Tag Archives: twitter

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்

8agWVQ0T_400x400ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது.
படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மட்டும் பெருகி கொண்டே இருக்கின்றனர். மையமில்லாமல் நடைபெறும் இந்த போராட்டம், முதலில் அலங்காநல்லூரில் துவங்கி, சென்னை மெரினாவில் தீவிரமடைந்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும் இதற்கு ஆதரவு குவிந்து கொண்டிருக்கிறது.
இந்த போராட்டத்தின் உந்துசக்தியாக இருப்பது ஜல்லிக்கட்டை காப்பாற்றுவது தான் என்றாலும், அதன் பின்னணியில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் உரிமைகளை காக்க வேண்டும் எனும் உணர்வும் வலுவாக இருப்பதை மறுக்க முடியாது. சமீக காலங்களில் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் தொடர்ந்து மாநிலம் கைவிடப்பட்டவிதமும் இதற்கு வலு சேர்த்திருக்கிறது. இப்படி ஒரு போராட்டம் தமிழகத்திற்கு தேவையாக இருக்கிறது.
வழக்கம் போல துவக்கத்தில் தேசிய ஊடகங்கள் கண்டு கொள்ளாத நிலை மாறி இப்போது சர்வதேச ஊடகங்களும் புறக்கணிக்க முடியாத மக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டுவை காக்கும் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. இதற்கு பிரதான காரணம், இணையமும், சமூக ஊடகங்களும் தான்.
பேஸ்புக் பதிவுகளாகவும், டிவிட்டர் குறும்பதிவுகளாகவும், வாட்ஸ் அப் பகிர்வாகவும் பரவி இந்த போராட்டம் வளர்ந்திருக்கிறது. யூடியூப் காணொலிகளும், குவோரா விளக்கங்களும் கைகொடுத்திருக்கின்றன.
பேஸ்புக் நிலைத்தகவல்களாகவும், டிவிட்டர் குறும்பதிவுகளாகவும் ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்பான விவாதம் துவங்கிய போது, இப்படி ஒரு போராட்டம் வெடிக்கும் என யாரேனும் எதிர்பார்த்திருப்பார்களா? எனத்தெரியவில்லை. அதிலும் ஜல்லிக்கட்டு ஆதரவு நிலை, எதிர்ப்பு நிலை என கருத்துக்கள் வெளியாகி விவாதம் சூடு பிடித்த நிலையில், இதுவும் மற்ற சொற்போர்களில் ஒன்றே என பலரும் நினைத்திருக்கலாம். பேஸ்புக் கருத்து போராளிகளை பலரும் கேலியும் செய்திருக்கலாம்.
இதனிடையே ஜல்லிக்கட்டு தேவையா எனும் கேள்வியும், இதில் கலந்திருக்கும் சாதீய பாகுபாடு பற்றிய கருத்து மோதல்களும் , இதெல்லாம் வீண் வேலை எனும் எண்ணத்தை ஏற்படுத்திய நிலையில், இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடத்துவங்கிவிட்டனர். அதன் பிறகு மெல்ல படிப்படியாக போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் அலங்காநல்லூரியில் தடையை மீறி ஜல்லிகட்டு எனும் கோஷத்துடன் துவங்கிய போராட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர் குரலாக தீவிரமானது. மெரீனாவில் குவிந்த இளைஞர் பட்டாளம் கரையாமல் இருந்ததோடு, ஏதோ பயிற்சி முகாமிற்கு வருபவர்கள் போல மேலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணையத்துவங்கிய காட்சி , போராட்ட உணர்வின் உச்சமாக அமைந்துள்ளது.C2ha4uyUsAEPPpV
இதற்கு முன்னர் இணைய ஆதரவுடன் வெடித்த இரண்டு முக்கிய போராட்டங்களை இந்த போராட்டம் நினைவுபடுத்துகிறது. ஒன்று, 2011 ல், வளைகுடா நாடுகளில் ஜனநாயகத்திற்கு ஆதரவான குரலாக ஒலித்த போராட்டம். எகிப்தில் துவங்கி, பல அரபு நாடுகளில் தன்னெழுச்சியாக பிரதிபலித்த இந்த போராட்டத்தை அரபு வசந்தம் என இணைய வரலாறு குறித்து வைத்துள்ளது. மற்றொரு போராட்டம், அமெரிக்காவில் செல்வ பாகுபாட்டை எதிர்த்து வெடித்த வால்ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம். பெரும்பாலான செல்வம் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே குவிந்து கிடக்கும் நிதி ஏற்றத்தாழ்வை எதிர்த்து, அதன் மையான வால்ஸ்டீரிட்டை மையமாக கொண்டு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆக்குபை வால்ஸ்டீரிட் எனும் பெயரிலான இந்த போராட்டத்திற்கு இதே பெயரிலான டிவிட்டர் ஹாஷ்டேகுகளே கைகொடுத்தன.
