Tag Archives: music

ஒலிகளுக்கான இணையதளம்

62315-1449198650138ஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கிறது. இசை கோப்புகளும் இதில் அடங்கும். ஆடியோ பிரியர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதில் உள்ள ஒலிகளை தேடிப்பார்க்கலாம். கோப்புகளின் வகை, நீளம் என பலவித அம்சங்களை சுட்டிக்காட்டி தேடலாம். மனநிலைக்கேற்பவும் தேடலாம்.

ஆனால் இந்த ஒலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றுவிதமான கட்டண திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் ஒலிக்குறிப்புகளை கேட்டுப்பார்க்க எந்த தடையும் இல்லை. தொழில்முறையிலான ஒலி க்கோப்புகளை நாடுபவர்களுக்கு இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இதில் புதிய ஒலி கோப்புகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. சந்ததாரர்கள் தங்களுக்கான பிளேலிஸ்ட்டையும் உருவாக்கி கொள்ளும் வசதி இருக்கிறது.

இணையதள முகவரி: http://www.audiohero.com/index.html

 

தகவல் புதிது; இபேவில் தேடல் வசதி

இணைய ஏலத்திற்கான முன்னணி இணையதளமான இபே தனது செயலியில் ஒளிபடம் மூலமான தேடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இபே செயலியில், காமிரா பட்டனை அழுத்தி, ஒளிப்பட தேடல் வாய்ப்பை தேர்வு செய்வதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். அதன் பிறகு காமிராவில் படம் எடுத்து அதே போன்ற பொருள் இபே தளத்தில் விற்பனைக்கு இருக்கிறதா என தேடலாம். இபே கேலரியில் உள்ள படங்களையும் இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு செயலியில் இருந்து, இந்த தேடலை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். மிகவும் துல்லியமான வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும் பயனுள்ள வசதி எனும் வகையில் இது அமைந்திருப்பதாக பயனாளிகள் கருதுகின்றனர். ஒளிபடம் சார்ந்த தேடல் கைகொடுக்கும் என நினைக்கும் நேரங்களில் இதை முயன்று பார்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://anywhere.ebay.com/mobile/iphone/ebay/

 

வீடியோ புதிது; எளிய காமிரா நுணுக்கங்கள்

நேர்த்தியான ஒளிப்படங்களை எடுக்க லென்ஸ், வெளிச்சம் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். விலை உயர்ந்த லென்ஸ் மற்றும் உயர்தர விளக்குகள் இல்லாவிட்டாலும் கூட கையில் உள்ள பொருட்களை கொண்டே தேவையான ஸ்பெஷல் எபெக்ட்களை உருவாக்கி கொள்ளலாம். இந்த வகையில் வெறும் அட்டைப்பெட்டிகளை மட்டும் வைத்துக்கொண்டு சிறப்பு காட்சி அமைப்புகளை உருவாக்கி கொள்வதற்கான வழிகளை விளக்குகிறது கூப் யூடியூப் சேனல். வீட்டிலேயே செய்யக்கூடிய எட்டு நுட்பங்களை வீடியோ மூலம் இந்த சேனல் விளக்குகிறது. ஒளிப்படக்கலை தொடர்பாக வேறு பல விளக்க வீடியோக்களும் இருக்கின்றன.

வீடியோவை காண:  https://www.youtube.com/watch?v=Iky3DghsFGc

 

 

இசையால் உலகை இணைத்த ஸ்முல் செயலியின் பூர்வ கதை!

http-mashable.comwp-contentuploads201208Singஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றாலும், இது ஸ்முலுக்கான சரியான அறிமுகம் இல்லை- முழமையான அறிமுகமும் இல்லை. இசைப்பிரியர்களுக்காக ஸ்முல் உருவாக்கி வரும் பரந்து விரிந்த இசைப்பரப்பில் கரோக்கி செயலி ஒரு அங்கம் அவ்வளவு தான். மற்றபடி ஸ்முலில் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

ஸ்முல் நிறுவனத்திற்கான விக்கிபீடியா பக்கம் சமூக இசை செயலிகளை உருவாக்குவதில் விஷேச கவனம் செலுத்தி வரும் அமெரிக்க நிறுவனம் என்றே ஸ்முலை குறிப்பிடுகிறது. இசை மூலம் உலகை இணைக்கும் முயற்சியாக ஸ்முல் இணையதளத்தின் அறிமுக வாசகம் தெரிவிக்கிறது.

ஆம், ஸ்முல் சாதாரண இசை சார்ந்த செயலி அல்ல; இசை மூலம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் இணைக்க உதவும் சமூக வலைப்பின்னலாக அது உருவாகி வலுப்பெற்று வருகிறது. அதனால் தான், போர்ப்ஸ் பத்திரிகை கட்டுரை, சந்தேகத்திற்கு இடமில்லாமல் உலகின் சக்தி வாய்ந்த சமூக ஊடகங்களில் ஒன்றாக ஸ்முல் உருவாகி இருப்பதாக குறிப்பிடுகிறது. சும்மாயில்லை, உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேர் இதன் சேவையில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

’’இசை என்பது கேட்டு ரசிப்பதற்கானது மட்டும் அல்ல, என ஸ்முல் நிறுவனம் கருதுகிறது. இசை என்பது உருவாக்குவது, பகிர்வது, கண்டறிவது, பங்கேற்பது மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது என்று ஸ்முல் நம்புகிறது’ என மற்றொரு கட்டுரை ஸ்முலை வர்ணிக்கிறது.

