Tag Archives: android

டிரால்கள் பிரச்சனைக்கு புதுமையான தீர்வு!

linkmoji-readyexamples-left-p-500x500இணையத்தின் டாப் டென் பிரச்சனைகளை பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நியூஸ் போன்ற புதிய பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டிரால்கள் எனப்படும் இணைய விஷமிகளின் தாக்குதல் இணையத்தின் தீராத தலைவலியாக தொடர்கிறது.

இணையத்தின் ஆதிகால பிரச்சனையான இதற்கு பலவித தீர்வுகள் முயற்சிக்கப்பட்டு, எதுவும் முழு பலன் தராத நிலையில் நார்வே நாட்டு இணையதளம் ஒன்று புதிய தீர்வை முன்வைத்துள்ளது. இந்த தீர்வு புதுமையாக மட்டும் அல்ல புதிர் வடிவிலும் அமைந்துள்ளது. அதாவது கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ளது.

டிரால்களுக்கு பலவிதமான விளக்கம் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப டிரால்களும் பலவிதமான வடிவில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், டிரால்களின் பொதுத்தன்மை என்று பார்த்தால் இணைய விவாதம் போன்றவற்றில் சம்மன் இல்லாமல் ஆஜராகி துவேஷம் நிறைந்த கருத்துக்களை பதிவு செய்வது என புரிந்து கொள்ளலாம். விவாதத்தின் நோக்கத்தை பாதிப்பதில் துவங்கி, தொடர்புடையவர்கள் மனதை நோகடிப்பது வரை இது அமையலாம். இத்தைய தாக்குதலுக்கு இலக்காகி இணைய பக்கமே இனி வரமாட்டேன் என கண்ணீர் மல்க விலகிய பிரபலங்கள் உண்டு. அன்மை காலமாக இணைய சாமானியர்களும் இந்த வகை தாக்குதலுக்கு இலக்காகி அவதிப்பட்டு வருகின்றனர்.

சுருக்கமாக சொலவதானால் இணைய விஷமிகள் இணையத்தை பாதுகாப்பற்ற இடமாக மாற்றி வருகின்றனர். இவ்வளவு ஏன் செய்தி தளங்களிலும் கூட டிரால்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். செய்தி கட்டுரைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பின்னூட்ட வசதியை தவறாக பயன்படுத்தி மனம் போன போக்கில் கருத்துக்களை பதிவு செய்து வெறுத்துப்போக வைப்பதில் விஷமிகள் ஆனந்தம் காண்கின்றனர். சிலர் வம்புக்காகவேனும் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து கோபம் கொள்ள வைப்பதும் உண்டு. ஏதேனும் ஒரு விதத்தில் தூண்டிவிடுவது தானே அவர்களின் நோக்கம்!

பின்னூட்டங்களில் இப்படி காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க கண்காணிப்பு, கட்டுப்பாடு போன்ற உத்திகள் எல்லாம் பலன் தராமல் போகவே, பல இணையதளங்கள் பின்னூட்ட வசதியையே ரத்து செய்துவிட்டன. ஆனால், பின்னூட்டம் என்பது இணையம் சாத்தியமாக்கும் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் என்பதால் இந்த உத்தியையும் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கில்லை. மேலும் பின்னூட்ட வசதி அர்த்தமுள்ள விவாதம் மூலம் கருத்து பரிமாற்றம் மற்றும் கூடுதல் புரிதலுக்கு வழிவகுக்கும்.

எனவே தான் பின்னூட்ட வசதியை இயன்ற வரை ஆரோக்கியமான முறையிலேயே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது எப்படி என பலரும் யோசித்து வருகின்றனர். இந்த வரிசையில் தான் நார்வே நாட்டு பொதுத்துறை ஒளிபரப்பு ஊடகமான என்.ஆர்.கேவின் தொழில்நுட்ப பிரிவான என்.ஆர்.கே. பீட்டா பின்னூட்டங்களை நெறிப்படுத்த புதிய தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்த தீர்வு கேள்வி பதில் பாணியில் அமைந்துள்ளது.

அதாவது, குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரை தொடர்பாக யாரேனும் பின்னூட்டம் வெளியிட விரும்பினால் முதலில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் பின்னூட்டம் அளிக்க விரும்பும் கட்டுரை தொடர்பாக அந்த கேள்விகள் அமைந்திருக்கும். அவற்றுக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே பின்னூட்டம் பதிவு செய்ய முடியும்.