இதோ இப்போது இணைய வரலாற்றில் மூன்றாவது பெரிய மக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டை காப்போம் போராட்டம் வெடித்திருக்கிறது. முந்தைய போராட்டம் போலவே இதற்கும், ஹாஷ்டேக் ஆயுதெமே மையமாக இருக்கிறது. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான பதிவுகளும், குறும்பதிவுகளும் அலையென வெளியானாலும், அவை ஹாஷ்டேக் அடையாளத்தால் அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டன.
சேவ் ஜல்லிக்கட்டு (#SaveOurCultureJALLIKATTU ), ஜஸ்டீஸ் பார் ஜல்லிக்கட்டு(#JusticeforJallikattu ), ஜல்லிக்கட்டு (#Jallikattu ), #JallikattuProtest உள்ளிட்ட ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு, தொடர்புடைய குறும்பதிவுகள் அனைத்தும் இவற்றின் துணையோடு பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேஸ்புக்கிலும் இதே போன்ற ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டன.
குமுறல், ஆவேசத்தின் வெளிப்பாடு, நியாத்தின் வாதம், தமழரின் பெருமை என பலவிதமாக வெளிப்பட்ட டிவிட்டர் குறும்பதிவுகள் ஒரு நதியாக பெருக்கெடுத்தன. இந்த குறும்பதிவுகள் ஜல்லிக்கட்டு தொடர்பான மைய விவாதத்தை உணர்த்தியதோடு, ஏன் போரட்டம், எதற்காக போராட்டம் எனும் புரிதலையும் ஏற்படுத்துவாக அமைந்தன. இந்த குறும்பதிவுகளில் வெளிப்பட்ட வேகமும், உணர்வும் மற்றவர்களை கருத்து தெரிவிக்க ஊக்குவித்தோடு, பலரை களமிறங்கி போராடவும் தூண்டுகோளாக அமைந்தன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான், ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன் என உணர்த்தும் லோகோக்களையும் பலரும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் இடம்பெறச்செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குறும்பதிவுகளொடு, இந்த நிலையை ஏற்படுத்திய பிட்டா அமைப்புக்கு எதிரான குறும்பதிவுகளும் அதிக அளவில் வெளியாகி கொண்டிருக்கின்றன. பல குறும்பதிவுகள் வெற்று கோஷமாக அமைந்திருந்தாலும், எண்ணற்ற குறும்பதிவுகள் பிரச்சனையின் பல பரிமாணங்களை புரிய வைத்துக்கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம் என்பதை வலியுறுத்தும் அதே நேரத்தில், காளைகள் இதில் துண்புறுத்தப்படுவதில்லை எனும் தகவலும், மாடுகள் குடும்பத்தின் அங்கமாக இருக்கும் கிராமிய யதார்த்தமும் வெளிப்படுகிறது. இவைத்தவிர, நமது மண்ணின் பாரம்பரிய காளை இனங்கள் அழியாமல் காக்கப்படுவதன் அவசியத்தையும், ஜல்லிக்கட்டு இல்லாமல் இது சாத்தியமாகாது எனும் கருத்துக்களும், புதிய புரிதலை தர வல்லவை.
ஜல்லிக்கட்டு தொடர்பான குறும்பதிவுகளுக்காகவே பிரத்யேக டிவிட்டர் கணக்குகளும் உருவாகி இருக்கின்றன: @Jallikatu , @AgentSaffron,
இவற்றின் நடுவே கேலியும் கிண்டலும் கலந்த மீமிக்களும் இல்லாமல் இல்லை. ஆனால் குறும்பதிவுகள் போராட்டத்தின் நியாயத்தையும், தேவையையும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன. பேஸ்புக்கிலும் இதே நிலை தான். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு அளிப்பதற்கான உதவியும் பதிவுகளாக, குறும்பதிவுகளாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இவற்றோடு உணர்வு மிக்க இளைஞர்களின் தன்னெழுச்சியும் சேர்ந்து கொண்டு உலகமே இன்று இந்த போராட்டத்தை உன்னிபாக கவனிக்க வைத்திருக்கிறது.
சமூக ஊடகங்கள் வீண் அக்கப்போர் மற்றும் வதந்திகளுக்கான இடமாக கருதப்பட்டாலும், அவை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் களமாக இருப்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015 சென்னை பெருமழையின் போதும் இது வெளிப்பட்டது நினைவிருக்கலாம். சென்னை உள்ளிட்ட நகரங்களை வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மூழ்கடித்த போது மீட்பு பணியிலும் நிவாரண உதவிகள் வழங்குவதிலும் இணையவாசிகள் பெரும் பங்காற்றினர். தகவல்களை பகிர்வதில் துவங்கி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பதில் சென்னைரெயின்ஸ், சென்னை மைக்ரோ, சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவின.
இம்முறை ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை காப்பதற்காக இணையத்தின் ஆற்றலை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