’உங்களை இசைமயமாக்கும் இயந்திரம்’ என இன்னொரு பத்திரிகை கட்டுரை வர்ணிக்கிறது. ஸ்முல் சேவையில் மூழ்கி திளைத்திருக்கும் இசை பிரியர்களுக்கு இந்த வர்ணனை ஜாலம் எல்லாம் தேவையே இல்லை. ஏனெனில் இவற்றை எல்லாம் நடைமுறையில் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் தான் ஸ்முலின் அபிமானிகளாக இருக்கின்றனர்.

யூடியூப்பை போல ஸ்முல் இசையை ஜனநாயகமயமாக்கி இருப்பதாக பாராட்டப்படுகிறது. ரசிகர்கள் வெற்று தாளம் போட்டி, கைத்தட்டி இசையை கேட்டு மகிழந்தவர்களாக இருந்த காலம் மாறி, அவர்களும் இசையை உருவாக்கி, தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு, இசைமயமான உரையாடலையும், நட்பையும் வளர்த்துக்கொள்ள ஸ்முல் தனது செயலிகள் வாயிலாக வழி செய்திருப்பதாக கருதப்படுகிறது. இன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், ஸ்முலை இசைப்பிரியர்களுக்கான பேஸ்புக் எனலாம். அல்லது இசைக்கான இன்ஸ்டாகிராம் என புரிந்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் எப்படி சாதாரண மக்கள் கூட புகைப்படங்களை எடுத்து அவற்றை பில்டர்கள் மூலம் மெருகேற்றி மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனரோ அதே போல ஸ்மூல் செயலிகள் மூலம் சாதாரண ரசிகர்கள் இசையை உருவாக்கி பகிர்ந்து கொண்டு நட்பு வளர்த்துக்கொள்கின்றனர்.

இந்த வகை ஸ்முல் செயலிகளில் ’சிங்! கரோக்கி’ மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. இப்போது செய்திகளிலும் அடிபடத்துவங்கியிருக்கும் இந்த செயலி கரோக்கி முறையில் பாட வழி செய்கிறது. ஒரு பாடலின் பின்னணி இசை மட்டும் ஒலிக்க, அதில் பாடியவர் குரலுக்கு பதிலாக ரசிகர்கள் தங்கள் குரலில் பாடிக்கொள்ளும் வசதியே கரோக்கி என குறிப்பிடப்படுகிறது. ஜப்பானில் கரோக்கி இசை மிகவும் பிரபலம். அங்கு கரோக்கி பாட உதவும் பார்கள் எல்லாம் இருக்கிறது. நமக்காக ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று இசை அமைக்க நடுவே நாம் மைக் பிடித்து பாட முடிந்தால் எப்படி இருக்கும்! இந்த அனந்த அனுபவத்தை தான் கரோக்கி இசை வழங்குகிறது.

இணையத்தில் இதை சாத்தியமாக்கும் இணையதளங்களும், செயலிகளும் அநேகம் இருக்கின்றன. இந்த இடத்தில் ஸ்முல் செயலி வருகிறது. ஸ்முலின் கரோக்கி செயலி, பிரபலமான மெட்டுகளுக்கு ரசிகர்கள் பாட வழி செய்வதோடு, அந்த ஒலிப்பதிவை பலவிதங்களில் பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த பகிர்வுகள் விதவிதமான உரையாடலாகவும் மலந்து நட்பு வலை விரியச்செய்கிறது.

இவையே ஸ்முலை இசை சமூக ஊடகம் என சொல்ல வைக்கிறது. ஸ்முலின் இந்த தன்மையை புரிந்து கொள்ள அதன் பூர்வ கதையையும், முக்கியமாக அதன் நிறுவனர்களாக இசை பிரம்மாக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு கரோக்கி ஸ்முலின் முதல் செயலி அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

2008 ல், ஸ்முல் ஒரு இசை ஸ்டார்ட் அப் நிறுவனமாக அமெரிக்காவில் உருவானது. ஆப்பிளின் ஐபோன் அறிமுகமான அடுத்த ஆண்டில் தான் ஸ்முல் அறிமுகமான ஆண்டு என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் ஸ்முல் உருவானதில் ஐபோனுக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஐபோன் இல்லாமல் ஸ்முல் இல்லை. அதோடு புதுயுக போனாக ஐபோன் பிரபலமாகி பெரும் வரவேற்பை பெறுவதற்கு காரணமாக அமைந்த ஆரம்ப கால அருமையான செயலிகளில் ஸ்மூலும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

27smule2-popupஅமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜி வாங் என்பவரும், அவரது மாணவருமான ஜெப் ஸ்மித் என்பவரும் இணைந்து தான் ஸ்முல் நிறுவனத்தை துவக்கினர். வாங்கை இசை திறனும், தொழில்நுட்ப அறிவும் இணைந்த கில்லாடி என்று தான் சொல்ல வேண்டும். இசையையும், தொழில்நுட்பத்தையும் இணைந்து பல ஜாலங்களை செய்யலாம் என்று அறிந்திருந்த வாங், இசை சார்ந்த புரோகிராம்களை உருவாக்குவதற்காக என்றே சங்க் எனும் கம்ப்யூட்டர் மொழியையும் உருவாக்கி இருந்தார். அதோடு லேப்டால் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆக்சலரேட்டர் எனும் கருவியை கொண்டு ஒலிக்குறிப்புகளை உண்டாக்கும் லேப்டாப் ஆர்க்கெஸ்ட்ராவையும் உருவாக்கி இருந்தார்.