பெரும்பாலும் இணைய விஷமிகள் செய்திகளை படிக்காமலேயே பின்னூட்டத்தில் துவேஷ கருத்துக்களை கூறி கசப்புணர்வு அளிக்கின்றனர் என கருதப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், முதலில் கருத்து சொல்ல விரும்புகிறவர்கள் அது தொடர்பான கட்டுரையை படித்திருப்பதை உறுதி செய்ய இந்த கேள்வி பதில் உத்தி முயற்சிக்கிறது.

” கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? எனில் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். கருத்துக்களின் தரம் குறித்து கவலைப்படுவதால், பின்னூட்டம் அளிப்பவர்கள் அது தொடர்பான செய்தியை வாசித்திருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என இதற்கான காரணம் அந்த இணையதளம் சார்பாக விளக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிப்பதற்கு முன், எல்லோரும் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்கள் எனில், அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அர்த்தமுள்ளதாக அமைய வாய்ப்புள்ளது என என்.ஆர்.கே பீட்டா தளத்தில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

நிச்சயம், பின்னூட்ட வசதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் போராட்டத்தில் இது சுவாரஸ்யமான முயற்சி தான். பின்னூட்டம் மூலம் விஷம் கக்குவதை இது தடுக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், கருத்து தெரிவிக்கவுள்ள ஒரு கட்டுரையை முழுவதும் படித்து, அதன் சாரம்சத்தை புரிந்து கொண்டு பதில் அளிக்க நிர்பந்திக்கப்படுவது போகிற போக்கில் கருத்துக்களை வீசி எறிவதில் இன்பம் காண்பவர்களை யோசிக்க வைக்கலாம். அல்லது குறைந்தபட்சம் விலக்கி வைக்கலாம். மேலும் இடைப்பட்ட நேரம் அவர்களின் ஆவேசத்தையும் தணித்துவிடலாம்.

ஆனால், கட்டுரையின் உண்மையான வாசகர்கள் இப்படி கேள்வி கேட்கப்படுவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத்தெரியவில்லை. கட்டுரை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அவர்கள் ரசிக்கவும் செய்யலாம். எனில் இது, இணைய யுகத்தில் செய்திகள் தொடர்பான உரையாடல் தன்மையில் கூடுதல் அம்சமாகலாம். வாசித்த பிறகே பின்னூட்டம் தெரிவிக்க வழி செய்யும் இந்த உத்தி அர்த்தமுள்ள இணைய விவாதத்திற்கு வழி செய்யலாம் என்று இணைய வல்லுனர்கள் தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தளம் புதிது: இமோஜி வடிவில் இணையதள இணைப்புகள்!

இணையதளங்களின் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் பழக்கமும்,தேவையும் இணையவாசிகளில் பலருக்கு இருக்கலாம். இணையதள முகவரிகள் நீளமாக வால் போல தோன்றமால், கச்சிதமான இருக்க வேண்டுமானால் அதற்காக முகவரி சுருக்க சேவைகள் இருக்கின்றன. அதே போல இணையதள முகவரிகளை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், லிங்க்மோஜி இணையதளம் அதற்கு உதவுகிறது.

இந்த இணையதளம் இணைய முகவரிகளை எல்லோருக்கும் பிடித்தமான இமோஜிகள் வடிவில் பகிர்ந்து கொள்ள வைக்கிறது. இதற்கு, முதலில் பகிர விரும்பும் இணைய முகவரிகளை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே அந்த இணைப்பை இமோஜி எழுத்துக்கள் கொண்டதாக மாற்றித்தருகிறது.

இந்த இணைப்பை பேஸ்புக், டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இமோஜி இணைப்பை கிளிக் செய்தால் அதன் பின்னே உள்ள இணையதளத்திற்கு செல்லலாம்.

லிங்க்மோஜி தளம் உருவாக்கித்தரும் இமோஜி இணைப்பு பிடிக்கவில்லை எனில், பயனாளிகள் தாங்கள் விரும்பிய இமோஜி உருவங்களை தேர்வு செய்து இணைப்பை உருவாக்கி கொள்ளலாம். இணைய பயன்பாட்டில் கொஞ்சம் சுவாரஸ்யமும் தேவை என நினைப்பவர்கள் முயன்று பார்க்கலாம். ஆனால் இமோஜி இணைப்பை கிளிக் செய்ததும், இணையதளம் தோன்றும் வரை காத்திருக்க நேரலாம்.