* அரபு வசந்தம் பற்றிய முந்திய பதிவு :

* சென்னை மழை மீட்பு தொடர்பான பதிவு:

மீண்டும் மறைந்த யுனிக்ஸ் நிறுவனர் டென்னிஸ் ரிட்சி!

ritchieதொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. என்னது ரிட்சி மீண்டும் மறைந்துவிட்டாரா? என்று கேடக்கத்தோன்றியது. ஏனெனில் ரிட்சி, மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த அவர் மீண்டும் எப்படி மறைந்திருக்க முடியும்!

ரிட்சி மறைவு செய்தி இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், வயர்டு இதழின் அந்த செய்தி ஒரு மீள் பிரசுரமாக இருந்தது. அநேகமாக ரிட்சி மறைவை நினைவு கூறும் வகையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இணையவெளியில் இந்த செய்தி பரவி, சி கம்ப்யூட்டர் மொழி கண்டுபிடிப்பாளர் மற்றும் யூனிக்ஸ் இணை நிறுவனரான முன்னோடி ரிட்சி மறைந்தார் எனும் விதமாக சமூக ஊடக தளங்களில் நினைவுக்குறிப்புகளும் வெளியாகத்துவங்கின.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை போன்றவர்களும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டதால் குழப்பம் மேலும் அதிகரித்தது.
இந்த குழப்பம் பற்றி சிநெட் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் பல கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

தொழில்நுட்ப வலைப்பதிவாளரான ஒம் மாலிக் என்பவர் தான் இந்த செய்திக்கட்டுரையை டிவிட்டரில் முதலில் பகிர்ந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் அதை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இந்த செய்தி அதிகம் பகிரப்பட்டது.
ஆனால் நல்லவேளையாக இதற்குள் ஓம் மாலிக் தனது தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். ஐந்த ஆண்டுக்கு முந்தையை செய்தியை தேதியை பார்க்காமல் பகிர்ந்து கொண்டது தவறு தான் என மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை கவனித்த சுந்தர்பிச்சை, இருந்தாலும் என்ன, மறைந்த முன்னோடியை நினைவு கூற இது ஒரு வாய்ப்பானது என்பது போல கருத்து தெரிவித்திருந்தார்.
ரிட்சி நிச்சயம் மறக்கப்படாமல் நினைவு கூறப்பட வேண்டிய மேதை தான், ஆனால் அதற்காக அவரை மீண்டும் ஒரு முறை மறையச்செய்ய வேண்டுமா என்ன?

ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இது ரிட்சிக்கு மட்டும் நிகழுந்துள்ள விஷயம் அல்ல. கடந்த ஆண்டு ஜோ கோக்கர் எனும் அமெரிக்க பிரபலம் இறந்துவிட்டதாக பேஸ்புக், டிவிட்டரில் பரவலாக அஞ்சலி செலுத்தப்பட்டது. விஷயம் என்ன என்றால், கோக்கர் முந்தைய ஆண்டே மறைந்துவிட்டார். ஏதோ பழைய செய்தி பேஸ்புக்கில் தீயாக பரவிவிட்டது.

இது போல ஏற்கனவே மறைந்த பிரபலங்கள் மீண்டும் மறைந்து விட்டதாக செய்திகள் வெளியாவும், அஞ்சலி செலுத்தப்படுவதும் இணையத்தில் அடிக்கடி நிகழ்கின்றன என்கின்றனர். இந்த நிகழ்வுக்கு இரண்டாம் மரண பாதிப்பு ( செகண்ட் டெத் சிண்ட்ரோம்) என பெயரால் குறிப்பிடப்படுகிறது.

தினமும் கோடிக்கணக்கில் பேஸ்புக்கிலும் ,டிவிட்டரிலும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் போது, பழைய செய்திகள் அல்லது நினைவு குறிப்புகள் அவசரத்தில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு இப்படி பகிரப்படுவதாக விளக்கம் தரப்படுகிறது. இப்படி சமூக ஊடகங்களால் மீண்டும் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதற்கு யூனிக்ஸ் இணை நிறுவனர் ரிட்சியின் மறு மரணம் ஒரு உதாரணம்.
பிரபலங்கள் மறைவுக்கு நினைவாஞ்சலில் செலுத்துவதற்கான பரவலான வேட்கையும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும், அடுத்த முறை பிரபலங்களின் மறைவு செய்தியை பகிரும் முன் அல்லது நினைவாஞ்சலி செலுத்தும் முன், அந்த செய்தியை உறுதி செய்து கொள்ள ஒரு சில நிமிடங்கள் செலவிடுவது நல்லது.

சந்தேகத்திற்கு உரிய செய்தி என்றால், அதன் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள, இணைய பொய்களை அம்பலமாக்கும் ஸ்னோஸ்.காம் ( snopes.com ) போன்ற இணையதளங்களை நாடலாம்.
இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயம், வலைப்பதிவாளர் ஓம் மாலிக்கின் நேர்மை. வயர்டு செய்தியின் தேதியை சரியாக பார்க்காமல் பழைய செய்தியை பகிர்ந்து கொண்ட, அவர் பின்னர் அந்த தவற்றை உணர்ந்து பகிர்ங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மன்னிப்பு கேட்டதோடு, இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்காக தன் மீதே வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான வரிசையாக இரண்டு மூன்று குறும்பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

தவறுகளை ஒப்புக்கொள்ளும் இந்த திறந்த மனத்திலான அணுகுமுறை இணைய உரையாடலில் மிகவும் முக்கியம். அந்த வகையில் ஓம் மாலிக்கிறகு (@om ) சபாஷ்.

* சினெட் விளக்க கட்டுரை: https://www.cnet.com/news/tech-luminaries-laud-dennis-ritchie-5-years-after-death-second-death-syndrome/
* வயர்டு பழைய கட்டுரை:https://www.wired.com/2011/10/dennis-ritchie/

குறிப்பு: டென்னிஸ் ரிட்சி நவீன கம்யூட்டரின் முன்னோடியாக போற்றப்படுகிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்ட பல முன்னோடிகளுக்கு அவர் உந்துசக்தியாக இருந்திருக்கிறார். தனது கண்டுபிடிப்பை பொருளாதார நோக்கில் பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல் கம்ப்ட்யூட்டர் மொழி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தியவராகவும் அவர் கொண்டாடப்படுகிறார்.

