Tag Archives: yahoo

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

ddg-bangs-640x460மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை தேடுவதற்காக டக்டக்கோவை பயன்படுத்தும் போது, நீங்கள் யார் என்பதை அது கவனிக்காமல் இருக்கிறது. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எனவே உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப்பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு பிரதான அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாறலாம் என நினைப்பதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை என்பது குறிப்பிடத்தக்கது:

ஸ்டாப்வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப்வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப்வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டும் அல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருப்பின், லேப் வசதி மூலம் தொடச்சியாக பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.

பெரிய எழுத்துக்கள்

ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிடல் எழுத்துக்களை அமைக்க விரும்பினால் அதற்கான வசதியையும் இந்த தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் டைடில் கேஸ் என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துக்களை லோவர் கேஸ் அல்லது அப்பர் கேசாக மாற்றவும் இதை பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளை தேட

கூகுளில் தகவல்களை தேடும் போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால் டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100 க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

பிடிஎப் கோப்புகள்

டக்டக்கோவில் எச்.டி.எம்.எல் கோப்புகளையும் எளிதாக தேடலாம். எச்.டி.எம்.எல்: என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளை காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதே போல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும் போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையை சேர்த்துக்கொண்டால் போது, இத்தகைய கோப்புகளை மட்டும் தேடலாம்.

நெத்தியடி தேடல்

சில நேரங்களில் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி இருக்கிறது. இந்த வசதி ஐபேங்க் என சொல்லப்படுகிறது. தேடல் பதத்திற்கு முன் ஆச்சர்யக்குறியை சேர்த்து, குறிப்பிட்ட தளத்திற்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்திற்கு  !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது: https://duckduckgo.com/bang

ஆய்வுப்பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம் தெரியுமா? https://duckduckgo.com/bang?q=google

உடனடி பதில்கள்

இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ் எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. கூகுள் நாலட்ச் கிராப் எனும் பெயரில் இது போன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோ தான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும் தான் தேவை எனில் தேடல் பதத்திற்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையில் எனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப் மட்டுமே சார்ந்திருப்பது தான் ஒரே குறை.

குறுக்கு வழிகள்

இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு போட்டோஷாப்  சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளை பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.

டக்டக்கோவில் இன்னும் கூட பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள் போல வருமா? என கேட்பவர்களுக்காக கூகுல் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சனையா? எனும் பொருள்பட, ஈஸ் கூகுள் டவுன் என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் என தோன்றுகிறது.

 

தளம் புதிது: லண்டன் திரைப்பட வரைபடம்

லண்டன் நகரம் பல விஷயங்களுக்கு புகழ் பெற்றது. தேம்ஸ் நதிக்கரை, லார்ட்ஸ் மைதானம், விம்பிள்டன் மைதானம் என நீளும் இந்த பட்டியலில் திரைப்படங்ளுக்கான படிப்பிடிப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கில படங்கள் பல லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. லண்டன் நகரில் படமாக்கப்பட்ட படங்கள் பற்றி அறிய விருப்பம் எனில், கோ3சினிமா தளத்தின் திரைப்பட படப்பிடிப்பு பகுதி உதவுகிறது.

இந்த பகுதியில் லண்டன் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்ட படங்கள் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். லண்டன் வரைபடம் மீதி இந்த தகவல்கள் அழகாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வரைப்படத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஐகான்கள் மீது கிளிக் செய்தால் படப்பிடிப்பு தொடர்பான விவரங்களை காணலாம். திரைப்பட போஸ்டர் சின்னதாக எட்டிப்பார்க்க மற்ற தகவல்களும் சுருக்கமாக இடம்பெற்றுள்ளன.

திரைப்பட ரசிகர்களுக்கு இந்த தளம் நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும். லண்டன் நகர் மீது அபிமானமும் இருந்தால் இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கும். மற்ற நகரங்களுக்குக் இது போன்ற ஒரு வரைபடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தையும் இது ஏற்படுத்தலாம்.

