Tag Archives: web

புத்தகங்களை தெரிந்து கொள்ள புதிய வழி

tumblr_onp12eUadT1qaouh8o1_500புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்களின் பரிந்துரை என நீளும் இந்த வழிகளில் கொஞ்சம் சுவாரஸ்யமான புதிய வழியாக கவர்ஸ்பை தளம் அறிமுகமாகியுள்ளது.

டம்ப்ளர் வலைப்பதிவு சேவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் வாயிலாக புதிய புத்தகங்களை அவற்றின் முகப்பு பக்கங்களாக அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகங்கள் எல்லாம் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன தெரியுமா? எல்லாமே புத்தக புழுக்கள் பொது இடங்களில் கையில் வைத்திருக்கும் புத்தகங்கள்.  ஆம், பொது போக்குவரத்து மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் புத்தக புழுக்கள் கையில் வைத்திருக்கும் புத்தகங்களை கண்டறிந்து அவற்றின் முகப்பு படம் இந்த தளத்தில் வெளியிடப்படுகிறது.

புத்தக அட்டைப்படம் மற்றும் அவை கண்டெடுக்கப்பட்ட இடம் மட்டுமே இடம்பெறுகிறது. புத்தகம் தொடர்பான விமர்சன குறிப்புகள் எல்லாம் கிடையாது.

ஆக, ஒருவிதத்தில் வாசகர்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். இவை இயல்பான பரிந்துரையாகவும் அமையும்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துவங்கி மற்ற நகரங்களுக்கும் விரிவாகி இருக்கிறது. இந்த வரிசையில் தில்லியும், மும்பையும், நம்ம சென்னையும் இடம்பெறும் வாய்ப்புள்ளதா என தெரியவில்லை.

இணை முகவரி: http://coverspy.tumblr.com/

 

செயலி புதிது; ஒலிகளை கேட்க உதவும் செயலி

இசை கேட்பது மன அமைதிக்கு உதவுவது போலவே, விரும்பமான ஒலிகளை பின்னணில் கேட்டுக்கொண்டிருப்பதும் மனநிலை மேம்பட உதவும். மழை பெய்து கொண்டிருக்கும் ஓசை, காற்று வீசும் ஒலி ஆகியவற்றை பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தால் மன ஒரு நிலைப்படும். பணியில் கவனச்சிதறலை தவிர்ப்பதில் துவங்கி, இரவு தூக்கம் வரவைத்துக்கொள்வது வரை பலவற்றுக்கு இப்படி பின்னணி ஒலிகளை பயன்படுத்தலாம்.

இத்தகைய ஒலிகளை கேட்டு ரசிக்க வழி செய்யும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் ஏ சாப்ட் மர்மர் செயிலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் மழை, இடியோசை, காபி ஷாப் சத்தம், பறவைகள் கீதம் என பலவித ஒலிகளை கேட்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். ஒலிகளை கலந்து கேட்கும் வசதியும் இருக்கிறது. ஒலிகளுக்கான நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஒலிகளை சமூக ஊடகம் மூலம் நட்பு வட்டத்தில் பகிரவும் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://asoftmurmur.com/

 

——-

டிரால்கள் பிரச்சனைக்கு புதுமையான தீர்வு!

linkmoji-readyexamples-left-p-500x500இணையத்தின் டாப் டென் பிரச்சனைகளை பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நியூஸ் போன்ற புதிய பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டிரால்கள் எனப்படும் இணைய விஷமிகளின் தாக்குதல் இணையத்தின் தீராத தலைவலியாக தொடர்கிறது.

இணையத்தின் ஆதிகால பிரச்சனையான இதற்கு பலவித தீர்வுகள் முயற்சிக்கப்பட்டு, எதுவும் முழு பலன் தராத நிலையில் நார்வே நாட்டு இணையதளம் ஒன்று புதிய தீர்வை முன்வைத்துள்ளது. இந்த தீர்வு புதுமையாக மட்டும் அல்ல புதிர் வடிவிலும் அமைந்துள்ளது. அதாவது கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ளது.

