Tag Archives: browser

இணைய வரலாற்றுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

 

browser-2-800x594இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம் நாளுக்கு நாள் அப்டேடாகி கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்ற எண்ணமோ உண்டானால், உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.- இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது என்பதும், அந்த கதைகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை என்பதும் தான் அது.

அது மட்டும் அல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா? என்ற வியப்பும் உண்டாகும். அதோடு இணையம் எத்தனை மகத்தான கண்டுபிடிப்பு என்பதும், அந்த தொழில்நுட்ப அற்புதம் எத்தனை எளிமையாக கருக்கொண்டு வளர்ந்துள்ளது என்பதும் உங்களுக்கு புரிய வரும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இதற்கு உதாரணமாக இணையத்தின் ஆதி கதைகளில் மிக சுவாரஸ்யமான கதை ஒன்றை பார்ப்பதற்கு முன் அமெரிக்க புரோகிரமரான ஜே ஹாப்மனை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் தான் இணையத்தின் மறக்கப்பட்ட கதைகளை எல்லாம் அகழ்வராய்ச்சி செய்து கண்டெடுத்து பகிர்ந்து கொண்டு வருகிறார்.

ஹாப்மன், ’திஹிஸ்டரிஆப்திவெப்’ எனும் பெயரில் வலையின் வரலாற்றை பதிவு செய்வதற்கான இணையதளத்தை அமைத்திருக்கிறார். ( இணையமும், வலையும் ஒன்றாக புரிந்து கொள்ளப்பட்டாலும் இரண்டும் ஒன்றல்ல. இணையம் வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். வலை அதில் ஒரு அங்கம். இணையத்தை எளிதாக அணுகக்கூடிய மூல செயலியாக வலையை புரிந்து கொள்ளலாம். எனினும் நடைமுறையில் இரண்டையும் ஒன்றென கொள்வதில் தவறில்லை). அதாவது வேர்ல்டு வைட் வெப் எனப்படும் வலை உருவான கதைகளை அவர் இந்த தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

வலையின் வரலாற்றை கூகுளில் தேடினால் படித்துவிடலாமே என நினைப்பவர்கள் ஹாப்மன் தளத்திற்கு கட்டாயம் விஜயம் செய்து பார்க்க வேண்டும். பரவலாக அறியப்பட்ட வலையின் தோற்றம், வளர்ச்சி, விஸ்விரூப வெற்றி சார்ந்த தகவல்கள் மற்றும் காலவரிசை விவரங்களை எல்லாம் கடந்து, வலையின் உருவாக்கத்தில் இன்னும் தெரிந்து கொள்ள எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை இந்த தளத்தின் மூலம் உணரலாம். ஹாப்மனே இப்படி உணர்ந்ததால் தான் இந்த தளத்தை அமைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

browser-3அவர் ஒரு வரலாற்று மாணவராம். படிக்கும் காலத்திலேயே இணையதள உருவாக்கத்தில் பகுதிநேரமாக ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அதுவே முழு நேர பணியாக மாறிவிட்டாலும் மனிதருக்கு வலை உருவான வரலாற்றின் மீதான காதல் மாறாமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வலை தொடர்பான கதைகளை படித்தவருக்கு அதன் ஆரம்பமும் அடுத்தடுத்து நிகழும் பாய்ச்சல்களும் வசீகரித்தன. அந்த ஆர்வத்தில் தான் கண்டெடுத்த கதைகளையும், அவற்றுக்கான இணைப்புகளையும் சேகரித்து வைக்கத்துவங்கினார்.

இந்த வரலாறு தனித்துவம் மிக்கதாக இருக்கிறது என்கிறார் அவர். அது மட்டும் அல்ல, வலை ஆவணங்களின் பக்கமாக உருவானது என்றும், இந்த பக்கங்கள் காணாமல் போகும் தன்மை கொண்டவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதன்படியே எண்ணற்ற பக்கங்கள் காணாமல் போயிருக்கின்றன என்கிறார். அதிலும் குறிப்பாக நாம் அறிந்த வகையில் வலை வேகமாக வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதன் பாதையில் ஒரு சில தருணங்கள் மைல்கற்களாக அமைந்து மற்ற தருணங்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிடும் நிலை உள்ளது.