ஒருமுறை வாங் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அங்கு பிஎச்டி மாணவராக இருந்த ஜெப் ஸ்மித், அதைக்கேட்டு அசந்து போய்விட்டார். அந்த தாக்கத்தோடு, வாங் எண்ணங்களை வர்த்தக நோக்கிலான செயலி மூலம் மக்களிடம் கொண்டு செல்லலாம் என்று கூறினார். இதன் பயனாக வாங்கை இணை நிறுவனராகவும், ஸ்மித் சி.இ.ஓ. வாகவும் கொண்டு ஸ்முல் நிறுவனம் துவங்கியது. இசை உருவாக்கத்தை மையமாக கொண்ட புதுமையான சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக்க வேண்டும் என்பது தான் ஸ்மித்தின் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை கூறி நிறுவனத்திற்கான முதல் கட்ட நிதியையும் எப்படியோ திரட்டி பணிகளையும் துவக்கிவிட்டார்.

அவர்கள் உருவாக்கிய முதல் செயலி நோக்கியா போனுக்காக இருந்தது. ஆனால் அதற்குள் ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது. ஒரு கையடக்க கம்ப்யூட்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஐபோன் அற்புதமாக இருக்கவே அதற்கேற்ற செயலியை வாங் மற்றும் ஸ்மித் உருவாக்கத்துவங்கினர். இப்படி அறிமுகமானது தான் சோனிக்லைட்டர் செயலி. இதற்குள் ஆப்பிள் நிறுவனமும் செயலிகளுக்கான ஐஸ்டோர் கடையையும் திறந்துவிடவே சோனிக்லைட்டர் அறிமுகமாகி அட்டகாசமான வரவேற்பை பெற்றது.

சோனிக்லைட்டரை விளையாட்டான செயலி என்று தான் சொல்ல வேண்டும். போனுக்குள் ஒரு லைட்டர் இருந்து அதை அப்படியே ஏற்றி ஜோதியாக ஒளிரச்செய்தால் எப்படி இருக்கும். போனில் லைட்டர் ஒளி எரிவது போன்ற தோற்றம் சுவாரஸ்யமாக இருந்தது என்றால், போனை பக்கவாட்டில் அசைதால் லைட்டர் ஒளியும் அதற்கேற்ப வளைந்து கொடுத்தது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அது மட்டும் அல்ல, இந்த லைட்டர் ஒளியை ஐபோன் திரை மீது ஊதி அணைக்கவும் செய்யலாம். அப்போது திரையில் இருந்து புகை வருவது போன்ற தோற்றமும் உண்டாகும். இந்த சாக்சங்களால் வியக்க வைத்த சோனிக்லைட்டர் செயலி லட்சக்கணக்கில் தரவிறக்கம் செய்யப்பட்டு பிரபலமானது. இந்த லைட்டர் தோற்றத்தை ஐபோன் பயனாளிகள் உலகின் எந்த மூளையில் உள்ள சக ஐபோன் பயனாளிகளுடனும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இந்த பகிர்வுத்தன்மையே சோனிக்லைட்டர் செயலியை மேலும் சுவாரஸ்யமாக்கி அதன் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது.

ஐபோன் அற்புதத்தை உணர்த்திய வெற்றிகரமான செயலிகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது. சோனிக்லைட்டரின் வெற்றியை அடுத்து மேலும் அசத்தலான ஆக்கரினா செயலியை ஸ்முல் அறிமுகம் செய்தது.  ( ஆக்கரினா என்பது ஒரு பழங்கால இசைக்கருவி)

ஆக்கரினா, ஐபோனையே ஒரு இசைக்கருவியாக மாற்றும் செயலியாக அமைந்தது. ஐபோனை வாயருகே வைத்துக்கொண்டு அதன் மீது ஊதினால், குழலில் இருந்து ஒலி வருவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டிருந்தது. அது மட்டும் அல்ல, திரையில் உள்ள நான்கு துளைகளின் மீது விரல்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தால் ஒலியின் தாள லயத்தை மாற்றலாம். கொஞ்சம் பழகிவிட்டால், இந்த இசை செயலியை இயக்குவதில் தேர்ச்சி பெற்று இனிமையான இசையை உருவாக்குவதும் கூட சாத்தியம் தான்.

