Tag Archives: fans

கூகிள் வரைபடத்தில் உலககோப்பை கால்பந்து அரங்குகள்!

screen-shot-2014-06-04-at-8-02-12-amஉலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் உலக கோப்பை கால்பந்து வரும் 12 ந் தேதி கால்பந்தின் சொர்கபூமி பிரேசிலில் துவங்குகிறது. இணையத்திலும், தொலைக்காட்சியிலும் உலக கோப்பை ஆட்டங்களை பின் தொடர ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதிர்ஷ்டசாலி ரசிகர்கள் போட்டி நடக்கும் பிரேசில்லுகே நேரில் சென்று போட்டிகளை காணும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் நீங்கள் விரும்பினால் இப்போதே கூட பிரேசிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே உலக் கோப்பை போட்டிகள் நடைபெறும் அரங்களை கண்டு ரசிக்கலாம். தேடியந்திர நிறுவனமான கூகிள் தனது வரைபட சேவை மூலம் இதற்கான வசதியை செய்து தந்துள்ளது.

கூகிள் வரைபட சேவையின் ஒரு அங்கமான புகழ்பெற்ற ஸ்டிரீட் வீயூ வசதியில் பிரேசிலில் உலக கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் 12 நகரங்களில் உள்ள 12 கால்பந்து அரங்குகளின் தோற்றத்தையும் 360 டிகிரி கோண தோற்றத்தில் காணலாம். கூகுல் வரைபடர்த்தில் இதற்கான பகுதியில் (https://www.google.com/maps/views/streetview/brazils-world-cup-stadiums?gl=us ) வரசையாக 12 கால்பந்து அரங்குகளும் புகைப்படங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. முதல் போட்டி துவங்கும் சா பாவ்லோ நகரில் உள்ள அரேனா டி சா பாவ்லோ அரங்கில் துவங்கி உலககோப்பை நிறைவு பெறும் ரியோ டி ஜெனிரோவில் உள்ள அரங்கம் வரை 12 அரங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றில் எந்த அரங்கின் புகைப்படம் மீது கிளிக் செய்தாலும் அருகே இடது பக்கத்தில் அதன் 360 டிகிரி கோண தோற்றத்தை காணலாம். கூகிளி ஸ்டிரீட்வியூ காட்சிகளை இதற்கு முன்னர் ரசித்திருக்கிறீர்களா? நம்மை யாரோ காமிரா வழியே பார்க்க வைத்து அப்படியே காமிராவை சுற்றுப்புறம் முழுவதும் வலம் வரச்செய்வது போல அருமையாக இருக்கும். அதே விதத்தில் கால்பந்து அரங்கை காமிரா வழியே நமக்கு சுற்றுக்காண்பிக்கப்படும் உணர்வை பெறலாம். அது மட்டுமா நாம் விரும்பும் இடத்தில் மவுசை வைத்து அரங்கின் தோற்றத்தை எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரத்தி அல்லது பெரிதாக்கி பார்க்கலாம்.

கால்பந்து அரங்கை இப்படி 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் போது அதன் பிரம்மாண்டம் வியக்க வைக்கும். ( ஆனால் ரசிகர்கள் இல்லாத காலி இருக்கைகளை கொண்ட அரங்கை பார்ப்பது தான் சற்று வித்தியாசமாக இருக்கும் ) .
இப்படி வரிசையாக 12 அரங்களையும் காண்டலாம். அப்படியே பிரேசில் வரைபடத்தில் அவை அமைந்துள்ள இடத்தையும் பார்க்கலாம்.

கால்பந்து அரங்குகள் மட்டும் அல்ல, பிரேசிலின் கால்பந்து கலச்சாரத்தின் தனித்தன்மையையும் ஸ்டிரீட் வியூவில் பார்க்க முடியும்! ஆம் கால்பந்து ஆடுவதில் எப்படி பிரேசில் அணிக்கு ஒரு தனித்துவமான பாணி இருக்கிறதோ அதே போலவே கால்பந்தை கொண்டாடுவதில் அந்நாட்டு ரசிகர்களுக்கும் அலாதியான பாணி இருக்கிறது. பிரேசில் ரசிகர்கள் கால்பந்தை கொண்டாடுவதில் ஒரு அம்சம் ஒவ்வொரு உலககோப்பையின் போதும் அந்நாட்டு நகர தெருக்களை பிரம்மாண்ட ஓவியங்கள் மூலம் கால்பந்து மயமாக்குவது தான். இந்த முறை சொந்த மண்ணிலேயே உதைத்திருவிழா அரங்கேறும் நிலையில்பிரேசிலின் முக்கிய நகரங்கள் எல்லாம் இப்படி ஓவியங்களால் கால்பந்து மயமாகி இருக்கின்றன.
இந்த காட்சிகளையும் ஸ்டிரீவியூ தோற்றமாக காணலாம்: https://www.google.com/maps/views/streetview/brazils-painted-streets?gl=us