இணைய முகவரி:  https://go2cinema.com/filming-location-map

 

செயலி புதிது: மாணவர்களுக்கான பயனுள்ள செயலி

மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை பொழுதுபோக்கு நோக்கில் மட்டும் பயன்படுத்துவதில்லை. கல்வி தொடர்பான பணிகளுக்கும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். இதற்கு உதவக்கூடிய எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. இந்த பட்டியலில் டைம்டேபிள் செயலியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த செயலி வகுப்பு பாட அட்டவனையை குறித்து வைத்துக்கொண்டு, வகுப்புகளை மறக்காமல் இருக்க உதவுகிறது. இதில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறிப்பிடுவதோடு, மாணவர்கள் தங்களுக்கு தரப்படும் வீட்டுப்பாடங்கள் போன்றவற்றையும் குறித்து வைக்கலாம். விடுமுறை நாட்களையும் குறித்து கொள்ளலாம். வகுப்பில் எடுக்கும் குறிப்புகளையும் இதில் சேமித்து வைக்கலாம். முக்கியமாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது போனில் அழைப்பு வந்தால் அதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது.

பள்ளி அல்லது கல்லூரி பாடத்திட்டங்களை நிர்வகிப்பதில் இந்த செயலி மிகவும் உதவியாக இருக்கும். எந்த சாதனத்தில் இருந்து வேண்டுமானாலும் இதில் உள்ள தகவல்களை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.gabrielittner.timetable&hl=en_GB

 

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

 

டக்டக்கோ பற்றிய முந்தைய பதிவுகள்;

டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா? http://cybersimman.com/2015/10/28/search-55/

*

கூகுள் தவிர நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தேடியந்திரங்கள்! http://cybersimman.com/2016/09/28/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8/

 

-\

 

மாற்று தேடியந்திரங்கள் எதற்காக? http://cybersimman.com/2016/07/31/search-56/

ஒரு இணைய கையேடு மூடப்படுகிறது, கொஞ்சம் வருந்தலாமே பிளிஸ்!

