சாட்ஜிபிடியை மையமாக கொண்ட இந்த புத்தகத்தை அலெக்சாண்டர் புஷ்கின் தொடர்பான குறிப்பில் இருந்து துவங்குவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில், புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான புஷ்கின் தொடர்பாக கேள்வி கேட்டால் பதில் சொல்லும் திறனை சாட்ஜிபிடி அரட்டை மென்பொருள் பெற்றிருப்பதோடு, புஷ்கின் போலவே கதை அல்லது கவிதை உருவாக்கி அளிக்கும் திறனும் பெற்றிருக்கிறது.
புஷ்கின் மட்டும் அல்ல, ஆங்கில கவிஞர் சாமுவேல் கூல்ரிட்ஜ் உள்ளிட்ட கவிஞர்கள் போலவே கவிதை உருவாக்கித்தரும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது.
சாட்ஜிபிடியின் இந்த ஆக்கத்திறன் முக்கிய பேசு பொருளாகி இருக்கிறது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பெற்ற மென்பொருள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வியக்க வைப்பதாக இருந்தாலும், பயனாளிகள் கோரிக்கைக்கு ஏற்ப கவிதைகள், கதைகள், நாவல்கள், திரைக்கதைகள் உருவாக்கித்தரும் சாட்ஜிபிடியின் திறன் வியக்க வைக்கிறது. கம்ப்யூட்டர் நிரல்களையும் உருவாக்கித்தரக்கூடியதாக இருக்கிறது.
இவைத்தவிர, கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறனும் பெற்றிருக்கிறது. இந்த தலைப்பு, இந்த துறை தான் என்றில்லாமல், எந்த துறையில், எந்த கேள்வியாக இருந்தாலும் பதில் அளிக்கிறது.
முதல் சாட்பாட்
சாட்ஜிபிடி முதல் சாட்பாட் அல்ல. மனிதர்களோடு உரையாடும் திறன் கொண்ட அரட்டை மென்பொருள் உருவாக்கத்திற்கு அரை நூற்றாண்டுக்கும் மேல் வரலாறு இருக்கிறது. அதோடு, தற்போது வெவ்வேறு வகையான பயன்பாட்டிற்காக, வெவ்வேறு திறன் கொண்ட நூற்றுக்கணக்கான சாட்பாட்களும் பயன்பாட்டில் உள்ளன. 1966 ல் உருவான எலிசா தான் முதல் சாட்பாட் என்றால், கூகுள் அசிஸ்டெண்ட் போன்றவையும் சாட்பாட் தான்.
ஆனால், இது வரை உருவாக்கப்பட்ட எந்த சாட்பாட்டையும் விட, மேம்பட்டதாகவும், வியக்க வைப்பதாகவும் சாட்ஜிபிடி விளங்குகிறது. பெரும்பாலான சாட்பாட்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் பதில் அளிக்க கூடியதாக இருக்கும் நிலையில், ஏஐ திறன் கொண்ட சாட்ஜிபிடி, மனிதர்கள் பேச்சு மொழியை புரிந்து கொண்டு பதில் அளிப்பதோடு, எவ்வித வரம்பும் இல்லாமல் எல்லா துறைகள் தொடர்பாகவும் பதில் அளித்து, இப்படி ஒரு அரட்டை மென்பொருளா? என மலைக்க வைக்கிறது.
புதிய சாதனை
அது மட்டும் அல்ல, செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை பறைசாற்றக்கூடிய மென்பொருள்களும், சேவைகளும் மனித அறிவோடு ஒப்பிட்டு பார்க்க கூடிய வகையிலான சோதனைகளில் அசடு வழிந்திருக்கின்றன. இயந்திர திறன் மொழிபெயர்ப்பை இதற்கான எளிய உதாரணமாக கொள்ளலாம். கம்ப்யூட்டரால் மொழிபெயர்ப்பு செய்ய முடியும் என்பது முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டாலும், நடைமுறையில் இயந்திர மொழிபெயர்ப்பில் உள்ள போதாமைகள் இவ்வளவு தானா ஏஐ ஆற்றல் என எள்ளி நகையாட வைக்கும் வகையில் தான் அமைந்துள்ளது.
சாட்ஜிபிடியோ இத்தகைய சோதனைகளை அனாயிசமாக எதிர்கொண்டு மனிதர்களை அதிசயிக்க வைக்கும் தொழில்நுட்பமாக இருக்கிறது. எப்படி கேள்வி கேட்டாலும் அது பதில் சொல்லும் வெற்றிக்கதைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆற்றலே, அட கூகுளில் தேடி முடிவுகளை பட்டியலாக பெறுவதற்கு பதில் சாட்ஜிபிடியில் கேட்டு நச்சென பதிலாக பெற்றுக்கொள்ளலாமே என பலரையும் பேச வைத்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் கூகுள் இப்படி ஒரு சவாலை எதிர்கொண்டது இல்லை.
அது மட்டும் அல்லாமல் சாட்ஜிபிடியை போல, பரவலான மக்களின் கவனத்தை வேறு எந்த ஏஐ மென்பொருளும் பெற்றிருக்கவில்லை. அறிமுகமான ஒரு மாத காலத்திற்குள் அதிகம் பதவிறக்கம் செய்யப்பட்ட செயலி எனும் சாதனையையும் சாட்ஜிபிடி செய்திருக்கிறது.
