Tag Archives: தேடல்

பிரபஞ்ச ரகசியமும், காணாமல் போன அணுக்களும்!

cc_Large-scale_structure_of_light_distribution_in_the_universe_16x9பூமி தட்டை என கருதப்பட்டு பின்னர் உருண்டை என கண்டறியப்பட்டது தெரிந்த விஷுயம் தான். இவ்வளவு ஏன், செயற்கைகோள் உதவியால் இப்போது பூமி பந்தை பறவை பார்வையாகவும் பார்க்கலாம். எல்லாம் சரி, இந்த பூமி உருண்டையில், பிறை நில வடிவில் உள்ள பகுதி மட்டுமே கண்ணில் படுகிறது, மற்ற பகுதி எல்லாம் எங்கே போயின என்று தெரியாமல் இருந்தால் எப்படி இருக்கும்.

நல்ல வேளையாக பூமிக்கு இப்படி எல்லாம் எதுவும் ஆகிவிடவில்லை. ஆனால் பிரபஞ்சத்திற்கு இது போன்ற நிலை இருப்பது விஞ்ஞானிகளை வெகுகாலமாக குழப்பிக்கொண்டிருக்கிறது தெரியுமா?

ஆம், பிரபஞ்சத்தில் இருக்க வேண்டிய வஸ்துகளில் பெரும்பகுதி காணாமல் போய்விட்டதாக கருதப்படுகிறது. இவற்றை தான் விஞ்ஞானிகள் ரொம்ப காலமாக தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த தேடலில் இப்போது ஒரு ஒளிக்கீற்று தென்பட்டு பிரபஞ்ச புதிர் கொஞ்சம் விடுபடவும் செய்திருப்பதாக இரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சாமானியர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். பிரபஞ்சத்தில் தான் நமது சூரிய குடும்பம் இருக்கிறது. சூரிய குடும்பம் தவிர எண்ணற்ற நட்சத்திரங்களும், எர்கற்களும் இன்னும் பிற வஸ்துகளும் இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து தான் பால்வீதி மண்டலமாக அமைகிறது. பால்வீதி மண்டலம் தவிர லட்சக்கணக்காண மண்டலங்கள் ( கேலக்ஸி) சேர்ந்தது தான் பிரபஞ்சம். அதுவும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

இந்த பிரபஞ்சம் பற்றி நமக்கு தெரிந்த விஷயங்கள் உண்மையிலேயே கையளவு தான். தெரியாதது பிரபஞ்ச அளவு. எனவே பிரபஞ்சம் பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்கி கொள்வதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பயனாக பிரபஞ்சம் எப்படி தோன்றியிருக்கும் என்பதை ஓரளவு துல்லியமாக கணித்திருக்கின்றனர். ஆதியில் ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்து அதன் பிறகு அந்த பிரும்மாண்ட நெருப்பு பிழம்பு குளிர்ந்து பிரபஞ்சமாக உருவானதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வே பிக் பேங் என குறிப்பிடப்படுகிறது. இந்த பெருவெடிப்புக்கு பின் தான் எல்லாமே தோன்றியது.

பெரு வெடிப்பு நிகழ்வின் தாக்கம் தொடர்பாக விஞ்ஞானிகளிடம் தெளிவான கணக்கு இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு பின் 20 நிமிடங்களில் எத்தனை ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்கள் உருவாயின என்றெல்லாம் கணக்கு போட்டு வைத்துள்ளனர். ஆதாரமில்லா அனுமானங்கள் இல்லை; பெருவெடிப்பிற்கு பிந்தைய பாதிப்பான காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி ஒளிர்தல் அடிப்படையிலான ஆதாரபூர்வ கணக்கு.

இந்த கணக்கின்படி பார்த்தால் பிரபஞ்சம், 70 சதவீதம் டார்க் எனர்ஜி எனப்படும் அடர் ஆற்றல் மற்றும் 23 சதவீதம் டார்க் மேட்டர் எனப்படும் அடர் பொருளால் ஆகியிருக்கிறது. எஞ்சிய 4.6 சதவீதமே சாதாரன பொருட்களால் ஆகியிருக்கின்றன. அதாவாது நாமறிந்த பருப்பொருட்கள். பூமி உள்ளிட்ட கோள்களும், நட்சத்திரங்களும், எரிகற்கலும், வால் நட்சத்திரங்களும் இன்னும் பிற வஸ்துகளும் இந்த பிரிவில் தான் வருகின்றன.