———

சமூக ஊடகங்களும் செய்தி வாசிப்பு பழக்கமும்!

3565344000000578-3646526-image-a-52_1466161957869செய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார்? இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது சமூக ஊடக பயனாளிகள் பலரும் செய்திகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனரேத்தவிர, பெரும்பாலானோர் அவற்றை படிப்பதில் அதே அளவு ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.
அது மட்டும் அல்ல சமூக ஊடகங்கள் தான் செய்திகளை தெரிந்து கொள்வதற்கான பிரதான வழியாகவும் அமைந்திருக்கின்றன. இளம் தலைமுறையினர் மத்தியில் தொலைக்காட்சியை விட, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களே செய்திகளை தெரிந்து கொள்வதற்கான முக்கிய வழியாக இருப்பதாக கருதப்படுகிறது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. இந்த உண்மையை நம்முடைய பேஸ்புக் அல்லது டிவிட்டர் டைம்லைனை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். நட்பு சார்ந்த நிலைத்தகவல்களோடு செய்திகளுக்கான பகிர்வுகளையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நாமும் கூட இப்படி நம்மை கவரும் செய்திகளை அவற்றுக்கான இணைப்புகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பேஸ்புக் டைம்லைன்
அதனால் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செய்திகள் மட்டும் கட்டுரைகளை டைம்லைனுக்கு அருகே இடம்பெற வைத்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்வரை இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள தேடல் தான் பிரதான வழியாக இருந்தது. ஆனால் 2014ல் நிலைமை மாறி, சமூக ஊடங்கள் வாயிலாக செய்திகளை தெரிந்து கொள்வது 30 சதவீதமாக அமைந்தது. சமூக ஊடகங்களும் செய்திகளும் இப்படி நெருக்கமாக பின்னி பினைந்திருப்பதை மீறி, சமூக ஊடகங்களில் செய்திகள் நுகரப்படும் விதம் பற்றி அதிக புரிதல் இல்லை. அதாவது சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் எவ்வாறு வாசிக்கப்படுகின்றன என்பது பற்றிய விவரங்கள் அதிகம் தெரியவில்லை.
இந்த நோக்கில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ள ஆய்வு, இது தொடர்பான சிந்தனைக்குறிய தகவல்களை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு நேஷனல் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய இந்த ஆய்வு, சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி இணைப்புகளில் 59 சதவீதம் படிக்கப்படுவதே இல்லை என தெரிவிக்கிறது. இதன் பொருள் சமூக ஊடக பயனாளிகள் செய்திகளை படிக்காமலே அவற்றை பகிர்ந்து கொள்கின்றனர் என்பது தான்.

செய்தி இணைப்புகளை கொண்ட 28 லட்சம் டிவிட்டர் குறும்பதிவுகள் இந்த ஆய்விற்காக ஒரு மாத காலம் பரிசீலிக்கப்பட்டன. இந்த காலத்தின் போது அவை எந்த அளவுக்கு கிளிக் செய்யப்பட்டன என்பது அதாவது வாசிக்கப்பட்டனவா? என ஆய்வு செய்யப்பட்டது. இதன் பயனாக தான் பகிரப்பட்ட இணைப்புகளில் 59 சதவீதம் கிளிக் செய்யப்படாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

” மக்கள் ஒரு செய்தியை வாசிப்பதை விட அதை பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்’ என்று இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய ஆய்வாளரான ஆர்னாட் லெகாட் கூறியுள்ளார். ”இந்த கால கட்டத்தில் இப்படி தான் தகவல்கள் நுகரப்படுகின்றன” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இணைய பழக்கம்
நம் கால இணையப்பழக்கம் பற்றி லெகாட் மேலும் கூறும் விஷயங்கள் கவனிக்கத்தக்கது. ‘மக்கள் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முயற்சிக்காமலே, சுருக்கம் அல்லது சுருக்கத்தின் சுருக்கத்தை கொண்டே முடிவுக்கு வருகின்றனர்” என்கிறார் அவர்.

அதாவது தலைப்புச்செய்தியை பார்த்ததுமே பலரும் அதை தங்கள் சமூக வட்டத்தில் பகிர்ந்து கொண்டு விடுவதாக கொள்ளலாம். இதை பெறுவர்களும் தங்கள் பங்கிற்கு அதை பகிர்ந்து கொள்கின்றனர். இப்படி ஒரு செய்தி வைரலாக பரவுகிறதே தவிர, அதை உண்மையில் எத்தனை பேர் படித்துள்ளனர் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. எனவே ஒரு செய்தி வைரலாக பரவியிருக்கிறது என்பது அதன் பிரபலத்தை உணர்த்தலாமேத்தவிர, அதன் தாக்கத்தை குறிப்பதாக கருத முடியாது.

