Tag Archives: instagram

tumblr_nnof3tuvHn1suw8s6o1_1280

அலுவலக அலுப்புகளை நுண்கலையாக்கும் புகைப்பட கலைஞர்

அலுவலக பணிச்சுமையும், அதனால் ஏற்படும் அலுப்பும் யாருக்கு தான் இல்லை. இதனால் ஏற்படும் களைப்பையும், வெறுப்பையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு லைக்குகள் பெறலாம். ஆனால் இந்த அனுபவங்களை கலையாக்கி ரசிக்க வைக்க முடியுமா?

விளமபர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பிராண்ட நிர்வாகியான டெரிக் லின் இதை தான் செய்திருக்கிறார். மன அழுத்தமும் நெருக்கடியும் மிக்க வேலையில் இருக்கும் டெரிக் இந்த வேலையால் ஏற்படும் அலுப்பையும், அலுவலக சூழலில் எதிர்கொள்ளும் டென்ஷன் நிமிடங்களையும் புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார்.
சாதாரண புகைப்படங்கள் அல்ல; பார்த்தவுடனே வியக்க வைத்து, அட போட வைக்கும் அபாரமான புகைப்படங்கள்.அதே நேரத்தில் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அழகாக வெளிப்படுத்தும் புகைப்படங்கள்!.
இந்த புகைப்படங்களை அவர் எடுக்க அவர் கையாளும் வழி தான் மிகவும் வித்தியாசமானது. அவரது படைப்பாக்கத்தையும் பளிச்சிட வைக்கிறது.

டெரிக் தான் பகிர்ந்து கொள்ள தேர்வு செய்யும் அலுவலக சூழல் அல்லது பிரச்சனையை தீர்மானித்ததும் , சிறு உருவங்களை கொண்டு அதை அப்படியே காட்சியாக உருவாக்கி விடுகிறார். அதன் பிறகு அந்த காட்சியை ஐபோனில் கிளிக் செய்து பொருத்தமான விளக்க குறிப்பை எழுதி தனது வலைப்பதிவில் பகிர்ந்து கொள்கிறார். இன்ஸ்டாகிராமிலும் புகைப்படங்களாக வெளியிடுகிறார்.

படங்களுக்கான விளக்க குறிப்பு ஒரு வரிக்கு மேல் நீள்வதில்லை. ஆனால் அந்த காட்சியோடு படிக்கும் போதும், டெரிக் அலுவலகத்தில் சந்திக்கும் சிக்கல்கள் பளிச் என புரியும் அதே நேரத்தில், அடடா மனிதர் எத்தனை அழகாக இதை வெளிப்படுத்தியிருக்கிறார் என பாராட்டத்தோன்றுகிறது.
tumblr_noamwmjFU21suw8s6o1_1280
உதாரணத்திற்கு, ஒய்வு இல்லாமல் பணியாற்றி களைப்படையும் நிலையை உணர்த்த, குளோசப்பில் இருக்கும் சிவப்பு நிற காபி கோப்பை மீது சேரில் அமர்ந்தபடி கோப்பை விளிம்பில் சாய்ந்து தூங்கும் சின்னஞ்சிறிய பொம்மை மனிதரை வைத்து இந்த காட்சியை கிளிக் செய்திருக்கிறார். இந்த படத்திற்கான குறிப்பு , வார இறுதி நாட்களில் பணியாற்றிய பிறகு திங்கள் கிழமை சீக்கிரம் வந்து விடுகிறது என்பதாக இருக்கிறது.
இன்னொரு படத்தில் ஒருவரின் கழுத்து பட்டையில் சிறிய மனிதர்கள் நின்றபடி அவரது இயர் போன் ஒயரை இழக்க முயன்று கொண்டிருக்கின்றனர். இதற்கான குறிப்பு , பாட்டு கேட்கும் சக ஊழியரின் கவனத்தை ஈர்க்க படாதபாடு பட வேண்டும் என்பதாக இருக்கிறது.