ஆக்கரினா செயலி அறிமுகமான போது, ஐபோனை ஒரு இசைக்கருவியாக மாற்றும் தன்மைக்காக அமோக வரவேற்பை பெற்றது. கையில் இருக்கும் போனை இசைக்கருவியாக மாற்றுவதே ஒரு புதுமை தான். இன்று ஸ்மார்ட்போன் சார்ந்த கித்தார் உள்ளிட்ட இசைக்கருவி செயலிகளுக்கு எல்லாம் முன்னோடியாக அமைந்த ஆரம்ப கால ஐபோன் இசை செயலிகளில் ஆக்கரினாவும் ஒன்று. ஆனால் ஆக்கரினா செயலி மற்ற செயலிகள் போல முன் தீர்மானிக்கப்பட்ட ஒலிக்கோவைகளை வழங்காமல், பயனாளிகளின் ஊதும் போது வரும் காற்றின் போக்கிற்கு ஏற்ப தனித்தன்மை வாய்ந்த ஒலியை உருவாக்கி தரக்கூடியதாக இருந்தது. அந்த அளவுக்கு மைக்ரோபோனின் உணரும் தன்மையை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால், இசைப்பது என்பது இதன் ஒரு பகுதி தான். இந்த இசையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும் என்பது தான் ஆக்கரினாவின் இன்னொரு தனிச்சிறப்பாக அமைந்தது. ஆம், ஆக்கரினா பயனாளிகள் தங்களைப்போலவே மற்ற பயனாளிகள் உருவாக்கும் ஒலிக்கோவைகளை கேட்டு மகிழலாம். செயலியில் உள்ள பூமி உருண்டை பகுதியில், இப்போது உலகில் எந்த மூளையில் எல்லாம் பயனாளிகள் ஆக்கரினாவை இசைத்துக்கொண்டிருக்கின்றர் என்பதை பார்த்து, அங்கி கிளிக் செய்து கேட்டு மகிழலாம். அதே போல தாங்கள் உருவாக்கும் இசையையும் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் இசையை சேமித்தும் வைக்கலாம். இதற்கான பக்கத்தை ஆக்கரினா வலைமனையிலேயே உருவாக்கி கொள்ளலாம். இமெயில் மற்றும் பேஸ்புக் வாயிலாக நட்பு வட்டத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சமூகத்தன்மையே ஆக்கரினா செயலியை இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

உண்மையில், ஐபோனின் கையடக்க கணிணி ஆற்றல் மற்றும் இணையத்தின் வலைப்பின்னல் தன்மை இரண்டையும் அழகாக பயன்படுத்திக்கொண்ட இசை செயலியாக ஆக்கரினா அமைந்தது.

இந்த செயலியின் வெற்றிக்கு பிறகு ஸ்முல் மேலும் பல செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. எல்லாமே சமூக பகிர்வு தன்மையை கொண்டவை. இவற்றில் ஒன்று தான் கரோக்கி செயலி. கரோக்கி செயலியில் இளம் பாடகர்கள் மற்றும் இசை ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் குரலில் மெட்டுக்கு ஏற்ப பாடி பதிவு செய்து கொள்ளலாம். குரல் வளத்தை விட்டுத்தள்ளுங்கள், இசை சூழலில் தன்னை மறந்து பாடுவதே ஒரு பரசவமான அனுபவம் தான். இந்த அனுபவத்தை பெறுவதோடு, இப்படி பாடியதை பதிவு செய்து நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். ஸ்முல் பயனாளிகளோடும் பகிர்ந்து கொள்ளலாம். விரும்பினால் ஒரு பாடலை மற்றவர்களோடு சேர்ந்தும் பாடலாம். இது நல்ல இசை பயிற்சியாகவும் அமையும். யூடியூப்பில் போய் பார்த்தல் இப்படி இணைந்து பாடப்பட்ட பாடல்களின் வீடியோக்களை பார்க்கலாம். பாடும் திறனை மெருகேற்றிக்கொள்வதற்கான அம்சமும் இந்த செயலியிலேயே இருக்கிறது.

பிரபலமான பாடகர்களுடன் ரசிகர்கள் ஒரு பாடலை டூயட்டாக சேர்ந்து பாடிய அனுபவத்தையும் ஸ்முல் வழங்கியிருக்கிறது. இதில் ஒரு சில ரசிகர்கள் லட்சக்கணக்கானோரை கவர்ந்து இணைய நட்சத்திரமாகவும் உருவாகி இருக்கின்றனர். 2011 ல் ஜப்பானின் சக்திவாய்ந்த பூகம்பம் உலுக்கிய போது, உலகம் முழுவதும் உள்ளவர்கள் ஸ்முலில் ஒன்றிணைந்து என் தோள் மீது சாய்ந்து கொள்ளுங்கள் என பொருள்படும் லீன் ஆன் மீ பாடலை பாடி நெகிழ வைத்தனர்.

இசைப்பிரியர்கள் இசை மூலம் தங்களுக்குள் தொடர்பு கொள்வதையும், இசையால் பேசிக்கொள்வதையும் ஸ்முல் சாத்தியமாக்குகிறது. இசையை கேட்டு ரசிப்பது மட்டும் ரசிகர்களின் வேலை அல்ல, அவர்கள் இசையை உருவாக்கலாம், பகிர்ந்து கொள்ளலாம், புதிய இசையை கண்டறிலாம் என்கிறது ஸ்முல். அதுவே அதன் பலமாக இருக்கிறது.

 

இணைப்புகள்:

  1. ஸ்முல் ஆக்கரீனா பற்றி அறிய: https://www.smule.com/ocarina/original
  2. ஸ்முல் பற்றிய போர்ப்ஸ் கட்டுரை; https://www.forbes.com/sites/mnewlands/2016/09/20/smule-has-changed-the-music-industry-completely-heres-how/#5e20381b41c0
  3. ஸ்முல் சி.இ.ஒ பேட்டி- http://techblogwriter.co.uk/107-jeff-smith-smule-founder-ceo-talks-rise-social-music-apps/
  4. ஸ்முல் தொடர்பான நியூயார்க் டைம்ஸ் கட்டுரை- http://www.nytimes.com/2011/11/27/magazine/smule.html?mcubz=1

=

நன்றி. யுவர் ஸ்டோரி தமிழ் இணைய இதழில் எழுதியது

 

 

இந்த தளம் இணைய இசை அகராதி

muஇணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக இசை பயில்பவர்களுக்கு இந்த அகராதி பயனுள்ளதாக இருக்கும்.