இணைய முகவரி: http://www.linkmoji.co/

 

செயலி புதிது; பிரிஸ்மா செயலியில் புதிய வசதி

ஸ்மார்ட்போன் பிரியர்களின் மனம் கவர்ந்த பிரிஸ்மா செயலி புதிய அம்சங்களோடு தொடர்ந்து மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது இந்த செயலி புதிய பில்டர் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பிரிஸ்மா செயலி, பயனாளிகளின் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போன்ற தோற்றமாக மாற்றி பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை பிரிஸ்மா செயலியின் பில்டர்கள் மூலம் கலைபடைப்பாக மாற்றிக்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இதன் பின்னே இயங்குகிறது.

இந்த புதுமையான அம்சத்திற்காக அறிமுகமான வேகத்திலேயே பிரிஸ்மா, ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான 2016 ம் ஆண்டுக்கான சிறந்த செயலி விருதையும் வென்றது.

பிரிஸ்மா தொடர்ந்து பயனாளிகளை கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பயனாளிகள் புரபைல் மற்றும் பீட்களை பராமரிக்கும் வசதியை அறிமுகம் செய்தது. தற்போது, பயனாளிகள் புதிய பில்டர்களை உருவாக்கி கொள்ளும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

இதுவரை, அடிப்படையான பில்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இப்போது பிரிஸ்மா ஸ்டோர் மூலம் அதில் உள்ள ஸ்டைல்களை அணுகி, புதிய பில்டர்களை உருவாக்கி கொள்ளலாம். முதல் கட்டமாக இலவசமாக அறிமுகமாகியுள்ளது. ஆனால் இது கட்டணச்சேவையாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://prisma-ai.com/

 

ஊக்கம் பெற 16 வழிகாட்டும் இன்போகிராபிக்

எப்போதும் சுறுசுறுப்பாக பம்பரம் போல சுற்றிச்சுழன்று செயல்பட்டுக்கொண்டிருக்கவே எல்லோரும் விரும்புகின்றனர் என்றாலும், பல நேரங்களில் சோம்பலும், சோர்வும் நம்மை முடக்கி விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் இலக்கில்லாமல் செயல்பட்டு நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பும் அனுபவமும் ஏற்படலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு செயல்திறன் பெற்று ஊக்கமுடன் செயல்படுவதற்கான 16 எளிய வழிகளை ரைக்.காம் (wrike.com/ ) இன்போகிராபிக் எனப்படும் தகவல் வரைபடமாக உருவாக்கியுள்ளது.

5 நிமிடங்கள் கவனம் செலுத்துவதன் மூலம் ஊக்கம் பெறலாம், சிரித்தபடி அலுவலகத்தில் இருக்கையில் இருந்து எழுந்து நடை பயிலுங்கள், நாளைய செயல்களை இன்று இரவே குறித்து வைத்துக்கொள்ளுங்கள், ஊக்கம் தரும் வாசகங்களை படியுங்கள் என்பது உட்பட எளிய வழிகளை இந்த தகவல் வரைபடம் விவரிக்கிறது. உங்கள் இலக்குகளை நினைவில் கொள்ளுங்கள், மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள் உள்ளிட்ட வழிகளோடு, முழுமைவாதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைப்பு: http://bit.ly/2lRMBd2

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

 

இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இளையராஜா செயலி!

unnamed1இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம் ஆகியுள்ளது. மாஸ்ட்ரோஸ் மியூசிக் எனும் இந்த செயலி இளையராஜாவின் அதிகாரபூர்வ செயலி என்பது தான் இன்னும் விசேஷமானது. இந்த பிரத்யேக செயலிக்கான அறிவிப்பை இளையராஜவே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என போற்றப்படும் இளையராஜாவின் இசை மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்தது தான். ராஜாவின் இசை ஊக்கமளிக்கும் தாலாட்டாக, சோகங்களில் இருந்து ஆறுதல் அளிக்கும் மருந்தாக, உள்ளத்தை உற்சாகத்தில் ஆழ்த்தும் உத்வேக இசையாக என பலவிதங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மணிக்கணக்கில் இளையராஜா பாடல்களை கேட்டு மெய்மறந்திருக்கும் ரசிகர்கள் அநேகம் பேர் உள்ளனர்.

