Tag Archives: songs

ஆறு மனமே ஆறு!அழைக்கும் இணையதளம்.


இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மன‌நிலை இல்லாத நேரங்களின் என்ன செய்வது.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவது போன்ற கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது நல்ல பாடல்களால் கூட அமைதி தர முடியாது.

ஆனால் இது போன்ற நேரங்களில் மனதிற்கு பேரமைதியை அளிக்க கூடிய ஆற்றல் கொண்ட இயற்கையோடு இணைந்த இசையை கேட்டால் அப்படியே ஒன்றி போய் விடலாம்.ரிலாக்சிங் நேச்சர் இணையதளம் இத்தகைய இசை அமைதியை தான் வ‌ழங்குகிறது.

இயற்கை சார்ந்த வண்ணமயமான பின்னணியை கொண்ட இந்த தளத்தில் பலவிதமான இயற்கை இசைகளை கேட்டு மகிழலாம்.எல்லாமே இயற்கையில் கேட்க கூடிய ஒலிகள்.

பற‌வைகளின் கீதங்கள்,வனங்களின் கிசுகிசுப்புக்கள்,மழையின் சங்கீதம்,அலைகளின் ஆர்பரிப்பு,இரவின் ரகசிய‌ம், என இயற்கையின் இன்னிசையில் லயித்து மகிழ வாய்ப்பளிக்கிறது இந்த தளம்.

எந்த வகையான் ஒலி தேவையோ அதனை தேர்வு செய்து கேட்டு மகிழலாம்.அதில் ஆழ்ந்து மன அழுத்தங்களையும் அன்றாட கவலைகளையும் மறக்கலாம்.புதிய உற்சாகம் பெறலாம்.

பணி சுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் போதோ அல்லது மன அழுத்ததின் பார்த்தை உணறும் போதோ அல்லது அலுப்பின் சிறையில் சிக்கி தவிக்கும் போதோ இந்த தளத்தின் மூலம் இயற்கை ஒலி கேட்டு புத்துணர்ச்சி பெறலாம்.

இணையதள முகவரி;http://relaxingnature.com/

(பி.கு; இளையராஜாவின் பல பாடல்களில் பறவைகளின் ஒலிகளை நுட்பமாக கேட்க முடியும் கவனித்திருக்கிறீர்க்ளா?உதாரணம்; இது ஒரு பொன் மாலை பொழுது பாடலில் கேட்கும் பறவையின் கீதம் )

அருமையான பாடல் தேடியந்திரம்.

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்திரம்.

கூகுலில் தகவல்களை தேடுவது போல மியூசிக் ஸ்மேஷரில் பாடல்களை தேடலாம்.எந்த பாடகர் அல்லது இசை கலைஞரின் பாடல் தேவையோ அவரது பெயரை குறிப்பிட்டு இதில் தேடலாம்.

பாடல்களை தேடித்தரும் இசை தேடியந்திரங்கள் பல இருந்தாலும் மியூசிக் ஸ்மேஷரில் சிறப்பு என்னவென்றால் இது இணையத்தின் முன்னணி இசை சேவைகளில் இருந்து பாடல்களை தேடி அவற்றை வரிசையாக தொகுத்து தருகிறது.

இசை பிரியர்கள் ஸ்பாட்டிபை,அர்டியோ,குருவ்ஷேக்,சவுண்டு கிளவுட்,பேன்ட் கேம்ப் உள்ளிட்ட இசை சேவை தளங்களை அறிந்திருப்பார்கள்.

மியூசிக் ஸ்மேஷரில் தேடும் போது அது இந்த இசை சேவை தளங்களில் எல்லாம் தேடி அவற்றில் உள்ள பாடல்களை அழகாக பட்டியலிடுகிறது.

