Tag Archives: online

கூட்டாக வரைய ஒரு இணையதளம்.

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது.

இணைய வெள்ளை பலகை என வர்ணித்து கொள்ளும் இந்த தளத்தில் அலுவலரீதியான எண்ணத்தையோ அல்லது சுவாரஸ்யத்திற்காக வரையும் சித்திரத்தையோ நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.சித்திரத்தை வரையும் போதே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அலுவலக வேலை என்றால் சக ஊழியர்களையும் பங்கேற்க செய்யலாம்.

வரைபவர் ,வரைய அழைக்கப்பட்டவர் என எல்லாரும் ஒரே இணைய பலகையை பார்க்க முடிவதாலும் பயன்படுத்த முடிவதாலும் அதில் திருத்தங்களையும் செய்யலாம்.மாற்றி வரையலாம்.

வெவேறு இடங்களில் உள்ளவர்கள் இவ்வாரு ஒன்றாக வரைந்து கொண்டிருக்கும் போதே இணைய அரட்டை மூலம் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இணைய பலகையில் வரைவதல் உதவ தூரிகை,வண்னங்கள் என பல்வேறு வசதிகளும் இருக்கின்ற‌ன.

வரைந்து முடித்த சித்திரத்தை சேமித்து அதனை அப்படியே பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு ப‌கிர்ந்து கொள்ளலாம்.

உறுப்பினராகும் தேவையே இல்லாமல் நேரடியாக இணைய பலகையை வரவைத்து வரையத்துவங்கி விடலாம்.

ஏற்கனவே வரையப்பட்ட சித்திரங்களை பார்க்க முடிவது கூடுதல் சுவாரஸ்யம்.பொருத்தமான இணைய பலகையை தேடி நாமும் அதில் சேர்ந்து வரைய முற்ப‌டலாம்.

இணையதள முகவரி;http://flockdraw.com/

கூட்டு முயற்சியில் வரைய உதவும் அருமையான இணையதளம் பற்றிய முந்தைய பதிவு இது;http://cybersimman.wordpress.com/2010/12/23/websites-4/

எளிமையான புக்மார்கிங் சேவை.

இணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.காரணம் நல்ல தளங்களும் பயனுள்ள தகவல்கலும் கண்ணில் பட்டு கொண்டேயிருக்கும் என்பதால் அவற்றை பின்னர் பார்த்து கொள்ளலாம் என புக்மார்க் செய்து கொள்வது தேவையானது தான்.

புக்மார்க் செய்து கொள்ள பல சேவைகள் இருந்தாலும் எல்லாவற்றிலும் ஏதாவது போதாமை இல்லாமல் இல்லை.எனவே புதிய புக்மார்கிங் சேவைகள் தேவைபடவே செய்கின்றன.அதற்கேற்ப புதிதாக புக்மார்கிங் சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன.

டூரீட் தளமும் இத்தகைய புக்மார்கிங் சேவை தான் என்றாலும் புக்மார்கிங் சேவைகளிலேயே மிகவும் எளிமையானது என்று இதனை சொல்லலாம்.இதன் வடிவமைப்பும் தோற்றமும் கூட எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாகவே இருக்கிறது.

ஆனால் இதன் எளிமை தான் இதன் சிறப்பே!.

இதன் மூலம் இணையதளங்களை புக்மார்க் செய்வது மிகவும் சுலபமானது.எந்த தளத்து குறித்து வைக்க நினைக்கிறோமோ அந்த தளத்தில் புக்மார்கிங் டூல் பாரை கிளிக் செய்தால் போதும் அந்த தளத்தின் இணைப்பை இமெயில் முகவரிக்கு இந்த தளம் அனுப்பி வைத்துவிடும்.

அதன் பிறகு எப்போது தேவையோ அப்போது இமெயில் பெட்டியை திறந்து இந்த இணையதளத்தை பார்த்து கொள்ளலாம்.இமெயில் இருந்து கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து இணைய இணைப்பு இல்லாமலும் கூட இணையதளத்தை பார்க்கலாம்.

பயனுள்ள தளங்களை மறக்க கூடாது என புக்மார்க் செய்து விட்டு அதன் பிறகு புக்மார்க் செய்ததையே மறந்து நிற்பதை காட்டிலும் புக்மார்க் செய்த தளங்கள் நேரடியாக இமெயில் பெட்டிக்கு வந்து சேர்வது பயனுள்ளது தானே.

