Tag Archives: online

ஹாஷ்டேக் பிறந்த கதை தெரியுமா?

1-ts4Bq_xGIqK-A77lCe64ggஇணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரோடு ஸ்டோவ் பாயட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்டுவதை விட, பொருத்தமான ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி வாழ்த்துச்சொன்னால் உள்ளங்குளிர ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், இணைய உலகில் ஹாஷ்டேக் உருவாகி பிரபலமானதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒருவர் அதை உருவாக்கியவர். இன்னொருவர் அதை வழிமொழிந்து ஆதரித்தவர்.

ஹாஷ்டேக் என்றதும், # எனும் குறியீட்டுடன் இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் அடிக்கடி பகிரப்படும் பதங்கள் நினைவுக்கு வரும். நீங்களே கூட இத்தகைய பதகங்களை உருவாக்கி பகிர்ந்து இருக்கலாம் அல்லது, உங்களை கவர்ந்த தலைப்புகளுடன் இத்தகைய பதத்தை குறிப்பிட்டு நீங்களும் இணைந்திருக்கலாம். # முன்குறிப்புடன் அமையும் பதங்கள் ஹாஷ்டேக் என குறிப்பிடப்படுகின்றன. சமூக ஊடக மொழியின் பிரதான குறுக்கெழுத்து என இதை சொல்லலாம். வெறும் குறுக்கெழுத்து மட்டும் அல்ல, இணைய இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தவும், ஒருங்கிணைக்கவும் உதவும் ஆன்லைன் ஆயுதம். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் இந்த கருத்தை முழு மனதோடு ஆமோதிப்பார்கள்.

அந்த அளவுக்கு ஹாஷ்டேக் சமூக ஊடக உலகில் பிரபலமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றன. ஒரு கணக்குப்படி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் மட்டும் தினந்தோறும் 125 மில்லியன் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்படுபவை தனிக்கணக்கு.

ஹாஷேக் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ஏனெனில் இவை குறும்பதிவுக்கடலில் அவரவர் தங்கள் நோக்கத்திற்கும், தேவைக்கும் பொருத்தமான குறும்பதிவுகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டியாக இருக்கின்றன. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை ஒருங்கிணைப்பதற்கான குறியீடாக அமைவதன் மூலம் ஹாஷ்டேக் இதை சாத்தியமாக்குகிறது. அது மட்டும் அல்ல, குறும்பதிவுகள் சார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்கான வழிகாட்டியாகவும் ஹாஷ்டேக் அமைகிறது.

HASHTAG10_7F5CF76ECCDC4989B4A0D7F5DDEF92DFஹாஷ்டேக் மட்டும் உருவாக்கப்படவில்லை எனில் டிவிட்டர் சேவை இந்த அளவு பயனுள்ளதாக இருந்திருக்குமா? என்பது தெரியவில்லை. டிவிட்டர் உருவாக்கப்பட்ட போதே, அதில் குறும்பதிவுகளை வெளியிடுவது, நண்பர்களை பின் தொடர்வது உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் கூச்சலும், குழப்பமும் அதிகம் இருந்தது. தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கும் குறும்பதிவுகளில் பொருத்தமானவை பிரித்தறிவதற்கான வழி இல்லாமல் இருந்தது.

ஆனால், ஹாஷ்டேகின் அறிமுகம் இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு காண உதவியது. # எனும் அடையாளத்துடன் குறிப்பிட்ட மையக்கருத்தை சுட்டிக்காட்டும் குறிச்சொல்லை சேர்ப்பதன் மூலம் தொடர்புடைய குறும்பதிவுகளை எல்லாம் அந்த குறிச்சொல் கீழ் அடையாளம் காணலாம். உதாரணத்திற்கு இந்தியா கிரிக்கெட்டில் பெரிய அளவில் வெற்றி பெறும் போது, # இந்திய கிரிக்கெட் எனும் குறியீட்டை உருவாக்கி குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டால், இந்திய கிரிக்கெட் வெற்றி தொடர்பாக வெளியாகும் குறும்பதிவுகள் அனைத்தையும் இதன் கீழ் படித்துவிடலாம். இது ஒரு விவாதச்சரடாகவும் தொடரும். இந்த குறியீட்டை கிளிக் செய்தால் போதும், தொடர்புடைய குறும்பதிவுகளை வரிசையாக காணலாம்.

இந்த வசதி தான் டிவிட்டரில், தொடர்ந்து கைகொடுக்கிறது. சமூக ஊடக பயன்பாட்டல் வளைகுடா நாடுகளில் 2010 ம் ஆண்டில் வெடித்த அரபு வசந்தம் புரட்சியின் போது போராட்டக்கார்கள் கருத்துக்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் ஆயுதம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, பிளாக் லைவ்ஸ் மேட்டர் எனும் ஹாஷ்டேக் சமத்துவத்திற்காகவும் மனிதநேயத்திற்காகவும் குரல் கொடுக்க பயன்பட்டது. பேரிடர் காலங்களில் உதவிகளையும், நிவாரண பணிகளையும், பயனுள்ள உயிர்காக்கும் தகவல்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் கைகொடுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது, #சென்னை ரைன்ஸ், #சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவிகளை ஒருங்கிணைக்க வழிகாட்டின. மெரினாவில் தைப்புரட்சி அமைதியாக மலர்ந்து வெற்றி பெற்றதிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஹாஷ்டேக் முக்கிய பங்கு வகுத்தன. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களை முன்னிறுத்திவதிலும் ரசிகர்கள் ஹாஷ்டேக் ஆராதனை செய்வதை பார்க்கலாம்.

டிவிட்டரில் அறிமுகமாகி பின்னர் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக ஊடககங்களிலும் பிரபலமான ஹாஷ்டேக் இன்று, மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்யும் இணைய கூறுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்த பெருமை எல்லாம் ஒருவிதத்தில் சிறிஸ் மெஸினாவையே சேரும். அவர் தான், 2007 ம் ஆண்டில் முதல் முதலாக # குறியீட்டின் பயன்பாட்டை முன்வைத்தார். அப்போது அவர் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற சவுத் பை சவுத்வெஸ் எனும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு தொடர்பான குறும்பதிவுகளை அவரும் நண்பர்களும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனார். ஆனால் அந்த மாநாட்டில் ஆர்வம் இல்லாத மற்ற நண்பர்கள் இதை ரசிக்கவில்லை. நாம் முக்கியமாக கருதாத ஒரு மாநாடு தொடர்பான தகவல்கள் ஏன் நம்முடைய டைம்லைனில் ஏன் எட்டிப்பார்க்கின்றன என்று வெறுப்படைந்தனர்.

