Tag Archives: digital

கமலின் ’மய்யம்விசில்’ செயலி எப்படி இருக்கும்?

kamal1_13104அரசியல் பிரவேசம் குறித்து கமல் ஏமாற்றவில்லை; ஆனால் முழுவதுமாக எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் இல்லை. தெளிவான சமிஞ்சைகளை வெளியிட்டாலும், இன்னும் பல யூகங்களை தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவாரா? எனும் கேள்வியை வைத்துக்கொண்டு ஆர்வத்தை தூண்டிக் கொண்டிருக்காமல், அரசியலுக்கு வந்துவிட்டேன் எனச்சொல்லி ஆர்வத்தை தூண்டியிருக்கிறார். ஆனால், கட்சியின் பெயர், அதன் கொள்கை, எப்போது ஆரம்பம் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் உடனடி பதில் சொல்லாமல், கட்சி அமைப்புக்கான தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதாக மட்டும் கூறியிருக்கிறார்.

பிறந்த நாளை முன்னிட்டி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், எதிர்பார்த்தபடியே அரசியல் பிரவசத்தை உறுதிப்படுத்திவிட்டு, கட்சி துவங்கும் முன் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்யப்போவதாக கூறியிருக்கிறார். இது நல்ல உத்தி மட்டும் அல்ல, சரியான செயலும் தான். உலக நாயகன் உள்ளூர் மக்களின் கருத்துக்களை நேரில் கேட்டறியட்டும்!

கமல் அறிவிப்பில் கவனத்தை ஈர்த்து விவாதிக்கும் வகையில் பல அம்சங்கள் இருந்தாலும், கட்சிக்கான பிரத்யேக செயலி அறிவிப்பும், இயக்கத்திற்கான பிரத்யேக ஹேஷ்டேகுகள் வெளியிட்டிருப்பதும் கூடுதலாக கவனத்தை ஈர்க்கின்றன. #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle   ஆகிய மூன்று ஹேஷ்டேகுகளை கமல் அறிவித்திருக்கிறார். இதில் ’மய்யம்விசில்’ ஏற்கனவே டிவிட்டரில் டிரெண்டிங் ஆகத்துவங்கிவிட்டது. இணையத்தில் ஹேஷ்டேக் என்பது முக்கியமான ஆயுதங்கள் அல்லது கருவிகள். பொருத்தமான ஹேஷ்டேக் மூலம் ஒத்த கருத்துக்களை சமூக ஊடக வெளியில் திரட்டுவதோடு, அர்த்தமுள்ள உரையாடலையும் சாத்தியமாக்கலாம். அந்த வகையில் தனக்கான ஹேஷ்டேகுகளை கமலே தேர்வு செய்து வெளியிட்டுள்ளது சரியான டிஜிட்டல் உத்தி தான். ஆனால் இந்த ஹேஷ்டேகுகள் சார்ந்த அர்த்தமுள்ள விவாதம் நடைபெறுவதை உறுதி செய்வது கமலின் கைகளில் தான் இருக்கிறது. அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்தே இதை செய்யலாம். பொருத்திருந்து பார்க்கலாம் என்ன செய்கிறார் என!

அவரது சுற்றுப்பயணத்திற்கான முன்னேற்பாடாக கூட இந்த பகிர்வுகள் அமையலாம்.

ஹேஷ்டேக் தவிர ’மய்யம்விசில்’ எனும் பெயரிலான செயலியை அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த செயலி பீட்டா வடிவில் இருப்பதாக கூறியவர், ஜனவரியில் தான் இது அறிமுகமாகும் என கூறிவிட்டார். செயலியின் அம்சங்கள் குறித்தும் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. கதை திருட்டு போல செயலி திருட்டும் நடைபெறலாம் என அஞ்சுகிறார் போலும்!

செயலியின் முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால் கமலின் அரசியல் திட்டம் குறித்து அலசியிருக்கலாம். ஆனால் இந்த செயலி ஊழல் குறித்த தகவல்களை பகிர்வதற்கான வழியாக இருக்கும் என்று மட்டுமே கமல் கூறியிருக்கிறார். தன் மீதான தவறுகளையும் சுட்டிக்காட்டலாம் என கூறியிருக்கிறார். மேலதிக விவரங்கள் இல்லை. ஆனால், இந்த செயலி எப்படி இருக்க கூடும் என்று அனுமானிப்பதைவிட, இந்த செயலி எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்துப்பார்க்கலாம்.

அதற்கு முன்னர், ஒரு புதிய அரசியல் கட்சிக்கு செயலியால் என்ன பயன்? எனும் கேள்வியை கேட்டுக்கொள்ளலாம். ஸ்மார்ட்போன்கள் மூலம், உலகம் உண்மையிலேயே உள்ளங்கையில் வந்திருக்கும் காலகட்டத்தில் மொபைல் செயலிகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. வர்த்தகம் உள்பட எல்லாத்துறைகளிலும் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசியலிலும் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கும் செயலி ஒரு அருமையான கருவி தான். ஆனால் ஒன்று, கட்சியின் செயலி என்பது வேறுபட்டதாக இருக்க வேண்டும். அதாவது, ஏற்கனவே உள்ள பிரச்சார சங்கதிகளின் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட வடிவமாக செயலி இருப்பதால் அதிக பயன் இல்லை. அவை அலுப்பையே ஏற்படுத்தும். டிஜிட்டல் தலைமுறையை விலகிச்செல்ல செய்துவிடும். மாறாக ஒரு செயலி துடிப்புடன் இருக்க வேண்டும். தொழில்நுட்ப மொழியில் சொல்வதனால் டைனமிக்காக இருக்க வேண்டும்.

டிஜிட்டல் யுகத்தில் அரசியல் கட்சிகள் செயலிகளை நாடுவதற்கான முக்கிய காரணங்கள் என டெக்யுகோ வலைப்பதிவில் வெளியான கட்டுரை ஒன்று கீழ் கண்டவற்றை பட்டியலிடுகிறது.

 • விழிப்புணர்வு- பொதுமக்கள் மத்தியில் அரசியல் கட்சியின் நோக்கம் பற்றி தெளிவாக உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 • நிதி – செயலி நிதி திரட்டுவதற்கான மேடையாக அமையலாம்.
 • செய்தி- செயலி தகவல் தெரிவிப்பதற்கான சிறந்த வழி.
 • தொடர்பு- செய்தி என்பது ஒருவழிப்பாதையாக இல்லாமல், உரையாடலாக இருக்க வேண்டும்.
 • மீடியா- செய்திகளை வெளியிடுவதற்கான வாகனம்
 • கல்வி- மக்கள் பிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
 • சமூக ஊடகம்- சமூக ஊடக பகிர்வுகள்
 • சர்வே- மக்கள் கருத்துக்களை சர்வேக்கள் மூலம் அறியலாம்.

 

விதிவிலக்கான சந்தர்பங்கள் தவிர பொதுவாக அரசியல் கட்சிகள் ஒரு வழிப்பாதை தகவல் தொடர்பையே பயன்படுத்துகின்றன. மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும் அளவிற்கு அவர்கள் கருத்துக்களை அறிய முயற்சி மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் செயலி மூலம் இதை மாற்றலாம். மக்களுடன் வெளிப்படையாக தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துக்களை அறியலாம். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் நிர்வாகிகளின் ஜால்ரா கருத்துக்களையே கேட்க நேரிடுகிறது. செயலி மூலம் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை பட்டவர்த்தனமாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பதிலும் அளிக்கத்துவங்கினால் இரு தரப்பினருக்குமே அது நலன் பயக்கும்.

முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கட்சி கருத்தை மட்டும் திணிக்காமல் முதலில் மக்கள் மன ஓட்டத்தை அறிந்து அதற்கேற்க கட்சி நிலைப்பாட்டை வகுப்பது ஜனநாயகமயமானதாக இருக்கும். முக்கிய பிரச்சனைகளை மக்களையே பரிந்துரைக்க செய்யலாம்.

வெளிப்படையாக தொடர்பு கொள்வது மூலம் மக்களிடம் நம்பகத்தன்மையை அதிகமாக்கி கொள்ளலாம். நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய கருத்துக்களையும் அறியலாம். இது கட்சியையை ஜனநாயகபூர்வமாக வைத்திருக்கும்.

செயலி மூலம் இன்னும் பல விஷயங்களை செய்யலாம். ஆனால் ஒன்று பயணர் இடைமுகம் முக்கியம். அது நட்பானதாக இருக்க வேண்டும். எதையும் வெளிப்படையாக பகிர முடிய வேண்டும். அதைவிட முக்கியமாக கருத்துக்கள் ஒரு வழிப்பாதையாக நின்றுவிடாமல் அவற்றுக்கு முறையாக பதில் அளிக்கப்பட வேண்டும்.

சமூக ஊடக பகிர்வு வசதி, பேஸ்புக் வைவ் வசதி, அரட்டை வசதி, அறிக்கை வெளியீடு உள்ளிட்ட அம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவை எல்லாவற்றையும் விட, மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துக்களை அறிந்து செயல்படும் வழியில் செயலி இருக்க வேண்டும். நிதி திரட்டுவது பற்றி கமல் பேசியது, எல்லாவற்றையும் பதிவு செய்யும் முறையை சுட்டிக்காட்டுகிறது.

கமல் செயலி பற்றி தனியே பேசாமல் மக்கள் தொடர்புக்கான டிஜிட்டல் அரங்கின் ஒரு அம்சமாக இதை சொல்லியிருப்பது நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. தொழில்நுட்ப போக்குகளை நன்கறிந்த கமல், டிஜிட்டல் உலக சாத்தியங்களை தனது இயக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் மேடையை உருவாக்கினார் என்றால் அது நிச்சயம் ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும்.

செயலி, டிஜிட்டல் அரங்கம் எல்லாம் நவீன உத்திகள் தான். ஆனால் இவை மட்டும் போதாது. களத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை கொண்டே இந்த உத்திகள் பயன் தரும்.

கமல் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதை தக்க வைத்துக்கொள்கிறாரா என்பது தான் முக்கியமான கேள்வி!

 

=—

நன்றி; யுவர்ஸ்டோரி தமிழ் இணையதளத்தில் எழுதியது

டிஜிட்டல் தலைமுறைக்கு தனித்திறன் உண்டா?

GettyImages-150007692டிஜிட்டல் உலகிலும் மண்ணின் மைந்தர்கள் உண்டு. இவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆங்கிலத்தில் டிஜிட்டல் நேட்டிவஸ்!. பொதுவாக 1980 களுக்கு பிறகு பிறந்த தற்கால தலைமுறையினர் அனைவரும் இந்த பிரிவின் கீழ் வருகின்றனர். அதற்கு முந்தைய தலைமுறையினர் எல்லோரும் டிஜிட்டல் குடியேறிவர்கள் என கருதப்படுகின்றனர். இதை பாகுபாடு என கொள்வதா அல்லது வகைப்படுத்தல் என கொள்வதா என்பது கேள்விக்குறியது தான்.

இணையம் தொழில்நுட்பங்களையும், டிஜிட்டல் கருவிகளையும், சேவைகளையும் வெகு இயல்பாக பயன்படுத்தும் திறன் அடிப்படையில் இந்த வகைப்படுத்தல் அமைகிறது. இப்போது பிறக்கும் குழந்தைகள் ஐபேட் சாதனத்துடனும், ஸ்மார்ட்போனுடனும் பிறப்பதாக நாமே கூட பல முறை வியப்பதுண்டு அல்லவா! இப்படி வியக்க வைக்கும் பிள்ளைகள் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள். டிஜிட்டல் உலகம் அவர்களின் தாய் வீடு போல. எனவே அவர்களால் கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட்போனையும், பேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தானாகவே பழகிக்கொள்ள முடியும். டிஜிட்டல் சங்கதி என்று வரும் போது அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டும் அல்ல ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தக்கூடியவர்களாக இருப்பதாகவும் சொல்லலாம்.

இப்படி கம்ப்யூட்டரும், இணையமும் அவர்கள் உடன் பிறந்த நுட்பங்களாக இருப்பதால் கம்ப்யூட்டர் யுகத்திற்கு பிறந்தவர்கள் எல்லாம் டிஜிட்டல் மைந்தர்களாக அறியப்படுகின்றனர். முந்தைய தலைமுறையினர் இணைய பயன்பாட்டில் என்ன தான் கில்லாடிகளாக இருந்தாலும், அவர்கள் டிஜிட்டல் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு புதிய யுகத்திற்கு ஏற்ப மாறியவர்களாக கருதப்படுவதால், டிஜிட்டல் உலகில் குடியேறிவர்களாக குறிப்பிடப்படுகின்றனர். அதாவது டிஜிட்டல் இமிகிரண்ட்ஸ்!.

இந்த வகைப்படுத்தல் எந்த அளவுக்கு சரி என்பது இருக்கட்டும், இக்கால தலைமுறை டிஜிட்டல் தலைமுறையாக கருதப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருக்கிறது. இளம் பெண்களும், பையன்களும், கையில் போனை வைத்துக்கொண்டு குறுஞ்செய்தி தட்டச்சு செய்யும் வேகத்தையும், காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு தன்னை மறந்தவர்களாக உலாவுவதையும் பார்க்கும் போது இவர்கள் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போல தான் தோன்றும். இந்த அளவுக்கு தொழில்நுட்ப உலகில் மூழ்கி விடுவது நமக்கெல்லாம் சாத்தியம் இல்லை என முந்தைய தலைமுறையினர் எண்ணலாம்.

ஆனால் விஷயம் என்னவெனில் இதெல்லாம் வெற்று மாயை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது தான். அதாவது முந்தைய தலைமுறையோ, இந்த தலைமுறையோ தொழில்நுட்ப பயன்பாடு என்று வரும் போது, யாருக்கும் தனித்திறன் எல்லாம் கிடையாது எனத்தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்க பலூனை ஊசியால் குத்தி காற்றுப்போக வைத்திருக்கும் இந்த ஆய்வை பற்றி பார்ப்பதற்கு முன், அமெரிக்க கல்வியாளரான மார்க் பிரென்ஸ்கை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் இவர் தான், டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கத்தை துவக்கி வைத்தவர்.

