Tag Archives: tweet

இரண்டு குறும்பதிவுகளின் கதை

cia]அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA
) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ? அதிலும் வெளிப்படையானத்தன்மை மற்றும் உரையாடல் குணம் டிவிட்டரில் ஆதார குணம் எனும் போது சி.ஐ.ஏ வின் டிவிட்டர் வருகை எப்படி இருக்கும்?
இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, சி.ஐ.ஏ வில் முதல் குறும்பதிவு குறிப்பிட்த்தக்க வகையில் அமைந்து கவனத்தை ஈர்க்கவே செய்தது.

‘ இது தான் எங்கள் முதல் குறும்பதிவு என்பதை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை’
இது தான் அந்த முதல் குறும்பதிவு. பதிவான நாள் ஜூன் 6,2014.

சி.ஐ.வுக்கே உரிய தன்மையுடன் அமைந்த இந்த குறும்பதிவு , சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை விட அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறும்பதிவில் இருந்த கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை டிவிட்டருக்கு உகந்தது என்றால் , இந்த நகைச்சுவை திரை விலக்கிப்பார்த்தால் புரியக்கூடிய சி.ஐ.ஏத்தனம் குரூரமாக புன்னகைக்கும்.

உண்மையில் இது சி.ஐ.ஏ தன்னையே பகடி செய்து கொள்ளும் வகையிலான குறும்பதிவு.
ஒரு உளவு அமைப்பிடம் இருந்து வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றாலும் ,சி.ஐ.வின் செயல்பாடுகள் ரகசியத்தின் உச்சம் தொட்டவை. 1970 களில் அமெரிக்காவில் , ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மூழ்க அடிக்கப்பட்ட்து தொடர்பாக ஒரு சர்ச்சை வெடித்த போது சி.ஐ.ஏ தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்த்து. அப்போது இந்த பிரச்ச்னை பற்றி விடாமல் கேட்ட நிருபருக்கு சி.ஐ.ஏ அளித்த பதில் மிகவும் பிரபலமானது.

‘ இந்த குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை”
இப்படி அளிக்கப்படும் பதிலை எப்படி புரிந்து கொள்வது. அரசு அமைப்பின் மூர்கத்தனம் என்றா? அல்லது சர்ச்சையில் இருந்து நழுவும் சாமர்த்தியம் என்றா?
இதே பதிலை நினைவுப்படுத்தும் வகையில் டிவிட்டருக்கு சற்றே மாற்றம் செய்து சி.ஐ.ஏ தனது முதல் குறும்பதிவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது.

இந்த குறும்பதிவு உடனடியாக மறுகுறும்பதிவிடப்பட்டு( ரிடிவீட்) , அபிமானமும் தெரிவிக்கப்பட்ட்து( பேவரைட்). இரண்டின் எண்ணிக்கையுமே பல்லாயிரக்கணக்கில் பெருகி சில லட்சங்களை தொட்டது.
ஆக, இப்படியாக சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு உலகை கவர்ந்த முதல் குறும்பதிவானது.
ஆனால் சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை எல்லோருமே கைத்தட்டி வரவேற்கவில்லை. பல பதில் குறும்பதிவுகள் அதன் செயல்பாடுகள் மீதான கடுமையான விமர்சனமாக அமைந்திருந்தன. இவற்றில் பல நேரடி தாக்குதலாக இல்லாமல் சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு பாணியிலேயே நக்கலும் நையாண்டியுமாக, ஆனால் அதன் செயலபாடுகளை நச்சென சுட்டிக்காட்டும் வகையில் இருந்தன.

“ இனி சி.ஐ.ஏ டிவிட்டர் கணக்கில் இருந்து உலகில் எங்கோ உள்ள பகுதிகளில் இருந்தெல்லாம் அருமையான சித்தரவதை படங்களை எதிர்பார்க்கலாம்’ என்று ஒரு டிவிட்டர் பயனாளி (@madmanweb ) குறிப்பிட்டிருந்தார்.
சி.ஐ.ஏ என்னை எல்லாம் பின் தொடர பாடுபட வேண்டாம், அவர்களின் சகோதர அமைப்பான என்.எஸ்.ஏ அதை செய்து கொண்டிருக்கிறது’என இன்னொருவர் (@AKBakota ) குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் சில குறும்பதிவுகள் ஈரான் புரட்சி மற்றும் சிலியின் ஆட்சி கவிழ்ப்பு ஆகியவற்றில் சி.ஐ.ஏ க்கு இருப்பதாக சொல்லப்படும் பங்குகளை இடித்துக்காட்டின.