அப்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெஸினார் இது பற்றி யோசித்துப்பார்த்தார். டிவிட்டரில் எல்லா குறும்பதிவுகளையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், ஒருவர் தனக்கு தேவையானதை மட்டும் பார்ப்பதற்கான வழி என்ன எனும் கேள்வியோடு நண்பர்களோடும் பேசிப்பார்த்தார். டிவிட்டரில் விவாத குழுக்களை அமைக்கலாம் எனும் யோசனை உண்டானது. ஆனால் அது சிக்கலாக இருக்கும் என நினைத்தார். மிக எளிதான ஒரு வழி அவருக்கு தேவைப்பட்டது. இதனிடையே தான், இணைய அரட்டை அறைகளில் விவாதங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் பவுண்டு (#) குறியீடு இதற்கு பொருத்தமாக இருக்கும் எனத்தோன்றியது. உடனே கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன் என மனதுக்குள் பாடியபடி இந்த தகவலை குறும்பதிவாக பகிர்ந்து கொண்டார். ; http://chrismessina.me/

இது தொடர்பாக விரிவான விளக்கப்பதிவு ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சில நாட்கள் கழித்து ஸ்டோவ் பாய்ட் எனும் தொழில்நுட்ப வல்லுனர், இந்த கருத்தை ஆதரித்து ஒரு பதிவை வெளியிட்டார். ; http://stoweboyd.com/post/39877198249/hash-tags-twitter-groupings

ஹாஷ்டேக் எனும் பதத்தை அதில் அவர் முதல் முறையாக பயன்படுத்தியிருந்தார். இதன் பிறகு மெல்ல இந்த குறியீடு பயன்பாட்டிற்கு வந்தது. பயனாளிகள் மத்தியில் பிரபலமாகத்துவங்கிய பிறகு டிவிட்டரும் இதற்கு அதிகாரபூர்வமாக ஆதரவு அளிக்கவே சமூக ஊடக பதிவுகள் ஹாஷ்டேக் மயமாகத்துவங்கின.

இந்த குறியீட்டிற்கான மூல எண்ணத்தை முன் வைத்த மெஸினா இப்போது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார். ஓபன் சோர்ஸ் சமூகத்தின் ஆதாரவாளராக இருக்கும் மெஸினா, ஹாஷ்டேக் எண்ணத்தை ஒரு போதும் காப்புரிமை பெறவோ அதிலிருந்து லாபம் பெறவோ நினைக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார். இணைய சமூகத்திற்கான தனது பரிசளிப்பாக இந்த எண்ணத்தை கருதுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஹாஷ்டேக் அறிமுகமாகி பத்தாண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

——-

தளம் புதிது; ரோபோ முதலாளிகள் வருகிறார்கள்

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதே கூட பலதுறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோகலாம் எனும் அச்சமும் வலுப்பெற்று வருகிறது.

இந்த அச்சமும், கவலையும் உங்களுக்கும் இருந்தால், வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வருமா என்பதை சோதித்துப்பார்க்கலாம். ’வில் எ ரோபோ பி மைபாஸ்’ எனும் இணையதளம் இந்த கேள்விக்கு பதில் சொல்கிறது.

இந்த தளத்தில் ஒருவர் தான் பணியாற்றும் துறையை குறிப்பிட்டால், அந்த துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் மற்றும் ரோபோ சி.இ.ஒ வரும் வாய்ப்பு தொடர்பான தகவல் அளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் தொடர்பான கணிப்பை தெரிந்து கொள்ளலாம்.

உத்தேசமான கணிப்பு தான் என்றாலும் எதிர்காலம் பற்றி சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆர்டர் கியுலியன் என்பவர் இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றையும் இவர் எழுதியிருக்கிறார்.

இணையதள முகவரி: http://www.willrobotbemyboss.com/

 

 

செயலி புதிது; ஒளிப்படங்களை சீராக்க உதவும் செயலி

ஒளிப்படங்களை எடுக்க உதவும் செயலிகளைப்போலவே, ஒளிப்படங்களை திருத்தி மேம்படுத்த உதவும் செயலிகளும் அவசியம். இந்த வகையில், சிறந்த செயலிகளில் ஒன்றாக ஸ்னேன்சீட் செயலி தொழில்நுட்ப வலைத்தளங்களால் வர்ணிக்கப்படுகிறது.

ஒளிப்படங்களை சீராக்க இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. 29 வகையான டூல்கள் மற்றும் பில்டர்கள் இருக்கின்றன. ஒளிப்படங்களை கிராப் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளலாம். 90 கோணத்தில் மாற்றி அமைக்கலாம்.

தேவையில்லாத பகுதிகள் அல்லது இடையூறுகளையும் எளிதாக நீக்கலாம். மேலும் பலவித மாற்றங்களை செய்யும் வசதி இருக்கிறது. முக்கியமாக பழைய மாற்றங்களை திரும்பி பார்த்து மீட்கும் வசதியும் இருக்கிறது. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு தவிர ஐபோனிலும் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://support.google.com/snapseed#topic=6155507

 

 

 

ஆன்லைனில் அசத்தும் பர்னீச்சர் நிறுவனங்கள்

இந்திய இ-காமர்ஸ் துறையை பொருத்தவரை, ஆசிஷ் கோயல் மற்றும் அசிஷ் ஷா ஆகிய இருவரையும் தீர்க தரிசனம் மிக்கவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்களின் கணிப்பு படியே இ-காமர்ஸ் என்ப்படும் மின்வணிகச்சந்தை இந்தியாவில் விரிவடைந்துள்ளது. இதை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இருவரும் இந்திய மின் வணிக துறையின் முன்னோடிகளாகவும் உருவாகி இருக்கின்றனர்.