ஏதேனும் ஒரு இசைச்சொல் தொடர்பான விளக்கம் தேவை எனில் இதில் தேடிக்கொள்ளலாம். தேடப்படும் சொல்லுக்கான விரிவான விளக்கத்துடன் அதற்கான இசைக்குறிப்பும் இடம்பெறுகிறது. பல சொற்களுடன் அதற்கான ஒலிக்குறிப்பை கேட்கும் வசதி இருக்கிறது. உதாரணமாக இசைக்கருவி தொடர்பான தேடலில், அந்த கருவியின் ஒலி நயத்தையும் அறியலாம்.

இசைக்கருவிகள், இசை அமைப்பாளர்கள் சார்ந்தும் தேடும் வசதி உள்ளது. அகர வரிசையிலும் தேடலாம். இவைத்தவிர முகப்பு பக்கத்திலேயே தினம் ஒரு இசைச்சொல் விளக்கப்படுகிறது.

இணைய முகவரி: https://dictionary.onmusic.org/

 

செயலி புதிது: தயக்கத்தை வெல்ல ஒரு செயலி

ஸ்டெப்ஸ் எனும் பெயரில் ஐபோனுக்கான புதுமையான செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. இந்த செயலி சமுக தயக்கங்களை உடைத்தெறிய உதவுகிறது.

அறிமுகம் இல்லாதவர்களுடன் பேச தயங்குவது, புதிய இடங்களுக்கு செல்வது, நிராகரிப்புகளை எதிர்கொள்ள அஞ்சுவது என ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சமூக சங்கடம் அல்லது தயக்கம் இருக்கலாம். கூட்டுக்குள் அடைந்து கிடக்காமல் தைரியமாக இத்தகைய சூழலை எதிர்கொள்வதே இந்த தயக்கங்களை வெல்ல ஏற்ற வழி என சொல்லப்படுகிறது. இது வெளிப்படுத்திக்கொள்ளும் சிகிச்சை என அழைக்கப்படுகிறது.

ஒருவர் அஞ்சும் சூழல் தொடர்பான சிறிய செயல்களை மேற்கொள்வதன் மூலம் அந்த சூழலுக்கு பழகிக்கொள்ள தயார் செய்யும் வகையில் இந்த சிகிச்சை செயல்படுகிறது. ஆனால் இந்த சிகிச்சை முறையை சுவாரஸ்யமான வழியில் மேற்கொள்ள உதவும் வகையில் ஸ்டெப்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.’

இந்த செயலி சமுக தயக்கங்களை வெல்ல வழி செய்யும் சிறிய செயல்களை பல்வேறு தலைப்புகளில் பரிந்துரைக்கிறது. அவற்றில் இருந்து விரும்பியதை தேர்வு செய்தால் அது தொடர்பாக நினைவூட்டி ஊக்கம் அளிக்கிறது. பின்னர் அந்த செயலில் ஈடுபட்டு அந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களையும் இந்த செயலில் ஈடுபட அழைக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://www.stepsapp.xyz/

 

 

 

 

எம்பி- 3 க்கு என்ன ஆச்சு?

mp3-share_custom-47303cc4c2f139b693ff86def5556f68bc18e4e2-s800-c85பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கும். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் இசைப்பிரியர்கள் எம்பி-3 வடிவத்திற்கு விடை கொடுக்க நேருமோ என நினைத்து நொறுங்கி போயிருக்கலாம்.

எம்பி-3 இறந்து விட்டது!, எம்பி-3 கொல்லப்பட்டு விட்டது! போன்ற தலைப்புகளில் வெளியான செய்திகளை பார்த்தால் இசை மனதும், இணைய மனதும் திடுக்கிடத்தானே செய்யும். ஆனால் இந்த கவலை தேவையற்றது என்பதை, இல்லை,எம்பி3 இறக்கவில்லை!, எம்பிஎ இறந்துவிட்டது, ஆனால் எம்பி3 நீடூடி வாழ்க! போன்ற தலைப்பிலான விளக்கச்செய்திகள் புரிய வைத்தன.

விஷயம் இது தான், எம்பி3 இசை கோப்பு வடிவத்தை உருவாக்கிய ஜெர்மனி ஆய்வு அமைப்பிற்கு பின்னே உள்ள பாரன்ஹோபர் கழகம் வெளியிட்ட அறிவிப்பே இதற்கு காரணமாக அமைந்தது. எம்பி-3 கோப்பு தொடர்பான காப்புரிமை சார்ந்த உரிமம் வழங்குவதை நிறுத்திக்கொள்வதாகவும், எம்பி-3 வடிவம் நுகர்வோர் மத்தியில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், அதைவிட மேம்பட்ட கோப்பு வடிவங்களான ஏஏசி போன்றவை வந்துவிட்டதால், அவை எம்பி-3 யை விட அதிக ஒலித்தரத்தை அளிக்க வல்லவை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எம்பி-3 க்கு விடைகொடுத்துவிட்டு அதைவிட மேம்பட்ட கோப்பு வடிவத்திற்கு மாறும் அவசியம் வந்திருப்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இந்த அறிவிப்பு தான், எம்பி-3 கொல்லப்படுகிறது எனும் தலைப்புடன் வெளியாயின. ஜெர்மனி அமைப்பை பொருத்தவரை எம்பி-3 கோப்பு வடிவம் காலாவதியாகி விட்டதை இந்த அறிவிப்பு உணர்த்தினாலும், இந்த கோப்பு வடிவத்தின் கதி அவ்வளவு தான் எனும் வகையில் எந்தவித கருத்தும் இந்த அறிவிப்பில் இல்லை. அப்படியிருந்தும் கூட, எம்பி-3 கோப்பு வடிவம் அதை உருவாக்கியவர்களால் கொல்லப்படுவதாக செய்திகள் வெளியாகின.