இந்த தருணங்கள் அனைத்தையும் திரட்டி தொகுத்து வலையின் முழுமையான கால வரிசையை உருவாக்கும் நோக்கத்துடன் இதற்கான இணையதளத்தை அமைத்து, இணையக்கடலில் தான் தேடி கண்டுபிடிக்கும் கதைகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். இணையத்தின் அங்கமாக வலை கருக்கொண்ட 1988 ம் ஆண்டு முதல் இந்த கதைகளை காலவரிசையாக படித்துப்பார்க்கலாம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வலையின் முக்கிய தருணங்களாக விளங்கிய நிகழ்வுகளின் பின்னே உள்ள கதைகள் படு சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதைவிட சுவையான வரலாற்றுப்பாடங்களையும் கொண்டிருக்கின்றன.

இதற்கு உதாரணமாக கதையை இனி பார்க்கலாம். வேர்ல்டு வைடு வெப் என குறிப்பிடப்படும் வலையை உருவாக்கியது பிரிட்டனைச்சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஞ்ஞானியான அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, 1989 ம் ஆண்டில் வலையை உருவாக்குவதற்கான யோசனையை முன் வைத்து, அது பின்னர் ஏற்கப்பட்டு 1991 ல் வலை பிரவுசர் மற்றும் எச்டிஎம்.எல் இணைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களோடு உதயமானது எனும் சுருக்கமான வரலாற்றையும் பலரும் அறிந்திருக்கலாம்.

ஆனால் இதற்கான யோசனையை லீ, உலக அளவிலான போன் புத்தகமாக முன்வைத்து தான் வெற்றி பெற்றார் என்பது உங்களுக்குத்தெரியுமா?

லீ அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த செர்ன் ஆய்வுக்கூடம் நவீன இயற்பியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. இயற்பியல் சார்ந்த ஆய்வு தவிர வேறு விஷயங்களுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால், லீயோ உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான வழியை எச்.டிம்.எம்.எல் உள்ளிட்ட அம்சங்களோடு உருவாக்க கனவு கண்டார். ஆனால் செர்ன் போன்ற ஆய்வுக்கூடத்தில் இத்தகைய திட்டத்திற்கான அனுமதி கிடைப்பது கடினம். இதை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ஆய்வு வேலையை கவனியுங்கள் என்றே எச்சரிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

ஆனால் நல்லவேளையாக டிம் பெர்னர்ஸ் லீ முன் வைத்த யோசனைக்கு அந்த கதி ஏற்படவில்லை. அவரது தலைமை அதிகாரியான மைக் செண்டல், இந்த யோசனையை ஆதரிக்க விரும்பினார். எனினும் மூல வடிவில் அது அதிகார மேல் அடுக்குகளில் செல்லுபடியாகாது என அறிந்திருந்தவர் இதற்கான மாற்று வழியை முன்வைத்தார். இந்த யோசனையை அப்படியே முன்வைக்காமல் செர்ன் ஆய்வு கூடத்திற்கு மிகவும் அவசியமான போன் புத்தகத்தை இணையத்தில் உருவாக்கித்தரும் திட்டமாக முன்வைக்குமாறு கூறினார். செர்ன் ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் இருந்ததால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க கூடிய ஒரு போன் புத்தகம் தேவைப்பட்டது என்பதால் இந்த போர்வையில் ஐடியாவை சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள் என அவர் நம்பினார். அதன்படியே இணைய போன் புத்தகத்தை உருவாக்கும் முயற்சியாக வலை துவங்கி பின்னர் மெல்ல நிலைப்பெற்று இன்று வலையில்லாமல் வாழ்க்கை இல்லை எனச்சொல்லும் நிலையை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இது போன்ற வரலாற்று கதைகளை தெரிந்து கொள்ள: https://thehistoryoftheweb.com/

 

இணையத்திற்கு டயல் செய்யவும்!

626700_49593_64487_ofvUruAIGஇணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணையத்தை வரவைத்துக்கொள்ளலாம். அதன் தொடுதிரையில் கட்டளைகள் இடுவதன் மூலம் இணைய பக்கங்களையும், இணைய சேவைகளையும் அணுகலாம். அந்த அளவுக்கு கம்ப்யூட்டரி தொழில்நுட்பமும், தொலைத்தொடர்பு நுட்பமும் மேம்பட்டிருக்கிறது.

