங்கள் எல்லாம் அற்புதமாக இருந்தும் அதிகமானவர்கள் அவற்றை பார்த்து ரசிக்கவில்லையே என ஏங்கியவர், மற்றவர்களும் தந்தையின் கலையை ரசிக்க வேண்டும் என விரும்பினார். அது மட்டும் அல்ல அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைரலாக்கி புகழ்பெற வேண்டும் என்றும் விரும்பினார்.

இந்த எண்ணத்தை டிவிட்டர் பக்கம் மூலம் ஒரு வேண்டுகோளாக வைத்தார். ’கிறிஸ்துமசுக்கு நான் விரும்புவதெல்லாம், அப்பாவின் இன்ஸ்டாகிராம் தரைவிரிப்பு பக்கம் வைரலாக வேண்டும் என்பது தான். தயவு செய்து இதை நிகழ்த்திக்காட்ட உதவுங்கள்” என்று ஒரு வேண்டுகோளை டிவீட் செய்து அதனுடன் அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் இணைந்திருந்தார்.

அவ்வளவு தான், அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் அவரது அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஆதர்வு குவிந்தது. வெறும் 83 ஆக இருந்த இன்ஸ்டாகிராம்  பாலோயர்கள் எண்ணிக்கை முதலில் 28 ஆயிரத்தை தொட்டது. இதனிடையே பத்திரிகைகள், மற்றும் இணையதளங்கள் இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியாக பில்லின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மேலும் ஆதரவு பெருகி,  சில நாட்களில் ஆயிரம் பல்லாயிரமாக, லட்சங்களையும் தொட்டது. இதனால் அப்பாவும், மகளும் திக்குமுக்காடிப்போயினர்.

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோயர்கள் பெற்றவர்கள் பலர் இருந்தாலும், ஒரே ஒரு டிவீட்டால் லட்சக்கணக்கான பாலோயர்களை சில நாட்களில் பெற்றது பைலட் பில் மட்டும் தான். அதற்கு அவர் ஆசை மகளுக்கு தான் நன்றி கூற வேண்டும். இணையத்திற்கும் அன்புக்கும் தான்!

ஷாப்பிங் லிஸ்ட்

_98027960_e2e3b682-44a5-43a7-a0bb-c9a80a551476இந்தியாவிலும் இதே போல இளம் தம்பதி ஒன்று மனைவி உருவாக்கிய ஷாப்பிங் லிஸ்ட்டால் இணையம் அறிந்த தம்பதியாக மாறினர். ஆண்களில் பலர் வீட்டு வேலையில் மனைவிகளுக்கு உதவும் வழக்கம் கொண்டுள்ளனர். ஆனால் இந்த இயல்பை மீறி வேலைகளில் சொதப்புவது தான் பலரது பழக்கம். அதிலும் காய்கறி போன்றவற்றை வாங்கி வரச்செல்லும் போது, சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கும். ஐடி ஊழியரான இரா கோவல்கரின் கணவரும் இந்த ரகம் தான். இதனால் அதிருப்தி அடைந்த இரா, கணவரை மார்கெட்டுக்கு அனுப்பிய போது, காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை எப்படி எல்லாம் பார்த்து வாங்க வேண்டும் என விரிவாக வழிகாட்டும் குறிப்புகளை காகிதத்தில் எழுதிக்கொடுத்தார். இந்த குறிப்புச்சீட்டை அவர் டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்ள பலரும் இதை ரசித்து மகிழ்ந்தனர். இந்த குறும்பதிவு டிவிட்டரில் பேசப்பட்டு இரா கோவல்கர் தம்பதியை இணைய நட்சத்திரமாக்கியது.