C6ifJ90VwAAatO4டி.எம்.ஒ.இசட் தளம் முடப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் இது எனக்கு வருத்தம் தரும் செய்தி என்றாலும், அதைவிட முக்கியமானது, இணையத்தின் மகத்தான ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது தான். அது மட்டுமா, இணைய தேடலின் ஒரு முக்கிய அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. மறக்கப்பட்ட அத்தியாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதனால் தான் இந்த செய்தி இன்னும் வேதனை தருகிறது.
டி.எம்.ஒ.இசட் தளமா அது என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், இந்த தளம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம். இணையத்தின் ஆதிகால கையேடு இது. அதாவது இணையதளங்களை பட்டியலிட்டு பரிந்துரைத்த தளம். யாஹு கையேட்டை போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
யாஹூ கையேடா? அது என்ன என்றும் கேட்கலாம். என்ன செய்ய? கூகுள் அலையில் காணாமல் போன சேவையில் யாஹூ கையேடும் ஒன்று! இருந்தாலும் என்ன யாஹு கையேடு தான் இரு காலத்தில் இணையவாசிகளுக்கு புதிய பயனுள்ள இணையதளங்களை அடையாளம் காட்டும் சேவையாக இருந்தது. இணையத்தின் கலங்கரை விளக்கம் என்றும் சொல்லலாம். அதாவது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இணையதளங்கள், அவற்றின் தன்மைக்கேற்ப பலவித தலைப்புகளில் பட்டியலிடப்பட்டிருக்கும். புதிய தளங்களை நாடுபவர்கள் இந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான பிரிவில் விரும்பிய தலைப்பை கிளிக் செய்து, புதிய தளங்களை தெரிந்து கொள்ளலாம். இதுவும் ஒரு தேடியந்திரம் தான்!
இணையத்தின் துவக்கத்தில் இதுவே இணையதளங்களை கண்டறிவதற்கான வழியாக இருந்தது. லைகோஸ், அல்டாவிஸ்டா போன்ற தேடியந்திரங்களுக்கு மத்தியிலும் இது பிரபலமாக இருந்தது. எனினும், தேடியந்திரமாக கூகுள் எழுச்சி பெற்று இணையத்தில் எதையும் தேடுவதை சுலபமாக்கிய பிறகு, யாஹூ கையேடு செல்வாக்கை இழந்து பின்னர் மூடப்பட்டது.
யாஹூ கையேடு மூடப்பட்டாலும், அதே போன்ற இணைய கையேடான , ஓபன் டைரக்டரி எனப்படும் டி.எம்.ஓ.இசட் தளம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது. சிறந்த இணையதளங்களை அறிந்து கொள்ள உதவும் இந்த தளம், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் இணைய கூட்டு முயற்சியாக பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. இடையே இந்த தளத்தின் வடிவமைப்பும் புதுப்பிக்கப்பட்டு சிறந்த தோற்றத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில் தான், இந்த சேவை மார்ச் 14 க்கு பிறகு செயல்படாது என கடந்த மாதம் ஏ.ஓல்.எல் நிறுவனம் அறிவித்தது. ஏ.ஓ.எல் தான் ஓபன் டைரக்டரி தளத்தின் உரிமையாளர்.
தேடியந்திர முடிவுகளை பட்டியலிடுவது உட்பட பலவற்றில் மென்பொருள்கள் இயக்கும் அல்கோரிதம் ஆதிக்கம் செலுத்தும் இணைய உலகில், கைகுத்தல் அரசி போல, மனிதர்கள் பார்த்து கவனமாக தேர்வு செய்த இணையதளங்களின் தொகுப்பாக ஓபன் டைரக்டரி இருந்தது என்பது அதன் தனிச்சிறப்பு. தன்னார்வர்லர்கள் பார்த்து பார்த்து தொகுத்து வழிகாட்டிய அந்த சேவை மூடுவிழா கண்டிருக்கிறது என்பது வருத்தமாக உள்ளது. ஒருவிதத்தில் இணையத்தில் இனி மனிதர்கள் தேர்வுக்கு மதிப்பில்லையோ எனும் கேள்வியையும் எழுப்புகிறது.
கூகுள் ஆதிக்கத்தால் மற்ற மாற்று தேடியந்திரங்களே கவனிப்பாரற்று கிடக்கும் போது, ஓபன் டைரக்டரி சேவை ஈர்ப்பில்லாமல் போனதில் வியப்பென்ன என நினைக்கலாம். இன்னொரு கோணத்தில் பார்த்தால், இணைய கையேடு எனும் கருத்தாக்கத்தின் தேவை முடிந்துவிட்டதே என்றும் கூறலாம்.
இந்த சேவை மூடப்படுவது பற்றிய இரங்கற்பா செய்திகளில் கூட, எப்படியும் ஓபன் டைரக்டரி சேவையை இப்போது யாரும் கண்டுகொள்வதில்லை, மேலும் அது அடிக்கடி சரியாக அப்டேட் செய்யப்படுவதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாராமுகத்தை மீறி, ஓபன் டைரக்டரி சேவை முக்கியமானது என்பதை, அது தொடர்பான குறும்பதிவுகள் உணர்த்துகின்றன. (#DMOZ ) . அது மட்டும் அல்ல, இந்த சேவை மூடப்பட்டது ஏ.ஓ.எல் நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவு என்றும், இந்த திடீர் முடிவு அதன் தன்னார்வலர்கள் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் மதர்போர்ட் செய்தி தளம் தெரிவிக்கிறது. இது பற்றி ஏ.ஓ.எல் விரிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஓ.எல் மூடிவிட்டாலும் தன்னார்வலர்கள் ஒன்று கூடி ஏதேனும் ஒரு வகையில் இதை காப்பாற்றலாம் என எதிர்பார்க்க தோன்றுகிறது.
நிற்க அதே செய்தியில், இந்த தளத்தின் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பும் வருகிறது. தன்னார்வலர்கள் கூட்டு முயற்சியால் செயல்படும் இந்த தளம், கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவுக்கு முன்னோடியும் கூட. இந்த சேவை தங்களுக்கு ஊக்கம் அளித்ததாக விக்கிபீடியா இணை நிறுவனர் லாரி சாங்கர் ஒரு முறை கூறியுள்ளார்.
ஏ.ஒ.எல் நிறுவனம் விலைக்கு வாங்கி இருந்தாலும், இதன் தன்னார்வலர்கள் தங்களுக்குள் சமூக ஒப்பந்தம் செய்து கொண்டே செயல்பட்டு வந்தனர்..
ஆக, விக்கிபிடியாவுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்த சேவை ஏதேனும் ஒரு வகையில் மறு அவதாரம் எடுக்கட்டும்.
இணையத்தில் எப்போதும் கூட்டு முயற்சியின் கை ஓங்கியிருக்க வேண்டும்.