கோயலும், ஷாவும் இணைய பர்னீச்சர் விற்பனை தளங்களான பெப்பர் பிரை மற்றும் அர்பன் லேடர் ஆகிய வெற்றிகரமான நிறுவனங்களின் இணை நிறுவனர்கள். இணைய மூலமான விற்பனை என்பது பெரும்பாலும் புத்தகங்களும், ஆடைகளும், கேட்ஜெட்களும் என்றிருந்த நிலையில், இதே போலவே மேஜை நாற்காலிகளையும் ஆன்லைனில் வாங்கும் தேவையும், பழக்கமும் இந்தியர்களுக்கு ஏற்படும் என கணித்து அதனடிப்படையில் தங்கள் நிறுவனத்தை துவக்கி வெற்றி பெற்றுள்ளனர். இன்று இந்த பிரிவு மின்வணிக சந்தையில் போட்டி மிக்க பிரிவாக மாறியிருக்கிறது.

பெப்பர்பிரை மற்றும் அர்பன்லேடர் ஆகிய இரு நிறுவனங்களுமே ஏறக்குறைய ஒரே காலத்தில் துவக்கப்பட்டவை என்றாலும், இதன் நிறுவனர்கள் இதற்கான பாதையை கண்டறிந்த விதம் கொஞ்சம் மாறுபட்டவை.

இணையம் மூலம் பொருட்களை வாங்குவதில் இருந்த தயக்கங்கள் மறைந்து மின்வணிகம் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பர்னீச்சர்களையும் ஆன்லைனில் வாங்கும் வசதி என்பது இயல்பாக எதிர்பார்க்க கூடியது தான். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில், 2012 ம் ஆண்டு வரை இணைய பர்னீச்சர் விற்பனைக்கு என்று தனியே ஒரு நிறுவனம் துவங்கப்படவில்லை. மேஜை,நாற்காலி, சோபா ரகங்களை வாங்கும் தேவை எல்லோருக்கும் இருந்தாலும், பெரும்பாலும் இவை கடைகளிலேயே வாங்கப்பட்டன. பெரிய பிராண்ட்கள் சில இருந்தாலும் இத்துறை ஒருங்கிணைக்கப்படாததாகவே இருந்தது. அதோடு ஆன்லைனில் இத்தகைய பொருட்களை வாங்குவதும் இயல்பாக அமையவில்லை.

இந்த பின்னணியில் தான் அசிஷ் ஷாவும் அவரது நண்பரான அம்ப்ரீஷ் மூர்த்தியும் இணைந்து பெப்பர்பிரை இணைய நிறுவனத்தை துவக்க தீர்மானித்தனர். இருவருமே இணைய நிறுவன பரப்பில் அனுபவம் மிக்கவர்கள். மேலும் சில ஆண்டுகள் இந்திய ஏல நிறுவனமான பாஸி.காம் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இருவருக்குமே சொந்த நிறுவனம் துவக்க வேண்டும் என்ற கனவும் இருந்தது. இணைந்து செயல்படுவதை விட இதற்கு வேறு சிறந்த வழி என்ன? தங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள இணைய பர்னீச்சர் விற்பனையை தேர்வு செய்தனர்.

இந்த தேர்வுக்கு காரணம் இல்லாமல் இல்லை. இல்லங்களுக்கான பர்னீச்சர் அலங்காரம் என்பது எல்லையில்லா ரகங்களை கொண்டதாக பரந்து விரிந்து. ஆனால் அப்படியும் கூட ஆன்லையில் வாங்குவதற்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை. வேறு எந்த ஒரு நிறுவனமும் இணைய பர்னீச்சர் விற்பனையை இலக்காக கொள்ளாத நிலையில், ஷாவும், மூர்த்தியும் முழுவீச்சிலான பரினீச்சர் விற்பனையை இணையம் மூலம் அளிக்க தீர்மானித்தனர். இந்த எண்ணமே பெப்பர்பிரை நிறுவனமாக உருவானது. 2012 ம் ஆண்டு ஜனவரி மாதம் பெப்பர்பிரை செயல்படத்துவங்கியது.

பேஷன் ரகங்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் எப்படி இணையதளத்தில் பார்த்து, விரும்பிய ரகத்தை தேர்வு செய்து ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடிந்ததோ , அதே போல மேஜை நாற்காலி, கட்டில், சோபா உள்ளிட்ட பொருட்களை இணையத்தில் பார்த்து வாங்க பெப்பர்பிரை வழி செய்தது.

பர்னீச்சர்களை கடையில் வாங்குவதை விட இணையத்தில் வாங்குவது புதுமையாக மட்டும் அல்ல, வசதியாகவும் இருந்தது. கடைகளில் இருப்பிடம் பிரச்சனை என்பதால் எல்லா ரகங்களையும் காட்சிக்கு வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட சில ரகங்களை மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே விரும்பிய மாதிரியை தேர்வு செய்ய விரும்பும் வாடிக்கையாளர் கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். அப்படியும் விரும்பிய ரகம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. ஆனால் இணைய விற்பனையில் இந்த பிரச்ச்னை இல்லை. எல்லா வகையான பொருட்களையும் காட்சியில் வைக்கலாம். அவற்றை பல வகைகளின் கீழ் வரிசைப்படுத்தி பட்டியலிடலாம். புகைப்படங்களோடு அவை பற்றி விவரங்களையும் விரிவாக அளிக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் மனதுக்கு பிடித்த ரகத்தை தேடிப்பார்த்து தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது.

அதன் பிறகு ஆன்லைனில் ஆர்டர் செய்ததும், இல்லந்தேடி வந்து டெலிவரி செய்யப்படும். இந்த வசதி நகரபுற இந்தியர்களுக்கும் , இளம் வயதினருக்கும் ஏற்றதாக இருந்தது. இதுவே பெப்பர்பிரை தளத்தை வெற்றி பெற வைத்தது. அதன் பிறகு பெப்பர்பிரை இணைய விற்பனையில் தொடர்ந்து புதிய அம்சங்களை புகுத்தி வளர்ச்சி அடைந்து வருகிறது.