எளிமையான இந்த தளத்தில் உறுப்பினராக சேர்வதும் எளிதானது.இமெயில் முகவரியை சமர்பித்தால் போதும்ம் உறுப்பினராகிவிடலாம்.பின்னர் அதே முகவரிக்கு புக்மார்க் செய்யப்பட்ட தளங்கள் வரத்துவங்கிவிடும்.

இணையதள முகவரி;http://toread.cc/

டிவிட்டரில் ஒரு ஜீவமரண போராட்டம்

டிவிட்டர் எத்தனையோ பிரச்சாரங்களை பார்த்திருக்கிறது. ஆனால் இது வரை இப்படியொரு பிரச்சாரத்தை கண்டதில்லை என்று கூறும் வகையில் இறப்பதற்கான உரிமை கேட்டு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரின் மனதை மாற்றுவதற்காக பலரும் டிவிட்டரில் குரலெழுப்பிக் கொண்டிருக்கின்ற‌னர்.

வாழ்விற்கும் மரண‌த்திற்கும் இடையிலான நெகிழ்ச்சியான போராட்டமாக இது மாறிக்கொண்டிருக்கிற‌து.

இந்த பிரச்சாரத்தின் மையமாக இருப்பவர் பிரிட்டனைச் சேர்ந்த டோனி நிக்லின்சன். 58 வயதாகும் நிக்லின்சன் கடந்த 7 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பவர். 2005ம் ஆண்டில் வர்த்தக விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது நிக்கலின்சன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ‘லாக்ட் இன் சின்ட்ரோம்’ என்னும் நோய்க்கு ஆளானார்.அதிலிருந்து அவர் நகரமுடியாமல் அசையமுடியாமல் படுத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மற்றவர்களோடு பேசவோ தொடர்பு கொள்ளவோ முடியாத நிலையில் அவர் மரண படுக்கையில் நாட்களை கழித்து வருகிறார்.

நிக்லின்சனின் குடும்பத்தினர் அவர் இந்த நிலையில் தவிப்பதை விட சட்டப்பூர்வமாக மருத்துவர் உதவியோடு தனது வாழ்க்கையை முடித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கருணைக் கொலை தொடர்பான விவாதத்தை மீண்டும் மக்கள் மன்றத்திற்கு உயிர் பெற வைத்துள்ளது.

எந்த காரணத்திற்காகவும் ஒரு உயிரை எடுக்கும் உரிமையை யாருக்கும் கொடுக்க கூடாது என்னும் கருத்து முன்வைக்கப்படும் நிலையில், மரணத்தை விடக் கொடிய வேதனையை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் அந்த வேதனையில் இருந்து விடுதலை பெறுவது சரியே என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிற‌து.

இந்த வழக்கின் தீர்ப்பு மிகுந்த கவனத்தோடு எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நிக்லின்சன் டிவிட்டர் மூலம் பேசினார். எந்த விதத்திலும் மற்றவர்களோடு பேசவோ தொடர்பு கொள்ளவோ முடியாத நிக்கல்சன் கண் இமைகளால் தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தின் மூலம் டிவிட்டரில் பேசினார்.

“உலகிற்கு வனக்கம்,நான் டோனி நிக்லின்சன்.. நான் லாக்ட் இன் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.. இது எனது முதல் குறும்பதிவு.” இது தான் அவரது முதல் குறும்பதிவு.

ஒருவரது கரு விழி நகர்வைக் கொண்டு அவரது எண்ணங்களை ஊகித்து அதனை வார்த்தைகளாக மாற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கொண்டு டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிடும் முதல் மனிதரான‌ நிக்லின்சன் வெளியிட்ட குறும்பதிவுகள் தனது உடலுக்குள்ளேயே சிறைப்பட்டு கிடக்கும் மனிதரின் மன உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

” பழைய நண்பன் ஒருவர் அழைத்திருந்தார். ஆனால் மனைவி ஜேன் மட்டுமே அவரோடு பேசிக்கொண்டிருந்தாள். காரணம் அவளால் மட்டுமே பேச முடியும், என்றாலும் அவனை கண்டது மகிழ்ச்சியாக தான் இருந்தது” என்பது போன்ற குறும்ப‌திவுகள் நிக்லின்சனின் நிலையை உணர்த்தி, உலுக்கக் கூடியதாக இருந்தன.

அடுத்த சில நாட்களில் பலரும் அவரது டிவிட்டர் கணக்கை பின் தொடர‌ துவங்கினர். சிலர் அவரது மரண கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இன்னும் பலரோ அவரது மனதை மாற்றி தன் மரண விழைவை கைவிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒருவர், “டோனி அவர்களே.. வாழ்கை என்பது ஒரு கொண்டாட்டம் என்பதால் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுமாறு மன்றாடுகிறேன்.. உங்களுக்காக இல்லை என்றாலும், பிள்ளைகளுக்காக” என்று குறும்ப‌திவிட்டிருந்தார்.

