Tag Archives: india

கூகுள் காட்டும் பேஷன் வரலாறு

screen-shot-2017-06-09-at-2-43-15-pm-e1497034098906பேஷன் என்றால் நவீன போக்கு மட்டும் தானா என்ன? அதன் பின்னே மகத்தான வரலாறும் இருக்குறது, கலையும் கலாச்சாரமும் பின்னிப்பினைந்திருக்கிறது. காலம் சொல்லும் கதைகளும் ஒளிந்திருக்கின்றன. இப்படி பேஷன் சொல்லும் கடந்த கால கதைகளையும், அவற்றின் கலாச்சார கூறுகளையும் கூகுளின் சமீபத்திய இணைய திட்டம் விரல் நுனியில் அறிய வழி செய்து வியக்க வைக்கிறது.

நாம் கலாச்சாரத்தை அணிகிறோம் எனும் தலைப்பில் கூகுள் செயல்படுத்தியிருக்கும் இந்த இணைய திட்டம் வாயிலாக 30,000 ஒளிப்படங்களின் மூலம் 3,000 ஆண்டு கால பேஷன் வரலாற்றை பின்னோக்கிப்பார்க்கலாம். பழங்கால பட்டுப்பாதையில் துவங்கி, பேஷன் தலைநகரான இத்தாலியின் மிலன் நகரில் உருவான நவீன ஆடை ரகங்கள் வரை பேஷனின் பல முகங்களை கண்டு ரசிக்கலாம்.

கூகுள் பிரதானமாக தேடல் சேவை வழங்கும் நிறுவனமாக அறியப்பட்டாலும், தேடல் தவிர எண்ணற்ற துணை சேவைகளையும், உப வசதிகளையும் கூகுள் வழங்கி வருகிறது. பரவலாக அறியப்பட்ட கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் வரைப்பட சேவை, கூகுள் எர்த், ஜிமெயில், ஸ்டிரீட்வியூ போன்றவை தவிரவும் கூகுளின் துணை சேவைகள் பெரிதாக நீள்கின்றன. இவற்றில் கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் எனப்படும், கூகுள் கலை மற்றும் கலாச்சார கழக திட்டமும் ஒன்று.

உலகின் கலை மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை டிஜிட்டல்மயமாக்கி காண்காட்சியாகும் சேவையாக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள், கலாச்சார கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து கூகுள் இந்த இணைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதற்கான இணையதளத்தில் நுழைந்து உலா வந்தால், உலகம் முழுவதும் ஒரு கலைப்பயணத்தை மேற்கொண்டது போன்ற உணர்வை பெறலாம். அருமையான ஓவியங்கள் முதல் தெரு ஓவியங்கள் வரை பலவிதமான கலை வெளிப்பாட்டை இதில் காணலாம். (https://www.google.com/culturalinstitute/beta/) இது ஒரு உதாரணம் தான். மேலும் பல கலை அற்புதங்களை இந்த தளத்தில் அணுகலாம்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தான் இப்போது பேஷன் வரலாற்று காட்சிகள், வி வியர் பேஷன் எனும் தலைப்பில் தனிக்கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 42 நாடுகளைச்சேர்ந்த அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட கலை அமைப்புகளுடன் கைகோர்த்து இந்த இணைய கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகால வரலாற்றை ஆடை அலங்காரம் மூலம் திரும்பி பார்க்கவும், புதிய புரிதலை பெறவும் இந்த கண்காட்சி வழி செய்கிறது.

அருங்காட்சியகத்தில் அரிய பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் ஆடை ரகங்களை டிஜிட்டல்மயமாக்கி காட்சிப்படுத்திருப்பதுடன், அவற்றுடனான வரலாற்று கதைகள், கலாச்சார அம்சங்களையும் இடம்பெற வைத்துள்ளது.

