Tag Archives: photo

ஸ்னேப்சேட் வெற்றிக்கதை- புதுயுக செயலியை உருவாக்கிய ஸ்பிஜெல் !

sn1ஸ்னேப்சேட் இணை நிறுவனர் இவ்ணைான்ய ஸ்பிஜெல்  உலகின் புதிய பில்லினராக உருவாகி இருக்கிறார். அவரது ஸ்னேன் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்திருப்பதன் மூலம் இதை அவர் சாதித்திருக்கிறார். கோடிகளை அள்ளியது மட்டும் அவரது சாதனையல்ல. இணைய உலகின் எதிர்கால போக்கை புரிந்து கொண்டு, புது யுக செயலியாக ஸ்னேப்சேட்டை உருவாக்கும் தொலைநோக்கு அவரிடம் இருந்தது. நம் காலத்து நாயகர்கள் தொடரில் ஸ்இஜெல் ஸ்னேப்சேட்டை உருவாக்கிய கதை விவரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் இருந்து….

ஸ்னேப்சேட் போன்ற செயலியை இவான் ஸ்பிஜெல் போன்ற ஒருவரால் தான் உருவாக்க முடியும். இதை ஸ்பிஜெல்லும் நன்கு அறிந்திருக்கிறார். அதனால் தான் ஸ்னேப்சாட் சேவையை பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் விலைக்கு வாங்க முயன்ற போது அவரால் அந்த கோரிக்கையை நிராகரிக்க முடிந்தது. ஸ்பிஜெல் நிராகரித்தது ஜக்கர்பர்கின் கோரிக்கையை மட்டும் அல்ல: அதற்காக அவர் தருவதாக சொன்ன 3 பில்லியன் டாலர்களையும் தான். ஜக்கர்பர்கே இதை நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் ஸ்பிஜெல் என் வழி தனி வழி எனக்கூறிவிட்டார்.

புதிய சேவை மூலம் கவனத்தை ஈர்க்கும் வளர்ந்து வரும் நிறுவனங்கள், திடிரென பெரிய நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்படுவது இணைய உலகில் அடிக்கடி நிகழ்வது தான். ஆனால் பெரிய நிறுவனம் ஒன்று விலைபேச வரும் போது புதிய நிறுவனம் அதை நிராகரிப்பது என்பது அபூர்வம் தான். எனவே தான், 2013 ம் ஆண்டின் துவக்கத்தில் பேஸ்புக் வாங்க முயற்சி செய்து, அதை ஸ்பிஜெல் நிராகரித்துவிட்டதாக செய்தி கசிந்த போது, இப்படி கூட ஒருவரால் செய்ய முடியுமா என இணைய உலகம் திகைத்துப்போனது. ஸ்பிஜெல் எடுத்தது சரியான முடிவு தானா? எனும் விவாதமும் தீவிரமாக நடைபெற்றது. ஸ்பிஜெல்லின் முடிவு முட்டாள்த்தனமானது, இதற்காக அவர் வருந்தும் நிலை வரும் என்று கூட பலரும் கருதினர். இந்த இளைஞருக்கு இத்தனை தலைக்கணமா என்றும் கூட கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் அப்போது ஸ்பிஜெல்லுக்கு 23 வயது தான்.

இருந்தாலும் என்ன, இன்று ஜக்கர்பர்க் போல ஸ்பிஜெல்லும் இளம் கோடீஸ்வரர். அவரது ஸ்னேப்சேட் நிறுவனம் ( இப்போது ஸ்னேன் ஐஎன்சி) அசாதரணமான வளர்ச்சியை பெற்றிருக்கிறது. தினந்தோறும் அந்த சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எப்போதோ 100 மில்லியனை கடந்துவிட்டது. அதோடு ஸ்னேப்சேட் புதிய அம்சங்களையும், வசதிகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து, அதன் ஆதார பயனாளிகளான பதின்பருவத்தினரையும், இணையத்தின் இளைய தலைமுறையையும் கவர்ந்திழுத்து வருவதோடு, இந்த ரசிகர் பரப்பிற்காக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களையும் தன்னிடம் தஞ்சமடைய வைத்திருக்கிறது. அன்மையில் ஸ்னேப்சேட் தனது முதல் வன்பொருளான ஸ்னேப்சேட் கண்ணாடியையும் அறிமுகம் செய்துள்ளது. ஸ்னேப்சேட் சேவை பயன்படுத்தப்படும் விதம், அது ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவை எல்லாம் சேர்ந்து தான் ஸ்னேப்சேட் வெற்றிக்கதையை விஷேசமானதாக ஆக்குகிறது. சுவாரஸ்யமும், புதிர்த்தன்மையும் நிறந்த வெற்றிக்கதை அது!

இந்த கதையை புரிந்து கொள்ள ஸ்னேப்சேட் தலைமுறையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னர் ஸ்னேப்சேட் சேவையை புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் ஸ்னேப்சேட் சேவையை அறிமுகம் செய்து கொள்பவர்களுக்கு அது புரியாத புதிராக தான் இருக்கும். அதிலும் பழைய தலைமுறையினருக்கு இப்படி ஒரு சேவை எதற்காக என்று தான் கேட்கத்தோன்றும். உண்மையில் ஸ்னேப்சேட் செயலி அறிமுகமான போது பலரும் இப்படி தான் கேட்டனர். அப்போது ஸ்னேப்சேட்டால் என்ன பயன் என்று பெரும்பாலானோருக்கு புரியவில்லை. ஏனெனில், புகைப்பட பகிர்வு வகை செயலியான ஸ்னேப்சேட், அனுப்பியபின் பார்த்ததும் மறைந்துவிடும் படத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. இன்று தானாக மறையும் படங்களை அனுப்பி வைக்கும் சேவை என பிரபலமாக குறிப்பிடப்பட்டாலும், அறிமுகமான புதிதில் ஸ்னேப்சேட் குழப்பத்தையே ஏற்படுத்தியது. பார்த்தவுடன் மறையும் படங்களை அனுப்பி வைப்பதற்கான தேவை என்ன எனும் கேள்வியையும் எழுப்பியது.

அதற்கு முன் இணைய உலகம் பல வகையான புகைப்பட மற்றும் தகவல் பகிர்வு செயலிகளை பார்த்திருக்கிறது. ஆனால் அவற்றில் இருந்தெல்லாம் ஸ்னேப்சேட் முற்றிலும் மாறுபட்டிருந்தது. பயனாளிகள் தங்களை அல்லது தங்கள் சுற்றுப்புறத்தை படம் எடுத்து அனுப்பி வைக்க அது வழி செய்தது. ஆனால் இந்த படங்களை பெறுபவர்கள் அவற்றை பத்து நொடிகள் வரை தான் பார்க்க முடியும். அதன் பிறகு அவை தானாக அழிக்கப்பட்டுவிடும். இது தான் ஸ்னேப்சேட்டின் தனித்தன்மையாக இருந்தது. எல்லாம் சரி, ஆனால் எடுக்கும் படங்கள் ஏன் மறைந்து போகவேண்டும். இப்படி மறையும் படங்களை அனுப்பி வைப்பதால் என்ன பயன்? இந்த கேள்விகள் எல்லோரையும் குழப்பியது.