யூடியூப் தளத்தில் அதிகம் கேட்டு பகிரப்படும் பாடல்களாக இளையராஜா இசையமைத்த பாடல்கள் அமைந்துள்ளன. சவுண்ட் கிளவுட் உள்ளிட்ட தளங்களிலும் அவரது பாடல்களை கேட்டு ரசிக்கலாம். ஸ்மார்ட்போனில் கேட்டு ரசிக்கும் வகையில் இளையராஜா பாடல்களுக்காக என்று பல செயலிகளும் இருக்கின்றன.

இந்நிலையில், இளையராஜா தனது ரசிர்களுக்காக என்று பிரத்யேக செயலியை உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். ’என்னுடைய முதல் அதிகாரபூர்வ செயலிக்கு வரவேற்கிறேன்” என்று திங்கள் கிழமை அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் இளையராஜா, அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள், இசைத்திருட்டு இல்லாமல் எனது இசையை உள்ளங்கையில் அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த செயலி மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம், என்றும் இசை உருவாக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேஸ்புக் பதிவு வெளியான சில மணி நேரங்களில் எல்லாம் ரசிகர்கள் உற்சாகமாகி ஆயிரக்கணக்கில் கைல் தெரிவித்திருந்தனர். எண்ணற்றவர்கள் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளவும் செய்தனர். பல ரசிகர்கள் ,இது போன்ற ஒரு செயலியை தான் எதிர்பார்த்திருந்தோம் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தனர்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வடிவங்களில் வெளியாகியுள்ள இந்த செயலி தொடர்பான தகவல்களை அளிக்க தனி இணையதளமும் (http://www.maestrosmusic.net/ ) உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இளையராஜா ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கும் வகையில் செயலி அமைந்துள்ளது. எளிமையான வடிவமைப்பு கொண்டுள்ள செயலியில் ராஜாவின் இசையை பல்வேறு தலைப்புகளின் கீழ் அணுக முடிகிறது. இந்த செயலியை முழுமையாக பயன்படுத்த இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பேஸ்புக் அல்லது கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து உறுப்பினராகாலம். அல்லது பொபைல் எண் மூலம் உறுப்பினராகலாம்.

இளையாராஜா இசையில் உருவான பாடல்கள் , கர்நாடக இசை, சாஸ்திரிய இசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, கருவிகள், காதல், துடிப்பான பாடல்கள், சோகப்பாடல்கள், மேற்கத்திய பாணி மற்றும் மெல்லிசை பாடல்கள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தேவையான பகுதியை கிளிக் செய்து பாடல்களை கேட்டு ரசிக்கலாம். பாடல்களை கேட்கவும், தரவிறக்கம் செய்யவும் வசதி இருக்கிறது. பாடல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

இவைத்தவிர, மாஸ்ட்ரோஸ் வழங்குவது, முன்னணியில் உள்ள பாடல்கள், வாரத்தின் சிறந்த பாடல் , மாதத்தின் இனிமையான குரல் ஆகிய தலைப்புகளின் கீழும் தேர்வுகள் இருக்கின்றன. செயலி அறிமுகமான கட்டத்தில் மாதத்தின் இனிய குரலாக சின்னக்குயில் சித்ரா ஈர்க்கிறார். வாரத்தின் சிறந்த பாடகாக நான் மகான் அல்ல படத்தின் மாலை சூடும் வேளை’ பாடல் அமைந்துள்ளது.

இவைத்தவிர தனுஷ் விருப்பங்கள், கமல் விருப்பங்கள் உள்ளிட்ட பிரபலமான தேர்வுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து எளிதாக பாடல்களை தேர்வு செய்ய விரும்பும் ரசிகர்கள் கவலைப்படவே வேண்டாம். இதற்காக என்றே நூகம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அவரது இசையில் உருவான படங்கள் அனைத்தும் அகரவரிசைப்படி வரவேற்கின்றன. விரும்பிய படத்தை தேர்வு செய்து அதில் உள்ள பாடல்களை கேட்டு மகிழலாம். திரைப்படங்களின் பாடல் ஆல்பத்தின் முகப்பு படங்கள் திரை நினைவுகளில் மூழ்க வைக்கின்றன.