எல்லாம் சரி, கொஞ்சம் காலத்தில் பின்னோக்கிச்சென்று பழைய தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? பழைய தொலைபேசி என்றால் கருப்பு வெள்ளை கால திரைப்படங்களில் பார்க்க கூடிய, கைகளால் சுழற்றி எண்களை டயல் செய்யக்கூடிய தொலைபேசி. டிஜிட்டல் தலைமுறையை சேர்ந்தவர்கள் இந்த வகை தொலைபேசியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பழைய தலைமுறையை சேர்ந்தவர்களே கூட அநேகமாக இந்த வகை சுழல் டயல் தொலைபேசிகளை மறந்திருப்பார்கள். இந்த குறிப்பை படிதத்துமே அவர்கள் அந்த கால தொலைபேசி நினைவில் மூழ்கிவிட வாய்ப்பிருக்கிறது.

உள்ளங்கையில் இணையம் வந்து நிற்கும் செல்போன் யுகத்தில், இந்த பழைய போனை இணையத்துடன் இணைத்து வியக்க வைத்துள்ளனர் டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் இண்டரேக்‌ஷன் டிசைன் கல்வி நிறுவனத்தைச்சேர்ந்த மாணவர்கள், வடிவமைப்பு போட்டிக்காக இந்த இணைய போனை உருவாக்கி அதற்கு பரிசும் பெற்றிருக்கின்றனர்.

இந்த புதுமையான ’இணைய போன்’ மூலம், எந்தவித திரை மட்டும், கம்ப்யூட்டர் போன்ற இடைமுக சாதனம் இல்லாமல் இணையத்தை அணுக வழி செய்துள்ளனர். இது முற்றிலும் வித்தியாசமான மற்றும் புதுமையான அனுபவமாக இருப்பதோடு, இணையத்தை புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கிறது.

இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், கம்ப்யூட்டர் வேண்டும், பிரவுசர் வேண்டும், அதில் இணையதள முகவரியை டைப் செய்ய வேண்டும், பின்னர் இணைய பக்கம் தோன்ற திரை (மானிட்டர்) வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல், இணையத்தை எப்படி அணுக முடியும் என்ற குழப்பம் ஏற்படலாம். இங்கு தான் இணைய போனின் புதுமை இருக்கிறது.

எந்த இணையதளத்தை அணுக விருப்பமோ, அந்த தளத்திற்கான ஐபி முகவரியை முதலில் இந்த போனின் சுழற்சி டயலில் ஒவ்வொரு எண்ணாக சுழற்ற வேண்டும். முழு ஐபி முகவரியையும் சுழற்றிய பிறகு அந்த இணைய பக்கத்திற்கான தொடர்பு போனில் கிடைக்கும். மறுமுனையில் இருந்து குரல் வழி சேவையாக இணைய பக்கத்தில் உள்ள தகவல்கள் வாசிக்கப்படும். இணைய முகவரிகளுக்கு இணையான எபி எண்களை அறிந்து கொள்வதற்காக என்றே பழைய தொலைபேசி கையேடு போல ஒரு சைபர் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கையேட்டில் பார்த்து ஐபி எண்களை தெரிந்து கொண்டு அவற்றை டயல் செய்ய வேண்டும்.

இன்னும் கொஞ்சம் புதுமை தேவை எனில், கூடுதலாக உள்ள நான்கு பட்டன்களை அழுத்தி, கட்டுரைகள், தொகுப்பு, டவெலப்பர் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். தலையை சுற்றி மூக்கை தொடுவது போல, இணையத்தை இப்படி கஷ்டப்பட்டு அணுக என்ன அவசியம் என்று கேட்கலாம்.

இணையத்தின் செயல்பாட்டை எல்லோருக்கும் எளிதாக புரிய வைப்பதற்கான முயற்சி தான் இது என்கின்றனர் இணைய போனை உருவாக்கிய மாணவர்கள். இணையம் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் பழக்கமானதாக இருந்தாலும் அதன் செயல்பாடு என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. டொமைன் முகவரி, சர்வர், எச்டிஎம்.எல் போன்ற வார்த்தைகளை எல்லாம் மீறி, பின்னணியில் இணையம் எப்படி செயல்படுகிறது என்பது சாமனியர்களுக்கு குழப்பமானதாகவே இருக்கிறது.

