Tag Archives: tweet

டிவிட்டரில் அறிமுகமாகும் விஞ்ஞானிகள்!

actuallivingscientists.0முதலில் சின்னதாக ஒரு சவால்- உலகின் சிறந்த வாழும் விஞ்ஞானிகளில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? நன்றாக யோசித்துப்பார்த்தும், ஒருவர் பெயர் கூட உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை எனில் உங்களை நீங்களே நொந்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், உலகில் பெரும்பாலானோர் இப்படி சமகால விஞ்ஞானிகளை அறியாதவர்களாக தான் இருக்கின்றனர். அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 70 சதவீதம் பேரால் வாழும் விஞ்ஞானி ஒருவரை நினைவுபடுத்திக்கூற முடியவில்லை என தெரிய வந்துள்ளது. இது கொஞ்சம் வருத்தம் தரும் விஷயம் தான்.

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்திருக்கும் காலத்தில், அறிவியலுக்காக என்றே தங்களை அரபணித்துக்கொண்டுள்ள சமகால விஞ்ஞானிகள் குறித்து நாம் அதிகம் அறியாமல் இருப்பது கவலை அளிப்பது தான். பாப் நட்சத்திரங்களையும் திரையுலக பிரமுகர்களையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் நாம், சமகால விஞ்ஞானிகள் குறித்து அதிக விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஏன்? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகள், அதிக அளவு தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில்லை என நினைத்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். உண்மையில், விஞ்ஞானிகள் பலவிதங்களில் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றனர். மற்ற பிரபலங்கள் போல அவர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வளவு ஏன் டிவிட்டர் விஞ்ஞானிகள் என்று சொல்லகூடிய அளவுக்கு பல விஞ்ஞானிகள் டிவிட்டர் மூலம் தங்கள் ஆய்வுகள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அன்மையில் இந்த விஞ்ஞானிகள் இன்னும் ஒரு படி இறங்கு வந்து, தங்களை தாங்களே டிவிட்டரில் அறிமுகம் செய்து கொண்டு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றிருக்கின்றனர். டிவிட்டரில் கவனத்தை ஈர்க்க சிறந்த அ வழியாக கருதப்படும், ஹாஷ்டேக்கை இதற்காக பயன்படுத்திக்கொண்டுள்ளனர். உண்மையில் வாழும் விஞ்ஞானிகள் என பொருள்படும் வகையில் உருவாக்கப்பட்ட ’# ஆக்சுவல் லிவிங் சயிண்டிஸ்ட்’  (#actuallivingscientist) என்பது தான் அந்த ஹாஷ்டேக்!

டிவிட்டரில் செயல்பட்டு வரும் விஞ்ஞானிகள் பலரும், இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவை வெளியிட்டு தங்களை அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

அமெரிக்கா விஞ்ஞானியான டேவிட் ஸ்டீன் தான் முதலில் இதை துவக்கி வைத்தார். வனவிலங்கு பல்லுயிரியல் விஞ்ஞானியான ஸ்டீன் தனது டிவிட்டர் பக்கத்தில் (@AlongsideWild) , பெரும்பாலான அமெரிக்கர்களால் வாழும் விஞ்ஞானிகள் பெயர் சொல்ல முடியவில்லை,( இது உண்மை தான்), எனவே அவர்கள் நாம் செய்வதன் முழு அருமையை உணராமல் இருப்பதில் வியப்பில்லை எனக்கூறி, ’நான் தான் டேவ்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஸ்டீன் டிவிட்டர் பக்கம் தவிர தனி வலைப்பதிவு மூலமும் தனது ஆய்வு பணிகள் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்: https://davidasteen.com/

ஸ்டீனின் இந்த குறும்பதிவை பார்த்த சக விஞ்ஞானி மேர் ராப்யர் என்பவர், அவருக்கு பதில் அளிக்கும் வகையில் இரு குறும்பதிவை வெளியிட்டார். சரி தான் டேவி, விஞ்ஞானிகள், ஒரு ஒளிப்படத்துடன் தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான சரியான சந்தர்ப்பமாக இது இருக்கும் எனும் வகையில் அவரது குறும்பதிவு அமைந்திருந்தது. இந்த குறும்பதிவுடன் ’# ஆக்சுவல் லிவிங் சயிண்டிஸ்ட்’ எனும் ஹாஷ்டேகையும் இடம்பெறச்செய்திருந்தார்.

விஞ்ஞானிகள், மக்கள் முன் நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்வோமே என்பது போல அந்த குறும்பதிவு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு டிவிட்டரில் செயல்பட்டு வரும் விஞ்ஞானிகள், தங்கள் தாங்களே அறிமுகம் செய்து கொள்ளத்துவங்கினர். மறக்காமல் இந்த ஹாஷ்டேகையும் சேர்த்துக்கொண்டனர். இந்த ஹாஷ்டேக் உயிர்ப்புடன் இருப்பதும், அதன் மூலம் அறிமுகமாகும் விஞ்ஞானிகளின் தொடர் வரிசையும் வியக்க வைப்பதாக இருக்கிறது.

ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இந்த குறும்பதிவு அலையால் உற்சாகம் அடைந்து, இவற்றை தங்கள் பக்கங்களில் மறு குறும்பதிவிட்டும் வருகின்றனர். பெண் விஞ்ஞானிகள் , வுமன் இன் சயின்ஸ், டிரெஸ் லைக் ஏ வுமன் போன்ற துணை ஹாஷ்டேகுகளையும் சேர்த்து பகிர்ந்து கொள்கின்றனர்.

மாதிரிக்கு சில குறும்பதிவுகளை காணலாம்:

·         நான். டிஎன் லீ. நகர்புற காரணிகளுக்கு மத்தியில் சிறிய பாலூட்டிகளின் பழக்கங்கள் மற்றும் வரலாற்றை ஆய்வு செய்கிறேன்:  @DNLee5

·         நான் ஜேன் ஜேக். மனிதர்கள் அதிகம் உள்ள சூழலில் அழியும் நிலையில் உள்ள கழுகுகள் எப்படி வாழ்கின்றன என ஆய்வு செய்கிறேன்; @janetngbio

·         நான் ரச்சேல். தேனீக்கள் தொடர்பாக ஆய்வு செய்கிறேன்… @RachaelEBee

·         நான் மெசிடஸ், இனப்பெருக்க அமைப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறேன்: @DrCedes

இப்படி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள், வாழும் விஞ்ஞானிகள் ஹாஷ்டேகை அடையாளப்படுத்தி தாங்கள் செய்து கொண்டிருக்கும் பணி தொடர்பான தகவல்களை குறும்பதிவுகளாக வெளியிட்டுள்ளனர். இந்த ஹாஷ்டேகின் கீழ், வந்து கைகுலுக்கும் விஞ்ஞானிகள் மற்றும் அவர்கள் ஆய்வின் பரப்பையும் பார்த்தால் வியப்பாகவே இருக்கிறது. அவர்கள் ஆய்வு சூழல் மாறுபட்டிருப்பதை ஒளிப்படங்கள் அழகாக உணர்த்துகின்றன.

இந்த விஞ்ஞானிகளின் குறும்பதிவுகளை படித்துப்பார்த்தால் அவர்கள் ஈடுபட்டுள்ள ஆய்வுகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. உங்களுக்கும் அறிவியலில் ஆர்வம் இருந்தால் இந்த ஹாஷ்டேகை பற்றிக்கொண்டு சுவாரஸ்யமான பல விஞ்ஞானிகளை டிவிட்டரில் பின் தொடரலாம். சமூக ஊடக யுகத்தில் மக்களுடன் ஆய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும் என விஞ்ஞானிகள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நாம் தான் பதிலுக்கு அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். அதாவது அவர்களை டிவிட்டர் பக்கங்களை பின் தொடர்ந்து ஆய்வுப்பணிகளை அறிந்து கொள்ள வேண்டாம். சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு உரையாடினால் இன்னும் கூட சந்தோஷப்படுவார்கள்.