 

 

2017 பிளேஷ்பேக்

நூ்று சிறந்த செயலிகள்

இந்த ஆண்டின் சிறந்த செயலிகளை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ளன. ஆண்ட்ராய்டு புதிய செயலிகளில் போட்டோஎடிட்டர். வாட்ஸ் த போர்காஸ்ட், பூமாரங், டாப் பஸ் வீடியோ, யார்ன் ஆகிய செயலிகள் இடம்பெற்றுள்ளன. ஆப்பிள் வெளியிட்டுள்ள பட்டியலில் பிட்மோஜி, யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை முன்னணி செயலிகளாக உள்ளன. இது தவிர பிசிமேக் இதழ் மிகச்சிறந்த நூறு செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது: http://in.pcmag.com/apps/35320/feature/the-100-best-android-apps-of-2017

 

 

டிவிட்டரில் வந்த மாற்றம்

குறும்பதிவு சேவையான டிவிட்டரின் அழகே அதன் 140 எழுத்துக்கள் எனும் கட்டுப்பாடு தான். ஹாஷ்டேக் , இணைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து 140 எழுத்துகளுக்குள் சொல்ல வந்ததை சொல்லிவிட வேண்டும். இந்த நிலை இப்போது மாறிவிட்டது. இந்த ஆண்டு மத்தியில் டிவிட்டர், 140 எழுத்து எனும் கட்டுப்பாட்டை இரு மடங்காக 280 எழுத்துகளாக உயர்த்திவிட்டது. இந்த வசதி முன்னோட்டமாக அறிமுகமான போது டிவிட்டர் அபிமானிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இறுதியில் இந்த சேவை அனைவருக்கும் அறிமுகமானது. அதே போல பெயர்களை குறிப்பிடுவதில் இருந்த கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது. சமூக ஊடக களத்தில் போட்டியை சமாளிக்க இந்த மாற்றம் அவசியம் என டிவிட்டர் கருதுகிறது.

ஏ.ஓ.எல் மெசஞ்சருக்கு குட்பை

வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர் எல்லாம் வருவதற்கு முன்னரே இணையத்தில் ஏ.ஒ.எல் நிறுவனத்தின் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதி பிரபலமாக இருந்தது. 1997 ல் அறிமுகமான இந்த சேவை இணையத்தின் மூலம் உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொண்டு உரையாட வழி செய்தது. இன்றைய சமூக ஊடகங்களுக்கு எல்லாம் ஒருவிதத்தில் இது முன்னோடியானது. 20 ஆண்டுகளுக்குப்பின் இந்த சேவைக்கு விடை கொடுக்க இருப்பதாக அக்டோபர் மாதம் ஏ.ஓ.எல் நிறுவனம் அறிவித்தது. இணைய வரலாற்றில் மற்றுமொரு ஒரு மைல்கல் சேவை விடைபெற்றது.

 

 

-0———–

ஆங்கிலத்தில் எழுத உதவும் தேடியந்திரம்!

ludwig_1இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. லுத்விக் (Ludwig ) எனும் அந்த தேடியந்திரம் புதியது மட்டும் அல்ல, புதுமையானதும் கூட! புத்திசாலி மொழிபெயர்ப்பு சாதனம் மற்றும் மொழியியல் தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த தேடியந்திரம் அமெரிக்காவிலோ மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் இருந்து அறிமுகமாகமல் ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து உருவாகி இருப்பது மிகவும் பொருத்தமானது. ஏனெனில், லுத்விக் தேடியந்திரம் ஆங்கிலத்தில் சரியாக எழுத உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு தேடியந்திரம் எப்படி ஆங்கிலத்தில் எழுத உதவக்கூடும் என்று கேட்கலாம். பொருத்தமான ஆங்கில சொற்றொடர்களை தேடித்தருவதன் மூலம் லுத்விக் இதை செய்கிறது. எப்படி என பார்க்கலாம்!
ஆங்கிலத்தில் நன்றாக எழுத வருபவர்களை விட்டுவிடுங்கள். ஆனால் ஓரளவு மட்டுமே ஆங்கிலம் அறிந்தவர்கள், அலுவல் தேவைக்காக ஆங்கிலத்தில் எழுத வேண்டிய நிலை வரும் போது கொஞ்சம் தடுமாறவே செய்வார்கள். அப்படியே எழுதிவிட்டாலும், அது சரியாக இருக்கிறதா எனும் சந்தேகம் இருக்கும்.