இந்த கண்காட்சியில் இந்திய பேஷன் வரலாறும் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. நாட்டின் மிகவும் பழமையான அருங்காட்சியகமான கொல்கத்தா அருகங்காட்சியகத்தில் உள்ள பேஷன் தொடர்பான கலைப்பொருட்கள் , மும்பை சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களை ஒளிப்படங்களாக இந்த தளத்தில் காணலாம். இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் சேலைகளின் வரலாற்றையும், அவை தொடர்பான அரிய தகவல்களையும் இவை தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா பெண்களின் சேலை நுணுக்கங்களில் துவங்கி உலகம் போற்றும் காஞ்சிவரம் பட்டுச்சேலைகளின் கலை வேலைப்பாடுகள் வரை அரிய தகவல்கள் ஒளிப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

வட கிழக்கு மாநிலங்களின் ஆடை வரலாற்றை உணர்த்தும் படைப்புகளும் சுவார்ஸ்யத்தை அளிக்கின்றன. நாகா இனபெண்களால் அணியப்பட்ட சேலைகள் காலத்தின் கதைகளை விளக்கும் சித்திரங்களையும் கொண்டிருப்பதை பார்த்து வியக்க முடிகிறது. குஜராத்தில் உள்ள சல்வி சமூகத்தினரால் அணியப்படும் பட்டோலா சேலைகள் அவற்றின் நேர்த்தியான வேலைப்பாட்டை உணர்த்துவதோடு அப்பகுதியின் நெசவு வரலாற்றையும் புரிய வைக்கிறது.

இந்த திட்டம் தொடர்பான கூகுள் வலைப்பதிவு நாம் அணியும் சேலைகள் மற்றும் ஜீன்ஸ்கள் பல கதைகளை சொல்வதாகவும், அவை பல நூற்றாண்டுகளின் சரட்டை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. இந்த கதைகளை உலகின் பார்வைக்கு வைக்கும் வகையில் இந்த இணைய கண்காட்சியை கூகுள் உருவாக்கியுள்ளது. கூகுள் தேடியந்திரத்தில் பேஷன் தொடர்பான குறிச்சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததை அடுத்து கூகுள் இந்த பேஷன் வரலாற்றை இணைய கண்காட்சியாக்க தீர்மானித்ததாகவும் அறிய முடிகிறது.

ஒரு ஓவியத்தை அணு அணுவாக ரசிப்பது போல, இந்த கண்காட்சியை ஒவ்வொரு பகுதியாக நுணுக்கமாக ரசிக்கலாம். பேஷன் படைப்புகள் பின்னே உள்ள கதைகள், பேஷனுடன் பின்னிப்பினைந்திருக்கும் கலை அம்சங்கள் என எல்லாம் தனித்தனி தலைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றை கிளிக் செய்து அழகிய ஒளிப்படங்களை பார்த்தபடி பேஷன் வரலாற்றில் திளைக்கலாம்.

மகத்தான பேஷன்களை உருவாக்கிய வடிவமைப்பாளர்கள், நவீன போக்குகளை உருவாக்கிய பேஷன் கலைஞர்கள் பற்றியும் விரிவாக அறியலாம். பேஷன் உலகில் நட்சத்திரமாக கருதப்படும் கோகோ சேனல், ஹாலிவுட் நட்சத்திரம் மர்லின் மன்றோவுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக காலணி என பலவற்றை காணலாம்.

வரலாற்றின் பேஷன் செலுத்திய தாக்கத்தையும் விளக்கும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆடை ரகங்களை உருவாக்குவது தொடர்பான நெசவுக்கலை உள்ளிட்ட நுட்பங்களையும் விளக்கும் பகுதிகள் இருக்கின்றன. பேஷன் பிரியர்கள் இந்த தளத்தில் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் கிளிக் செய்தபடி உலா வந்து கொண்டிருக்கலாம்.

இந்த படைப்புகள் உருவான விதம் பற்றிய 360 கோணத்திலான விளக்கத்தை பார்த்து ரசிக்கலாம்.

ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் மூலம் இந்த கண்காட்சியை பார்த்து ஆடைகள் பின்னே இருக்கும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம் என கூகுள் கலாச்சார கழகத்தின் இயக்குனர் அமீத் சூட் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த திட்டம் உருவானதில் அமீத் சூட்டின் மிகப்பெரிய பங்களிப்பு இருப்பதையும் அறிய முடிகிறது. கூகுள் ஊழியரான அமீத், 2010 ல், 20 சதவீத நேரத்தை விரும்பிய திட்டத்திற்காக செலவிடலாம் எனும் வகையில் கூகுள் நிறுவனம் வழங்கிய வசதியை பயன்படுத்திக்கொண்டு, உலக அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களை டிஜிட்டல்மயமாக்கும் செயலில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். இந்த முயற்சியே, கூகுள் கலாச்சார கழகத்தின் அங்கமாகி, இன்று உலகின் கலைச்செல்வங்களை டிஜிட்டல்மயமாக்கி இணையவாசிகளின் பார்வைக்கு வைத்துள்ளது.

பேஷன் கண்காட்சியை காண: https://www.google.com/culturalinstitute/beta/project/fashion

 

— நன்றி தமிழ் இந்து, இளமை புதுமையில் எழுதியது.

டிஜிட்டல் பணம்: சில கேள்விகளுக்கான விளக்கம்

 

கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ’டிஜிட்டல் பணம்’ புத்தகத்தின் தலைப்பும் உள்ளடக்கமும் சில பொதுவான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பவதாக இருப்பதை நண்பர்கள் கருத்துக்கள் மூலம் அறிகிறேன். இந்த புத்தகம் தொடர்பாக எழக்கூடிய கேள்விகளுக்கான விளக்கம் இதோ:money

 • இந்த புத்தகம் ரொக்கமில்லா சமூகத்திற்கு ஆதாரவானதா?

ஆம்.

 • இந்தியா போன்ற நாடுகளில் ரொக்கமில்லா சமூகம் எப்படி சாத்தியம்?

இதற்கான பதில் மொபைல் பணம் எனும் கருத்தாக்கத்தில் உள்ளது. அதை மையமாக கொண்ட முயற்சிகளை தான் இந்த புத்தகம் பேசுகிறது.

 • கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லோரிடமும் இல்லையே?

கார்டு தேவையில்லை. மொபைல் போதுமானது என்பதே இந்த புத்தகத்தின் அடிநாதம்.

 

 • ஸ்மார்ட்போனும் எல்லோரிடமும் இல்லையே?

தேவையில்லை. சாதாரண போனே போதும்.

 • எப்படி ?

கென்யாவின் மொபைல் பணமான எம்-பெசா இதற்கான உதாரணம்.

 • இந்தியாவில் யதார்த்தம் என்ன?

இந்தியாவிலும் எகோ மணி, பீம் மணி போன்ற முன்னோடி உதாரணங்கள் உள்ளன. இந்தியா மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் , சோமாலிலாந்தில் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன.

 • ரொக்கமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு பாதகமாக அமையாதா?

பரவலாக கருதப்படுவதற்கு மாறாக ரொகமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு உதவக்கூடியது. மொபைல் பணம் என்பது ஏழைகளுக்கான வங்கிச்சேவைக்கான அடிப்படையாக பார்க்கபடுகிறது.

 • வங்கி சேவையை இன்னும் பரவலாகவில்லையே?

வங்கிச்சேவையை ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு கொண்டு செல்ல செல்போன் உதவும். செல்போன் மாற்றத்திற்கான சாதமாக பார்க்கப்படுக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இதற்கான முன்னோடி முயற்சிகள் இருக்கின்றன.

 • இந்த புத்தகத்திற்கான நியாயம் என்ன?

உலகில் எல்லாம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. பணமும் டிஜிட்டல் மயமாவது தொழில்நுட்ப நோக்கில் தவிர்க்க இயலாதது. அதற்கு நாம் தயாராக வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முயற்சி துவங்கிவிட்டது. நாமும் பின் தங்கியிருக்க முடியாது. அது மட்டும் அல்ல, பண பரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்க தொழில்நுட்பம் சார்ந்த பல முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமும் அதில் இணைவதே சரி . இல்லை எனிம் தொழில்புரட்சி பேருந்தை தவறவிட்டது போல டிஜிட்டல் பண பேரூந்தை தவறவிட்டு பின்னால் ஓட வேண்டியிருக்கும்.

 • பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி?

இந்த புத்தகம் அது பற்றி பேசவில்லை.

 • ஏன்?

இதன் மைய நோக்கம் அதுவல்ல. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அதிக கவனத்தையும், சர்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்திய ரொக்கமில்லா பரிவர்த்தனையின் சார்பு அம்சங்களை தொழில்நுட்ப நோக்கில் இந்த புத்தகம் பேசுகிறது.

 • பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியானதா?

தெரியாது. ஆனால் அது மிக மோசமாக செயல்படுத்தப்பட்டது.

 • டிஜிட்டல் பணத்தில் வேறு என்ன சாதகம் உண்டு?

டிஜிட்டல் பணம் டிஜிட்டல் கடன், அனைவரிக்குமான வங்கி- நிதிச்சேவைகள் பற்றி எல்லாம் சிந்திக்க வைக்கிறது. நடைமுறையிலும் செயல்பட வைக்கிறது.

 • கருப்புபணம் ஒழியுமா?

ஓரளவு உதவலாம். ஆனால் கருப்பு பணம் வேறு பிரச்சனை.

 • டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா?

பாதுகாப்பாக ஆக்குவதற்கான எல்லா வழிமுறைகளும் உள்ளன. ஆனால் சைபர் தாக்குதல், இணைய களவு உள்ளிட்ட ஆபத்துகள் உள்ளனை. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இது டிஜிட்டல் யுகத்தின் பிரச்சனை. டிஜிட்டல் பணத்திற்கு மட்டும் உரியது அல்ல. டிஜிட்டல் பணம் இல்லாவிட்டாலும் கூட இத்தகைய ஆபத்துகள் உண்டு.

 • இந்த புத்தகத்தை படித்தால் டிஜிட்டல் பணத்திற்கு மாற முடியுமா?

இல்லை. டிஜிட்டல் பணம் தொடர்பாக உலகில், குறிப்பாக தொழில்நுட்ப உலகில் நடைபெறும் முன்னோடி முயற்சிகளை தெரிந்து கொண்டு நீங்களாக அதை நோக்கி முன்னேறலாம்.

சைபர்சிம்மன்

டிஜிட்டல் பணம்

கிழக்கு பதிப்பக வெளியீடு

விலை;ரூ150.

 

 

வரலாற்று வரைபடங்களுக்கான இணையதளம்

mapsவரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவது போலவே இந்த தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடமாக திகழ்கிறது.

இந்த தளத்தில் வரலாற்று கால வரைப்படங்களை தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலம் கட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தை தெரிவித்து தேடும் வசதி இருக்கிறது.

தேடலில் ஈடுபடும் போதே அந்த கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்களி பரிந்துரைக்கப்படுகிறது. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் என பல விதமான வரைபடங்களை பார்க்க முடிகிறது.

வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பொக்கிஷமாக அமையும். வரைபடங்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி வடிவமும் இருக்கிறது.

 

இணைய முகவரி: http://www.oldmapsonline.org/

 

செயலி புதிது: கேரளா சுற்றுலா அழைக்கிறது

go-kerala-app-1210x500சுற்றுலா தொடர்பான தகவல்களை எளிதாக செயலி மூலம் பெறுவதை தான் ஸ்மார்ட்போன் பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் கேரள மாநில சுற்றுலாத்துறை, மாநில சுற்றுலா தொடர்பான தகவல்களை உள்ளங்கையில் கொண்டு வரும் வகையில் விசிட் கேரளா அட்வென்சர் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி மூலம் கேரளாவில் உள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டு பயணங்களை திட்டமிடலாம். ஒவ்வொரு இடம் தொடர்பான தகவல்களோடு ஒளிப்படங்கள் மற்றும்க் வீடியோக்களையும் காணலாம்.

மேலும் தகவல்கள் விளையாட்டு பாணியில் சுவாரஸ்யமாக அளிக்கப்பட்டுள்ளன. சலுகை கூப்பன்களை பெறும் வாய்ப்பும் உள்ளது.

சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒட்டல்கள் அளிக்கும் சலுகைகளையும் பெறும் வாய்ப்புள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு: https://www.keralatourism.org/

 

மொழிகளின் ஒலிகளை கேட்டு ரசிக்க ஒரு தளம்

locallingual3உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பை கேட்டறிய விருப்பமா? எனில் லோக்கல்லிங்குவல் இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

இந்த தளம் உலக வரைப்படத்துடன் வரவேற்கிறது. வரைபடத்தில் உள்ள எந்த நாட்டின் மீது கிளிக் செய்தாலும், அந்த நாட்டில் பேசப்படும் மொழியின் ஒலிக்குறிப்பை கேட்கலாம். அந்த நாட்டுக்கான பொதுவான மொழியோடு, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மற்ற மொழிகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் கேட்கலாம்.

இந்தியாவுக்கான பகுதியை கிளிக் செய்தால் இந்தியில் துவங்கி வரிசையாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பட்டியலிப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் உச்சரிப்புகளை கேட்கலாம். ஆண் மற்றும் பெண் குரல்களில் உச்சரிப்புகளை கேட்பதற்கான வசதியும் உள்ளது. மாநிலவாரியாகவும் கிளிக் செய்து கேட்க முடிகிறது.

இதே போல மற்ற நாடுகளையும் கிளிக் செய்து அங்கு பேசப்படும் மொழிகளின் ஒலிகளை கேட்கலாம். மொழி ஆர்வலர்களை இந்த தளம் உற்சாகத்தில் ஆழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது.

பயணங்களில் ஆர்வம் கொண்ட டேவிட் எனும் தனிமனிதர் இந்த தளத்தை உருவாக்கி இருக்கிறார். ஐரோப்பாவில் சுற்றிக்கொண்டிருந்த போது உக்ரைன் நாட்டில் உள்ளு மொழியில் எளிய வார்த்தையை கூட தன்னால் சரியாக உச்சரிக்க முடியாமல் திண்டாடிய போது, உலக மொழிகளுக்கான இந்த தளத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தளத்தில் ஒலிகளை கேட்டு ரசிப்பதோடு, விரும்பினால் உங்கள் மொழியில் புதிய வார்த்தைகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் இடம்பெறச்செய்யும் வசதி இருக்கிறது. அந்த வகையில் உலக மொழிகளின் ஒலிகளுக்கான விக்கிபீடியா போல இந்த தளம் விளங்குகிறது.

இணைய முகவரி: https://localingual.com

 

 

செயலி புதிது: ஒளிப்படங்களை மெருகேற்ற உதவும் செயலி

ஒளிப்படங்களை திருத்தி மெருகேற்றி மேம்படுத்த வேண்டும் என்றால் அடோபியின் போட்டோஷாப் சிறந்த வழியாக விளங்குகிறது. பொதுவாக ஸ்மார்ட்போனில் எடுக்கும் ஒளிப்படங்களை பகிர்ந்து கொள்ளும் போது, போட்டோஷாப் அளவுக்கு நுட்பமான மென்பொருள்கள் தேவையில்லை தான். ஆனால், சில நேரங்களில் ஒளிப்படங்களை மேம்படுத்தும் தேவையை உணர்ந்தால், போட்டோஷாப் பிக்ஸ் செயலியை நாடலாம். இதுவரை ஐபோன்களுக்கான வடிவில் மட்டுமே செயல்பட்ட இந்த செயலி தற்போது புதிய அம்சங்களை பெற்றிருப்பதுடன், ஆண்ட்ராய்டு போன்களுக்காகவும் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த செயலி மூலம் ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இனி இஷ்டம் போல மேம்படுத்திக்கொள்ளலாம். படத்தை அளவை மாற்றுவது, அதன் வண்ணம் உள்ளிட்ட அம்சங்களை திருத்துவது உள்ளிட்ட நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒளிப்படத்தை மேம்படுத்துவதுண்ட, அடோபியின் கிரியேட்டிவ் கிளவிட்டிலும் பகிர்ந்து கொள்ளலாம். வேறு பல பிரத்யேக வசதிகளும் உள்ளன. தொழில்முறையிலான மேம்பாட்டை நாடுபவர்களுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு: http://www.adobe.com/in/products/fix.html