குறிப்பு1; டி,எம்.ஓ.இசட் சேவை பற்றி தமிழ் இந்து இணைய பதிப்பில் எழுதிய ஆவலை விசுவோம் தொடரில் விரிவாக எழுதியுள்ளேன்.- http://bit.ly/2d8rMHm

 

தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்

2440407285_3728063d06_oதேடியந்திரங்களை நன்றாக அறிந்திருந்தாலும், தேடியந்திரங்கள் பற்றி பல விஷயங்களை நாம் அறியாமலே இருக்கிறோம். இவற்றில் 9 முக்கிய அம்சங்களை பிங்டாம் வலைப்பதிவு பட்டியலிட்டுள்ளது:

1. அந்த காலத்திலேயே தேடியந்திரம்

இணையத்தில் தகவல் பரிமாற்றத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ள ஹைபர்டெக்ஸ்ட் எனும் இணைப்பு வசதி பற்றிய கருத்தாக்கம் முதன் முதலில் அமெரிக்க தொழில்நுட்ப தீர்கதரிசி வானவர் புஷ் எழுதிய ஆஸ் வி மே திங் எனும் கட்டுரையில் முன்வைக்கப்பட்டது. சேமிக்கப்பட்ட தகவல்கள் உடனடியாக கண்டெடுக்கப்படுவதற்கான வசதியின் அவசியம் பற்றியும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வசதி தான் தற்போதைய தேடியந்திரங்களுக்கான முன்னோடி என கொள்ளலாம். இந்த கட்டுரை 1945 ம் ஆண்டு வெளியானாலும் 1936 லேயே எழுதப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

2. தேடியந்திர நுட்பத்தின் தந்தை

உலகின் முதல் தேடியந்திரம் 1960 ல் ஜெரார்டு சால்டன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்த குழுவனருடன் இணைந்து சால்டன் ஸ்மார்ட் இன்பர்மேஷன் ரிட்ரிவல் சிஸ்டம் எனும் அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் சால்டன் நவீன தேடியந்திர நுட்பத்தின் தந்தையாக கருதப்படுகிறார்.

3. முதல் முதலாக

இணைய உலகின் முதல் தேடியந்திரமான ஆர்ச்சி, எப்டிபி ஆவண கோப்புகளில் இருந்து தேடுவதற்காக உருவாக்கப்பட்டது.

4. வாண்டக்ஸ்

வைய விரிவு வலைக்கான முதல் தேடியந்திரம் வாண்டக்ஸ் (Wandex) 1993 ல் வெளியானது. எம்.ஐ.டியை சேர்ந்த மேத்யூ கிரே உருவாக்கிய முதல் தேடியந்திர சிலந்தியான வேர்ல்ட் வைடு வெப் வாண்டரரை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டது. கிரே தற்போது கூகுளில் பணியாற்றுகிறார்.

5. கையளவு இணையம்

1993 டிசம்பரில் இணையத்தில் 623 இணையதளங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஆரம்ப தேடியந்திரங்களின் பணி எளிதாகவே இருந்தது.

6. வந்தது கிராளர்

இணைய பக்கங்களின் முழுத்தகவல்களையும் பட்டியலிட்டு தேட உதவிய முதல் தேடியந்திரமான வெப்கிராளர் 1994 அறிமுகமானது. நவீன தேடியந்திரங்களுக்கான முதல் படியாக இது அமைந்தது. இதற்கு முன்னர் தேடியந்திரங்கள் இணைய பக்கங்களின் தலைப்பு மற்றும் அறிமுக குறிப்புகளை மட்டுமே சேகரித்தன.

7. கூகுள் காலம்

எல்லாம் வல்ல கூகுளுக்கான அடிப்படை கோட்பாட்டான பேக்ரப் ( BackRub ) குறித்து கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் 1996 ல் பணிகளை துவக்கினர்.