இது போன்ற நேரங்களில் லுத்விக் ஆங்கிலம் அறிந்த நண்பன் போல வழிகாட்டும். லுத்விக் தேடியந்திர முகப்பு பக்கத்தில் டைப்ரைட்டர் சாதன லோகோவின் கீழ், உள்ள தேடல் கட்டத்தில், பயனாளிகள் தாங்கள் சரி பார்க்க விரும்பும் ஆங்கில வாசகத்தை டைப் செய்ய வேண்டும். உடனே, அந்த வாசகத்திற்கு பொருத்தமான ஆங்கில வாசகங்கள் பட்டியலிப்படும். அவற்றில் இருந்து சரியான வாசகத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது தாங்கள் எழுதிய வாசகத்துடன் ஒப்பிட்டு அதில் உள்ள தவறுகளை சரி செய்து கொள்ளலாம்.
ludwig_4
பிபிசி, நியூயார்க் டைம்ஸ், நியூயார்க்கர் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆங்கில வாசக தொகுப்பில் தேடிப்பார்த்து, பொருத்தமான வாசகங்களை லுத்விக் பரிந்துரைக்கிறது. வரிசையாக ஒவ்வொரு வரியாக தட்டச்சு செய்து, அதற்கு காண்பிக்கப்படும் வாசக பட்டியலுடன் ஒப்பிட்டுப்பார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தி நாம் எழுதியதை மேம்படுத்திக்கொள்ளலாம். தவறுகளை திருத்திக்கொள்வதோடு, சரியான ஆங்கில வரிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் ஆங்கில சொற்களின் பயன்பாடு பற்றியும் கற்றுக்கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றில் இருந்து திரடப்பட்ட வாசகங்களை தொகுப்பில் இருந்து, பயனாளிகள் எழுத முயலும் வாசகத்திற்கு பொருந்தக்கூடிய வரிகளை தேடித்தருவதே லுத்விக்கின் முதன்மையான பணியாக இருக்கிறது. இதற்கான அல்கோரிதம் மொழியியலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒன்று ஆங்கிலத்தில் அதிக பரிட்சயம் இல்லாதவர்களை மனதில் வைத்துக்கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதன் நிறுவனர்களில் ஒருவரான இத்தாலி நாட்டைச்சேர்ந்தவரான ஆண்டோனியோ ரோடோலோ ஆகழ்வாராய்ச்சி மாணவராக இருந்த போது, தனது துறையில் தொழில்முறை வாய்ப்புகளை சர்வதேச அளவில் பெற ஆங்கிலத்தில் கட்டுரைகளை வெளியிடும் நிபந்தத்தை உணர்ந்தார். இத்தாலியரான அவருக்கு ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் தயக்கம் இருந்ததால், ஆங்கில சொற்களின் தவறான பயன்பாட்டில் திருத்தம் செய்ய உதவும் சேவையின் தேவையை உணர்ந்தார். அதன் பலனாகவே தன்னைப்போன்றவர்கள் பயன்பாட்டிற்காக லுத்விக் மொழியில் தேடியந்திரத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். இத்தாலியின் சிசிலியை தலைமையகமாக கொண்டு லுத்விக் செயல்பட்டு வருகிறது.

ஆங்கிலம் உலக மொழி என வைத்துக்கொண்டால், அது ஆங்கிலம் பேசும் நாடுகளை சேர்ந்தவர்களுக்காக மட்டும் அல்லாமல் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள ரோடோலோ, உலகில் உள்ள எல்லோருக்கும் தொடர்பு கொள்வதில் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை நிறைவேற்றும் நோக்கத்துடன் தான் லுத்விக் தேடியந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லுத்விக் தேடியந்திரத்தில் மேலும் சில மொழி சார்ந்த வசதிகளும் இருக்கின்றன. இதில் ஆங்கில அகராதியும் இணைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்படும் வாசகங்களில் உள்ள புரியாத சொற்களை ,இருமுறை கிளிக் செய்தால் அவற்றுக்கான பொருள் விளக்கம் தோன்றும். அதே போல ஆங்கில சொற்றொடர்களுக்கான விளக்கத்தையும் பார்க்கலாம். தேவை எனில் இரண்டு வார்த்தைகளுக்கு இடையே எந்த சொல் வர வேண்டும் என்றும் தெரிந்தும் கொள்ளலாம்.