இந்த விமர்சனங்களை மீற
ி சில நாட்களில் எல்லாம் சி.ஐ.ஏ வின் பின் தொடர்பாளர் எண்ணிக்கை சில லட்சங்களை தொட்டது.
ஒரு மக்கள் தொடர்பு முயற்சியாக தான் சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்துள்ளது. இதே காலத்தில் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களும் சி.ஐ.ஏ சார்பில் அமைக்கப்பட்டன.
ஆனால், சி.ஐ.ஏவை பின் தொடர்பவர்கள் அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர்?
நிற்க, சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு மட்டும் அல்ல ,அதன் டிவிட்டர் பயோவும் கூட கவனிக்கத்தக்கதாக தான் இருக்கிறது.
“ நாங்கள் தேசத்தின் முதல் பாதுகாப்பு அறன். மற்றவர்களால் செய்யமுடியாததை செய்கிறோம். மற்றவர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு செல்கிறோம்’
உள்ளடக்கத்தில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அருமையான டிவிட்டர் பயோ இல்லையா!

இது இன்னொரு முதல்குறும்பதிவு

சி.ஐ.ஏ பற்றி குறிப்பிட்டு விட்டு, எழுத்தாளர் ஜார்ஜ் .ஆர்.ஆர் .மார்டின் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது தான். ஆனால் சி.ஐ.ஏ வருகை தந்த அதே காலத்தில் டிவிட்டரில் நுழைந்ததாலும் , மார்டினுடைய முதல் குறும்பதிவும் கவனத்திற்குரியதாக இருந்தாதாலும் இங்கே மார்டின் டிவிட்டர் வருகை பற்றி குறிப்பிடலாம். அமெரிக்க தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் கேம் ஆப் த்ரொன்ஸ் தொடருக்கான மூலக்கதை வடிவை தந்தவரும் ,லயித்து மகிழக்கூடிய கற்பனை உலகை தனது நாவல்களில் சிருஷ்டிப்பவராக பாராட்ட்டப்படும் எழுத்தாளரான மார்டினின் முதல் குறும்பதிவும் மகத்தானதாகவே இருந்தது. ஜிஆர்.எம் ஸ்பீகிங் (@GRRMspeaking
) எனும் முகவரியில் அமைந்திருந்த தனது டிவிட்டர் பக்கத்தில் மார்டினின் முதல் குறும்பதிவு இப்படி இருந்தது:
‘நான் அடிக்கடி டிவீட் செய்யமாட்டேன். தயவுசெய்து எனது லைவ்ஜர்னல் (வலைப்பதிவு) பக்கத்தை பாருங்கள்’ .
எழுத்தாளர்கள் டிவிட்டருக்கு வரும் போது வாசகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக பெரும்பாலான எழுத்தாளர்கள் குறும்பதிவுகளாக தங்கள் எண்ணங்களை அருவி போல் எல்லாம் பகிர்வதில்லை.

இந்த ஏமாற்றத்தை அளிக்காமல் இருக்கும் வகையில் மார்டின் முதல் குறும்பதிவிலேயே அதிகம் குறும்பதிவு செய்யமாட்டேன் என கூறிவிட்டார். அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக தனது வலைப்பதிவையும் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் உண்மையிலேயே அருமையான முதல் குறும்பதிவு தான். அவரது பயோவும் கூட , தயவுசெய்து லைவ்ஜர்னலில் என்னை தொடருங்கள் என்றே அமைந்திருந்தது.
ஆனால் , அடிக்கடி குறும்பதிவிட மாட்டேன் எனும் அறிமுகத்தை மீறி , எழுத்தாளர் மார்டினுக்கு டிவிட்டரில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் சில நாட்களில் கிடைத்தனர்.