நகர தெருக்கள் எல்லாம் கால்பந்து ஓவியங்களால் வண்ணமயமாகி இருக்கும் இந்த காட்சிகளை 360 கோணத்தில் பார்க்கும் போது கால்பந்து ஜூரம் உச்சத்தை இப்போதே உச்சத்தை தொட்டுவிடும்.
ஸ்டிரீட்வியூ சேவையை இதற்கு முன்னர் பயன்படுத்தியது இல்லை என்றால் அந்த அனுபவத்
தை பெற இதுவே சரியான தருணம். அப்படியே பிரேசிலின் இகுவாகா தேசிய பூங்கா ( Iguaçu National Park ) போன்றவற்றையும் ஸ்டிரீட்வீவியூவில் ரசிக்கலாம்.

 

தியேட்டரில் டிவிட்டர் இருக்கைகள்!

tweet_seat-4f6cceb-introஅநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து கொள்வதற்கான இருக்கைகளை அமைப்பது தான் அந்த வசதி.

இப்படி டிவிட்டர் செய்பவர்களுக்காக என்றே தனி இருக்கைகளை ஒதுக்கும் வழக்கம் அமெரிக்க கலை அரங்குகளில் பிரபலமாகி வருகிறது.சமீபத்தில் கூட அமெரிக்காவின் மின்னேசோட்டாவில் உள்ள கலை அரங்கில் டிவிட்டர் செய்வதற்கான பிரத்யேக இருக்கை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திரையரங்குகளிலும் கூட டிவிட்டர் இருக்கைகள் அமைக்கப்படலாம்.

எதையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பரவலாகி வருவதன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்களில் ஒன்றாக கலை அரங்குகளிலும் டிவிட்டருக்கு இடம் கிடைத்திருக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் இதனை தலைகீழ் மாற்றம் என்று சொல்லலாம்.செல்போன் அறிமுகமாகி அவை பிரபலமாகத்துவங்கிய காலத்தில் அரங்கங்களில் நிகழ்ச்சி துவங்கும் முன் தயவு செய்து உங்கள் செல்போனை அனைத்து வைக்கவும் என்று வேண்டுகோள் வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.இன்னும் கூட பல அரங்குகளில் இந்த அறிவிப்பை கேட்கலாம்.

ஆனால் குறும்பதிவு சேவையான டிவிட்டரின் செல்வாக்கு அரங்குகளில் டிவிட்டர் செய்பவர்களுக்கு என்று தனி இடத்தை ஒதுக்க வைத்திருக்கிறது.

திரைப்பட அனுபவத்தில் டிவிட்டர் பிரிக்க முடியாத அம்சமாக மாறியிருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

ஆம்,திரைப்படத்தை பார்த்த‌தும் வீட்டுக்கு போன பின் நண்பர்களிடம் படம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டது அந்த காலம்.இப்போதெல்லாம் படம் பார்த்தவுடன் தங்கள் கருத்தை டிவிட்டர் கணக்கு வழியே குறும்பதிவாக தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடனேயே பகிர்ந்து கொண்டு விடுகின்ற‌னர்.அந்த கருத்துக்களை பலரும் அமோதித்து ரிடிவீட் செய்கின்றனர்.இல்லை மறுத்து பதில் குறும்பதிவிடுகின்ற‌னர்.

ஆக,படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே படம் எப்படி என்னும் கருத்து ரசிகர்களின் குறும்பதிவுகளாக உருவாக்கப்பட்டு விடுகிறது.உண்மையில் டிவிட்டரில் வெளியாகும் கருத்துக்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடியதாக கூட அமைந்து விடுகிறது.

நிற்க இதன் அடுத்த கட்டமாக இப்போதெல்லாம் படம் முடியும் வரை கூட இல்லை,இடைவேளையின் போதே படம் எப்படி என்னும் கணிப்பை குறும்பதிவுகளாக பகிரத்துவங்கி விட்டனர்.