முகப்பு பக்கத்தின் மேல் பகுதியிலேயே இளையராஜாவின் இணைய வானலியையும் கேட்டு ரசிக்கலாம். பாடல்களை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது. இதில் விருப்ப தேர்வுகளை கொண்ட பாடல்கள் பட்டியலையும் உருவாக்கி கொள்ளலாம்.

தீவிர இளையராஜா ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய பகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் செயலி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன், ரசிகர்கள் உற்சாகமாக கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். பலரும் இந்த செயலிக்காக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். செயலியின் வடிவமைப்பு பரவலாக பாராட்டப்பட்டாலும், ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பு தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இன்னும் பிரத்யேகமான தேடல் வசதி தேவை என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அறிவிக்கை வசதி தேவை என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வேற்று மொழி பாடல்களையும் எளிதாக அணுகும் வசதி தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மொதத்தில் இளையராஜா ரசிகர்களை இந்த செயலி உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த செயலியில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு மேலும் மெருகேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு: http://www.maestrosmusic.net/

 

 

எதையும் கற்றுக்கொள்ள ஒரு தளம்

இணையம் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இருப்பதையும் நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் துவங்கி, இணைய கற்றலுக்கான பிரத்யேக தளங்களான கான் அகாடமி, கோர்சரா என பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவைத்தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ஹவ் காஸ்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த தளம் வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது எப்படி என வழிகாட்டும் வீடியோக்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் புகைப்படக்கலை, நடன வகுப்புகள், உணவு, ஆரோக்கியம், உள் அலங்காரம் என எண்ணற்ற தலைப்புகளில் வழிகாட்டி வீடியோக்கள் பட்டியலிப்பட்டுள்ளன. அவரவர் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற தலைப்புகளை தேர்வு செய்து அதில் உள்ள வீடியோக்களை காணலாம்.

தொழில்நுப்டம், வீடியோகேம் , தனிநபர் ஆரோக்கியம் என இதில் உள்ள தலைப்புகளும் பரந்து விரிந்திருக்கின்றன. இணையவாசிகள் தங்களுக்கு தேவையான வீடியோக்களை தேடிப்பார்ப்பதற்கான தேடல் வசதியும் இருக்கிறது.

இணையதள முகவரி: http://www.howcast.com/

 

 

செயலி புதிது: தேர்தல் கமிஷனின் புதிய செயலி

தேர்தல் கமிஷன் சார்பில் இ.சி.ஐ ஆப்ஸ் எனும் பெயரில் புதிய ஒருங்கிணைந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்கள், வாக்குச்சாவடிகள், தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள் தொடர்பான தகவல்களையும் இந்த செயலி கொண்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பான தகவல்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் எளிதான வகையில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள், மக்கள், வாக்காளர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் ,ஊடகம் உள்ளிட்ட பிரிவுகளை இந்த செயலி கொண்டுள்ளது.

தேர்தல் கமிஷனின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. தொடர்புடைய மற்ற செயலிகளையும் இதில் ஒருங்கிணைத்துக்கொள்ளலாம். ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த செயலி அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாக உள்ளது.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=eci.com.neologicx.eci&hl=en

 

 

கூகுள் தேடலில் புதிய வசதி

கூகுள் தனது ஆண்ட்ராய்டு தேடல் செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இந்த புதிய வசதியின் மூலம் இணைய இணைப்பு இல்லாமல் போனாலும் தொடர்ந்து தேடலில் ஈடுபடலாம். அதற்காக இணைய இணைப்பு இல்லாமல் தேடலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் இந்த வசதி என்ன செய்கிறது என்றால் தேடலில் ஈடுபட்டிருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது செயலிழந்தாலோ, அப்போது தேடும் குறிச்சொற்களை அப்படியே சேமித்து வரிசை படுத்தி வைக்கிறது. பின்னர் இணைய இணைப்பு சீரானதும், பழைய தேடல்களை துவங்கி முடிவுகளை அளிக்கிறது. இது தொடர்பான தகவலையும் அளிக்கிறது. இணைய இணைப்பு திரும்பும் போது தேடல் தொடரப்படும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது. தேடல் முடிவு தயாரானதும் தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.