தொலைபேசி செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு இணையம் செயல்படும் விதத்தை இந்த இணைய போன் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு செயலும் இணையத்தின் செயல்முறையை ஒத்தே அமைந்திருக்கிறது. போன் புத்தக்கத்தில் முகவரியை தேடுவது என்பது, இணையத்தில் பிரவுசர்கள் இணைய முகவரியை தேடுவது போன்றது. 12 இலக்க எண்களை டயல் செய்துவிட்டு காத்திருப்பது என்பது, பிரவுசர்கள் குறிப்பிட்ட இணையபக்கத்தில் உள்ள தகவல்களை கேட்டு பெறுவதற்கு நிகரானது. பின்னர் போனில் தகவல்கள் வாசிக்கப்படுவது என்பது எச்டிஎம்.எல் குறியீடுகளை எல்லோருக்கும் புரியும் மொழியில் இணையம் தருவதற்கு நிகரானது. மற்ற நான்கு பட்டன்கள், இணையத்தில் பிரவுசர்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளும் மற்ற செயல்முறைகளை குறிக்கும்.

டிஜிட்டல் யுகத்தில் மிகவும் பழக்கமாகி விட்ட இணையத்தில் உலாவுதலை இந்த போன் மூலம் முற்றிலும் மாறுபட்ட வகையில் அணுகலாம். கோப்பன்ஹேகன் நகரில் நடைபெறும் வடிவமைப்பு கண்காட்சியில் இந்த இணைய போன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை பயன்படுத்திப்பார்த்தவர்கள் எல்லாம், பழையும், புதுமையும் கைகுலுக்கும் இதன் தன்மை கண்டு வியந்திருக்கின்றனர். வியப்படைந்தது மட்டும் அல்லாமல், இணையத்தின் பின்னணியில் என்ன எல்லாம் நடக்கிறது என்பதையும் ஒரளவு புரிந்து கொண்டுள்ளனர்.

செய்திகள் வாசிக்க, வீடியோ பார்க்க என இணையத்தை பலரும் பயன்படுத்தினாலும் அதன் செயல்பாடு பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லை. அதனால் தான் கண்ணகுக்குத்தெரியாத பிரவுசர் மூலம் இணையத்தை அணுகுவதற்கு பதிலாக கண்களால் பார்க்க கூடிய தொலைபேசி சாதனம் மூலம் இணையத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார் இந்த புதுமையான முயற்சியின் பின்னே உள்ள மாணவர்கள். முதலில் இதற்காக ரவுட்டர்களை பயன்படுத்த நினைத்ததாகவும் ஆனால் அவை மிகவும் சிக்கலாக இருந்ததால் பழைய தொலைபேசியை தேர்வு செய்ததாகவும் கூறியுள்ளனர். பின்னர் ஆர்டியூனோ கம்ப்யூட்டருடன் தொலைபேசியை இணைத்து, டயல் செய்தால் இணைய தகவல்கள் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த இணைய போன் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவமாக இருப்பதோடு அதை உருவாக்கிய குழுவினருக்கு முக்கிய கற்றல் அனுபவமாகவும் அமைந்திருக்கிறது. தொலைபேசி என்பது எளிமையான சாதனம். அதை பயன்படுத்துவதும் எளிதானது. ஆனால் அதன் பயன்பாட்டு நோக்கத்தை மாற்றும் போது மிகவும் சிக்கலாகிவிடுகிறது என்கின்றனர். உதாரணமாக டயல் செய்தவுடன் இணைய பக்கம் வருவதற்கு பதில், அது டவுண்லோடு ஆக தாமதம் ஆனால் என்ன செய்வது? தவறான ஐபி எண்களை அழைத்தால் என்ன செய்வது? இது போன்ற கேள்விகள் பயணர்கள் அனுபவம் பற்றி யோசிக்க வைத்ததாக குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இணைய போன் பற்றி தகவல் அறிய: http://designawards.core77.com/Interaction/64487/The-Internet-Phone

இணைய மோசடிக்கு எதிராக ஒரு இணையதளம்

ransomware_keyஇணையம் தொடர்பான உங்கள் கவலைகளில் ரான்சம்வேர் மோசடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இணைய மோசடிகளில் மிகவும் அச்சம் தரக்கூடியது மற்றும் இதில் ஈடுபடும் தாக்காளர்களுக்கு கைமேல் பலன் அளிக்ககூடியது என இது வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த வகை இணைய மோசடி தொடர்பான விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

மால்வேர், ஸ்பைவேர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ரான்சம்வேர் புதிதாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். இது புதிய மோசடி அல்ல: ஆனால் சமீப காலத்தில் இதன் தீவிரம், அதிகமாகி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது.