இன்னொரு படத்தில், காலி காபி கோப்பை விளிம்பின் மீது அமர்ந்திருக்கும் பெண் உருவம் காகிதங்களை வீசிக்கொண்டிருக்கிறது. சில நேரங்களில் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிடலாம் போல தோன்றுவதாக இதற்கான குறிப்பு அமைந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு புகைப்படமும் ,சின்னஞ்சிறிய உருவங்கள் மூலம் அலுவலக சூழலையும் அதன் பிரெஷர் குக்கர் நிமிடங்களையும் படம் பிடித்து லேசான புன்முறுவல் வரவைக்கிறது.

வேலை சில நேரங்களில் எரிச்சலாக அமைந்து கொதிப்படைய வைத்தாலும் நாம் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள தான் வேண்டியிருக்கிறது என குறிப்பிடும் டெரிக் இந்த புகைப்பட ஆக்கங்களுக்கான எண்ணம் வந்த வித்ததை இப்படி விவரிக்கிறார்.பணியில் பணியாற்றும் நெருக்கடிகள் தனது செயல்பாட்டை பாதிக்க அனுமதிக்காமல் இருக்க முயலும் அதே நேரத்தில் அலுலவக அலுப்புகளையும் ,எரிச்சல்களையும் அற்புதமான ஒன்றை உருவாக்குவதற்கான ஊக்கமாக எடுத்துக்கொண்டேன் என்கிறார் அவர்.

டெரிக் லின் கலைப்புகைப்படங்களை கண்டு ரசிக்க: http://marsder.tumblr.com/

———-

nepal-life

நேபாளத்தில் நிவாரணப் பணியில் உதவும் இண்ஸ்டாகிராம் பக்கம்

பேரிடர் காலங்களில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் உதவும் இணையசேவைகளின் பட்டியலில் இப்போது புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமும் சேர்ந்திருக்கிறது. பூகம்பம் உலுக்கிய நேபாளத்தில் பாதிப்பை பதிவு செய்ய அமைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் நிவராணப்பணிகளுக்கும் கை கொடுத்து வருகிறது.
புயலோ, பூகம்ப்மோ எந்த இயற்கை பேரிடர் என்றாலும் பாதிப்பின் தீவிரத்தையும், இழப்பின் ஆழத்தையும் புகைப்படங்களே பொட்டில் அறைந்த்து போல உணர்த்துகின்றன.

பூகம்ப பாதிப்பிற்கு இலக்கான நேபாளத்திலும் காணும் காட்சிகள் எல்லாம் நெஞ்சை உலுக்குவதாக இருப்பதை புகைப்படங்கள் பதிவு செய்வதோடு நிவாரணத்திற்கு நேசக்கரம் நீட்டுவதற்கான தேவையையும் உணர்த்தி வருகின்றன. அந்த வகையில் பேசும் படங்களின் பக்கமாக அமைந்து நிலைகுலைந்து போயிருக்கும் காத்மாண்டுவின் நிலையை உரக்க எடுத்துச்சொல்லும் வகையில் நேபாள்போட்டோபிராஜக்ட் புகைப்பட பக்கம் அமைந்துள்ளது.

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அமைக்கப்பட்டுள்ள இந்த பக்கத்தில் களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புகைப்பட கலைஞர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கள நிலவரம் எத்தனை தீவிரமாக இருக்கிறது என்பதை புரிய வைக்கின்றன.

பூகம்ப பாதிப்பிற்கு பிறகு நேபாளத்தில் உள்ள பலரும் பேஸ்புக்,டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளை தகவல் பரிமாற்றத்திற்கும், மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சமூகம் உதவிக்கு ஓடோடி வந்தாலும் இன்னமும் உதவி சென்று சேராமல் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து உள்ளூரு தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

உருக்குலைந்த கட்டிடங்கள் , சிதிலமடைந்த சாலைகள் எனும் அவலமான நிலையில் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நேபாள அரசு, முதலில் உதவச்சென்ற இந்திய ராணுவம் மற்றும் சர்வதேச அமைப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த பணிகளை மேலும் சிறப்பாக ஒருங்கிணைக்க உதவும் வகையில் பாதிப்பு பற்றிய தகவல்களை நேபாள் போட்டோ பிராஜக்ட் இன்ஸ்டாகிராம் புகைப்பட பக்கம் வழங்கி வருகிறது. தொழில்முறை புகைப்பட கலைஞர்களின் கூட்டு முயற்சியால் உருவான இந்த பக்கம் பூகம்பம் தாக்கிய சில மணி நேரங்களில் அமைக்கப்பட்டது. இந்தியா,நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் இந்த பக்கத்தில் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். மற்றவர்கள் எடுக்கும் புகைப்படங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

#nepalphotoproject, #nepalearthquake போன்ற ஹாஷ்டேகுடன் இந்த புகைப்படங்களை அவற்றுக்குறிய புகைப்பட குறிப்புகளுடன் வெளியிட்டு வருகின்றனர்.இந்த படங்கள் பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த படங்கள் நேபாளத்தின் கள நிலையை கச்சிதமாக படம் பிடித்து காட்டுகின்றன.ஒரு புகைப்படம் ராணுவத்தினர் நிவாரணப்பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதை காட்டுகிறது என்றால் இன்னொரு புகைப்படம் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டிருப்பதை காட்டுகிறது. இன்னும் சில படங்கள் தரைமட்டமாக கிடக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளை படம் பிடித்து பதைபதைக்க வைக்கின்றன.
உணவுப்பொருட்களை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி, இடிப்பாட்டில் இருந்து மக்கள் தங்கள் உடமைகளை எடுக்க முயலும் காட்சி என பாதிப்பின் தீவிரம் காட்சிகளாக இந்த புகைப்பட வரிசையில் விரிகின்றன.

ஆரம்பத்தில் மீட்பு பணி தொடர்பான புகைப்படங்களும் அவசர உதவி தேவைப்படும் இடங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. தற்போது நிவாரணம் தொடர்பான புகைப்படங்கள் அதிகம் இடம்பெறுகின்றன.
இந்த புகைப்படங்களுடன் இடம்பெறும் குறிப்புகள் நெஞ்சை நெகிழ வைக்கும் மனித நேய கதைகளையும் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக பூகம்பம் பாதித்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் மூதாட்டி ஒருவர், தனது கடை தரைமட்டமாகாமல் தப்பி பிழைத்த நிலையில் மற்றவர்களுக்கு தேவைப்படும் டீ மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்குவதற்காக இந்த கடையை நடத்தி வருவதாக சொல்கிறார். இது போன்ற நேரங்களில் எல்லோரும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிறார் அவர். இன்னொரு படம் சிறுவர் சிறுமிகள் செங்கற்களை கொண்டு வீடு கட்ட முயலும் காட்சியை விவரிக்கிறது.

காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை கோரும் புகைப்படங்களும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன.
நிலமை எத்தனை மோசமாக இருக்கிறது என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்த புகைப்படங்கள் நேசக்கரம் நீட்டவும் நிதி உதவி அளிக்கவும் தூண்டுகோளாக இருக்கிறது.

நேபாள பாதிப்பை உணர்த்தும் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://instagram.com/nepalphotoproject/

—–

நன்றி; தமிழ் இந்து இணைய பதிப்பு

skellie-skeleton6-550x352

இன்ஸ்டாகிராமில் கலக்கும் எலும்புக்கூடு !

அந்த எலும்புக்கூடு ரெஸ்டாரண்டிற்கு செல்கிறது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஷாப்பிங் செய்கிறது. மேக் அப் செய்து கொள்கிறது. கண்ணாடி முன் அமர்ந்து அழகு பார்க்கிறது. நீச்சல் குளத்தில் குளிக்கிறது. புத்தாண்டு உறுதிமொழி எழுதிவைக்கிறது. எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கிறது.இந்த பகிர்வ்களை பார்த்து ரசிக்க லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் அதற்கும் இருக்கின்றனர். சும்மாயில்லை, இன்றைய தேதிக்கு 2 லட்சத்தை அதன் பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை நெருங்கியிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆம், இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டிருக்கும் ஸ்கல்லியை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்! அது தான் அந்த எலும்புக்கூட்டின் பெயர்.

ஸ்கல்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் அதன் புகைப்பங்களை பார்த்து நீங்களும் சொக்கிப்போவீர்கள். நீங்கள் இன்ஸ்டாகிராம் பயனாளி என்றால் அதற்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து லேசாக பொறாமை படவும் செய்வீர்கள். ஒரு எலும்புக்கூட்டிற்கு இத்தனை பாலோயர்களா? என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் அதன் படங்களை பார்த்தால், அததனையும் அழகாக தான் இருக்கின்றன என்று சொல்லத்தோன்றும்.

எலும்புக்கூடு எப்படி தன்னைத்தானே படம் எடுத்து வெளியிட முடியும் என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மனதில் தோன்றி அதற்கான பதிலையும் கூட ஊகித்திருக்கலாம்.

ஆம், சரி தான் இந்த எலும்புக்கூடு இன்ஸ்டகிராமின் கணக்கின் பின்னே யாராவது இருக்க வேண்டும் என்னும் ஊகம் சரியானது தான்.

கனடா நாட்டைச்சேர்ந்த டானா ஹெர்லி (Dana Herlihy ) எனும் பெண்மணி தான் இந்த எலும்புக்கூட்டை இன்ஸ்டாகிராமில் உரிய பெற வைத்திருப்பவர்- ஓஎம்ஜிலிட்ரலிடெட் எனும் முகவரியில்!

சமூக ஊடக மார்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் டானா, இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைத்ததன் பின்னே சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

skellie-skeleton2-550x550கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டானா பணியாற்றும் நிறுவனத்திற்கு யாரோ ஒருவர் பிளாஸ்டிக் எலும்புக்கூட்டை பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். இது போன்ற திகிலூட்டும் பரிசிகளுக்கும் செயல்களுக்கும் பெயர் பெற்ற ஹாலோவன் பண்டிகையின் போது தான் ஒரு குறும்புக்காரர் இந்த விஷமத்தனத்தை செய்திருக்கிறார். எலும்புக்கூட்டை பார்த்து டானாவின் சக ஊழியர்களில் எத்தனை பேர் பயந்தனர் என தெரியவில்லை, ஆனால் குறும்புக்காரர் ஒருவர் அந்த எலும்புக்கூட்டின் கைகளில் ஸ்டார்பக்ஸ் காபி கோப்பையை வைத்துவிட்டு சென்று விட்டார். எலும்புக்கூடு காபி பருகுகிறதாம் !

இந்த காட்சியை பார்த்து புன்னகைத்த டானா அதை அப்படியே கிளிக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். எலும்புக்கூடு காபி குடிக்கும் புகைப்படம் செம கியூட்டாக இருப்பதாக பலரும் பார்த்து ரசித்தனர். அதோடு அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் செய்தனர். இப்படி தான் அந்த புகைப்படம் இணையத்தில் பிரபலமாகி ஸ்கெல்லியாக உருவெடுத்தது. டானா தொடர்ந்து எலும்புக்கூட்டை வைத்து வேறு சில புகைப்படங்கலை எடுத்து பகிர்ந்து கொண்ட போது இதற்காக என்றே தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைக்கலாமே என நினைத்து , எலும்புகூட்டிற்கு பெயரும் வைத்து இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துவைத்தார்.

அடுத்தடுத்த புகைப்படங்களில் ஸ்கெல்லியும் பிரபலமாகி அதற்கென்று ரசிகர்கள் உருவாகத்துவங்கிவிட்டனர்.