குறிப்பாக வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால் இந்த டிவிட்டர் பக்கங்களையும் படிக்கச்சொல்லி அறிமுகம் செய்யலாம்.  அறிவியல் மீது ஆர்வத்தை வளர்க்க இது நிச்சயம் உதவும்.

டிவிட்டரில் விஞ்ஞானிகளை பின் தொடர்வதில் ஆர்வம் உள்ளவர்களின் வசதிக்காக சயின்ஸ் மேகஜின் , டிவிட்டர் நட்சத்திரங்களாக விளங்கும் விஞ்ஞானிகள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது: http://www.sciencemag.org/news/2014/09/top-50-science-stars-twitter

 

 

 

அறிமுகம்: டிவிட்டர் அகராதி

2013_11_07_13_twitternail.122adசமூக வலைப்பின்னல் சேவைகளில் குறும்பதிவு சேவையான டிவிட்டர் பிரபலமானதாக இருக்கிறது. 140 எழுத்துகளுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் டிவிட்டர் பலவிதங்களில் பயன்படுகிறது. டிவிட்டர் பயனாளிகளுக்கு அதின் சூட்சமங்கள் எல்லாம் அத்துபடியாக இருக்கலாம். ஆனால் டிவிட்டர் மீது ஆர்வம் கொண்ட பலருக்கு அது புரிபடாமல் இருக்கலாம். டிவீட், ரிடிவீட், பாலோ போன்ற பதங்கள் குழப்பத்தை அளிக்கலாம்.
இத்தகைய குழப்பங்களை போக்கி, டிவிட்டர் சேவையை புரிந்து கொள்ள டிவிட்டரில் பயன்படுத்தப்படும் முக்கிய அம்சங்கள் தொடர்பான பதங்களை அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான டிவிட்டர் அகராதி இதோ:

டிவீட்; குறும்பதிவு என்று பொருள். டிவிட்டரில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள். பெரும்பாலும் ஒற்றை வரியாக இருக்கும். அதிக பட்சம் 140 எழுத்து வரம்பு உண்டு. சாமர்த்தியம் இருந்தால் சிறிய வாசங்களாக அமைக்கலாம்.
இவற்றுடன் புகைப்படம் மற்றும் இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

ரிடிவீட்; மறு குறும்பதிவு என பொருள். ஒருவர் வெளியிடும் குறும்பதிவு சக பயனாளி ஒருவருக்கு பிடித்திருந்தால் அதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடலாம். இதற்கான வசதி தான் ரிடிவீட்.
ரிடிவீட் என்பது ஒரு கருத்திற்கான ஆதரவாகவும் கொள்ளலாம்.
பொதுவாக அதிக முறை ரிடிவீட் செய்யப்பட்டால் அந்த கருத்துக்கு அமோக ஆதரவு என பொருள்.

பாலோ: பேஸ்புக்கில் நண்பர்கள் போல டிவிட்டரில் பாலோயர்கள். அதாவது ஒருவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியாகும் கருத்துக்கள் பிடித்திருந்தால், அவரது பக்கத்தை பின் தொடரலாம். இதன் மூலம் அவரது டிவிட்டர் பக்கத்திறு செல்லாமலே , அவர் வெளியிடும் குறும்பதிவுகளை நம்முடைய டிவிட்டர் பக்கத்தில் பார்க்கலாம்.

ஹாண்டில்; டிவிட்டர் கைப்பிடி என்பது ஒருவரது டிவிட்டர் முகவரியை குறிக்கும். அதாவது டிவிட்டர் கணக்கை இயக்க தேர்வு செய்யப்படும் பயனர் பெயர்.

டைம்லைன்; குறும்பதிவுகளின் வரிசை. நம்முடைய குறும்பதிவுகள் மற்றும் நாம் பின் தொடர்பவர்கள் வெளியிடும் குறும்பதிவுகள் வரிசையாக நம்முடைய டிவிட்டர் முகப்பு பக்கத்தில் பார்க்கலாம்.