தேடல் வசதியை நாடுபவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. என்ன தேடினோம் என்று குழம்பி நிற்காமல் விட்ட இடத்தில் இருந்து தேடலை தொடர இந்த வசதி உதவலாம். கூகுள் சேமித்து வைத்துள்ள தேடல் குறிப்புகளை நிர்வகிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை முற்றிலுமாக நீக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தேடல் வசதி தொடர்பாக கூகுள் விளக்கம்: https://blog.google/products/search/dont-let-spotty-connection-stop-you-searching/

 

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை எளிதாக்குக்கும் பீம் செயலி

BHIM-Detailsபண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கான புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அன்மையில் அறிமுகமான பீம் செயலி துவக்க நிலையிலேயே அதிக வரவேற்பை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட இந்த செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். பாரத் பேமெண்ட் இண்டர்பேஸ் பார் மணி என்பதன் சுருக்கமான பீம் செயலி சட்ட மேதை அம்பேத்கர் பெயரையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள யூனிபைடு பேமெண்ட் இண்ட்பர்பேஸ் எனப்படும் யு.பி.ஐ தொழில்நுட்ப மேடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யு.பி,ஐ. வசதி ஸ்மார்ட் போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணபரிவர்த்தனை செய்ய வழி செய்கிறது. இந்த பரிவர்த்தனைகளின் போது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டிய அல்லது ஊள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது இந்த வசதியின் சிறப்பாக அமைகிறது.

யு.பி.ஐ வசதி சார்ந்து முன்னணி வங்கிகள் தனி செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் பீம் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டாலும், எளிமையான பயன்பாட்டில் இது மற்ற செயலிகளில் இருந்தெல்லாம் வேறுபட்டிருக்கிறது. யு.பி.ஐ செயலியின் இலகுவான வடிவமாக வெகுமக்களை மனதில் கொண்டு மிகவும் எளிமையாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான இடைமுகம் மற்றும் மொபைல் வங்கிச்சேவைக்கு பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை ஆகிய அம்சங்கள் பீம் செயலியின் பயன்பாட்டை எளிதாக்குகிறது.

வங்கி கணக்கு (யு.பி.ஐ இடைமுகத்தில் இணைந்துள்ள வங்கி) மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்ட எல்லோரும் பீம் செயலியை பயன்படுத்தலாம். பீம் செயலி மூலம் எளிதான பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

பீம் செயலியை பயன்படுத்த ஆண்ட்ராய்டு போன் வழியே கூகுள் பிளேஸ்டோரில் இருந்து இந்த செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். பீம் செயலியை தரவிறக்கம் செய்யும் போது, அதிகாரபூர்வமான செயலியை தான் தரவிறக்கம் செய்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் பீம் பெயர் போலவே பல போலி செயலிகள் உலாவிகின்றன. எனவே செயலியை தரவிறக்கம் செய்யும் முன் அது தேசிய பேமனெட் கார்ப்பரேஷன் உருவாக்கிய செயலியா என்பதை கண்டறிய வேண்டும். அதிகார பூர்வ இணைப்பு மூலம் இதை நாடுவது நலம். பொதுவாகவே வங்கி மற்றும் நிதிச்சேவை செயலிகளை பயன்படுத்துவதற்கு முன், அவை அதிகாரபூர்வ செயலி தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இமெயில் அல்லது குறுஞ்செய்தி மூலம் வரும் இணைப்புகளை எல்லாம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