இது பெப்பர்பிரையின் கதை என்றால், அதன் பிரதான போட்டியாளரான அர்பன்லேடர் அதன் இணை நிறுவனரான ஆசிஷ் கோயலின் தனிப்பட்ட அனுபவத்தால் பிறந்த நிறுவனமாகும். எம்பிஏ பட்டதாரியான கோயல் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர். ஒரு கட்டத்தில் நண்பரான ராஜீவ் ஸ்ரீவத்ஸ்வாவுடன் இணைந்து சொந்தமாக நிறுவனம் துவக்க திட்டமிட்டார். இருவரும் பெங்களுரூவுக்கு குடிபெயர்ந்தனர்.

பெங்களூருவில் தங்கள் குடியிருப்புக்கான பர்னீச்சர்களை வாங்க முயற்சித்த போது, சரியான பொருட்கள் கிடைக்காமல் திண்டாடினர். அவர்கள் தேவைக்கேற்ற ரகங்கள் சந்தையில் கிடைக்காததோடு, இணையத்திலும் அது சாத்தியமாகவில்லை. இந்த சம்பவம் தான் கோயலை யோசிக்க வைத்தது. தனக்கு ஏற்பட்ட இதே அனுபவம் தானே மற்றவர்களுக்கும் ஏற்படும். எனில், இணையத்தில் பர்னீச்சர்களை விற்பதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதாக தோன்றியது. இந்த வாய்ப்பு உண்டாக்கிய நம்பிக்கையின் அடிப்படையில் இணைய பர்னீச்சர் கடையான அர்பன் லேடர் நிறுவனத்தை துவக்கினர். பெப்பர்பிரை துவங்கிய சில மாதங்கள் கழித்து துவக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது.  இணைய பர்னீச்சர் விற்பனை என்று சொன்னால், முதலில் நினைவுக்கு வரும் பெயர்களாக பெப்பர்பிரை மற்றும் அர்பன் லேடர் அமைந்துள்ளன. இந்நிறுவனங்களின் வெற்றியால் வேறு பல நிறுவனங்களும் இந்த பிரிவில் செயல்படத்துவங்கியுள்ளன. வுட்டன்ஸ்டீரிட், பேப்பரினீஷ்ம் ஹவுஸ்புல் ஆகிய இணைய நிறுவனங்கள் இப்பிரிவில் செயல்பட்டு வருகின்றன. மேலும் அமேசான், ஸ்னேப்டீல் போன்ற மின்வணிக நிறுவனங்களும் கூட இணைய பர்னீச்சர் விற்பனையை துவக்கியுள்ளன.

எனவே இந்த பிரிவு வேகமான வளர்ச்சி மற்றும் பலத்த போட்டியை கண்டு வருகிறது. ஆன்லைன் தரும் தேர்வுகள் மற்றும் வாய்ப்பு பர்னீச்சர் விற்பனையை பிரபலமாக்கியுள்ளது.

போட்டியை சமாளித்து வளர்ச்சி அடையும் வகையில் இந்நிறுவனங்கள் புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. பர்னீச்சர்களின் அளவை புரிந்து கொள்ளும் வகையில் அவற்றின் மீது மனிதர்களின் நிழலுருவத்தை பொருத்திப்பார்க்கும் வசதியை அர்பன் லேடர் வழங்கி வருகிறது. மேலும் பர்னீச்சர்களை வாங்கும் முன், வீட்டுக்கு தருவித்து சரியாக இருக்குமா என சோதித்துப்பார்க்கும் வசதியையும் அளிக்கிறது.

மேலும் பல அம்சங்களையும் அளித்து வருகின்றன. இவை பெரும்பாலும் தன்கள் சொந்த பர்னீச்சர்களை தயார் செய்து விற்கின்றன. பிராண்டட் பர்னீச்சர்களையும் வழங்குகின்றன. பரினீச்சர்களை பொருத்தவரை விலை அதிகமான பொருட்கள் என்பதும், பல்வேறு ரகங்கள் கொண்டவை என்பதும் சாதகமான அம்சங்களாகும். இவற்றில் பலரும் தனிப்பட்ட தேர்வுகளை எதிர்பார்ப்பதால் ஆன்லைன் வழங்கும் வாய்ப்பு வரப்பிசாதமாக இருக்கிறது. மேலும் அதிக விலை என்பது வருவாய்க்கும் வழி செய்கிறது. தள்ளுபடி என கூவி விற்காமலே வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய துறையாக இது விளங்குகிறது. அதுவே இணைய பர்னீச்சர் விற்பனையை மேலும் வளர்ச்செய்து வருகிறது.

 

 


 

 

விக்கிபீடியா உருவான வரலாறு!

360_wikipedia_0817இதோ இந்த நொடி உலகின் எதோ ஒரு மூளையில் இருக்கும் ஒருவர் புதிய தலைப்பிலான கட்டுரையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.இதே விநாடி இன்னும் சிலர் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் திருத்தங்கள் தேவையா? என பரிசீலித்துக்கொண்டிருக்கலாம். இன்னும் பலர் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பொறுப்புடன் இடம்பெறசெய்து கொண்டிருக்கலாம். யாருடைய கட்டளையும் இவர்களை இயக்கி கொண்டிருக்கவில்லை.பரிசையோ,பாராட்டியோ எதிர்பார்க்காமல் பங்களிப்பே தங்கள் கடமை என இவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த அயராத உழைப்பின் பலனை தான் இணைய உலகம் விக்கிபீடியா எனும் பெயரில் அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

கட்டற்ற கலைக்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் விக்கிபீடியா பாராட்டு மழை,சர்ச்சை பூகம்பங்கள் ,விமர்சன சூறாவளிகள் என எல்லாவற்றையும் கடந்து 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

இணைய உலகில் 15 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். இணைய சாம்ராஜ்யங்கள் உருவாகி,எழுச்சி பெற்று,பின்னர் மறக்கப்பட போதுமான காலம். சந்தேகம் இருந்தால் மைஸ்பேஸ் தளம் பற்றி நினைத்துப்பாருங்கள். 2003 ல் அறிமுகமான இந்த சமூக வலைப்பின்னல் தளம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி பின்னர் பேஸ்புக் மாயத்தில் எடுபடாமல் போய்விட்டது.
அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான பிரென்ட்ஸ் யுனைடெட் தளமும் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஜியோசிட்டிஸ் போன்ற புகழ் பெற்ற சேவைகளுக்கு இறங்கற்பா பாடியாகி விட்டது. புதிய அலை சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.

