அலுப்பை விரட்ட ஒரு இணையதளம்!

boredButtonஇணையத்தில் உலாவும் போது அலுப்பாக உணர்ந்தாலும் சரி, இணையத்துக்கு வெளியே சலிப்பை உணர்ந்தாலும் சரி, கொஞ்சம் இளைப்பாறி உற்சாகம் பெற உதவும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை. இந்த வகையில் முன்னணி தளமாக போர்ட் பட்டன் தளம் வந்து நிற்கிறது.

அலுப்புக்காக நன்கறியப்பட்ட ஆங்கிலச்சொல்லை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் போர் அடிக்கிறதா? என முகப்பு பக்கத்திலேயே கொட்டை எழுத்துக்களில் கேட்கிறது. பள்ளியில், பணியில், வாழ்க்கையில் என எதில் அலுப்பாக உணர்ந்தாலும் சரி, நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் என உற்சாகம் அளிக்கும் இந்த தளம், அலுப்பை போக்கி கொள்ள தளத்தின் மேல் பகுதியில் உள்ள சிவப்பு பட்டனை அழுத்துமாறு கூறுகிறது.

அந்த சிவப்பு பட்டனை கிளிக் செய்யும் போது ஆச்சர்யம் அளிக்கும் ஒரு இணையதளம் தோன்றுகிறது. அர்த்தம் பொதிந்த தளம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு வகையில் சுவாரஸ்யத்தை அளித்து கவனத்தை ஈர்க்கும் தளமாக இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு தளம், இரண்டு பூனைகளின் படங்களை வரிசையாக காண்பித்து அதில் எந்த படத்தை கிளிக் செய்கிறோம் என்பதை வைத்து பயனாளிகளின் நாடு, மாநிலம், நகரம் ஆகியவற்றை சரியாக சொல்கிறது. இன்னொரு தளம் வரிசையாக சீட்டுகளை காண்பித்து அதில் ஒரு சீட்டை மட்டும் மனதில் நினைக்கச்சொல்லி அடுத்த கிளிக்கில் அது என்ன சீட்டு என காண்பிக்கிறது. லேசான வியப்பை ஏற்படுத்தவும் செய்கிறது.

இப்படி ஒவ்வொரு முறை சிவப்பு பட்டனை கிளிக் செய்யும் போதும் அலுப்பை விரட்டும் அருமையான தளத்திற்கு அழைத்துச்செல்கிறது இந்த தளம். இணையத்தில் இத்தனை விநோதமான தளங்களா என வியப்பில் ஆழ்ந்து ரசிக்க, அப்படியே அலுப்பை மறக்க, இந்த தளத்தை நாடவும்.

இணையதள முகவரி:http://www.boredbutton.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *