Tag Archives: instagram

சமூக ஊடக பயன்பாட்டிற்கான செக்லிஸ்ட்

DSCF6482சமூக ஊடகம் என்றதுமே உங்கள் முகம் பிரகாசமாகி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் பளிச்சென நினைவுக்கு வரலாம். இவற்றில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களும், பார்த்து ரசிக்கும் வீடியோக்களும், மீம்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் சமூக ஊடக நட்பு வட்டங்களும் மனதில் நிழலாடலாம். இப்படி சமூக ஊடகங்களில் ஈடுபாடு கொண்டிருப்பது இயல்பானது தான். ஆனால், இந்த ஈடுபாடு எல்லை மீறாமல் இருப்பது முக்கியம்.

ஆம், சமூக ஊடக செயல்பாடு என்பது அளவுக்கு மீறி அமையும் போது அதற்கு அடிமையாகவிடும் வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் நேரம் வீணாகி செயல்திறன் பாதிப்பதோடு, மேலும் பல விதங்களிலும் இழப்பை சந்திக்க நேரிடலாம். எனவே சமூக ஊடக பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம். எல்லாம் சரி, சமூக ஊடக பயன்பாடு அளவுக்கு மீறி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகளை வல்லுனர்கள் சுட்ட்டிக்காட்டுகின்றனர்:

பணிக்கு பதிலாக!

வேலையை பார்க்கலாம் எனும் உத்வேகத்துடன் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் முன் அமர்கிறீர்கள். மானிட்டர் உயிர் பெற்றதுமே உத்தேசித்த வேலையை மறந்துவிட்டு, பேஸ்புக் அல்லது டிவிட்டரில் ஐக்கியமாகிவிடுவது உங்கள் பழக்கமாக இருந்தால் நிச்சயம் இதற்கு கட்டுப்பாடு தேவை. வேலைக்கு முன்னுரிமை அளித்து, சமூக ஊடக செயல்பாட்டிற்கு என்று தனியே நேரம் ஒதுக்க வேண்டும். அலுவலகத்திலோ, வீட்டிலோ பணி நிமித்தமாக கம்ப்யூட்டரை பயன்படுத்த முற்படும் போது, வேலைக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். சமூக ஊடக தேவைகள் காத்திருக்கட்டும்.

ஸ்மார்ட்போன்

கம்ப்யூட்டர் முன் இல்லாத போதும், ஸ்மார்ட்போனை எடுத்து வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் புதிய அப்டேட் வந்திருக்கிறதா? என பார்க்கும் பழக்கம் இருந்தாலும் சிக்கல் தான். ஸ்மார்ட்போன் என்பது அடிப்படையில் தொடர்பு கொள்வதற்கான சாதனம். அதன் இணைய வசதியை பணிகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் ஸ்மார்ட்போனில் சில நிமிடங்களுக்கு ஒரு முறை புதிய நிலைத்தகவலை தேடிப்பார்க்கும் தன்மை சமூக ஊடக ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதன் அடையாளமாகும். அதே போல, புதிய நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதோ இல்லையோ, அடிக்கடி போனை எடுத்துப்பார்க்க தோன்றினாலும் சிக்கல் தான். பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி வெளியே வந்துவிட்ட பிறகு, காணமே இல்லாமல் மீண்டும் அந்த நினைவு வரக்கூடாது.

கணக்கற்ற கணக்குகள்

சமூக ஊடக பரப்பில் எண்ணற்ற சேவைகள் இருக்கின்றன. இவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால் எதற்கு என்று தெரியாமலே பல சமூக ஊடக சேவைகளில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டிருந்தீர்கள் என்றால் அதனால் நேரம் வீணாவதை தவிர்க்க முடியாது. அது மட்டும் அல்லாமல், நம்பகத்தன்மை இல்லாத சேவைகள் மற்றும் செயலிகளில் எல்லாம் உறுப்பினராக இருந்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

காலையில் கவனம்

தினமும் காலையில் கண் விழித்ததும் காபி, டீ சாப்பிடுவதை விட ஸ்மார்ட்போனை எடுத்து ஸ்டேட்டஸ் அப்டேட்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். சமூக ஊடக செயல்பாட்டிற்கு என்று தனியே நேரத்தை ஒதுக்க வேண்டும். இல்லை எனில் இது உங்கள் பொன்னான காலை நேரத்தை சோம்பல் மிக்கதாக மாற்றிவிடுவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பையும் பாதிக்கலாம். அதே போல, இரவு நேரங்களிலும் படுக்கைக்குச்செல்லும் முன் போன் பக்கம் செல்ல வேண்டாம். அதைவிட பாட்டு கேட்கலாம். புத்தகம் வாசிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசலாம்.

யார் நண்பர்கள் ?

நண்பர்களோடு வெளியே செல்லும் போது, பரஸ்பரம் அரட்டை அடிபப்டைவிட, பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போனை எடுத்து பார்ப்பதிலும், செல்பி எடுத்துக்கொண்டு பதிவேற்றுவதிலும் மனது செல்கிறதா? ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட சென்றாலும், சூடாட உணவு ஆறுவதை கூட பொருட்படுத்தாமல், சமூக ஊடக செய்தி என்ன என்பதிலேயே மனம் ஈடுபாடு கொள்கிறதா? இவையும் தவிர்க்கப்பட வேண்டும். அருகே இருக்கும் நண்பர்களுடன் உற்சாகமாக பேசுவதை விட ஆன்லைன் நண்பர்கள் மீது தான் ஆர்வம் அதிகம் என்பதை என்னவென்று சொல்வது என சிந்தியுங்கள்.

மிகை பகிர்வு

மின்னல் கீற்று போல ஒரு எண்ணம் உதிக்கும் போது அதை உடனடியாக நிலைத்தகவலாக பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் பேஸ்புக் சுவற்றில் நல்லதொரு பதிவை வாசிக்க நேர்ந்தால் அதை ஒட்டு கருத்தை பதிவு செய்யலாம். தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு தொடர்பாக டிவிட்டரில் குறும்பதிவு வெளியிடலாம். ஒரு நல்ல புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிரலாம். இது போன்ற செயல்பாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இன்று காலை காபி குடித்தேன், சுவையாக இருந்தது என்பதில் துவங்கி எல்லாவற்றையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளத்துவங்கினீர்கள் என்றால், நிச்சயம் உங்கள் பகிர்வு பழக்கத்தில் மாற்றமும், கட்டுப்பாடும் தேவை. இத்தகைய மிகை பகிர்வு உங்கள் சமூக ஊடக செயல்பாட்டையும் அர்த்தமில்லாததாக மாற்றிவிடும்.

இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என உறுதி கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் முழுவதும் சமூக ஊடகங்கள் பக்கம் செல்லாமல் இருந்து பார்ப்பது என்பதை சவாலாக கொள்ளுங்கள். இதை செயல்படுத்துவதிலேயே உங்கள் கட்டுப்பாட்டின் உறுதி தெரிய வரும்.

 

தகவல் புதிது; எல்லாம் சிப் மயம்

ரெயிலில் பயணம் செய்யும் போது, டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டை எடுத்துக்காட்டுவதற்கு பதிலாக கையை மட்டும் நீட்டினால் எப்படி இருக்கும்? டிக்கெட் பரிசோதகரும் தனது ஸ்மார்ட்போனில், நீட்டப்படும் கையை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தால் எப்படி இருக்கும்? ஸ்வீடன் நாட்டில் உள்ள ரெயிலில் பயணம் செய்தால் இத்தகைய அனுபவத்தை பெறலாம். ஏனெனில் அந்நாட்டின் ரெயில்வே நிறுவனம், பயணிகள் தங்கள் கைகளில் மைக்ரோசிப்களை பொறுத்திக்கொண்டு, அதில் டிக்கெட் விபரங்களை பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை சரிபார்ப்பது போலவே இந்த டிஜிட்டல் டிக்கெட்டையும் ஸ்மார்ட்போன் மூலம் சரி பார்த்துக்கொள்ளலாம். இந்த ஹைடெக் போக்கு கொஞ்சம் டுமச்சாக தோன்றுகிறதா? இத்தகைய சேவை தங்களுக்கு தேவை என்று பிஸ்னஸ் கிளாஸ் பயணிகள் பலர் வேண்டுகோள் வைத்ததால் தான் இதை அறிமுகம் செய்துள்ளதாக ஸ்விடன் ரெயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது!.

 

இன்ஸ்டாகிராமில் சைக்கிள் ஓவியம்

இன்ஸ்டாகிராம் சேவையை ஒளிப்படங்களை பகிர்ந்து கொள்ள தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை; அருமையான ஓவியங்களையும், கோட்டு சித்திரங்களையும் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த ஓவியங்கள் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தால் இன்னும் நல்லது. இதற்கான அழகிய உதாரணமாக ஜெர்மனியில் குடியேறிய இந்தியரான அலென் ஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் அமைந்திருக்கிறது. சிறு வயது முதல் சாமானியர்கள் வாகனமாக சைக்கிள் மீது அபிமானம் கொண்டுள்ள ஷா, இந்தியாவில் சைக்கள் பயன்பாட்டை சித்தரிக்கும் காட்சிகளை ஓவியமாக வரைந்து அவற்றை இன்ஸ்டார்கிராமில் பகிர்ந்து கொள்கிறார். சைக்கிள் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள ஷாவின் ஓவியங்கள், இந்தியர்களில் பலருக்கு சைக்கிள் இன்னமும் நெருக்கமாக இருப்பதை கச்சிதமாக உணர்த்துகின்றன.

இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/theolddrifter/

 

 

தளம் புதிது; ஸ்க்ரீன்ஷாட் சேவை

பல்வேறு காரணங்களுக்காக இணையத்தில் உலாவும் போது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் தேவை ஏற்படலாம். இதற்கு உதவும் சேவைகளும் பல இருக்கின்றன. அந்த வகையில் என்போஸ்.கோ தளம் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இதில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை சமர்பித்தால் மட்டும் போதும் அதன் ஸ்கிரீன்ஷாட் தோற்றத்தை அளிக்கிறது. மேலும் பல்வேறு அசம்க்கள் உள்ளன. ஆனால் கட்டண சேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சோதனைக்காக இலவசமாக பயன்படுத்திப்பார்க்கலாம்.

இணையதள முகவரி: https://enpose.co/

 

 

விக்கி கட்டுரை சுருக்கங்கள்

விக்கிபிடியாவில் தகவல்களை தேடும் போது நீளமான கட்டுரைகளை படிக்க கஷ்டமாக இருந்தால் அவற்றின் சுருக்கத்தை மட்டும் படித்துப்பார்க்கும் வசதி இருப்பது தெரியுமா? குறிப்பிட்ட விக்கிபீடியா கட்டுரைக்கான பிரவுசர் முகவரியில், உங்கள் மொழியை குறிக்கும் இ.என் எனும் ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக சிம்பிள் எனும் ஆங்கில எழுத்தை டைப் செய்தால் அந்த கட்டுரையின் சுருக்கமான வடிவத்தை வாசிக்கலாம். ஆங்கில மொழி கட்டுரைகளுக்கு மட்டும் இந்த வசதி இருக்கிறது. அதிலும் எல்லாம் நீள் கட்டுரைகளுக்கும் இல்லை. ஆனால் சுருக்கமான பதிவுகள் உள்ள கட்டுரைகள் எனில் இந்த வசதி கைகொடுக்கும்.

 


நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது

இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்கள்

img005நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இந்த புத்தகம். இதே தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வெளிவந்து, தற்போது புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கிறது.

யார் இந்த நாயகர்கள் என கேட்கலாம்? நவீன இணையத்தில் நாம் தவறாமல் பயன்படுத்தும் முன்னணி இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் இவர்கள்.

பெரும்பாலானோர் அறிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வேர்ட்பிர்ஸ், பிளாகர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கியவர்கள் முதல், பரவலாக அறியப்படாத ஆனால் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய லைப்ரரிதிங், டக் டக் கோ, யெல்ப், பின்டிரெஸ்ட் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கியவர்கள் வரை பல இணைய சாதனையாளர்களை இந்த தொகுப்பின் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

ஏர்பிஎன்பி, டிக், சவுண்ட்கிளவுட், டிராப்பாக்ஸ், பிளாகர், கிளவுட், டெலிஷியஸ், லிங்க்டுஇன், உபெர், டிவிட்ச், கிவா, கிக்ஸ்டார்ட்டர், ரெட்டிட், டம்ப்ளர், பயர்பாக்ஸ் என நவீன இணையத்தின் அடையாளமாக கருதப்படும் சேவைகளை உருவாக்கிய நாயகர்களாக இந்த பட்டியல் நீள்கிறது.

இந்த சேவைகள் அனைத்துமே இணையத்தின் ஆற்றலை புதுமையாக பயன்படுத்திக்கொள்ள முற்பட்டதன் மூலம் முன்னணி சேவையாக உருவானவை. இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் புரட்சிகரமானவையும் கூட! இணையம் மூலம் தொலைபேசி சேவையை பயன்படுத்த வழி செய்த ஸ்கைப், வீடியோக்களை எளிதாக பகிர வைத்த யூடியூப், சிக்கலான பிரவுசர் அனுபவத்தை எளிதாக்கிய பயர்பாக்ஸ், இணைய கடன் வழங்க வழி செய்த கிவா, இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர், செய்தி பகிர்வை ஜனநாயகமயமாக்கிய டிக்  என இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் புரட்சிகரமானவை.

இந்த புதுயுக இணைய சேவைகள் சமகால வாழ்க்கையில் ஏற்படுத்திருக்கும் தாக்கம் நினைத்து கூட பார்க்க முடியாதது. பேஸ்புக், யூடியூப் மட்டும் அல்ல, கோப்பு பகிர்வுக்கான டிராப்பாக்ஸ், தொழில்முறை வலைப்பின்னலான லிங்க்டுஇன் உள்ளிட்ட சேவைகளையும் நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.

இந்த சேவைகளுக்கு பின்னே இருக்கும் சாதனையாளர்கள் இவற்றை எப்படி உருவாக்கினர் என்பதை அவர்களின் அறிமுக சித்திரம் விவரிக்கிறது. சேவைக்கான எண்ணம் உதித்த விதம், அதை செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள், போராட்டங்களையும், தடைகளையும் வெற்றி கொண்ட விதம் என சுவாரஸ்யமாகவும், ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த சித்திரங்கள் அமைந்திருப்பதை உணரலாம்.img006

இவை வெறும் வர்த்தக வெற்றிக்கதைகளோ, தொழில் சாகசங்களோ கிடையாது. இவை தனிமனித புகழ்ச்சியும் அல்ல: இணையம் உண்டாக்கி தந்துள்ள எல்லையில்லா சாத்தியங்களையும், புதிய வாய்ப்புகளையும் இணம் கண்டு கொண்டதன் மூலம் அவற்றை நடைமுறை வாழ்க்கைக்கே ஏற்ப பயனுள்ள சேவையாக மாற்றித்தந்த முன்னோடிகளின் பதிவுகள் இவை.

பெரிய அளவிலான பண பலமோ, வலுவான பின்பலமோ இல்லாமல், தங்கள் மனதில் உதித்த எண்ணத்தின் ஆற்றலால் மட்டும் இந்த சேவைகளை உருவாக்கியவர்கள் ஜெயித்திருக்கின்றனர். இந்த எண்ணத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் அவர்கள் வெளிப்படுத்திய வேட்கையும், தொழில்நுட்ப புரிதலுமே வெற்றிக்கு வழி வகுத்திருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் பல பெரிய ஜாம்பவான் நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் இத்தகைய புதுமையான சேவையை உருவாக்குவது என்பது ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள எந்த பெரிய நிறுவனத்திற்கும் சாத்தியமாகவில்லை.  அதனால் தான் இவர்கள் நம் காலத்து நாயகர்களாக மின்னுகின்றனர்.

 

நம் காலத்து நாயகர்கள் புத்தகம்

img005பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம், டிரபாப்பாக்ஸ், சவுண்ட் கிளவுட் என நம் காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் இணைய சேவைகள் மற்றும் இணையதளங்களை உருவாக்கிய இளம் நிறுவனர்களை அறிமுகம் செய்யும் வகையில் எழுதிய தொடர் ’நம் காலத்து நாயகர்கள்’ புத்தக வடிவில் வெளியாகிறது. புதிய தலைமுறை கல்வி வார இதழில் தொடராக வந்த இந்த கதைகள் புதிய தலைமுறை பதிப்பக வெளியீடாக புத்தக வடிவம் பெறுகிறது.
இது என்னுடைய மூன்றாவது புத்தகம். ஒரு விதத்தில் இரண்டாம் புத்தகமான நெட்சத்திரங்களின் இன்னொரு நீட்சி என இதை சொல்லலாம். நெட்சத்திரங்கள் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் வெற்றிக்கதைகளை விவரித்தது என்றால், நம் காலத்து நாயகர்கள் புத்தகம் இணைய உலகில் வெற்றி பெற்றவர்களையும், புதிய பாதை கண்டவர்களையும் அடையாளம் காட்டுகிறது.
இது வெறும் வெற்றிக்கதைகள் அல்ல. வெற்றியை முன் வைத்து எழுதப்பட்டதும் அல்ல. நம் காலத்தின் அடையாளமாக இணைய நிறுவனங்கள் மற்றும் நமக்கு இன்றியமையாததாக கருதும் மகத்தான இணைய சேவைகளை உருவாக்கி மனிதர்கள் இவர்கள்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் முன்னோடிகள். ஒரு விதத்தில் கிளர்ச்சியாளர்கள். ஏற்கனவே இருந்த பாதை மற்றும் சிந்தனைகளில் இருந்து விலகி யோசித்து வெற்றி பெற்றவர்கள். பெரிய அளவில் பின்புலமே, செல்வாக்கோ இல்லாமல் தங்கள் ஐடியாவால் ஜெயித்தவர்கள் என்பது இவர்களின் பெரும்பாலானோரின் பொதுவான குணாதிசயம்.
பரவலாக அறியப்பட்ட வாட்ஸ் அப், ஸ்கைப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளை உருவாக்கிய நிறுவனர்கள் தவிர அதிகம் அறியப்படாத வெற்றிக்கதைகளான லைப்ரரி திங், யெல்ப், பிண்டிரெஸ்ட், டம்பளர் ஆகிய வெற்றிக்கதைகளும் இதில் அடங்கியுள்ளன.
கொடுக்க வைக்கும் தளமான கிவா மற்றும், நிதி திரட்ட உதவும் இணைய மேடையான கிக்ஸ்டார்ட்டர் பற்றி எழுத முடிந்தத்தில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதே போல வேர்பிரஸ் பின்னே உள்ள முல்லன்வெக் பற்றியும் பயர்பாக்ஸ் பின்னே உள்ள ராஸ் பற்றியும் எழுத முடிந்ததில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.
இந்த தொடரை எழுதிய எனக்கு ஒரு கற்றல் அனுபவமாகவே அமைந்தது. இணைய உலகம் தொடர்பான பல புதிய விஷயங்கள் மற்றும் ஆளுமைகளை அறிய முடிந்தது. தொடரை எழுத வாய்ப்பளித்த புதிய தலைமுறை கல்வி ஆசிரியர் பொன்.தனசேகரன் மற்றும் அவரிடம் பரிந்துரைத்த ஆரூயிர் நண்பர் சுந்தரபுத்தனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.புத்தக வடிவில் பதிப்பிக்கும் புதிய தலைமுறைக்கும் நன்றிகள் பல!

அன்புடன் சிம்மன்

இன்ஸ்டாகிராமில் புத்தக விமர்சனம்

slide_356238_3918995_free
புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை விரிவுபடுத்தியிருக்கின்றனர். இப்போது அமெரிக்க வலைப்பதிவாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
யூலி பெய்ட்டர் கோஹன் எனும் அந்த வலைப்பதிவாளர் இன்ஸ்டாகிராம் மூலம் புத்தக விமரன்ங்களை வெளியிட்டு வியப்பையும் ஏற்படுத்திருக்கிறார். நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை தானே வெளியிட முடியும், புத்தக விமரசனங்களை வெளியிடுவது எப்படி சாத்தியம் என சந்தேகிக்கலாம். இன்ஸ்டாகிராம் தரும் சாத்தியத்தை யூலி கோஹன் அழகாக பயன்படுத்திக்கொண்டு இதை சாத்தியமாக்கி இருக்கிறார். அதாவது மனிதர்களையும், அவர்கள் வாசிக்கும் புத்தகங்களையும் இணைத்திருக்கிறார்.

புத்தக பிரியர்களை தேடிப்பிடித்து அவர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்துடன் கிளிக் செய்து அந்த படங்க்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். புகைப்பட குறிப்புடன், வாசக்ர்கள் புத்தகம் பற்றி தெரிவிக்கும் கருத்தை விமர்சனமாக இடம்பெறச்செய்து வருகிறார்.
பலதரப்பட்ட வாசர்கள் இப்படி தாங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றி தெரிவிக்கும் கருத்துக்களை படிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான நல்ல வழியாகவும் இருக்கிறது.

இந்த முயற்சியில் கூடுதல் சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த வாசகர்கள் எல்லாமே நியூயார்க் நகரின் மெட்ரோ ( சப்வே) பயனாளிகள் என்பது தான். ஆம், நகரின் மெட்ரோ ரெயில் பயணத்தின் போது புத்தகம் வாசிப்பவர்களை பேட்டி கண்டு யூலி கோஹன் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தான் நியூயார்க் நகருக்கு குடிபெயர்ந்த யூலி கோஹன் , மெட்ரோ ரெயில் பயணத்தில் பலரும் புத்தகம் படிப்பதை பார்த்திருக்கிறார். அடிக்கடி இந்த காட்சியை எதிர்கொண்டவர் எது அவர்களை இப்படி வாசிக்க தூண்டுகிறது என அறிந்து கொள்வதற்காக புத்தக வாசிப்பு பயணிகள் சிலரிடம் பேசிப்பார்த்துள்ளார்.
அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சுவாரஸ்யமாக இருந்ததுடன் , பயணிகள் வாசிக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த்தாக அல்லது வாசகரின் தனிப்பட்ட அனுபவம் சார்ந்த்தாக இருப்பதை தெரிந்து கொண்டார். இந்த கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கவே இவற்றை பகிர்ந்து கொள்ள தீர்மானித்தார்.
இதற்காக இன்ஸ்டாகிராமில் சப்வே புக்ரிவ்யூ எனும் பக்கத்தை துவக்கினார் இந்த பக்கத்தில் பயணிகளை அவர்கள் வாசிக்கும் புத்தகத்துடன் புகைப்படம் எடுத்து, அந்த படங்களை அவர்களின் புத்தக கருத்துக்களுடன் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். புத்தகம் பற்றிய சுருக்கம் மற்றும் அதை அவர்கள் ஏன் வாசிக்கின்றனர் என்ற விவரம் விமர்சனமாக இடபெறுகின்றன.
slide_356238_3919000_free
வழக்கமான புத்தக விமர்சனத்தில் இருந்து மிகவும் மாறுபட்டு, தனிப்பட்ட தன்மையுடன் துடிப்பாக இருந்த இந்த விமர்சனங்கள் புத்தக வாசிப்பு பற்றிய புதிய பார்வையைடும் கொடுத்தன.இதன் காரணமாகவே வாசகர்களை இந்த பக்கம் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இன்ஸ்டாகிராமின் ஆதார அம்சமான புகைப்பட பகிர்வுடன் வாசிப்பு அனுபவமும் கைகோர்த்திருப்பது இணையவாசிகளை கவர்ந்திழுத்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்த பக்கத்திற்கு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பக்கம் தவிர சப்வே புக்ரீவ்யூவிற்காக தனியே இணைய தளமும் (http://www.subwaybookreview.com/)இவர் அமைத்திருக்கிறார்.
மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கதைகளை பகிர்ந்து கொள்வதே தனது நோக்கம் என்று கூறும் யூலி கோஹன் இந்த முயற்சியும் அதை பிரதிபலிப்பதாக உற்சாகமாக சொல்கிறார். இந்த கதைகள் நாம் தனியே இருக்கவில்லை என்பதையும் உலகுடன் ஏதோ ஒருவகையில் பின்னி பினைந்திருக்கிறோம் என்பதையும் உணர்த்துவதாக அவர் சொல்கிறார். தனது இணையதளத்தில் எழுத்தாளர்களின் நேர்க்காணல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

புத்தக விமர்சன இன்ஸ்டாகிராம் பக்கம்: https://instagram.com/subwaybookreview/

——
ufr.ee
தளம் புதிது; இ(எ)ன்று சந்திப்போம்

நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக பொழுதை கழிப்பது மகிழ்ச்சியானது. இதற்கான திட்டமிடலை எளிதாக்கும் வகையில் யூப்.ரீ இணையதளம் அமைந்துள்ளது. இந்த சேவை இலவசமானது என்பது மட்டும் அல்ல, இதை பயன்படுத்த உறுப்பினராக வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
சந்திப்புக்கான அழைப்புகளை அனுப்ப விரும்பினால் இந்த தளத்தில் நுழைந்து , புதிய நிகழ்ச்சி பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அடுத்தாக தோன்றும் பக்கத்தில் மேலே உள்ள கட்ட்த்தில் நிகழ்ச்சி தலைப்பை குறிப்பிட்ட், கீழே உள்ள காலண்டரில் அதற்கான தேதியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு வரும் பக்கத்தில் உங்க்ளை பெயரை சேர்த்து விட்டு, இந்த பக்கத்தை அழைப்பிதழாக நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். இதற்கான இணைய இணைப்பை மட்டும் இமெயில் மூலம் அனுப்பி வைத்தால் போதும், நண்பர்கள் அதைப்பார்த்து, குறிப்பிட்ட தினத்தில் தாங்களுக்கு ஓய்வு இருக்கிறதா என தெரிவிக்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்யவும் முடியும்.
இணையதள முகவரி: http://ufr.ee/

prvacyhack
செயலி அறிமுகம்; ஸ்மார்ட்போன் கழுகு

ஸ்மார்ட்போன் கையில் இருந்தாலே எப்போதும் புதிய செயலிகள் மீது ஒரு கண் வைத்திருப்பது வழக்கம். ஆனால் செயலிகளை தேர்வு செய்யும் போது அவற்றின் பயன்பாட்டின் மீது தான் குறியாக இருக்கிறோமோ தவிர அந்த செயலி எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக செய்லிகள் கோரும் அனுமதிக்கு எல்லாம் பச்சைக்கொடி காட்டுவிடுகிறோம். விளைவு,இந்த செயலிகள் போன் பின்னணியில் இருந்தபடி பலவிதமான விவரங்களை சேகரித்து விளம்பர நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பி வைக்கின்றன. இந்த நிலைக்கு மாறாக போனில் உள்ள செயலிகள் மீதெல்லாம் ஒரு கண் வைத்திருக்க விரும்பினால் அந்த பணியை பிரைவசி ஹாக் செயலி செய்கிறது.
எந்த செயலிக்கு என்ன என்ன அனுமதி அளித்தோம் என்பதை நீங்கள் மறந்துவிட்டாலும், பிரைவசி ஹாக் செயலி எல்லாவற்றையும் ஆய்வு செய்து அவற்றின் செயல்பாடு குறித்து தகவல் அளிக்கிறது. செயலிகள் என்ன வகையான விவரங்களை எல்லாம் சேகரிக்கின்றன என்பதன் அடிப்படையில் அவற்றின் பாதுகாப்பு தன்மை குறித்தும் எச்சரிக்கிறது. புதிய செயலியை டவுண்லோடு செய்வதற்கு முன்னதாகவும் இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்து பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.marblesecurity.labs.android

டிராப்பாக்ஸ் பாதுகாப்பு!

கோப்புகளை சேமிக்கவும் பகிரவும் நீங்கள் டிராப் பாக்ஸ் சேவையை பயன்படுத்துபவராக இருந்தால் இதில் கூடுதல் பாதுகாப்பிற்காக இரண்டு அடுக்கு பரிசோதனை முறை வசதியை நாடலாம். இந்த முறையில் நீங்கள் எப்போது புதிய சாதனம் அல்லது கம்ப்யூட்டரில் இருந்து டிராப்பாக்ஸ் கணக்கை அணுக முயன்றாலும் உங்கள் செல்போனுக்கு ரகசிய குறியீடு அனுப்பி வைக்கப்படும். அதை சமர்பித்தால் மட்டுமே டிராப்பாக்ஸ் கணக்கில் நுழைய முடியும். தாக்காளர்களின் கைவரிசைக்கு இலக்காகும் அபாயத்தை இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு குறைக்கும் என கருதப்படுகிறது.

இமெயில் பற்றிய இனிய செய்தி

இமெயில் என்றவுடன் அவற்றின் மூலம் வந்து சேரும் குப்பை ( ஸ்மேம்) மெயில்களும் சேர்த்தே நினைவுக்கு வரும்.தகவல் தொடர்புக்கு அருமையான வழியாக விளங்கும் இமெயிலுக்கு களங்கமாக அமைந்திருக்கும் குப்பை மெயில்களின் வரத்து இப்போது குறைந்திருக்கிறது. சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைமண்டெக் வெளியிட்டுள்ள தகவலின் படி ஜூன் மாதம் இணையத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மெயில்களில் குப்பை மெயில்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படி குப்பை மெயில்களின் எண்ணிக்கை நல்ல மெயில்களின் எண்ணிக்கையை விட குறைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இணைய பயன்பாட்டில் இது நிச்சயம் நல்லதொரு மைல்கல் தான். குப்பை மெயில்களுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கை உள்ளிடவை இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து குப்பை மெயில்களே இல்லாத நிலை வரட்டும்!

———

1i3

செயற்கைகோள் படங்களால் வியக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் என்பதை உணர விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேண்டும்.விண்வெளி வீரர்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும்.

பூமியில் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் அதன் மீது பிரம்மாண்டமாக காட்சி தரும் கட்டிடங்களும் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது சின்னஞ்சிறியதாக தோற்றம் தரும். இந்த உணர்வு உலகம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த விளைவை ஓவர்வியூ எஃபெக்ட் என்கின்றனர்.

விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் இந்த உணர்வை எல்லோருக்கும் சாத்தியமாக்கி வருகிறார் பெஞ்சமின் கிராண்ட். இவர், டெய்லி ஓவர்வீயூ எனும் தனது இனஸ்டாகிராம் புகைப்பட சேவை பக்கம் மூலமாக விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை புகைபப்டங்களாக பகிர்ந்து கொண்டு வருகிறார். அநேகமாக தினம் ஒரு பிரம்மாண்ட பார்வை படத்தை பகிர்ந்து வருகிறார்.
1i
இந்த புகைப்படங்கள் உண்மையில் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. ஒரு படத்தில் கலிப்போர்னியா சரக்கு விமான நிலையத்தில் வரிசையாக விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியை பார்தால் , சிறுவர்கள் அடுக்கி வைத்திருக்கும் பொம்மை விமானங்கள் போல இருக்கின்றன. ஆனால் எல்லாமே பெரிய விமானங்கள். பயன்பாட்டில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டவை.

இன்னொரு படத்தில் பார்த்தால் வர்ஜினியாவில் உள்ள நிலக்கரி ஆலையில் வரிசையாக டிரக்குகள் ஊர்ந்து செல்வது ஓவிய வரிசை போல இருக்கிறது.

சிங்கப்பூர் துறைமுகத்தின் மேல் பகுதியில் எடுக்கப்பட்ட படத்தில் கப்பல்கள் வல வண்ணங்களில் மீன்கள் போல நீந்திக்கொண்டிருக்கின்றன. உலகிலேயே மிகவும் ப்ரபரப்பாக இருக்கும் இரண்டாவது துறைமுகம் எனும் தகவலை மனதில் கொண்டு பார்க்கும் போது கப்பல்கள் பாய்ந்து முன்னேறும் உணர்வை பெறலாம்.
துபாயில் மூன்று சாலைகளை இணைக்கும் மிராகல் தோட்டத்தை மேலிருந்து பார்க்கும் போது அந்த காட்சி மலைக்க வைக்கிறது. கொஞ்சம் குளோசப்பில் பார்த்தால் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களை சிறியதாக பார்க்கலாம்.

இப்படி ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கியிருக்கும் விதத்தில் வியக்க வைக்கின்றன.
கிட்டத்தட்ட பூமி பற்றிய புதிய பார்வையை தருவதாகவும் இருக்கின்றன.
1i2
கிராண்டும் இந்த நோக்கத்துடன் இந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். கூகுள் எர்த் செயற்கைகோள் சேவையில் இருந்து புகைப்படங்களை அவர் தேடி எடுத்து வெளியிடுகிறார். ஒவ்வொரு படத்தையும் தேட ஒரு மணி நேரம் வரை ஆகலாம் என்கிறார்.

நம்முடைய பூமி நிலப்பரப்பு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை இந்த படங்கள் மூலம் உணர்த்த விரும்புவதாக கிராண்ட் சொல்கிறார்.
அதற்கேற்ப புகைப்படங்களை தேடுவதற்கும் சுவார்ஸ்யமான வழிகளை வைத்திருக்கிறார். நடப்பு நிகழ்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பான புகைப்படங்களை செயற்கைகோள் படங்களில் இருந்து தேடி எடுத்து வெளியிடுகிறார்.

இந்த படங்கள் சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வல்லவை என்கிறார் கிராண்ட்.

பெஞ்சமின் கிராண்ட் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://instagram.com/benjaminrgrant/

——