இணையத்தில் வைரலாக பரவும் செய்திகளை அடையாளம் காட்டும் பஸ்பீட் போன்ற சர்வதேச செய்தி தளங்களும், ஸ்கூப்வூப் போன்ற இந்திய செய்தி தளங்களும் சுண்டியிழுக்கும் வகையில் அவற்றுக்கு தலைப்புகளை கொடுப்பதன் ரகசியம் இது தான். ஆனால் இந்த தலைப்புகள் பகிர தூண்டுகின்றனவே படிக்க வைக்கின்றனவா? எனும் கேள்வியை இந்த ஆய்வு எழுப்பியுள்ளது. ஊடகங்கள் பகிரும் செய்திகளை விட, பயனாளிகள் பகிரும் செய்திகளை அதிகம் பகிரப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பழக்கம் அரசியல் மற்றும் கலாச்சார விஷயங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் நாம் நினைப்பதைவிட அதிகமாக இருக்கப்போகின்றன என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வாசிக்காமலே பகிர்வு
செய்திகளை வாசிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் அதிக தொடர்பில்லை என்றும் இந்த ஆய்வின் அடிப்படையில் லெகாட் கூறுகிறார். இந்த இட்த்தில் தி சயன்ஸ் போஸ்ட் இணையதளம் ஜூன் 4 ம் தேதி வெளியிட்ட செய்தியை பொருத்திப்பார்ப்பதும் சரியாக இருக்கும். 70 சதவீத வாசகர்கள் அறிவியல் செய்திகளின் தலைப்பை மட்டுமே படித்துவிட்டு கருத்து தெரிவிக்கின்றனர், எனும் தலைப்பிலான அந்த செய்தியில் முதல் பத்திக்கு கீழே இருந்த்தெல்லாம் அர்த்தமே இல்லாத வெற்று வார்த்தைகள் தான். ஆனாலும் என்ன அந்த செய்தி 46,000 முறைக்கு மேல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

செய்திகளை படிக்காமலே பகிர்வதற்கான காரணங்கள் குறித்து ஆழமான ஆய்வு அவசியம் என்றாலும் கூட இணையத்தில் பரவி வரும் ஷேர்பைட் கலாச்சாரம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதென்ன ஷேர்பைட் என்று கேட்கிறீர்களா? சமூக ஊடகங்களில் பகிரப்படும் அம்சங்களை பிரதானமாக கொண்ட உள்ளடக்க தன்மையே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. அதாவது பார்த்தவுடன் கிளிக் செய்து பகிரத்தூண்டும் வகையில் இருக்க வேண்டும். இப்படி பகிரும் தன்மையை ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களே அதிகம் பயன்படுத்தி வந்தன. கிளிக் செய்ய வைப்பதற்காக என்றே அவை பலவித தூண்டுதல் அம்சங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தின. இதற்காக பொய்யான தகவல்களை இடம் பெற வைப்பது கூட வழக்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இவை கிளிக்பைட் அல்லது லைக்பைட் என்றும் குறிப்பிடப்பட்டன. கிளிக்குகளை அள்ளுவதற்காக இந்த உத்தி கடைபிடிக்கப்படுகிறது. கிளிக்பைட் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூட இணையவாசிகள் எச்சரிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

ஆனால் இப்போது இந்த பகிர்வு பழக்கம் சமூக ஊடக பயனாளிகளையும் பிடித்துக்கொண்டுவிட்டது. எல்லோரும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். பகிர்வதோடு படித்துப்பார்ப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா? தகவல் நெடுஞ்சாலை என குறிப்பிடப்படும் இணையத்தில் தகவல்களை உள்வாங்கி கொள்ளாமலே பயணம் செய்தால் எப்படி?

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

இவர் ஸ்னேப்சாட் டாக்டர்!

6jq3pYgaசமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். ஆனால் சமூக ஊடக பயன்பாட்டில் முன்னுதாரணமாக விளங்கும் பேராசிரியர்களும், டாக்டர்களும் கூட இருக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது சமீபத்தில் அமெரிக்க டாக்டர் ஒருவரும் இணைந்திருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச்சேர்ந்த பல் மருத்துவரான டேனியல் ரூபின்ஷ்டியன் (Daniel Rubinshtein) எனும் அந்த டாக்டர் ஸ்னேப்சாட் சேவை மூலம் தனக்கான பாலோயர்களை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தனது நோயாளிகளுடன் தொடர்பு கொள்ள ஸ்னேப்சாட் சேவையை பயன்படுத்தும் விதம் குறித்து வியந்து பாராட்டும் கட்டுரை ஒன்றை இணைய இதழான தி வெர்ஜ் வெளியிட்டுள்ளது.

மருத்துவர் ஒருவர் ஸ்னேப்சாட்டை பயன்படுத்துவதே ஆச்சர்யமானது எனும் போது அதை ரூபின்ஷ்டியன் பயன்படுத்தி வரும் விதம் இன்னும் கூட ஆச்சர்யமானது.
ஸ்னேப்சாட் சேவை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். வாட்ஸ் அப், ஹைக் போல இதுவும் ஒரு மெசேஜிங் சேவை தான். ஆனால் அடிப்படையில் மாறுபட்டது.