ஸ்பாட்டிபை மற்றும் சவுண்டு கிளவுட் போன்ற சேவைகளை தீவிரமாக பயன்படுத்தும் இசை பிரியர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட பாடலை தேவை என்றால் இவற்றில் எல்லாம் தனிதனியே தேட வேண்டும்.ஆனால் மியூசிக் ஸ்மேஷர் அந்த தொல்லையே இல்லாமல் ஒரே கிளிக்கில் முன்னணி இசை சேவைகள் அனைத்திலும் தேடிப்பார்க்கும் வசதியை தருகிறது.

மேற்கத்திய பாடகர்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு தேடலாம்.நம்மூர் இளையராஜாவை தேடினாலும் பொருத்தமான முடிவுகள் வந்து நிற்பது கொஞ்சம் ஆறுதல்.ஆனால் தேர்ந்தெடுத்த பாடல்கள் என்று சொல்வது போல ஏதோ சில பாடல்கள் தான் வருகின்றன.

இணையதள முகவரி;http://www.musicsmasher.net/

வீடியோ வாக்கெடுப்பு நடத்த ஒரு இணையதள‌ம்.

யூடியூப் ,வீடியோ பகிர்வு தளம் என்பது பொதுவான அறிமுகம்.

பயனாளிகளுக்கோ அது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அவதாரம் எடுக்க கூடியது.நகைச்சுவை பிரியர்களை கேட்டால் யூடியூப்பில் சிரிக்க வைக்கும் வீடியோக்களை பார்க்கலாம் என்பார்கள்.இசை பிரியர்களை கேட்டால் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம் என்பார்கள்.(தமிழ் பாடல்களுக்கும் குறைவில்லை)திரைப்பட ரசிகர்களுக்கு,விளையாட்டு பிரியர்களுக்கு என்று ஒவ்வொருவருக்கும் யூடியூப் ஒரு அர்த்ததை தரக்கூடியது.கல்வி வீடியோக்களை கவனத்தோடு பார்த்து ரசிப்பவர்களும் இருக்கின்ற‌னர்.

இசை பிரியர்களை பொருத்தவரை யூடியூப்பில் கேட்டு ரசிக்கும் பாடல்களை பட்டியல் போடும் வசதியும் இருக்கிறது.அதாவது பிளேலிஸ்ட் தயாரிப்பது.

இப்படி பாடல் பட்டியலை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

பாடல் பட்டியல் தயாரிப்பது அதனை பகிர்ந்து கொள்வது பெரிய விஷயமல்ல;ஆனால் நண்பர்களோடு சேர்ந்து பாடல் பட்டியலை கூட்டாக தயாரிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?பூம்பாக்ஸ் தளம் அந்த வசதியை தான் தருகிறது.

இசையிலும் பாடலிலும் ஆர்வம் கொண்டவ‌ர்கள் இந்த தளத்தை பார்த்தால் சொக்கி போய்விடுவார்கள்.

இளையராஜாவின் பத்து சிறந்த பாடல்கள்,பாரதியாரின் திரை இசை பாடல்கள் என எந்த கருத்தின் அடிப்படையிலும் பாடல் பட்டியலை தயாரிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் இத்தகைய பட்டியலை தனியே உருவாக்கி விடலாம் தான்.அது தனிப்பட்ட ரசனையின் வெளிப்பாடாக இருக்கும்.ஆனால் இந்த பட்டியலையே நண்பர்கள் பங்களிப்போடு உருவாக்கினால் அது வேறு விதமாக தானே இருக்கும்.

அதை தான் இந்த தளம் சாத்திய‌மாக்குகிறது.நீங்கள் எந்த பட்டியலை உருவாக்க விரும்புகிறீர்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தையும் அளித்து ,அது தொடர்பாக நண்பர்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களையும் குறிப்பிட்டு மாதிரிக்கு ஒரு பாடல் வீடியோவை இணைத்து கொள்ளலாம்.இவை எல்லாம் அழகான விண்ணப்ப படிவம் போல ஒரு பக்கத்தில் வழங்க‌ப்படுகிற‌து.