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் டானாவும் ஸ்கெல்லியை விதவிதமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் பேஷன் ரசம் சொட்டும் புகைப்படங்களையும் சுய அழகு புகைப்படங்களையும் பார்த்து அலுத்தவர்கள் ஒரு மாறுதலுக்காக ஸ்கெல்லியின் புகைப்படத்த்தை பார்த்து ரசிக்கின்றனர். அதின் பின்னே மறைந்திருக்கும் கேலியான நகைச்சுவை சொக்க வைக்கிறது.

ஆனால் , ஸ்கெல்லியின் பிரம்மாவான டானா வெறும் நகைச்சுவையாக மட்டும் இந்த படங்களை எடுப்பதில்லை. சமகாலத்து இளம் பெண்களின் மனப்போக்கையும் பழக்க வழக்கங்களையும் அழகாக பகடி செய்யும் வகையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதாவது இந்த கால பெண்கள் எதை எல்லாம் புதிய போக்கு என விழுந்தடித்து பின்பற்றுகின்றனரோ அதை எல்லாம் ஸ்கெல்லியையும் செய்ய வைத்து விமர்சனம் செய்கிறார்.

அழகிய பின்னணியில் ஃபர் கோட்டு போட்டுக்கொண்டு தலையில் மலர் கிரிடம் வைத்துக்கொண்டிருக்கும் பெண் போல எலும்புக்கூடு போஸ் தரும் புகைப்படமும் அதனுடன் வன ராணி போல உணர்கிறேன் எனும் வாசகமும், சிரிக்கவும் வைக்கிறது சிந்த்திக்கவும் வைக்கிறது.

இன்னொரு புகைப்படத்தில் கண்களில் வெள்ளரிக்காயை வைத்துக்கொண்டு அழகு கலை ரகசியம் பற்றி பேசுகிறது. இன்னொரு படத்தில் பணியிடத்தில் களைத்து போய் படுத்திருக்கும் போசில் அலுத்துக்கொள்கிறது. இப்படி ஒவ்வொரு புகைப்படமும் சமகால போக்கை அழகாக கேலிக்குள்ளாக்கி பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது.

skellie-skeleton7-550x550இணையம் மூலம் படம் பார்க்கும் சேவையான நெட்பிளக்சில் படம் பார்ப்பது, போம் குளியல் குளித்து இளைப்பாறுவது, புதிய ஷூ வாங்கி கொண்டு பெருமைபடுவது என ஒவ்வொரு படமும் ஒரு செய்தியை கேலியாக முன்வைக்கிறது. ஆனால் புகைப்படத்தின் அமைப்பும் அதன் பின்னே உள்ள கற்பனைத்திறன் மற்றும் கிரியேட்டிவிட்டி கவர்ந்திழுக்குக்கிறது.

அதனால் தான் ஸ்கெல்லிக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போகின்றனர்.

இவ்வளவு ஏன் பத்திரிகைகளில் ஸ்கெல்லியின் பேட்டியும் கூட வெளியாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் சில ஆயிரம் பாலோயர்களையேனும் பெறுவது எப்படி என பலரும் திண்டாடிக்கொண்டிருக்கையில் டானா, ஒரு எலும்புகூட்டை உருவாக்கி லட்சகணக்கானவர்களை அதன் அபிமானயாக்கி காட்டியிருக்கிறார். வித்தியாசமாக செயல்பட வேண்டும், அந்த வித்தியாசம் கவனத்தை பெறும் போது அந்த ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு புதுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதும் தான் ஸ்கெல்லி மூலம் டானா பிரலமாகி இருப்பது உணர்த்தும் செய்தி.

டானா, ஸ்கெல்லி மீது ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஸ்கெல்லி படம் போட்ட கோப்பைகள், ஸ்மார்ட்போன் கவர்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்யத்துவங்கியிருக்கிறார்.