ஆக, ஒரே குறும்பதிவில் லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை அள்ளியவர்கள் பட்டியலில் திரைப்ப நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கவேண்டுமா என்ன? மார்டின் போன்ற நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் அந்த பெருமை உண்டு என டிவிட்டர் உலகம் காட்டியிருக்கிறது.

இணையத்தில் முதல் முதலாக !

twitter-first-tweetகடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிரபலங்களின் முதல் டிவிட்டர் செய்தியை அறிய விருப்பமா? இது தான் இவர்களின் முதல் டிவிட்டர் செய்தி ! என்பது போன்ற விதவிதமான தலைப்புகளில் முதல் டிவீட் தொடர்பான கட்டுரைகளும் பதிவுகளும் அமர்களப்பட்டன. இங்கே இந்தியாவில் , பாலிவுட் பிரபலங்களின் முதல் ட்வீட், இந்திய சி.இ.ஓக்களின் முதல் டிவீட் போன்ற பதிவுகள் வெளியாகின. 

இந்த பரபரப்புக்கு எல்லாம் காரணம் , டிவிட்டர் அறிமுகம் செய்த முதல் டிவீட்டை கண்டறிவதற்கான வசதி தான். டிவிட்டர் தனது எட்டாவது ஆண்டு விழாவை  முன்னிட்டு, எல்லாம் எங்கிருந்து துவங்கிற்று என்பதை கண்டறியுங்கள் என்னும் அறிமுகத்தோடு இந்த வசதியை வழங்கியது. ( https://discover.twitter.com/first-tweet) . இந்த வசதியை வைத்துக்கொண்டு தான் , செய்தி தளங்களும் வலைப்பதிவுகளும் , ஒவ்வொரு நோக்கில் முதல் டிவிட்டர் செய்திகளை தேடிக்கண்டுபிடித்து தொகுத்து வெளியிட்டன. 

இந்த முதல் குறும்பதிவுகளை எல்லாம் பார்த்தால் சுவாரஸ்யமாக தான் இருக்கின்றன. டிவிட்டர் பற்றிய ஒருவரது அறியாமையையும் புரிதலையும் இந்த முதல் குறும்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இது பற்றி தனி பதிவே எழுதலாம். ( யாரேனும் முடிந்தால் தமிழில் டிவிட்டர் பயனாளிகளின் முதல் குறும்பதிவுகளை சமர்பிக்க முடியுமா?)

——-

இது என்னுடைய முதல் குறும்பதிவு; https://discover.twitter.com/first-tweet#iamcybersimman

 

 

நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு டிவிட்டராஞ்சலி.


தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால் அவருக்காக ஒரு குறும்பதிவிடுங்களேன் என்கிறது ‘ஒன் ஸ்மால் டிவீட்’ இணையதளம்.

நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.

ஆம்ஸ்டிராங்கின் சாதனையை நினைவு கூறும் வகையில் பதிவிடப்படும் ஒவ்வொரு குறும்பதிவும் நிலவை நோக்கி பயணிக்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.

ஆம்ஸ்டிராங் மனித குலத்திற்கே முன்னோடியாக திகழும் மனிதரல்லாவா?அது தான் அவரது மறைவை கவுரவிக்கும் வகையில் மிகவும் புதுமையான முறையில் டிவிட்டர் வழியே அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.

1969 ல் ஆம்ஸ்டிராங் நிலவில் எடுத்து வைத்த ஒரு சின்ன அடி மூலம் மனித குலத்திற்கான பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்,இப்போது அவரது பயணத்தையும் வாழ்க்கையையும் குறும்பதிவுகளால் கவுரவிப்போம் என இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

இந்த அழைப்பை ஏற்று ஆம்ஸ்டிராங்கின் நினைவை போற்றும் குறும்பதிவை வெளியிட வேண்டும்.மறக்காமல் அந்த குறும்பதிவுடன் ‘ஒன் ஸ்மால் டிவீட்”என்னும் ஹாஷ்டேகையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த ஹாஷ்டேகுடன் வெளியிடப்படும் குறும்பதிவுகள் அனைத்தும் வரிசையாக வெளியாகி கொண்டே இருக்கும்.அதிலும் எப்படி தெரியுமா?நிலைவை நோக்கிய பயணத்தின் புள்ளிகளாக!.