இது தவிர, ஆங்கிலம் சரியாக அறியாதவர்கள் தங்கள் மொழியில் வாசகத்தை டைப் செய்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு அது சரியா என்றும் பார்த்துக்கொள்ளலாம். ( கூகுள் மொழிபெயர்ப்பு சேவை சார்ந்து இது இயங்குகிறது).
ஆங்கிலத்தில் தயக்கமும்,சந்தேகமும் உள்ளவர்களுக்கு இந்த தேடியந்திரம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு முறை சேவையை பயன்படுத்தியவுடன், முடிவுகள் திருப்தியாக இருக்கிறதா? என கேட்கும் சிறு பெட்டியும் தோன்றுகிறது. அதில் உள்ள ஸ்மைலியை கிளிக் செய்யும் போது உங்கள் முகத்திலும் புன்சிரிப்பு தோன்றலாம்.

நாம் ஏற்கனவே பயன்படுத்திய வாசகங்களை மீண்டும் திரும்பி சென்று பார்க்கும் வசதியும் இருக்கிறது.
இந்த தேடியந்திரத்தின் பெயர் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் ஒன்றும் இருக்கிறது. ஆஸ்திரியாவைச்சேர்ந்த புகழ்பெற்ற தத்துவஞானியான லுத்விக் விட்ஜென்ஸ்டியன் என்பவர் நினைவாகவே இதற்கு லுத்விக என பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.” என்னுடைய மொழியின் வரம்பு தான் என்னுடைய உலகின் வரம்பு” என்னும் வாசகம் அவரது சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

தேடியந்திர முகவரி:https://ludwig.guru/

—-
நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது!

காமிராவில் சிக்கிய ஓவியமும் கொண்டாடிய இணையமும்

New Years Night revellersபுத்தாண்டின் முதல் வைரல் புகைப்படம்! – பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.
அந்த புகைப்படம் இணையவெளி முழவதும் பகிரப்பட்டு, தனக்கான மெமிக்களையும் உண்டாக்கி மேலும் பிரபலமாகி இருப்பதோடு,ஆண்டின் துவக்கத்திலேயே இப்படி ஒரு அற்புதமான புகைப்படமா? என்று வியந்து பாராட்டவும் வைத்திருக்கிறது.

இணையத்தில் புகைப்படங்கள் வைரலாவது ஒன்றும் புதிய விஷயமல்ல; ஆனால் மான்செஸ்டர் புத்தாண்டு காட்சி இணையத்தின் கவனத்தை ஈர்த்த வித்ததில் வழக்கமான வைரல் அம்சங்களை மீறிய விஷயங்களை கொண்டிருக்கிறது.

அந்த புகைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஒரு மிக நல்ல புகைப்படத்தில் என்ன எல்லாம் இருக்க வேண்டுமோ எல்லாமே அந்த படத்தில் இருக்கின்றன.

மான்செஸ்டர் நகர் வீதி ஒன்றில் புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அந்த காட்சியில் வலது பக்க ஓரத்தில் காவலர்கள் குடிபோதையில் இருக்கும் ஒருவரை கட்டுப்படுத்த மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதை வழிபோக்கர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இடது பக்கத்தில் தரையில் படுத்திருக்கும் ஒருவர் அருகாமையில் உள்ள பீர் பாட்டிலை எட்டிப்பிடிக்க முயற்சிக்கிறார்.
ஜோயல் குட்மன் எனும் புகைப்பட கலைஞர் எடுத்த இந்த படம் மான்செஸ்டர் ஈவ்னிங் நியூஸ் பத்திரிகையிலும் அதன் இணையதளத்திலும் வெளியானது. முதலில், புகைப்பட தொகுப்பில் அந்த படம் பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்படாமல் தான் இருந்தது.
1CXo57HFWEAAhRe0
ஆனால், ரோலண்ட் ஹீயுக்ஸ் எனும் பிபிசி செய்தியாளர் இந்த படத்தை பார்த்ததுமே அசந்துபோய் விட்டார்.
”அந்த படம் துள்ளி குதித்து நின்றது. அதில் ஒரே இடத்தில் எல்லா அம்சங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன.என்னால் அந்த படத்தில் இருந்து பார்வையை விலக்கவே முடியவில்லை” என்று ஹீயூக்ஸ் இது பற்றி வியந்து போய் குறிப்பிடுகிறார்.