ஏஐ கேள்விகள்
இவை எல்லாவற்றையும் விட, சாட்ஜிபிடியின் ஆக்கத்திறன், மனித குலத்தின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. சாட்ஜிபிடியால் கதை எழுத முடியும், கட்டுரை எழுத முடியும் என்பது மாணவர்கள் தவறாக பயன்படுத்திக்கொள்ள வழி செய்யும் எனும் நடைமுறை கவலைகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், சாட்ஜிபிடியின் ஆற்றல் உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் பணி இழப்புகளை உண்டாக்குமே என சிந்திக்க வைத்துள்ளது.
இன்னும் முக்கியமாக, சாட்ஜிபிடியால் கவிதைகள் உருவாக்க முடிவது, படைப்பாக்கம் என்பது மனதி குலத்திற்கு மட்டும் சாத்தியமான ஒன்று எனும் நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் படைப்புத்திறனை எப்படி புரிந்து கொள்வது எனும் தத்துவார்த்தமான கேள்வி எழுவதோடு, செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஆக்கங்களுக்கான காப்புரிமை யாருக்கு சொந்தம்? எனும் நவீன சட்ட சிக்கலையும் எழுப்புவதாக உள்ளது.
எதிர்கால அச்சம்
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இன்னும் எப்படி எல்லாம் இருக்குமோ எனும் அறிவியல் புனை கதை அச்சத்தை நடைமுறை உலகில் நிஜமாக்கியிருக்கும் சாட்ஜிபிடி, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் என்பதில் சந்தேகம் இல்லை. ஏஐ வரலாற்றில் சாட்ஜிபிடி முக்கிய மைல்கல்லாக அமைகிறது என்பதிலும் சந்தேகம் இல்லை.
அதே நேரத்தில், சாட்ஜிபிடி அப்படி ஒன்றும் பெரிய விஷமும் அல்ல என்றே சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில், ஓபன் ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு துறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் அடையாளமாகவே அமைகிறது. எனவே இது ஏதோ திடிரென ஏற்பட்டுள்ள பாய்ச்சல் அல்ல, ஏஐ உலகம் படிப்படியாக இந்த இடத்தை வந்தடைந்துள்ளது.
அதோடு, சாட்ஜிபிடி சாத்தியமாக்கும் சாகசங்களுக்கு பின்னே மிக எளிதான கருத்தாக்கமும், சிக்கலான தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. இயந்திர கற்றல், ஆழ்கற்றல், மொழி மாதிரிகள், ஆக்கத்தன்மை, உருமாற்றிகள் என பல்வேறு தொழில்நுட்பங்களின் சங்கமாகவே சாட்ஜிபிடி அமைகிறது.
அதே போல, சாட்ஜிபிடியை மையமாக கொண்டு எழுப்பப்படும் கேள்விகளும் ஏற்கனவே ஏஐ உலகில் விவாதிக்கப்பட்டு வருபவை தான். உண்மையில், ஏஐ எழுப்பும் தத்துவம் சார்ந்த கேள்விகளை விட, ஏஐ நுட்பங்களையும், அதன் பின்னே உள்ள தரவுகளையும் எப்படி நெறிபடுத்துவது எனும் கேள்வியே முக்கியமாக அமைகிறது. இந்த நோக்கிலேயே ஏஐ சார்பு பற்றி தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஏஐ சார்பு பலவிதங்களில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
ஏஐ அடிப்படை
சாட்ஜிபிடி போன்ற ஏஐ நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்துவது, மனித குலத்தை மிஞ்சும் அளவுக்கு ஏஐ. நுட்பம் வளர்வதற்கான அறிகுறி என்ற அச்சமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் இந்த கேள்விகளும், விவாதங்களும் சாட்ஜிபிடி சார்ந்தவை மட்டும் அல்ல: உண்மையில், ஏஐ., சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆய்வுக்கு மத்தியில், வல்லுனர்களும், செயற்பாட்டாளர்களும் ஏ.ஐ ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றியும், ஏஐ வளர்ச்சியை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் தொடர்ந்து பேசியும், விவாதித்தும் வருகின்றனர்.
சாட்ஜிபிடியின் எழுச்சியான அறிமுகம் இந்த விவாதங்களை எல்லாம் இன்னும் தீவிரமாக்கியிருக்கிறது.
இந்த பின்னணியில் சாடிஜிபிடி மென்பொருள் சரித்திரத்தை திரும்பி பார்க்கும் அதே நேரத்தில், சாட்ஜிபிடியை மையமாக கொண்டு, ஏஐ தொடர்புடைய பல்வேறு தொழில்நுட்பங்களையும், அவற்றின் தாக்கத்தையும் இந்த தொடரில் பார்க்கலாம்.
அந்த வகையில், சாட்ஜிபிடியின் முன்கதையை வரும் வாரம், முதலில் பார்க்கலாம். இந்த முன்கதையில் கவிஞர் புஷ்கினை மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளலாம். ஏனெனில், ஏஐ வரலாற்றில் அவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதோடு, சாட்ஜிபிடி உருவாக்கத்திலும் மறைமுகமான பங்கு இருக்கிறது.
- சாட்ஜிபிடி சரிதம் புத்தகத்தில் இருந்து அதன் முதல் அத்தியாயம். வெளியீடு ஜீரோடிகிரி