ஆம் ஆம்ஸ்டிராங் நினைவாக வெளியாகும் ஒவ்வொரு குறும்பதிவும் நூறு மைல் பயணம் செய்ததாக கருதப்பட்டு நிலவிற்கான பாதையில் மைல்கற்களாக குறிப்பிடப்படும்.அதாவது ஒவ்வொரு குறும்பதிவு வெளியாகும் போதும் நிலவை நோக்கி நூறு மைல் முன்னேறியதாக கருதலாம்.

இந்த குறும்பதிவுகளின் பயணம் மிக அழகாக பிரபஞ்சத்தின் பின்னணியில் பூமியில் இருந்து நிலவை நோக்கிய நிளமாக கோடாக ஒன் ஸ்மால் டிவீட் தளத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஒவ்வொரு புள்ளியாக கிளிக் செய்து அதில் இடம் பெறும் குறும்பதிவை படித்டு பார்க்கலாம்.மொத்தமுள்ள 238,900 மைல்களுக்கான குறும்பதிவுகள் வெளியிடப்பட்டதும் நிலவை நெருங்கி விடலாம்.நிலவில் கால வைப்பதற்கான கடைசி குறும்பதிவை ஆம்ஸ்டிராங் குடும்பத்தினரை கொண்டு வெளியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜான் கென்னடி நூலகம் மற்றும் நியூயார்க் அருங்காட்சியகமும் இணைந்து இந்த இணைய நினைவு பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

ஆம்ஸ்டிராங்கை நினைவு கூறும் வகையில் பலரும் குறும்பதிவுகளை வெளியிட்டு இந்த பயணத்தில் பங்கேற்று வருகின்றனர்.

“சில நேரங்களில் ஒரு சின்ன அடி மறக்க முடியாத மகத்தான தருணமாக அமைந்து விடும்” ,”உங்களுக்கும் அப்போலோ குழுவினருக்கும் மனித குலத்தை நட்சத்திரங்களை நோக்கி அழைத்து சென்று ஊக்கப்படுத்தியதற்காக நன்றி” என்பது போன்ற குறும்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நம்பிக்கையையும் ,முடியாதது இல்லை என்ற உணர்வையும் உணர்த்தும் வகையில் பல குறும்பதிவுகள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு பயணமும் ஒரு சின்ன அடியில் இருந்து தான் துவங்குகின்றன என்பது போன்ற குறும்பதிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மனித குலத்தின் உற்சாகத்தையும் அதன் சாதனையாளரான ஆம்ஸ்டிராங்கின் மீதான் மதிப்பையும் வெளிப்படுத்தும் இந்த குறும்பதிவுகள் உங்களையும் உற்சாகப்படுத்தலாம்.

நீங்களும் உங்கள் பங்கிற்கு ஒரு குறும்பதிவை வெளியிட்டு அம்ஸ்டிராங்கிற்கான நன்றி கடனை தீர்த்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://onesmalltweet.com/

டிவிட்டரில் பதிலடி கொடுத்த அதிபர்.

டிவிட்டர் மூலம் பதிலடி கொடுக்க துணிந்த தலைவர்களின் பட்டியலில் எஸ்டோனியா நாட்டு அதிபரும் சேர்ந்திருக்கிறார்.எஸ்டோனியாவின் பொருளாதார நிலை குறித்து பொருளாதார மேதை பால் குர்க்மேன் வைத்த விமர்சனத்திற்கு தான் அந்நாட்டு அதிபர் டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பதிலடி என்பது சாதாரணமான சொல்.எஸ்டோனிய அதிபர் உண்மையில் குருக்மேனுக்கு எதிராக டிவிட்டரில் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.கோபத்தை கொட்டித்தீர்த்து விட்டார்.