நாம் என்னடாவென்றால், பூமி பெரிது, சூரிய மண்டலம் அதனினும் பெரிது, பால்வீதி மண்டலம் இன்னும் பெரிது என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தால், இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் கோள்களும், நட்சத்திரங்களும், கேலக்ஸிகளும் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவு தான் என்கிறது விஞ்ஞானம். மற்றவை எல்லாம் நம் அறிவுக்கு புலப்படாத அடர் சங்கதிகள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும், பிரபஞ்சத்தின் பெரும்பகுதி அடர் ஆற்றல், பொருட்களால் சூழப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு மத்தியில் கொஞ்சமாக படர்ந்திருக்கும் 5 சதவீதத்திற்கும் குறைவாக சாதாரண பொருட்கள் இருப்பதாக கருதப்படுவதில் இன்னொரு பெரிய பிரச்சனை இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை எங்கே இருக்கின்றன என்பதே தெரியவில்லை. இது கொஞ்சம் விநோதமானது தான்.

சூரிய மண்டலம்,. நட்சத்திரங்கள் போன்ற வானியல் வஸ்துகள் எல்லாம் அணுக்களால் ஆனவை. இவை எல்லாவற்றையும் கூட்டு கழித்துப்பார்த்தால் கூட, பெருவெடிப்பு கணக்குபடி இருக்க வேண்டிய சாதாரண பொருட்களில் வெறும் 10 சதவீதம் மட்டுமே வருகின்றன. அப்படி என்றால் எஞ்சிய 90 சதவீத சாதாரண பொருட்கள் எங்கே? இதுவே விஞ்ஞானம் பதில் தேடும் கேள்வியாக இருக்கிறது.

இந்த பிரச்சனை விஞ்ஞான உலகில் காணாமல் போன பார்யோனிய சிக்கல் என குறிப்பிடப்படுகிறது. அணுக்கள் சார்ந்த பொருட்கள் பொதுவாக பார்யான் என குறிப்பிடப்படுகிறது. அணுவுக்குள் இருக்கும் புரோடான்கள், நியூட்ரான்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். எனினும் எலக்ட்ரான் இதில் சேராது. இது லெப்டான் வகையின் கீழ் வருகிறது. இந்த வேறுபாட்டை விட்டுவிட்டு பார்த்தால், அணுக்கள் சார்ந்த பொருட்களால் உருவான கோள்களும், நட்சத்திரங்களும் 10 சதவீதம் மட்டுமே இருப்பதால், மற்றவை எங்கே, எப்படி இருக்கின்றன எனும் கேள்வி புரியாத புதிராக இருக்கிறது.

இந்த கேள்விக்கு தான் பதிலை இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் காணாமல் போனதாக கருதப்பட்ட அணுக்கள் இருப்பிற்கான மறைமுக ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை எனினும் இந்த ஆய்வுகள் அறிவியல் உலகில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

காணாமல் போனதாக கருதப்படும் அணுக்கள் இருப்பு தெரிய வந்துள்ளது பிரபஞ்ச ரகசியம் பற்றிய புரிதலில் அடுத்த கட்ட பாய்ச்சலாக அமையலாம் என கருதப்படுகிறது. எல்லாம் சரி, இருக்க வேண்டிய அணுக்கள் இருப்பதை கண்டறிந்து விட்டதாக கூறும் போது, அதை மறைமுக ஆதாரமாக கண்டறிந்ததாக சொல்கின்றனர் என கேட்கலாம்.

மறைந்திருக்கும் அணுக்களை பார்ப்பது என்பது அந்த அளவு கடினமானது என்பதே இந்த கேள்விக்கான பதில். அதுவே இந்த கண்டுபிடிப்பை மேலும் முக்கியமானதாக ஆக்குகிறது.

மொத்தமாக பிரபஞ்சத்தில் இருக்க வேண்டிய அணுக்கள் இல்லை என்பதை அறிந்திருந்த விஞ்ஞானிகள் அவை எங்கே இருக்க கூடும் என்பதையும் அனுமானித்துள்ளனர். பிரபஞ்சம் உண்டான பல லட்சம் கோடி ஆண்டுகளாக ஏற்பட்டு வந்துள்ள வளர்ச்சி, மாற்றத்தின் அடிப்படையில் பிரபஞ்சம் அடர் ஆற்றல் மற்றும் அடர் வஸ்துகளால் நிரம்பியிருக்கிறது. அதன் நடுவே காலெக்ஸிகள் சிதறிக்கிடக்கின்றன. இத்தகைய கேலக்ஸிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இந்த காலெக்ஸிகள் ஒன்றோடு ஒன்று வாயு இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வாயு இழைகளில் தான் எஞ்சிய அணுக்கள் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகிறது.

அப்படி என்றால் அந்த வாயு இழைகளை ஆய்வு செய்து பார்க்கலாமே என்று கேட்கலாம். பார்க்கலாம் தான், ஆனால் அவை தெரியாது என்பதே விஷயம். கேலக்ஸிகளை பின்னி பிணைத்திருக்கும் இந்த வாயு இழைகள் வார்ம் ஹாட் இண்டர்கிலேஸியேட்டிக் மேட்டர் என சொல்லப்படுகிறது. சுருக்கமாக விம். இவற்றின் வெப்பநிலை பல லட்சம் அளவில் இருக்கிறது. இவற்றில் இருந்து எக்ஸ் கதிர்கள் ஒளிர்ந்தாலும், தொலைநோக்கிகளால் காண முடியாத அளவுக்கு அவை மெல்லியதாக இருப்பதே சிக்கல்.