8. யாஹு!

1990 களில் இணையத்தை ஆண்ட யாஹுவு வலைவாசலாக திகழந்ததே தவிர அதற்கென சொந்தமாக தேடியந்திரம் இல்லை. அல்டாவிஸ்டா, இங்க்டோமி மற்றும் கூகுள் ஆகியவற்றின் நுட்பங்களையே அது 2004 வரை பயன்படுத்தியது. மைக்ரோசாப்டும் இப்படி தான் ஆரம்பத்தில் கோட்டை விட்டு பின்னர் தாமதமாக சொந்த தேடியந்திரம் கண்டது.

* இணையத்தின் முதல் தேடியந்திரம் பற்றிய பதிவு:உலகின் முதல் தேடியந்திரம்.

* தமிழ் இந்துவில் எழுதும் தேடியந்திரம் தொடர்பான தொடருக்கான இணைப்பு:

index

உங்கள் இ-மெயிலில் பணிவு இருக்கிறதா?

இ-மெயிலை எப்படி பயன்படுத்துவது எப்படி? என பாடம் நடத்துவது எல்லாம் இனியும் தேவையில்லாத விஷயம் என்று தான் நம்மில் பலர் நினைக்கலாம்.ஆனால் இ-மெயிலை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பது என்பது தொடர்பாக எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.சரியாக எனும் போது மறுமுனையில் இருப்பவர் அதிருப்தியோ,ஆவேசமோ அடையாத வகையில் வாசகங்களை மெயிலில் இடம்பெறச்செய்வது!

ஏனெனில் மெயிலில் நாம் பயன்படுத்திம் தொனி அதை வாசிப்பவர் மனதில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.அதிலும் போகிற போக்கில் அதிகம் யோசிக்காமல் அனுப்பி வைக்கப்படும் மெயில்கள் வர்த்தக முறிவுகளை கூட உண்டாக்கலாம்.

இதற்கு முக்கிய காரணம், கடிதம் எழுதும் போது அதற்கென ஒரு வடிவத்தை,அலுவல் மொழியை பயன்படுத்த பழகியிருப்பது போல அதன் நவீன கால வடிவமான ஈ-மெயிலுக்கு என ஒரு அமைப்புக்கு நாம் பழகியிருக்கவில்லை என்பது தான்.

அலுவலகத்தில் உடன் பார்க்கும் நண்பருக்கு மெயில் அனுப்பும் போது, கோப்பு தேவை அனுப்பவும் என ஒற்றை வரியை டைப் செய்வதற்கும், தயவு செய்து,இந்த கோப்பை உடனே அனுப்பி வைக்கவும் என கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்படி இ-மெயில் அனுப்பும் போது அதில் இடம்பெறும் வாசகங்களில் அலட்சியம்,ஆணவம் போன்ற தொனி கேட்பதை தவிர்கக்ச்செய்யும் சேவையை பாக்ஸ்டைப் அறிமுகம் செய்துள்ளது.இ-மெயில் திருத்தச்சேவையான இதில் நாம் உத்தேசித்துள்ள வாசகங்களை டைப் செய்தால் அவற்றை சரி பார்த்து பணிவம்சம் கொண்ட வாசகங்களாக மாற்றித்தருகிறது.

மெயிலில் உள்ள வார்த்தைகளில் எவை பணிவற்றவை என சுட்டிக்காட்டி அவற்றை எப்படி மாற்றலாம் எனும் ஆலோசனை சொல்கிறது. நண்பர்களுக்கு அனுப்பும் மெயில்களை கூட விட்டுவிடலாம் ஆனால் வர்த்தக நோக்கிலான மற்றும் அலுவல் நோக்கிலான மெயில்களில் இந்த கவனம் மிகவும் அவசியம்.இந்த சரி பார்த்தல் சேவையை ஜிமெயிலுடன் இணைந்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

இதன் பரிந்துரைகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று சொல்ல முடியாது என்றாலும் இ-மெயில் நாகரீகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சேவை.ஆங்கில மொழியில் உள்ள வாசகங்களை மட்டுமே இந்த சேவை திருத்தி தருகிறது என்றாலும் கூட இதன் பின்னே இருக்கும் அடிப்படை அம்சங்கள் எந்த மொழியில் இ-மெயில் அனுப்பும் போதும் கவனிக்க வேண்டியவை தான்.