சுவாரஸ்யமான மெசேஜிங் சேவை என்று வர்ணிக்கப்படும் ஸ்னேப்சாட் சேவையில் தகவல்களை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பகிர்ந்து கொள்ளலாம். எந்த வகை பகிர்வாக இருந்தாலும் அவை பத்து நொடிகள் மட்டுமே பார்வையில் இருக்கும். அதன் பிறகு தானாக மறைந்துவிடும். இப்படி பார்த்தவுடன் மறைந்துவிடும் தன்மையே ஸ்னேப்சாட்டின் ஆதார பலம். இதன் காரணமாகவே அந்த சேவை பதின் பருவத்தினர் மற்றும் இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

இளம் வயதினரை கவரும் சேவையாக இருந்தாலும் ஸ்னேப்சாட் வெறும் சுவார்ஸ்யமான தகவல் பரிமாற்றத்திற்காக மட்டும் அல்லாமல் செய்தி வெளியீடு, கதை சொல்லல், மார்க்கெட்டிங் என பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்னேப்சாட் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம், பாலோயர்களை தேடிக்கொள்ளலாம் போன்ற அம்சங்களை பலதுறையினரும் தங்களுக்கு ஆதராவாக பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதன் பின்னே இருக்கும் இளைஞர் சமூகத்தை தொடர்பு கொள்ள இது சிறந்த வழியாகவும் கருதப்படுகிறது.

இதை உணர்ந்தவராக டாக்டர். ரூபின்ஷ்டியனும் இருக்கிறார்.

ரூபின்ஷ்டியன் சமூக ஊடகங்களின் ஆற்றம் மற்றும் அருமையை நன்கு உணர்ந்தவராகவே இருக்கிறார். அவருக்கு என சொந்த இணையதளம் இருப்பதுடன் டிவிட்டர், இண்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னேன்சாட் உள்ளிட்ட சேவைகளில் தனக்கான பக்கங்களையும் துவக்கி வைத்திருக்கிறார்.

இவற்றில் ஸ்னேப்சாட் சேவையை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். ஸ்னேப்சாட்டில் தனக்கான பாலோயர்களை பெறுவதற்காக அவர் டிவிட்டர் குறும்பதிவுகள் மூலம் அவ்வப்போது கோரிக்கையும் வைத்து வருகிறார். நீங்கள் என்னை பின் தொடர்ந்தால் நானும் உங்களை பதிலுக்கு பின் தொடர்வேன் என்றும் உறுதி அளிக்கிறார். இதை ஏற்றுக்கொண்டு, வருபவர்களை கவர்வதற்காக என்று ஸ்னேப்சாட்டில் பல்மருத்துவ சிகிச்சை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலமே நோயாளிகள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். இந்த பதிவுகள் மூலம் அவர் தன்னைப்பற்றியும் தனது சிகிச்சை முறைகள் பற்றியும் நோயாளிகளுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். அவரை பின் தொடரும் நோயாளிகளுக்கு அவரது மருத்துவ அலுவலக சூழலும், சிகிச்சைகளும் அத்துபடியாகின்றன. இதன் மூலம் அவர் தனது நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.

ரூபின்ஷ்டியன் வெளியிடும் வீடியோக்கள் வழக்கமான யூடியூப் வீடியோக்கள் அல்ல: ஆறு நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய புதுமையான் வைன் வீடியோ சேவையை இதற்காக அவர் பயன்படுத்தி வருகிறார். பொதுவாக கேளிக்கை வீடியோக்களை பகிர பயன்படும் இந்த சேவையை அவர் மருத்துவ விளக்கத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.

இதுவும் ஒரு மார்க்கெட்டிங் முயற்சி தானே என நினைக்கலாம். ரூபின்ஷ்டியன் இத்தகைய சமூக ஊடக வெளிப்பாடு மூலம் தனக்கான நோயாளிகளை தேடிக்கொள்கிறார் என்றாலும் அவரது பிரதான நோக்கம் நோயாளிகளுடன் தொடர்பு கொள்வதாகவே இருக்கிறது. “ நம்பினால் நம்புங்கள், இந்த காலத்திலும் கூட பல் மருத்துவரிடம் வருவதற்கு பயந்து நடுங்குபவர்கள் இருக்கின்றனர்” என்று தி வெர்ஜ் இதழுக்கான பேட்டியில் கூறியிருக்கிறார் டாக்டர்.ரூபின்ஷ்டியன். டாக்டர் கிளினிக்கை கண்டு அஞ்சும் நோயாளிகளிகளை ஸ்னேப்சாட் மூலம் சந்தித்து பேசுவது இந்த பயத்தை போக்க உதவுகிறது என்று தனது சமூக ஊடக பயன்பாடு பற்றியும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஸ்னேப்சாட் போன்ற சேவைகள் மூலம் தொடர்பு கொள்வது மருத்துவ சிகிச்சை தொடர்பாக நோயாளிகள் மனதில் உள்ள தயக்கங்கள் மற்றும் அச்சங்களை போக்க வழி செய்கிறது என்கிறார் அவர். அதனால் தான் நேரில் ஆலோசனை வழங்குவதோடு ஸ்னேப்சாட் உரையாடல் மூலமும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். ஸ்னேப்சாட் வாயிலாக கேட்கப்படும் சந்தேகங்களுக்கு பொறுப்பாக பதில் அளித்து வருகிறார். தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வாயிலாகவும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டு பரவலாக மக்களை சென்றடைய முயன்று வரும் புதுயுக டாக்டராக இருக்கிறார்.

மக்கள் தன்னை ஒரு பல் மருத்துவராக மட்டும் அல்லாமல், பல் சிகிச்சை அளிக்க கூடிய சக மனிதராக பார்க்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு வைன் வீடியோக்களும், ஸ்னேப்சாட் மற்றும் டிவிட்டர் பகிர்வுகள் அவருக்கு கைகொடுத்து வருகின்றன.