பழையன கழிதலும், புதியன புகுதலும் தொழில்நுட்ப உலகில் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இசைத்துறையில் இன்னும் வேகமாக மாற்றம் நிகழ்வதை பார்த்து வருகிறோம். கிராம்போன் பேழைகள், கேசெட்கள், சிடிக்கள், டிவிடிக்கள் என இசையை கேட்கும் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், இப்போது பிரபலமாக உள்ள எம்பி-3 கோப்பு வடிவத்திற்கும் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என இந்த செய்தியை படித்ததும் தோன்றுவது இயல்பு தான். கேசட், சிடிக்கள் வரிசையில் எம்பி-3 பிளேயர்களையும் வரலாற்றின் பரண்களில் தூக்கி வீச வேண்டியிருக்குமோ எனும் எண்ணமும் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இன்னும் பலருக்கு என்னிடம் உள்ள எம்பி- பாடல்களின் என்ன ஆகும் எனும் கவலை ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், எபி-3 க்கும் ஒன்றும் ஆகவில்லை. எம்பி- 3 பாடல்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை. கோப்பு வடிவில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். ஜெர்மனி அமைப்பு போன்றவை மேம்பட்ட இசை கோப்பு வடிவமான ஏஏசி போன்றவற்றை முன்னிறுத்துகின்றன என்பதும் உண்மை தான். ஆனால் அதனால் எம்பி-3 க்கு அதிக பாதிப்பில்லை. குறிப்பாக உடனடியாக அதற்கு எந்த ஆபத்தும் இல்லை. அது பயன்பாட்டில் தொடரும். அதில் பாடல்களை கேட்கலாம்.

ஏனெனில், ஜெர்மனி அமைப்பு எம்பி-3 க்கான உரிம ஒப்பந்த முறையை தான் கைவிட்டுள்ளது. ஏற்கனவே எம்பி-3 கோப்பு வடிவம் தொடர்பான காப்புரிமை காலாவதியாகிவிட்ட நிலையில், இதற்கான உரிம ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளது. இதன் பொருள் எம்பி-3 கோப்பு உருவாக்கத்திற்கு இனி எந்த நிறுவனமும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதாகும். மேம்பட்ட வடிவத்திற்கு மாறுவதால் ஜெர்மனி அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால் அதற்காக இசைப்பிரியர்களும் இந்த மேம்பட்ட முறைக்கு மாறியாக வேண்டிய நிர்பந்தம் இல்லை. அவர்கள் பழகிய எம்பி-3 வடிவத்தையை பயன்படுத்தலாம். அது மட்டும் அல்ல, இந்த முறையில் பாடல்களை உருவாக்க இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதால், சுதந்திரமாக செயல்படலாம். எப்படி ஜிப் கோப்பு வடிவத்திற்கான காப்புரிமை காலாவதியாக பல ஆண்டுகள் ஆன பிறகும் அந்த கோப்பு வடிவம் பயன்பாட்டில் இருக்கிறதோ அதே போல எம்பி-3 வடிவமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இசை கோப்பு வடிவமான அடவான்ஸ்டு ஆடியோ கோடிங் எனப்படும் ஏஏசி, எம்பி-3 இடத்தில் அதன் பிரம்மாக்களால் முன்னிறுத்தப்பட்டாலும், இசைத்துறை ஒரே நாளில் எம்பி-யில் இருந்து மாறிவிடும் என எதிர்பார்ப்பதற்கில்லை. தற்போதே இசை ஸ்டீரிமிங் சேவையில் ஏஏசி முறை பின்பற்றப்பட்டாலும் கூட, எம்பி-3 அவ்வளவு தான் என சொல்ல முடியாது என்றே கருதப்படுகிறது.

ஏன்? எப்படி? என புரிந்து கொள்ள எம்பி- 3 வரலாற்றை கொஞ்சம் சுருக்கமாக திரும்பி பார்க்கலாம். எம்பி-3 என்பது உண்மையில் ஒலிகளுக்கான கோப்பு வடிவம். எம்பெக் ஆடியோ லேயர் 3 என்பதை குறிக்கும் இந்த வடிவம் ஒலிக்குறிப்புகளை அவற்றின் மூல அளவை விட பத்து மடங்கிற்கும் குறைவான அளவில் சுருக்கி சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. அளவு சுருங்கினாலும் ஒலியின் தரம் பெரிய அளவில் பாதிக்காது. எனவே இந்த முறையில் இசையை சேமிப்பதும், பரிமாற்றம் செய்வதும் எளிதானது. குறைந்த இடத்தில் அதிக அளவில் பாடல்களை பதியலாம் என்பதோடு, குறைவான நேரத்தில் பரிமாற்றலாம். இந்த இரண்டும் சேர்ந்து தான் இணையத்தை இந்த கோப்பு வடிவத்திற்கு நெருக்கமாக்கியது.