2001 ம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள், டிஜிட்டல் குடியேறியேறிவர்கள் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார். கட்டுரையின் தலைப்பே ’டிஜிட்டல் பூர்வகுடிகள், டிஜிட்டல் குடியேறியேறிவர்கள்’ என அமைந்திருந்தது. அமெரிக்க கல்வித்தரத்தில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் வீழ்ச்சி பற்றிய விவாதத்துடன் துவங்கிய இந்த கட்டுரையில், இதற்கான மூலக்காரணம் நம்முடைய மாணவர்கள் எல்லாம் மிகவும் மாறிவிட்டனர், இன்றைய மாணவர்கள் நம்முடைய கல்வி அமைப்பு கற்றுத்தரக்கூடியவர்களாக இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

கல்வி அமைப்பில் தேவையான மாற்றத்தை தொடர்ந்து வலியுறுத்தியவர், இன்றைய மாணவர்கள் புதிய மாணவர்களாக இருக்கின்றனர், அவர்கள் கம்ப்யூட்டர், வீடியோகேம், இணையத்தின் மொழியை இயல்பாக பேசும் டிஜிட்டல் பூர்வகுடிகளாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம், அதாவது டிஜிட்டல் உலகில் பிறக்காமல் புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை கற்றுக்கொண்டவர்களாகவே இருப்பதால் அவர்களை டிஜிட்டல் குடியேறியவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். கல்வியாளர்களும், வர்த்தக நிறுவனங்களும் பழைய வழிகளை தூக்கியெறிந்துவிட்டு, டிஜிட்டல் தலைமுறைக்கு ஏற்ற புதிய வழிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த கட்டுரையில் வாதிட்டிருந்தார்.

இதன் பிறகு டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கம் மெல்ல வலுப்பெற்று பரவலாகி விட்டது. கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்பங்கள் நிறைந்த யுகத்தில் பிறந்து வளரும் தலைமுறை, டிஜிட்டல் நுட்பங்களை தாய்மொழி போல கற்றுக்கொண்டு விடுவதாகவும் கருதுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்தாக்கம் அறிவியல் சார்ந்தது அல்ல என்பது மட்டும் அல்ல, இடைப்பட்ட காலத்தில் பல ஆய்வுகள் இந்த கருத்தாக்கத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.

இந்த வரிசையில் தான் அண்மையில், நெதர்லாந்து ஆய்வாளர் பால் கிற்ச்னர் ( ) மற்றும் அவரது சகா பெட்ரோ டி புருக்கரே ( ) இணைந்து நடத்திய ஆய்வு அமைந்துள்ளது. ’டீச்சிங் அண்ட் டிச்சர் எஜுகேஷன்’ எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, டிஜிட்டல் பூர்வகுடிகள் என இக்கால தலைமுறையினரை கருதுவதே ஒரு மாயை என தெரிவிக்கிறது. உயர் கல்வியில் நுழையும் புதிய இளம் மாணவர் தலைமுறைக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், இணைய தலைமுறை மற்றும் டிஜிட்டல் பூர்வகுடிகள் என்று சொல்வதெல்லாம் இப்போது நிகழும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையைச்சேர்ந்த பலரும், முந்தைய தலைமுறை ;போல தான் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதாகவும் ஆய்வு தெரிவிப்பதாக இது தொடர்பான நேச்சர் பத்திரிகை கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

மக்களை வழக்கமான முறையில் கற்றுக்கொள்ளக்குடியவர்களாக தான் பார்க்க வேண்டுமேத்தவிர, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை விஷேச திறன் கொண்டவர்களாக பார்க்க முடியாது என்று ஆய்வை முன்னின்று நடத்திய பால் கிற்ச்னர் கூறியுள்ளார். அது மட்டும் அல்ல, இணைய தலைமுறை ஒரே நேரத்தில் பல வேலை பார்க்க கூடியவர்களாக இருப்பதாக கூறப்படுவதையும் இந்த ஆய்வு மறுத்துள்ளது. வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டே, போனில் செய்தி அனுப்புவது ஒரே நேரத்தில் பலவற்றை செய்யும் மல்டிடாஸ்கிங் ஆற்றல் அல்ல, பாடத்தில் கவனம் செல்லாமல் இருப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் யுகம் தொடர்பான பிரதான மாயை தகர்க்கும் வகையிலான இந்த ஆய்வு பலவிதங்களில் இது முக்கியமானது தான். ஏனெனில் டிஜிட்டல் பூர்வகுடிகள் என்று யாருமே கிடையாது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மாயை கலைவது நல்லது தான்.

இந்த இடத்தில், டிஜிட்டல் பூர்வகுடிகள் கருத்தாக்கத்தை முதலில் தெரிவித்த மார்க் பெர்ன்ஸ்கையை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். பெர்ன்ஸ்கை, இந்த கருத்தாக்கம் ஏற்படுத்திய விவாதங்களையும், சர்ச்சையையும் அறியாமல் இல்லை. எனவே தான் இந்த கருத்தாக்கத்திற்கு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். டிஜிட்டல் பூர்வகுடி எனும் பதத்தை பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர், நம்மைச்சுற்றி நடக்கும் மாற்றத்தை குறிப்பதற்கான உருவகமே இந்த பதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிறந்தவர்களுக்கு எல்லாம் தொழில்நுட்பம் பற்றி எல்லாம் தெரியும் எனும் அர்ததத்தில் இந்த பதம் அமையவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்த பதம் உண்மையில், தொழில்நுட்பம் தொடர்பான அணுகுமுறையை மட்டுமே குறிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அது மட்டும் அல்ல, இந்த பதத்திற்கு பதிலாக டிஜிட்டல் ஞானம் எனும் பதத்தை அவர் பயன்படுத்தி வருகிறார்.: http://marcprensky.com/digital-native/

 

 

தளம் புதிது: பிட்காயினால் என்ன பயன்?

எண்ம நாணயம், இணைய நாணயம் என்றெல்லாம் பலவிதமாக குறிப்பிடப்படும் மெய்நிகர் நாணயமான பிட்காயின் தொடர்பான ஆர்வம் பரவலாக அதிகரித்து வருவதோடு, அதன் மதிப்பும் அதிகரித்தபடி தான் இருக்கிறது. மையமில்லாத பணம், எதிர்கால பணம் போன்ற காரணங்களுக்காக பிட்காயினை ஆதரிப்பவர்கள் இருந்தாலும், பிட்காயினை ஒரு முதலீடாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கேற்பவே பிட்காயினுக்கு நிகரான மதிப்பும் எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கி வைத்திருந்தால் இன்று அதன் மதிப்பு எங்கோ போயிருக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இப்படி பிட்காயின் மதிப்பு எங்கே போயிருக்கும் என்பதை உணர்த்துவதற்காக என்றே ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. வாட் இப் பிட்காயின் எனும் அந்த தளத்தில் 2011 ம் ஆண்டு முதல் பிட்காயினில் முதலீடு செய்திருந்தால் அதற்கு இப்போது என்ன மதிப்பு இருக்கும் என கணக்கிட்டு சொல்லப்படுகிறது.

பிட்காயின் மதிப்பை தெரிந்து கொள்ள இந்த இணையதளம் உதவலாம். ஆனால் இந்த தளத்தைப்பார்த்துவிட்டு பிட்காயினை வாங்க தீர்மானிப்பது எல்லாம் ரிஸ்கானதாக இருக்கும். ஏனெனில் பிட்காயினை ஒரு முதலீடாக கருதலாம் தப்பில்லை. ஆனால் எல்லா முதலீடுகள் போலவே அதுவும் ரிஸ்கானது தான் என்பதை உணர வேண்டும்.