மென்ஷன் (@) : குறும்பதிவில் குறிப்பிட்ட ஒரு டிவிட்டர் பயனாளியை சுட்டிக்காட்ட, அவரது டிவிட்டர் பெயரை @ எனும் குறியீட்டுடன் பயன்படுத்தலாம். இந்த தகவல் உடனே அவருக்கு தெரிவிக்கப்படும். டிவிட்டரில் உரையாடலுக்கான வழி இது.

ரிப்ளை; ஒரு பயனாளியின் பெயர் குறிப்பிடப்பட்ட தகவலுக்கு அவர் அளிக்கும் பதில்.

டைரக்ட் மெசேஜ்; டிவிட்டர் பிரதான பக்கத்தில் வெளியிடும் கருத்துக்களை எல்லோரும் பார்க்கலாம். ஆனால் சில கருத்துக்களை தனிப்பட முறையில் பகிரும் தேவை ஏற்படலாம். இது போன்ற சக பயனாளிகளுக்கு நேரடியாக தகவல் அனுப்ப நேரடி செய்தி வசதி பயன்படுகிறது. இதே முறையில் அவர் பதில் அளிக்கலாம். இந்த இரு தரப்பினர் மட்டுமே இதை பார்க்க இயலும்.

ஹாஷ்டெக்; (#) டிவிட்டர் சேவையின் மிகப்பெரிய ஆயுதம். போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும் கைகொடுத்திருக்கும் அடையாள சின்னம்.
டிவிட்டரில் எண்ணற்ற குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அவை கடலில் கரைத்த பெருங்காயமாக மறையலாம். இதை தவிர்க்க ஒரே தலைப்பு அல்லது ஒரே பொருளில் அமைந்த குறும்பதிவுகளை ஒன்றாக பார்க்க வசதியாக உருவாக்கப்படும் குறிச்சொல் தான் ஹாஷ்டேக்.
குறிப்பிட்ட தலைப்பிலான பதிவுகளி அதற்கான ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொண்டால் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
சென்னை மழையின் போது உதவிகளை ஒருங்கிணைக்க சென்னை ரைன்ஸ் போன்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டன.
நாம் விரும்பிய ஹாஷ்டேகை உருவாக்கலாம். மற்றவர்கள் உருவாக்கும் ஹாஷ்டேகிலும் இணையலாம்

நோட்டிபிகேஷன்; டிவிட்டர் கணக்கு தொடர்பான தகவல்களை பெறும் வழி. நம்முடைய பதிவுகள் பிற இடத்தில் குறிப்பிடப்பட்டால், அல்லது மறு குறும்பதிவிடப்பட்டால் நோட்டிபிகேஷன் மூலம் அதற்கான தகவலை பெறலாம்.

ஹார்ட்; ஒரு குறும்பதிவை விரும்பு வசதி. பேஸ்புக்கின் லைக் போல.

பின்ட் டிவீட்; குறிப்பிட்ட முக்கியமான டிவீட்டை குத்தி வைக்கும் வசதி. இந்த குறும்பதிவு எப்போதும் முதல் இடத்தில் இருந்து வரவேற்கும்.

பயோ; டிவிட்டர் பயனாளி பற்றிய அறிமுகம் குறிப்பு. நீங்கள் யார், எதற்காக குறும்பதிவிடுகிறீர்கள் என்பதை உணர்த்தும் பகுதி. கவித்துவமான பயோக்களை டிவிட்டரில் பார்க்கலாம்.

டிரெண்ட்; டிவிட்டரில் அதிக கவனத்தை ஈர்க்கும் குறும்பதிவுகளின் தலைப்புகள். டிவிட்டரில் அதிகம் விவாதிக்கப்படும் கருத்துகளை அறிய உதவுவது.

புரோமோடட் டிவீட்ஸ்; டிவிட்டரின் விளம்பர குறும்பதிவுகள்.