குறிப்பாக இளம் ரசிகர்களிடையே இப்படி படம் பார்த்தவுடன் அல்லது படம் பார்க்கும் போதே விமர்சன கருத்துக்களை பகிர்ந்து கொள்வது பிரபலமாக உள்ளது.அதிலும் டிவிட்டர் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பரவலாக துவங்கியுள்ள நிலையில் திரையரங்கில் இருந்து டிவிட்டர் செய்வதும் அதிகரித்துள்ளது.

இப்படி ரசிகர்களில் பலர் ஸ்மார்ட்போனோடு வரும் போது அவர்களுக்கு தனி மரியாதை தந்தால் என்ன என்ற எண்ணம் உண்டாக கூடிய‌து இயல்பானதாகவே தோன்றுகிறது.

முதன் முதலில் 2009 ம் ஆண்டில் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஒபாரா இசை நாடக நிகழ்ச்சியின் போது அரங்கில் 100 இருக்கைகள் டிவிட்டர் செய்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

பாரம்பரிய இசை வடிவமான ஒபரா நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு குறைந்து வரும் நிலையில் இளம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் விளம்பர யுக்தியாக இந்த டிவிட்டர் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டன.

டிவிட்டர் யுகத்திற்கே ஏற்ற புத்திசாலித்தனமான யுக்தியாக இது பாராட்டப்பட்டாலும் இசை நாடகம் நடுவே டிவிட்டர் செய்ய அனுமதிப்பது அந்த நாடகத்தின் ரசனையை கொல்லும் செயல் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக ஒபாராவின் பாரம்பரிய ரசிகர்கள் ,நாடகத்தின் நடுவே போனை கையில் வைத்து கொண்டு டிவிட்டர் செய்வதை ரசனைக்கு விரோதமானதாக கருதி கடுமையாக விமர்சித்தனர்.குறும்பதிவில் கவனம் செலுத்தினால் நாடகத்தின் நுணுக்கங்களை ரசிப்பது எப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

விமர்சன‌ங்களை மீறி இந்த யுக்தி மெல்ல பரவலாக துவங்கியது.ஒரு கட்டத்தில் புகழ் பெற்ற பிராட்வே திரையரங்கிலும் டிவிட்டர் இருக்கைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து சில திரையரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் இத்தகைய டிவிட்டர் இருக்கைகள் அமைக்கப்பட்டன.புது யுக ரசிகர்களை கவர்வதற்கான புதுமையான முயற்சியாக இவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.’

எல்லா நிகழ்வுகள் பற்றியும் முதல் கருத்துக்கள் டிவிட்டரில் வெளியாகி வரும் நிலையில் திரையரங்கம் போன்றவற்றில் டிவிட்டர் செய்பவர்களுக்கு என்று தனி இருக்கைகள் அமைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளகூடியதாகவே கருதப்படுகிறது.

ஆக இந்த வழக்கம் வெகு விரைவில் இங்கும் பிரபலமாகலாம்.

திரையரங்கம் சார்ந்த தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகம் செய்வதில் முன்னணியில் இருக்கும் சத்யம் திரையரங்கம் இந்த வசதியையும் முதலில் அறிமுகம் செய்யலாம்.

விளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.


விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும் சில அலுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்கள் வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் கோபத்தையும் ஏற்படுத்தலாம்.

விமர்சனங்களின் வீச்சையும் தாக்கத்தையும் க‌ருத்தில் கொண்டு பார்க்கும் போது கோபத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை கடுமையாக விமர்சிக்க தோன்றும்.

ஆனால் விளம்பரங்கள் என்பது ஒரு வழி பாதையாயிற்றே,அதாவது விளம்பரங்களை பார்க்கவும் கேட்கவும் தானே முடியும் அவற்றுக்கு பதில் அளிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.விளம்பரங்களை விமர்சனம் செய்வது எப்படி சாத்தியம் என்று ஏக்கத்துடன் கேட்டால் அதற்கு ஒரு வழி, இணைய வழி இருக்கிறது.

‘ஆட்யாப்பர்’ இணையதளம் தான் அந்த வழி.

விளம்பரத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கான இந்த தளம் எந்த ஒரு விளம்பரத்தின் மீதும் உங்கள் பங்கிற்கு கருத்தை சொல்லலாம் என அழைக்கிறது .கருத்து என்பது விருப்பமாக இருக்கலாம்,வெறுப்பாக இருக்கலாம்,காட்டமான விமர்சனமாகவும் இருக்கலாம்.