டிரால்களுக்கு பலவிதமான விளக்கம் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப டிரால்களும் பலவிதமான வடிவில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், டிரால்களின் பொதுத்தன்மை என்று பார்த்தால் இணைய விவாதம் போன்றவற்றில் சம்மன் இல்லாமல் ஆஜராகி துவேஷம் நிறைந்த கருத்துக்களை பதிவு செய்வது என புரிந்து கொள்ளலாம். விவாதத்தின் நோக்கத்தை பாதிப்பதில் துவங்கி, தொடர்புடையவர்கள் மனதை நோகடிப்பது வரை இது அமையலாம். இத்தைய தாக்குதலுக்கு இலக்காகி இணைய பக்கமே இனி வரமாட்டேன் என கண்ணீர் மல்க விலகிய பிரபலங்கள் உண்டு. அன்மை காலமாக இணைய சாமானியர்களும் இந்த வகை தாக்குதலுக்கு இலக்காகி அவதிப்பட்டு வருகின்றனர்.

சுருக்கமாக சொலவதானால் இணைய விஷமிகள் இணையத்தை பாதுகாப்பற்ற இடமாக மாற்றி வருகின்றனர். இவ்வளவு ஏன் செய்தி தளங்களிலும் கூட டிரால்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். செய்தி கட்டுரைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பின்னூட்ட வசதியை தவறாக பயன்படுத்தி மனம் போன போக்கில் கருத்துக்களை பதிவு செய்து வெறுத்துப்போக வைப்பதில் விஷமிகள் ஆனந்தம் காண்கின்றனர். சிலர் வம்புக்காகவேனும் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து கோபம் கொள்ள வைப்பதும் உண்டு. ஏதேனும் ஒரு விதத்தில் தூண்டிவிடுவது தானே அவர்களின் நோக்கம்!

பின்னூட்டங்களில் இப்படி காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க கண்காணிப்பு, கட்டுப்பாடு போன்ற உத்திகள் எல்லாம் பலன் தராமல் போகவே, பல இணையதளங்கள் பின்னூட்ட வசதியையே ரத்து செய்துவிட்டன. ஆனால், பின்னூட்டம் என்பது இணையம் சாத்தியமாக்கும் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் என்பதால் இந்த உத்தியையும் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கில்லை. மேலும் பின்னூட்ட வசதி அர்த்தமுள்ள விவாதம் மூலம் கருத்து பரிமாற்றம் மற்றும் கூடுதல் புரிதலுக்கு வழிவகுக்கும்.

எனவே தான் பின்னூட்ட வசதியை இயன்ற வரை ஆரோக்கியமான முறையிலேயே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது எப்படி என பலரும் யோசித்து வருகின்றனர். இந்த வரிசையில் தான் நார்வே நாட்டு பொதுத்துறை ஒளிபரப்பு ஊடகமான என்.ஆர்.கேவின் தொழில்நுட்ப பிரிவான என்.ஆர்.கே. பீட்டா பின்னூட்டங்களை நெறிப்படுத்த புதிய தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்த தீர்வு கேள்வி பதில் பாணியில் அமைந்துள்ளது.

அதாவது, குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரை தொடர்பாக யாரேனும் பின்னூட்டம் வெளியிட விரும்பினால் முதலில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் பின்னூட்டம் அளிக்க விரும்பும் கட்டுரை தொடர்பாக அந்த கேள்விகள் அமைந்திருக்கும். அவற்றுக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே பின்னூட்டம் பதிவு செய்ய முடியும்.

பெரும்பாலும் இணைய விஷமிகள் செய்திகளை படிக்காமலேயே பின்னூட்டத்தில் துவேஷ கருத்துக்களை கூறி கசப்புணர்வு அளிக்கின்றனர் என கருதப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், முதலில் கருத்து சொல்ல விரும்புகிறவர்கள் அது தொடர்பான கட்டுரையை படித்திருப்பதை உறுதி செய்ய இந்த கேள்வி பதில் உத்தி முயற்சிக்கிறது.

” கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? எனில் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். கருத்துக்களின் தரம் குறித்து கவலைப்படுவதால், பின்னூட்டம் அளிப்பவர்கள் அது தொடர்பான செய்தியை வாசித்திருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என இதற்கான காரணம் அந்த இணையதளம் சார்பாக விளக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிப்பதற்கு முன், எல்லோரும் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்கள் எனில், அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அர்த்தமுள்ளதாக அமைய வாய்ப்புள்ளது என என்.ஆர்.கே பீட்டா தளத்தில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

நிச்சயம், பின்னூட்ட வசதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் போராட்டத்தில் இது சுவாரஸ்யமான முயற்சி தான். பின்னூட்டம் மூலம் விஷம் கக்குவதை இது தடுக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், கருத்து தெரிவிக்கவுள்ள ஒரு கட்டுரையை முழுவதும் படித்து, அதன் சாரம்சத்தை புரிந்து கொண்டு பதில் அளிக்க நிர்பந்திக்கப்படுவது போகிற போக்கில் கருத்துக்களை வீசி எறிவதில் இன்பம் காண்பவர்களை யோசிக்க வைக்கலாம். அல்லது குறைந்தபட்சம் விலக்கி வைக்கலாம். மேலும் இடைப்பட்ட நேரம் அவர்களின் ஆவேசத்தையும் தணித்துவிடலாம்.

ஆனால், கட்டுரையின் உண்மையான வாசகர்கள் இப்படி கேள்வி கேட்கப்படுவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத்தெரியவில்லை. கட்டுரை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அவர்கள் ரசிக்கவும் செய்யலாம். எனில் இது, இணைய யுகத்தில் செய்திகள் தொடர்பான உரையாடல் தன்மையில் கூடுதல் அம்சமாகலாம். வாசித்த பிறகே பின்னூட்டம் தெரிவிக்க வழி செய்யும் இந்த உத்தி அர்த்தமுள்ள இணைய விவாதத்திற்கு வழி செய்யலாம் என்று இணைய வல்லுனர்கள் தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தளம் புதிது: இமோஜி வடிவில் இணையதள இணைப்புகள்!

இணையதளங்களின் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் பழக்கமும்,தேவையும் இணையவாசிகளில் பலருக்கு இருக்கலாம். இணையதள முகவரிகள் நீளமாக வால் போல தோன்றமால், கச்சிதமான இருக்க வேண்டுமானால் அதற்காக முகவரி சுருக்க சேவைகள் இருக்கின்றன. அதே போல இணையதள முகவரிகளை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், லிங்க்மோஜி இணையதளம் அதற்கு உதவுகிறது.

இந்த இணையதளம் இணைய முகவரிகளை எல்லோருக்கும் பிடித்தமான இமோஜிகள் வடிவில் பகிர்ந்து கொள்ள வைக்கிறது. இதற்கு, முதலில் பகிர விரும்பும் இணைய முகவரிகளை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே அந்த இணைப்பை இமோஜி எழுத்துக்கள் கொண்டதாக மாற்றித்தருகிறது.

இந்த இணைப்பை பேஸ்புக், டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இமோஜி இணைப்பை கிளிக் செய்தால் அதன் பின்னே உள்ள இணையதளத்திற்கு செல்லலாம்.

லிங்க்மோஜி தளம் உருவாக்கித்தரும் இமோஜி இணைப்பு பிடிக்கவில்லை எனில், பயனாளிகள் தாங்கள் விரும்பிய இமோஜி உருவங்களை தேர்வு செய்து இணைப்பை உருவாக்கி கொள்ளலாம். இணைய பயன்பாட்டில் கொஞ்சம் சுவாரஸ்யமும் தேவை என நினைப்பவர்கள் முயன்று பார்க்கலாம். ஆனால் இமோஜி இணைப்பை கிளிக் செய்ததும், இணையதளம் தோன்றும் வரை காத்திருக்க நேரலாம்.

இணைய முகவரி: http://www.linkmoji.co/

 

செயலி புதிது; பிரிஸ்மா செயலியில் புதிய வசதி

ஸ்மார்ட்போன் பிரியர்களின் மனம் கவர்ந்த பிரிஸ்மா செயலி புதிய அம்சங்களோடு தொடர்ந்து மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது இந்த செயலி புதிய பில்டர் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பிரிஸ்மா செயலி, பயனாளிகளின் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போன்ற தோற்றமாக மாற்றி பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை பிரிஸ்மா செயலியின் பில்டர்கள் மூலம் கலைபடைப்பாக மாற்றிக்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இதன் பின்னே இயங்குகிறது.