ஆனால் விக்கிபீடியா அதிகம் நாடப்படும் முன்னணி இணையதளங்களில் ஒன்றாக தொடர்கிறது.இந்த இணைய களஞ்சியம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.விக்கிபீடியாவின் வளர்ச்சி வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. எந்த தகவல் தேவை என்றாலும் விக்கிபீடியாவை நாடலாம் என்பதற்கு ஏற்ப விக்கிபீடியாவை பார்த்து வியக்கவும் அதனையே நாடலாம். விக்கிபீடியா புள்ளி விவரங்கள் பக்கம் விக்கிபீடியா மற்றும் அதன் சகோதர திட்டங்கள் விநாடிக்கு பத்து திருத்தங்கள் எனும் வேகத்தில் வளர்ந்து கொண்டிருப்பதாகம் குறிப்பிடுகிறது. சும்மா இல்லை விக்கி கலாச்சாரப்படி இதற்கான ஆதாரமும் இணைக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியா மொத்தம் 291 மொழிகளில் செயல்படுகிறது. பிரதான மொழியான ஆங்கிலத்தில் 5,058,949 கட்டுரைகளுக்கு மேல் இருக்கின்றன. தினமும் 800 புதிய கட்டுரைகள் இணைந்து கொண்டிருக்கின்றன. மாதம் 20,000 க்கு மேல் புதிய கட்டுரைகள் எனும் விகித்ததில் இந்த வளர்ச்சி இருக்கிறது. 2006 ல் 50,000 கட்டுரை என உச்சத்தில் இருந்திருக்கிறது.- https://en.wikipedia.org/wiki/Wikipedia:Statistics

ஆனால் எண்ணிக்கையை விட விக்கிபீடியாவை பற்றி வியப்பான விஷயம் அதன் பின்னே இருக்கும் இணைய சமூகம். துடிப்பு மிக்க அந்த சமூகத்தை இயக்கி கொண்டிருப்பது,யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை இடம்பெற வைக்கலாம், எவர் வேண்டுமானாலும் அதில் திருத்தங்களை செய்யலாம் எனும் இணைய ஜனநாயக பன்பு தான்! விக்கிபீடியாவின் பலமும் இது தான். அதன் நம்பகத்தன்மையை சந்தேகத்துடன் நோக்கி,முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இலக்காக்கும் பலவீனமும் இது தான்.
Jimmy Wales
ஆனால் கேள்விகள் மற்றும் தாக்குதல்களை மீறி விக்கிபீடியாவை வெற்றி பெற வைத்திருப்பது அதன் பங்கேற்பு ஜனநாயகம் தான். இந்த அம்சத்தால் தான் தன்னார்வல கட்டுரையாளர்கள் மற்றும் திருந்தங்களை செய்பவர்கள் ஈர்க்கப்பட்டு மகத்தான கூட்டு முயற்சியாக விக்கிபீடியாவை பளிச்சிட செய்து வருகின்றனர்.
விக்கிபீடியா இந்த அளவு விஸ்வரூப வளர்ச்சியை பெறும் என்று அதன் நிறுவனரான ஜிம்மி வேல்ஸே கூட நினைத்துப்பார்த்திருப்பாரா? என்று தெரியவில்லை.

இந்த வியப்புடன் விக்கிபீடியாவின் பிரம்மிக்க வைக்கும் வளர்ச்சியை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்!
2001ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி விக்கிபீடியா அறிமுகமானது. ஆனால் விக்கிபீடியா வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள அதற்கு முன்னர் நுபீடியாவையும், புரோமிராமிங் முன்னோடியான வார்ட் கன்னிங்ஹாமையும்(Ward Cunningham)தெரிந்து கொள்ள வேண்டும்.
நுபீடியா தான் ஒருவிதத்தில் விக்கிபீடியாவின் மூத்த சகோதரன். அதில் இருந்து கிளையாக பிரிந்து விருட்சமாக விக்கிபீடியா வளர்ந்திருக்கிறது.

நுபீடியா தான் ஜிம்மி வேல்சும் ,இணை நிறுவனருமான லாரி சாங்கரும் (Larry Sanger) இணைந்து உருவாக்கிய முதல் இணைய களஞ்சியம். வல்லுனர்கள் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளை, இணையவாசிகள் கொண்டு சரி பார்த்து வெளியிடும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது. ஆனால் பிரச்சனை என்ன என்றால் முதல் ஆறு மாதங்களில் 2 கட்டுரைகள் தான் உருவாகி இருந்தது. இதே வேகத்தில் (!) தொடர்ந்தால் களஞ்சியம் எப்போது முழுவதுமாக உருவாவது என ஜிம்மி வேல்ஸ் கவலைப்பட்டார். அவரது கவலையை பகிர்ந்து கொண்ட சாங்கர், இதற்கு துணையாக இன்னொரு களஞ்சியத்தை உருவாக்கலாம் எனு யோசனை கூறினார். நுபீடியா போல் அல்லாமல் இந்த களஞ்சியத்தில் ஆசிரியர் குழு மேற்பார்வை இல்லாமல் யார் வேண்டுமானல் பங்கேற்கலாம் ,திருத்தங்களை செய்யலாம் என்று கூறினார். இதன் விளைவாக பிறந்தது தான் விக்கிபீடியா.முதல் ஆண்டிலேயே அது 20,000 கட்டுரைகளுடன் ஆங்கிலம் தவர 17 மொழிகளில் கிளைப்பரப்பி அபார வளர்ச்சி பெறத்துவங்கியது.
விக்கிபீடியாவின் வெற்றிக்கு காரணம் பலரும் அறிந்தது போல, அதில் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை சேர்க்கலாம் மற்றும் திருத்தலாம் என்பது தான். ஆனால்,இந்த கட்டற்ற சுதந்திரம் பின்னே ஒரு சுய ஒழுங்கும்,கட்டுப்பாடும் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