இன்னொருவரோ “எல்லாமே ஒரு காரணத்தோடு தான் நடக்கிற‌து.. எனவே தயவு செய்து வாழப் போராடுங்கள்” என்று கூறியிருந்தார்.

“கடவுள் எல்லாவற்றையும் ஒரு திட்டத்தோடும் நோக்கத்தோடும் தான் நிகழ்த்துகிறார். நீங்கள் ஒரு நல்ல உதாரணமாகி உத்வேகத்தின் அடையாளமாக விள‌ங்குங்கள்” என்று இன்னொருவர் குறும்ப‌திவில் வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்காவில் இருந்து ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்க‌ப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகளின் இணைய‌ முகவரிகளை அனுப்பியிருந்தார்.

“அற்புதங்கள் நிகழும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் ”

“சாத்தியமான எல்லாவற்றையும் முயன்று பார்க்காமல் உலகை விட்டு நீங்கள் செல்வதை நான் விரும்ப மாட்டேன் ”

முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்றாலும் இத்தனை பேர் நீங்கள் உயிர் வாழ விரும்புவதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் ”

இப்படி பலரும் டிவிட்டர் வழியே நிக்லின்சன் மரணத்தை கோரும் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற‌னர்.

நிக்கிலின்ச‌ன் இந்த ஆதரவு குரல்களால் நெகிழ்ந்து போயிருக்கிறார். “நான் என் முடிவை மாற்றி கொள்வேனா என்று அறிய பலரும் விரும்புகின்றனர்.. முதலில் நீதிமன்ற‌ தீர்ப்பு வரட்டும்” என அவர்களுக்கு பதில் அளித்திருந்தார்.

இப்போது 25,000 பேருக்கும் மேல் அவரை டிவிட்டரில் பின் தொடர்கிறார்கள்.

இதனிடையே நிக்லின்சன் தனது வழக்கறிஞர் பால் போவன் மூலமாக நீதி மன்றத்தில் தனது கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவில், 2007ம் ஆண்டு முதல் தனது வாழ்க்கையை முடித்து கொள்ள விரும்பி வருவதாக கூறியுள்ள அவர், தனது முடிவுக்கு எதிரான தீர்ப்பு மேலும் துன்பம் நிறைந்த வாழ்கையிலேயே தன்னை தள்ளி விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை போல உணவு அளிக்க வேண்டி இருக்கிறது.. என்னால் குளிக்க முடியாது, உடை மாற்ற முடியாது, உயிரை மாய்த்து கொள்வதைக் கூட மருத்துவர் உதவி இல்லாமல் செய்து கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். எனவே மருத்துவர் எனக்கு உதவினால், அவர் சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடாது என கேட்டுள்ளார்.

ஆனால் நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பளித்தாலும் உடனே இறந்து விட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்வது என்று அரசு எனக்கு உத்தரவிடுவதற்கு மாறாக, அதாவது விருப்பத்திற்கு மாறாக உயிர் வாழ்ந்து துன்பப்படுவதை விட என் வாழ்க்கையை நானே தீர்மானித்து கொள்ளும் உரிமை இருப்பது எனக்கு எத்தனை மன நிம்மதியை தரக்கூடியது தெரியுமா? என்று உருக்கத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

இறப்பதற்கு முன் நிக்லின்சன் தனது சுயசரிதையை எழுத விரும்புகிறார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நிக்லின்சன் மனைவி மற்றும் பிள்ளைகளின் கருத்தையும் நீதிமன்றம் கேட்க உள்ளது.

இந்த வழக்கு விசாரணை மனிதனின் தனிப்பட்ட உரிமை, அரசின் கடமை, உயிரின் அருமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான விவாதமாக மாறியுள்ளது. பிரிட்டனில் உள்ளவர் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இந்த வழக்கை பின் தொடர்ந்து வருகின்றனர்.

பார்க்கலாம், காலம் அவருக்கு என்ன வழி வைத்திருக்கிறது என்று!

டிவிட்டர் முகவரி : http://twitter.com/#!/TonyNicklinson

————

யூத்புல் விகடனுக்காக எழுதியது.

மலிவு விலையில் திரைப்பட டிக்கெட்கள் தரும் இணையதளம்..

