அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!

wபடித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் என்றில்லை. இணைய வசதி இருந்தால், இணையத்திலேயே புரியாத எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு விடலாம். இதற்காக என்றே ஆன்லைன் அகராதிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அகராதிகளில் பல ரகம் இருப்பது போலவே இணைய அகராதிகளிலும் பல ரகம் இருக்கின்றன. அவற்றில் அசத்தலான அகராதிகள் சிலவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாமா?

இந்த அகராதிகளின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இவை அர்த்தம் தேடுவதை மேலும் சுவாரஸ்யமாக்குவதோடு , வார்த்தைகளுக்கான பொருளை காட்சிரீதியாவும் புரிய வைக்க கூடியவையாக இருக்கின்றன. அது மட்டுமா? அர்த்தம் தேடும் சொற்களுடன் தொடர்புடைய வேறு பல விஷயங்களையும் இவை தெரிந்து கொள்ள உதவுகின்றன.

இத்தகைய காட்சி அகராதிகளுக்கு அழகான உதாரணமாக வேர்ட்சென்ஸ்.மீ (http://wordsense.me/ ) அகராதி இருக்கிறது. வேர்டு சென்ஸ் தேடப்படும் வார்த்தைகளுக்கான அர்த்ததை அழகாக வரைபடம் போல காட்டுகிறது. இடது பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால் தேடிய சொல்லுக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சொல்லுக்கு பெயர்ச்சொல்லாக என்ன பொருள், வினைச்சொல்லாக இருந்தால் என்ன அர்த்தம் போன்றவற்றை இதைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படியே பக்கத்தில் பார்த்தால் , அந்த சொல்லுக்கு இணையான சொற்கள் மற்றும் தொடர்புடைய சொற்களின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அவற்றில் எந்த சொல்லை கிளிக் செய்தாலும் அதற்கான விளக்கமும் வரும். அந்த சொல்லுக்கான வார்த்தை வரைபடமும் வரும். ஆக, எந்த சொல்லாக இருந்தாலும் அதற்கான பொருளையும் பயன்பாட்டையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தால் இந்த இணைய அகராதி உங்களை கவர்ந்திழுத்துவிடும். ஏதோ இணைய விளையாட்டு ஆடுவது போல நேரம் போவதே தெரியாமல் இதை பயன்படுத்திக்கொண்டே இருக்கத்தோன்றும்.
இந்த அகராதியில் இன்னும் ஒரு சிறப்பு , நீங்கள் ஏற்கனவே தேடிய வார்த்தைகளையும் இது நினைவில் வைத்துக்கொண்டே அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கும். அதே போல இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் பட்டியலையும் கிள்க் செய்து பார்க்கலாம்.

எல்லாம் சரி, அகராதியை பாடம் படிப்பது போல படித்துப்பார்க்கலாம் என்றால் நம்ப முடிகிற்தா? கிட்ஸ்.வேர்ட்ஸ்மித் ( http://kids.wordsmyth.net/we/) இதை சாத்தியமாக்குகிறது. இதில் மற்ற அகராதிகள் போல புரியாத வார்த்தைக்கான பொருள் தேடலாம். குறிப்பிட்ட அந்த வார்த்தைக்கான விளக்கத்தை விரிவாக பார்க்கலாம். அந்த சொல்லின் சரியான உச்சரிப்பையும் ஆடியோவாக கேட்கலாம். இதே பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு சொல்லுக்கும் , வார்த்தை ஆராய்ச்சி, வார்த்தை வரலாறு ,வார்த்தை பாகங்கள் ஆகிய வசதிகள் இருப்பதை பார்க்கலாம். இதில் வார்த்தை ஆராய்சியை கிளிக் செய்தால் அந்த சொல்லின் பயன்பாடு தொடர்பான வாக்கியங்களை பார்க்கலாம். வாரத்தை வரலாறு அந்த சொல் தோன்றிய விதம் பற்றி தெரிந்து கொள்ளலாம். வார்த்தை பாகங்கள் பகுதியில் எந்த ஒரு சொல்லையும் பகுதி பகுதியாக பிரித்து பொருள் சொல்லப்படுகிறது.