விக்கிபீடியாவில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தமும் அதற்கான பக்கத்தில் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு திருத்தத்தையும் எவரும் பார்க்கலாம்.அதில் பழுதிருந்தால் புதிதாக சேர்க்கலாம். இரண்டும் சேர்ந்தே ஆவணப்படுத்தப்படும். பழுதான தகவலை திருத்த வேண்டும் என்றால் அதற்கான ஆதாரம் தேவை. இந்த ஆதாரங்களை சரி பார்த்து, ஏற்க தன்னார்வலர்கள் குழு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கட்டுரையை உருவாக்குபவர்களும், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்பவர்களையும் உள்ள்டக்கிய மாபெரும் இணைய சமூகமே விக்கிபீடியாவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

விக்கிபீடியாவில் தணிக்கை கிடையாது. ஆனால் அதற்கான விதிகள் இருக்கின்றன.நடுநிலை கடைபிடிக்கப்பட வேண்டும் எனும் கொள்கை இருக்கிறது.
திருத்தங்கள் இதை சாத்தியமாக்குகிறது. அதற்கான நியாயத்தை உறுதி செய்ய அதன் வரலாறும் சேமிக்க்கப்பட்டு வருகிறது.
உண்மையில் இந்த அம்சமும், புதிய பக்கங்களை மிக எளிதாக உருவாக்கி இணைக்கும் அம்சமுமே விக்கிபீடியாவின் ஆதார அம்சமாக இருக்கிறது. இந்த அடிப்படைக்காக விக்கிபீடியா சமூகமும், இணைய உலகமும் கன்னிங்ஹாமிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறது. ஏனெனில் அவர் தான், இதற்கான சாப்ட்வேர் அடித்தளமான விக்கியை உருவாக்கி தந்தவர்.

அமெரிக்காவின் ஆரேகோன் மாநிலத்தைச்சேர்ந்த கன்னிங்ஹாம் ,டெக்ட்ரானிக்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். புரோகிராமிங் புலியான அவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஹைபர்கார்ட் எனும் புரோகிராமில் விளையாடிக்கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாக அறிந்து கொண்டு புதிய இணைய பக்கத்தை இதில் உருவாக்குவது எளிதாக இருப்பதை அவர் கண்டுகொண்டார். இதை கொண்டு அவர் தனது நிறுவன ஊழியர்களிடம் அவர்களைப்பற்றிய பக்கங்களை உருவாக்கி தருமாறு கேட்டார். இந்த பக்கங்களை எல்லாம் இணைத்தால், யார் எந்த திட்டங்களில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று அவர் நினைத்தார்.

முதலில் ஊழியர்கள் இதை சந்தேகத்துடன் பார்த்தாலும் பின்னர், இது செயல்பட்ட விதம் கண்டு அசந்து விட்டனர். குறிப்பாக புதிய பக்கத்தை எளிதாக சேர்க்க முடிந்தது மற்றும் தங்களைப்பற்றிய விவரங்களை அதைவிட எளிதாக அப்டேட் செய்ய முடிந்தது கண்டு சொக்கிப்போயினர்.
இணைப்புகளை உருவாக்குவது,கூட்டு முயற்சியுடன் திருத்துவது மற்றும் வெளியிடுவது ஆகிய அம்சங்களை கொண்ட இந்த வசதியை அவர் இணையத்திற்கும் கொண்டு சென்றார்.

1995 ம் ஆண்டு இதன் இணைய வடிவத்தை அவர் அறிமுகம் செய்தார். முதலில் இதற்கு குவிக்வெப் என பெயர் வைக்க நினைத்தவர் தனது ஹவாய் பயணத்தின் தாக்கத்தால் ,விக்கிவிக்கி எனும் வேகத்தை குறிக்கும் ஹவாய் மொழி சொல்லை கொண்டு விக்கிவிக்குவெப் என பெயர் வைத்தார். விக்கிவிக்கிவெப் இணையதளம் மெல்ல வளர்ந்தது. இதனிடையே 2001 ல் ,
புதிய களஞ்சியத்தை உருவாக்க பொருத்தமான சாப்ட்வேர் தேடிக்கொண்டிருந்த லாரி சாங்கரிடம் விக்கி பயனாளி ஒருவர் இது பற்றி பரிந்துரைக்க விக்கிபீடியா உருவாகி விஸ்வரூபம் எடுத்தது.விக்கிபீடியாவின் துடிப்பு மிக்க சமூகத்தில் தமிழ் மொழியும் முக்கிய இடம் பிடித்திருப்பது பற்றி நாம் பெருமை கொள்ளலாம்.

———

flixed
தளம் புதிது; நெட்பிளிஸ் வழிகாட்டி

இணையத்தின் முன்னணி வீடியோ ஸ்டீரிமிங் சேவையான நெட்பிளிக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நெட்பிளிக்ஸ் விரிவாக்கம் செய்துள்ளது. நெட்பிளிக்சில் கட்டணம் செலுத்தி புதிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம். கட்டணத்தை மாதச்சந்தவாக செலுத்தும் வசதி தான் நெட்பிளிக்சின் கவரும் அம்சங்களில் ஒன்று. இந்தியாவில் இந்த சேவை எப்படி செயல்படும், என்ன விதமான வரவேற்பை பெறுகிறது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்றாலும், நெட்பிளிக்ஸ் ஒரு விதத்தில் பயனாளிகளை நிச்சயம் குழத்தில் ஆழ்த்தலாம்.நெட்பிளிஸ் வழங்கும் எல்லா படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எல்லோரும் பார்த்துவிட முடியாது. அவற்றில் பல குறிப்பிட்ட நாடுகளின் காப்புரிமை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை. எனவே பயனாளிகள் எந்த இட்த்தில் இருக்கிறார் என்பதை பொருத்தே அவர் பார்க்க கூடிய உள்ளடக்கம் அமையும். ஒரு வேளை உங்களுக்கு குறிப்பிட்ட படம் அல்லது நிகழ்ச்சி எந்த எந்த பகுதியில் பார்க்கலாம் என்பது பற்றிய தகவல் தேவை என்றால் பிக்செட்.இயோ தளம் அதற்கு வழி செய்கிறது. இந்த தளத்தில் எந்த எந்த பகுதியில் எந்த படங்களை பார்க்க முடியும் என எளிதாக தேடலாம்.
இணையதள முகவரி: http://flixed.io/

செயலி புதிது; வேளாண் செயலி’

எல்லா விவரங்களும் ஸ்மார்ட்போன் உதவியுடன் விரல் நுனியில் அணுகும் வசதி சாத்தியமாகி இருக்கிறது. இந்த வசதியை விவசாயிகளுக்கும் வழங்கும் வகையில் வேளாண் துறை அமைச்சகத்தால் அக்ரி மார்கெட் செயலி அறிமுகமாகியுள்ளது. இந்த செயலி மூலம் விவசாயிகள் மற்றும் வேளாண் வியாபாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சந்தைகளில் முக்கிய விளை பொருட்களின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி போனின் ஜிபிஎஸ் மூலமாக விவசாயிகளின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ற விலை விவரங்களை வழங்குகிறது.
அதே போல குறிப்பிட்ட இடத்தில் எந்த பொருளுக்கான விலையையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.brinvik.vksKBazar.app

unnamed

வீடியோ புதிது; தூக்கத்தின் பலன்

நல்ல தூக்கம் எல்லோருக்கும் அவசியம். அதே போல ’நேப்’ எனப்படும் குட்டித்தூக்கமும் அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள். குட்டித்தூக்கம் களைப்பை போக்கி, படைப்பூக்கத்தின் ஆற்றலை தரக்கூடியது என்கின்றனர். பல வெற்றிகரமான மனிதர்களுக்கு குட்டித்தூக்கம் பழக்கம் தான் கைகொடுக்கின்றன. குட்டித்தூக்கம் என்றால் அலுவலக நேரத்தில் குறட்டை விட்டு தூங்குவது அல்ல, சுறுசுறுப்பான நாளுக்கு இடையே கொஞ்சம் ஓய்வெடுப்பது. குட்டித்தூக்கத்தின் அருமை பற்றி புரிய வைப்பதற்காக நியூயார்க் பத்திரிகை எளிய யூடியூப் வீடியோவை உருவாக்கியுள்ளது. ஜெர்மனி விஞ்ஞானிகள் வயலின் கலைஞர்களின் பழக்க வழக்கம் பற்றி மேற்கொண்ட ஆய்வு உள்ளிட்ட விஷயங்களை கொண்டு இந்த வீடியோ எளிமையாக பல விஷயங்களை புரிய வைக்கிறது: https://www.youtube.com/watch?v=idCDmpUGIig


நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

Boy_Studying_620.jpg=s1300x1600

இணையத்தை உருக வைத்த ஏழை சிறுவனின் கல்வி ஆர்வம்

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோரும் தான் புகைப்படம் எடுக்கிறோம்- பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் இணையத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் அந்த புகைப்படத்தின் நாயகனான ஏழை சிறுவனை ஊக்கத்தின் அடையாளம் என மனதார பாராட்டுகிறது.அதைவிட முக்கியமாக அந்த சிறுவனுக்கு உதவிகள் குவிந்து அவனது வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது.

எல்லாம் அந்த ஒரு புகைப்படத்தால் நிகழ்ந்த மாற்றம் !
அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களும் கூட உருகிதான் போவீர்கள்!

ஒரு சிறுவன் டெஸ்க் முன் அமர்ந்து மங்கிய விளக்கொளியில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் புகைப்படம் தான் அது. சாதாரணமாக பார்த்தாலே கூட அந்த சிறுவனின் ஆர்வம் கவரக்கூடியதாக தான் இருக்கும். ஆனால் இந்த புகைப்படத்தின் பின்னணி தான் முக்கியமானது.

அந்த சிறுவன் அமர்ந்திருக்கும் இடம் வீடு அல்லது வீதி. ஆம், வசிப்பதற்கு வீடு கூட இல்லாத அந்த ஏழை சிறுவன், சாலையோரமாக அமர்ந்து அருகே உள்ள மெக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரண்ட் விளக்கு வெளிச்சத்தின் ஒளியில் சிரத்தையாக வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான்.
ஆர்வம் மற்றும் அர்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய அந்த காட்சியை தற்செயலாகப்பார்த்த ஜாய்ஸ் டோரேபிரான்கா எனும் மருத்துவக்கல்லூரி மாணவி தன்னை அறியாமல் ஸ்மார்ட்போனில் கிளிக் செய்து கொண்டார். வறுமை வாட்டும் நிலையை மீறி சாலையோரத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த அந்த சிறுவனின் ஆர்வம் அவரை அசர வைத்தது.
மறுநாள் இந்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். ” இந்த சிறுவனைப்பார்த்து நான் ஊக்கம் பெற்றேன்” என்றும் அந்த புகைபத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
filipino-homework-411x500
அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் , சூழலை மீறி அந்த சிறுவன் காட்டிய கல்வி ஆர்வத்தால் கவரப்பட்டு, ஊக்கம் பெற்று அந்த படத்தை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். இப்படியே அந்த படம் அடுத்தடுத்து 7,000 முறைக்கு மேல் பகிரப்பட்டு பேஸ்புக் முழுவதும் பரவியது. அப்படியே உள்ளூர் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிப்பரப்பாகி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.
அனைவரும் இந்த சிறுவனை ஊக்கத்தின் அடையாளமாக குறிப்பிட்டனர்.மோசமான வாழ்க்கை சூழலிலும் படிப்பில் கவனம் செலுத்தும் சிறுவனின் மன உறுதியை பாராட்டினர். இன்னும் சிலரோ எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டுப்பாடம் செய்யவும் படிக்கவும் முரண்டு பிடிக்கும் மாணவர்கள் இந்த சிறுவனை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தன்ர்.

இணைய உலகில் இப்படி தீவிர விவாதத்தை ஏற்படுத்திய அந்த சிறுவனை உள்ளூர் தொலைக்காட்சி தேடி கண்டுபிடித்து செய்தி வெளியிட்ட போது அவனைப்பற்றிய மேலும் விவரங்கள் தெரியவந்தது.