( இணையம் தொடர்பான விஷயங்களின் அடிப்படையை அறிமுகம் செய்யும் முயற்சியில் அடுத்த பகுதி- அன்புடன் சிம்மன் )

டிவிட்டர் ஒரு அறிமுகம்: http://cybersimman.com/2009/08/26/twitter-26/

ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்கும் ஹாஷ்டேக்

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது.
செம்மர கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆவேசத்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டு வருகிறது.

கடத்தல்காரர்கள் தப்பிவிட அப்பாவி தமிழர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிவிட்டரிலும் தமிழர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து குரல் கொடுக்கத்துவங்கியுள்ளனர். தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்கும் வகையில் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இத்தகைய எதிர்ப்பு குறும்பதிவுகளை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேகும் பிரபலமாகியுள்ளது.

பலரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
@NanTamizachi என்பவர் ’20 தமிழர் கொலைசெய்யப்பட்டதை அறிந்தேன் கடத்தல்காரராயினும் விசாரணை இன்றி வேட்டையாடியமை தவறு கண்டிக்கப்படவேண்டியதே
#20தமிழர்கொலையைகண்டிப்போம்’ எனும் குறும்பதிவை வெளியிட்டார்.
தொடர்ந்து பலரும் இந்த இந்த ஹாஷ்டேகை பயன்படுத்த துவங்கினர்.

@eraam17 ( வாழ்க தமிழ்) எனும் டிவிட்டர் பயனாளியும், @Dhuvans (சிலிக்கான் சிற்பி) உள்ளிட்டோர் இதை வழிமொழிவது போல இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஹாஷ்டேகை பகிர்ந்து கொண்வர்கள் இதை டிரெண்டிங் ஆக்கவும் கோரிக்கை வைக்க மேலும் பலரும் இதில் இணைந்தனர். இதனால் #20தமிழர்கொலையைகண்டிப்போம்’ டிவிட்டரில் பிரபலமாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஹாஷ்டேகுடன் வெளியான சில குறும்பதிவுகள் வருமாறு:

* @kalvankallan; மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்?

* @bhuviii_; “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்றவன் இன்று உயிரோடு இருந்தால் வெக்கி தலைகுனிவான்!

* @CrazeTalk; தமிழன்டா என்று சொன்ன காலம் போய் .! தமிழன் தானடா என சொல்லும் காலம் வந்துவிட்டது

* @MSoundraa; அந்திரா போலீசுக்கு புரியிற மாதிரி ஒரு டேக்க ட்ரென்டு பண்ணுங்கைய்யா பிரபலங்களே

* @govikannan; மரம் வெட்டியர்களை சுட்டாச்சு, மரம் வெட்டச் சொன்னவர்களுக்கு வெண்சாமரம்

* @apdipodra; நாங்க அவங்க மரம் வெட்டுனது சரின்னு சொல்ல வரல. ஆனா ஆந்திரா போலீஸ் பண்ணது அதை விட பெரிய தப்புன்னுதான் சொல்றோம்.

* @itsurjoe: கண்டனத்திற்காவது தமிழன் ஒன்று சேரட்டும்

* @Dinakar89; அவர்கள் குடும்பத்திற்கு
நிதி வழங்கினால் மட்டும் போதாது !!
நீதியும் வழங்குங்கள்!

• @psvelu1979; மொழிவேறுபாடுகள் எல்லாம் மனிதர்களுக்குத்தானே அன்றி மனித உயிர்களுக்கு இல்லை.
• @Im_AriGM; 20 தொழிலாளிகள் செய்தது தவறுதான் அவர்களை நீதியின் வாசலில் நிறுத்துவதை விடுத்து தண்டனை கொடுக்க நீங்கள் யார்?