ஸ்னேப்சாட் சேவையை திறமையாக பயன்படுத்தும் மருத்துவராக இருப்பது ரூபின்ஷ்டியன் மட்டும் அல்ல; மியாமியை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி வல்லுனரான மைக்கேல் சால்ஷியர் எனும் டாக்டரும் இதை செய்து வருகிறார். தான் செய்யும் பிளாஸ்டிக் சர்ஜரி தொடர்பான தகவல்கள் மற்றும் அறுவை சிகிச்சை காட்சிகள் ( நோயாளிகள் அனுமதியுடன் தான்) ஸ்னேப்சாட் மூலம் பகிர்ந்து கொண்டு வரும் டாக்டர் மைக்கேல் சமூக ஊடக உலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக இருக்கிறார். டாக்டர்.மியாமி என சமூக ஊடக உலகில் அவர் கொடிகட்டிப்பறக்கிறார்.

சமூக ஊடகங்கள் பெரும்பாலும் கேலி ,கிண்டல், கேளிக்கை உரையாடலுக்கான இடமாக கருதப்படும் நிலையில் அதை மாற்றி அமைக்கும் வகையில் செயல்படுபவர்களில் இந்த இரண்டு டாக்டர்களும் முன்நிற்கின்றனர். மருத்துவமனை சூழலையும், அறுவை சிகிச்சை அறைகளையும் ஸ்மார்ட்போனுக்குள் கொண்டு வருவதன் மூலம் இவர்கள் மக்களுடன் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கருதப்படுகிறது.

டாக்டர் ரூபின்ஷ்டியனின் டிவிட்டர் பக்கம்: @DRubinshtein

இணையத்தை உருக வைத்தா தாத்தா!

324F545900000578-0-image-a-86_1458568581263சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழ வைக்கும் இந்த கதையில் பேரப்பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோட்டு, இணைய புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது.

முதலில் முன் கதை சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்கு தாத்தவோ,பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருந்தால், அந்த தவற்றை சரி செய்து கொண்டு பாசக்கார பேரப்பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்த கதை உணர்த்தும் நீதி அது தான்- தாத்தாக்களும்,பாட்டிகளும் அன்புக்கு ஏங்கி கொண்டிருக்கிறார்கள், அதை ஒரளவுக்காவது தீர்த்து வைப்பது பேரப்பிள்ளைகளின் கடமை!
சாதாரணமாக சொன்னால் போதனையாக மாறி அலுப்பூட்டக்கூடிய இந்த விஷயத்தை நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் உணர்த்தியிருப்பது தான் இந்த கதையின் சிறப்பம்சம்.

இணையத்தை மெல்லப்பிடித்து உலுக்கியிருக்கும் இந்த கதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டிவிட்டரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்துடன் துவங்குகிறது.

முதியவர் ஒருவர் தனியே சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் அது. முதியவரின் பேத்தியான கல்லூரி மாணவி கெல்சே ஹார்மன் தான் இதை தனது டிவிட்டர் பக்கத்தில் ( https://twitter.com/kelssseyharmon) பகிர்ந்து கொண்டார். அந்த படத்துடன் அவர் தெரிவித்திருந்த தகவலின் பின்னே வருத்ததின் சாயலும் இருந்தது; ”பாப்பாவுடன் ( தாத்தா) டின்னர் சாப்பிடுகிறேன். அவர் தனது ஆறு பேரப்பிள்ளைகளுக்காக 12 பர்கர்களை தயார் செய்திருந்தார். ஆனால் நான் மட்டும் தான் அதை சாப்பிட வந்திருக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன்”.

கையில் பாதி கடித்த படி தாத்தா தனிமையில் சோகத்துடன் காட்சி தரும் புகைப்படத்தை பார்த்து விட்டு இந்த செய்திய படிக்கும் போது, மனதில் தானாக ஒரு மெல்லிய சோகம் உண்டாகும். ஆறு பேரப்பிள்ளைகளுக்காக தாத்தா அன்புடன் பர்கர் செய்து காத்திருந்தால் அவர்களில் ஒருவரைத்தவிவிர மற்றவர்கள் எட்டிப்பார்க்காமல் அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றனரே , பாவம் அந்த தாத்தா என்றும் நினைக்கத்தோன்றும்.
அந்த படத்தை டிவிட்டரில் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இது போன்ற எண்ணங்கள் அலைமோதின. முதியவரின் சோகமோ அல்லது பேரப்பிள்ளைகளின் பாராமுகமோ ஏதோ ஒன்று பார்த்தவர்கள் நெஞ்சத்தொட்டு இந்த படத்தை ரிடிவீட் மூலம் பகிர்ந்து கொள்ளத்தூண்டியது. அவ்வளவு தான் அடுத்த 24 மணி நேரத்தில் 70,000 முறை இந்த படம் பகிரப்பட்டது. அதைவிட அதிகமான முறை இந்த படம் மீது விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பார்த்தால் இணையமே இந்த படம் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தது.

பலரும் தாத்தா மீது பரிவு கொண்டு கருத்து தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் தாங்களும் கூட தாத்தா பாட்டியை அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருப்பதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். குடும்ப உணர்வு, வயதானவர்களின் நிலை, பேரப்பிள்ளைகளின் கடமை ஆகிய விஷயங்கள் பற்றிய பாசம் ததும்பும் விவாதமாக இது உருவெடுத்தது. இதனிடயே சிலர் வராமல் போன அந்த பேரப்பிள்ளைகளை வறுத்தெடுக்கவும் தவறவில்லை.