எப்படியாவது டிக்கெட் வாங்கி திரைப்படம் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் துடித்ததெல்லாம் ஒரு காலம்.இதற்காக மணிக்ககணக்காக வரிசையில் காத்திருப்பார்கள்,பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்களை இடண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருப்பார்கள்.

ஆனால் இப்போதோ ரசிகர்கள் எப்போதோ தான் படம் பார்க்க வருகின்றனர்.அடித்து பிடித்து டிக்கெட் வாங்க எல்லாம் யாருக்கும் ஆர்வம் இல்லை.

விளைவு திரையரங்குகள் காற்று வாங்குகின்றன.ஹவுஸ்புல் போர்டு போட்டு வெறுப்பேற்றிய காலம் போய் இன்று பாதி திரையரங்கு நிறைந்தாலே பெரிய விஷயமாகி விட்டது.

ஹாலிவிட் முதல் கோலிவுட் வரை இந்த நிலை தான்.இதற்கான காரணங்கள் ஆய்வுக்குறியவை .அவை ஒரு புறம் இருக்கட்டும் இந்த நிலையில் இரு தரப்பினருக்குமே பயனளிக்கக்கூய வகையிலான சேவையை டீல்பிலிக்ஸ் இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.

டீல்பிலிக்ஸ் தளம் மலிவு விலையில் அதாவது டிக்கெட் விலையை விட 40 முதல் 50 சதவீதம் வரை குறிவான விலையில் வழங்குகிறது.இதன் மூலம் ரசிகர்களுக்கு குறைந்த விலையில் படம் பார்த்த பலன் கிடைக்கும் என்றால் திரையரங்குகளுக்கோ காலி இருக்கைகள் நிரம்பிய பலன் கிடைக்கும்.

அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள தளம் இது.

திரையரங்குகளில் கூட்டம் குறைந்து கொண்டே வருவது பற்றி பலரும் கவலை பட்டு கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சிறு தீர்வாக இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.

இந்த சேவையின் மூலம் குறைந்த விலையில் டிக்கெட் பெற விரும்பும் ரசிகர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் திரைப்படத்தையும்,பார்க்க விரும்பும் நாளையும் தேர்வு செய்து தெரிவிக்க வேண்டும்.எந்த பகுதியில் படம் பார்க்க விருப்பம் என்பதையும் குறிப்பிட வேண்டும் ,ஆனால் எந்த திரையரங்கம் என்பதை தேர்வு செய்ய முடியாது.(திரையரங்குகளுக்கு கவுரவ பிரச்சனையாக இருக்கலாம் என்பதால் இப்படி)

இதனையடுத்து டீல்பில்க்ஸ் தளம் உங்களுக்கான சலுகை விலை டிக்கெட்டை பரிந்துரைக்கும் .அதற்கு ஒப்புக்கொண்டு டிக்கெட்டை வாங்கி கொண்ட பின் எந்த திரையரங்கு என்பது தெரியவரும்.

விற்காத சரக்கை தள்ளுபடியில் தள்ளிவிடுவது போல தான் இதுவும்.ஆனால் ரசிகர்கள்,திரையரங்குகள் இரு தரப்பினருக்குமே ஆதாயம் தரக்கூடியது.

ஹாலிவிட்டில் ஆரம்பித்து விட்டார்கள்,கோலிவுட்டிலும் ஆரம்பிக்கலாம்.

யோசித்து பாருங்கள் சலுகை விலையில் கூட்டமாக கூட டிக்கெட்கள் பெற்று அரங்கை நிரப்பி விடலாம்.குழுவாக பார்க்க விரும்பும் ரசிகர்கள் கூடுதல் சலுகையும் கோரிப்பெறலாம்.

இணையதள முகவரி;http://www.dealflicks.com/movie_index.php

குறுக்கெழுத்து புதிர்களுக்கான இணையதளம்.

குறுக்கெழுத்து புதிர்கள் ஆங்கில நாளிதழ்களில் பிரிக்க முடியத ஒரு அங்கம்.தினசரி நாளிதழ் கையில் கிடைத்ததும் குறுக்கெழுத்து புதிர்களை விடுவிக்கும் செயலில் ஆர்வத்தோடு இறங்கி விடுபவர்களும் கனிசமாக இருக்கின்றனர்.