தொடர்ந்து இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகள் வெளியாகி வருகின்றன. குறும்பதிவுகளில் ஆவேசம் வெளிப்படுவதுதுடன், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை கண்டிக்கும் குறும்பதிவுகளையும் சிலர் வெளியிட்டுள்ளனர்.சிலர் இந்த ஹாஷேடேகை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து புரிய வைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஒரு சிலர் இப்படி ஹாஷ்டேக் மூலமாவது போராடுவோம் என்று கூறியுள்ளனர். சில குறும்பதிவுகள் எல்லை மீறுவதாக இருந்தாலும் இந்த பிரச்சனையை தெலுங்கு மக்களுக்கு எதிரானதாக பார்க்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹாஹ்டேக் மூலமான போராட்டம் என்பது வீட்டிற்குள்ளேயே இருந்து போராடுவதற்கு சமம் என்று கூறப்பட்டாலும் சமூக வலைப்பின்னல் யுகத்தில் இது கவனத்தை ஈர்ப்பதற்கான முக்கிய ஆயுதமாகவும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழியாகவும் அமைந்திருக்கிறது. இதன் அடையாளமாக கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்காக டிவிட்டரில் குரல் ஒலிக்கிறது.

தமிழர் கொலைகளை கண்டிக்கும் குறும்பதிவுகளை பின் தொடர் ஹாஷ்டேக்: #20தமிழர்கொலையைகண்டிப்போம்


நன்றி; விகடன்.காமில் எழுதியது.

141228114001-airasia-tony-fernandes-620xa

என் வாழ்வின் மோசமான கொடுங்கணவு; டிவிட்டரில் ஏர் ஆசியா சி.இ.ஓ

162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் மாயமான சம்பவம் தன் வாழ்வின் கொடுங்கணவு என்று நிறுவன சி.இ.ஓ டோனி பெர்னாண்டஸ் டிவிட்டர் குறும்பதிவு மூலம் வேதனை தெரிவித்துள்ளார்.
காணாமல் போன விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்தும் அவர் டிவிட்டர் மூலம் அதிகாரபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்டு,பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து வருகிறார்.
இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் ஞாயிற்றுகிழமை காணாமல் போனது. அதிகாலை புறப்பட்ட இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமானது. விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர். விமானம் மாயமான சம்பவம் பெரும அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாயமான விமானத்தை மீட்பதற்கான முயற்சி மோசமான வானிலைக்கு நடுவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே ஏர் ஆசியா விமான சேவை நிறுவனத்தின் சி.இ.ஓ தனது டிவிட்டர் பக்கம் மூலம் மாயமான விமானத்தின் நிலை, அதை கண்டறிவதற்கான முயற்சி பற்றிய அதிகாரபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் குறும்பதிவுகளையும் வெளியிட்டு தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்த விபத்து , ’என் வாழ்வின் மோசமான கொடுங்கணவு’ என்று அவர் சம்பவத்திற்கு பிறகு வெளியிட்ட குறும்பதிவில் அவர் குறிப்பிடிருந்தார். ”இப்போது என் சிந்தனை முழுவதும் பயணிகள் மற்றும் விமான சேவை குழுவினருடன் தான் இருக்கிறது. தேடல் முயற்சியில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்தோனேசியா மற்றும் மலோசிய அரசுகளுக்கு நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர பத்துக்கும் மேற்பட்ட குறும்பதிவுகளை வெளியிட்டிருந்தார். இந்த குறும்பதிவுகள் மூலம் மாயமான விமானத்தின் நிலை பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் வினான ஊழியரின் குடும்பத்தினருக்கு கள நிலவரத்தை தெரிவிக்கும் முயற்சியாக அவரது குறும்பதிவுகள் அமைந்திருந்தன.
’ குழுமத்தின் சி.இ.ஓ என்ற முறையில் நெருக்கடியான நேரத்தில் நான் உடன் இருப்பேன். நாம் இணைந்தே இந்த சோதனையான நிலையை எதிர்கொள்வோம்.உங்களில் பலரை காணமுடியும் என நம்புகிறேன்” என மற்றொரு குறும்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
” எங்களது முன்னுரிமை எனது ஊழியர்கள் மற்றும் பயணிகளின் நெருரிங்கிய உறவினர்களை கவனித்துக்கொள்வது தான். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வோம்’ என்றும் அவர் இன்னொரு குறும்பதிவில் தெரிவித்திருந்தார்.
தேடல் நடவடிக்கை குறித்தி நேரில் அறிவதற்காக இந்தோனேசியாவின் சுரபயா பகுதிக்கு செல்வது பற்றியும் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
விமானம் மாயமான செய்தி வெளியானதுமே அவர் டிவிட்டரில் அந்த செய்தியை உறுதிபடுத்தியதுடன் , விரைவில் இது பற்றி அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அதே போல அறிக்கை வெளியானது.
விமானம் மாயமானது அதில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில் கள நிலவரம் பற்றி விமான சேவை சி.இ.ஒ நேரடியாக தகவல்களை அளித்து வருவது ஓரளவு ஆறுதல் அளிக்கும் செயலாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய விமானம் மாயமான போது, விபத்து பற்றிய தகவல்களை நிறுவனம் முறையாக தெரிவிக்காமல் இருந்ததாக பயணிகளின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆனால் ஏர் ஆசியா சி.இ.ஓ டிவிட்டர் மூலம் தன்னால் இயன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்க முயன்று வருகிறார்.
விபத்து போன்ற நெருக்கடியான நேரங்களில் முறையான தகவல்களை தெரியாமல் இருப்பதால் ஏற்படும் இரட்டிப்பு சோகத்தை தவிர்க்கும் வகையில் அவரது முயற்சி அமைந்துள்ளது. அவர் வெளியிடும் குறும்பதிவுகள் நூற்றுக்கணகான முறை ரிடிவீட் செய்யப்ப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே டோனி பெர்னாண்டஸ் தனது டிவிட்டர் பக்கத்தின் லோகோ நிறத்தை கிரே வண்ணத்திற்கு மாற்றி தனது மற்றும் நிறுவன உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்க #PrayForQZ8501 ஹாஷ்டேக் மூலம் டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பிராத்தனைகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஏர் ஆசியா சி.இ.ஓவின் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/tonyfernandes