இணைய முகவரி: http://whatifbitcoin.com

 

செயலி புதிது; ஒளிப்படங்களை மேம்படுத்தும் செயலி

ஸ்மார்ட்போன்களில் ஒளிப்படங்களை எடுக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு காமிரா செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் ஓபம் காமிரா செயலியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒளிப்படக்காட்சிகளை அசைவுகள் இல்லாமல் தானாக நிலைப்படுத்துவது உள்பட பல்வேறு அம்சங்களை இந்த செயலி கொண்டிருக்கிறது. குரல் வழி மூலுமும் இதில் படம் எடுக்கலாம். சுயபடங்கள் எடுப்பதற்கான விஷேச வசதியும் இருக்கிறது.

படங்களின் கோப்பு அளவு சிறியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புற மைக்ரோபோனை இணைக்கும் வசதியும் உள்ளது. படத்துடன் நாள் , நேரம் ஆகிய விவரங்களை சேர்ப்பதோடு, ஒளிப்பட குறிப்பையும் சேர்க்கலாம். பல வகையான காட்சி அமைப்பு மற்றும் வண்ணம் சேர்க்கும் வசதியும் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு: http://opencamera.org.uk/

பிட்காயின் ஒரு அறிமுகம்!

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போது பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இணைய உலகை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதலுக்கு காரணமாக தாக்காளர்கள் (ஹேக்கர்கள்) பிணைத்தொகையாக பிட்காயினை கேட்டதும் இந்த டிஜிட்டல் நாணயம் மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைய நிழல் உலகம் என சொல்லப்படும் இருண்ட வலையில் (டார்க் வெப்) பிட்காயின் பயன்பாடு அதிகம் இருப்பதும், இதன் முக்கிய அம்சமாக சொல்லப்படும் அனாமதேய தன்மையும் பிட்காயின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

இதனிடையே பிட்காயின் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அரசு கோரியதும், அண்மையில் நிதி அமைச்சர் பிட்காயின் குறித்து ஆலோசனை நடத்தியதும், அதென்ன பிட்காயின் என பலரையும் கேட்க வைத்துள்ளது.

இணைய உலகின் அற்புதம் என அதன் ஆதாரவாளர்களாலும், இணைய பூதம் என அதன் எதிர்ப்பாளர்களாலும் கருதப்படும் பிட்காயின் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? பிரச்சனைகள் என்ன? போன்றவை குறித்து பார்ப்போம்…

பிட்காயின் என்றால் என்ன? இந்த கேள்விக்கு பலவிதமாக பதில் அளிக்கலாம். பிட்காயின் என்பது ஒரு வகையான மெய்நிகர் பணம் அல்லது டிஜிட்டல் பணம். இணையத்திற்கான பணம் என்றும் குறிப்பிடப்படும் பிட்காயின் கொண்டு பொருட்களை வாங்கலாம், விற்கலாம். பிட்காயினில் முதலீடு செய்யலாம். ஆனால் இந்த பணத்தை கண்ணால் பார்க்க முடியாது, கையால் தொட முடியாது. ஏனெனில் இதற்கு உருவம் கிடையாது. பிட்காயின் எண்ம வடிவிலானது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக் மென்பொருளால் அடையாளம் காணக்கூடிய கம்ப்யூட்டர் நிரல் துண்டுகளால் ஆனது என வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், இந்த பதில்களால் பிட்காயினை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதன் அடிப்படை கோட்பாட்டையும், அதற்கே உரிய தனிச்சிறப்பான அம்சங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிட்காயின் என்பது அடிப்படையில் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு மின்னணு முறையில் வைத்திருந்து பரிவர்த்தனை செய்யப்படும் ஒரு வகையான டிஜிட்டல் பணம். பிட்காயின் என்பது டிஜிட்டல் பணம் மட்டும் அல்ல, அந்த பணம் செயல்படுவதற்கான பரிவர்த்தனை அமைப்பும் தான். இதையே வேறு விதமாக சொலவது என்றால், மற்ற பணம் போல் பிட்காயின் எந்த ஒரு நாட்டு அரசாலும் வெளியிடப்படுவதில்லை: எந்த மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அதனை அச்சிடவும் முடியாது. அதனால் தான் பிட்காயின் மையமில்லா பணம் என்று சொல்லபடுகிறது.

இந்த தன்மையால் தான் பிட்காயின் ஆர்வலர்கள் அதை நேசிக்கின்றனர். மத்திய வங்கிகளும், அரசாங்களும் இதை சந்தேகமாக பார்க்கின்றனர். தாக்காளர்களும், இணைய திருடர்களும் பிட்காயினை விரும்பி நாட இதுவே காரணம்.

பிட்காயின் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், குழப்புகிறதா? அதன் பின்னே உள்ள நுணுக்கங்கள் அப்படி!

கொஞ்சம் பொறுமையாக பிட்காயினை புரிந்து கொள்ள முயற்சிப்போம். முதலில் பிட்காயின் தோற்றம் பற்றி சில தகவல்கள். பிட்காயின் டிஜிட்டல் பணம் என்று குறிப்பிடப்பட்டாலும் அது முற்றிலும் புதுவகையான நாணயம். டிஜிட்டில் வடிவிலான எல்லா பரிவர்த்தனைக்கும் அதை முறைப்படுத்தக்கூடிய ஒரு மூன்றாம் அமைப்பு தேவை. அது வங்கியாக இருக்கலாம் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனமாக இருக்கலாம். ஆனால் பிட்காயினை, இப்படி எந்த ஒரு மூன்றாம் அமைப்பும் இல்லாமலே வாங்குபவரும், பெறுபவரும் நேரடியாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இப்படி, இடைத்தரகர்கள் இல்லாத, பயணாளிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையே பிட்காயினின் ஆதாரம் அம்சங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

எல்லாம் சரி, நேரடியாக பரிவர்த்தனை செய்யலாம் என்றால், ஒரே பிட்காயினை பலருக்கு கொடுப்பது போன்ற ஏமாற்று வேலைகள் எல்லாம் நடக்காதா? என கேட்கலாம். அப்படி எதுவும் நடக்க முடியாத அளவுக்கு, பிட்காயின் பரிவர்த்தனைக்கான முறை பக்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. சமகால வங்கி அமைப்புகளே வியந்து போகும் பிளாக்செயின் எனப்படும் இந்த நுட்பம் பிட்காயினின் இன்னொரு தனிச்சிறப்பாக அமைகிறது. கள்ள நாணயம் அல்லது கருப்பு பிட்காயினுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லாத வகையில் பிட்காயினுக்கான ஆதார வலைப்பின்னல் அமைப்பு அமைந்துள்ளது.

இந்த அமைப்பு பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். இப்போது பிட்காயின் தோற்றத்தை கவனிக்கலாம். பிட்காயினை விட அதன் தோற்றம், புதிரானது என்பது சுவாரஸ்யமான விஷயம். 2009 ல் சடோஷி நாகமோட்டோ என்பவர் முன்வைத்த இணைய அறிக்கையில் இருந்து தான் பிட்காயின் உருவானது. ஆனால் இன்று வரை யார் இந்த சடோஷி என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர் ஒருவரா? அல்லது பலரா? என்பதும் தெரியாது. யார் இந்த சடோஷி என்பதை கண்டுபிடிப்பதற்கான தேடல் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கிறது.