இது வார்த்தை தேடலுக்கானது. முகப்பு பக்கத்தில் வார்த்தைகளுக்கான வழிகாட்டி எனும் வர்ணனையோடு பலவேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். வரலாறு, மனித உடல், பொருளாதாரம என பல தலைப்புகளை பார்க்கலாம். எந்த தலைப்பை கிளிக் செய்தாலும் அந்த தலைப்புக்கான முக்கிய சொற்களின் பட்டியல் வந்துநிற்கும். அந்த சொற்களுக்கான பொருளை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். வார்த்தைகளின் தங்கச்சுரங்கம் என்று இந்த வசதியை இந்த தளம் குறிப்பிடுகிறது. இதை பயன்படுத்திப்பார்ப்பு சுவாரஸ்யமானது என்பதோடு தினமும் புதிய சொற்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். வார்த்தை விளையாட்டு புதிர்களும் இதில் உண்டு. சிறுவர்களுக்கான தனி பகுதியில் இருக்கிறது. அதில் எல்லாமே காட்சிகளாக விளக்கப்பட்டிருக்கும்.
ஸ்னேப்பி வேர்ட்ஸ் ( http://www.snappywords.com/) அகராதி இன்னும் கூட சுவாரஸ்யமானது.

இதில் எந்த வார்த்தையை சமர்பித்தாலும் அந்த சொல்லை மையமாக வைத்துக்கொண்டு தொடர்புடைய சொற்களை வரைபட சித்திரமாக காட்டுகிறது. சொற்களின் அருகே மவுசை கொண்டு சென்றாலே அவற்றுக்கான விளக்கத்தை பார்க்கலாம். அந்த வார்த்தையில் கிளிக் செய்தால் , அந்த சொலை மையமாக கொண்ட வார்த்தை சித்திரத்தையும் பார்க்கலாம். ஒரு வார்த்தை மட்டும் அல்ல இரு வார்த்தை சொற்களையும் இப்படி தேடிப்பார்க்கலாம். இந்த சித்திரத்தில் சொற்களின் தன்மைக்கு ஏற்ப தனித்தனி வண்ணங்களிலும் அடையாளம் காட்டப்படுகின்றன. அதாவது வினைச்சொல் என்றால் ஒரு வண்ணம். பெயர்ச்சொல் என்றால் ஒரு வண்ணம். ஆங்கில சொற்களின் பயன்பாட்டை காட்சிரீதியாக மிக அழகாக புரிய வைக்கிறது இந்த அகராதி.
காட்பிரைனி (http://www.gotbrainy.com/ ) அகராதி சொற்களுக்கான விளக்கத்தை அளிப்பதுடன் அதை புகைப்படமாகவும் காண்பித்து வியக்க வைக்கிறது. சொற்களின் அர்தத்தை விளக்கும் இந்த படங்கள் மூலம் சொற்களின் பயன்பாட்டை இன்னும் கூட தெளிவாக புரிந்து கொள்ளலாம். இந்த புகைப்படங்கள் பெரும்பாலும் இணையவாசிகளால் சமர்பிக்கப்பட்டவை.

அகராதிகளை பயன்படுத்துவது இத்தனை சுவாரஸ்யமானதா என்று வியப்பை ஏற்படுத்தி , வார்த்தைகளுக்கு பொருள் தேடும் ஆர்வத்தையும் இந்த அகராதிகள் உருவாக்கும். அப்படியே உங்களை ஆங்கில புலியாகவும் ஆக்கிவிடும்.

2 thoughts on “அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!”

 1. Wordsense.me is not working. Can you give it a check. I googled to see whether there was any spelling error in the URL. It was correct but the site did not open.

  1. ஆம். அந்த தளம் செயல்படவில்லை. இணையதளங்களை அறிமுகம் செய்வதில் உள்ள தவிர்க்க இயலாத சங்கடம் இது. ஒரு நல்ல இணையதளம் ஏதோ ஒரு காரணத்தினால் பயன்பாட்டில் இல்லாமல் போகும் போவது இணையத்தில் அதிகம் நிகழ்கிறது. இது போன்ற நேரங்களில் ஏதோ நானே தவறிழைத்து போல ஒரு உணர்வு. என்ன செய்வது? பல நல்ல இணையதளங்கள் இப்படி காணாமல் போயிருக்கின்றன என்ன செய்ய!. இணையதளங்களை மிகுந்த கவனத்துடனே அறிமுகம் செய்தாலும் இந்த சங்கடம் துரத்துகிறது.
   வேர்ட்சென்ஸ் நான் பலமுறை பார்த்து பயன்படுத்திய தளம் .மிகவும் சிறப்பாக இருந்தது.
   உங்களுக்கு அந்த தளத்தை பார்க்கும் ஆர்வம் இருந்தால் வேபேக்மிஷினை முயன்று பார்க்கவும்; http://web.archive.org/web/20140814164439/http://wordsense.me/

   அன்புடன் சிம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *