Tag Archives: fans

என்ன படம் பார்க்கலாம்?ஆலோசனை சொலும் இணையதளம்

படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எந்த படத்தை பார்ப்பது என முடிவு செய்வது எப்படி?
.
நாளிதழ்ளில் புதிய பட விளம் பரங்கள் பார்க்கலாம், நண்பர்களை கேட்கலாம், பேஸ்புக் அல்லது டிவிட்டரில் நோக்கலாம்! அப்படியே சஜஸ்ட் மூவி இணையதளத்திலும் எட்டிப்பார்க்கலாம்.

என்ன படம் பார்க்கலாம் என்னும் கேள்விக்கும் அழகாக பதில் சொல்லும் வகையில் எப்போதுமே முகப்பு பக்கத்தில் ஏதாவது ஒரு திரைப்படம் பற்றிய விவரங்களோடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது.

அந்த படத்தின் கதை,நட்சத்திரங்கள், தயாரிப்பு போன்ற விவரங்களை தெரிந்து கொள்வதோடு, பார்த்தவர்களின் என்ணிக்கை, அவர்கள் தந்த ரேட்டிங் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். படத்தின் டிரெய்லரை பார்க்கும் வசதியும் உள்ளது.
அதன் பிறகு படத்தை பார்க்க விரும்பினால் அருகே இடது பக்கத்தில் உள்ள அமேசான இணைப்பை கிளிக் செய்தால் அந்த படத்தின் டிவிடியை தருவிக்கலாம். அல்லது இணையம் வழியாகவே பார்த்து ரசிக்கலாம்.

இல்லை, அந்த படம் பிடிக்கவிலையா, கவலையே வேண்டாம், அடுத்த பரிந்துரையை கோரலாம். இதற்காகவே இன்னொரு படத்தை பரிந்துரைக்கவும் என்னும் பட்டனை கொடுத்துள்ளனர். அதை கிளிக் செய்தால் அந்த படம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதுவும் பிடிக்கவில்லையா, அடுத்த படத்தை காட்டவும் என கிளிக் செய்து கட்டளையிடலாம்.

இப்படி வரிசையாக படங்களை பார்த்து கொண்டே போகலாம். சீட்டு குலுக்கி போட்டது போல ஒவ்வொரு முறையும் ஒரு படம் வந்து கொண்டே இருக்கும். வழக்கமான திரைப்பட தளங்களில் இருக்கும் தலைப்புகளின் கிழ் ரகம் வாரியாக தொகுக்கப்பட்ட படங்கள் பற்றிய விவரங்களை படித்து பார்ப்பதைவிட இந்த முறை கொஞ்சம் சுவாரஸ்ய மானது. என்ன படம் வரும் என தெரியாமல் இருப்பது இன்னும் சுவாரஸ்யமானது. அது மட்டும் அல்ல உங்ககுக்கானக பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலையும் தனியே காட்டுகிறது. என்ன என்ன படம் பற்றிய விவரங்களை பார்த்தோம் என நினைவுபடுத்திக் கொள்ள இது உதவும்.

பார்க்க வேண்டிய படத்தை தீர்மானித்த பிறகு அதனை பேஸ்புக், டிவிட்டர், இமெயில், ஜிமெயில், வலைப்பதிவு என சகல வழிகளிலும் அதனை நண்பர்களுக்கு பரிந்துரைகலாம். விரும்பினால் நாலு வரி விமர்சனமும் எழுதலாம்.பிடித்தமான படத்தை தேர்வு செய்ய மேலும் ஒரு சுவாரஸ்யமான வழியும் இருக்கிறது. எந்த வகையான படத்தை எதிர்ப்பார்க்கிறோம் என்பதை குறிப்பிட்டு அந்த மனநிலைக்கேற்ற படங்களையும் பரிந்துரைக்க கோரலாம். நகைச்சுவை படமா, திர்ல்லர் வகையா அல்லது எந்த காலகட்டத்தில் வெளியானது என குறிப்பிட்டு தேடலாம். இதை தவிர எல்லா தளங்களிலும் இருப்பதுபோல பிரபலமான படங்கள் மற்றும் சமீபத்தில் பார்க்கப்பட படங்களை பட்டியலிலும் தேடலாம்.

திரைப்பட விமர்சனங்கள், ரசிகர்களின் கருத்துக்கள், இணையவாசிகலின் ரேட்டிங் என்றெல்லாம் அலசி ஆராய்ந்து குழப்பி கொள்ளாமல் எளிமையாக எந்த படத்தை பார்க்கலாம் என தீர்மானிக்க உதவுவதே இந்த தளத்தின் சிறப்பம்சம்.

இணையதள முகவரி;
http://www.suggestmemovie.com/

சொல்ல மறந்த குறிப்பு: எல்லா பரிந்துரைகளுமே ஹாலிவுட் படங்களுக்கானது. பாலிவுட் படங்களுக்கும், கோலிவுட் படங்களுக்கும் இதே போன்ற தளங்கள் தேவை.

moviegram

திரைப்பட ரேட்டிங்கிற்கான தேடியந்திரம்.

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த சேவையையும் பிரத்யேகமாக வழங்கவில்லை,தானாக எந்த தகவலையும் தருவதில்லை.இணைய கலாச்சாரப்படி பல இடங்களில் இருக்கும் தகவல்களை உருவி ஒரே இடத்தில் வழங்குகிறது.

ஆனால் இதை மிக அழகாக செய்கிற‌து.அது தான் விஷயம்.

எந்த படத்தின் கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்றாலும் சரி மூவிகிராமில் அந்த படத்தின் பெயரை சமர்பித்தவுடன் அந்த படம் தொடர்பான தகவல்களை ஒரே பக்கத்தில் கச்சிதமாக எடுத்து காட்டுகிற‌து.

இதற்கு வசதியாக கூகுல் போன்ற தேடல் கட்டம் இருக்கிறது.அதில் படத்தின் பெயரை குறிப்பிட்டதுமே அந்த படத்திற்கான தகவல் பக்கம் வந்து நிற்கிறது.படம் பற்றிய சுருக்கமான அறிமுகம் மற்றும் அதன் ரேட்டிங் நடு நாயகமாக இடம் பெறுகிறது.

அறிமுக தகவல்கள் மற்றும் ரேட்டிங் இரண்டுமே திரைப்பட களஞ்சியமான ஐஎம்டிபி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.அருகிலேயே நறுக் திரைப்பட விமர்சனங்களுக்காக அறியப்படும் ராட்டன் டமேடோஸ் தளத்தின் விமர்சன‌ குறிப்பு மற்றும் இதே போன்ற தளமான மெட்டகிரிட்டிக்கில் உள்ள தகவலும் தொகுத்தளிக்கப்படுகின்றன.கூடவே யூடியூப்பில் இருந்து வவீடியோ காட்சிகளும்,டிரைல காட்சிகளுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன .

இவை எதுவுமே பெரிய விஷய‌ம் அல்ல.திரைப்பட ரசிக‌ர்கள் ஐஎம்டிபுக்கும் ராட்டன் டமேடோசுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர்.அதிலும் ஐஎம்டிபியில் ஒரு படத்தின் ஜாதகத்தையே அலசி விடலாம்.

ராட்டம் டமேடொஸ் இணையதளத்தில் மணி மணியான விமர்சங்களை படிக்கலாம்.

ஆனால் ஏற்கனவே சொன்னபடி மூவிகிராம் இந்த தகவல்களை தனித்தனியே தேடி அலையும் தேவை இல்லாமல் ஒரே பக்கத்தில் அழகாக திரட்டி தருகிற‌து.ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என போகிற‌ போக்கில் முடிவு எடுக்க விரும்பினால் மூவிகிராம் அதற்கு கைகொடுக்கிற‌து.

பொதுவாக எல்லா திரைப்பட தளங்களிலும் பார்க்க கூடியது போலவே சமீபத்தில் தேடப்பட்ட படங்கள் பிரபலமான படங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.குறிப்பிட்ட எந்த படமும் மனதில் இல்லை என்றால் இந்த பட்டியலை அலசிப்பார்க்கலாம்.அதோடு ரசிகர்கள் தாங்கள் பார்க்கும் பக்கத்தை அப்படியே கிளிக் செய்து டிவிட்டர் ,பேஸ்புக்,கூகுல் பிளஸ் வழியே நண்ப‌ர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

ஒருவிதத்தில் பார்த்தால் இந்த தளமும் வாட்ச்.லே போல தாம்.திரைப்பட தேடியந்திரம் என்று சொல்லக்கூடிய வாட்ச்.லே எந்த படம் எங்கெல்லாம் இணையம் வழியே காணக்கிடைக்கிறது என்னும் விவரங்களை நெட்பிலிக்ஸ் ,யூடியூப் போன்ற திரைப்பட சேவை தளங்களில் இருந்து திரட்டித்தருகிறது என்றால் மூவிகிராம் திரைப்பட ரேட்டிங் தகவல்களை திரட்டித்தருகிறது.

ஹாலிவுட ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

இணையதள முகவரி;http://moviegr.am/

icheckmovies

திரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம்.

நான் பார்த்த ரசித்த திரைப்படங்கள்.

இப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது ஐ செக் மூவீஸ் இணையதளம்.பட்டியலை உருவாக்கி கொண்ட பிறகு இந்த தளத்தில் திரைப்பட ரசிகர்கள் தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.பெறுவதற்கு பட்டங்களும் சூடிக்கொள்ள மகுடங்களும் இருக்கின்றன.

இந்த தளத்தை பொருத்தவரை ரசிகர்கள் தான் ராஜா.பொதுவாக திரைப்பட தளங்களில் பார்க்க கூடிய டாப் டென் படங்களின் பட்டியல் போன்றவை இதில் இருந்தாலும் எல்லாமே ரசிகர்கள் சார்ந்தவை.

அடிப்படையில் இந்த தளம் பார்த்த திரைப்படங்களை குறித்து வைப்பதற்காக!இதற்கு முதலில் உறுப்பினராக சேர வேண்டும்.அதன் பின் பார்க்கும் படங்களை பார்த்தாச்சு என டிக் செய்து தங்களுக்கான பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டியது தான்.

இப்படி சேர்த்து கொள்வது மிகவும் சுலபமானது.காரணம் மிகச்சிறந்தபடங்கள்,புதிய படங்கள் என பலவித தலைப்புகளில் திரைபடங்களின் பட்டியல் ரசிகர்களின் வசதிக்காக பரிந்துரைக்கப்படுகிறது.அவற்றில் இருந்து படத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த பட்டியல் எல்லாமே திரைப்பட தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் இண்டெர்நெட் மூவிடேட்டாபேசானா ஐஎம்டிபி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.இதன் பொருள் இந்த டேட்டாபேசில் உள்ள படங்களை மட்டுமே இங்கு சேர்க்க முடியும்.ஆனால் அநேகமாக எல்லா படங்களுமே இந்த டேட்டாபேசில் இணைக்கப்படுவதால் இதில் ஏதும் பிரச்சனையில்லை.

பட்டியலில் உள்ள நீங்கள் பார்த்த படத்தை கிளிக் செய்ததுமே வந்து நிற்கும் தகவல்களை பார்த்ததுமே திக்கு முக்காடி போக நேரிடும்.

காரணம்,திரைப்படம் வெளியான ஆண்டு,அந்த படம் பெற்றுள்ள தரவரிசை எண்,அதை எத்தனை பேர் பார்த்துள்ளனர்,எத்தனை பேர் தங்களுக்கு பிடித்த படம் என குறிப்பிட்டுள்ளனர் ,அந்த படம் பறிய உறுப்பினர்களின் கருத்துக்கள்,சமீபத்தில் பார்த்தவர்கள் ,படத்தின் வகை,என படம் தொடர்பான விவரங்கள் வரிசையாக இடம் பெறுகின்றன.எல்லாமே சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடைப்படையில் திரட்டப்பட்டவை.

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி,விளம்பர பரைசாற்றுதல்கள்,விமர்சகர்களின் கருத்து போன்றவற்றின் சார்பு இல்லாமல் உறுப்பினர்களின் ரசனையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த விவரங்கள் குறிப்பிட்ட படத்தின் மதிப்பு என்ன என்பதை அழகாக உணர்த்திவிடக்கூடும்.

இந்த விவரங்களை பார்வையிட்ட படி அந்த படத்தை உங்கள் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.படத்தை பார்த்திருந்தால் பார்த்ததாக குறித்து கொள்ளலாம்.பார்க்கவில்லை என்றால் பார்க்க வேண்டும் என குறித்து கொள்ளலாம்.அதே போல படம் பிடித்திருந்தால் விரும்பிய படம் என்றோ அல்லது பிடிக்கவிட்டால் பிடிக்கவில்லை என்றோ குறித்து கொள்ளலாம்.

பார்த்த படங்களை பட்டியலிட துவங்கிய பின் அந்த விவரங்கள் ஒவ்வொன்றாக உறுப்பினரின் பக்கத்தில் இடம்பெற்று அவரது ரசனைக்கான பயோடேட்டா போல அமையும்.