இந்த புதுமையான அம்சத்திற்காக அறிமுகமான வேகத்திலேயே பிரிஸ்மா, ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான 2016 ம் ஆண்டுக்கான சிறந்த செயலி விருதையும் வென்றது.

பிரிஸ்மா தொடர்ந்து பயனாளிகளை கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பயனாளிகள் புரபைல் மற்றும் பீட்களை பராமரிக்கும் வசதியை அறிமுகம் செய்தது. தற்போது, பயனாளிகள் புதிய பில்டர்களை உருவாக்கி கொள்ளும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

இதுவரை, அடிப்படையான பில்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இப்போது பிரிஸ்மா ஸ்டோர் மூலம் அதில் உள்ள ஸ்டைல்களை அணுகி, புதிய பில்டர்களை உருவாக்கி கொள்ளலாம். முதல் கட்டமாக இலவசமாக அறிமுகமாகியுள்ளது. ஆனால் இது கட்டணச்சேவையாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://prisma-ai.com/

 

ஊக்கம் பெற 16 வழிகாட்டும் இன்போகிராபிக்

எப்போதும் சுறுசுறுப்பாக பம்பரம் போல சுற்றிச்சுழன்று செயல்பட்டுக்கொண்டிருக்கவே எல்லோரும் விரும்புகின்றனர் என்றாலும், பல நேரங்களில் சோம்பலும், சோர்வும் நம்மை முடக்கி விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் இலக்கில்லாமல் செயல்பட்டு நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பும் அனுபவமும் ஏற்படலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு செயல்திறன் பெற்று ஊக்கமுடன் செயல்படுவதற்கான 16 எளிய வழிகளை ரைக்.காம் (wrike.com/ ) இன்போகிராபிக் எனப்படும் தகவல் வரைபடமாக உருவாக்கியுள்ளது.

5 நிமிடங்கள் கவனம் செலுத்துவதன் மூலம் ஊக்கம் பெறலாம், சிரித்தபடி அலுவலகத்தில் இருக்கையில் இருந்து எழுந்து நடை பயிலுங்கள், நாளைய செயல்களை இன்று இரவே குறித்து வைத்துக்கொள்ளுங்கள், ஊக்கம் தரும் வாசகங்களை படியுங்கள் என்பது உட்பட எளிய வழிகளை இந்த தகவல் வரைபடம் விவரிக்கிறது. உங்கள் இலக்குகளை நினைவில் கொள்ளுங்கள், மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள் உள்ளிட்ட வழிகளோடு, முழுமைவாதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைப்பு: http://bit.ly/2lRMBd2

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

 

வாட்ஸ் அப் சேவையில் காத்திருக்கும் மாற்றங்கள்!

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தை பார்த்தால் மலைப்பாக தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர்ரக பிரிவில் பிளாக்பெரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட்போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐஓஎஸ்-ம் என்றாகி இருக்கிறது.

இந்த பின்னணியில் தான் வாட்ஸ் அப் சேவையில் நிகழ காத்திருக்கும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் வசதியை தொடர்ந்து பெற வேண்டும் என்றால், உங்கள் போனை மாற்றிக்கொள்ளுங்கள் என சொல்லும் அளவுக்கு வாட்ஸ் அப் செல்வாக்கு மிக்கதாக மாறியிருப்பதும் இந்த மாற்றங்களின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