இது போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்ததுமே இணைய யுகத்தில் ஒருவர் என்ன செய்யக்கூடுமோ அதையே அவரும் செய்தார். ஆம்,தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த படத்தை பகிர்ந்து கொண்டார். ”இந்த மான்செஸ்டர் புத்தாண்டு புகைப்படத்தில் பாருங்கள் எத்தனை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு அழகான ஓவியம் போல” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஓவியம் போல எனும் அந்த வர்ணனை அந்த புகைப்படத்தின் அத்தனை சிறப்புகளையும் அடையாளம் காட்டியது.அந்த புகைப்படத்தை உற்றுப்பார்க்கும் போது அதே உணர்வு தான் உண்டானது. செறிவுடன் தீட்டப்பட்ட ஒரு ஓவியத்தில் நுணுக்கமாக இடம்பெற்றிருக்க கூடிய விவரங்கள் அந்த படத்திலும் இருந்தன.
மான்செஸ்டர் நகர கண்ணாடி மூலம் பிரிட்டனின் புத்தாண்டு கொண்டாட்ட முறையை அந்த காட்சி ஓவியம் போல சித்தரிப்பதாகவும் பாராட்டப்பட்டது.இதனிடையே, இன்னொரு டிவிட்டர் பயனாளி (@GroenMNG ) ஒரு நல்ல புகைப்படத்திற்காக சொல்லப்படும் தங்க விகித இலக்கணத்திற்கு இந்த படமும் உட்பட்டிருப்பதை , அந்த அந்த அம்சங்களை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருந்தார். இது மேலும் கவனிக்க வைத்தது.

ஆக,காண்பவர் கவனத்தை ஈர்க்க கூடிய தகுதி அந்த படத்திற்கு இருந்தால், டிவிட்டர் பயனாளிகள் அதற்கு உண்டான மரியாதையை செய்தனர். அதாவது தன்னிச்சையாக அதை மறுகுறும்பதிவிட்டு (ரீடிவீஇட்) தங்கள் டைம்லைனில் பகிர்ந்து கொண்டனர்.இதன் பிறகு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறும்பதிவு பத்தாகி,பத்து நூறாகி , நூறு ஆயிரமாகி குறும்பதிவுகள் பரவிக்கொண்டே இருந்தன. திடிரென பார்த்தால் 25,000 முறைக்கு மேல் மறுகுறும்பதிவிடப்பட்டு இணையவெளியின் பெரும்பாலான இடங்களில் அந்த படம் தான் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு அடுத்த கட்டமாக அந்த படத்தை பகிர்ந்து கொண்டவர்கள் அதனை காவிய பாணி ஓவியங்களுடன் ஒப்பிட்டதுடன் நிற்காமல், வரலாற்றின் புகழ் மிக்க ஓவியங்களுக்குள் இந்த காட்சியின அம்சங்களை திணித்து அவற்றை மெமீக்களாக பகிர்ந்து கொண்டனர். இப்படி லியானார்டோ ஓவியத்திற்கு நடுவிலும், வான்கா ஒவியம் ஊடாகவும் அந்த படம் இணையத்தில் பயணித்தது.

ஓவிய காட்சிகள் நடுவே பார்க்கும் போது அந்த படத்தின் மகத்துவம் இன்னமும் அதிகமானது.
விளைவு புத்தாண்டின் முதல் வைரல் படமாக பரவி பேசப்பட்ட இந்த நிகழ்வை பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டன.

ஆண்டின் துவக்கத்திலேயே வைரலாக பரவியது ஒரு புறம் இருக்க, அழகிய ஓவியத்துடன் ஒப்பிடக்கூடிய அம்சம் மற்றும் கலாச்சார்க்கூறுகளை கொண்டிருப்பதால் நல்லவிதமாக கவனத்தை ஈர்த்த படமாகவும் இது அமைந்துள்ளது.

தேவையில்லாத விவாதங்களையும் ,சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் கலையின் கொண்டாட்டமாகவும் அமைந்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தை முதலில் கண்டெடுத்து பகிர்ந்து கொண்ட ஹீயூக்ஸ் இந்த மொத்த நிகழ்வையும் விவரித்து பிபிசி தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.இணைய உலகமே பாராட்டும் அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் குட்மேன் தனது தளத்தில் ( http://www.joelgoodman.net/) அந்த அச்சிட்ட பிரதிகளை வாங்கி கொள்ள வழி செய்திருக்கிறார்.

—-

நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.