இதற்கு உதவும் வகையில் இந்த தளத்தில் பிரபலமான விளம்பர வீடியோக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.உங்களுக்கு தேவையான விளம்பரத்தை கிளிக் செய்து அந்த விளம்பரம் தொடர்பான கருத்தை பதிவு செய்யலாம்.

விளம்பரம் பிடித்திருந்தால் முதலில் பேஸ்புக் பாணியில் லைக் செய்து விடலாம்.இல்லை வெறுத்து விடலாம்.அதன் பிறகு விளம்பரத்தின் உள்ளடக்கம் அல்லது உருவாக்கத்தில் ஏதேனும் ஆட்சேபம் அல்லது எதிர் கருத்து இருந்தால் அதனையும் பதிவு செய்யலாம்.

நீங்கள் குறை கூற விரும்பும் முகப்பு பக்கத்தில் இல்லை என்றால் அதனை குறிப்பிட்டு தேடியும் பார்க்கலாம்.உலகம் முழுவதும் உள்ள எந்த விளம்பரம் மீதான கருத்தையும் தெரிவிக்கலாம் என்று என்றாலும் இப்போதைக்கு எல்லா விளம்பரங்களும் இருப்பதாக தோன்றவில்லை.

எனினும் விளம்பரங்களை பார்த்து ரசிக்க மட்டுமே நேரிடும் நிலையில் அவற்றின் மீதான‌ கருத்தை சாமான்யர்கள் வெளிப்படுத்த வழி செய்யும் இந்த தளத்தை வரவேற்கவே செய்யலாம்.

இந்த தளத்தின் அறிமுக பகுதில் குறிப்பிடப்படுவதை போல விளம்பர‌ங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன.விளம்பரங்கள் எப்படி எல்லாமோ இருக்கின்றன.ஆனால் அவை பற்றிய நமது கருத்தை தெரிவிக்க தான் வழியில்லாமல் இருக்கிறது.

ஒரு சில விளம்பரங்கள் குறித்து சமூக வல்லுனர்களும் நிபுணர்களும் விமர்சன கருத்துக்களை பதிவு செய்கின்ற‌னறே தவிர விளம்பங்களின் பிரதான நுகர்வோரான சாமான்ய மக்கள் தங்களை கருத்தை குரலாக வெளிப்படுத்த எந்த வழியும் இல்லை.

அதற்கு அழகான இணைய தீர்வாக தான் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நுகரவோர் கருத்திற்கேற்ப அதிகம் விரும்பபட்ட,வெறுக்கப்பட்ட விளம்பரங்களையும் இங்கே பார்க்கலாம்.பிரபலமான விளம்பரங்களையும் பார்க்கலாம்.அவரை தொடர்பான விமர்சன உரையாடலையும் பார்க்கலாம்.

இந்த தளம் சொல்வது போல விளம்பரங்கள் மீது கருத்து சொல்லும் அதிகாரத்தை நுகர்வோருக்கு வழங்குவதோடு அதன் வாயிலாக தங்கள் விளம்பரங்கள் பற்றி பொது மக்களின் கருத்துக்களை நிறுவனங்களும் அறிந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.

இணையதள முகவரி;http://www.adyapper.com/

அப்துல் க‌லாமின் பேஸ்புக் பக்கம்!

கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார்.

ஒரு மில்லியன் வலுவான சமூகமாக திகழ்கிறோம் என அவரே மகிழ்ச்சியோடு இது பற்றி சொல்லியிருக்கிறார்.சமூகம் என கலாம் சொல்வது அவருக்கு பின்னே திரண்டிருக்கும் பேஸ்புக் சமூகத்தை.

ஆம் பேஸ்புக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலாமின் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது.

இளைஞர்களின் கூடாரமாக திகழும் பேஸ்புக்கில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகரான கலாம் பத்து லட்சம் நண்பர்களை பெற்றிருப்பது ஒன்று வியப்பில்லை தான்.ஆனால் இந்திய மக்கள் மத்தியில் அவர் பெற்றிருக்கும் நன்மதிப்பிற்கும் செல்வாக்கிறகும் அடையாளமாக இந்த எண்ணிக்கையை கருதலாம்.

டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் மில்லியன் கணக்கில் பின்தொடர்பாளர்களையும் நண்பர்களையும் பெறுவது என்பது பாப் பாடகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் சாத்தியமாகி வரும் நிலையில் கலாம் போன்ற மக்கள் தலைவர்கள் இத்தகைய இணைய செல்வாக்கை பெற்றிருப்பது வரவேறகத்தக்கது.

யோசித்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது.இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கு இது சாத்தியம்?முதலில் பெரும்பாலான தலைவர்களுக்கு பேஸ்புகின் முக்கியத்துவம் புரிவதே கடினம்.அப்படியே புரிந்தாலும் அதன் சூடசமங்கள் புரிவது இன்னும் கடினமானது.

பகிர்வுக்கான சாதனமான பேஸ்புக்கையும் புகழ் பெறுவதற்கான இன்னொரு வழியாக அவர்கள் கருதி விட வாய்ப்புள்ளது.மேலும் பேஸ்புக்கின் செல்வாக்கால் கவரப்பட்டு அதில் அடியெடுத்து வைத்து விட்டு உதவியாளர்களை விட்டு பதிவுகளை எழுதச்சொல்லக்கூடும்.

ஆனால் கலாம் ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு பேஸ்புக்கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.81 வயதில் கலாமிற்கு இருக்கும் சுறுசுறுப்பும் கருத்துக்களை பகிர்வதில் உள்ள ஈடுபாடும் தான் அவரை பேஸ்புக் நாயகனாக ஆக்கியிருக்கிறது.

அதோடு தனது மைய இலக்கில் அவர் உறுதியாக இருக்கிறார்.வலுவான இந்தியாவை உருவாக்க இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்துவதை கலாம் தன் உயிர் மூச்சாக கொண்டிருப்பதை அவரது பேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.

வழக்கமான தலைவர்களில் இருந்து விலகி மனதில் உள்ள லட்சியத்தை பகிர்ந்து கொள்வதில் கலாமிற்கு உள்ள விருப்பத்தை அவர் ஜனாதிபதியாக இருந்த போது கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலேயே பார்த்திருக்கிறோம்.எல்லா நிகழ்ச்சிகளிலுக் ஏதாவது ஒரு செய்தியை மனதில் பதிய வைக்க அவர் தவறியதில்லை.அதோடு உரையாற்றினோம் விடைபெற்றோம் என்றில்லாமல் பார்வையாளர்களோடு உரையாடி ஊக்கப்படுத்தவும் அவர் தவறியதில்லை.

குறிப்பாக இளைஞர்களையும் சிறார்களையும் கலாம் தனி கவனத்தோடு அணுகினார்.அவர்களை கவர்ந்தார்.கனவுகளை விதைத்தார்.

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவரது இந்த பணி தொடர்கிறது.இப்போது பேஸ்புக்கிலும் விரிவாகி இருக்கிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் கலாம் பேஸ்புக்கில் உறுப்பினரானார்.அதன் பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் தனது சுற்றுப்பயண விவரங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

முக்கிய நிகழ்வுகள் பற்றிய தனது கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.சச்சினின் நூறாவது சதத்தில் துவங்கி,தாராசிங் மரணம்,ஹிக்ஸ் போசன்ன் துகளில் இந்திய விஞ்ஞானி போசின் பங்கு,கூடங்குளம் சர்ச்சை என எல்லா முக்கிய நிகழ்வுகள் பற்றியும் கலாம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பேஸ்புக் கலாச்சாரத்தை நன்கறிந்தவர் போல நிகழ்ச்சிகள் பற்றி புகைப்படங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.அவரது பதிவுகள் எல்லாமே ஏதோ ஒரு செய்தியோடு சுவாரஸ்யமாகவே உள்ளது.

பல பகிர்வுகள் சிந்தனையை தூண்டுகின்றன.

டாக்கா நிகழ்ச்சி ஒன்றில் சன்க்யுதா என்னும் ஆறு வயது சிறுமி உங்களுக்கு விஞ்ஞானத்தில் ஆரவம் உண்டா என கலாமிடம் கேட்கிறாள்.கலாம் விஞ்ஞான்ம் தான் என வாழ்க்கை என பதில் அளிக்கிறார்.இதை கேட்ட சிறுமி அப்படியென்றால் நானும் விஞ்ஞானத்தை விரும்ப என்ன வழி என்று ஆர்வத்தோடு கேட்கிறாள்.இதை குறிப்பிடும் கலாம் இதே கேள்வியை நம்மிடம் எழுப்புகிறார்.கல்வியாளர்கள்,விஞ்ஞானிகளாகிய நாம் விஞ்ஞானத்தை எப்படி விரும்பக்கூடியதாக மாற்றப்போகிறோம் என்று.