பழைய போன் மாதிரிகள் மற்றும் பழைய இயங்குதளங்களை கொண்ட போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை 2016 ம் ஆண்டுக்குப்பிறகு செயல்படாது எனும் தகவலை நீங்கள் அறிந்திருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் அப் தனது வலைப்பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் மீண்டும் ஒரு அறிவிப்பை இதை உறுதி செய்தது. இதன்படி, நோக்கியா, பிளாக்பெரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றின் பழைய மாடல்களில் வாட்ஸ் அப் சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டது. ஐ.ஒ.எஸ் இயங்குதளத்தின் பழைய வடிவங்களுக்கும் இது பொருந்தும். எனினும் இந்த முதல் கட்ட பட்டியலில் இருந்து பிளாக்பெரி மற்றும் நோக்கியா சிம்பயான் போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட்டிப்பும் கூட 2017 ஜுன் மாதம் வரை தான். அதன் பிறகு வாட்ஸ் அப் செயல்படக்கூடிய புதிய போன் அல்லது இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டும்.  ஆண்ட்ராய்டு 2.2, ஐ.ஓ.எஸ் 6 மற்றும் விண்டோஸ் போன்7 உள்ளிட்ட பழைய ரகங்களில் இந்த ஆண்டிற்கு பிறகு வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த இயலாது. வாட்ஸ் அப் விஷயத்தில் இப்படி காலாவதியாகும் பழைய போன் மாதிரிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு செயலிக்காக போனை மாற்ற வேண்டும் என்பது கொஞ்சம் விநோதமானது தான். வாட்ஸ் அப்பின் செல்வாக்கு அப்படி என்றாலும், இந்த மாற்றத்திற்கான காரணம் அதுவல்ல. வாட்ஸ் அப் புதிய தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு சேவையாக தனது பயன்பாட்டுதன்மையை தக்க வைத்துக்கொள்ள வாட்ஸ் அப்பிற்கு இந்த புதுப்பித்தல் அவசியம்.

இதன் பக்கவிளைவு தான், பழைய இயங்குதளங்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை.

இதற்கு வாட்ஸ் அப்பை குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் வாட்ஸ் அப் அறிமுகமான காலத்தில், பிளாக்பெரியும், ஐபோனும், நோக்கியா சிம்பயான் போன்களுமே ஸ்மார்ட்போன் பரப்பில் பரவலாக பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதன் பிறகு ஆண்ட்ராய்டு அலை வீசத்துவங்கி, ஐபோன் ஆதிக்கமும் வலுப்பெற்றது. இந்த போக்குகளுக்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைந்த வாட்ஸ் அப், முன்னணி செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிலையில், புதிய வசதிகளுக்கு ஈடு கொடுக்க ஏற்றதாக இல்லாத பழைய இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் உறவு கொள்வதற்கான மேம்பட்ட வழிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. எதற்கும் பழைய போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் அப் சேவை செயல்படக்கூடிய போன்களின் பட்டியலை பார்த்துக்கொள்வது நல்லது. இந்த முழு பட்டியலும் இந்த இணைப்பில் காணலாம்:

நிற்க, வரும் காலத்தில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உத்தேசிள்ளதாக கூறப்படும் புதிய அம்சங்களில் சிலவற்றை பார்க்கலாம். செய்திகளை பகிர்ந்து கொண்ட பின் திரும்ப பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போதைக்கு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை விலக்கி கொள்ள நினைத்தால் அதற்கான வழியில்லை. ஆனால், ஜிமெயிலில் இருப்பது போலவே, அனுப்பியவுடன், அந்த செய்தியை திரும்ப பெற விரும்பினால் அதை சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இதன் படி, செய்தியின் மீது, கிளிக் செய்தால், அதை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு தோன்றும். அதை கிளிக் செய்து அந்த செய்தியை அழித்துவிடலாம். ஆனால் இதற்கு கால வரையறை இருக்கிறது. தற்போது சோதனை வடிவில் ஒரு சில போன் மாதிரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவை முழு வீச்சில் அறிமுகம் ஆகும் போது தான் இதன் செயல்பாடு பற்றி தெளிவு கிடைக்கும். இப்போதுள்ள செய்திகளை டெலிட் செய்யும் வசதியில் இருந்து இது மாறுபட்டது.ஏனெனில் செய்திகளை டெலிட் செய்தாலும் அது அனுப்பியவர் போனில் இருந்து தான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய சேவையில் இது சாத்தியம்.