கொஞ்சம் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் இவற்றை உத்தேசமாக நோக்கி, 70 சதவீத காணாமல் போன அணுக்களை கூட கணக்கிட்டுவிட்டனர். ஆனால் அப்போது கூட இன்னொரு 30 சதவீதம் இடித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான் எடின்பர்க் பல்கலை மற்றும் இன்னொரு ஆய்வுக்குழுவினர் இந்த புதிருக்கு விடையை கண்டுபிடித்துள்ளனர்.

கேலக்ஸிக்களுக்கு இடையிலான வாயு இழைகள் பார்க்க முடியாதவையாக இருக்கும் நிலையில், பெருவெடிப்பின் தாக்கமான காஸ்மிக் கதிர் ஒளிர்வை பின்னணியாக கொண்டு இவற்றை நோக்கி அணுக்களின் இருப்பிற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.

இதற்கு உதவிய நிகழ்வு சுன்யேவோ ஜெல்டோவிச் (Sunyaev-Zel’dovich (SZ) )  நிகழ்வு என குறிப்பிடப்படுகிறது. அதாவது காஸ்மிக் வலையில் உள்ள ஒளியில் இருக்கும் போட்டான்கள் அணுக்களில் உள்ள எதிர்மறை ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள் சந்திக்கும் போது கூடுதல் ஆற்றல் பெற்று அவற்றின் அலைவரிசை கொஞ்சம் மாறுகிறது. இந்த மாற்றமும் பத்து லட்சத்தில் ஒரு மடங்கு எனும் அளவுக்கு மிகவும் சிறியதானது. எனவே இதை உணர்வதும் சிக்கல் தான்.

ஆனால், விஞ்ஞானிகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட கேலக்ஸிகளை ஒன்றிணைத்து அவற்றின் வரைபடம் மூலம் இடையே உள்ள வாய் இழைகளில் இந்த விளைவை கவனித்துள்ளனர். இதன் படி பார்த்தால் சுற்றுப்புற பகுதிகளைவிட வாயு இழைகள் ஆறு மடங்கு அடர்த்தியாக இருக்கிறது. ( இன்னொரு ஆய்வு மூன்று மடங்கு என்கிறது). ஆக, இங்கு தான் காணாமல் போன அணுக்கள் இருப்பது உறுதியாகி உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த ஆய்வுகள் அறிவியல் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு மேலும் ஆராயப்பட வேண்டும். அப்போது தான் பிரபஞ்ச ரகசியத்தை அறிவதில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கலாம். ஏனெனில் பிரபஞ்சத்தின் பெரும் பகுதியாக இருக்கும் அடர் ஆற்றல் பற்றி நம் அறிவு இன்னமும் சொற்பமாகவே இருக்கிறது.

 

 

இணைப்புகள்

  1. http://www.sciencemag.org/news/2017/10/astronomers-say-they-ve-found-many-universe-s-missing-atoms
  2. https://www.geek.com/science/scientists-find-universes-missing-atoms-1719446/

நன்றி; மின்னம்பலம் இதழில் எழுதியது

 

 

போட்டோஷாப் கவிதை

Apple_Orchardபோட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிபட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிபடங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ’என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்த திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை உருவாக்கி இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம் தான். ஆம் தன்னுடைய சிறுவயது படங்களை எடுத்துக்கொண்டு, அதில் தன்னுடைய இப்போதையை தோற்றத்தை போட்டோஷாப் மூலம் அழகாக ஒருங்கிணைத்து விட்டார். அதிலும் சிறு வயது போலவே உடைகளை அணிந்து கொண்டு ஒரே படத்தில் சின்ன பையனாகவும், பெரிய இளைஞனாகவும் அவர் காட்சி அளிக்கிறார். ஒளிப்பட ஆல்பங்களை வைத்துக்கொண்டு அந்த நாள் படங்களை புரட்டியை படி நிகழ்கால தோற்றத்தை ஒப்பிடுவது என்பதே சுவாரஸ்யமானது தான். அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வகையில், கடந்த கால படத்திற்குள் இப்போதைய தோற்றத்தை இடம்பெற வைத்திருக்கிறார் நிக்கர்சன்.

இணைய முகவரி: https://www.conornickerson.com/en/projects/childhood

 

 

தேடியந்திரம் புதிது; பாட்காஸ்டிங் கேட்கவா!

வெப்காஸ்ட், பிராட்காஸ்ட் என்றெல்லாம் இருப்பது போல இணையத்தில் பாட்காஸ்டிங்கும் பிரபலமாக இருக்கிறது. ஒலி வடிவ நிகழ்ச்சிகளை சந்தா முறையில் பெற்று கையடக்க சாதனங்களில் கேட்டு ரசிப்பதற்கான முறையை தான் பாட்காஸ்டிங் என்கின்றனர். இந்த வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. ஒலிப்புத்தகங்களில் துவங்கி பலவகையான ஆடியோ நிகழ்ச்சிகளை இந்த வடிவில் கேட்டு ரசிக்கலாம். இந்த வகையான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை தேடித்தருவதற்காக என்றே லிஸின்நோட்ஸ் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேடியந்திரம் மூலம் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை எளிதாக தேடி கண்டறியலாம்.

தேடியந்திர முகவரி: https://www.listennotes.com/?s=logo

 

வீடியோ புதிது; கிளிக்பைட் வலைப்பற்றிய பாடல்

ஆசை காட்டி மோசம் செய்வது போல, இணையத்தில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆசை காட்டி ஆர்வத்தை ஏற்படுத்தி வில்லங்கமான இணைப்புகளை கிளிக் செய்ய வைக்கும் உத்தி கிளிக்பைட் எனப்படுகிறது. தேவையில்லாத விளம்பரங்களை கிளிக் செய்ய வைப்பது முதல் வைரஸ் இணைப்புகளை கிளிக் செய்ய வைப்பது வரை பலவிதமாக வலை விரிக்கப்பட்டு இணையவாசிகள் வீழ்த்தப்படுகின்றன. இந்த கிளிக்பைட் உத்தியின் விபரீத்தத்தை நகைச்சுவையாக உணர்த்தும் வகையில் அயர்லாந்து காமெடி குழு ஒன்று சூப்பரான பாடல் ஒன்றை படமாக்கி அதை யூடியூப் வீடிவோவாக வெளியிட்டுள்ளது.

கேட்டு ரசிக்கும் வகையில் உள்ள அந்த பாடல், இணையத்தில் உள்ள ஆபத்துகளையும் அழகாக சுட்டிக்காட்டுகிறது.

வீடியோவை காண; https://youtu.be/bVn7sLDhZBw

 

 

கண்ணை நம்பாதே! ஒளிப்படங்கள் ஏமாற்றும்…

42570D2B00000578-4697160-One_of_these_images_has_been_changed_but_which_one_is_it_and_whe-a-90_1500359733849இனி அடுத்தமுறை இணையத்தில் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அது போல கூட நீங்கள் காணும் ஒளிப்படத்தை ஆய்வு செய்யுங்கள். அதிலும் முக்கியமாக, ஒரு ஒளிப்படம் உங்களை கவர்ந்து அதை இணையவெளியில் பகிர்ந்து கொள்ளத்தோன்றும் நிலையில், அந்த படத்தை ஒருமுறைக்கு இருமுறை கூர்ந்து கவனிப்பது நல்லது. ஏனெனில், அந்த படம் போலியான ஒளிப்படமாக கூட இருக்கலாம். எனவே நீங்களும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற செய்யக்கூடாது அல்லவா? அதனால் தான், ஒளிப்படங்கள் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.

இது என்ன வம்பா பேச்சோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இணைய யதார்த்தம் இப்படி தான் இருக்கிறது. இணையத்தை ஒரு பக்கம், ஃபேக் நியூஸ் எனப்படும் பொய்ச்செய்தி உலக்கிக்கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் பொய் படங்கள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அண்மையில் இது தொடர்பாக முக்கியமான ஆய்வு முடிவு ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கும் முன், முதலில் பொய் படங்களின் பிரச்சனையை சுருக்கமாக பார்த்துவிடலாம்.

ஃபேக் நியூஸ் பிரச்சனை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தில் நிஜ செய்திகள் ;போலவே வெளியிடப்படும் உண்மை அல்லாத செய்திகளே இவ்வாறு கூறப்படுகின்றன. உண்மையான இணையதளம் போல தோன்றும் இணையதளங்களில் வெளியிடப்படுவதும், கவனத்தை ஈர்க்கும் பளிச் தலைப்புகளும், விறுவிறுப்பான விவரிப்பும் பொய்ச்செய்திகளின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. பெரும்பாலான இணையவாசிகள் இவற்றை அடையாளம் காண முடியாமல் ஏமாந்து போவதும், அதைவிட முக்கியமாக இவற்றை சமூக ஊடகங்களில் தாராளமாக பகிர்ந்து கொண்டு பிரபலமாக்குவதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் மற்றும் கூகுளில் இத்தகைய பொய்ச்செய்திகள் வடிகட்டப்படாமல் தலைகாட்டுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொய்ச்செய்திகளை கண்டறிவது எப்படி? கட்டுப்படுத்துவது எப்படி? களைவது எப்படி? என்றெல்லாம் விவாதம் தீவிரமாகி இருக்கிறது. இதற்காக என்றே பிரத்யேக அல்கோரிதம்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பொறுப்பை மென்பொருள்கள் வசம் ஒப்படைப்பது பலன் தராது, விக்கிபீடியா பாணியில் இணைய கூட்டமே இந்த கண்டறிதலை சிறப்பாக செய்ய முடியும் எனும் நம்பிக்கையில், விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சும் தன் பங்கிற்கு, விக்கிடிரிப்யூன் எனும் புதிய இணையதளத்தை நிறுவியிருக்கிறார்.

பொய்ச்செய்திகள் போலவே, பொய் படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது ஒளிப்படங்களை திருத்தி மேம்படுத்த உதவும் போட்டோஷாப் மென்பொருள் கொண்டு, மாற்றப்பட்ட படங்கள். பொதுவாக ஒளிப்படத்தின் பின்னணியில் உள்ள ஒளி அடர்த்தியை மாற்றுவது, சின்ன சின்ன குறைகளை சரி செய்வது போன்றவை மூலம் ஒளிப்படத்தை மெருகேற்றுவதற்காக போட்டோஷாப் பயன்படுகிறது. வண்ணத்தை கூட்டலாம், குறைக்கலாம் என்றாலும், படத்தின் மூல அம்சங்களில் கை வைக்க கூடாது. அதாவது படத்தில் இல்லாத அம்சத்தை சேர்ப்பது, இருக்கும் அம்சத்தை நீக்குவது போன்றவற்றை செய்யக்கூடாது. இப்படி மூல அம்சங்களில் மாற்றம் அல்லது திருத்தங்களை செய்தால் அந்த படம் பொய் படமாக கருதப்படுகிறது.

ஆர்வக்கோளாறு கொண்ட இணையவாசிகள் பலர் இப்படி போடோஷாப் செய்த படங்களை வெளியிட்டு மாட்டிக்கொண்டிருக்கின்றனர். இதைவிட மோசம், முன்னணி ஒளிப்பட கலைஞர்கள் சிலரும் இத்தகைய சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். அதே போல முன்னணி வலைப்பதிவாளர்கள் சிலரும் கூட, ஒளிப்படத்தில் கையை வைத்து மாட்டிக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் கூட, பிரபல பேஷன் மற்றும் சுற்றுலா வலைப்பதிவாளரான அமீலியா லயானா என்பவர், போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கபட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்கானார்.

இன்னொரு பக்கம் பார்த்தால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பரபரப்பாக பேசப்படும் பல படங்கள் உண்மையில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யப்பட்டவையாக இருப்பதை பலரும் உணர்வதில்லை. இந்த பின்னணியில் தான், பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று, பொய் படங்கள் தொடர்பான ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, 707 பயனாளிகளிடம் இரண்டு வகையான ஒளிப்படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மூலப்படங்கள் மற்றும் ஐந்த படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டவை. இந்த படங்களில் பொய்யான அம்சங்களை கண்டறிய முடியுமா எனும் கேள்வியோடு, அவற்றை கண்டறியும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு மேல் பொய் படங்களை கண்டறிந்தாலும், அதில் என்ன பிரச்சனை என கண்டறிய முடியாமல் திண்டாடியிருக்கின்றனர்.

இன்னொரு சோதனையில், பொய்படங்கள் பற்றிய தகவல் தெரிவிக்காமல் இரண்டு வகையான படங்களை பார்த்து வித்தியாசத்தை கண்டறியுமாறு கேட்கப்பட்டனர். இவர்களில் 65 சதவீதம் பேர் படத்தில் வில்லங்கம் இருப்பதை கண்டுபிடித்தாலும், பெரும்பாலானோரால் படத்தில், எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறது என கண்டறிய முடியவில்லை.

இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பான விரிவான கட்டுரை அறிவியல் சஞ்சிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஒளிப்படம் உண்மையானதா? பொய்யானதா? என்பதை கண்டறியும் திறன் மக்களிடம் குறைவாக இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

முனைவர் பட்ட ஆய்வாளர் சோபியா நைட்டிங்கேல் மற்றும் டெரிக் வாட்சன் உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஒளிப்படங்களை ஆதாரமாக கொள்வதை இது சிக்கலாக்கும் என்று சோபியா கூறியிருக்கிறார். ஒளிப்படங்கள் நமது நினைவாற்றல் மீது மிகப்பெரிய தாக்கம் செலுத்துவதால், உண்மையான படத்தையும், பொய்யான படத்தையும் கண்டறிய முடியாதது நாம் நம்புவது மற்றும் நினைவில் கொள்வது மீது தாக்கம் செலுத்தலாம் என்கிறார் வாட்சன்.

இந்த ஆய்வு தொடர்பாக இணையதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது; http://bit.ly/2uEbjow  இந்த தளத்தில் நீங்களும் கூட பொய பட கண்டறிதல் சோதனைக்கு உங்களை உட்படுத்திக்கொள்ளலாம். உங்கள் திறமையை சோதித்துக்கொள்வதோடு, இணைய ஆய்வுக்கு பங்களிப்பு செலுத்தியது போலவும் இருக்கும்.

 

 

தளம் புதிது; செய்திகளுக்கான சமூக வலைப்பின்னல்

செய்திப்பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில், செய்திகளை தெரிந்து கொள்வதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகம் ஆகியிருக்கிறது. காங்ஸ்டர்ஸ் எனும் அந்த தளம், செய்திகளை கண்டறிவதற்கானது மட்டும் அல்ல, பகிர்ந்து கொள்வதற்கானதாகவும் இருக்கிறது. அதாவது செய்திகளுக்கான வலைப்பின்னல் தளம் போல இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகளை பார்ப்பதோடு, அவற்றை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் முன்னிலை பெறும் செய்திகளை கிளிக் செய்தால் அவற்றின் சுருக்கத்தை வாசிக்கலாம். மேலும் கிளிக் செய்தால் விரிவான செய்தியை வாசிக்கலாம்.

பலவித தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன. தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட செய்திகளை பரிசீலித்து செய்திகளை தேர்வு செய்து வழங்குவதாக இந்த தளத்தின் அறிமுகப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக செய்தி கண்டறிதல் சேவையாக அறியப்பட்ட டிக் உள்ளிட்ட தளங்கள் வழங்கிய சேவையை போன்றதே என்றாலும், செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம்.

செய்திகளை தேடிப்பார்க்கும் மற்றும் சமர்பிக்கும் வசதி இருக்கிறது.

இணைய முகவரி: http://gongsters.com/

 

 

 

செயலி புதிது: வரலாற்றில் நடந்தது என்ன?

வரலாற்று நிகழ்வுகளை உள்ளங்கையில் கொண்டு வரும் வகையில் வாட் ஹாப்பண்ட் டுடே இன் ஹிஸ்டிரி, செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், ஒவ்வொரு மாதத்திற்கான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் எந்த நிகழ்வு தொடர்பான கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். நிகழ்வுகளின் ஒளிப்படங்களையும் காணலாம். எல்லா நிகழ்வுகளுமே கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பரிமான டச் முன்னோட்ட வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளை அறிவிக்கையாக பெறும் வசதியும் இருக்கிறது. இந்த வசதி மூலம் முக்கிய நிகழ்வுகளை தவறவிடாமல் இருக்கலாம். வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வம் உள்ளவர்களை கவரக்கூடிய செயலி இது. ஆண்ட்ராய்டு வடிவம் எப்போது வெளியாகும் என்றுத்தெரியவில்லை.

மேலும் தகவல்களுக்கு: http://apple.co/2gX5U6R

 

 

 

சைபர்சிம்மன்

 

விக்கிபீடியா விளையாட்டும், வாசிப்பு சாகசமும்!

wபணி நிமித்தமாக தகவல்களை தேட இணையத்தை பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாக கொண்டிருக்கலாம். இணைய ஆய்வில் களைப்பு ஏற்பட்டால் அல்லது பணிக்கு நடுவே ஒரு மாறுதல் ஏற்பட்டால் இணையத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து இளைப்பாறுதலையும் வழக்கமாக கொண்டிருக்கலாம். அது யூடியூப்பில் நகைச்சுவை வீடியோவாக இருக்கலாம் அல்லது பிரவுசரில் விளையாடும் விளையாட்டாக இருக்கலாம். ஆக, இணையத்தில் நீங்கள் தகவல்களை தேடிக்கொண்டே இருக்கலாம் அல்லது விளையாட்டாக பொழுதை போக்கலாம். எல்லாம் சரி, எப்போதாவது நீங்கள் விளையாட்டாக தகவல்களை தேடியது உண்டா?

அதாவது குறிப்பிட்ட தகவலை தேடாமல், அறிதல் நோக்கில் எதையாவது தேடிய அனுபவம் உண்டா? இத்தகைய அனுபவம் இருந்தாலும் சரி, அல்லது இப்படி எல்லாம் விளையாட்டாக தகவல்களை தேடியது இல்லை என்றாலும் சரி, விக்கிபீடியா கட்டுரைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு உங்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும். ஏனெனில், விக்கிபீடியா; தி டெக்ஸ்ட் அட்வன்சர் எனும் இந்த விளையாட்டு, விக்கிபீடியா கட்டுரைகளை விளையாட்டு வடிவில் படிக்க வைக்கிறது.

கட்டற்ற இணைய களஞ்சியமான விக்கிபீடியா தகவல் சுரங்கமாக இருப்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். குறிப்பிட்ட தலைப்பில் தகவல் தேவை எனில் நேராக விக்கிபீடியாவில் தேடிப்பார்க்கலாம். மேலும் பல நேரங்களில் கூகுளில் தகவல்களை தேடும் போதும் பெரும்பாலும் தேடப்படும் பதம் தொடர்பான விக்கிபீடியா பக்கம் முன் வந்து நிற்பதை பார்த்திருக்கலாம்.

புதிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், விக்கிபீடியாவுக்குள் நுழைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் ஏதாவது ஒரு கட்டுரையில் இருந்து துவங்கி, தொடர்ந்து வெவ்வேறு கட்டுரைகளாக படிக்கும் வழக்கமும் கொண்டிருக்கலாம். ஆங்கில விக்கிபீடியாவில் மட்டும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதால், இப்படி மனம் போன போக்கில் கட்டுரைகளை பின் தொடர்ந்து செல்வது மற்றபடி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத புதிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள உதவும். விக்கிபீடியாவை சுவாரஸ்யமான மற்றும் விநோதமான கட்டுரைகளுக்கு குறைவில்லை என்பதால் இந்த தேடல் பயணம் சாகசம் மிக்கதாகவே இருக்கும்.

ஆனால், எல்லோருக்கும் இந்த பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் என்ன, இந்த சாகசத்தை எல்லோருக்கும் சாத்தியமாக்குவதற்காக தான் விக்கிபீடியா கட்டுரைகள் சார்ந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. லண்டனைச்சேர்ந்த கேவன் டேவிஸ், இதை உருவாக்கியுள்ளார்.

விக்கிடெக்ஸ்ட் விளையாட்டிற்கான தளத்தில் (http://kevan.org/wikitext/) நுழைந்ததுமே, கட்டுரை தேடலை துவக்குவதற்கான குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் ஒரு இடத்தை குறிக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால், அந்த இடம் தொடர்பான விக்கிபீடியா கட்டுரையின் சுருக்கம் மற்றும் தொடர்புடைய ஒளிப்படம் இடம்பெறும். அந்த தகவல்களை படித்து முடித்தால், கீழே அடுத்த கட்டுரைக்கான இணைப்பு இடம் பெற்றிருக்கும். அந்த இணைப்பு இன்னொரு இடத்திற்கு அழைத்துச்செல்லும். பட்டியலில் உள்ள இடங்களை தவிர, பயனாளிகள் தங்கள் மனதில் உள்ள ஏதேனும் இடத்தை டைப் செய்தும் தேடலாம்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், குறிப்பிட்ட இடத்தில் இருந்து அடுத்த கட்டுரைக்கு எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லலாம். தேர்வு செய்யும் திசைக்கு ஏற்ப வெவ்வேறு இடம் தொடர்பான கட்டுரை சுருகங்களை படிக்கலாம். இதன் மூலம் முற்றிலும் புதிய இடங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த தேடலும் ஒரு சாகச விளையாட்டு போல சுவாரஸ்யமாகவே இருக்கும்.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை கிளிக் செய்தால், அந்த மாளிகளையில் உள்ள ஒவ்வொரு அறை தொடர்பான விக்கிபீடியா தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து இடங்களுக்கு செல்வது அலுப்பாக இருந்தால், திடிரென ஏதாவது ஒரு இடத்திற்கு தாவிச்செல்லலாம். இதற்கு செல் (கோ) எனும் சொல்லை டைப் செய்து தொடர்ந்து இடத்தின் பெயரை டைப் செய்தால் போதுமானது. இன்னும் கூடுதல் தகவல்கள் தேவை எனில், ஆய்வு (எக்ஸ்) என டைப் செய்து ஏதேனும் தலைப்பை டைப் செய்தால் அது தொடர்பான தகவல்களை பெறலாம்.

இந்த விளையாட்டில் எதிர்கொள்ளும் தகவல் பக்கத்தை சமூகம் ஊடகம் வாயிலாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

மிகப்பெரிய சாகச விளையாட்டு என்று சொல்ல முடியாவிட்டாலும், விக்கிபீடியா கட்டுரைகளை படித்து புதிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமான வழி இது. மேலும் விக்கிபீடியாவின் நீள அகலத்தையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வரிசையாக கட்டுரைகளை படித்து பார்ப்பதை விட, இப்படி தகவல் தேடல் விளையாட்டில் ஈடுபடுவது புதிய அனுபவமாக இருக்கும்.

மென்பொருளாளரான டேவிஸ் இது போன்ற விக்கி விளையாட்டுகளை உருவாக்குவது புதிதல்ல. இவர் ஏற்கனவே கேட்பிஷிங் (http://kevan.org/catfishing.php) எனும் விக்கி விளையாட்டையும் உருவாக்கியிருக்கிறார். இந்த விளையாட்டில் குறிப்பிட்ட ஒரு கட்டுரை இடம்பெறும் வகைகள் அனைத்தும் வார்த்தைகளாக கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வார்த்தைகள் விவரிக்கும் கட்டுரை எது என்பதை ஊகிக்க வேண்டும். இதை தனியாகவும் விளையாடலாம், நண்பர்களுடன் இணைந்தும் விளையாடலாம்.

இதே போல நாவல் எழுதும் மாதத்தை முன் வைத்து விக்கிபீடியா கட்டுரைகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

டேவிஸ் இணையதளத்தில் அவர் உருவாக்கிய மேலும் பல இணைய விளையாட்டுகளை பார்க்கலாம். வகை வகையான விளையாட்டுகளை மனிதர் உருவாக்கியிருக்கிறார். எல்லாம் தனித்தனி தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறும்பதிவு சேவையான டிவிட்டர் சார்ந்த விளையாட்டுகள் மட்டுமே பல உள்ளன. தேடியந்திரம் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. இவைத்தவிர கலை மற்றும் சோதனை முயற்சி சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. வார்த்தை விளையாட்டு மற்றும் வினாடிவினா ரக விளையாட்டுகளும் கூட இருக்கின்றன.

இணையம் எத்தனை சுவாரஸ்யமானது என்பதை டேவிஸ் இணைய பக்கம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்: http://kevan.org/

பொய்யாக ஒரு தேடியந்திரம்!

Fake-search-engine-pic3இப்படி ஒரு தேடியந்திரம் தேவைப்படலாம் என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், பொய்யான ஒரு தேடியந்திரத்திற்கான தேவை உண்மையானது என்பதால், பிலிம்சோர்சிங் தளம், தேடியந்திரம் போல தோற்றம் தரக்கூடிய பொய்யான தேடியந்திர சேவையை உருவாக்கியுள்ளது.
திரைப்படம் அல்லது குறும்படங்களை இயக்கும் போது, முக்கிய பாத்திரம் அல்லது துணை பாத்திரம் இணைய தேடலில் ஈடுபடுவது போல ஒரு காட்சி வரலாம். இந்த காட்சியை படமாக்க என்ன செய்வீர்கள்? இதென்ன அந்த பாத்திரம் கூகுளில் தகவல் தேடுவது போல காட்சி எடுக்க வேண்டும் என்று உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.
இது இயல்பானது தான் என்றாலும், கூகுளில் தேடுவது போல காட்சி அமைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கூகுளிடம் அனுமதி வாங்க வேண்டுமா என்பது தான் அது. கூகுளிடம் அனுமதி தேவை எனில் முறையாக வேண்டுகோள் சமர்பித்து பதிலுக்கு காத்திருக்க வேண்டும். வர்த்தக நோக்கிலான திரைப்படம் எனில் இப்படி செய்வதே சிறந்ததாக இருக்கும்.
இல்லை எனில், யார் கேடக்கப்போகிறார்கள் என துணிந்து கூகுள் தேடல் ஸ்க்ரீன்ஷாட்டை வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் சிக்கல் வரவாய்ப்பில்லை. ஆனால் எதிர்பாராமல் காப்புரிமை மீறல் எனும் நோக்கில் வில்லங்கமாகும் வாய்ப்பிருக்கிறது.

தவிர, இந்த படம் இணையத்தில் வைரலாகி விட்டது எனில் , கூகுளுக்கு தேவையில்லாமல் விளம்பரம் அளித்தது போல ஆகிவிடலாம். இதைவிட சிறந்த வழி, கூகுளை பயன்படுத்தாமல், ஏதேனும் ஒரு தேடியந்திரத்தை பயன்படுத்துவது போல காட்சி அமைப்பது தான். அதாவது நாமே ஒரு தேடியந்திரத்தை உருவாக்கி கொள்ளலாம். இந்த தேடியந்திரத்தையும் நீங்கள் உருவாக்க வேண்டியதில்லை, இதோ நாங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறது பிலிம் சோர்சிங் தளம்.
இப்படி அந்த தளம் உருவாக்கிய பொய்யான

தேடியந்திரம் தான் குவைரோ ( ) . இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி தேடல் காட்சியை படமாக்கி கொள்ளலாம். தேடியந்திரத்தை பயன்படுத்தியது போலவும் இருக்கும், ஆனால் காப்புரிமை சிக்கல் எதுவும் வராது.
பிலிம்சோர்சிங் தளம் திரைப்பட உருவாக்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்படி பொய்யான தேடியந்திரத்தை பயன்படுத்தும் சேவையை அளிக்கிறது.
இணைப்பு: https://www.filmsourcing.com/fake-search-engine-for-film-and-tv

=-