விஷயம் என்னவெனில், 2009 ல் மூன்றாம் தரப்பு துணை இல்லாமலே இரு நபர்கள் நேரடியாக பரிவர்த்தனை செய்து கொள்வதற்கான கம்ப்யூட்டர் சார்ந்த முறையை பிட்காயின் ஒரு சகாக்களிடையேயான மின்னணு பண பரிவர்த்தனை முறை எனும் தலைப்பிலான கட்டுரை சடோஷி பெயரில் இணையத்தில் வெளியானது. இந்த பரிவர்த்தனையை உறுதி செய்வதற்கான அடிப்படையையும் அவர் வெளியிட்டிருந்தார். இணைய ஆர்வலர்கள் பலருக்கு இந்த முறையின் பின்னே இருந்த கோட்பாடு பிடித்துப்போகவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்க உதவும் மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தனர்.

இப்படி தான் பிட்காயின் புழக்கத்திற்கு வந்தது. மத்திய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படாத தன்மை மற்றும் பரிவர்த்தனைக்கு பின்னே உள்ளவர்கள் அடையாளம் காணப்படாமல் அனாமதேயமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இணைய ஆர்வலர்களை கவர்ந்திழுக்கவே இணைய உலகில் இந்த நாணயம் பிரபலமாகத்துவங்கியது.

கட்டுப்பாடில்லாத, மையமில்லா நாணயம் என்பது சரி. அப்படி எனில் பிட்காயினை வெளியிடுவது யார்? அது எப்படி புழக்கத்திற்கு வருகிறது? பிட்காயினை யாரும் வெளியிடுவதில்லை: மாறாக எல்லோரும் சேர்ந்து அதை உருவாக்கி புழக்கத்திற்கு கொண்டு வருகின்றனர். அதெப்படி?

பிட்காயின் என்றால், கண்ணுக்குத்தெரியாத கம்ப்யூட்டர் நிரல் துகள்களால் ஆனது அல்லவா? இந்த டிஜிட்டல் துகள்கள் பிட்காயின் மென்பொருளில் இருந்து, ஒரு வகையான கணித புதிரை விடுவிப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. மென்பொருளை தரவிறக்கம் செய்து, கணித புதிரை விடுவித்தால் அதற்கான பரிசாக புதிய பிட்காயினை பெறலாம். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு பிட்காயின் விடுவிக்கப்படும்.

பிட்காயின் உருவாக்கத்தில் சில முக்கியமான விதிகள் இருக்கின்றன. முதல் விஷயம் பிட்காயின் உருவாக்கத்திற்கு என்று ஒரு இறுதி வரம்பு இருக்கிறது. இஷ்டம் போல பிட்காயினை உருவாக்கி கொண்டிருக்க முடியாது. இன்றைய தேதிக்கு 11 மில்லியன் பிட்காயின் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக மொத்தம் 21 மில்லியன் பிட்காயின் தான் உருவாக்கப்பட முடியும். இதற்கான கெடு 2140 என கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது வரை பிட்காயின் உருவாக்கம் கடினமாகி கொண்டே இருக்கும். அதாவது போகப்போக பிட்காயின் புதிரை விடுவித்து புதிய பிட்காயின்களை விடுவிப்பது மிகவும் கடினமாகும். இதற்கு இன்னும் கூடுதலான கம்ப்யூட்டர் ஆற்றல் தேவை. இதுவே பிட்காயின் உலகின் மைனிங் என சொல்லப்படுகிறது. பிட்காயினை டிஜிட்டல் முறையில் தோண்டியெடுப்பது என்றும் புரிந்து கொள்ளலாம்.

இதில் இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டும். பிட்காயின் என்பது நாணயம் மற்றும் அது செயல்படுவதற்கான அமைப்பும் என்று பார்த்தோம் அல்லவா? அதாவது பிட்காயின் உருவாக்கம் மற்றும் அதன் பரிவர்த்தனை இரண்டையும் மைனிங் தான் நிறைவேற்றித்தருகிறது. பிட்காயின் புழக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப அதை பராமரிப்பதற்கு தேவையான ஆற்றலும் அதிகரிக்கும் தானே. அதனால் தான் பிட்காயின் உருவாக்கத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் ஆற்றலும் அதிகரிக்கும் வகையில் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக, கூடுதல் பிட்காயின் தேவை எனில் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களை அமைப்பில் இணைந்து பிட்காயினை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அதிகரிக்கும் பிட்காயின் புழக்கத்தை கையாளும் திறனும் அமைப்பிற்கு உண்டாகும்.

கம்ப்யூட்டர் ஆற்றலை அளித்து மைனிங்கில் ஈடுபட்டால் பிட்காயினை விடுவித்து அதற்கு பரிசாக பிட்காயின் பெறலாம் சரி, ஆனால் பிட்காயினை பயன்படுத்துவது எப்படி?  அதை வைத்திருப்பது எப்படி? அதன் கொடுக்கல் வாங்கலை கண்காணிப்பது எப்படி?

இந்த கேள்விகளுக்கான பதில் பிட்காயினுக்கான பிளாக்செயின் முறையில் உள்ளது. பிளாக்செயினை டிஜிட்டல் பதிவேடு என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஒவ்வொரு முறை பிட்காயின் பரிவர்த்தனை செய்யப்படும் போது அதற்கான குறிப்பு இந்த பதிவேட்டில் இடம்பெறும். இது தான் பரிவர்த்தனைக்கான ஆதாரம். இந்த பதிவேட்டை பராமரிக்க ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா? அப்போது தானே ஏமாற்று வேலைகள் நடக்காமல் இருக்கும். ஆனால் அப்படி எந்த பராமரிப்பாளரும் கிடையாது. மையம் என்பதே பிட்காயினில் கிடையாதே, என்ன செய்ய!

எனில், பிட்காயின் பரிவர்த்தனையை உறுதி செய்வது எப்படி? பிளாக்செயின் பதிவேட்டில் தான் இதற்கான பதில் அடங்கியிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு பதிவேடு இருக்கும் என்பதும், ஒவ்வொரு பரிவர்த்தனையும் எல்லா பதிவேட்டிலும் பதிவாகும் என்பது தான் விஷயம். ஆக, ஒரு முறை பரிவர்த்தனை நிகழ்ந்தால் அதற்கான குறிப்பு எல்லா பதிவேட்டிலும் அப்டேட் செய்யப்படும். இதன் பொருள் இதுவரை நிகழ்ந்த பரிவர்த்தனைகள் மற்றும் இனி நிகழ்ப்போகும் பரிவர்த்தனைகள் என எல்லாவற்றுக்குமான குறிப்புகளுடம் பிளாக் செயின் பதிவேட்டில் அப்டேட்டாகி  கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு நடக்கும் பரிவர்த்தனைகள் ஒரு பிளாக்காக சேர்க்கப்பட்டு ஏற்கனவே பதிவேட்டில் உள்ள பிளாக்கில் சேர்க்க்கப்படும். ஒருங்கிணைந்த பிட்காயின் மென்பொருள் கொண்டு பிட்காயின் சமூகத்தினர் தங்கள் கம்ப்யூட்டரை இணைத்து இவற்றை செய்து வருகின்றனர்.

எனவே பிடிகாயின் பரிவர்த்தனையில் போலி செய்வது, ஏமாற்றுவது சாத்தியம் இல்லை. எல்லா விவரத்திற்கும் பிளாக்செயின் சாட்சி. இந்த நுட்பத்தை தான் வங்கி அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த அம்சமே பிட்காயினை எதிர்கால நாணயமாக இருக்கும் என்றும் பேச வைக்கிறது.