எளிமையாக தோன்றினாலும் இந்த பக்கம் உறுப்பினர்கள் பற்றி சொல்லகூடிய தகவல்களும் பகிர்ந்து கொள்ளக்கூடிய விவரங்களும் தீவிர திரைப்பட ரசிகர்களை இந்த தளத்திலேயே மூழ்க வைத்துவிடும்.அப்படியே திரைப்பட ரசனை சார்ந்த புதிய அனுபவத்தில் திளக்க வைக்கும்.திரைப்பட ரசனை சார்ந்த புதிய நண்பர்களையும் தேடித்தரும்.நண்பர்கள் மூலம் நல்ல படங்களின் பரிந்துரையையும் பெற முடியும்.

அந்த அளவுக்கு விரிவான வசதிகளும் விதவிதமான பகிர்தல் அம்சங்களும் இருக்கின்றன.உறுப்பினர் பக்கத்தில் சமீபத்தில் பார்த்த படம்,இதுவரை பார்த்த படங்கள்,பார்த்ததில் பிடித்தவை ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன.உறுப்பினரின் திரைப்பட ரசனை ஜாதகம் என்று கூட சொல்லலாம்.

உறுப்பினர்கள் இந்த பக்கத்தை பரஸ்பரம் பார்க்க முடியும்.அதாவது சக உறுப்பினர்களின் பக்கத்தை பார்ப்பதற்கான் வாய்ப்பு உள்ளது.உறுப்பினர் பக்கத்தை பார்வையிடுவதும் சுவாரஸ்யமானதே.காரணம் குறிப்பிட்ட அந்த உறுப்பினர் எந்த எந்த படங்களை பார்த்துள்ளார்,அவற்றை ரசித்துள்ளார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.இப்படி பார்க்கும் போது ரசனை ஒத்து போகிறது என்று வைத்து கொள்ளுங்கள் உடனே அந்த அந்த உறுப்பினரை தொடர்பு கொண்டு நண்பாராக்கி கொள்ளலாம்.

நண்பராக நேரடியாக செய்தி அனுப்பலாம்.நண்பரான பின் இருவருடைய படங்களின் பட்டியலை ஒப்பிட்டு பார்க்கலாம்.பரஸ்பரம் பிடித்த படங்கள் பிடிக்காத படங்கள் என்றெல்லாம் அலசி ஆராயலாம்.அப்படியே படங்கள் பற்றிய விமர்சன கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.இதன் மூலம் திரைப்படம் சார்ந்த உரையாடலில் ஈடுபடலாம் என்பதோடு புதிய படங்கள் பற்றிய அறிமுகமும் கிடைக்கும்.

நண்பர்கள் போலவே இந்த தளத்தில் பக்கத்து வீட்டுகாரரகளையும் சந்திக்கலாம்.பக்கத்து வீட்டுக்காரர் என்றால் பார்த்த படங்களிலும் ரசனையிலும் உங்களை ஒத்திருப்பவர் என்று பொருள்.

உறுப்பினர்கள் உறுப்பினர் பக்கத்தில் தங்களை பற்றிய சுய அறிமுக குறிப்பையும் இடம் பெற வைக்கலாம்.உறுப்பினர் பக்கத்தில் ஒருவர் பார்த்த படங்களின் எண்ணிக்கை,ரசித்த படங்களின் எண்ணிக்கை,பிடிக்காத படங்களின் எண்ணிக்கை ,நண்பர்களின் எண்ணிக்க ஆகிய விவரங்களும் இடம் பெறுகின்றன.

உறுபினர்களுக்கு பல் வேறு விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.அதோடு பகிர்ந்து கொள்ளும் படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துணை நடிகர் ,நடிகர் போன்ற அந்தஸ்தும் வழங்கப்படுவது மேலும் சுவையானது.

பேஸ்புக் போன்ற தளங்கள் வழியே நட்பை வளர்த்து கொள்ளலாம்.பார்த்து ரசித்த திரைபடங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் இந்த தளம் முழுக்க முழுக்க திரைப்படம் சார்ந்த பகிர்தலை சாத்தியமாக்கி திரை ரசனை அடிப்படையில் நட்பை ஏற்படுத்தி தருகிறது.

அதே போல எந்த ஒரு திரைப்பட தொடர்பான கருத்தை அறிய விரும்பினாலும் இந்த தளம் கைகொடுக்கும்.குறிப்பிட்ட படத்தை கிளிக் செய்ததுமே அதை சமீபத்தில் எத்தனை பேர் பார்த்துள்ளனர் ,அவர்களின் விமர்சனம் என்ன போன்ற விவரங்கள் மூலமாக அந்த படம் பற்றிய ரசிகர்களின் மன உணர்வை கச்சிதமாக அறிந்து கொண்டு விடலாம்.