இத்தகைய குறுக்கெழுத்து பிரியர்கள் தினமும் நாளிதழ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றில்லை;அவர்கள் விரும்பும் நேரத்தில் குறுக்கெழுத்து புதிர்களை விளையாடலாம்.ஆன்லைன் கிராஸ்வேர்ட்ஸ் நெட் இணையதளம் இதற்கான வாய்ப்பை த‌ருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச குறுக்கெழுத்து புதிர்களின் இருப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது.அதோடு தினமும் புதுப்புது குறுக்கெழுத்துபுதிர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.எனவே குறுக்கெழுத்து பிரியர்கள் இந்த தளத்தில் எப்போது வேண்டுமானாலும் குறுக்கெழுத்து புதிர் விளையாட்டில் ஈடுபடலாம்.

பேனாவும் கையுமாக குறுக்கெழுத்து புதிர்களை விடுவித்து பழகியவர்கள் தங்களுக்கு தேவையான புதிரை தேர்வு செய்து அச்சிட்டு கொள்ளும் வசதியும் இருக்கிற‌து.விரும்பிய வடிவமைப்பில் அச்சிட்டு கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

அது மட்டுமா ஆர்வத்தோடு விடுவித்து கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட ஒரு வார்த்தை பிடி கொடுக்காமால் போக்கு காட்டி கொண்டிருந்தால் அதற்கு விடை காண்பதற்கான வழிகாட்டி பகுதியும் இதில் உள்ளது.ஏற்கன‌வே விடுவிக்கப்பட்ட புதிர்களின் விடை பட்டியலையும் பார்த்து தெளிவு பெறலாம்.

வலைப்பதிவாளர்கள் இந்த புதிர்களை தங்கள் பக்கத்திலும் இடம் பெற வைத்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

குறுக்கெழுத்து பிரியர்களுக்கு சரியான விருந்து இந்த தளம்.எல்லாம் சரி ஆங்கில தெரிந்த்வர்களுக்கு தானே இது தமிழில் இதே போல குறுக்கெழுத்து தளங்கள் இல்லையா என்று கேட்கலாம்.

தமிழ் குறுக்கெழுத்து புதிர்களை த‌ரும் தளங்களும் இருக்கின்றன.இவற்றில் அட்டகாசமாக இருப்பது தமிழ் பசில்ஸ் டாட் காம்.கொஞ்சு தமிழ்ல் கொஞ்சம் விளையாட என் அழைப்பு விடுக்கும் இந்த தளம் குறுக்கெழுத்து புதிர்களை பட்டியல் போடுவதோடு புதிர் பூங்கா,சொல்லாங்குழி என வேறு பல விளையாட்டு பகுதிகளையும் வழங்குகிறது.எல்லாமே தமிழ் மொழி சார்ந்த விளையாட்டுக்கள்.

சொலாங்குழி விளயாட்டு உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கிறது.ம்ரை சொல்லும் என அழைக்கப்ப‌டும் நினைத்திருக்கும் வார்த்தையை கண்டு பிடிக்கும் விளையாட்டு இது.

இதே போல குறள் வளையில் களைத்து போடப்பட்டிருக்கும் திருக்குறளில் இருந்து சரியான குரளை கண்டு பிடிக்க வேண்டும்.இதற்கான குறிப்புகளும் சுவாரஸ்ய்மாகவே இருக்கின்றன.ஒரு குறளுக்கான குறிப்பில் திமுகவை சொல்லவில்லை சூதாடும் மன்னனை சொல்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர பிற‌ குறுக்கெழுத்து புதிர் தளங்களுக்கான இணைப்பு பட்டியலும் இருக்கிறது.இவற்றில் ஒன்று புதிர்மயம் டாட் காம்.குறுக்கெழுத்து புதிர்களை விளையாடுவதோடு அவற்றை உருவாக்கி கொள்ளவும் வாய்ப்பு தருகிறது.

புதிர்மயத்துக்கான அறிமுக பகுதியில் தமிழ் குறுக்கெழுத்து புதிர்களின் தென்றல் இதழ் வாஞ்சிநாதன் முன்னோடி என்பதை அறிய முடிகிற‌து.இந்த புதிர்களை தொடர்ந்து விடுவித்த ஊக்கத்தில் எஸ் பார்த்தசாரதி என்பவர் குறுக்கெழுத்து புதிர்களுக்கான தளத்தை அமைத்திருக்கிறார்.

பொதுவாகவே இக்கால தலைமுறையினர் மத்தியில் தமிழில் படிப்பத்தற்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் இத்தகைய தளங்கள் தமிழ் மீதான ஆர்வத்தை வள்ர்த்தெடுக்க உதவும் என நம்பலாம்.

இணையதள முகவரி;

http://www.onlinecrosswords.net/

http://www.tamilpuzzles.com/

http://www.puthirmayam.com/index.php

http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html