இதன் வைரல் தன்மையும், அதற்கு பின்னே இருந்த பெரியவரின் சோகமும் மீடியாவின் கவனத்தையும் ஈர்த்து இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியிட வைத்தது. சோகமான தாத்தா எனும் அடைமொழியுடன் வெளியாகிய செய்திகள் மேலும் பல லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது.
இணையம் ஒரு தாத்தாவின் சோகத்திற்கு உருகியதும், பேரப்பிள்ளைகள் தாத்தாக்களை மறக்காமல் இருக்க வேண்டும் எனும் செய்தியை இது உணர்த்துவதாக அமைவதும் வலுயுறுத்தப்பட்டன.

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா.- ஒரு பேத்தி தனது தாத்தாவின் நிலை பற்றி தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்,இணையம் மூலம் பரவி, நம் காலத்தில் முதியவர்களின் நிலை தொடர்பான விவாதத்தின் மையமாக மாறியிருக்கிறது!

ஆனால் இந்த கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இதில் கொஞ்சம் திருப்பங்களும் காத்திருந்தன.
பரவலாக கருதப்பட்டது போல மீது ஐந்து பேரப்பிள்ளைகளும் தாத்தாவை முற்றிலுமாக புறக்கணித்துவிடவில்லை. இணையத்தில் சிலர் கல் நெஞ்சக்காரர்கள் என தூற்றியதை மீறி அவர்கள் பாசக்கார பேரப்பிள்ளைகளாகவே இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. விஷயம் என்ன என்றால், பேரப்பிள்ளைகளில் இன்னொருவர் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். மற்ற நான்கு பேர் வாரத்தற்கு காரணம் , தாத்தாவின் டின்னர் பற்றி அவர்களுக்கு சரியாக தகவல் தெரிவிக்கப்படாதது தான். தாத்தா தனது மகனிடம் இது பற்றி தெரிவித்த தகவலை அந்த மறத்திக்கார அப்பா தனது மகன்களிடம் தெரிவிக்க மறந்திருக்கிறார். அதனால் தான் அவர்கள் வரவில்லை. புகழ்பெற்ற டெய்லிமெயில் நாளிதழ் இந்த வெளிவராத பின்னணி தகவல்களை தேடிப்பிடித்து செய்தி வெளியிட்டது.

இதனிடையே பேரப்பிள்ளைகள் தரப்பில் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டது. தாங்கள் குடும்பத்தை முக்கியமாக கருதுபவர்கள் என்றும், தாத்தாவை தாங்கள் நிராகரித்ததில்லை என்றும் தெரிவித்திருந்தனர். இணையம் கருதும் அளவுக்கு தாத்தாவை தனிமையில் தவிக்கவிடவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இதற்குள் இணையம் அவர்களை விசாரணை கூண்டில் நிற்க வைத்து ,இந்தக்கால பிள்ளைகளே இப்படி தான் என விவாதம் நடத்தி, திருந்த வேண்டிய நெஞ்சங்கள் என்று தீர்ப்பும் வழங்கியிருந்தது. இன்னொரு பக்கம், இதெல்லாமே இணைய புகழுக்கான முயற்சி என்றும் சிலர் தூற்றியிருந்தனர்.

நல்லவேளையாக பேத்தி கெல்சே மற்றும் அவரது சகோதரர்கள் இந்த சூறாவளியை பக்குவமாக கையாண்டனர். தாத்தா மீதான பாசத்தை வெளிப்படுத்தவே புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதாகவும், இதன் மூலம் புகழ் பெறும் எண்ணம் இருக்கவில்லை என்றும் கெல்சே தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதோடு தன்னை தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்தபர்களுக்கு எல்லாம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முடியாததால், அனைவருக்கும் பொதுவாக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பேரனான பிராக் ஹார்மன் (https://twitter.com/BHarmon_10 ) தங்கள் தாத்தா மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதன் அடையாளமாக விருந்து ஒன்றை அளிக்க விரும்புவதாகவும் , இதற்கு யார் வேண்டுமானலும் வருகை தரலாம் என தெரிவித்திருந்தார்.

டிவிட்டர், வைரல் புகழ் பற்றி எல்லாம் அதிகம் அறிந்திராத அந்த முதியவர் ,எல்லோரும் தன்னைப்பற்றியே பேசுவதை பார்த்து கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போயிருக்கிறார். இந்த திடீர் புகழ் வெளிச்சம் அவருக்கு வியப்பை அளித்தாலும், உற்சாகத்தோடு எல்லோரையும் விருந்துக்கு அழை நான் பர்கர் தயார் செய்கிறேன் என கூறியிருக்கிறார்.

வரும் 26 ம் தேதி நடைபெற உள்ள இந்த விருந்து இணைய பேரப்பிள்ளைகளுக்கானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ( பர்கருக்கு 2 டாலர் கட்டணம் உண்டு) . இதற்காக என்றே சேட்பாப்பா.காம் ( www.sadpapaw.com.) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டு தாத்தாவின் பாசத்தை வெளிப்படுத்து டிஷர்ட் மற்றும் தொப்பி விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றால் பர்த்துக்கொள்ளுங்கள்.

———
நன்றி;தமிழ் இந்துவில் எழுதியது