இதே போலவே செய்திகளை திருத்தும் வசதியும் அறிமுகம் ஆக உள்ளது. எல்லாம் சரி, அப்படியே வதந்திகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஒரு வசதி அறிமுகமானால் நன்றாக இருக்கும் அல்லவா!

 

 

இணையத்தில் கதை எழுதலாம் வாங்க!

nanowrimo-prep-story-warsகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, கதைகளை படிப்பதில் விருப்பம் உள்ளவர்களும் சரி, ஸ்டோரிவார்ஸ் இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தளம் இரண்டுக்குமே உதவி செய்கிறது- அதுவும் மிகவும் சுவாரஸ்யமான விதத்தில்.
அடிப்படையில் இந்த தளம் கூட்டு முயற்சியில் கதை எழுதுவதற்கானது. அதாவது மற்றவர்களுடன் இணைந்து கதை எழுத இந்த தளம் உதவுகிறது. இரண்டுவிதமாக இதை செய்யலாம். ஒன்று உங்கள் மனதில் உள்ள கதையை ஆரம்பித்து வைத்து மற்றவர்கள் அதை எப்படி தொடர்கின்றனர் என்று பார்க்கலாம். அல்லது மற்றவர்கள் துவக்கி வைத்துள்ள கதையின் அடுத்த அத்தியாயத்தை நீங்கள் எழுதலாம். எது சிறந்தது என்பதை சக வாசகர்கள் வாக்குகள் மூலம் தீர்மானிப்பார்கள்.
முகப்பு பக்கத்திலேயே கதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் விரும்பியதை தேர்வு செய்து வாசிக்கலாம். அதன் பிறகு, கதையை நீங்கள் தொடர விரும்பினால் அடுத்த பகுதியை எழுதி சமர்பிக்கலாம்.
இப்படி மற்றவர்கள் சமர்பித்த பகுதிகளை வாசித்து எந்த பகுதி சிறப்பாக இருக்கிறது என வாக்களிக்கலாம். அதிக வாக்குகளை பெறும் பகுதி தேர்வு செய்யப்படும். பல்வேறு வகைகளில் இருந்து கதைகளை தேர்வு செய்யலாம்.
இதே முறையில் புதிய கதையை சமர்பிக்கலாம். இந்த கதைகள் இலக்கியத்தரத்தை பெற்றிருக்கும் என்று சொல்வதற்கில்லை: ஆனால் உங்கள் மனதில் உள்ள எழுத்து ஆர்வம் மற்றும் வாசிப்பு ஆர்வத்திற்கு தூண்டுதலாக இருக்கும். கதைகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன.

இணையதள முகவரி: https://www.storywars.net/

செயலி புதிது: செய்திகளை தெரிந்து கொள்ள புதிய வழி!

கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் செய்திகளை தெரிந்து கொள்ள கஷ்டப்பட வேண்டாம். செய்தி திரட்டிகள் முதல் செய்திகளை சுருக்கமாக வழங்கும் செயலிகள் வரை பலவிதமான செய்தி செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் மைக்ரோசாப்ட்டின் நியூஸ் புரோ செயலியும் இணைந்துள்ளது.
சோதனை முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் மைக்ரோசாப்ட் கேரெஜ் திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செய்தி செயலி வழக்கமான செய்தி செயலிகளில் இருந்து மாறுபட்டது. எப்படி எனில், இந்த செயலி பயனாளிகளிக்கு அவர்கள் பணியாற்றும் துறை தொடர்பான செய்திகளை முன்னிறுத்துகிறது.
ஆக, ஒரு பயனாளி ஐ.டி துறையில் பணியாற்றுபவர் என்றால் அதே துறை தொடர்பான செய்திகளை இந்த செயலி மூலம் வாசிக்கலாம்.
பேஸ்புக், லிங்க்டுஇன் அல்லது டிவிட்டர் பயனர் கணக்கு மூலம் இந்த செயலியில் உறுப்பினராக நுழையலாம். அதன் பிறகு, உறுப்பினரின் ஆர்வம் மற்றும் அவர் பணியாற்றும் துறை சார்ந்த செய்திகள் பரிந்துரைக்கப்படும். குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த தகவல்களையும் எளிதாக தேடலாம். அது தொடர்பாக விவாதிக்கலாம். செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் பலவசதிகள் இருக்கலாம். உறுப்பினர்களுக்கான செய்தி உதவியாளர் போலவே இந்த செயலி அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனாளிகள் தங்கள் துறை சார்ந்த செய்திகளை தவறவிடாமல் பின் தொடர் இந்த செயலி உதவியாக இருக்கும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://newspro.microsoft.com/