bhimsசெயலியை நிறுவிய பின் விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும். இப்போது முதல் கட்டமாக ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் மட்டுமே உள்ளன. வரும் வாரங்களில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் பிறகு பயனாளியின் போன் மற்றும் குறுஞ்செய்திகளை அணுகும் அனுமதியை கேட்கும். இதற்கு அனுமதி அளித்தவுடன், பயனாளியின் போன் எண்ணை உறுதி செய்து கொள்ளும். இரட்டை சிம் கார்டு கொண்ட போன் எனில் எது பரிவர்த்தனைக்கான சிம்கார்டு என குறிப்பிட வேண்டும். அடுத்த கட்டமாக நான்கு இலக்க பாஸ்கோடை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த பாஸ்கோடை தான் தொடர்ந்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவோம். பாஸ்கோடை உருவாக்கிய பிறகு வங்கியை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ பட்டியலில் உள்ள 31 வங்கிகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வங்கி கணக்கை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். வங்கி கணக்கை இணைத்தவுடன், டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கத்தை தெரிவித்து, யு.பி.ஐ பரிவர்த்தனை பின் எண்ணை உருவாக்கி கொள்ள வேண்டும். இதன் பிறகு பரிவர்த்தனைக்கான வி.பி.ஏ எனப்படும் விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ் எனும் முகவரியை உருவாக்கி கொள்ள வேண்டும். இது மொபைல் எண் அல்லது பெயராக இருக்கலாம். பணம் அனுப்ப அல்லது கோர இந்த முகவரி அவசியம். வி.பி.ஏவை உருவாக்கி கொண்ட பிறகு, பரிவர்த்தனைக்கான பக்கம் தோன்றும். அதில் அனுப்ப ( செண்ட்), கோர ( ரிக்வஸ்ட்) மற்றும் ஸ்கேன் ஆகிய மூன்று பகுதிகள் இருக்கும். செண்ட் பகுதி மூலம் பணம் அனுப்பலாம். ரிக்வஸ்ட் பகுதி மூலம் பணம் அனுப்ப கோரலாம்.

பணம் அனுப்ப, பெறுபவரின் மொபைல் எண் அல்லது பரிவர்த்தனையை முகவரியை குறிப்பிட வேண்டும். உடனே அதை பரிசோதித்து உறுதி செய்யும். அதன் பிறகு தொகையை தெரிவித்து பின் எண்ணை அடித்தவுடன் பணம் பரிவர்த்தனை செய்யப்படும். பணம் பெறுபவர் யு.பி.ஐ பரிவர்த்தனை முகவரி கொண்டவராக இருக்க வேண்டும். இல்லை எனில் அவரது வங்கி கணக்கு மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு தெரிவித்து பரிவர்த்தனை செய்யலாம். பரிவர்த்தனை முகவரி கொண்டவர்கள் எனில், எளிதாக பரிவர்த்தனை செய்யலாம். ஸ்கேன் செய்வது மூலமும் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அனுப்புவதற்கான கியூ.ஆர் கோடையும் உருவாக்கி அதனை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் உருவாக்கிய கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.

சாதாரண போனில் *99# என்ற எண்ணை அணுகுவது மூலமும் இந்த வசதியை பயன்படுத்தலாம். பண பரிவர்த்தனை தவிர கணக்கில் உள்ள தொகையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்தலாம். ஆனால் மற்ற யு.பி.ஐ செயலியில் உள்ளது போல காசோலை கோருவது போன்ற மற்ற வசதிகளை அணுக முடியாது. பீம் செயலி மூலமான பரிவர்த்தனை நேரடியான வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். இதை பயன்படுத்த கட்டணம் கிடையாது. ஆனால் வங்கிகள் தரப்பில் சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படலாம்.

தற்போது பண பரிவர்த்தனை செயலிகளை விட பீம் செயலி மிகவும் எளிதானதாக கருதப்படுகிறது. முதல் முறை பயனாளிகளை டிஜிட்டல் பரிவர்த்தனை உலகிற்குள் ஊக்குவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்த செயலி பாதுகாப்பான செயல்பாடுகளை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு பாதுகாப்பை கொண்டுள்ளது. ஒரு முறை 10,000 ரூ வரை பணம் அனுப்பலாம். நாள் ஒன்றுக்கு 20,000 எனும் வரம்பு உள்ளது.