நிஜ உலகில் கடத்தல்காரர்கள் யாரையாவது பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால் தான் விடுவிக்க முடியும் என மிரட்டுவது போல, இணைய உலகில் ஹேக்கர்கள் எனப்படும் தாக்காளர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் அல்லது அவற்றில் உள்ள முக்கியமான கோப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதை விடுவிக்க பணம் தரம் வேண்டும் என மிரட்டும் உத்தியே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நிஜ உலக கடத்தலுக்கும், இந்த வகை கடத்தலுக்கும் என்ன வேறுபாடு என்றால் இதில் விஷமிகள் எதையும் கடத்திச்செல்வதில்லை: மாறாக பயனாளிகளின் கம்ப்யூட்டருக்குள் அத்துமீறி நுழைந்து அதை பயன்படுத்த முடியாமல் செய்து விடுகின்றனர்.

ரான்சம்வேரில் பல வகை இருக்கின்றன. கம்ப்யூட்டருக்குள் நுழைந்து அதை பயன்படுத்த முடியாமல் பூட்டுப்போட்டு விட்டு பணம் கேட்டு மிரட்டுவது ஒரு ரகம். இன்னொரு ரகம், முக்கியமான கோப்புகளை என்கிர்ப்ட் செய்து விட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டுவது. கம்ப்யூட்டர் என்றில்லை, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களையும் இப்படி கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தாக்காளர்கள் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய தாக்குதலுக்கு இலக்கான பயனாளிகள், தங்கள் சாதனத்தை விடுவித்துக்கொள்ள அல்லது முக்கியமான கோப்புகளை விடுவித்துக்கொள்ள பணம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பொதுவாக பெரிய வர்த்தக நிறுவனங்களே இவ்வாறு குறி வைக்கப்படுகின்றன. தனி நபர்களும் இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகலாம்.
மற்ற வகை இணைய தாக்குதல்களில் முக்கியமான விவரங்கள் திருடப்படுவதுண்டு. கிரெடிட் கார்டு அல்லது வங்கி விவரங்களை தெரிந்து கொண்டு கைவரிசை காட்டுவதுண்டு. ஆனால் ரான்சம்வேர் மூலம் பயனாளிகள் கம்ப்யூட்டருக்கு எங்கிருந்தோ பூட்டு போட்டு விட்டு அவர்களிடம் இருந்து பணம் கறக்கின்றனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த வகை தாக்குதல்கள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெரும்பாலும் விஷமத்தனமான மால்வேர் மூலம் தான் இந்த தாக்குதலை நடத்துகின்றனர். போலி மெயில்களை அனுப்பி வைத்து,அதில் உள்ள வில்லங்கமான இணைப்புகளை கிளிக் செய்யும் வகையில் பயனாளிகளை தூண்டி வலைவிரிக்கின்றனர். தப்பித்தவறி இந்த இணைப்புகளை கிளிக் செய்துவிட்டால் மால்வேர் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனுக்குள் இறங்கி தனது வேலையை காட்டத்துவங்கிவிடும். அதன் பிறகு அந்த சாதனம் தாக்காளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.

இந்த வகை தாக்குதல்கள் அதிகரித்திருப்பதுடன், பிணைத்தொகையும் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தாக்காளர்களை பொருத்தவரை கை மேல் காசு தரும் உத்தி என்பதால் இந்த வகை தாக்குதல் அவர்களுக்கு லாபம் மிகுந்ததாக அமைகிறது. ஆனால் பயனாளிகள் பாடுதிண்டாட்டம் தான்.
தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தாக்காளர்கள் மிரட்டலுக்கு அடிபணிவதை தவிர வேறு வழியில்லை என்பது தான் தற்போதைய நிலை. ஆனால் இதை மாற்றும் வகையில் சைபர் பாதுகாப்பு வல்லுனர்களும் களத்தில் இறங்கிவிட்டனர். ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல் ,ரான்சம்வேர் தாக்குதலில் சிக்கியவர்களுக்கு உதவிவதற்காக என்று ’நோ மோர் ரான்சம்’ ( https://www.nomoreransom.org/) எனும் இணையதளத்தை அமைத்துள்ளது. நெதர்லாந்து காவல்துறை மற்றும் இண்டெல் செக்யூரிட்டி மற்றும் காஸ்பெர்ஸ்கி லாப் அகியவையும் இதில் இணைந்துள்ளன.

தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு தேவையான உதவியை இந்த தளம் அளிக்கிறது. ரான்சம்வேர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் பாதிக்கப்பட்ட கோப்புகளை சமர்பித்து அதற்கான நிவாரணம் பெற முயற்சிக்கலாம். தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கான பூட்டுகள் இதில் அளிக்கப்பட்டுள்ளன. இன்னும் எல்லா வகையான தாக்குதல்களுக்கான பாதுகாப்பு உருவாக்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகின்றனர். தாக்குதல் பற்றிய விவரங்களையும் இந்த தளத்தின் மூலம் புகார் செய்யலாம்.

இந்த இணையதளம் , தாக்காளர்களின் பிடியில் சிக்கி செய்வதறியாமல் தவிக்கு அப்பாவி பயனாளிகளுக்கு நிச்சயம் ஆறுதல் அளிப்பதாக அமையும். இதே போலவே தாக்காளர்கள் பூட்டை விடுவிக்க கூடிய சாவிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற சைபர் பாதுகாப்பு முயற்சிகளும் தீவிரமாகி வரும் நிலையில், உண்மையான பாதுகாப்பு என்பது இணையவாசிகளின் விழிப்புணர்வில் தான் இருக்கிறது என்கின்றனர் வல்லுனர்கள். சந்தேகத்திற்குறிய மெயில்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது, வைரஸ் தடுப்பு பாதுகாப்பை நாடுவது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர். அதோடு, முக்கிய கோப்புகளை பேக்கப் எடுத்து வைப்பதும் அவசியம் என்கின்றனர்.

ஆயிரம் இணையதளங்கள் காட்டும் இணையதளம்

fluckதளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள்

இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்திருக்கிறோம். புதிய இணையதளமான பிளக்.காம் ஒரே இடத்தில் ஆயிரம் இணையதளங்களை தொகுத்து தந்து வியக்க வைக்கிறது. இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட ஆயிரம் இணையதளங்கள் இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேல் பாதியில் தளங்களின் முகவரிகள் அவற்றின் லோகோவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், செய்தி, ஷாப்பிங், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளின் கீழ் இணையதளங்களின் முகவரிகள் மட்டும் வரிசையாக இடம்பெற்றுள்ளன. கீழ்ப்பகுதியில் மீண்டும் தளங்களின் லோகோக்கள் அணிவகுக்கின்றன. எந்த இணைப்பை கிளிக் செய்தாலும் அந்த இணையதளத்திற்கான பக்கம் அருகே திறக்கப்படுகிறது. மொத்தம் ஆயிரம் இணையதளங்கள் இப்படி முகப்பு பக்கத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. பிரபலமான யூடியூப், அமேசான், கூகுள்,டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து முன்னணி தளங்களையும் பார்க்க முடிகிறது. பெரிய சேவை என்று சொல்ல முடியாது. சின்ன புதுமை தான், ஆனால் அருமையாக இருக்கிறது.

இணையதள முகவரி: http://fulck.com/


unnamed
செயலி புதிது; தினம் ஒரு இலக்கு

பெங்களூருவைச்சேர்ந்த இளந்தளிர்கள் பிரதீக் மகேஷ்(12) மற்றும் ப்ரியால் ஜெயின்(13) இணைந்து சமூக நோக்கிலான செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். விபிளெட்ஜ் எனும் பெயரிலான அந்த செயலி, பயனாளிகளை சின்ன சின்ன சமூக நோக்கிலான செயல்களில் ஈடுபட வைக்கிறது. பத்து மரம் நடுவது, பொது போக்குவரத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களை சிறிய இலக்குகளாக முன்வைக்கிறது இந்த செயலி.
இவை ஒவ்வொன்றையும் நிறைவேற்றினால் அதற்கான பரிசுப்புள்ளிகள் அளிக்க்ப்படுகின்றன. ஒரு இலக்கை செய்து முடித்தவுடன் அதை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் மற்றவர்களையும் சமூக நோக்கிலான செயல்களில் ஈடுபட வைக்கலாம். இதில் இலக்குகளாக அளிக்கப்படும் செய்லகளை பிரபலமாக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த தொடக்க நிறுவனமான அகாட் கில்ட் (cadGild) வழங்கிய செயலி உருவாக்க பயிற்சியில் பங்கேற்றதன் மூலம் பிரதிக்கும் ,பிரியாவும் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்: https://play.google.com/store/apps/details?id=com.acadgild.vpledge&hl=en