——–

கவனத்தை ஈர்க்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

ஆடம் ஹில்மேனின் இன்ஸ்டாகிராம் பக்கம் இப்படியும் படங்களை உருவாக்க முடியுமா என வியக்க வைக்கிறது. கலை ஆர்வமும் வடிவமைப்புத்திறனும் கொண்ட ஹில்மேன் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே இந்த படங்களை உருவாக்கி இருக்கிறார். ஆனால் அந்த பொருட்களை அவர் அமைத்திருக்கும் விதத்தில் தான் விஷயமே இருக்கிறது. அவர் வடிவமைக்கும் விதத்தில் பொருட்கள் புதிய தோற்றம் கொள்வதோடு, தனி அழகையும் பெறுகின்றன.
உதாரணத்திற்கு பல வண்ண லாலிபாப் மிட்டாய்களை வட்ட வடிவில் ஒன்றாக அடுக்கி வைத்து ஒரு சக்கரம் போல தோன்ற வைத்திருக்கிறார். அதே போல பல வண்ண பென்சில்களை ஒரு வரிசைய செங்குத்தாகவும், மற்றொரு வரிசையை பக்கவாட்டிலும் அமைத்திருக்கிறார். பென்சில்களின் அளவும் சிறியதில் இருந்து துவங்கி பெரிதாகிறது. இந்த வரிசை சந்திக்கும் இடத்தில் ஒரு ஷார்ப்னரையும் வைத்திருக்கிறார். இன்னொரு படத்தில் ஜெம்ஸ் மிட்டாய்களை கொண்டு அழகிய கோலத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பார் என வியக்காமல் இருக்க முடியாது. ஹில்மேனின் கற்பனைத்திறனும், படைப்பாற்றலும் ஒவ்வொரு படத்திலும் மிளிர்வதோடு ஒளிபட சேவையான இன்ஸ்டாகிராமை இப்படியும் பயன்படுத்தலாமா என்ற வியப்பும் ஏற்படும்.

ஹில்மேன் படங்கள் காண: https://www.instagram.com/witenry/

 

–]

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

புத்தகம் படிக்க உதவும் செயலி

தளம் புதிது: ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க!

docuஇணையத்தில் ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது ரோக்கும்னடரிஸ் இணையதளம்.
இந்த தளம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவுவதாக கூறுகிறது.
பிபிசி. சேனல்4, நெட்பிளிக்ஸ் ,யூடியூப் மற்றும் விமியோ உள்ளிட்ட தளங்களில் இருந்து ஆவணப்படங்களை தேர்வு செய்து இந்த தளம் பட்டியலிடுகிறது. முகப்பு பக்கத்திலேயே இந்த பட்டியலை பார்க்கலாம். அவற்றில் தேவையானதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
இப்போதைக்கு பிரிட்டனில் உள்ள ஆவணப்படங்களை மட்டுமே பட்டியலிடுவதாகவும், விரைவில் உலகம் முழுவதும் உள்ள ஆவணப்படங்கள் பட்டியலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவற்றில் சிலவற்றை பார்ப்பதில் காப்புரிமை சிக்கல்கள் இருக்கலாம்.
ஆனால் யூடியூப் போன்ற தளங்களில் இருந்து தேர்வு செய்யப்படவற்றை எளிதாக பார்க்கலாம். எப்படி இருந்தாலும் புதிய ஆவணப்படங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கான சிறந்த தளமாக இருக்கிறது.
இமெயில் முகவரியை சமர்பித்து உள்பெட்டியிலும் புதிய ஆவணப்படங்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.