இங்கு இரண்டு முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும். எம்பி-3 கோப்பு வடிவத்தை உருவாக்கும் முயற்சி 1980 களில் துவங்கப்பட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாக இதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1990 களின் மத்தியில் பலன் அளித்தது. ஜெர்மனியை சேர்ந்த பரன்ஹோபர் கழகம் (Fraunhofer Institut ) 1987 ல் இதற்கான பணியை முழு மூச்சில் துவக்கியது. இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய பேராசிரியர் பிராண்டன்பர்க் (Brandenburg ) தான் எம்பி-3 யின் தந்தை என கருதப்படுகிறார்.

பிராண்டபர்க் இந்த ஆய்வில் ஈடுபட்டதே ஒரு சுவாரஸ்யமான கதை. முதலில் பிராண்டபர்கிற்கு ஒலி குறிப்புகளை சுருக்குவதற்கான ஆய்வில் நாட்டம் இருக்கவில்லை. ஆனால் அவரது முனைவர் பட்ட வழிகாட்டிக்கு அந்த எண்ணம் இருந்தது. இது தொடர்பான ஒரு எண்ணத்திற்கு அவர் காப்புரிமையும் பெற விரும்பினார். அந்த கால கட்டத்தில் அறிமுகமாகி இருந்த டிஜிட்டல் தொலைபேசி இணைப்புகள் வழியே இசையை ஒலிபரப்ப வேண்டும் என்பது தான் அந்த எண்ணம். இசையை சிடிகள் வடிவில் விநியோகிப்பதை விட, ஒரு மைய சர்வரில் சேமித்து வைத்துக்கொண்டு, விரும்பும் நபர்களுக்கு தொலைபேசி வழியே கேட்ட பாடல்களை ஒலிபரப்ப வழி செய்யலாம் என அவர் நம்பினார். ஆனால் இதற்கு முதலில், தொலைபேசி இணைப்பு வழியே இசையை அனுப்பக்கூடிய அளவுக்கு அதை சுருக்க வேண்டும். இத்தகைய சுருக்கம் நடைமுறை சாத்தியம் இல்லை என கருதப்பட்டது.

பேராசிரியர் இந்த பிரச்சனைக்கு வழி காணுமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து பிராண்டன்பர்க் இதற்கான ஆய்வில் ஈடுபட்டார். பிராண்டன்பர்க் கணிதப்புலி என்பதால், கணிதவியல் மூலம் இந்த புதிருக்கு விடை காணும் வகையில் ஒலிக்குறிப்புகளுக்கான சமன்பாடுகள் எழுதிப்பார்த்தார். ஒலிக்குறிப்புகளை பல அடுக்குளாக பிரித்து அவற்றை சுருக்குவதற்கான வழி தேடினார். 1980 களின் மத்தியில் அறிமுகமான மேம்பட்ட திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் இந்த சோதனையில் உதவின.

இதனிடயே மனித இயல்பு தொடர்பான ஒரு அம்சமும் அவருக்கு உதவியது. மனித செவி பேச்சை கேட்கும் போதும் சரி, இசையை கேட்கும் போதும் சரி, முழுவதும் கேட்பதில்லை. பலவற்றை கேளாமல் விட்டுவிடுகிறது. அதாவது மனித செவியால் உணர முடியாத அலைவரிசை கொண்ட ஒலிக்குறிப்புகளும் இருக்கின்றன. இவற்றை நாம் கேட்பதேயில்லை. இந்த அம்சம் தொடர்பான துறை சைக்கோ அக்வ்ஸ்டிக்ஸ் எனப்படுகிறது.

மனித செவித்திறனில் உள்ள இந்த வரம்பை பிராண்டன்பர்க் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, செவியால் கேட்க முடியாத ஒலிக்குறிப்புகளை தேவையில்லாதவை என நீக்கிவிடும் வகையில் ஒரு முறையை உருவாக்கினார். இந்த முறையில் மூல இசை வடிவை அதன் தன்மை பாதிக்காமல் பத்தில் ஒரு மடங்காக சுருக்க முடிந்தது.

இதை அடிப்படையாக கொண்டே எம்பி-3 கோப்பு வடிவம் அறிமுகமானது. ஏறக்குறைய இதே காலகட்டத்தில், மோஷன் பிக்சர்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் குருப் அமைப்பு கோப்புகளுக்கான வடிவத்திற்கான தர நிரணயத்தை உருவாக்கியிருந்தது. இவையே சுருக்கமாக எம்பெக் என குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று அடுக்குகள் உண்டு. சர்வதேச தர அமைப்பான ஐ.எஸ்.ஒ வின் துணை அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. ஒலி கோப்புக்கான தர நிர்ணயத்தில் இந்த அமைப்பு கவனம் செலுத்திய நிலையில், பிராண்டன்பர்க் குழு உருவாக்கிய கோப்பு வடிவத்திற்கு காப்புரிமை அளிக்கப்பட்டது. எம் பெக் மூன்றாம் அடுக்கை கொண்டு உருவானதால் இது எம்பி-3 என அழைக்கப்பட்டது.