டானாவின் கதை ஊக்கமளிக்கிறதா? புதுசாக ஏதாவது செய்து பாருங்கள் ,நீங்களும் பிரபலமாகலாம்.

 

ஸ்கெல்லியின் இன்ஸ்டாகிராம் பக்கம்:..http://instagram.com/omgliterallydead/

 

——–

 

 

 

 

 

1-veg

கலைவண்ண காய்கனிகள்; ஆன்லைனில் அசத்தும் பெண்மணி

பிரிட்டன் பெண்மணி ஆம்பர் லாக்கேவின் இணையதளத்தை பார்த்தால் அசந்து போய் விடுவீர்கள். அத்தனை கலைநயம் மிக்க படைப்புகள் அவரது இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த கலை படைப்புகளை பார்த்து ஆச்சர்யமும் கொள்வீர்கள்! ஏனெனில் அவரது கலைப்படைப்புகள் ஓவியமோ, சிற்பமோ அல்ல; அவை காய்கறிகளாலும் கனிகளாலும் உருவானவை.
ஆம், லாக்கே பல வண்ண காய்கனிகளை அழகாக அடுக்கி வைத்து அதன் அமைப்பையே ஒரு அழகான கலைபடைப்பாக ஆக்கிவிடுகிறார். காய்கறிகளையும் கனிகளையும் அடுக்கி வைப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா? அது அத்தனை அழகாக தான் இருக்குமா? என்று நினைப்பவர்கள் முதலில் அவரது படைப்புகளை பார்க்க வேண்டும்.
லாக்கே காய் கனிகளை அலங்காரமாக அமைப்பது வழக்கமாக பார்க்ககூடிய காட்சி போல் இருக்காது. மாறாக கெலைடாஸ்கோப் கருவியில் பார்க்கும் போது வித விதமான வண்ணங்களில், பலவித அமைப்புகளில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு அலங்கார வடிவில் தோன்றும் அல்லவா? அதே போல தான் ஆம்பர் லாக்கேவின் காய்கனி அமைப்புகள் தோற்றம் தருகின்றன.

1-veg3
முதல் பார்வைக்கு ஏதோ சேலை அல்லது துணி ரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமோ என்று நினைக்க வைக்கும் இந்த படைப்புகளை உற்று பார்த்தால் அவற்றில் இருப்பது எல்லாம் காய்கனிகள் என்ற விஷயம் புரிந்து வியக்க வைக்கும். இப்படி கூட காய்கறி மற்றும் கனி வகைகளை அழகாக தோற்றம் கொள்ள வைக்க முடியுமா? என்ற வியப்பும் உண்டாகும்.
காய்கனிகளை இப்படி வண்ண படைப்புகளாக அமைத்து அவற்றை புகைப்படம் எடுத்து தனது இணைட்யதளம் மூலம் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை அவர் குறைந்த எண்ணிக்கையிலான அச்சுகளாக விற்பனையும் செய்து வருகிறார். இந்த அச்சுகளை பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் வாங்கி வருவதுடன் , அவரது காய்கறி கலைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