இணையதள முகவரி: http://rocumentaries.com/

செயலி புதிது: புத்தகம் படிக்க உதவும் செயலி

bookletஸ்மார்ட்போன் தலைமுறையினர் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று சொல்லப்படுவதை அடிக்கடி கேள்விபடுகிறோம். இந்த பிரச்சனைக்கு, ஸ்மார்ட்போன் மூலமே தீர்வு ஒன்றை முன்வைத்திருக்கிறார் ஸ்மார்ட்போன் தலைமுறை இளைஞரான அம்ருத் தேஷ்முக். இவரது தீர்வு புத்தகம் படிக்க உதவும் செயலி.
புக்லெட் எனும் இந்த செயலி மூலம் அவர் வாரம் ஒரு புத்தகத்தின் சுருக்கத்தை வழங்கி வருகிறார். முழு புத்தகத்தையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அதன் சாரம்சத்தை புரிய வைக்கும் அளவுக்கு இந்த புத்தக சுருக்கம் அமைகிறது. அதே நேரத்தில் வெறும் விமர்சனமாக இல்லாமல், வாசிப்பு அனுபவத்தை வழங்க கூடியதாக இருக்கிறது.
பெஸ்ட் செல்லர் என சொல்லப்படும் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இருந்து ஒரு புத்தகத்தை தேர்வு செய்து வாசித்து அதன் சுருக்கத்தை அளிக்கிறார் அம்ருத். 20 நிமிடங்களில் படித்துவிடக்கூடியதாக இது அமைந்துள்ளது. பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. சுயசரிதை, சுயமுன்னேற்றம், நிர்வாகவியல் உள்ளிட்ட துறைகளில் புத்தகங்கள் அமைந்துள்ளன. எல்லாமே ஆங்கில புத்தகங்கள்.
வேலைபளு அல்லது சோம்பல் காரணமாக புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைந்துவிட்ட நிலையில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயலியை அவர் உருவாக்கியுள்ளார்.
புத்தக சுருக்கத்தையும் படிக்க நேரமில்லை என்பவர்களுக்கான அவற்றை ஒலிப்புத்தகமாகவும் வழங்குகிறார்.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.booklet.app&hl=en

வீடியோ புதிது: போட்டோஷாப் பாடங்கள்

productphotofeat-800x420-300x200-c-defaultவீடியோ பகிர்வு சேவையான யூடியூப்பில் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட வீடியோக்களும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர்களை கொண்ட சேனல்களும் இருக்கின்றன. ஆனால் இப்படி அமோக ஆதரவு பெற்ற சேனல்களை தான் கவனிக்க வேண்டும் என்றில்லை. அதிக உறுப்பினர்களின் ஆதரவு பெறாத சேனல்களிலும் கூட நல்ல வீடியோக்கள் இருக்கலாம்.
சமூக தளமான ரெட்டிட் பயனாளி ஒருவர் இத்தகைய வீடியோ சேனல் ஒன்றை அடையாளம் காட்டியுள்ளது. கிறிஸ்டினா கிரேமரின் கிரேசி போட்டோஷாப் வீடியோ டுடோரியல் எனும் அந்த சேனலில் மொத்தமே ஏழு வீடியோக்கள் தான் இருக்கின்றன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது,’
எனினும் அதில் உள்ள வீடியோக்கள் புகைப்படங்களை போட்டோஷாப் செய்வது தொடர்பாக அருமையான விளக்கங்களை கொண்டிருப்பதாக ரெட்டிட் பயனாளி கூறியிருக்கிறார்.
புகைப்படங்களை திருத்துவது தொடர்பான நுட்பங்களை தேடிக்கொண்டிருந்த போது இந்த சேனலில் உள்ள வீடியோக்களில் தனக்கான பதில் கிடைத்ததாக அந்த பயனாளி குறிப்பிட்டுள்ளதை பெட்டாபிக்சல் தளம் அடையாளம் காட்டியுள்ளது.

ரெட்டிட் பயனாளியின் பரிந்துரை சரிதானா என நீங்களே சோதித்துப்பார்த்துக்கொள்ளலாம்;https://www.youtube.com/channel/UCZIcebBcU81BWJLrNA3Yz3g