 

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை எளிதாக்குக்கும் பீம் செயலி

BHIM-Detailsபண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கான புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அன்மையில் அறிமுகமான பீம் செயலி துவக்க நிலையிலேயே அதிக வரவேற்பை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட இந்த செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். பாரத் பேமெண்ட் இண்டர்பேஸ் பார் மணி என்பதன் சுருக்கமான பீம் செயலி சட்ட மேதை அம்பேத்கர் பெயரையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள யூனிபைடு பேமெண்ட் இண்ட்பர்பேஸ் எனப்படும் யு.பி.ஐ தொழில்நுட்ப மேடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யு.பி,ஐ. வசதி ஸ்மார்ட் போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணபரிவர்த்தனை செய்ய வழி செய்கிறது. இந்த பரிவர்த்தனைகளின் போது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டிய அல்லது ஊள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது இந்த வசதியின் சிறப்பாக அமைகிறது.

யு.பி.ஐ வசதி சார்ந்து முன்னணி வங்கிகள் தனி செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் பீம் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டாலும், எளிமையான பயன்பாட்டில் இது மற்ற செயலிகளில் இருந்தெல்லாம் வேறுபட்டிருக்கிறது. யு.பி.ஐ செயலியின் இலகுவான வடிவமாக வெகுமக்களை மனதில் கொண்டு மிகவும் எளிமையாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான இடைமுகம் மற்றும் மொபைல் வங்கிச்சேவைக்கு பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை ஆகிய அம்சங்கள் பீம் செயலியின் பயன்பாட்டை எளிதாக்குகிறது.

வங்கி கணக்கு (யு.பி.ஐ இடைமுகத்தில் இணைந்துள்ள வங்கி) மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்ட எல்லோரும் பீம் செயலியை பயன்படுத்தலாம். பீம் செயலி மூலம் எளிதான பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

பீம் செயலியை பயன்படுத்த ஆண்ட்ராய்டு போன் வழியே கூகுள் பிளேஸ்டோரில் இருந்து இந்த செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். பீம் செயலியை தரவிறக்கம் செய்யும் போது, அதிகாரபூர்வமான செயலியை தான் தரவிறக்கம் செய்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் பீம் பெயர் போலவே பல போலி செயலிகள் உலாவிகின்றன. எனவே செயலியை தரவிறக்கம் செய்யும் முன் அது தேசிய பேமனெட் கார்ப்பரேஷன் உருவாக்கிய செயலியா என்பதை கண்டறிய வேண்டும். அதிகார பூர்வ இணைப்பு மூலம் இதை நாடுவது நலம். பொதுவாகவே வங்கி மற்றும் நிதிச்சேவை செயலிகளை பயன்படுத்துவதற்கு முன், அவை அதிகாரபூர்வ செயலி தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இமெயில் அல்லது குறுஞ்செய்தி மூலம் வரும் இணைப்புகளை எல்லாம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