இந்த ஆர்வம் தான் கலாம்.

இந்த ஆர்வம் தான் அவரை இளைஞர்களுக்கு நெருக்கமானவராக ஆக்கியிருக்கிறது.

கலாமின் ஒவ்வொரு பதிவும் அவரது அனுபவத்தையும் நம்பிக்கையையும் வெளீப்படுத்துவதாக இருக்கிறது.ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றிருக்கிறது.நூற்றுக்கணக்கான பின்னுட்டங்களை கொண்டிருக்கிறது.ஆக கலாம் இந்த பக்கம் மூலம் இளைய இந்தியாவோடு தீவிரமான உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இந்த உரையாடலாக கவரப்படும் இளைஞர்கள் மத்தியில் டேர்கெட் 3 பில்லியன்,வாட் ஐ கேன் கிவ் மிஷன் போன்ற திட்டங்களுக்கான ஆதரவையும் திரட்டி வருகிறார்.

தொழிநுட்பத்தின் அருமையை உணர்ந்த கலாம் பேஸ்புக்ககை தலைவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என வழி காட்டி வருகிறார்.

ஏற்கனவே கலாம் இணையத்தை சிறந்த முறையில் பயனபடுத்தி வருகிறார்.அப்துல்கலாம் டாட் காம் என்னும் முகவரியில் அவரது வலைமனை உள்ளது.யூடியூப் வாயிலாகவும் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பேஸ்புக் பலரால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கலாம் பேஸ்புக்கின் வீச்சுக்கும் ஆற்றலுக்கும் சான்றாக விளங்கி வருகிறார்.

கலாமின் பேஸ்புக் முகவரி;http://www.facebook.com/OfficialKalam

இசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும்.இரு தர்ப்பினராலுமே இந்த தளத்தை புறக்கணித்து விட முடியாது.இசையில் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை விரும்பியே ஆக வேண்டும்.

இந்த தளம் அப்படி என்ன செய்கிறது என்றால் இசை நிகழ்ச்சிகளின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் ஒலி தரத்தை மேம்படுத்தி தருகிறது.இதனை இந்த தளம் சாத்தியமாக்கி தரும் விதம் மிக எளிமையானது என்றாலும் சும்மா அற்புதமானது.

ரசிகர்களின் இசை வீடியோக்களுக்கு ஸ்ருதி பேதமில்லாத துல்லியமான ஒலியை இந்த தளம் வழங்குகிறது.

அதாவது ரசிகர்கள் படம் பிடித்து யூடியூப்பில் பதிவேற்றும் இசை நிகழ்ச்சிக்கான வீடியோவில் மூல ஒலி அமைப்பை இந்த தளம் இணைத்து தருகிறது.

இந்த அற்புதத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இந்த வீடியோ யுகத்தில் பெரும்பாலானோரிடம் வீடியோ கேமிரா இருக்கிறது அல்லது வீடியோ வசதி கொண்ட செல்போன் இருக்கிறது.ஆக எந்த நிகழ்ச்சிக்கு என்றாலும் அதனை படம் பிடிக்கும் ஆர்வமும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது.படம் பிடித்த பிறகு அதனை யூடியூப்பில் பதிவேற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இக்கால இயல்பாக இருக்கிறது.

இசை பிரியர்கள் என்றால் இசை நிகழ்ச்சிகளை படம் பிடித்து அதனை யூடியூப்பில் பதிவேற்றி பகிர்ந்து இன்பம் காண்கின்றனர்.என்ன இருந்தாலும் அபிமான பாடகர் அல்லது அபிமான இசைக்குழுவின் கச்சேரியை லைவாக படம் பிடித்து பகிர்ந்து கொள்வது அலாதியான இன்பம் தானே.

முன்பெல்லாம் இசை நிகழ்ச்சிக்கு சென்று வந்தால் நண்பர்களிடம் நிகழ்ச்சியில் கேட்டு ரசித்த பாடல்கள் பற்றி வார்த்தைகளில் தான் வர்ணிக்க வேண்டும்.இப்போதோ நிகழ்ச்சியின் வீடியோ பதிவை கொடுத்து நமது ரசனையை பகிர்ந்து கொள்வது சாத்தியமாகி இருக்கிறது.