இந்த பக்கத்தை தயார் செய்ததும் அதற்கான இணைய முகவரியை நண்பர்களோடு ப‌கிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் அதனை படித்து விட்டு தங்கள் பங்கிற்கு வீடியோவை சம‌ர்பித்தால் அவற்றை கொண்டு பன்முகத்தன்மை கொண்ட ஒரு பாடல் பட்டியல் உருவாகி நிற்கும்.அந்த பட்டிய‌லையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் பாடல்களின் பட்டிய்லை உருவாக்கி கொள்வதற்கான சேவை என்றாலும் இதனை மேலும் பல விதங்களில் பயன்படுத்த முடியும்.

மிகச்சிறந்த நகைச்சுவை வீடியோக்களை பட்டியலிட இதனை பயன்படுத்தலாம்.பார்க்க வேண்டிய படத்தை தீர்மானிப்பதற்கு முன் ப‌டங்களின் முன்னோட்டத்தை பட்டியலாக சம‌ர்பிக்க சொல்லலாம்.பார்க்க வேண்டிய இட‌ங்களை வீடியோவாக பரிந்துரைக்க சொல்லி அதன்டைப்படையில் சுற்றுலா இடத்தை தேர்வு செய்யலாம்.

இதை வீடியோ வாக்கெடுப்பாக கருதலாம் .இந்த வாக்கெடுப்பு வசதியை கொண்டு இந்த தளத்தை மேலும் புதுவிதமாக பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி;http://www.b00mbox.com/bb_main.php

பாடல்களை தேட ஒரு இணையதளம்.


என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, கோடிக்கணக்கான பாடல்களையும் பாடல் பட்டியலையும் வைத்திருக்கிறோம்,எல்லாம் நீங்கள் கேட்டு ரசிப்பதற்காக தான் என்று பெருமை கலந்த பணிவோடு அழைக்கிறது பிளேலிஸ்ட்.காம்.

பாடல் தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்.அதற்கேற்ப கூகுலும் யாஹூவும் எப்படி தகவல்களை தேடித்தருகிறதோ அதே போல தானும் பாடல்களை தேடித்தருவதாக பிளேலிஸ்ட் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது.

அது மட்டும் அல்ல எப்படி கூகுலிலும் யாஹூவிலும் இணைய பக்கங்களையும் புகைப்படங்களையும் சுதந்திரமாக தேடுகிறீர்களோ அதே போல இதில் பாடல்களை காப்புரிமை சிக்கல் இல்லாமல் சட்டப்பூர்வமான பாடல்களை தேடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசைப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான பாடல்களை கேட்டு ரசிக்க பிளேலிஸ்ட்டை நாடலாம்.பாடகரின் பெயர் அல்லது குறிச்சொல்லின் அடிப்படையில் பாடல்களை தேடிப்பார்க்கலாம்.ஏற்கவே தேடப்பட்டதன் அடிப்படையிலும் புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

பாடல்களை இங்கேயே கேட்டு ரசிக்கலாம்.அவற்றை கொண்டு நமக்கான பாடல் பட்டியலையும் உருவாக்கி கொள்ளலாம்.அதாவது பிளேலிஸ்ட்.

பாடல்களை தேடித்தரும் இணையதளங்கள் பல இருந்தாலும் இந்த தளம் கொஞ்சம் செழுமையாக இருப்பதாக தோன்றுகிறது.

ஆனால் பாடல்களை தேடும் வசதி இதன் ஒரு பகுதி தான்.தேடிய பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியே இந்த சேவையை மேலும் சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது.

விரும்பிய பாடல்களை தேடும் போதே அவற்றை கொண்டே பாடல் பட்டியலை உருவாக்கி கொண்டு அதனை,நான் கேட்ட பாடல்கள் என்று பேஸ்புக் டிவிட்டர் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இதே போல நண்பர்களும் அவர்கள் கேட்ட பாடல்களை பட்டியலாக பகிர்ந்து கொள்வார்கள் அல்லவா அதன் மூலம் புதிய பாடல்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

இசை சார்ந்த உரையாடல்களின் போது பரஸ்பரம் பாடல்களை பற்றி மெய்மறந்து பேசி கொள்ளும் போது இது வரை கேட்டிராத முத்தான பாடல்களை அறிமுகம் செய்து கொள்வது போலவே நண்பர்கள் இடையே பாடல் பட்டியலை பகிர்வதன் வழியாகவும் புதிய புதிய பாடல்களை எதிர்கொள்ளலாம்.