bhimsசெயலியை நிறுவிய பின் விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும். இப்போது முதல் கட்டமாக ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் மட்டுமே உள்ளன. வரும் வாரங்களில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் பிறகு பயனாளியின் போன் மற்றும் குறுஞ்செய்திகளை அணுகும் அனுமதியை கேட்கும். இதற்கு அனுமதி அளித்தவுடன், பயனாளியின் போன் எண்ணை உறுதி செய்து கொள்ளும். இரட்டை சிம் கார்டு கொண்ட போன் எனில் எது பரிவர்த்தனைக்கான சிம்கார்டு என குறிப்பிட வேண்டும். அடுத்த கட்டமாக நான்கு இலக்க பாஸ்கோடை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த பாஸ்கோடை தான் தொடர்ந்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவோம். பாஸ்கோடை உருவாக்கிய பிறகு வங்கியை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ பட்டியலில் உள்ள 31 வங்கிகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வங்கி கணக்கை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். வங்கி கணக்கை இணைத்தவுடன், டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கத்தை தெரிவித்து, யு.பி.ஐ பரிவர்த்தனை பின் எண்ணை உருவாக்கி கொள்ள வேண்டும். இதன் பிறகு பரிவர்த்தனைக்கான வி.பி.ஏ எனப்படும் விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ் எனும் முகவரியை உருவாக்கி கொள்ள வேண்டும். இது மொபைல் எண் அல்லது பெயராக இருக்கலாம். பணம் அனுப்ப அல்லது கோர இந்த முகவரி அவசியம். வி.பி.ஏவை உருவாக்கி கொண்ட பிறகு, பரிவர்த்தனைக்கான பக்கம் தோன்றும். அதில் அனுப்ப ( செண்ட்), கோர ( ரிக்வஸ்ட்) மற்றும் ஸ்கேன் ஆகிய மூன்று பகுதிகள் இருக்கும். செண்ட் பகுதி மூலம் பணம் அனுப்பலாம். ரிக்வஸ்ட் பகுதி மூலம் பணம் அனுப்ப கோரலாம்.

பணம் அனுப்ப, பெறுபவரின் மொபைல் எண் அல்லது பரிவர்த்தனையை முகவரியை குறிப்பிட வேண்டும். உடனே அதை பரிசோதித்து உறுதி செய்யும். அதன் பிறகு தொகையை தெரிவித்து பின் எண்ணை அடித்தவுடன் பணம் பரிவர்த்தனை செய்யப்படும். பணம் பெறுபவர் யு.பி.ஐ பரிவர்த்தனை முகவரி கொண்டவராக இருக்க வேண்டும். இல்லை எனில் அவரது வங்கி கணக்கு மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு தெரிவித்து பரிவர்த்தனை செய்யலாம். பரிவர்த்தனை முகவரி கொண்டவர்கள் எனில், எளிதாக பரிவர்த்தனை செய்யலாம். ஸ்கேன் செய்வது மூலமும் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அனுப்புவதற்கான கியூ.ஆர் கோடையும் உருவாக்கி அதனை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் உருவாக்கிய கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.

சாதாரண போனில் *99# என்ற எண்ணை அணுகுவது மூலமும் இந்த வசதியை பயன்படுத்தலாம். பண பரிவர்த்தனை தவிர கணக்கில் உள்ள தொகையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்தலாம். ஆனால் மற்ற யு.பி.ஐ செயலியில் உள்ளது போல காசோலை கோருவது போன்ற மற்ற வசதிகளை அணுக முடியாது. பீம் செயலி மூலமான பரிவர்த்தனை நேரடியான வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். இதை பயன்படுத்த கட்டணம் கிடையாது. ஆனால் வங்கிகள் தரப்பில் சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படலாம்.

தற்போது பண பரிவர்த்தனை செயலிகளை விட பீம் செயலி மிகவும் எளிதானதாக கருதப்படுகிறது. முதல் முறை பயனாளிகளை டிஜிட்டல் பரிவர்த்தனை உலகிற்குள் ஊக்குவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்த செயலி பாதுகாப்பான செயல்பாடுகளை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு பாதுகாப்பை கொண்டுள்ளது. ஒரு முறை 10,000 ரூ வரை பணம் அனுப்பலாம். நாள் ஒன்றுக்கு 20,000 எனும் வரம்பு உள்ளது.

நேரடி பண பரிவர்த்தனைக்கு இது மிகவும் ஏற்றது. இந்த செயலி பரிவர்த்தனையை ஏற்கும் வர்த்தர்களிடமும் இதை பயன்படுத்தலாம். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை தற்போதுள்ளதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீம் செயலி பயன்பாட்டில் சில சிறிய இடர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்பேம் கோரிக்கைகளும் தொல்லை தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றை சரி செய்யும் வகையில் அப்டேட் வர்ஷன் வெளியாகியுள்ளது. ஸ்பேம் தொலைக்கு குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு; https://upi.npci.org.in/static/faq/en_US/

நன்றி : தமிழ் இந்துவில் எழுதியது