நிகழ்ச்சி பற்றிய வீடியோ பதிவோடு பேஸ்புக்கில் பேசலாம்,டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.எல்லாமோ தொழில்நுட்பம் தந்த வரம்.

ஆனால் இந்த பகிர்வில் உள்ள ஒரே குறை ,நிகழ்ச்சியின் நேர்டையான பதிவு என்பதால் ஒலியின் தரம் தான் கொஞ்சம் ஏனோ தானோவென்று இருக்கும்.ரசிகர்களின் கூச்சல் மற்றும் பின்னணி இறைச்சலும் சேர்ந்து பதிவாகி இருக்கும் என்பதால் பாடலின் வரிகளையும் இசை கருவிகளின் நுட்பத்தையும் முழுவதுமாக ரசிக்க முடியாது.

ஒரு நல்ல பாடலை மோசமான ஒலி பதிவில் கேட்டு ரசிக்க நேர்வது கொஞ்சம் ஏமாற்றம் அளிக்ககூடியதே.ஆனால் என்ன செய்ய நிகழ்ச்சிகளின் நடுவே வீடியோவில் பதிவு செய்தால் அதன் தரம் குறைவாக தான் இருக்கும் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

இந்த குறையை போக்க தான் 45 சவுண்ட் உருவெடுத்துள்ளது.

இந்த தளம் என்ன சொல்கிறது என்றால் நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவை வேறு எங்கும் பகிர்ந்து கொள்ளும் முன் இங்கே பதிவேற்றுங்கள் என்கிறது.அதன் பிறகு இந்த தளம் என்ன செய்கிறது என்றால் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் மூல ஒலிப்பதிவை எடுத்து வீடியோவுடன் இணைத்து தருகிறது.இந்த புதிய கோப்படை யூடியூப்பிலோ பேஸ்புகிலோ பகிர்ந்து கொண்டால் வீடியோவும் சூப்பராக இருக்கும் ,பாடல் ஒலியும் துல்லியமாக இருக்கும் .இசை பிரியர்களுககு இதைவிட வேறு என்ன வேண்டும்?

ரசிகர்கள் வீடியோவை சமர்பிப்பது போல இசை குழுக்கள் தங்கள் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும்.அதிலிருந்து ரசிகர்களுக்கு பொருத்தமானதை இந்த தளம் தேடித்தருகிறது.

இசை குழுக்களை பொருத்த வரை ரசிகர்களை சென்றடைய இது மேலும் ஒரு வழி.அதிலும் வளர்ந்து வரும் இசை குழுக்கள் மற்றும் புதிய குழுக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை பகிர்ந்து கொள்வதன் மூலம் இணையம் முழுவதும் ரசிகர்கள் அதனை பகிர்ந்து கொண்டு அதனை கேட்டு ரசிக்க வ‌ழி பிறக்கிறது.

எல்லா குழுக்களும் ,குறிப்பாக பிரபலமான குழுக்கள் இதில் ஒலிப்பதைவை சமர்பிக்க காலம் ஆகலாம்.ஆனால் இசைக்குழுக்களாக இதனை அலட்சியப்படுத்த முடியாது.காரணம் இந்த தளத்தில் தற்போதைய இசை நிகழ்ச்சிகளின் பட்டியலும் பிரபலமான நிகழ்ச்சிகளின் பட்டியலும் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது.(நிகழ்ச்சிகளின் டிவிட்டர் பதிவுகளும் இடம் பெறுகின்றன.)

ரசிகர்களுக்கான வழிகாட்டியாக இந்த பட்டியல் அமைகிறது.அதே நேரத்தில் இசை நிகழ்ச்சிகளுக்கான இலவச விளம்பரமாகவும் அமைகிறது.ஆக இந்த தளத்தில் ஒலிப்பதிவை சம‌ர்பிக்க முன் வந்தால் நிகழ்ச்சிக்கு ரசிகர்களை கவர்ந்திழுக்கலாம்.

எனவே தான் இந்த தளம் அற்புதமானது என்று சொல்லத்தோன்றுகிறது.

பாப் இசையை மையமாக கொண்ட தளம் தான்.நம்மூருக்கும் இதே போன்ற தளம் தேவை!.

இணையதள முகவரி;http://45sound.com/