நேரடி பண பரிவர்த்தனைக்கு இது மிகவும் ஏற்றது. இந்த செயலி பரிவர்த்தனையை ஏற்கும் வர்த்தர்களிடமும் இதை பயன்படுத்தலாம். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை தற்போதுள்ளதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீம் செயலி பயன்பாட்டில் சில சிறிய இடர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்பேம் கோரிக்கைகளும் தொல்லை தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றை சரி செய்யும் வகையில் அப்டேட் வர்ஷன் வெளியாகியுள்ளது. ஸ்பேம் தொலைக்கு குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு; https://upi.npci.org.in/static/faq/en_US/

நன்றி : தமிழ் இந்துவில் எழுதியது

ஒளிப்படங்களுக்கு மேலும் ஒரு செயலி

போலராய்டு காமிராக்களை நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட்போன் யுகத்தில் போலாராய்டு காமிராக்கள் செல்வாக்கு இழந்து விட்டாலும், இந்த பிராண்ட் ஸ்மார்ட்போன் செயலிகள் வடிவில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இவற்றில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக கருதப்படும் போலாராய்டு ஸ்விங் செயலி இப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாகி இருக்கும் இந்த செயலி மூலம் வாழ்க்கை தருணங்களை ஒரு நொடி கணங்களாக படம் பிடிக்கலாம். படங்களை தொடும் போது அல்லதும் போனை சாய்க்கும் போது உயிர்பெறும் வகையில் இந்த படங்கள் அமைந்துள்ளன. பிரேம்களை வளைப்பது, செய்தி மற்றும் இமோஜிகள் மூலம் பதில் அளிப்பது உள்ளிட்ட புதிய அம்சங்களும் இணைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: http://www.polaroid.com/products/swing-app

வீடியோ புதிது; ஒளிப்பட கலை அடிப்படைகள் !

ஒளிப்படம் எடுப்பது மிகவும் எளிது. கையில் ஸ்மார்ட்போன் அல்லது டிஜிட்டல் காமிரா இருந்தால் போதும். ஆனால் நல்ல ஒலிப்பட கலைஞராக வேண்டும் என்றால் தேர்ச்சியும்,நுட்பமும் வேண்டும். அதோடு காமிரா செயல்பாடு தொடர்பான அடிப்படையான அம்சங்களை அறிந்திருக்க வேண்டும். இது தொடர்பாக வழிகாட்டுதல் தேவை எனில், வீடியோ மூலம் உதவுகிறது சம் ஸ்டப் எக்ஸ்பிளைண்ட் யூடியூப் சேனல்.
விளக்க வீடியோக்களுக்காக அறியப்படும் இந்த சேனல், காமிரா செயல்பாடு தொடர்பாக அறிய வேண்டிய மூன்று அடிப்படை அம்சங்களாக ஷட்டர்ஸ்பீடு, அப்பெர்ச்சர் மற்றும் ஐ.எஸ்.ஓ ஆகிய அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறது. அனிமேஷன் படங்கள் உதவியுடன் இந்த அம்சங்கள் விளக்கப்படுகிறது. காமிரா நுட்பங்களின் அடிப்படையை அழகாக விளக்குவதோடு, மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

வீடியோ இணைப்பு: https://youtu.be/zd9oNggNqjQ

2017 ல் நீங்கள் என்னவாக வேண்டும்?

புத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு எப்படி செயல்பட்டோம் என்று அலசிப்பார்த்து, அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என திட்டம் வகுப்பதற்கு சரியான நேரம் இது. புத்தாண்டு தீர்மானம் தொடர்பாக வழிகாட்டும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் கிரியேட்டிவ்பூம் இணையதளம், 2017 ல் நீங்கள் கிராபிக் டிசைனராவது சிறந்த விஷயம் என வலியுறுத்துகிறது. இதற்கான பத்து காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது. வடிவமைப்பு கலைக்கு எப்போதுமே மதிப்பும் தேவையும் இருக்கும், அது வேறு பல வாய்ப்புகளையும் திறந்துவிடக்கூடியதாக இருக்கும் என்பதில் துவங்கி, தானியங்கிமயமாக்கல் அலையிலும் வடிவமைப்பு திறனுக்கு தேவை இருக்கும், ஒரு அணியாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும், பிரச்னைகளை தீர்க்கும் உங்கள் ஆற்றலை வளர்க்கும் என ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த விளக்கம் அமைந்துள்ளது. மந்தையில் இருந்து விலகி, நீங்கள் நினைத்துப்பார்க்காத இடங்களுக்கும் உங்களை அழைத்துச்செல்லும் என உற்சாகம் அளிக்கிறது இந்த கட்டுரை. முயன்று பார்க்க நீங்கள் தயாரா?

இணைப்பு; http://www.creativeboom.com/tips/10-great-reasons-to-become-a-graphic-designer-in-2017/