எஸ்டோனியா ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு.இணைய பயன்பாட்டில் முன்னுதாரணமாக இருப்பதாக பாராட்டப்படு தேசம்.மின் நிர்வாகம்,மின் வாக்குப்பதிவு போன்ற விஷயங்களில் எஸ்டோனியா உலகிற்கே வழி காட்டுவதாக வர்ணிக்கப்படுகிற‌து.

இப்போது ஐரோப்பா முழுவதும் பொருளாதார சூறாவளி வீசிக்கொண்டிருக்கும் நிலையில் எஸ்டோனியா மட்டும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை சமாளித்து வருவதாக பாராட்டப்படுகிறது.

இது தான் பரவலான கருத்தாக இருந்தாலும் பால் குருக்மேன் தனது வலைப்பதிவில் இதற்கு மாறான கருத்தை முன்வைத்திருந்தார்.

குருக்மேன் பொருளாதார உலகின் புகழ் பெற்று விளங்குபவர்.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான குருக்மேன் பொருளாதார விமர்சகராகவும் அறியப்படுகிறார்.பொருளாதார பிரச்ச‌னைகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைப்பதில் தீவிரமாக இருப்பவர்.

பொருளாதார நிலை குறித்த கட்டுரைகளையும் பதிவுகளையும் எழுதி வரும் குருக்மேன் பரவலாக பாராட்டப்படும் எஸ்டோனியாவின் பொருளாதார நிலவரம் குறித்து தனது வலைப்பதிவில் விமர்சனம் செய்திருந்தார்.எஸ்டோனியா எடுத்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றாலும் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டு போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என அவர் எழுதியிருந்தார்.இதற்கான காரணங்களையும் அவர் விரிவாகவே முன்வைத்திருந்தார்.

எல்லோரும் தனது நாட்டை பாராட்டிக்கொண்டிருக்கும் போது குருக்மேன் மட்டும் வேறு விதமான கருத்து சொன்னால் எஸ்டோனிய அதிபருக்கு கசக்கத்தானே செய்யும்.அதிலும் குருக்மேன் கருத்துக்களுக்கு தனி செல்வாக்கு இருக்கும் நிலையில் அவரது விமர்சனத்தை அலட்சியப்படுத்த முடியாது தானே.

அதனால் தான் எஸ்டோனிய அதிபர் தாமஸ் ஹென்டிரிக் இல்விஸ் இந்த விமர்சனத்தால் கடும் அதிருப்திக்கு ஆளானார்.மாற்று கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது பதவியில் இருப்பவர்கள் ஆவேசம் கொள்வது இயல்பானது தான்.அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் தான் மாறுபடும்.

எஸ்டோனிய அதிபரை பொருத்தவரை தனது அதிருப்தியை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்றோ அல்லது ராஜதந்திரத்தோடு வெளிப்படுத்த வேண்டும் என்றோ நினைக்காமல் டிவிட்டரில் பொங்கி எழுவது என தீர்மானித்து குருக்மேனுக்கு சாட்டையடி கொடுப்பது போன்ற குறும்பதிவுகளை வெளியிட்டார்.

நமக்கு எதுமே தெரியாதது பற்றி எல்லாம் தெரிந்தது போல எழுதினால் போயிற்று என்னும் பொருள் பட அமைந்திருந்த அந்த குறும்பதிவில் குருக்மேனின் வலைப்பதிவுக்கும் இணைப்பு கொடுத்திருந்தார்.

குருக்மேன் தனக்கு தெரியாத விஷய்ம் குறித்து எழுதியுள்ளதாக இப்படி குறை கூறியிருந்த அதிபர் அடுத்த குறும்பதிவில் ,நோபல் பரிசு பெற்றிருந்தால் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா என்று இன்னும் காட்டமாகவே கேட்டிருந்தார்.

அதோடு இது பிரின்ஸ்டனுக்கும் கொலம்பியாவுக்கும் நடக்கும் மோதலா என்னும் கிண்டலாக கேட்டிருந்தார்.பிரின்ஸ்டன் பலகலை குருக்மேன் பணியாற்றும் பல்க‌லை.கொலம்பியா பலகலை எஸ்டோனிய அதிபர் பயின்ற பல்க‌லை.