காமிரா கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் படங்களை பாதுகாத்து வைப்பது தான் உலக வழக்கமாக இருந்தது. இணைய யுகத்தில் படங்களை எடுக்கும் வழிகள் மற்றும் பகிர்ந்து கொள்ளும் வழிகள் அதிகரித்திருந்தாலும், சேமித்து வைப்பது என்பது தான் படங்களின் பயன்பாட்டிற்கான முக்கிய தேவையாக கருதப்பட்டது. புகைப்பட பகிர்வில் புதிய பாதை காட்டிய இன்ஸ்டாகிராம் செயலியும் சரி, அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி பிரபலமாக புகைப்பட பகிர்வு சேவையான பிளிக்கரும் சரி, படங்களை சேமித்து வைப்பதான் தான் பிரதான அம்சமாக கொண்டிருந்தன. அப்படி இருக்க, மறைந்து போகும் படங்களை அனுப்பி வைக்கும் சேவை என்பது விசித்திரமாக அமைந்திருந்தோடு, தேவையில்லாத ஒன்று என்றும் கருதப்பட்டது. அதற்கேற்பவே ஸ்னேப்சேட்டை ஸ்பிஜெல் உருவாக்கியபோது இந்த சேவை தோல்வியை தழுவும் என்றே பலரும் கருதினர். ஆனால் இந்த ஆருடங்களை எல்லாம் அலட்சியம் செய்யும் துணிச்சல் ஸ்பிஜெல்லிடம் இருந்தது. தான் உருவாக்க முற்பட்ட சேவை மீது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதுவே ஸ்னேப்சேட்டின் வெற்றிக்கும் வழிவகுத்திருக்கிறது.

snஸ்னேப்சேட்டின் இணை நிறுவனர் மற்றும் அதன் சி.இ.ஒ, அதிலும் சர்வாதிகார் தன்மை கொண்ட சி.இ.ஓ என அறியப்படும் ஸ்பிஜெல், வைய விரிவு வலைக்கான கருத்தாக்கம் முன்வைக்கப்பட்ட அடுத்த ஆண்டு (1990) பிறந்தவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் அவர் பிறந்து வளர்ந்தார். அவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். (சகோதரிகள்). ஸ்பிஜெல் சீமான் வீட்டு செல்லக்குட்டி போல எந்தக்குறையும் இல்லாமல் வளர்ந்தார். அவரது தந்தை ஜான் ஸ்பிஜெல் மற்றும் தாய் மெலிசா இருவருமே வெற்றிகரமான வழக்கறிஞர்கள். என்வே வீட்டில் செல்வத்திற்கோ வசதிக்கோ அந்த குறையும் இல்லை. வழக்கறிஞர்கள் என்பதால் சமூகத்திலும் செல்வாக்கு இருந்தது. சொகுசு கார், டென்னிஸ் பயிற்சி, தனிப்பட்ட சமையல்காரர், ஐரோப்பிய விடுமுறை என அவரது சிறுவயது பருவம் இன்பமயமாக கழிந்தது. அதோடு சமூக நிகழ்வுகள் மற்றும் தன்னார்வ பணிகளும் அதிகம் இருந்தன.

ஸ்பிஜெல்லுக்கு தொழில்நுட்பத்திலும் ஆர்வம் இருந்த்து. ஆறாவது படிக்கும் போதே கம்ப்யூட்டர் அறிமுகமாகிவிட்டது. அதன் பின் போட்டோஷாப் மென்பொருளில் விளையாடுவது அவருக்கு கைவந்த கலையானது. வார இறுதி நாட்களை உள்ளூர் பள்ளியின் கலைக்கூடத்தில் அவர் செலவிட்டார். உயர் நிலை வகுப்பை அடைந்ததும் ரெட்புல் எனும் நிறுவனத்தில் அவர் பயிற்சி ஊழியராக பணியாற்றினார். ஊதியம் இல்லாத வேலை என்றாலும் அந்த நிறுவனத்தின் மீது இருந்த அபிமானம் காரணமாக நண்பர் ஒருவரின் சிபாரிசு மூலம் அந்த பணியை பெற்று ஈடுபாட்டுடன் செய்து வந்தார். ரெட்புல் நிறுவனத்திற்காக போட்டோஷாப் மூலம் சில விளம்பர பணிகளையும் மேற்கொண்டார். இந்த அனுபவம் அவருக்கு தொழில்முனைவின் அரிச்சுவடியை அறிமுகமாக்கியது. குறிப்பாக மார்க்கெட்டிங் பற்றி நிறைய கற்றுக்கொண்டார். இதற்கு முன்பாகவே ஒரு கோடை விடுமுறையில் உள்ளூர் கல்லூரி ஒன்றில் வரைகலை வடிவமைப்பு உள்ளிட்ட இரண்டு பாடங்களில் பகுதிநேர சான்றிதழ் வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றிருந்தார்.

வரைகலை வடிவமைப்பு பயிற்சி வடிவமைப்பு சார்ந்த சிந்தனையை வளர்த்து ஒரு மாணவனாக தன்னை மாற்றியது என பின்னர் அவர் இது பற்றி உற்சாகமாக குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே உள்ளூர் நாளிதழ் ஒன்றிலும் அவர் பணியாற்றினார். அப்போது அவர் கட்டுரைகள் எழுதுவதில் மட்டும் அல்லாமல் விளம்பரங்கள் வாங்குவதிலும் பளிச்சிட்டார். ஆக, ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டிருந்தாலும் அவர் படிப்பிலும், பகுதி நேர பணி மூலம் திறன் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார். அதே நேரத்தில் கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு 17 வயது ஆன போது பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். முதலில் ஸ்பிஜெல் தனது தந்தையோடி வசித்தார். ஆனால், தந்தையிடம் செலவுக்கு அதிக பணம் கேட்டும், விருந்துகளுக்கு செல்ல பி.எம்.டபிள்யூ கார் கேட்டும் பிடிவாதம் பிடித்தார். இதற்கு தந்தை மறுக்கவே கோபித்துக்கொண்டு அம்மாவிடமே சென்றுவிட்டார். அம்மா அவருக்கு பி.எம்.டபிள்யூ காரை குத்தகைக்கு எடுத்து தந்தார். பின்னர் கல்லூரி நாட்களில் தந்தையிடமே திரும்பி வந்துவிட்டார்.