1995 ல் இந்த முறை அறிமுகமானது அந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. இசை கோப்புகளை அதன் தரம் மாறாமல் சுருக்க வழி செய்தாலும், அப்போது தான் சிடிக்களுக்கு மாறியிருந்த இசை உலகம் இன்னொரு மாற்றம் அவசியம் என நினைக்கவில்லை. 1990 களின் பின் பகுதியில் இணைய பயன்பாடு அதிகரித்த போது இதற்கான அவசியம் உணரப்பட்டது. இணையம் எம்பி3 கோப்பு வடிவத்தை ஆரத்தழுவிக்கொண்டது.

இதன் பின் நிகழ்ந்தவையே பெரிய வரலாறு என்றாலும், அவற்றை சுருக்கமாக இப்படி புரிந்து கொள்ளலாம். இசையை எம்பி3 வடிவத்திற்கு மாற்ற ஒரு என்கோடிங் முறை தேவை. அதற்கான உரிமத்தை இந்த நுப்டத்திற்கான ஆய்வுக்கு நிதி அளித்த ஜெர்மனி அமைப்பு வைத்திருந்தது. இப்படி மாற்றப்பட்ட கோப்புகளை இசையாக மாற்றவும் ஒரு சாதனம் தேவை. இவை தான் எம்பி-3 பிளேயராக அறிமுகமாயின. அதற்கு முன் டெஸ்க்டாப்பில் இதை சாத்தியமாக்கும் வின் ஆம்ப் மென்பொருள் அறிமுகமானது. அதற்கும் முன்னர் இணையவாசி ஒருவர், எம்பி-3 கோப்பு முறை மாற்ற நுட்பத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு விட்டார். இதன் பிறகு ஜெர்மனி அமைப்பு உரிமக்கட்டணத்தை குறைத்தது. (இந்த உரிம ஒப்பந்தத்தை தான் இப்போது கைவிட்டுள்ளது. )

இவை எல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில், இசையை எம்பி-3 வடிவில் பரிமாறிக்கொள்வது பிரபலமாகி இணைய உலகை புரட்டிப்போட்டது.

இந்த வடிவம் அத்தனை சீக்கிரம் காலாவதியாகாது என்றே தோன்றுகிறது, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!

எம்பி-3 அதிகாரப்பூர்வ வரலாறு: https://www.mp3-history.com/

சுருக்கமான வரலாறு: http://www.npr.org/sections/therecord/2011/03/23/134622940/the-mp3-a-history-of-innovation-and-betrayal

 

  • நன்றி தமிழ் இந்துவில் எழுதியது.

உலக வானெலிகளை கேட்டு ரசிக்க!

NDL-Android-Appஇணைய யுகத்திலும் வானொலிகளுக்கான தேவை இருப்பது மட்டும் அல்ல, இணையம் மூலம் வானெலிகளை கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கிறது. இதற்கு உதாரணமாக திகழும் சேவைகளில் ரேடியோ.கார்டன் தளமும் ஒன்று.

வானொலி சேவை தொடர்பான மற்ற தளங்களை எல்லாம் விட ரேடியோ.கார்டன் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்த தளத்தில் உலகில் உள்ள எந்த வானொலி நிலையத்தை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம். வானொலி நிலையத்தை தேடுவது மிகவும் சுலபம். தளத்தின் முகப்பு பகுதியில் கூகுளின் பூமி வரைபட சேவை தோன்றுகிறது. அதில் விரும்பிய நாட்டின் பகுதியில் கிளிக் செய்தால் அங்குள்ள வானொலியை கேட்கத்துவங்கிவிடலாம்.
இந்த சேவையை கிளிக் செய்ததுமே நம்முடைய இருப்பிடத்தை உணர்ந்து, அங்குள்ள வானொலி சேவையை அடையாளம் காட்டுகிறது. இதே முறையில் உலகின் எந்த பகுதிக்கும் சென்று வானொலியை கேட்கலாம்.
இது தவிர, வரலாற்று வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு ரசிக்கலாம். விளம்பரங்கள் மற்றும் கதைகளையும் கேட்டு ரசிக்கும் வசதி இருக்கிறது.
இணைய முகவரி: http://radio.garden/live/

செயலி புதிது; உள்ளங்கையில் பாடப்புத்தகங்கள்
தேசிய டிஜிட்டல் நூலகம் (NDLI ) பற்றி உங்களுக்குத்தெரியுமா? மத்திய மனித வள மேம்பாடுத்துறையின் கீழ் தகவல் தொழில்நுட்பம் மூலமான கல்விக்கான தேசிய திட்டம் முலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் நூலகம் இது.
மாணவர்கள் இந்த நூலகம் மூலம் பாட நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றை அணுகலாம். இந்த வசதியை மேலும் பரவலாக்குவதற்காக தற்போது ஐஐடி கராக்பூர் மாணவர்கள் சிலர் இந்த நூலகத்திற்கான ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கி உள்ளனர்.
இந்த செயலி மூலமும் டிஜிட்டல் நூலகத்தில் உள்ள தகவல்களை அணுகலாம். தொழில்நுப்டம், சமூக அறிவியல், இலக்கியம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்களும் ,கட்டுரைகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் பிரிவிலும் இவற்றை அணுகலாம். எந்த வகையான கற்றல் பாடங்கள் தேவையோ அதற்கேற்ப அணுகலாம். தேடல் வசதியும் இருக்கிறது.
ஆங்கிலத்தில் தேடலாம்ம். முதல் கட்டமாக இந்தி மற்றும் வங்காள மொழிகளில் தேடும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதல் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வரை பல தரப்பட்ட மாணவர்களும் இந்த செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://www.ndlproject.iitkgp.ac.in/ndl/