பிட்காயினை தோண்டியெடுக்க பெரும் கம்ப்யூட்டர் ஆற்றல் தேவை என்பதால் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. அதற்கான கவலைப்பட வேண்டாம், டாலர் அல்லது ரூபாய் போன்ற நாணயம் கொண்டு பிட்காயினை வாங்கிக்கொள்ளலாம். இதற்கான பிட்காயின் இணைப்பகங்கள் இணையத்தில் இருக்கின்றன. சில நாடுகளில் பிட்காயின் ஏ.டி.எம்கள் கூட இருக்கின்றன. நாணயம் வாங்குவது போல அன்றைய சந்தை விலையில் பிட்காயினை வாங்கலாம்.

சந்தையில் பிட்காயினுக்கான தேவைக்கு ஏற்ப அதன் மதிப்பு அமைகிறது. இன்றைய தேதிக்கு பிடிகாயினுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் ஒரு பிடிகாயினின் மதிப்பு 2,400 டாலருக்கு மேல். இந்திய மதிப்பை கேட்டால் தலைசுற்றும். ஒரு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்துக்கு மேல். கற்பனை செய்து பாருங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் பிட்காயின் வாங்கி வைத்திருந்தால் இப்போது எப்படி இருக்கும் என்று! பிட்காயின் ஒரு முதலீடாக கவர்வதற்கான காரணம் இந்த எகிரும் மதிப்பு தான். ஆனால் இடையே பிட்காயின் மதிப்பு சரிந்த காலங்களும் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். பங்குச்சந்தை போன்றது தான் அதுவும்.

இந்தியாவின் ஜெப்பே, காயின்செக்யூர் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிட்காயினை வாங்கி விற்க வழி செய்கின்றன.

பிட்காயின் மோகத்திற்கான பதில் இப்போது கிடைத்திருக்கும். சரி, பிட்காயினை எப்படி கையாள்வது? இதற்காக என்று பிட்காயின் வாலெட்கள் இருக்கின்றன. வாலெட்கள் என்றால், மின்னணு பர்ஸ் போன்றவை. இதில் தான் பிட்காயின் வீற்றிருக்கும். எண்ம நாணயம் என்பதால், இதை விடுவிக்கவும் வாங்கவும், மின்னணு பர்சிற்கான இரண்டு சாவிகள் உண்டு. ஒரு சாவி பொதுவானது. அதை பரிவர்த்தனையின் போது பகிரலாம். மற்றொரு சாவி தனிப்பட்டது. அதை ரகசியமாக வைத்திருந்து இயக்கலாம். இந்த ரகசிய சாவியே பிட்காயின் பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக்குகிறது.

இனி முக்கிய கேள்விகளுக்கு வருவோம். பிட்காயின் எதிர்காலம் என்ன? அது எந்த அளவு சட்டபூர்வமானது?

பிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது சுவாரஸ்யமான கேள்வி. அதன் ஆதாரவாளர்கள் பிட்காயின் தான் எதிர்கால பணம் என்று கொண்டாடுகின்றனர். தொழில்நுட்ப ஆர்வலர்கள் பலரும் இதன் அம்சங்களால் கவரப்பட்டு பிட்காயினுக்கு தாவுகின்றனர். தடயம் இல்லாத பரிவர்த்தனை என்பதால் தாக்காளர்கள் பிணைத்தொகை கேட்டாலும் பிட்காயினாக கேட்கின்றனர்.

மையமில்லாத பணம் என்பதால் மத்திய வங்கிகள் பிட்காயினை சந்தேகத்துடனே நோக்குகின்றன. பிட்காயினுக்கான சட்டபூர்வ அந்தஸ்து நாட்டுக்கு நாடு மாறுகிறது. ஒருசில நாடுகள் பிட்காயின் பரிவர்த்தனையை சட்ட விரோதமானதாக அறிவித்துள்ளன ஆனால் பணமாக பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பான அணுகுமுறை மற்றும் கட்டுப்பாடுகளும் மாறுபடுகின்றன.

இந்தியாவை பொருத்தவரை பிட்காயின் பயன்பாட்டிற்கு அவரவரே பொறுப்பு என ரிசர்வ வங்கி சில மாதங்களுக்கு முன் எச்சரித்துள்ளது. அதன் பிறகு மத்திய நிதி அமைச்சகம் சார்பில் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் நாணயங்கள் ( பிட்காயின் போலவே வேறு பல நாணயங்களும் உள்ளன) தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசும் டிஜிட்டல் நாணயங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை இணையம் மூலம் கோரியது. அண்மையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது.

பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களை கட்டுப்படுத்துவது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான விவாதமும் தீவிரமாகி வரும் நிலையில் பிட்காயின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

 

ரொக்கமில்லா சமூகம் சாத்தியமா? அலசும் ‘டிஜிட்டல் பணம்” புத்தகம்

vanigaபணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சையும், விவாதமும் தீவிரமடைந்து சற்று ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மையமாக கொண்டு டிஜிட்டல் பணம் புத்தகம் வெளியாகி இருக்கிறது. பத்திரிகையாளரும், தொழில்நுட்ப வலைப்பதிவாளருமான சைபர்சிம்மன் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொதுமக்களுக்கு ஒரு பக்கம் பெரும் இன்னலை ஏற்படுத்தினாலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை சார்ந்த ரொக்கமில்லா சமூகம் தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்தியா போன்ற நாட்டில் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது சாத்தியம் தானா? எனும் கேள்வியும் பலரால் கேட்கப்பட்டது. இதற்கான பதில்கள் மாறுபட்ட நிலையில், எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிவரும் உலகில் பணமும் டிஜிட்டல்மயமாவது தவிக்க இயலாதது என வாதிடுகிறது ‘டிஜிட்டல் பணம்’ புத்தகம்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகம் ரொக்கமில்லா சமூகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதை விவரிக்கும் இந்த புத்தகம், இந்தியா போன்ற நாடுகளில், இதற்கு கைகொடுக்க கூடிய மொபைல் பணம் தொடர்பான விரிவாக பேசுகிறது.

சாதாரண செல்போன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை சாத்தியமாக்கும் மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகள் பற்றி விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகள் இந்தியாவில் நடைபெற்று வருவதை அடையாளம் கட்டுரைகள் நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்.

 

இந்த புத்தகம் தொடர்பான கேள்விகளுக்கு சைபர்சிம்மன் அளித்த பதில்கள் வருமாறு:

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதியது ஏன்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின், ரொக்க பணத்திற்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது தொடர்பான அவசியத்தை வலியுறுத்தி இந்த புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் உண்டானது. ஏடிஎம் வாயில்களில் நீண்ட வரிசையில் மக்கள் கால் கடுக்க காத்திருந்த நிலையில், பொது கருத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு எதிராக அமைந்த நிலையில் இந்த புத்தகத்திற்கான தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன்.