பழையபடங்களை இப்போதும் எத்தனை பேர் பார்க்கின்றனர்,புதிதாக வெளியான படத்தை எத்தனை பேர் ரசித்துள்ளனர் என்றெல்லாம் அறிய முடிவது உண்மையிலேயே சுவாரஸ்யமானது.

ஒரு படத்தை பற்றி இப்படி அலசி ஆராயும் போது அந்த படத்தை ரசித்தவர்களை அறிமுக செய்து கொண்டு நண்பர்களாக்கி கொள்ளலாம்.

——————

http://www.icheckmovies.com/

twitflick

திரைப்படங்களுக்கான டிவிட்டர் ரேட்டிங்.

ரேட்டிங்கை நம்பி எல்லாம் எந்த படத்தையும் பார்த்துவிட முடியாது என்றாலும் புதிய படத்திற்கான அளவுகோளாக ரேட்டிங்கையும் கருத்தில் கொள்ள தான் வேண்டியிருக்கிறது.என்ன பல நேரங்களில் ரேட்டிங்கில் முதலிடம் பெறும் பெரும் ஏமாற்றத்தையும் தந்து வெறுப்பேற்றலாம்.

இப்படி ஏமாற கூடாது என நினைப்பவர்கள் டிவிட்பிலிக்ஸ் தளத்தின் ரேட்டிங்கை முயற்சி செய்து பார்க்கலாம்.

திரைப்பட ரேட்டிங் தள‌ம் என்றாலும் இன்னொரு டாப் டென் பட்டியல் தளம் இல்லை இது.மாறாக புதிதாக வெளியாகும் ஒவ்வொரு படத்திற்குமான ரசிகர்களின் ரேட்டிங்கை வழங்கும் தளம்.

ரசிகர்களின் ரேட்டிங் என்றால் டிவிட்டரில் திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களின் அடிப்படையிலான மதிப்பீடு.

புதிய படங்களை பார்த்ததுமே அது பற்றிய கருத்தை குறும்பதிவாக தட்டிவிடும் பழக்கம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி விட்டது.பல படங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய அளவுக்கும் இவை இருப்பதுண்டு.

டிவிட்டரில் பகிரப்படும் கருத்துக்களின் அடிப்படையில் திரைப்படங்களை மதிப்பிட உதவும் தளங்களும் பல இருக்கின்றன.டிவிட்பிலிக்ஸ் தளமும் இந்த ரகத்தை சேர்ந்தது தான்.

ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக படங்களுக்கான ரேட்டிங்கை டிவிட்டர் கருத்துக்கள் அடைப்படையில் முன் வைக்கிறது.அதாவது ஒரு படத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்புகின்றனர் என்பதை மதிப்பிட்டு சொல்கிற‌து.

முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள படங்களுக்கான போஸ்டரில் கிளிக் செய்தால் அந்த படத்திற்கான டிவிட்டர் மதிப்பீடு சதவீததில் காட்டப்படுகிற‌து.அப்படியே படம் வெளியான காலம்,மற்றும் அதன் நீளம் ஆகிய விவரமும் கொடுக்கப்பட்டுள்ள‌து.கூடவே அந்த படம் தொடர்பான டிவிட்டர் செய்திகளின் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் எத்தனை டிவிட்டர் பதிவுகள் என்னும் தகவலும் இடம் பெறுகிற‌து.

அதன் கீழே படத்தை பிடிச்சிருக்கு என்று சொன்னவர்களின் டிவிட்டர் பதிவுகளும் அருகிலேயே எனக்கு பிடிக்கவில்லை என்று சொனனவர்களின் கருத்துக்களும் வரிசையாக தோன்றுகின்றன.

படங்களின் ரேட்டிங் கைகொடுக்கிறதோ இல்லையோ இந்த எதிரும் புதிருமான டிவிட்டர் பதிவுகளை படித்து பார்த்தால் படத்தில் எதை ர‌சிக்கலாம்,என்ன எதிர்பார்க்கலாம் என்ற தெளிவு ஏற்படும்.அந்த புரிதலோடு தியேட்டருக்கு போகலாம்.

நிச்சயம் ஹாலிவுட் பட பிரியர்களுக்கு வரப்பிரசதம் இந்த தளம்.சரி கோலிவுட் பிரியர்களுக்கு?

இணையதள முகவரி:http://www.twitflicks.com/