ஒவ்வொருவரின் ரசனையும் ஒரு விதத்தில் நுட்பமாக இருக்கும் அல்லவா?எனவே இந்த பகிர்வுகள் நமது ரசனை அனுபவத்தையும் எல்லையில்லாமல் விரிவடைய செய்யக்கூடியது.

ஒருவரின் ரசனையும் பாடல்கள் தேர்வும் பிடித்திருந்தால் அவரை பின் தொடரவும் செய்யலாம்.அவர் கேட்கும் புதிய பாடல்களை உடனுக்குடன் கேட்டு ரசிக்கலாம்.நண்பர்கள் மூலம் புதிய பாடல்களை பரிட்சயம் செய்து கொள்ள முடிவதோடு பாடல்கள் வாயிலாகவும் புதிய நண்பர்களை பெறலாம்.நட்பை வளர்த்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.playlist.com/

citysounds

நகரங்கள் கேட்கும் பாடலை கேட்க ஒரு இணையதளம்


பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி!

பொதுவாக பாடல் வகையின் அடிப்படையிலோ அல்லது இசையமைப்பாளர்கள்,பாடகர்களை மையமாக கொண்டோ தான் பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் .ஆனால் இந்த இணையதளத்தில் நகரங்களிம் அடிப்படையில் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நகரிலும் கேட்டு ரசிக்கப்படும் பாடல்களை இந்த தளம் முன் வைக்கிறது.ஆக உங்கள் அபிமான நகரை தேர்வு செய்து அந்நகரில் கேட்கப்படும் பாடல்களை நீங்களும் கேட்டு ரசிக்கலாம்.

முகப்பு பக்கத்திலேயே நகரங்களின் பெயர்கள் ஐகான்களாக வரவேற்கின்றன.அவற்றில் கிளிக் செய்தால் விரும்பிய நகரத்தின் பாடல்களை கேட்கத்துவங்கி விடலாம்.அந்த நகரத்து பாடல்கள் வரிசையாக தோன்றுகின்றன.

இவ்வாறு 32 நகரங்கள் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகின்றன.இந்த பட்டியலில் நீங்கள் தேடும் நகரம் அல்லது நீங்கள் வசிக்கும் நகரம் இல்லை என்றால் கவலைப்படாதீர்கள் ,முகப்பு பக்கத்தில் உள்ள நகரங்கள் பிரபலமாவையாக தேர்வு செய்யப்பட்டவை மட்டுமே.உங்களது நகரம் தேவை என்றால் உங்கள் நகரம் பகுதியில் கிளிக் செய்தால் உங்கள் நகரத்து பாடல்களின் பட்டியல் வந்து நிற்கிறது.

நகரில் கேட்கப்படும் பாட்ல்கள் மட்டும் அல்லாமல் ,அந்த பாட‌ல்கள் எந்த ரகத்தை சேர்ந்தவை மொத்தம் கேட்கப்பட்ட பாடல்கள் எத்தனை என்பது போன்ற புள்ளி விவரங்களும் தரப்படுகின்றன.

நகரங்களில் ஒலிக்கும் பாடல்கள் தற்போது கேட்கப்படும் தனமைக்கேற்ப புதுப்பிக்கப்படுவதால் தினம் தினம் புதிய பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அதோடு நகரங்களின் ரசனைக்கேற்ற பாடல்கலையும் கேட்டு ரசிக்கலாம்.அப்படியே நகரங்களின் மனநிலையையும் அறியலாம்.

பாடல்களை கேட்டு ரசிக்க எத்தனையோ வழிகள் ;இது புது விதமான வழி,அனுபவித்து பாருங்கள்!

இணையதள முகவ‌ரி;http://citysounds.fm/