 

——

( தகவல் தொடர்பு தான் டிவிட்டரின் ஆதார பலன்களில் ஒன்று என்றால் அதற்கு சரியான உதாரணம் இது. காலத்தினால் பகிரும் தகவல்கள் மிகவும் முக்கியம். நெருக்கடியான நேரங்களில் பொறுப்பிலும் பதவியிலும் இருப்பவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவது தகவல் பகிர்வும் கேள்விகளுக்கான பதில்களும். அதை ஏர் ஆசியா சி.இ.ஓ நிறைவேற்ற முயன்றது பற்றிய இந்த பதிவு விகட்ன்.காமில் எழுதியது.

மங்கல்யான் சாதனை; டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்!

Mars_orbiter_twitter_360மங்கல்யான் விண்கலத்தை திட்டமிட்டபடி செவ்வாயின் நீள்வட்டப்பாதையில் செலுத்தியதன் மூலம் இந்தியா விண்வெளி ஆய்வில் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மங்கல்யானுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. .மங்கல்யானுக்காக இஸ்ரோ தனி டிவிட்டர் பக்கத்தையும் துவக்கி உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ மங்கல்யான் எனும் மார்ஸ் ஆர்பிட்டர் விண்கலம் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது. செவ்வாய்க்கான விண்கலங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெரும் பெருமையை பெற்றுள்ள மங்கள்யான், செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியுள்ள முதல் ஆசிய நாடு எனும் பெருமையையும் இந்தியாவுக்கு அளித்துள்ளது.

தேசத்தையே தலைநிமிர செய்துள்ள இந்த சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரபலங்கள் முதல் சாமான்யர்கள் வரை பலரும் மங்கள்யான் வெற்றியை கொண்டாடி வரும் வகையில் குறும்பதிவுகளை வெளியிடுவதால் மங்கள்யான் மற்றும் மார்ஸ் ஆர்பிட்டர் தொடர்பான ஹாஷ்டேகுகள் டிவிட்டரில் பிரபலமாகி உள்ளன.