1-veg2
பிரபல நிறுவனங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளுக்காக அவர் பிரத்யேகமாக காய்கறி கலையை உருவாக்கித்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவரது செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது.
எல்லாம் சரி, அவருக்கு இந்த காய்கறி கலையில் ஆர்வம் எப்படி வந்தது ? இந்த ஆர்வத்தின் பின் உள்ள கதையை கேட்டால் இன்னும் உற்சாகமாக இருக்கும்.
ஆம்பர் கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்க சைவ உணவுக்கு மாறினார். சைவ உண்வு என்றால் சமைத்த உணவு கூட இல்லை. பச்சை காய்கறிகளையும் ,கனிகளையும் சாப்பிடுவது. இவ்வாறு காய்கறிகளை மட்டுமே உணவாக சாப்பிட துவங்கிய பின் தன்னளவில் உற்சாகமான மாற்றத்தை உணர முடிந்ததாக அவர் சொல்கிறார். மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணரத்துவங்கியதாகவும் சொல்கிறார்.
அப்படியே காய்கறி உணவு பழக்கம் தொடரந்தது. ஒரு நாள் ஆசையோடு வாங்கிவந்த காய்கறிகளை தரையில் பரப்பி வைத்திருந்தார். அப்போது காற்றின் போக்கில் அடித்த வந்த சில இலைகளும் சேர்ந்து கொள்ள அந்த அமைப்பே ஒரு ஓவியம் போல் தோன்ற லாக்கே அதை கிளிக் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் சொக்கிப்போய் பாராட்டாக பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவிக்கவே அவர் உற்சாகமாகி தொடர்ந்து காய்கறிகளை அலக்கார சித்திரங்களாக்கி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். இன்று இதுவே இவரை ஒரு கலைஞராக்கியுள்ளது.
இந்த படைப்புகள் தன்னை பிரபலமாக்கி இருப்பதால் மட்டும் அவர் மகிழவில்லை. இதன் மூலம் ஆரோக்கியமான உணவு முறை மீது பரவலான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறார். இவை அழகை மட்டும் முன்வைக்கவில்லை,காய்கறிகள் ஆரோக்கியமானவை என்ற கருத்தையும் வலியுறுத்துகின்றன என்கிறார்.
பல நோய்களை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவத்ன் மூலமே சரி செய்துவிடலாம் என்று சொல்பவர் காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது தான் எனது படைப்புகளின் நோக்கம் என்கிறார்.

ஆம்பர் லாக்கேவின் கலைவண்ண இணையதளம்: http://www.ambaliving.com/
——-

 

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நரேந்திர மோடி

modiஇணைய பயன்பாட்டில் தீவிரமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஏற்கனவே பேஸ்புக், டிவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமிலும் இணைந்து ஆசியான் மாநாட்டில் இருந்து முதல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக உலகில் பேஸ்புக் ,டிவிட்டர் போலவே இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருக்கிறது.புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் மூலம் புகைப்ப்டங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். செல்போன் செயலி வழியே புகைப்படங்க்ளை பகிரலாம். இன்ஸ்டாகிராம் தளம் வழியே படங்களை பார்க்கலாம்.
டிவிட்டர் போலவே இதிலும் விருப்பமான கணக்குகளை பின் தொடரும் வசதி மற்றும் கருத்துக்களை பரிமாறும் வசதி இருக்கின்றன. இன்ஸ்டாகிராம் சேவை நட்சத்திரங்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது.
இந்நிலையில் சமூக ஊடக் செயல்பாட்டில் ஆர்வமும், தேர்ச்சியும் உள்ளவராக பாராட்டப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். மியன்மரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்து தனது முதல் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ளார்.

மாநாட்டு மேடையின் சிவப்பு கம்பள தோற்றத்தை அவர் புகைப்படமாக எடுத்து, பகிர்ந்து கொண்டுள்ளார். ‘ ஹ்லோ வேர்ல்ட். இன்ஸ்டாகிராமிக்கு வருவதில் மகிழ்ச்சி. என் முதல் புகைப்பட்ம ஆசியான் மாநாட்டில் இருந்து” என்று அதில் மோடி தெரிவித்துள்ளார்.இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்திலும் தகவல் தெரிவித்திருந்தார்.
பிரதமர் இன்ஸ்டாகிராமுக்கு வருகை தந்த செய்தி உடனே பரவி அவருக்கு பாலோயர்கள் குவிந்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கியிருக்கிறது. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது இன்னும் அதிகமாகி இருக்கும்.

இந்த புகைப்படத்திர்கு இதுவரை 20,ஆயிரத்துக்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன. சக இன்ஸ்டாகிராமர்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமரின் இன்ஸ்டாகிராம் முகவரி: http://instagram.com/narendramodi