டிஜிட்டல் பணம் இந்தியாவுக்கு எல்லாம் சரிபட்டு வராது என பரவலாக கருதப்பட்ட சூழலில் இந்த புத்தகத்தை எழுத தீர்மானித்ததற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதன்மையானது கென்யாவில் எம்-பெசா எனும் மொபைல் பணம் பெரும் வெற்றி பெற்று ஒரு முன்னோடி முயற்சியாக இருந்ததை அறிந்திருந்தது தான். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மொபைல் மூலமான பண பரிவர்த்தனை சரியாக வரும் எனில் இந்தியாவிலும் இந்த சிக்கலுக்கான பதில் மொபைல் பணமாக தான் இருக்க வேண்டும் என நம்பினேன்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், மொபைல் பணம் என்பது பரவலாக அறியப்பட்ட மொபைல் வாலெட்டில் இருந்து வேறுபட்டது. இது சாதாரணா செல்போனிலேயே செயல்படக்கூடியது. அதனால் தான் எம்-பெசா கென்யாவில் வெற்றி பெற்று மற்ற ஏழை நாடுகளிலும் பரவலானது . உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவிலும் மொபைல் பணம் செயல்படுத்தப்படுவதை கட்டுரைகள் வாயிலாக அறிய முடிந்தது.

எம்-பெசா பற்றிய புரிதலே இந்த புத்தகம் எழுத மூலக்காரணம். அதே போலவே தொழில்நுட்பத்தின் மீது எனக்கிருந்த ஆர்வமும், நம்பிக்கையும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. டிஜிட்டல்மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் தவிர்க்க இயலா தன்மையை அறிந்திருப்பதால் பணமும் டிஜிட்டல்மயமாக வேண்டும் என நினைத்தேன். அதுவே இந்த புத்தகத்தை எழுத மூலக்காரணம்.

moneyரொக்கமில்லா சமூகம் ஏன் தேவை என நினைக்கிறீர்கள்?

பண பரிவர்த்தனை தொடர்பான வரலாற்று செய்திகளை தேடிப்படித்த போது இன்னும் கூடுதல் புரிதல் கிடைத்தது. ரொக்கமில்லா சமூகம் எனும் கருத்தாக்கத்தின் துவக்கப்புள்ளி காசோலை இல்லா சமூகம் எனும் புள்ளியிலிருந்து துவங்குவதையும், கம்ப்யூட்டர்களின் வருகை மற்றும் பயன்பாடு இதற்கு முக்கிய காரணம் என்பதையும் அறிய முடிந்தது. இந்த வரலாறு பற்றிய கட்டுரைகள் புத்தகத்தின் துவக்கமாக அமைந்துள்ளன.

உண்மையில், தந்தி மூலமான தகவல் பரிமாற்றம் பண பரிவர்த்தனைக்கு உதவிய காலத்திலேயே பணம் டிஜிட்டல் மயமாவது துவங்கிவிட்டது. இப்போது நவீன தொழில்நுட்பம் இதை மேலும் செழுமையாக்கியுள்ளது.

இவைத்தவிர ஸ்வீடன் போன்ற நாடுகள் ரொக்கமில்லா சமூகத்திற்கு மாறியுள்ள தகவலும் என்னை ஈர்த்தன. ஸ்விடனில் ரொக்கமில்லா சமூகத்திற்கான கருத்தாக்கம் வேரூன்றிய விதமும், செயல்படுததப்படும் விதமும் தனிக்கட்டுரைகளாக அமைந்துள்ளன.

ஸ்வீடன் சரி, இந்தியாவுக்கு எப்படி பொருந்தும் என கேட்பர்வர்களுக்கு பதிலாக நம் நாட்டிலேயே விளிம்பு நிலை மக்களுக்கு மொபைல் பணம் மூலம் நிதிச்சேவைகளை கொண்டு சேர்க்கும் எகோ மணி, பீம் மணி போன்ற முயற்சிகள் அமைந்துள்ளன. இவை பற்றிய தனிக்கட்டுரைகள் உள்ளன. இது தவிர வங்கதேசத்தில் மொபைல் போனை ஏழைகளுக்கு கொண்டு சென்ற முன்னோடி தொழில்முனைவோரான இக்பால் காதீர் பற்றியும் எழுதியுள்ளேன்.

உண்மையில் ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம் பற்றிய வல்லுனர்கள் விவாதம் மற்றும் சந்தேகங்களை மீறி, மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொலைநோக்கு மிக்க மனிதர்களின் முயற்சியே இந்த புத்தகத்தை எழுதும் உத்வேகத்தை தீவிரமாக்கியது.

அதென்ன மொபைல் பணம்?

இந்த புத்தகத்தை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது,  ரொக்கமில்லா சமூகத்தில் வாழந்து பார்த்த மனிதர்களின் பரிசோதனை முயற்சியும் அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக பணத்தின் வரலாற்றை ஆய்வு செய்து எழுதிய பத்திரிகையாளர் டேவிட் வால்மனின் புத்தகம் பற்றி படித்தது கண்களை திறந்துவிட்டது போல இருந்தது. வால்மன் புத்தகம் மூலமே இந்தியாவில் மொபைல் பணம் முயற்சிகள் பற்றி அறிய முடிந்தது.

மொபைல் பணம் என்பது செல்போன் மூலமான டிஜிட்டல் பணவர்த்தனை. மொபைல் பணம் என்பது செல்போன் ரீசார்ஜ் செய்வது போலதான். சாதாரண செல்போனே இதற்கு போதும். இந்த வகை பரிவர்த்தனை வசதி மூலம் குக்கிராமங்களுக்கு கூட டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு செல்லலாம். இதற்கு உதாரணமாக திகழும் இந்திய கிராமம் பற்றியும் புத்தகத்தில் தனிக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம் குறித்த அனைத்து அம்சங்களை எழுத விரும்பினாலும், அதன் மீதான சந்தேகங்களுக்கு பதிலாக அமையக்கூடிய மொபைல் பணம் பற்றிய முக்கிய கவனம் செலுத்தியுள்ளேன்.

இந்த புத்தகம் எழுதும் போக்கில், மொபைல் பணம் மூலம் ஏழை மக்களுக்கு நிதிச்சேவைகளை கொண்டு செல்லும் முயற்சிகள் பற்றியும், வங்கியில்லா வங்கிச்சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. ஏழைகளுக்கு டிஜிட்டல் பணம் எல்லாம் சரிபட்டு வருமா என்பது தவறான கேள்வி. உண்மையில் டிஜிட்டல் பணம் மூலம் தான் ஏழைகளுக்கு அடிப்படை நிதிச்சேவைகளை அளிக்க முடியும் என்பது தான் இந்த புத்தகம் சொல்லும் சேதி.

இந்த புத்தகம் ரொக்கமில்லா சமூகத்திற்கு ஆதாரவானதா?

ஆம்.

இந்தியா போன்ற நாடுகளில் ரொக்கமில்லா சமூகம் எப்படி சாத்தியம்?

இதற்கான பதில் மொபைல் பணம் எனும் கருத்தாக்கத்தில் உள்ளது. அதை மையமாக கொண்ட முயற்சிகளை தான் இந்த புத்தகம் பேசுகிறது.

 • கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லோரிடமும் இல்லையே?

கார்டு தேவையில்லை. மொபைல் போதுமானது என்பதே இந்த புத்தகத்தின் அடிநாதம்.

 

 • ஸ்மார்ட்போனும் எல்லோரிடமும் இல்லையே?

தேவையில்லை. சாதாரண போனே போதும்.

 • எப்படி ?

கென்யாவின் மொபைல் பணமான எம்-பெசா இதற்கான உதாரணம்.

 • இந்தியாவில் யதார்த்தம் என்ன?

இந்தியாவிலும் எகோ மணி, பீம் மணி போன்ற முன்னோடி உதாரணங்கள் உள்ளன. இந்தியா மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் , சோமாலிலாந்தில் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன.