இதன் பிறகு ,ஆனால் நமக்கு என்ன தெரியும் நாம் எல்லாம் அல்ப கிழக்கு ஐரோப்பியர்கள் தானே… என்னும் தெனியில் வஞ்ச புகழ்ச்சியாக ஒரு குறும்பதிவை வெளியிட்டு தனது தாக்குதலை முடித்து கொண்டார்.

எதிர்பார்க்க கூடியது போலவே இந்த டிவிட்டர் பதிலடி பலரது கவனத்தை ஈர்த்தது.ஒரு நாட்டின் அதிபரே விமர்சனத்திற்கு பதிலடி கொடுக டிவிட்டரில் நேரடியாக கச்சை கட்டிக்கொண்டு இற‌ங்கியது பரபரப்பை உண்டாக்கியது.

அதிபர் பயன்படுத்திய கடுமையான வார்த்தைகள் ஒரு வேளை எஸ்டோனிய அதிபரின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.ஆனால் இந்த குறும்பதிவுகள் எஸ்டோனிய அதிபரால் எழுத்தப்பட்டது தான் என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே எஸ்டோனிய அதிபர் இந்த குறும்பதிவுகளை வெளியிட்ட போது மதுவின் ஆதிக்கத்தில் இருந்தாரோ என்ற சந்தேகமும் எழுப்ப பட்டது.அந்த அளவுக்கு அவரது பதிலடி காட்டமாக இருந்தது.

ஆனால் எஸ்டோனிய அதிபரோ இந்த டிவிட்டர் பதிலடி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள எஸ்டோனியா மேற்கொண்டு வரும் சீரிய மற்றும் கடினமான முயற்சிகள் தொடராபான நேர்மையான தற்காப்பு என இமெயில் மூலம் உறுதியான விளக்கத்தை அளித்தார்.

இதன் மூலம் தனது நிலையில் தெளிவாக இருப்பதை அவர் உறுதி செய்தார்.ஆனால் இத்தனைக்கு நடுவிலும் குருக்மேன் அமைதியாகவே இருந்தார்.

அவரும் டிவிட்டரில் பதில் அளித்திருந்தால் உலகம் ஒரு டிவிட்டர் விவாதத்தை சந்தித்திருக்கும்!.

————–
குருக்மேனின் வலைப்பதிவு;http://krugman.blogs.nytimes.com/2012/06/06/estonian-rhapsdoy/

————
எஸ்டோனிய அதிபரின் டிவிட்டர் பதிவு;https://twitter.com/?tw_e=screenname&tw_i=210475404526501888&tw_p=tweetembed#!/IlvesToomas

—————
டிவிட்டரில் ஒரு மோதல்.;http://cybersimman.wordpress.com/2012/06/01/twitter-160/

டிவிட்டரில் ஒரு மோதல்.

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாகவும் அழகான டிவிட்டர் உரையாடல் அமைந்து விடுவதுண்டு.

அமெரிக்க பாடகருக்கும் அந்நாட்டு கோடீஸ்வரருக்கும் இடையே இப்படி தான் ஒரு உரையாடல் நடைபெற்றிருக்கிறது.

உரையாடல் என்றால் நீண்ட விவாதம் எல்லாம் இல்லை.ஒரு குறும்பதிவு அதற்கு பதிலாக ஒரு குறும்பதிவு .அதற்கு பதிலாக இன்னொரு குறும்பதிவு.அத்தோடு முற்றுப்புள்ளி என சுருக்கமாக இருந்தாலும் இந்த உரையாடல் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

புகழ் பெற்ற பாடகரான டிரேக் தான் அந்த‌ உரையாடலை துவக்கி வைத்தார்.இல்லை அப்படியும் சொல்வதற்கில்லை.டரேக் எந்த எண்ணமும் இல்லாமல் தனது மனதில் உள்ள கருத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் தான் அந்த குறும்பதிவை வெளியிட்டார்.

‘முதல் மில்லியனை சம்பாதிப்பது தான் கடினமானது.’

இது தான் டிரேக் வெளியிட்ட குறும்பதிவு.

டிவிட்டரில் 74 லட்சம் பின் தொடர்பாளர்களை கொண்டவரான டிரேக் பணம் சம்பாதிப்பது தொடர்பான தனது எண்ணத்தை இதன் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பியிருக்கலாம்.எது எப்படியாக இருந்தாலும் இதனை தனது பின் தொடர்பாளர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினார்ர்.மற்றபடி அவர் எதையும் பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத வகையில் கோடீஸ்வரரான பூனே பிக்கின்ஸ் இந்த குறும்பதிவை படித்து அதற்கு பதில் அளிக்க தீர்மானித்தார்.

பிபி கேபிட்டல் நிறுவனத்தின் அதிபரான பிக்கின்ஸ் ,டிரேக்கின் குறும்பதிவை அப்படியே ரீடிவீட் செய்து அதனோடு ,அதைவிட முதல் பில்லியனை சம்பாதிப்பது இன்னும் கடினமானது என குறிப்பிட்டிருந்தார்.

லட்சங்களை சம்பாதிப்பது கஷ்டம் என்றால் கோடிகளை சம்பாதிப்பது அதை விட கடினம் இல்லையா என கேட்பது போல அமைந்திருந்த அந்த குறும்பதிவு ஆயிரக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டு ரீடிவீட் செய்யப்பட்டன.

இதை பார்த்த பாடக‌ர் டிரேக் கோடீஸ்வரர் பிக்கின்ஸ் தனது செல்வதால் வாயடைத்து போக வைத்து விட்டதாக குறும்பதிவிட்டு தனது பதிலை முடித்து கொண்டார்.

இந்த பதிலும் பல ஆயிரக்கணக்கானோரால் ரீடிவீட் செய்யப்பட்டது. இந்த‌ மூன்று குறும்பதிவுகளுக்கும் சேர்த்து 25 ஆயிரம் ரீடிவீட்களுக்கு மேல் பதிவானது.

டிரேக் சொன்னது சரியா,அதற்கு பிக்கின்ஸ் பதிலடி கொடுத்தது சரியா என்றெலாம் கேள்விகளை எழுப்பும் இந்த சம்பவம் டிவிட்டரின் உரையாடல் தன்மைக்கு அழகான உதாரணமாக அமைகிறது.

டிவிட்டர் வெளியில் இருந்து மேலும் இரண்டு செய்திகள்.

ஒன்று பாப் பாடகி லேடி காகா டிவிட்டரில் 2.5 கோடியாவது பின் தொடர்பாளர்களை பெற்றிருக்கிறார் என்பது.முதல் முறையாக இந்த எண்ணிக்கையை எட்டிப்பிடிக்கும் டிவிட்டர் பயனாளியாக காகா கருதப்படுகிறார்.

மற்றொரு செய்தியும் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் தொடர்பானது தான்.

வெனிசுலா அதிபர் டிவிட்டரில் 30 லட்சமாவது பின் தொடர்பாளரை கடந்திருக்கிறார்.சாவேஸ் தீவிரமான டிவிட்டர் பயனாளி.எதிர்கட்சிகளின் விமரசங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக டிவிட்டருக்கு வந்த சாவேஸ் டிவிட்டர் மூலம் பொது மக்கள் தன்னை தொடர்பு கொள்ளத்துவங்கி உதவி கேட்கத்துவங்கியதை அடுத்து அதிபராக தனது செய்லபாடுகளை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார்.

பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறத்துவங்கிய நிலையில் டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர்வதோடு உத்தரவுகளையும் பிறப்பிக்கதுவங்கினார்.

டிவிட்டர் மூலமே அரசாள்வதாக விமர்சிக்கப்பட்டாலும் சாவேசை டிவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது.சமீபத்தில் இந்த எண்ணிக்கை 30 லட்சத்தை தொட்டது.

சிறுமி ஒருவர் 30 லட்சமாவது பின் தொடர்பாளராகி இருக்கிறார்.இது குறித்து டிவிட்டர் மூலம் சாவேஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.அது மட்டும் அல்ல அந்த சிறுமிக்கு வீடு ஒன்று அரசு சார்பில் பரிசளிக்கப்பவும் உள்ளது.ஏற்கனவே 20 லட்சமாவது பின் தொடர்பாளருக்கு சாவேஸ் சார்பில் கம்ப்யூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.