வீடியோ புதிது; உடற்பயிற்சி மூலம் இயங்கும் கம்ப்யூட்டர்

figure1-01
கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் புதிய முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த முறைபடி கம்ப்யூட்டரை மவுஸ் கொண்டு இயக்குவதற்கு பதில், கால்களின் அசைவுகள் மூலம் இயக்க வேண்டும். அதாவது உடற்பயிற்சி செய்வது அசைவுகள் மூலமே கம்ப்யூட்டரை இயக்க முடியும்.
ஏற்கனவே கம்ப்யூட்டர் உலகில் நின்று கொண்டு கம்ப்யூட்டரை பயன்படுத்தும் ஸ்டாண்டிங் டெஸ்க் முறை பிரபலமாக இருக்கிறது. உட்கார்ர்ந்து கொண்டே கம்ப்யூட்டரை இயக்குவதால் ஏற்படக்கூடியா பாதிப்புகளை இது போக்குகிறது.
இதன் அடுத்த கட்டமாக, நின்று கொண்டே, கால்களால் கம்ப்யூட்டரை இயக்கும் முறையை கனடா ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கான விஷேச மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் சென்சார் பொருத்தப்பட்ட ஷூக்களை அணிந்து கொள்ள வேண்டும். இந்த ஷூவால் ஆங்காங்கே தட்டினால் அது மவுஸ் கிளிக்காக புரிந்து கொள்ளப்பட்டு கம்ப்யூட்டர் இயங்கும். மேஜை கிழ் பொருத்தப்பட்டுள்ள காமீரா மூலம் கால் பாதங்களின் நிலை உணரப்பட்டு மென்பொருள் அதற்கேற்ப அனுமதி அளிக்கும்.கம்ப்யூட்டருக்குள் நுழைவும், வெளியேறுவும் இப்படி கால்களை பயன்படுத்துவது நல்ல உடற்பயிற்சியாக அமையும் என கருதப்படுகிறது. அது மட்டும் அல்ல, பேஸ்புக் போன்ற சமூக ஊடக தள பயன்பாட்டை குறைப்பதற்காக அந்த தளங்களை, நீண்ட நேரம் நின்று பயன்படுத்த முடியாத போசில் மட்டுமே பயன்படுத்தும்படி அமைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். எப்படி இருக்கிறது!

டேப்-கிலிக்-கிளிக் எனும் பெயரிலான இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பதற்கான வீடியோ விளக்கம்: https://youtu.be/pqycjWHoI2w

Shove_Home-582x297

நண்பர்கள் பிரவுசர் உங்கள் கையில்;புதுமையான இணைய சேவை

உங்கள் நண்பர்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் இணையதளத்தை புதிய டேபாக திறக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதே போல உங்கள் கம்ப்யூட்டரில் திடிரென உங்கள் நண்பர்கள் நினைக்கும் இணையதளம் தானாக திறக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

புதிதாக அறிமுகமாகி இருக்கும் பிரவுசர் நீட்டிப்பு சேவையான ஷோவ் (shove) இதை தான் சாத்தியமாக்குகிறது.
இணையத்தில் உலாவும் போது நண்பர்களுடன் இணையதளங்களை இணப்புகளாக பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் இருக்கின்றன.இந்த வசதியை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று நண்பர்களின் பிரவுசரிலேயே புதிய இணையதளத்தை தோன்றச்செய்யும் வகையில் ஷோவ் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.பிரபலமான கூகுள் குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையான இது செயல்படுகிறது.

ஷோவ் சேவையை பயன்படுத்த முதலில் அதை ஒருவர் தனது பிரவுசரில் நிறுவிக்கொள்ள வேண்டும்.அதன் பிறகு இணையத்தில் ஏதேனும் முக்கியமான அல்லது சுவாரஸ்யமான இணையதளத்தை பார்க்கும் போது அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால்,ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த தளம் நண்பரின் பிரவுசரில் திறக்கப்பட்டுவிடும். அதற்கு முன்னர் ஒரு சின்ன அறிவிப்பு போல ,நண்பர் உங்களுக்கு ஒரு இணையதளத்தை காண்பிக்க விரும்புகிறார் எனும் செய்தி எட்டிபார்க்கும்.இதன் தொடர்ச்சியாக இணையதளம் திறக்கப்படும்.
ஆனால் இதற்கு உங்கள் நண்பர்களுக்கும் ஷோவ் நீட்டிப்பு சேவையை நிறுவியிருக்க வேண்டும்.அதோடு நண்பர்களை நீங்கள் உங்கள் ஷோவ் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்த பிறகு, ஷோவ் பட்டியலில் உள்ள நண்பரின் பெயரை கிளிக் செய்ததுமே குறிப்பிட்ட இணைதளத்தை நண்பர்கள் பார்வைக்கு தோன்றச்செய்யலாம்.

கிட்ட்த்தட்ட நண்பர்களின் பிரவுசரை கைப்பற்றுவது போல அவர்களின் பிரவுசரில் நாம் விரும்பும் இணையதளத்தை இந்த சேவை தோன்றச்செய்கிறது.முதல் பார்வைக்கு இது விபரீதமானதாகவோ,வில்லங்கமானதாகவோ தோன்றலாம்.அதற்கேற்ப இந்த சேவையை விளையாட்டு நோக்கில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.மோசமான அல்லது ஆபாசமான இணையதளத்தை திடிரென தோன்றச்செய்வதோ அல்லது வைரஸ் இணைப்பு தளங்களை எட்டிப்பார்க்கச்செய்யும் அபாயமோ இருக்கத்தான் செய்கிறது. அதிலும் அலுவலக சூழலில் இப்படி ஒரு இணையதளம் கம்ப்யூட்டரிலோ ,லேப்டாப்பில்லோ தோன்றினால் சங்கடமாக தான் இருக்கும்.

ஆனால்,இதில் நமது நண்பர்களை கவனமாக தேர்வு செய்து கொண்டால் பிரச்சனை இல்லை. பேஸ்புக் போல இதில் முகம் தெரியாதவர்களை எல்லாம் நண்பர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை.பயனுள்ள அல்லது சுவாரஸ்யமான இணைப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்பும் நெருக்கமான நண்பர்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதுமையான இந்த சேவையை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.

இணையதளங்களின் இணைப்பை அனுப்பி வைப்பதைவிட இந்த சேவை முற்றிலும் சுவாரஸ்யமானது.இணைப்புகளை அனுப்பும் போது அது எப்போது திறந்து பார்க்கப்படும் என்பது தெரியாது.ஆனால் இந்த சேவையில் நினைத்தவுடன் இணையப்பை இணையதளமாகவே அறிமுகம் செய்துவிடலாம்.
அதிலும் இணைய அரட்டை அல்லது விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது உடனடியாக இணையதளத்தை பார்க்கச்செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

அது மட்டும் அல்லாமல் நண்பர் பார்த்து ரசித்த ஒரு சூப்பரான இணையதளம் உங்கள் கம்ப்யூட்டரிலும் திறக்கப்படுவது திரில்லான அனுபவமாக தானே இருக்கும்.
நெகிழ வைக்கும் வீடியோ இது எனும் பரிந்துரை இ-மெயில் மூலம் அல்லது பேஸ்புக் பகிர்வாக வந்து,அதை கிளிக் செய்து பார்ப்பதைவிட அந்த வீடியோ பிரவுசரில் திடிரென ஓடத்துவங்குவது சுவாரஸ்யமாக தானே இருக்கும்.
இணைய பகிர்வில் சின்னதாக ஒரு புதிய அத்தியாயத்தை இந்த சேவை துவக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அமெரிக்காவைச்சேர்ந்த மைக் லீச்சர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த சேவையை உருவாக்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் விளையாட்டாக தான் இந்த சேவையை உருவாக்கியதாகவும்,ஆனால் இதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது இணைய பகிர்வில் இது புதுமையாக இருக்கும் என தோன்றியதாகவும் வயர்டு இணைய தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் லீச்சர் கூறியுள்ளார்.

முற்றிலும் புதுமையான இணைய உரையாடலுக்கு இது வித்திடும் என்றும் அவர் நம்புகிறார்.
இது இன்னொரு அரட்டை சேவை அல்ல,இது உங்கள் பிரவுசரை நண்பர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது,இதை கொஞ்சம் பொறுப்பாக தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார் லீச்சர்.

இணையதள முகவரி: http://shove.wtf/

நன்றி;விகடன்.காமில் எழுதியது