பிரதமரின் வாழ்த்து!
மங்கள்யான் செவ்வாயில் நுழைவதை ஈஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ,விஞ்ஞானிகளை பாராட்டி உரை நிகழ்த்தியதுடன் டிவிட்டர் செய்தி மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் டிவிட்டர் செய்தி மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் தீவிரமாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் மங்கல்யான் சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ’ முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள முதல் நாடு, அதிலும் ஹாலிவுட் படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் இந்தியா இதை சாதித்திருக்கிறது” என்று அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே ‘ மங்கல்யான் சாதித்திருக்கிறது. இந்தியராக பெருமைப்படுகிறேன்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளரான அமீஷ் திரிபாதி, ” இந்தியா மற்றும் இஸ்ரோ வரலாறு படைத்துள்ளது என கூறியுள்ளார்.
சர்ச்சைக்குறிய எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின்” சிவப்பு கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே சென்றடைந்துள்ள முதல் நாடு இந்தியா” என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் எஸ்.எஸ் .ராஜமவுளி, நடிகை ஸ்ரீதேவிம் கோல்வுட் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியையும் பெருமித்ததையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
பிரபலங்கள் மட்டும் அல்ல, பொது மக்களில் பலரும் டிவிட்டரில் இந்தியாவின் இந்த மகத்தான சாதனையை கொண்டாடி வருகின்றனர். டிவிட்டர் பயனாளிகள் பலரும் மிகுந்த பெருமித்துடன் மங்கள்யான் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரில் வாழ்த்துக்களை பகிர்பவர்கள் அனைவரும் #Mangalyaan, #ISRO, #MarsOrbiter போன்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி வருவதால் இந்த ஹாஷ்டேகுகள் டிவிட்டரில் மிகவும் பிரபலமாகி உள்ளன.
நாசாவின் வாழ்த்து!
மங்கல்யான் விண்கல ஆய்வு பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக இஸ்ரோ பிரத்யேக டிவிட்டர் கணக்கை துவக்கியுள்ளது. https://twitter.com/MarsOrbiter எனும் அந்த முகவரில் மார்ஸ் ஆர்பிட்டர் இன்று தனது முதல் குறும்பதிவை பகிர்ந்து கொண்டது. ’சிவப்பு என்றால் என்ன? அது ஒரு கிரகம், எனது ஆய்வின் மையம்” என்று அதன் முதல் குறும்பதிவு அமைந்திருந்தது.

இதனிடையே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா டிவிட்டர் செய்தி மூலம் மங்கள்யானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. நாசா அதன் மிஷன் கியூரியாசிட்டி டிவிட்டர் கணக்கு மூலம் ” நமஸ்தே, @MarsOrbiter! வாழ்த்துக்கள் @ISRO .இந்தியாவின் முதல் கிரகங்களுக்கு இடையிலான பயணம் செவ்வாயில் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது” என தெரிவித்துள்ளது.

இந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் மங்கல்யானின் டிவிட்டர் பக்கம் ‘; எப்படி இருக்கிறார் @MarsCuriosity ? . தொடர்பில் இரு ,நானும் இங்கே தான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளது.
மங்கல்யானுக்காக பேஸ்புக் பக்கத்தையும் இஸ்ரோ அமைத்துள்ளது.

மங்கல்யானின் @MarsOrbiter டிவிட்டர் பக்கத்திற்கு பாலோயர்களும் குவித்து வருகின்றனர். சில மணி நேரங்களிலேயே 41 ஆயிரம் பாலோயர்களுக்கு மேல் கிடைத்துள்ளனர். நீங்களும் பின் தொடரலாம்: https://twitter.com/MarsOrbiter

——
நன்றில்;விகடன்.காம்