இணைய முகவரி: https://labs.foxtype.com/politeness

—–

hidden-social-media-features-header

சமூக வலைப்பின்னல் தள ரகசியங்கள்

நீங்கள் பேஸ்புக் அபிமானியா? டிவிட்டர் விரும்பியா? இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவரா? உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா? என்பது தான். ஏனெனில் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பலரும் அறிந்திராத சின்ன சின்ன அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர்.
உதாரணத்திற்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் தாங்கள் டிவிட்டர் நண்பர்களை அன்பாலோ செய்யாமல், அவர்கள் குறும்பதிவுகள் தங்கள் டைம்லைனில் தோன்றாத வகையில் மியூட் மட்டும் செய்யலாம். அதே போல டிவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போது அதில் உள்ளவர்களை டேக் செய்யும் வசதியும் இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு சமூக வலைப்பின்னல் சேவையிலும் பரவலாக அறியப்படாத வசதிகளும் அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. இவற்றை எல்லாம் அழகாக தொகுத்து இன்போகிராபிக் வடியில் சேல்ஸ்போர்ஸ்.காம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த இன்போகிராபிக்கில் பேஸ்புக்,டிவிட்டர் ,ஜி-பிளஸ் மற்றும் லிங்க்டுஇன் ஆகிய முன்னணி சமூக வலைப்பின்னல் சேவைகளில் மறைந்திருக்கும் அம்சங்கள் வரிசையாக புகைப்பட குறிப்புகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கும் , டிவிட்டரும் எனக்கு அத்துபடி என நினைப்பவர்களுக்கே கூட இந்த அம்சங்கள் வியப்பை அளிக்கலாம். தொழில்முறை நோக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும் லிங்க்டுஇன் சேவை பற்றி சொல்லவே வேண்டாம். சமூக வலைப்பின்னல் தளங்களில் ஏற்கனவே பயன்படுத்திவரும் அம்சங்களோடு இந்த ரகசிய அம்சங்களையும் தெரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்;
பேஸ்புக்; பேஸ்புக்கில் மெசேஜ் பகுதியில் செய்திகளை பார்க்கும் போது அருகே உள்ள அதர்( பிற) பகுதியை கிளிக் செய்தால் ,பேஸ்புக்கில் உங்களுக்கு தொடர்பு இல்லாதவர்களிடம் இருந்து பேஸ்புக்கால் அனுப்பி வைக்கப்படும் செய்திகளை பார்க்கலாம்.
பேஸ்புக் பதிவுகளின் கீழ் உள்ள பகுதியில் கிளிக் செய்தால் அந்த பதிவுக்கான லைக்குகள் மற்றும் பகிர்வுகளை தெரிந்து கொள்ளலாம்.
அதே போல மேனேஜ் பகுதிக்கு சென்று பக்கவாட்டில் தோன்றும் அம்சங்களின் வரிசையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
ஜி-பிளஸ்; ஜி-பிளசில் பியூபிள் பகுதிக்கு சென்று அங்கிருந்து உங்கள் நட்பு வட்டத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
லிங்க்டுஇன்; தொழில் சார்ந்த நட்புகளை உருவாக்கித்தரும் லிங்க்டுஇன் சேவையில் குறிப்பிட்ட ஒரு குழுவில் இணைவதன் மூலம் உங்களுடன் தொடர்பில் இல்லாத ஒரு உறுப்பினருக்கு அந்த குழுவில் இருந்து செய்தி அனுப்பலாம்.
அதே போல பயனாளிகள் தங்கள் தொடர்புகளின் பட்டியலையும் செட்டிங்சிற்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு சமூக வலைப்பின்னல் இன்போகிராபிக்: https://www.salesforce.com/ca/blog/2015/07/hidden-social-media-features.html