பிலிப்பைன்ஸின் மத்திய மாகாணமான செபுவில் உள்ள மாண்டேயு எனும் பகுதியில் சிறுவன் தனது அம்மா மற்றும் சகோதரருடன் வசிக்கிறான். அவனது பெயர் டேனியல் கேப்ரேரா. வயது 9. சிறுவனின் அப்பா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அம்மா ஸ்பினோசா தான் கிடைத்த வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். வாடகைக்கு கூட கொடுக்க முடியாத நிலையில் சாலையோரத்தில் இருக்கும் தற்காலிக ஷெட்டில் வசித்து வருகின்றன. ஆனால் இந்த வறுமை நிலையிலும் சிறுவன் கேப்ரேரா விடாமல் பள்ளிக்கு சென்று படித்துவருகிறான். வீடு இல்லாததால் தினமும் சாலையோரத்தில் மெக்டோனால்ட்ஸ் ரெஸ்டாரண்ட் விளக்கு வெளிச்சத்தில் வீட்டுப்பாடம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.
_84331104_gettyimages-111656508

Boy_Studying_620.jpg=s1300x1600
மகனுக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் என்றும் , படித்து முடித்து காவலராக வேண்டும் என்பது அவனது லட்சியம் என்றும் தொலைக்காட்சி பேட்டியில் ஸ்பினோசா கூறியிருந்தார். இந்த விவரங்களை எல்லாம் கேள்விப்பட்ட மக்கள் நெகிழ்ந்து போயினர்.குறிப்பாக சிறுவன கேப்ரேரா தன்னிடம் இரண்டு பென்சில்கள் மட்டும் இருந்ததாகவும் அதில் ஒன்றை பள்ளியில் மாணவர்கள் திருடிவிட்டதாகவும் கூறியதை கேட்டு மேலும் நெகிழந்தனர். இந்த சிறுவன் நன்றாக படித்து முன்னேற உதவி செய்வது தங்கள் கடமை என்று பலருக்கும் இயல்பாக தோன்றியதால் நிதி உதவியும் பொருளுதவியும் குவிந்திருக்கிறது. பலர் சிறுவனின் உதவித்தொக்கைக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர் என்றால் சிலர் எழுதுபொருள் மற்றும் மேசை விளக்கு வாங்கு கொடுத்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் சிறுவனின் கல்விக்கு நிதி திரட்டுவதற்காக என்றே தனி இணைய பக்கமும் துவக்கப்பட்டது; (http://bayanihanproject.com/projects/daniel-crowdfunding-campaign/ )
இந்த எதிர்பாராத உதவிகளால் சிறுவனின் தாய் திக்குமுக்காடி போயிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட கல்லூரி மாணவி ஜாய்ஸ் , ‘ ஒரு எளிய புகைபப்டம் இந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டு இந்த படத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கு எல்லாம் தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
வாழ்க்கையின் சூழலை மீறி ஊக்கத்துடன் செயல்பட டேனியல் கதை நமக்கெல்லாம் உதாரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.’உண்மை தானே!.

———-

ஆன் –லைன் விற்பனையில் வீடு வாங்கலாமா?

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் இந்தியாவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமாகி இருக்கிறது. மின் வணிகம் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்திருப்பதோடு,மின் வணிகம் மூலம் வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலில் விரிவடைந்திருக்கிறது.

இந்த பட்டியலில் இப்போது ரியல் எஸ்டேட்டும் சேர்ந்திருக்கிறது. ஆம், லட்சக்கணக்கில் மதிப்பு உள்ள வீடுகளையும் இப்போது மவுஸ் கிளிக்கில் வாங்கும் நிலை வந்திருக்கிறது.ஸ்மார்ட்போன்களுக்கும் ,ஆடைகளுக்கும் ஆன் –லைனில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுவது போல வீடுகளும் ஆன் –லைன் மூலம் அதிரடியாக விற்கப்படுகிறது.

கடந்த மாதம் 99 ஏக்கர்ஸ்.காம் நிறுவனம் இந்தியன் ரியாலிட்டி பிளேஷ் சேல் எனும் விற்பனையை நடத்தியது. பெரும் தள்ளுபடியில் வீடுகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது மேஜிக்பிரிக்ஸ்.காம் நிறுவனம் ஜூலை 18 ம் தேதி முதல் 10 நாள் கிரேட் ஆன் –லைன் ஹோம் பெஸ்டிவலை அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் சந்தை தேக்க நிலையில் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட வீடுகள் பல விற்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் புதிய திட்டங்களின் வேகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆன் –லைன் வழியை தேர்வு செய்துள்ளன.அவற்றை பொறுத்தவரை இது கூடுதலான ஒரு விளம்பரம் போல தான். அதோடு வீடு வாங்க தீர்மானித்து முடிவு எடுக்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க அதிரடி உத்திகள் உதவும் என்று எதிர்பார்க்கின்றன.தள்ளுபடி அளிக்கவும் தயாராக இருக்கின்றன.

ஆனால் இணைய விற்பனையில் வீடு வாங்குவது சரியாக இருக்குமா? நேரில் வாங்குவதாக இருந்தாலும் சரி ,இணையம் மூலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மாறுவதில்லை என்று வல்லுனர்கள் சொல்கின்றனர். வில்லங்கம் இல்லாமல் இருப்பது, பத்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வது ஆகியவை வாடிக்கையாளர்களின் பொறுப்பு என்கின்றனர். அதே போல கட்டுப்படும் வீட்டை நேரில் பார்த்து திட்டத்தின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் மாற்றம் இல்லை என்கின்றனர்.

மேலும் இந்த விற்பனையை குடியிருப்பு திட்டங்கள் பற்றி தகவல்களை திரட்ட பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். குறிப்பிட்ட பகுதியில் வீடுகளின் விலை மற்றும் தள்ளுபடி அளவை தெரிந்து கொண்டு நேரில் சென்று பார்த்துப்பேசி சாதகமான விலையை குறைக்கலாம் என்றும் வல்லுனர்கள் சொல்கின்றனர்.
ஆனால் ஒன்று பல குடியிருப்பு திட்டங்கள் தாமதமாகி கொண்டிருக்கும் நிலையில் கட்டப்பட்டு வரும் வீடுகளை விட, வாங்கியவுடன் குடியேறக்கூடிய கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதே சரியாக இருக்கும் என்கின்றனர். அதோடு புக் செய்த பிறகு வீடு பிடிக்கவில்லை என்றால் முதலில் செலுத்திய தொகை திருப்பு அளிக்கப்படும் வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கின்றனர்.விதிகள் மற்றும் நிபந்தனைகள், ப்ணத்தை செலுத்தும் காலம் மற்றும் டீலை முடிப்பதற்கு உள்ள அவகாசம் ஆகிய அம்சங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறனர்.