பள்ளி படிப்பை முடித்ததும் அவர் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிலத்துவங்கினார். ஸ்டான்போர்டிலும் அவரது விருந்துகளும் கேளிக்கைகளும் தொடர்ந்தன. படிப்பிலும் ஆர்வம் குறைந்துவிடவில்லை. மற்ற விஷயங்களிலும் துடிப்புடன் இருந்தார். வடிவமைப்பில் இருந்த ஆர்வத்தோடு, திடிரென ஆசிரியர் பணியிலும் ஈடுபாடு ஏற்பட்டு, தென்னாப்பிரிக்கா சென்று மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக பாடம் நடத்தினார்.

இதனிடையே நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில், இண்டியூட் நிறுவன நிறுவனர் ஸ்காட் குக் நடத்தி வந்த வகுப்பில் பங்கேற்றார். இந்த வகுப்பு அவரது மனத்தை தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு நோக்கி இழுத்தது. இதன் பயனாக குக் அப்போது உருவாக்கி கொண்டிருந்த டெக்ஸ்ட்வெப் எனும் திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். பிராட்பேண்ட் இணையவசதி இல்லாத பகுதிகளில் இணைய தகவல்களை குறுஞ்செய்தி மூலம் வழங்க முற்பட்டது.

புதிதாக ஏதாவது செய்ய செய்ய வேண்டும் எனும் துடிப்புடன் பாபி மர்பி எனும் நண்பருடன் இணைந்து, புதிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூர் சேர்க்கை தொடர்பாக வழிகாட்டும் பியூச்சர்பிரெஷ்மேன்.காம் எனும் இணையதளத்தை உண்டாக்கினார். இந்த இணையதளம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் தான் ரெகி பிரவுன் எனும் மாணவர் அறிமுகமானார். கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசிய போது, பிரவுன் குறிப்பிட்ட ஒரு எண்ணம் ஸ்பிஜெல்லை கவர்ந்தது. தானாக மறையும் புகைப்படங்களை அனுப்பும் வசதி தான் பிரவுன் குறிப்பிட்ட யோசனை. உடனே அதை செயல்படுத்த துவங்கினார். இந்த சேவைக்கான புரோகிராமிங் எழுதும் பணியை மர்பியிடம் ஒப்படைத்தார். 2011 ம் ஆண்டு ஜூலை மாதம் பிக்கபூ எனும் பெயரில் இந்த சேவை அறிமுகமானது. ஆனால், இந்த சேவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதலீட்டாளர்களை அணுகிய போது, டெலிட் செய்யப்படும் படங்களை அனுப்பும் சேவைக்கான தேவை என்ன? என நிராகரித்தனர். இதனிடையே, நண்பர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டிருந்தது. இதனால் ரெகி பிரவுனுக்கு 30 சதவீத பங்குகளை கொடுத்து நிறுவனத்தில் இருந்து வெளியேற்றினர். மேலும் பிக்கபூ எனும் பெயரை பயன்படுத்துவதில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.

அந்த சேவையில் மேலும் சில அம்சங்களை சேர்த்து ஸ்னேப்சேட் எனும் பெயரில் சில மாதங்கள் கழித்து அறிமுகம் செய்தனர். ஐபோனில் பயன்படுத்தக்கூடிய செயலியாக அது அறிமுகமானது. இந்த செயலிக்கான பேய் வடிவ லோகோவை ஸ்பிஜெல் வடிவமைத்திருந்தார். அதன் பிறகு தான் அந்த மாயம் நிகழ்ந்தது. அழிக்கப்பட்டுவிடும் படங்களை அனுப்பும் செயலியால் என்ன பயன் என்று கேட்கப்பட்டதற்கு மாறாக, பதின் பருவத்தினர் அதை ஆர்வத்துடன் பயன்படுத்த துவங்கினர். சமூக ஊடகங்களின் தாக்கம் உச்சத்தில் இருந்த நிலையில், செல்பேசியில் செயலிகளை பயன்படுத்துவது அதிகரித்து வந்த நிலையில், இளம் தலைமுறையினர், ஒரு படத்தை அனுப்பி வைத்தால் அது பார்க்கப்பட்டவுடன் அழிக்கப்பட்டுவிடும் எனும் கருத்தை மிகவும் விரும்பினர். இதை ஒரு கேளிக்கை அம்சமாக கருதியதோடு, சிக்கல் இல்லாத வழியாகவும் கருதினர். நினைத்தவுடன் ஒரு படத்தை கிளிக் செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம் எனும் வசதியுடன், அது டெலிட் ஆகிவிடும் எனும் உறுதி, தயக்கமில்லாமல் பகிர்வதை ஊக்குவித்தது.

img005அதற்கேற்பவே ஸ்னேப்சேட் செயலியின் வடிவமைப்பும் அமைந்திருந்தது. செயலியை திறந்ததுமே செல்போன் காமிரா திரை முகப்பு பக்கமாக தோன்றும். அதில் படத்தை கிளிக் செய்து, தொடர்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். தேவை எனில் உடன் ஒரு குறிப்பையும் இடம்பெற வைக்கலாம். மறுமுனையில் பார்த்தவுடன் 1 முதல் 10 விநாடிக்குள் படம் மறைந்துபோகச்செய்யலாம். இந்த வசதி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதுவித வழியாக அமைந்தது. சுயபடம் முதல் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி வரை எதை வேண்டுமானாலும் கிளிக் செய்து அனுப்பி வைக்கலாம். இதோ இந்த நொடியில் நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் அல்லது இந்த இடத்தில் இருக்கிறேன் என தெரிவிக்கும் வகையில் அமைந்த்து. அதோடு அந்த நொடி அதன் பிறகு மறைந்து விடுவதாகவும் இருந்தது. விளைவு, இளசுகள் விரும்பி பயன்படுத்தப்படும் சேவையாக ஸ்னேப்சேட் உருவானது.

படங்களை பாதுகாத்து பழகிய பழைய தலைமுறைக்கு தானாக மறையும் படங்களை அனுப்பும் வசதி வீணானது என தோன்றினாலும் இணைய போக்குகள் மற்றும் வளர்ச்சிக்கு பழகிய இளம் தலைமுறைக்கு இந்த வசதி புதுயுக தகவல் தொடர்பாக தோன்றியது. அதோடு பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் தனிப்பட்ட எல்லா விவரங்களையும் சமர்பிக்க வேண்டியிருந்ததற்கு மாறாக ஸ்னேப்சேட் சுதந்திரமான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்தது. மேலும் பேஸ்புக் வலைப்பின்னல் சேவை பிரலமாக இருந்தாலும், அதில் பகிரும் நிலைத்தகவல்களை தங்கள் பெற்றோர்களும் எட்டிப்பார்ப்பதை இளம் தலைமுறை விரும்பவில்லை. இதற்கு மாறாக உடனடி படங்கள் மூலம் (பின்னர் வீடியோ வசதியும் அறிமுகமானது) தொடர்பு கொள்ள முடிந்த்து சுவாரஸ்யத்தை மட்டும் அல்லாமல், தங்கள் செயல்பாடுகள் கண்காணிக்க முடியாத பாதுகாப்பையும் அளித்தது. இவற்றின் காரணமாக பதின் பருவத்தினர் மற்றும் இளம் வயதினர் மத்தியில் ஸ்னேப்சேட் வேகமாக பிரபலமாகி அதன் பயனாளிகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.

முதலில் பழைய தலைமுறைக்கு இது புரியாமல் குழப்பத்தை அளித்தாலும் இக்கால இளசுகள் ஸ்னேப்சேட்டை தங்களுக்கான இயல்பாக சேவையாக பயன்படுத்தியவிதம் அதன் அருமையை புரியவைத்தது. ஆபாசமான செய்திகளுக்காக பயன்படுத்தப்படும் வாய்ப்பே அதிகம் எனும் குற்றச்சாட்டை மீறி ஸ்னேப்சேட் புதிய வகை தகவல் மொழியாக உருவானது.

ஸ்னேப்சேட்டை எப்படி புரிந்து கொள்வது என ஸ்பிஜெல் அழகாக வழிகாட்டுகிறார்.” நிழல்படங்கள் பயன்பாடு மாறிவருவதை தான் ஸ்னேப்சேட் உணர்த்துகிறது. வரலாற்று நோக்கில் நிழல்படங்கள் முக்கிய தருணங்கள் பாதுகாக்க பயன்பட்டு வருகின்றன. ஆனால், இன்று புகைப்படங்கள் பேசுவதற்கான கருவியாக இருக்கின்றன. அதனான் தான் இளசுகள் லட்சக்கணக்கில் படம் எடுத்து வருகின்றனர். அவர்கள் படங்கள் மூலம் பேசுகின்றனர்”.

செல்போன்கள் உடனடி வெளிப்பாட்டிற்கு வழி செய்துள்ள நிலையில் ,நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதை உணர்த்த படங்கள் வழி செய்வதாகவும் அவர் விளக்கியுள்ளார். உடனடி பகிர்வு என்பது, இப்போது இருப்பது தான் என்னுடைய அடையாளம் என மாற்றி அமைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புகைப்படங்கள் மூலம் இக்கால தலைமுறை பேசிக்கொள்கின்றனர் என்பதாலேயே ஸ்னேப்சேட் வெற்றி பெற்றுள்ளது. அதன் காரணமாகவே பிராண்ட்களும் வர்த்தக நிறுவனங்களும் அதன் பின்னே படையெடுக்கின்றன.

ஸ்னேப்சேட்டின் தன்மையை புரிந்து கொண்டதால் தான் ஸ்பிஜெல் அதை மேலும் வளர்த்தெடுக்க விரும்புகிறார். அந்த நம்பிக்கை இருப்பதால் தான் அவர் ஜக்கர்பர்க் கோரிக்கையை நிராகரித்தார். இது போன்ற வர்த்தகத்தை உருவாக்கும் வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அந்த வாய்ப்பை குறுகிய கால பலனுக்காக இழக்க வேண்டுமா? என்று அவர் நம்பிக்கையோடு கூறினார். அந்த நம்பிக்கை தான் ஸ்னேப்சேட்டை விற்று கோடிகளை பார்க்க நினைக்காமல், அதனை மேலும் வளர்த்து கோடிகளை உருவாக்கும் பாதையில் முன்னேற வைத்திருக்கிறது.


நம் காலத்து நாயகர்கள் ,

புதிய தலைமுறை வெளியீடு

விலை ரூ.140.

புகைப்பட தேடலில் புதுமை! ‘

logoதமிழ் இந்து இணைய பதிப்பின் ஆ’வலை’ வீசுவோம் தொடரில், தகவல்களை தேடுவது போல குறிச்சொற்களை கொண்டு தேடும் வழியை நாடாமல், புகைப்படங்களை புகைப்படங்கள் கொண்டே தேடும் தலைகீழ் பட தேடியந்திரங்கள் பற்றி எழுதியிருந்தேன். – இணைப்பு இங்கே:http://bit.ly/2ezEVtk

இந்த கட்டுரையில் முக்கியமான உருவப்பட தேடியந்திரங்களையும் குறிப்பிட்டிருந்தேன். இந்த பட்டியலில் விடுபட்ட உருவப்பட தேடியந்திரங்கள் சில இருக்கின்றன. அவற்றில் இன்கோக்னாவும் ஒன்று.

இன்கோக்னா.காம் குறிச்சொற்களை கொண்டு தேடாமல் உருவப்படங்களை கொண்டு படங்களை தேடுகிறது. படங்கள் தொடர்பான குறிப்புகளை நாடாமல், அவற்றில் உள்ள வடிவங்களை கொண்டு இது தொடர்புடைய படங்களை தேடித்தருகிறது. இதில் இரண்டு விதமாக தேடலாம். ஒன்று முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி படங்களில் ஒன்றை தேர்வு செய்து தொடர்புடைய படங்களை தேடலாம். அதில் தோன்றும் பட்டியலில் தேவையான படத்தை கிளிக் செய்து தொடர்புடைய படங்களை தேட்லாம். இப்படியே தேடலை தொடரலாம்.
அல்லது, தேடல் கட்டத்தில் ஏதேனும் குறிப்புகளை டைப் செய்து தொடர்புடைய படங்களை தேடலாம். அந்த பட்டியலில் இடம்பெறும் படங்களில் ஒவ்வொன்றாக கிளிக் செய்தும் தேடலாம்.

ஆனால், தலைகீழ் உருவப்பட்ட தேடல் ராஜாவான டைனிஐ தேடிய்ந்திரம் போல புகைப்படத்தை சமர்பித்து தேடும் வசதி இல்லை.

ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் என்றெல்லாம் படங்கள் தோன்றாமல் அளவான எண்ணிக்கையில் தான் படங்கள் வந்து நிற்கின்றன. இந்த வரம்பே சில நேரங்களில் வசதியாக இருக்கலாம். பட்டியலில் உள்ள படங்களை மூலப்பக்கத்திற்கு செல்வது மற்றும் அவற்றின் முழு அளவை பார்க்கும் வசதி இருக்கிறது.

உருவம் சார்ந்த தேடலில் கொஞ்சம் பழைய தேடியந்திரம். கனடாவில் உள்ள ஓட்டாவா பல்கலையில் உண்டாக்கப்பட்ட தேடல் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழமான தேடியந்திரம் என்று சொல்ல முடியாது ஆனால் அதனளவில் உருவப்பட தேடலுக்கு பயனுள்ளது.

தேடியந்திர முகவரி:http://www.incogna.com/

இந்த பட்டியலில் இடம்பெறக்கூடிய வேறு நல்ல புகைப்பட தேடியந்திரங்கள் ஏதேனும் உண்டா என்றும் பரிந்துரைக்கலாம்.

ஒளிபடங்களின் மறுபக்கம்

Volte-face-03தளம் புதிது; ஒளிபடங்களின் மறுபக்கம்

அழியா காதல் நினைவுச்சின்னமான தாஜ்மகாலை ஒளிப்படங்களில் நீங்களை எத்தனை கோணங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் நிச்சயம், பிரபல ஒளிப்பட கலைஞரான ஆலிவர் கர்ட்டீஸ் எடுத்த கோணத்தில் நீங்கள் தாஜ்மஹாலை பார்த்திருக்க முடியாது.

தாஜ்மஹால் என்றில்லை, உலகின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் பலவற்றையும் அவர் படமெடுத்துள்ள கோணத்தில் பலரும் பார்த்திருக்கவே வாய்ப்பில்லை. சந்தேகம் எனில் அவரது இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். ஆலிவர் கர்ட்டீஸ் போட்டோகிராபி எனும் அந்த தளத்தில் , வோல்டே பேஸ் எனும் பகுதியில், அவர் மாறுபட்ட கோணத்தில் எடுத்துள்ள நினைவுச்சின்னங்களின் படங்களை பார்க்கலாம்.

ஆனால்,ஒன்று இந்த படங்களில் எல்லாம் நினைவுச்சின்னங்களை பார்க்க முடியாது. அவற்றில் எடுப்பட்ட காட்சியை மட்டும் தான் பார்க்க முடியும். ஏனெனில் கர்ட்டீஸ் இந்த படங்களை எல்லாம் நினைவுச்சின்னங்களின் மறுப்பக்கங்களில் இருந்து எடுத்திருக்கிறார். அதாவது எல்லா நினைவுச்சின்னங்களிலும் படம் எடுப்பவர்கள் , அந்த நினைவு சின்னங்களை பார்த்து தானே காமிராவை நோக்க வைத்து கிளிக் செய்வார்கள். கர்ட்டீஸ் இந்த வழக்கத்திற்கு மாறாக, இப்படி கிளிக் செய்யப்படும் திசைக்கு நேர் திசைக்குச்சென்று அங்கிருந்து காட்சிகளை படம் பிடிக்கிறார்.

ஒருமுறை எகிப்தில் பிரமிடுகளை படம் எடுத்துக்கொண்டிருந்த போது, அதன் எதிர் திசையில் அதுவரை பார்த்தறியாத அழகு மறைந்திருப்பதை பார்த்து அசந்துவிட்டாராம். அப்போது தான் கர்ட்டீசுக்கு நினைவுச்சின்னங்களை வழக்கத்திற்கு மாறான கோணத்தில் படமெடுக்கும் யோசனை உதித்தது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் உலக நாடுகளுக்கு பயணம் செய்து, பல நினைவுச்சிட்டங்களை இப்படி படமெடுத்து பதிவு செய்திருக்கிறார்.

தாஜ்மஹால் இல்லாத தாஜ்மஹால் காட்சியும், சுதந்திர தேவி சிலை தெரியாத சுந்திரதேவி காட்சியும் எத்தகைய அனுபவத்தை தருகிறது என அறிய அவரது தளத்திற்கு சென்று பார்க்கவும்.

கர்ட்டீஸ் இணையதளம்: http://www.olivercurtisphotography.co.uk/index.htmlசெயலி புதிது: ஐபோனின் முகப்பு பக்கங்கள்

ஐபோனுக்கான அருமையான செயலியாக ஹோம்ஸ்கிரீன்.மீ செயலி அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்ப இந்த செயலி ஐபோன் பயனாளிகள் தங்கள் போனின் முகப்பு பக்கமான ஹோம்ஸ்கிரீனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.

ஹோம்ஸ்கிரீன் பயனாளிகள் இந்த செயலியின் மூலம் சக பயனாளிகளின் ஐபோன் முகப்பு பக்கங்களையும் பார்க்கலாம். இப்படி முகப்பு பக்கங்களை நோக்குவதன் மூலம் பொதுவாக மற்றவர்கள் பயன்படுத்தும் செயலிகளையும் அறிந்து கொள்ளலாம். புதிய செயலிகள் மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளை அறிந்து கொள்ளவும் இது சுவாரஸ்யமான வழியாக அமைகிறது. வால்பேப்பர் தோற்றங்களயும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

நண்பர்கள் மற்றும் பயனாளிகள் பகிரும் முகப்பு பக்கங்கள் தவிர , தேர்ந்தெடுக்கப்பட்ட முகப்பு பக்கங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளம் வாயிலாக ஐபோன் முகப்பு பக்கத்தை வெளியிட்டு அந்த இணைப்பை டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள உதவிய இந்த சேவை இப்போது ஐபோன் பயனாளிகளுக்கான முழுவீச்சிலான செயலியாக அறிமுகமாகி இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: http://homescreen.me/

——-
ஆங்கிலம் அறிவோம் வாருங்கள்!

ஆங்கில மொழி தொடர்பான சொல் வங்கியை கொஞ்சம் மேம்படுத்திக்கொள்ள விரும்பினால் புருப்ரீடிங் சர்வீசஸ் உருவாக்கியுள்ள இன்போகிராபிக்கை புக்மார்க் செய்து கொள்வது நல்லது. நீங்கள் விரும்பினால் இந்த வரைபட சித்திரப்பக்கத்தை அப்படியே அச்சிட்டும் வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு எப்போதெல்லாம் ’மிகவும்’ எனும் வார்த்தையை ஆங்கிலத்தில் பயன்படுத்த தோன்றுகிறதே அப்போது இதில் உள்ள பட்டியலை பார்த்து பொருத்தமான மாற்று வார்த்தையை தெரிந்து கொண்டு கச்சிதமாக பயன்படுத்தலாம்.

ஆன், மிகவும் எனும் பொருள் படும் வெரி எனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்த வேண்டிய இடங்களில் கையாளக்கூடிய அதைவிட பொருத்தமான சொற்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆங்கிலத்தில் மிகச்சரியாக ( very accurate) என்று சொல்வதற்கு பதிலாக துல்லியமாக ( exact) என சொல்லலாம். மிகவும் அச்சம் ( very afraid) என்பதற்காக பயத்துடன் (fearfull ) என சொல்லலாம். மிகவும் அலுப்பாக ( very boring) என்பதற்கு பதில் மந்தமாக ( dull) என்று சொல்லலாம். இப்படி மிகவும் என்ற சொல்லுடன் பயன்படுத்தக்கூடிய 128 வார்த்தைகளுக்கு அதே பொருளை அதைவிட சிறப்பாக வழங்க கூடிய அருமையான ஒற்றை சொற்களின் பட்டியலாக இந்த வரைபட சித்திரம் அமைந்திருக்கிறது.

ஆங்கில மொழிக்காக உருவாக்கப்பட்டுள்ள பட்டியல் என்றாலும், பொதுவில் எந்த மொழியிலும் எழுதும் போதும் அல்லது பேசும்போதும் பின்பற்றக்கூடிய அடிப்படை வழி தான் இது.

வரைபட சித்திரம் பார்க்க:http://cdn.makeuseof.com/wp-content/uploads/2016/06/128_Words_to_Use_Instead_of_Very_V21-FINAL_576KB.jpg?a1f8a9
———-

ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அடிமையா?
smartv
தனிமையில் இருக்கும் போது ஸ்மார்ட்போனை தொடாமல் உங்களால் எத்தனை நேரம் இருக்க முடியும்? இதற்கான பதில் நொடிகளில் இருந்தால் உங்கள் யூகம் சரியென வைத்துக்கொள்ளலாம். நிமிடங்கள் எனில் நீங்களும் கூட உங்கள் ஸ்மார்ட்போன் பழக்கம் பற்றி சரியாக அறிந்திருக்கவில்லை என முடிவுக்கு வர வேண்டும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வு இந்த எண்ணத்தை தான் ஏற்படுத்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை நிறுவனமான காஸ்பெர்ஸ்கி லேப் சார்பில் வர்ஸ்பர்க் மற்றும் நாட்டிங்கம் டிரெண்ட் பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வை நடத்தின.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் 44 நொடிகள் கூட தங்கள் போனில் கைவைக்காமல் இருக்க முடியவில்லை. பெண்களைப்பொருத்தவரை 57 நொடிகள் வரை போனை தொடாமல் இருக்க முடிந்திருக்கிறது. ஆண்களோ 21 நொடிகள் மட்டுமே போன் பக்கம் கையை கொண்டு செல்ல முடியாமல் இருந்திருக்கின்றனர்.

ஆனால், உங்கள் எத்தனை நேரம் போனை தொடாமல் இருக்க முடியும் என கேட்கப்பட்டதற்கு பலரும் 2 முதல் 3 நிமிடங்கள் என பதில அளித்துள்ளனர். புதிய செய்திகள் மற்றும் தகவல்களை தவறவிட்டு விடுவோம் என்ற பதற்றம் காரணமாக அடிக்கடி போனை எடுத்து பார்க்கும் வழக்கம் பலருக்கு இருப்பதாக கருதப்படுகிறது.

தகவல் திங்கள்: ஒரு புகைப்படத்தின் கதை

Bliss
அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற மனிதர்கள் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த படத்தின் அருமையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் எனத்தெரியவில்லை. உங்களைப்பற்றி தெரியவில்லை; ஆனால் நான் நிச்சயம் உணரவில்லை. அந்த படத்தின் சிறப்பை தற்செயலாக படித்த போது, அடாடா இந்த படத்தின் பின் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? என வியந்து போனேன். அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

அந்த ஒளிபடம் கம்ப்யூட்டர் திரையில் ஸ்கிரீன்சேவர் சித்திரமாக நாம் பார்த்துப்பழகிய காட்சி தான். பச்சை புல் வெளி பரந்து விரிந்திருக்க அதன் விளிம்பில் நீல வான மேகங்கள் திரண்டிருக்கும் காட்சி தான் அது. இப்போது, அட ஆமாம் எனும் ஆமோதிப்புடன் உங்கள் மனத்திரையிலும் அந்த ஒளிபடம் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கலாம். பல இடங்களில் வால்பேப்பராக பார்த்து பழகிய ஸ்கிரீன்சேவவர் தான் என்றாலும் அது பத்தோடு பதினொன்னு ரக வால்பேப்பர் அல்ல;

உலகில் எந்த மூளைக்குச்சென்றாலும் அங்குள்ள கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பார்க்க கூடிய வால்பேப்பர் அது. மைக்ரோசாப்டின் எக்ஸ்பி இயங்குதள வடிவின் தானாக தோன்றும் வால்பேப்பராக அமைக்கப்பட்ட காரணமாக அந்த வால்பேப்பர் எங்கெலும் விண்டோஸ் கம்ப்யூட்டர்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதனால் தான் அந்த படம் உலகில் அதிகம் பார்க்கப்பட ஒளிபடம் எனும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆம், ஒரு கணக்குபடி அந்த படம் 100 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சும்மாயில்லை புகழ் பெற்ற மோனோலிசா ஓவியத்திற்கு அடுத்தபடியாக இப்படி உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கப்பட்ட படமாக இது இருக்கிறது.

ஆனால் வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல இதன் பலம். இந்த படத்தின் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அது மட்டும் அல்ல அந்த படமே ஒரு அர்த்தம் நிறைந்த ஓவியமாக இருக்கிறது. கவித்துவமாக அதை ஒரு காமிரா காவியம் என்று கூறலாம். அதனால் தான் அதை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.
முதலில் அந்த படம் மைக்ரோசாப்ட் வசம் வந்த கதையை பார்க்கலாம்.

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பி இயங்குதள வடிவத்தை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாக புதிய இயங்கு தளத்தின் தானாக தோன்றும் பின்னணி காட்சியாக அமைப்பதற்கான ஒரு ஒளிபடம் மைக்ரோசாப்ட் பொறியாளர்களுக்கு தேவைப்பட்டது. அவர்கள் வலைவீசி கோர்பிஸ் ஒளிபட நிறுவனத்திடம் இருந்து ஒரு படத்தை தேர்வு செய்தனர். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கோர்பிஸ் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சுக்கு சொந்தமான நிறுவனமாகும். எனவே அவர்கள் மற்றொரு ஒளிபட சேவை நிறுவனமான கெட்டி இமேஜசிடம் செல்லவில்லை.

கோர்பிஸ் கோப்புகளில் இருந்து அவர்கள் தேர்வு செய்த படம் தான் சார்லஸ் ஓ’ரியர் எனும் ஒளிபட கலைஞர் எடுத்த புல்வெளி படர்ந்த மலைச்சரிவும், நீல வானமும் சங்கமிக்கும் காட்சி. புகழ் பெற்ற நேஷனல் ஜியாகிராபிக் இதழின் முன்னாள் ஒளிபட கலைஞரான ஓ’ரியர், 1996 ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோரினியா மாகாணத்தில் தனது காதலியை பார்க்கச்சென்ற போது அந்த படத்தை எடுத்திருந்தார். அவரது காதலி ( அவரும் முன்னாள் தான்) ஓயின் தோட்டம் பற்றிய புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான படம் எடுக்க வந்த ஓ’ரியர் வேலையை முடித்து திரும்பிச்செல்லும் வழியில், நேபா பள்ளத்தாக்கில் வழக்கமான திராட்சை கொடிகளுக்கு பதிலாக பச்சை பசேலென புல்வெளியாக காட்சி அளித்த மலைப்பகுதியை பார்த்து மனதை பறி கொடுத்து அந்த காட்சியை கிளிக் செய்தார். சூரிய ஒளி மின்ன, பின்னணியில் மேக கூட்டம் தவழ புல்வெளி படர்ந்த தாழ்வான மலைப்பகுதி காமிராவில் அழகிய காட்சியாக பதிவானது.

இந்த படத்தை பயன்படுத்த விரும்பிய மைக்ரோசாப்ட் அதிக விலை கொடுத்து வாங்க தீர்மானித்தது. அந்த படத்தை பயன்படுத்தும் உரிமையை மட்டும் வாங்காமல் அந்த படத்திற்கான மொத்த உரிமத்தையும் வாங்க தீர்மானித்தது. இதற்காக பெரும் தொகை கொடுக்கப்பட்டது. தொகையின் அளவு ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட்டாலும், ஒரு ஒளிபடத்திற்கு அளிக்கப்பட்ட இரண்டாவது பெரிய தொகை என்றும் மட்டும் ஒ’ரியர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Charles_O'Rear
இதன் காரணமாகவே கூரியர் நிறுவனம் அந்த படத்தை கொண்டு சேர்க்கும் பொறுப்பில் இருந்து பின் வாங்கி கொண்டதால், ஒ’ரியரே விமானத்தில் நேரில் சென்று படத்தை மைக்ரோசாப்டிடம் ஒப்படைத்திருக்கிறார்.
அப்போது அந்த படம் எதற்காக பயன்படுத்தப்பட போகிறது எனும் விவரம் அவருக்கு தெரியாது. எக்ஸ்.பி வெளியான பின்னர் தான் அதன் பின்னணிக்காட்சியாக அலங்கரித்த விஷயம் தெரிய வந்தது. மைக்ரோசாப்ட் அந்த படத்திற்கு பிளிஸ் அதாவது ஏகாந்தம் என்றும் பெயர் சூட்டியிருந்தது.

அதன் பிறகு எங்கு பார்த்தாலும் அந்த படத்தை பார்க்க முடிந்தது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்லின் என எல்லா இடங்களிலும் அந்த படத்தை பார்க்க முடிந்திருக்கிறது. உலகின் பார்வையில் இருந்து விலகி இருக்கும் வட கொரியா சென்றால் கூட கம்ப்யூட்டரில் அந்த படத்தை பார்க்க முடிந்தது என ஓ’’ரியரே வியந்து போய் கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது 15 வயதில் இருக்கும் எவருக்கும் வாழ்நாள் முழுவதும் இந்த படம் நினைவில் இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்திருந்தாலும் இந்த ஒரு படத்திற்காக தான் அறியப்படுவேன் என்றும் ஓ’ரியர் கூறியிருக்கிறார்.
இந்த படத்தை அவர் புகைப்பட சுருளில் எடுத்தார். அதன் தனித்தன்மைக்கு இதுவும் ஒரு காரணம்.
எல்லாம் சரி, இந்த படம் ஏன் இத்தனை கோடி பேரை கவர்ந்திருக்கிறது. மைக்ரோசாப்டின் திணிப்பு தான் காரணமா? நிச்சயம் இல்லை.பெயருக்கு ஏற்ப அந்த படத்தில் ஏகாந்தமான ஒன்று இருக்கிறது. ஒளிபட கலைஞர் ஒருவர் இது பற்றி அழகாக விளக்கியிருக்கிறார். “சிலர் இந்த படம் வெறுமையாக ,சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக கருதலாம். ஆனால் அழகிய பரப்பில் பளிச்சென மின்னும் பொழுதே ஈர்க்கிறது என பலரும் கருதலாம். மலைச்சரிவில் ஊடுருவும் சூரிய ஒளி கனவு போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அதுவே இந்த பட்த்தை தனித்து காட்டுகிறது” என்கிறார் டேவிட் கிளார்க் எனும் அந்த கலைஞர். இந்த படம் பார்க்க உறுத்தாமல் சுலபமானதாக இருப்பதால் மைக்ரோசார்ப் இதை தேர்வு செய்திருக்கலாம் என்கிறார் அவர். அதே நேரத்தில் டெஸ்க்டாப்பில் உள்ள எதற்கும் இடையூறு இல்லாமல் அமைந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார்.
எது எப்படியோ, இணைய யுகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இது இருக்கிறது.

நடுவே சில காலம் இந்த ஒளிபடம் எங்கே எடுக்கப்பட்டது எனத்தெரியாமல் குழப்பமாக இருந்திருக்கிறது. பல யூகங்களும் வெளியாகி இருக்கின்றன. ஆனால் சில ஆண்டுகள் கழித்து இதன் பின்னணி பற்றிய விவரங்கள் வெளியாகின.

இப்போது குழப்பமே இல்லை. இந்த ஒளிபடத்திற்கு என தனியே ஒரு விக்கிபீடியா பக்கம் இருக்கிறது. இந்த படம் தொடர்பாக ஒரு ஆவணப்பட வீடியோவும் இருக்கிறது. இந்த இடத்தை கூகுள் ஸ்டிரீட் வீயூவிலும் பார்க்கலாம். அது மட்டும் அல்ல, மேலும் பல ஒளிபட கலைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று அதே படத்தை எடுக்க முயன்றிருக்கின்றனர். அந்த இடமே மாறிப்போய்விட்டாலும் கூட பலரும் சளைக்காமல் அங்கு படம் எடுத்து மூல காட்சியை மறு உருவாக்கம் செய்ய முயன்றிருக்கின்றனர். ஆனால் மூலப்படத்திற்கு நிகரான காட்சி யாருக்குமே கிடைக்கவில்லை!

பிளிஸ் ஒளி படத்திற்கான விக்கிபீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Bliss_(image)

இன்ஸ்டாகிராமில் உயிர்பெறும் தீப்பெட்டி கலைகள்

Untitledகையிலே கலைவண்ணம் என்பது போல,பெட்டியில் கைவண்ணம் என்கிறார் ஸ்ரேயா கத்தூரி.அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ஆர்ட் ஆன் எ பாக்ஸ்-க்கு (https://www.instagram.com/artonabox/ ) சென்றால் இதன் அர்த்ததை பளிச்சென புரிந்து கொள்ளலாம்.அப்படியே தீப்பெட்டிகளின் அழகிலும் மெய்மறந்து நிற்கலாம்.ஆம், ஸ்ரேயா தீப்பெட்டிகளின் மேலே உள்ள படங்களை ஆர்வத்துடன் சேகரித்து வருபவர்.இப்படி தான் சேகரிக்கும் தீப்பெட்டி படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அடடா! தீப்பெட்டிகளின் மீது இடம்பெறும் படங்கள் தான் எத்தனை அழகாக இருக்கின்றன. அவற்றின் வகைகள் தான் எத்தனை! இந்த வியப்பை தான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் உண்டாக்குகிறது.

தீப்பெட்டிகளை சாதாரணமாக நினைத்துவிட முடியாது என்கிறார் ஸ்ரேயா. அவை பலவற்றை வெளிப்படுத்துவதாகவும்,அவற்றை வெறும் பெட்டிகளாக பார்க்கத்தயாராக இல்லை என்றும் ஒரு பேட்டியில் உற்சாகமாக கூறியிருக்கிறார். தீப்பெட்டிகள் பிரச்சார சாதனமாக ,விளம்பர வாகனமாக பயன்படலாம் என்கிறார்.
தீப்பெட்டி மேலே இருக்கும் ஒவ்வொரு படமும் மேலும் ஆழமான ஒன்றை,கனவின் கதைகளை,தினசரி பொருட்களின் கதைகளை ,சமூகத்தின் மனப்போக்கை பேசுவதாக அவர் சொல்கிறார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி கொண்டிருக்கும் தீப்பெட்டி படங்களை ஒரு முறை வலம் வந்தால் இதே கருத்தை அவை ஒவ்வொன்றும் வலியுறுத்துவதை புரிந்து கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் வெளியாகும் தீப்பெட்டிகளில் உள்ள படங்கள் பெரும்பாலும் கடவுளின் உருவங்களை கொண்டிருக்கின்றன என்றாலும் பலவகையான படங்களையும் அலங்கரிக்கின்றன.

குடியரசு தின வாழ்த்துடன், இந்திய தேசியக்கொடி படம் கொண்ட தீப்பெட்டி சித்திரம் மற்றும் ராஜஸ்தான் சுற்றுலாத்துறை விளம்பரம் தொடர்பான குறிப்புடன் ராஜஸ்தான் அரண்மனை பட தீப்பெட்டி சித்திரத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளதை பார்க்கும் போது தீப்பெட்டி கலை என்பது எத்தனை பரந்துவிரிந்தது என்பது மட்டும் அல்ல நம் நாட்டின் இயல்பை அவை எப்படி பிரதிபலிக்கின்றன என்பதையும் உணர முடிகிறது.

ஸ்ரேயாவின் ஆர்வத்தை அறிந்து அவரது உறவுனர்களும் நண்பர்களும் எங்கே சென்றாலும் தீப்பெட்டிகளை சேகரித்து வந்து தருகின்றனராம். அதோடு இண்டாகிராம் பக்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்களும் அவருடன் தீப்பெட்டி கலையை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

எல்லாம் சரி, ஸ்ரேயாவுக்கு எப்படி தீப்பெட்டி கலை மீது ஆர்வம் வந்தது? சில ஆண்டுகளுக்கு முன் இதழியல் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டியிருந்த போது , தீப்பெட்டி படங்கள் உணர்த்தும் செய்தி எனும் தலைப்பை தேர்வு செய்திருக்கிறார். அப்போது துவங்கிய தீப்பெட்டி சேகரிப்பு இப்போது இன்ஸ்டாகிராமில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

——-


வீடியோ புதிது;நேர்க்காணல் வழிகாட்டி

வேலைவாய்ப்புக்கான நேர்க்காணலின் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என பெரிய பட்டியலே இருக்கிறது. இவற்றில் சிலவற்றை நீங்களும் கூட அறிந்திருக்கலாம். இந்த பட்டியலில் கைகளுக்கான பிரதேயக குறிப்புகள் இருப்பது தெரியுமா? அதாவது நேர்க்காணலின் போது கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் எப்படி எல்லாம் வைத்திருக்க கூடாது என்பதற்கு தெளிவான விதிகள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு மேஜை மீது கைகளை தாளமிட்ட படி இருப்பதையும், உள்ளங்கை மறைந்திருக்கும் நிலையில் வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். முன்னது பதற்றத்தின் வெளிப்பாடாக அமையும் என்றால் இரண்டாவது சைகை ஒருவர் எதையோ மறைப்பதாக நினைக்க வைக்கும். அதே போல கைகளை கட்டியபடியும் இருக்க கூடாது. உள்ளங்கையை வெளிப்புறமாக வைத்திருக்கலாம். இது நம்பகத்தன்மையை உணர்த்தும். கைகளை கூப்புவது போல ஒன்றாகவும் வைத்திருக்கலாம்.
கிரேசி குட் இண்டர்வியூவிங் எனும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த குறிப்புகளை அருமையான வீடியோவாக பிஸ்னஸ் இன்சைடர் தளம் உருவாக்கியுள்ளது: https://www.youtube.com/watch?v=uAHb6uzDVrU

———–
comments-section-640x440
டிராப் பாக்ஸ் ரகசியம்

கோப்பு பகிர்வு சேவையான டிராப் பாக்சில் கோப்புகளை அனுப்பி பெறுவதை தவிர பல துணை அம்சங்களும் கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று, இணையத்தில் டிராப் பாக்ஸ் மூலம் பகிரும் கோப்புகள் மீதான கருத்தறியும் வசதி. உங்கள் கோப்பின் வலது பக்க பட்டையில் பார்த்தால், பகிர்க பட்டன் கீழ்யே ,பின்னூட்டம் எனும் பகுதியை பார்க்கலாம். இதன் மூலம் கோப்பு தொடர்பான கருத்துக்களை பகிரலாம். கருத்தறிய விரும்பும் நபரை பற்றிய விவரத்தை @ எனும் குறியீட்டுடன் குறிப்பிட்டால் அது தொடர்பான தகவல் அருக்கு தெரிவிக்கப்பட்டு கருத்து கோரப்படும். இதற்கு அந்த நபர் டிராப் பாக்ஸ் பயனாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.