 • ரொக்கமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு பாதகமாக அமையாதா?

பரவலாக கருதப்படுவதற்கு மாறாக ரொகமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு உதவக்கூடியது. மொபைல் பணம் என்பது ஏழைகளுக்கான வங்கிச்சேவைக்கான அடிப்படையாக பார்க்கபடுகிறது.

 • வங்கி சேவையை இன்னும் பரவலாகவில்லையே?

வங்கிச்சேவையை ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு கொண்டு செல்ல செல்போன் உதவும். செல்போன் மாற்றத்திற்கான சாதமாக பார்க்கப்படுக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இதற்கான முன்னோடி முயற்சிகள் இருக்கின்றன.

 • இந்த புத்தகத்திற்கான அவசியம் என்ன?

உலகில் எல்லாம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. பணமும் டிஜிட்டல் மயமாவது தொழில்நுட்ப நோக்கில் தவிர்க்க இயலாதது. அதற்கு நாம் தயாராக வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முயற்சி துவங்கிவிட்டது. நாமும் பின் தங்கியிருக்க முடியாது. அது மட்டும் அல்ல, பண பரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்க தொழில்நுட்பம் சார்ந்த பல முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமும் அதில் இணைவதே சரி . இல்லை எனிம் தொழில்புரட்சி பேருந்தை தவறவிட்டது போல டிஜிட்டல் பண பேரூந்தை தவறவிட்டு பின்னால் ஓட வேண்டியிருக்கும்.

 • பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி?

இந்த புத்தகம் அது பற்றி பேசவில்லை.

 • ஏன்?

இதன் மைய நோக்கம் அதுவல்ல. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அதிக கவனத்தையும், சர்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்திய ரொக்கமில்லா பரிவர்த்தனையின் சார்பு அம்சங்களை தொழில்நுட்ப நோக்கில் இந்த புத்தகம் பேசுகிறது.

 • பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியானதா?

தெரியாது. ஆனால் அது மிக மோசமாக செயல்படுத்தப்பட்டது.

 • டிஜிட்டல் பணத்தில் வேறு என்ன சாதகம் உண்டு?

டிஜிட்டல் பணம் டிஜிட்டல் கடன், அனைவரிக்குமான வங்கி- நிதிச்சேவைகள் பற்றி எல்லாம் சிந்திக்க வைக்கிறது. நடைமுறையிலும் செயல்பட வைக்கிறது.

 • கருப்புபணம் ஒழியுமா?

ஓரளவு உதவலாம். ஆனால் கருப்பு பணம் வேறு பிரச்சனை.

 • டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா?

பாதுகாப்பாக ஆக்குவதற்கான எல்லா வழிமுறைகளும் உள்ளன. ஆனால் சைபர் தாக்குதல், இணைய களவு உள்ளிட்ட ஆபத்துகள் உள்ளனை. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இது டிஜிட்டல் யுகத்தின் பிரச்சனை. டிஜிட்டல் பணத்திற்கு மட்டும் உரியது அல்ல. டிஜிட்டல் பணம் இல்லாவிட்டாலும் கூட இத்தகைய ஆபத்துகள் உண்டு.

 • இந்த புத்தகத்தை படித்தால் டிஜிட்டல் பணத்திற்கு மாற முடியுமா?

இல்லை. டிஜிட்டல் பணம் தொடர்பாக உலகில், குறிப்பாக தொழில்நுட்ப உலகில் நடைபெறும் முன்னோடி முயற்சிகளை தெரிந்து கொண்டு நீங்களாக அதை நோக்கி முன்னேறலாம்.

 

 

’டிஜிட்டல் பணம்’

சைபர்சிம்மன்

கிழக்கு பதிப்பக வெளியீடு

விலை.ரூ150

 

—-

நன்றி; வணிகமணி இதழ் 

 

ரொக்கமில்லா சமுகத்தை கணித்த கம்ப்யூட்டர் முன்னோடி

 

 

moneyசெல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில்லா சமூகத்தின் தேவை அல்லது சாத்தியம் குறித்து கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளவர்கள் ஜார்ஜ் மாரோ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கரான ஜார்ஜ் மாரோ கம்ப்யூட்டர் முன்னோடிகள் ஒருவர். கம்ப்யூட்டர் என்பது புரியாத மாயமாக இருந்த காலத்தில் மைக்ரோ கம்ப்யூட்டர்களின் மகத்துவம் பற்றியும், எதிர்கால பயன்பாடு பற்றி எடுத்துரைத்தவர் மாரோ. கம்ப்யூட்டர் வடிவமைப்பிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். பர்சனல் கம்ப்யூட்டர் துறை பெற்ற வளர்சிக்கான அடித்தளம் அமைத்ததில் மாரோவும் ஒருவர்.

கம்ப்யூட்டர் வர்த்தக முயற்சியில் மாரோ சறுக்கல்களை சந்திக்காமல் இருந்திருந்தால் இன்னொரு பில்கேட்சாகவோ, ஸ்டீப் ஜாப்சாகவோ வந்திருப்பார் என நினைக்கதோன்றுகிறது.அவரது மறைவை முன்னிட்டு சீனெட் இணையதளம் எழுதிய நினைவுக்கட்டுரை அவரது கம்ப்யூட்டர் சார்ந்த முயற்சிகளை விவரித்து வியக்க வைக்கிறது.

ஆனால் மாரோவை இப்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய காரணம் கம்ப்யூட்டர்களின் எதிர்கால பலன்கள் குறித்து அவருக்கு இருந்த தீர்க்தரிசனம் தான். இதுவே அவரை ரொக்கமில்லா சமூகம் பற்றி பேச வைத்தது.

கிரெடிட் கார்டு அளவுக்கு ஒரு கம்ப்யூட்டர் உருவாக்கி, அதில் நம்முடைய எல்லா நிதி பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் இதுவே ரொக்கமில்லா சமூகத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கணித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தொடர்பான கருத்துக்களை 1984 ம் ஆண்டு வெளியான அட்டயர்மேகஜைன்ஸ் இதழில் அவர் கட்டுரையாக எழுதியிருக்கிறார். கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட ரொக்கமில்லா சமூகம் எனும் தலைப்பிலான அந்த கட்டுரையை அவர் துவங்கு விதம் கவனிக்கத்தக்கது: “ நம்முடைய வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் ஒவ்வொரு நாளும் சமாளிக்க முடியாததாக ஆகி கொண்டிருக்கும் இரண்டு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒன்று அவை காகிதத்தில் மூழ்கி கொண்டிருக்கின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் நிகழும் லட்சக்கணக்கான தனிநபர் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளை பதிவு செய்யவும், சர் பார்க்கவும் தேவைப்படும் காகிதங்களின் அளவை சமாளிக்க நடைமுறை சார்ந்த வழி இல்லை. இரண்டாவதாக பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல், முன் எப்போதையும் விட அவை அதிக அளவிலான பணம் கொண்டதாக இருக்கும் போது இந்த பரிவர்த்தனைகள் மீதான கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. கசோலைகள் தவறு மற்றும் பணம் செலுத்தப்படாத நிகழ்வுகள் அதிகரிக்கின்றன”…..

 

( சமீபத்தில் வெளியான டிஜிட்டல் பணம்’புத்தகத்தில் இருந்து….)  நன்றி; கிழக்கு பதிப்பகம்

 

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://marinabooks.com/detailed?id=5%206474&name=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D