——

தளம் புதிது; தொழில்நுட்ப தோழன்

இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கூகுள் நியூஸ் அல்லது பிங் நியூஸ் தளம் ஏற்றது.யாஹூ நியூசையும் மறந்துவிடுவதற்கில்லை. அதே நேரத்தில் இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை மட்டும் தெரிந்து கொள்ள விரும்பினால் டெக்மெமீ இணையதளம் அதற்கு ஏற்றதாக இருக்கும். திரட்டி வகையை சேர்ந்த இந்த தளத்தை தொழில்நுடப் செய்திகளின் சங்கமம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு முக்கிய தளங்களில் இருந்து தொழில்நுட்ப செய்திகள் இதில் இடம்பெறுகின்றன. செய்திகளை தேடும் வசதியும் இருக்கிறது.
தொழில்நுட்ப உலகில் அப்டேட்டாக இருக்க விரும்பினால் இந்த தளத்தை புக்மார்க் செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://techmeme.com/

———–

செயலி புதிது; இ-மெயில் எளிது

மைக்ரோசாப்ட் நிறுவனம் இ-மெயில் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் ஐபோனில் செயல்படக்கூடிய செண்ட் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி இ-மெயில் அனுப்புவதை குறுஞ்செய்தி போல் கொண்டு வந்திருக்கிறது. மெயில் வடிவமைப்பில் அதன் உள்ளடக்கத்தை குறிக்கும் சப்ஜெக்ட் அம்சத்தை நீக்கி இதை சாத்தியமாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் பயனாளிகள் தங்களுடன் மெயில் தொடர்பில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி போல எளிதாக மெயில் அனுப்பலாம். முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது,.விரைவில் மற்ற நாடுகளிலும் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டுக்கும் வரும் என நம்பலாம்.

செயலி இணைப்பு: https://blogs.office.com/2015/07/22/introducing-send-designed-for-in-and-out-email/

——

பயர்பாக்சில் ஹைலைட் வசதி

டெக்ஸ்ட்மார்க்கர் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் இணையத்தில் உலாவும் போது பயன்படுத்தும் இணையதளங்களில் குறிபிட்ட வாசகங்களை ஹைலைட் செய்து கொள்ளலாம். ஹைலைட் செய்ய வேண்டிய வாசகங்களை மவுஸ் மூலம் செலெக்ட் செய்து விட்டு, டெக்ஸ்ட்மார்க்கர் டூல் பாரை கிளிக் செய்தால் போதும். ஹைலைட் வசதிக்கான வண்ணத்தையும் முதலிலேயே தேர்வு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களையும் பயன்படுத்தலாம். பின்னணி நிறத்தையும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த வசதி தற்காலிகமானது தான் என்றாலும் இதை நிரந்தமாகவும் மாற்றிக்கொள்ளலாம். இவற்றை புக்மார்க்காக கூட மாற்றிக்கொள்ளலாம்.

விவரங்களுக்கு: https://addons.mozilla.org/en-US/firefox/addon/textmarkerpro/?src=cb-dl-updated

———
இணையத்தின் முதல் பரிமாற்றம்

இணையத்தில் ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான பைட்களில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இணையத்தில் முதன் முதலில் பரிமாறிக்கொள்ளப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா? இது பற்றிய ஆச்சர்ய தகவலை பிஸ்னஸ் இன்சைடர் இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது.
இன்றைய இணையத்தின் மூல வடிவமான அர்பாநெட் வலைப்பின்னலில் இந்த தகவல் பரிமாற்றம் 1969 ல் நிகழந்துள்ளது. இணையத்திற்கான ஆய்வு நடைபெற்று வந்த யூ.சி.எல்.ஏ மையத்தில் இருந்து ஆய்வாளர்கள் சில நூறு மைல்கள் தொலைவில் இருந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழ ஆய்வாளர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதற்காக அவர்கள் லாக் இன் எனும் வார்த்தையை மட்டும் அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது முதல் இரண்டு எழுத்துக்களை டைப் செய்ததுமே கம்ப்யூட்டர் கிராஷாகி விடவே அந்த இரண்டு எழுத்துக்கள் மட்டும் போய் சேர்ந்தன. ஆக, ’லோ’ தான் இணையத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் வார்த்தையாக ஆனது.

இணைப்பு; http://www.lk.cs.ucla.edu/internet_first_words.html

———